Wednesday, January 31, 2007

தீவிரவாதத்தை ஒடுக்க அராஜக சட்டங்களா?

இரண்டு துறவிகள் ஓர் ஆற்றின் அருகில் நடந்து கொண்டிருந்தனர். ஆற்றில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. ஒருவர், ‘‘அந்த மீன்களைப் பாருங்கள்! எவ்வளவு ஆனந்தமாக நீந்திக் கொண்டிருக்கின்றன’’ என்று சொன்னார்.

மற்றவர், ‘‘நீங்கள் அந்த மீன்கள் அல்ல. அப்படி இருக்கும் போது, அவை ஆனந்தமாக இருக்கின்றன என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?’’ என்றார்.

முதலாமவரும் விடவில்லை. ‘‘நீங்கள் நானல்ல. பின் எப்படி நான் அவை ஆனந்தமாக இருப்பதை அறியவில்லை என்று சொல்கிறீர்கள்?’’ என்றார்.

ஆம்! ஒருவரது உணர்வை அப்படியே மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாதுதான். குண்டுகள் வைத்து அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் பயங்கரவாதிகளின் உணர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், அப்பாவிப் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பயங்கரவாதம் ஏற்படுத்தும் விபரீத விளைவுகளை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. எனவே பயங்கரவாதம் வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்பதன் அவசியம் புரிகிறது.

பயங்கரவாததை ஒடுக்குவதற்கு ‘பொடா’ என்று அழைக்கப்பட்ட ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்’ போன்ற சட்டங்கள் அவசியம் என்று நம்மிடையே இருந்து குரல் எழுகிறது. இதுபோன்ற சட்டங்களின் அவசியம் குறித்துக் குரல் கொடுப்பவர்கள் “இந்தியாவில் இருக்கக் கூடிய மற்ற சட்டங்கள் மூலம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உருப்படியான நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்து விடுகின்றனர். எனவே காவல்துறைக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கும் கடுமையான சட்டங்கள் தேவை. அத்தகைய சட்டங்கள் மூலமாக மட்டுமே பயங்கரவாதிகளை ஒடுக்க முடியும்” என்கிறார்கள். தமிழக அரசியலில் ஜெயலலிதாவும், இந்திய அரசியலில் பி.ஜே.பி. தலைவர்களும் இந்த முழக்கத்தை முன்வைக்கின்றனர்.

ஆனால், இந்திய வரலாற்றின் நெடுகிலும் இதுபோன்ற சட்டங்கள் இருந்துள்ளன. அந்த சட்டங்கள் அனைத்தும் காவல்துறையால் தவறாகப் பயன்படுத்தப்பட்ட செய்திகளே எங்கும் நிறைந்து இருக்கின்றன. 1950இலேயே தடுப்புக் காவல் சட்டம் (The Preventive Detention Act) கொண்டு வரப்பட்டது. இது 1969 வரை அமலில் இருந்தது. 1962 இல் கொண்டு வரப்பட்ட நெருக்கடிநிலையின் தொடக்கத்தில் இந்திய பாதுகாப்புச் சட்டம் (Defence of India Act) நிறைவேற்றப்பட்டது. ‘மிசா’ எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Maintenance of Internal security Act) 1971இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டங்கள் அனைத்தும் சந்தேகப்படும் நபர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதற்குக் காவல் துறைக்கு அதிகாரம் அளித்தன. 1975&76 ஆண்டுகளில் நெருக்கடி நிலையின்போது இந்தச் சட்டங்கள் உச்சகட்டமாக அதிகாரிகளால் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன. வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

1977 தேர்தலில் இந்திராகாந்தி தோற்றுப் போனார். அப்போது மத்தியில் ஏற்பட்ட மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசாங்கம் ஜனநாயகத்துக்கு உயிர் கொடுத்தது. ‘மிசா’ மற்றும் ‘இந்திய பாதுகாப்பு சட்டங்கள்’ திரும்பப் பெறப்பட்டன.

1980இல் மீண்டும் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தனர். சந்தேகத்தின் பேரில் வாரண்ட் இல்லாமல் கைது செய்வதற்கு அதிகாரம் வழங்கும் ‘தேசிய பாதுகாப்பு சட்டம்’ கொண்டு வரப்பட்டது. ஓராண்டு வரை சிறையில் அடைக்கும் அதிகாரத்தைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய தேசிய பாதுகாப்புத் திருத்தச் சட்டம், 1984இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற சட்டங்கள் அமலில் இருந்த போதுதான் பஞ்சாப், அஸ்ஸாம் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் கோரத் தாண்டவமாடியது. பிரதமர் இந்திரா காந்தியின் உயிரையும் பறித்தது.

இந்தியா விடுதலை பெற்றதில் இருந்து இத்தனை சட்டங்கள் இருந்தும், தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை. மாறிவரும் சூழலுக்குத் தகுந்தவாறு பயங்கரவாதமும் தன்னைப் புதுப்புது வடிவங்களில் மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 1985இல் ‘தடா’ எனப்படும் ‘பயங்கரவாதம் மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ அமலுக்கு வந்தது. பிற உயிர்களை அழிக்கும் பயங்கரவாதச் செயலைச் செய்பவருக்கு மரண தண்டனை வழங்க இந்தத் ‘தடா’ அதிகாரம் அளித்தது.

1993, ஏப்ரல் 27ஆம் தேதி நள்ளிரவு.. கௌஹாத்தி நகரில் அஞ்சலி தைமரி என்ற பெண், தனது வேலைக்காரியுடன் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். இவர் அந்த ஊரில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அவரது வீட்டின் கதவு தட்டப்படுகிறது. அஞ்சலி கதவைத் திறக்க மறுக்கிறார். பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்களை அழைத்து வந்து அவர்கள் மூலம் கதவைத் திறக்கச் செய்கின்றனர். பக்கத்தில் வசிப்பவர்கள் குரலுக்குப் பின் வீட்டுக் கதவைத் திறந்த அஞ்சலிக்கு அதிர்ச்சி... வாசலில் முகமூடி அணிந்த சிலர். அவர்களது கைகளில் துப்பாக்கிகள்... திடுதிடுவென்று அஞ்சலியின் வீட்டுக்குள் புகுந்து, தலைகீழாகப் புரட்டி எதையோ தேடுகிறார்கள். அதன்பின் அஞ்சலியையும் இழுத்துக்கொண்டு காரில் எங்கேயோ செல்கின்றனர். கடத்தப்பட்ட அஞ்சலி அந்த இடத்தில் சிறை வைக்கப்படுகிறார்.

கௌஹாத்தி நகரின் வேறு பகுதியில் வசித்த அஞ்சலியின் சகோதரர் மற்றும் இன்னும் இரு உறவினர்கள் வீட்டிலும் அதே நாளில் இதே கதைதான். துப்பாக்கி ஏந்திய முகமூடி அணிந்தவர்களால் கடத்தப்பட்டு எங்கோ சிறைவைக்கப்படுகிறார்கள். டாடா தேயிலைக் கம்பெனி அதிகாரியை போடோ தீவிரவாதிகள் கடத்தி வைத்திருந்தார்கள். இந்த விவகாரத்தில் போலீஸ் சந்தேகப்பட்ட தீவிரவாதி ரஞ்சன் தைமரி என்பவரின் உறவினர்கள்தான் முகமூடி நபர்களால் கடத்தப்பட்டவர்கள். ரஞ்சனைப் பிடிப்பதற்காக இந்தக் கடத்தல்களை நடத்தியவர்கள் காவல் துறையினர்தான் என்று பிறகுதான் தெரிகிறது.

நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் எனப்படும் ஆட்கொணர்வு மனுவின் மீது விசாரணை தொடங்கியது. இந்நிலையில் தீவிரவாதிகள் கடத்தியதாகவும் அவர்களிடம் இருந்து போலீஸ் தன்னைக் காப்பாற்றி அழைத்து வந்ததாகவும் நீதிமன்றத்தில் கூறுமாறு அஞ்சலியை போலீஸ் நிர்ப்பந்திக்கிறது. ஆனால், அவர் மறுத்துவிடுகிறார். இப்படியே மற்ற மூவரும் மறுத்து விடுகிறார்கள். இந்நிலையில் அவர்களை வெளியில்விட முடியாத நிலையில் இருந்த காவல்துறை அதிகாரிகள், அவர்கள் மீது ‘தடா’ வழக்குப் போட்டு கைது செய்து விடுகிறார்கள்!

மேற்கண்ட சம்பவம் ‘தடா’ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கு ஓர் உதாரணம்தான்... இந்தியா முழுவதும் 1994 ஜூன் முப்பதாம் தேதி வரை தடா சட்டத்தின் கீழ் ஏறத்தாழ 76,000 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடத்தி விசாரணை முடிந்து தண்டனை பெற்றவர்கள் இவர்களில் 2 சதவிகிதத்துக்கும் குறைவு. அரசுக்கு மிகவும் கெட்ட பெயரை இந்தத் ‘தடா’ சட்டம் ஏற்படுத்துகிறது என்று ‘உணர்ந்த’ நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1995இல் அதை காலாவதியாகச் செய்தது.

இந்த வரலாறுகளில் இருந்து பாடம் எதுவும் கற்றுக் கொள்ளாத பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ‘பொடா’ என்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டம் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் நிச்சயமாக இது முறைகேடாகவே பயன்படுத்தப்படும் என்றும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் பலமாக வாதாடினார்கள். ஆனால், இந்த சட்டத்தை ஆதரிக்காதவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்ற ரீதியில் அத்வானி முழங்கினார்.

தமிழக வரலாற்றில் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய முக்கிய கட்சிகள் அனைத்தும் கட்சி வேறுபாடுகள் இன்றி இந்த சட்டத்தை ஆதரித்தன. 15 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் பொடாவைப் பயன்படுத்தி யாரையும் கைது செய்யவில்லை. ஆனால், அது பயன்படுத்தப்பட்ட மாநிலங்களில் போலீஸ் கோர தாண்டவம் ஆடியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்களை ஒடுக்குவதற்காக நடைபெற்ற கைதுகளில் பள்ளிச் சிறுவர்களும் இருந்தனர். ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர். கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கைதானவர்கள் மீது ‘பொடா’ வழக்குப் போட்ட குஜராத் அரசு, முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது ‘பொடா’ வழக்குப் போடவில்லை.

அரசியல் கட்சித் தலைவர்களைப் ‘பொடா’வில் கைது செய்து புதிய வரலாறு படைத்தது தமிழகத்தின் ஜெயலலிதா அரசு. வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
2004 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ‘பொடா’ சட்டத்தைத் திரும்பப் பெற்றது. ஆனால் இந்த சட்டத்தை இந்த அரசும் முன்தேதியிட்டுத் திரும்பப் பெறவில்லை. இதனால் முன்னர் போடப்பட்ட ‘பொடா’ வழக்குகள் அப்படியே நிலுவையில் உள்ளன.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ‘பொடா’ போன்ற ஒரு சட்டம் மட்டுமே பயங்கரவாதத்தை ஒடுக்கிவிடாது என்பது தெரிகிறது. இதுபோன்ற சட்டங்கள் இயற்கை நீதிக்கு விரோதமானது. அதாவது குற்றம்சாட்டப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்படாதவரை அவர் நிரபராதி என்பதே இயற்கை நீதி. இந்த பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த இயற்கை நீதிக்கு விரோதமான சட்டத்தைக் கோருகிறார்கள்! இந்தியச் சிறைகளில் இருந்த மூன்று பயங்கரவாதிகளைத் தனி விமானத்தில் அழைத்துச் சென்று காந்தஹாரில் பிற பயங்கரவாதிகளிடம் ஒப்படைத்த பி.ஜே.பி. தலைவர்கள், இன்று கடுமையான சட்டம் வேண்டும் என்கிறார்கள்! எனவே இவர்களது கோரிக்கை, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு அரசுக்கு ஒத்துழைப்பது என்ற நோக்கத்தில் எழுந்ததல்ல. மாறாக, பயங்கரவாதிகளை ஒடுக்கும் அடையாளமாகத் தங்களை முன்னிறுத்துவதாகவே இருக்கிறது.

மனித உரிமைகளை மதித்து நடத்தல், சர்வதேச அளவில் ஆக்கிரமிப்புப் போர்களில் ஈடுபடும் நாடுகளின் துணையின்றித் தனியாகவே பயங்கரவாதத்தை ஒடுக்கும் அரசியல் துணிவு, வறுமை மற்றும் வேலையின்மையை அகற்றுவதற்கான தீவிரமான முயற்சிகள் போன்றவை மட்டுமே பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட உதவும். பலரும் நினைப்பது போல கடுமையான சட்டங்களால் மட்டும் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாது. மாறாக, அவை புதிய பயங்கரவாதிகளை உருவாக்கவே உதவக் கூடும்!

-ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் 26.07.06

Monday, January 29, 2007

ஒரு தோழர் சர்வாதிகாரி ஆகிறார்!

அந்த நாடக அரங்கம் நிரம்பி வழிந்தது. ‘நாடகத்தை நடத்தாதே’ என்று இயக்குநருக்கு மன்னரிடம் இருந்து உத்தரவு வந்திருந்தது. அதை மீறி நாடகம் சிறப்பாக நடத்தப்பட்டது. இறுதிக் காட்சி முடிந்து திரை விழுந்த பின், இயக்குநர் மேடை ஏறினார். அரங்கமே எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டி ஆர்ப்பரித்தது. இந்த ஆர்ப்பாட்டம் ஓய்ந்த பிறகு அரங்கத்தின் ஒரு மூலையில் இருந்து, ‘‘இந்த நாடகம் ஒரு மோசமான நாடகம்’’ என்று ஐந்து பேர் கோஷமிட்டார்கள். இயக்குநர் சொன்னார், ‘‘இருக்கலாம். ஆனால், இவ்வளவு மக்கள் அதைப் பாராட்டுகிறார்களே, அவர்களது உணர்வுக்கு சிறிதாவது நாம் மதிப்பளிக்க வேண்டாமா?’’

அந்த அரங்கத்தில் இருந்த ஐந்து நபர்களின் உணர்வில்தான் இப்போது மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா இருக்கிறார். ‘மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தலில் ஜக்மோகன் டால்மியா தலைவராகப் போட்டியிடக் கூடாது’ என்று புத்ததேவ் ‘ஆணை’ இட்டார். ஆனால், டால்மியா அதைப் பொருட்படுத்தவில்லை. தேர்தலில் நின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மேற்கு வங்க காவல்துறை ஆணையர் பிரசுன் முகர்ஜியை விட ஐந்து வாக்குகள் அதிகம் பெற்று டால்மியா ஜெயித்துக் காட்டியிருக்கிறார். டால்மியாவுக்கு எதிராக புத்ததேவ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர். இருந்தும் டால்மியா வெற்றி பெற்றார்.

சோர்வடையாமலும் விரக்தியடையாமலும் ஒரு தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவம் பெற்ற மனிதனே உலகில் மனத்துணிவு கொண்டவனாகக் கருதப்படுவான். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று ஏற்றுக் கொள்பவன்தான் ஜனநாயகவாதியாக அங்கீகரிக்கப்படுவான். ஆனால், புத்ததேவ் தன்னை மனத்துணிவு கொண்டவராகவும் நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. ஜனநாயக உணர்வு கொண்டவராகவும் காட்டிக் கொள்ளவில்லை. டால்மியா பெற்ற வெற்றியில் அவருக்கு ஏமாற்றமும் விரக்தியும் கோபமும் கொப்புளிக்கிறது.

கிரிக்கெட் சங்கத் தேர்தல் ஒரு சிலுவைப்போரும் அல்ல; புனிதப் போரும் அல்ல; முழுப்புரட்சியும் அல்ல. உண்மையில் அதை புத்ததேவ் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். அல்லது ‘டால்மியாவுக்கு எதிரான போரில் ஒரு களத்தை இழந்திருக்கிறோம்; ஆனால், தோற்கவில்லை’ என்ற ரீதியில் புத்ததேவ் பேசியிருக்கலாம். அவர் அவ்வாறு பேசவில்லை. ‘‘நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் நடந்த போராட்டத்தில் தீய சக்திகள் வெற்றி பெற்றுள்ளன. இது நீதிக்கும் அநீதிக்குமான போர். இந்தப் போர் தொடரும். கிரிக்கெட் சங்கத்தைவிட்டு டால்மியா விலகுவதையே இளம் கிரிக்கெட் வீரர்கள் விரும்புகிறார்கள். எனவே அவர் விலகும்வரை போராட்டம் தொடரும்’’ என்று மிரட்டியிருக்கிறார்.

ஒருவேளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே இப்படி ஒரு நிலை எடுத்துவிட்டதோ என்று பார்த்தால், அவ்வாறு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தக் கட்சியின் பிற தலைவர்கள், புத்ததேவ் கூறியுள்ள கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னாள் முதல்வரும் கட்சியின் முதுபெரும் தலைவருமான ஜோதிபாசு, ‘‘கட்சிக்கும் கிரிக்கெட் சங்கத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேற்கு வங்க முதல்வரின் வேட்பாளராக முகர்ஜி இருந்திருக்கலாம். ஆனால், கட்சியின் வேட்பாளர் யாரும் இல்லை. டால்மியா மீது முதல்வர் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அவை குறித்துக் கட்சி விவாதிக்கும்’’ என்று சொல்லியிருக்கிறார்.

ஜோதிபாசுவும் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் எதிரெதிர் நிலை எடுத்திருக்கிறார்கள். மற்ற தலைவர்களும் புத்ததேவ் உதிர்த்த கருத்துக்களை அவரது தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் கட்சிக்கும் அவற்றுக்கும் தொடர்பில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

அரசியலை விளையாட்டாகக் கருதும் அரசியல்வாதிகள், விளையாட்டில் அரசியலைப் புகுத்துகிறார்கள். எங்கும் எதிலும் தான் நினைத்ததே நடைபெற வேண்டும் என்று விரும்பத் தொடங்கி விடுகிறார்கள். மூதறிஞர்களாகக் கருதப்படுபவர்கள்கூட எல்லா நேரங்களிலும் அறிவுபூர்வமாக மட்டுமே பேசிவிடுவதில்லை. ஒருமுறை பகுத்தறிவைப் பிரதிபலிக்கும் விதத்தில் பேசினால், ஐந்து முறை அவர்களது தனிப்பட்ட ரசனைக்குத் தகுந்த மாதிரியும் பேசி விடுகிறார்கள். அதுபோன்ற சில சமயங்களில், அவர்கள் அதுவரை கட்டியிருந்த கொள்கை வேட்டிகள் நழுவி விடுகின்றன. புத்ததேவ் பட்டாச்சார்யாவும் இந்த விஷயத்தில் அப்படியே நம் முன் நிற்கிறார்.

அரசியலில் அபத்தமாகப் பேசுவது ஒன்றும் குறையல்ல என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நியாயப்படுத்தத் தயாராக இருக்கிறார்கள். கண் பார்வை இல்லாத பெண்ணுக்கும் கேட்கும் திறன் இல்லாத ஆணுக்கும் இடையில் நடைபெறும் திருமணம் மட்டுமே வெற்றிகரமான திருமணமாக இருக்க முடியும் என்றெல்லாம்கூட பேசுபவர்கள் இருக்கிறார்கள். அரசியலில் முன்வைத்த காலைப் பின் எடுக்கக் கூடாது என்றும், தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ளக் கூடாது என்றும் போதிப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், மார்க்சிஸ்ட்கள் இந்த வகையினர் அல்லர். அவர்கள் சுயவிமர்சனம் செய்து பார்ப்பவர்கள்; தவறுகளை ஏற்றுக் கொள்கிறவர்கள்; தோல்விகளை ஜனநாயக அடிப்படையில் தாங்கிக் கொள்பவர்கள். ஆனால், அந்தக் கட்சியின் முதலமைச்சரிடம் இருந்து சர்வாதிகாரக் குரல் ஏன் எழுகிறது? சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு எதிரான சர்வாதிகார மனப்பாங்கு எப்படி ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாகப் போற்றப்படும் மார்க்சிஸ்ட் கட்சி முதல்வரிடம் இருந்து வெளிப்படுகிறது? அவரது பேச்சு நிச்சயம் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்மீது அந்தக் கட்சி நடவடிக்கை எதுவும் எடுக்குமா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு துறவியின் குருகுலத்தில் முப்பது சீடர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு சீடன், மற்றவனது பொருளைத் திருடும்போது பிடிபட்டான். துறவியிடம் நடந்த விஷயத்தைப் புகாராகக் கொடுத்து அவனைக் குருகுலத்தில் இருந்து விலக்குமாறு பிற சீடர்கள் கேட்டனர். துறவி, ‘‘அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்’’ என்றார். அந்தச் சீடன் அடுத்தடுத்துத் தவறுகள் செய்தான். பொறுக்க முடியாத சீடர்கள் துறவியிடம், ‘‘இனி எங்களால் பொறுக்க இயலாது. அவனை நீங்கள் இங்கிருந்து நீக்க வேண்டும். இல்லை என்றால், நாங்கள் வேறு குருவை நாடிச் செல்ல வேண்டியதிருக்கும்’’ என்றனர்.

துறவி சிரித்துக் கொண்டே, ‘‘தாராளமாகச் செல்லுங்கள். நீங்கள் எல்லோரும் நல்ல சீடர்கள். உங்களை எந்த குருவும் ஏற்றுக் கொள்வார். ஆனால், அவன் தவறுகள் செய்பவனாக இருக்கிறான். எனவே நான்தான் அவனைத் திருத்த வேண்டும். அவனை நான் இங்கிருந்து விலக்கினால், அவனை எந்தத் துறவியும் சேர்த்துக் கொள்ளமாட்டார்’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்ததேவ் மீது நடவடிக்கை எடுக்காது!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (09.08.06)

போகட்டும் போர் மாயை

அந்த இளைஞனின் வயது 19.

பெயர் ஜாசன் செல்சீ..

அவனுடன் படித்த இளைஞர்கள் மேற்படிப்புக்குச் சென்றிருப்பார்கள் அல்லது அவர்களது முதல் வேலையில் சேர்ந்திருப்பார்கள். ஆனால், ஜாசன் செல்சீக்கு வேறுவிதமான எதிர்காலம் காத்திருந்தது. இராக்குக்குச் செல்ல இருக்கும் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பிரிவில் படைவீரனாக அவன் செல்ல இருந்தான். அதற்கு அவனைத் தயாரிக்கும் விதத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அந்த வகுப்புகளில் அவனிடம் சொல்லப்பட்ட விஷயங்கள், அவனுடைய சிந்தனைப் போக்கையே மாற்றி விட்டது.

ஆம்! அவன் அளவுக்கு அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டும், தனது மணிக்கட்டு நரம்புகளை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டான்.

நாள்தோறும் செய்தித்தாள்களில் பலவிதமான தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து நாம் செய்திகளைப் பார்க்கிறோம். காதல் தோல்வி, பரீட்சையில் ஃபெயில், கடன் தொல்லை, பாலியல் தொல்லை, என்று பல காரணங்களுக்காக மனிதர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். இந்தத் தற்கொலைச் செய்திகள் எல்லாம் ஏற்படுத்தாத தாக்கத்தை ஜாசனின் தற்கொலை மட்டும் உலக அளவில் ஏன் ஏற்படுத்தியிருக்கிறது?

ஜாசன் ஒன்றும் சர்வதேச பிரபலம் இல்லை. மிகவும் சாதாரண பிரிட்டிஷ் குடிமகன். ஏன் அவனது தற்கொலை மட்டும் முக்கியத்துவம் பெறுகிறது? ஏனென்றால், அவனது மரணம் போரின் குரூரமான பக்கங்களை உலகுக்கு அம்பலப்படுத்துகிறது.

ஜாசனுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின்போது மேலதிகாரிகள் சில உத்தரவுகளைப் போட்டிருக்கிறார்கள். ‘‘இராக்கில் நீங்கள் போரிடச் செல்கிறீர்கள். பயங்கரவாதத்தை அழிப்பதற்கான இந்தப் போரில் நீங்கள் ஈவு இரக்கம் காட்டக் கூடாது. நம்மை அழிப்பதற்கு இரண்டு அல்லது மூன்று வயதுக் குழந்தையைக்கூட தற்கொலைப் படையாக குண்டுகளை அணிவித்து எதிரிகள் அனுப்பக்கூடும். உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அவர்களைக் கொன்றுவிட வேண்டும். நீங்கள் தயங்கினீர்கள் என்றால், உங்களுடன் உங்கள் படையில் உள்ள உங்கள் நண்பர்களும் உயிரிழக்க நேரிடும்’’ என்பதே அந்த மேலதிகாரிகளின் அறிவுரை.

இந்த அறிவுரையைக் கேட்ட ஜாசனுக்குப் பயத்தில் உடல் நடுங்கியிருக்கிறது. அவனது வாழ்வில் இப்படிப்பட்ட படுகொலைகளைச் செய்ய நேர்ந்துவிடுமோ என்று நடுங்கியிருக்கிறான். இதையெல்லாம் அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்லிவிட்டு அடுத்த இரு நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டான். மரணப் படுக்கையில் அவன் கூறிய இறுதி வார்த்தைகள்: ‘‘என்னால் அங்கு போக முடியாது; என்னால் அவர்களைக் கொல்ல முடியாது. அவர்கள் எதிரியின் தரப்பில் உள்ள குழந்தைகளாகவே இருக்கட்டும்... அதற்காக அவர்களை என்னால் கொல்ல முடியாது. எனவே நான் இராக் போகமாட்டேன்.’’

ஜாசன் செல்சீயின் இந்த மரணம் இராக்கில் இருக்கும் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களின் மன அழுத்தத்தின் அளவைக் காட்டுகிறது. ஜாசன் தற்கொலை செய்து கொள்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகத்தான் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இராக்கில் பணியாற்றும் படைவீரர்களில் 1,541 பேருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அங்கு பணியாற்றும் வீரர்களில் ஏறத்தாழ 10 சதவிகிதம் பேர் மனப் பிரச்னைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். படைவீரர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு சிறப்பு சிகிச்சைக்காக சிறப்புப் பிரிவுகள் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் இங்கெல்லாம் சென்று தனது பிரச்னை குறித்து ஜாசனால் விவாதிக்க முடிய வில்லை. அவனது மனதில் ஏற்பட்ட உணர்வு ராணுவத்தில் இருப்பவர் களுக்கு இருக்கக் கூடாத உணர்வு என்று அவனே ஒருவேளை கருதியிருக்கக் கூடும். அவனது மனசாட்சி பிளவுபட்டு அதன் உச்சகட்டமாக உயிரையே போக்கிக் கொண்டிருக்கிறான்.

தற்கொலையை மிகச் சிறந்த சுயவிமர்சன வடிவமாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். தங்கள் கண்டுபிடிப்புகள் அழிவுக்குப் பயன்படுவதை அறிந்து மனம் வருந்தி வாழ்வை முடித்துக் கொண்ட அறிவியல் அறிஞர்களும் இருக்கிறார்கள். ஆனால், ஜாசன் தனது கடமையை எதிர்கொள்ளும்போதே மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறான்.

‘போரில் எல்லாம் நியாயமே’ என்ற தத்துவத்தை ஜாசனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே ஒரு பாவச் செயலைச் செய்வதற்கு முன்னதாகவே உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறான். பச்சிளம் பாலகர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல நேர்ந்துவிடுமோ என்ற அச்சமே அவனை இந்த முடிவை நோக்கித் துரத்தியிருக்கிறது.

ஆனால், பாலகர்களைப் படைவீரர்களாகவும் கேடயங்களாகவும் பயன்படுத்துபவர்களும் பச்சிளம் குழந்தைகளின் காப்பகங்களில் குண்டுவீசித் தாக்குபவர்களும் இதே உலகத்தில் எந்தவித உறுத்தலும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மட்டுமே ‘போர்... போர்...’ என்று போர்வெறிக் கூச்சல்களை எழுப்பிக் கொக்கரிக்கிறார்கள்.

ஆனால், இவர்களது போர் மாயைகளை எல்லாம் தகர்த்து எறிந்துகொண்டு மனித நேயம் எல்லா நாட்டு மக்களிடத்திலும் மேலோங்கி வருகிறது. ‘‘சந்தேகப்படுபவர்களை முதலில் சுடு; அதன்பிறகு கேள்விகள் கேட்டு விசாரித்துக் கொள்ளலாம்’’ என்பது போன்ற ஆணைகள் பெரும்பாலும் நிரபராதிகளையும் அப்பாவிகளையும் கொல்லவே பயன்பட்டு வருவதை இராக்கில் அனுபவபூர்வமாக அமெரிக்க இளைஞர்களும் பிரிட்டிஷ் இளைஞர்களும் உணர்ந்து வருகிறார்கள். எண்ணெய் வர்த்தக சித்து விளையாட்டில் தமது பிள்ளைகள் இராக்கில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற உணர்வு, அமெரிக்கத் தாய்மார்களிடம் மேலோங்கி வருகிறது.

இதுபோன்ற பின்னணியில் ஜாசன் செல்சீயின் தற்கொலையை வழக்கமான தற்கொலையைப் போலப் பார்க்கக் கூடாது என்ற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். ஜாசன் உயிருடன் இருந்து உலகத்துக்கு எடுத்துச் சொல்ல முடியாத ஒரு போர் அவலத்தை அவனது மரணம் உரத்துச் சொல்லியிருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். ராணுவத்திலும் காவல்துறையிலும் உயரதிகாரிகள் இடும் கட்டளையை மீறக் கூடாது என்பது பரவலான கருத்து. எனவே உயரதிகாரிகளோடு உடன்பட முடியாத ஜாசன் தற்கொலை செய்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்றும் இவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் வேறு சில நாடுகளில் நடந்த மக்கள் புரட்சிகளிலும் ராணுவம் அல்லது அதன் ஒரு பகுதி, மக்களைச் சுட்டுக் கொல்ல மாட்டோம் என்று மக்களோடு இணைந்து போராட்டங்களில் குதித்துள்ளது. ஜாசன் எதிர்த்துக் குரல் கொடுத்து ‘ஒழுக்கமின்மை’க்காக ராணுவத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அது இன்னும் மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தி இருக்கும். வாழ்க்கை எவ்வளவுதான் துயரம் மிகுந்ததாக இருந்தாலும், அவலங்கள் நிறைந்ததாக இருந்தாலும் அதற்குத் தற்கொலை தீர்வல்ல!
- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (06.09.06)

சுஷ்மிதாவோடு நிற்கட்டும்!

அந்தப் பெண்ணுக்கு வயது 25. எம்.எஸ்.சி., வேதியியலில் முதல் இடம் பெற்று தங்க மெடல் வாங்கியவர். கைநிறைய சம்பளமும் வசதியான வாழ்க்கையும் தேடி அவர் ஏதேனும் கம்ப்யூட்டர் கம்பெனிக்கு வேலைக்குப் போயிருக்கலாம். அல்லது அதிகாரம் நிறைந்த அரசு அதிகாரியாவதற்காக ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை . மாறாக அவர் இந்திய ராணுவத்தில் அதிகாரியாகச் சேர்ந்தார். அவரது தந்தையும் தாயும் மத்தியப் பிரதேசம் போபாலில் வசிக்கிறார்கள். அவருக்கு ஒரு தம்பி. அவன் ப்ளஸ் 2 படிக்கிறான். அந்தப் பெண்ணின் பெயர் சுஷ்மிதா சக்ரபர்த்தி.

அளவான குடும்பம் என்பதால், அவர்களது வாழ்க்கை அமைதியாகதான் நடந்து கொண்டிருந்தது. ஆனால், இன்று அந்தக் குடும்பம் சோகத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது. ஆசை ஆசையாய் வளர்த்த மகள் சாகசங்களுக்கு ஆசைப்பட்டதால், அந்தப் பெற்றோர் அவளை ராணுவத்தில் சேர அனுமதித்தார்கள். இன்று அந்த ராணுவத்தின் ஒரு துப்பாக்கி, சுஷ்மிதாவின் உயிரைப் பறித்திருக்கிறது.

விருந்தினர் மாளிகையில் காவலுக்கு நின்றிருந்த ராணுவ வீரனிடம் அவனது கையில் இருந்த துப்பாக்கியை சுஷ்மிதா கேட்டிருக்கிறார். அதாவது, அந்தத் துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு ஒரு புகைப்படம் எடுத்து விட்டுத் தருகிறேன் என்று கேட்டிருக்கிறார். சட்டென்று அவரும் தனது துப்பாக்கியைக் கொடுத்துவிட்டார். அந்தத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சுஷ்மிதா இதுவே ராணுவத்தின் தரப்பில் இருந்து சொல்லப்பட்டிருக்கும் செய்தி.

ஆனால், இந்த வாதத்தை சுஷ்மிதாவின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ‘‘எங்களுக்கு ‘அது தற்கொலை’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது’’ என்று எச்சரிக்கையுடன் பேசுகின்றனர். மிகவும் துடிப்பான, துணிச்சலான சுஷ்மிதாவுக்கு மிகக் கடுமையான மன அழுத்தம் இருந்திருக்கிறது.

ஏராளமான சாகசக் கனவுகளுடன் ராணுவத்தில் சேர்ந்த சுஷ்மிதாவுக்கு, வாகனங்கள் பராமரிப்பு அதிகாரியாகப் பணியாற்றவே வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவருக்கு முன்னணிப் பணிகளுக்குப் பதிலாக ‘பெண்களுக்கான’ வேலைகளே வழங்கப்பட்டன என்பதில் அவருக்குள் கடுமையான வருத்தம் இருந்துள்ளது.

பின்னிரவு கேளிக்கை விருந்துகளுக்குத் தன்னை ‘ஏற்பாடு’ செய்யுமாறு அதிகாரிகள் சொல்கிறார்கள் என்று விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தபோது பெற்றோரிடம் புலம்பி இருக்கிறார். மிக உயர்ந்த அதிகாரிகள் விருந்துக்கு வரும்போது, அவர்களை வாசலில் பூச்செண்டு கொடுத்து வரவேற்கும் அலங்காரப் பதுமையாக நிற்குமாறு அவர் பணிக்கப்பட்டிருக்கிறார். இந்த வேலைகளைச் செய்வதற்காக ராணுவத்தில் தான் சேரவில்லை என்ற எண்ணம் அவருக்கு மிகப் பெரிய உறுத்தலாக இருந்திருக்கிறது. இவை எல்லாம் அவர் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள். இன்னும் பகிர்ந்து கொள்ளமுடியாத பாலியல் தொல்லைகளையும் அவர் எதிர்கொள்ள நேரிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

முழுக்க முழுக்க ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் ராணுவத்தில், கடந்த 1993 முதல் பெண்களையும் சேர்க்கத் தொடங்கினர். இந்தியத் தரைப் படையில் 918 பெண் அதிகாரிகளும் கப்பற்படையில் 100 பெண் அதிகாரிகளும் விமானப்படையில் 450 பெண் அதிகாரிகளும் இருக்கிறார்கள். ஒவ்வொரு படையின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த விகிதத்தில் இருப்பது தெரிய வருகிறது. நீண்ட மராத்தான் ஓட்டப் பந்தயம்கூட முதல் அடியில் இருந்துதான் தொடங்குகிறது. வாசலை அடைத்துப் போடப்படும் மிகப் பெரிய கோலம்கூட ஒரு சிறிய புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது. இப்படியெல்லாம் சமாதானம் செய்து கொண்டாலும், அதை மீறி ஏன் இந்த நிலை என்ற கேள்வியும் எழுவதைத் தடுக்க இயலவில்லை.

பெண்களின் முன்னேற்றம் குறித்து எல்லோரும் பேசினாலும், அவர்களை இன்னும் ஆண்களுக்கு சமமாகப் பார்க்கும் பார்வை நமது சமூகத்தில் இல்லை. ஒரு பெண் குழந்தையிடம் விளையாடுவதற்கு ஒரு கரடி பொம்மையையும் ஒரு பந்தையும் கொடுத்தால், அது விளையாடுவதற்கு பந்தையே தேர்வு செய்யக் கூடும். ஆனால், இந்த இரண்டையும் வீட்டுக்கு வாங்கிவரும் நாம் பந்தை வீட்டில் உள்ள ஆண் குழந்தையிடமும் பொம்மையைப் பெண் குழந்தையிடமும் கொடுக்கிறோம். இந்த செயலின் பின்னால் உள்ள எண்ணம் என்ன? உடலை வருத்தும் விளையாட்டுகளையும் வேலைகளையும் பெண்களால் செய்ய இயலாது என்பதே.

இந்த எண்ணம் நமது பிறப்பில் இருந்து குடும்பத்திலும், அக்கம்பக்கத்திலும், கல்வி நிறுவனங்களிலும் பணி இடங்களிலும் மேலோங்கி இருக்கிறது. தீவிரமான சுயமுயற்சிகள் இல்லாமல் இதுபோன்ற கருத்துக்களின் தாக்கத்தில் இருந்து நம்மால் வெளிவர முடிவதில்லை.

ஒரு துறவியிடம் சீடராகச் சேர்ந்து பாடம் கற்பதற்காக இன்னொரு துறவி வந்தார். வீட்டுக்கு வந்தவரை உபசரித்து இருக்கையில் அமரச் செய்தார் குரு. ஒரு தேநீர் நிரம்பிய குவளையைக் கொண்டுவந்து புதியவரின் முன்வைத்து, குடுவையில் இருந்து மேலும் தேநீரைக் குவளையில் ஊற்றினார். குவளை நிரம்பி வழிந்தபிறகும் குரு தேநீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. ஏராளமான தேநீர் வெளியில் கொட்டிக் கொண்டிருந்தது. புதியவருக்கு எரிச்சலும் கோபமும் வந்தது. ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்... நல்ல தேநீர் யாருக்கும் பயனில்லாமல் வீணாகிறது’’ என்றார்.
குரு அவரைப் பார்த்துப் புன்னகைத்தார். ‘‘குவளைக்குள் முதலிலேயே இருக்கும் தேநீரை வெளியில் கொட்டாமல் புதிய தேநீரை ஊற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. அதுபோல்தான் நீங்கள் இதுவரை கற்று ‘சரி’ என்று நம்பிக்கொண்டிருக்கும் சிந்தனைகளை அகற்றாமல் நான் புதிதாக உங்களுக்கு எந்தப் பாடமும் கற்றுத்தர இயலாது. அப்படி நான் கற்பித்தாலும் அதனால் எந்தப் புதிய விளைவும் ஏற்படப் போவதில்லை’’ என்றார். புதியவருக்கு அதன் பொருள் புரிந்தது.
இந்தக் கதையைப் போலத்தான் ராணுவத்தின் நிலையும் இருக்கிறது. சமூகத்தில் இருந்து கற்றுக்கொண்ட பெண்கள் குறித்த பார்வை ராணுவ உயர் அதிகாரிகளுக்கு மாறவில்லை. அதனால்தான் தரைப்படை துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன், ‘‘பெண்கள் இல்லாமலே நமது ராணுவம் செயல்பட முடியும்’’ என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சர்ச்சையைக் கிளப்பினார். ‘பொறுப்பற்ற கருத்தைத் தெரிவித்திருக்கும் பட்டாபிராமன் இல்லாமலும் நமது ராணுவம் செயல்பட முடியும்’ என்று கூறி அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார். இதன் பிறகு லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன் தான் கூறியது மற்றவர்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்பதாகக் கூறியிருக்கிறார். அவர் மன்னிப்புக் கேட்டதுடன் இந்தப் பிரச்னை முடிவடைந்து விட்டதாக சுஷ்மா ஸ்வராஜும் நிறைவு செய்திருக்கிறார்.
உண்மையில் அத்துடன் பிரச்னை முடிவடைகிறதா? கடந்த மே 29ஆம் தேதி மேஜர் ஷோபனா ராணி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார். சென்ற 2006 ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ராணுவத்தில் நான்கு தற்கொலைகள் நடந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் நானூறு தற்கொலைகள் ராணுவத்தில் நடந்திருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. ஆக, பிரச்னைகள் முடியவில்லை... தினம்தினம் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன...
சுஷ்மிதாவின் தற்கொலையைச் சாக்கிட்டாவது மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் 28.06.06

கிராமத்தை மறைக்குது உல்லாச உலகம்!

இந்த இடுகை எனது 50 -வது இடுகை என்று ஸ்டேஷன் பெஞ்ச் காட்டுகிறது. புதிதாக எழுதலாம் என்ற எனது முயற்சியில் நான் வெற்றி பெற முடியவில்லை. எனவே ஜூனியர் விகடனில் வெளியான எனது பழைய கட்டுரைகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு மீண்டும் தருகிறேன்.

கிராமத்தை மறைக்குது உல்லாச உலகம்!

அது நீர் விளையாட்டுகள் நிரம்பிய உல்லாசப் பூங்கா. 18 வகையான நீர் மற்றும் பனி விளையாட்டுகளை அங்கு வருவோர் விளையாடலாம். ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். நுழைவுக் கட்டணம் குறைந்தபட்சம் 120 ரூபாய் இருக்கும். இது அந்தப் பூங்காவுக்குள் நுழைவதற்கு மட்டுமே. அந்தக் கட்டணத்திற்கு விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். பனிச் சிகரத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் பனிப்பாறைகளும் செயற்கையாக அந்தப் பூங்காவில் இருக்கின்றன.

நாள்தோறும் சராசரியாக 700 பேர் அங்கு வருகை தருகிறார்கள். அந்தப் பூங்காவை அங்கு நிறுவி நடத்துபவர்களுக்கு தினமும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் லாபம் வருகிறது. அங்கு வந்து செல்பவர்கள் மன மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டம் பசர்கான் என்ற கிராமத்தில் இந்தப் பூங்கா இருக்கிறது. இது போன்ற பூங்காக்கள் அமைக்கப்படுவது இந்தியாவின் வளர்ச்சியைக் காட்டுகிறது என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு ‘காலாவதியாகிப் போன தத்துவங்களைக் கொண்டுள்ள’ கட்சிகள் தடையாக இருக்கின்றன என்று இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் சென்ற வாரத்தில் கூறியிருந்தார். பத்து சதவிகித வளர்ச்சியை இந்தியா எட்டுவதற்கு சில அரசியல் கட்சிகள் முட்டுக் கட்டையாக இருப்பதாக இதற்கு முன்பும் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருக்கிறார். அவர் எந்தக் கட்சிகளை மனதில் நினைத்துக் கொண்டு பேசுகிறாரோ, அந்த அரசியல் கட்சிகளின் தயவில்தான் அவர் பிரதமர் பதவியில் நீடிக்க முடிகிறது என்பது வேறுவிஷயம்!

நாடெங்கிலும் உழைத்துக் களைத்த மக்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதற்காகவே அதிசயப் பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதத்தை பத்திரிகையாளர் பி.சாய்நாத் சித்திரிக்கும் இன்னொரு காட்சி தவிடுபொடியாக்குகிறது. அதே பசர்கான் கிராமத்தின் இன்னொரு பகுதியை அவர் படம்பிடித்துக் காட்டுகிறார்.

கிட்டத்தட்ட 3,000 பேர் அந்தக் கிராமத்தில் வாழ்கிறார்கள். அந்த மக்கள் மிகவும் குறைந்த கூலிக்கு அருகில் உள்ள நகர்ப்பகுதிக்கு ரயிலில் சென்று வேலை செய்து வருகிறார்கள். துப்புரவு செய்வதற்கும் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அதைச் சீர்செய்வதற்காகவும் எப்போதாவது அவர்களில் ஓரிருவர் அந்தப் பூங்காவுக்குள் செல்வதுண்டு. பூங்காவின் அருகிலேயே குடியிருந்த போதிலும் இந்த மக்கள் தங்கள் களைப்பைப் போக்கிக் கொள்ள இந்தப் பூங்காவை பயன்படுத்திக் கொள்ள முடியாது.

ஒருகாலத்தில் நீர்வளம் நிறைந்ததாக இருந்த இந்தக் கிராமத்தில் இப்போது தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு நாளில் பல மணிநேரம் மின்வெட்டு அமல் செய்யப்படுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இதனால் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். ஆனால், இதே கிராமத்தில் இருக்கும் அந்த ‘அதிசயப் பூங்கா’வில் ஒரு நிமிடம் கூட மின் தடை ஏற்படுவதில்லை. 18 வகையான நீர் விளையாட்டுகளுக்குத் தேவையான தண்ணீர் தடையில்லாமல் கிடைக்கிறது. ஒருபுறம் நியாயமான முறையில் கிராம மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இன்னொருபுறம் அவை அனைத்தும் சுலபமாக அந்தப் பூங்காவுக்குக் கிடைக்கிறது. அருகருகில் இருந்தாலும் தொட்டுக் கொள்ள முடியாத தண்டவாளங்களைப் போல ஒரே கிராமத்தில் இரு வேறு உலகங்கள் இயங்குகின்றன.

இந்தப் பூங்கா அந்தக் கிராமத்தில் சிறிதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் கிராமங்களுக்குள் நுழையும்போது பெரிய நிறுவனங்கள் அளிக்கும் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படுவதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இந்த மக்களுக்கு விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் கிடையாது. பழைய கடன்களின் சுமை காரணமாகப் புதிய கடன்கள் கிடைக்காது. எனவே அவர்களால் விவசாயத்தை நடத்த முடியாது. மாற்று வேலைவாய்ப்புகள் கிடையாது. இவர்களுக்கு ஏதாவது செய்து இவர்களை உயிர் பிழைத்திருக்கச் செய்யுங்கள் என்று யாராவது சொன்னால் அதைக் ‘காலாவதியாகிப்போன சிந்தனை’ என்கிறார்கள்! ‘விளைநிலங்களைப் பறிகொடுத்து அங்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதற்கு அனுமதிக்காதீர்கள்’ என்று பேசினால் அவர்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்களாகத் தெரிகிறார்கள்! பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ந்து பேசிவரும் இந்திய வளர்ச்சியின் தன்மை இதுதானா என்ற கேள்வி முன் எப்போதையும்விட இப்போது கூர்மையாக எழுகிறது.

டாக்டர் மன்மோகன் சிங் பொருளாதார நிபுணர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. 1991 முதல் அவர் நடைமுறைப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களால் எத்தனை பேர் பலனடந்திருப்பார்கள்? 15 கோடிப் பேர் இருக்கலாம். ஆனால், இன்னும் 85 கோடி மக்கள் இந்த சீர்திருத்தங்களுடைய பலன்களைப் பெறாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு நன்மைகள் போய்ச் சேரவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் எதிர்மறையாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நகர்ப்புறங்களில் சர்வதேசப் பள்ளிகளின் தரத்துக்கு பல பிரபலமான பள்ளிகள் உருவாகியிருக்கின்றன. இன்னொரு பக்கம், சட்டரீதியாகக் கல்வி பெறும் உரிமை பெற்ற பல லட்சக்கணக்கான சிறுவர்கள் இன்னும் பள்ளிக்கூடம் செல்லாமல் இருக்கிறார்கள். நம்மில் நால்வரில் ஒருவரோ அல்லது ஐவரில் ஒருவரோ இரவு படுக்கைக்குத் தூங்கப் போகும்போது பசித்த காலி வயிறுடன் செல்கிறோம். வறுமை தொடர்பான பிரச்னைகளால் தினந்தோறும் பல நூறு மக்கள் செத்து மடிகிறார்கள். சாதி, மதம், பாலினம் போன்ற பல பாகுபாடுகளால் மனித வாழ்க்கை இங்கு மகிழ்ச்சியற்றதாக இருக்கிறது. வேலையின்மை இளைஞர்களைத் திசைமாற்றுகிறது.

இந்தத் தகவல்கள் அனைத்தும் குற்றம் சொல்லியே பேர் வாங்கப் பார்க்கும் அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுகளில் இருந்து தொகுக்கப்பட்டவை அல்ல. இந்திய அரசே ஒப்புக்கொண்ட புள்ளிவிவரங்கள். அப்படியே அரசு ஒப்புக் கொள்ளாவிட்டாலும் இந்திய மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியாதவையும் அல்ல.

இந்தச் சூழலில் இருக்கும் ஒரு நாடு வளர்ச்சி பெற்ற நாடாகக் கருதப்பட முடியாது. எனவே நாடு வளர்ச்சி அடைந்த நாடாக முன்னேறுவதற்கு இந்தக் குறைகளையும் போக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் பல பிரச்னைகளில் இருந்து அரசு தனது பங்களிப்பை விலக்கிக் கொள்வதை, நவீன சிந்தனை என்றோ சீர்திருத்தம் என்றோ எடுத்துக் கொள்ள முடியாது.

மேலோட்டமாகப் பார்த்தால் மட்டுமே அரசு, மக்கள் பிரச்னைகளில் இருந்து விலகுவது போல் தெரிகிறது. ஆனால், உண்மையில் அது அதிகமாகத் தலையிடுகிறது. அது மக்களுக்கு உதவுவதற்காக அல்ல, உல்லாசப் பூங்காக்களுக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் ஆதரவாக அப்பட்டமாகத் தலையிடுகிறது.

அதேசமயம் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், சமூகத்தின் வளர்ச்சி என்பது சீரானதாகவும் சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுடைய வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். இதை வலியுறுத்துபவர்களை வளர்ச்சிக்குத் தடையானவர்கள் என்று முத்திரை குத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது!

2020இல் இந்தியாவை ‘வல்லரசு’ என்ற நிலைக்குக் காங்கிரஸ் கட்சி கொண்டு செல்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்போதும் ‘வறுமையே வெளியேறு’ என்ற முழக்கத்தைத் தேர்தலுக்காக முன்வைக்க வேண்டிய அவல நிலை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கக் கூடாது! --- - ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன்(19.11.06)

Sunday, January 14, 2007

திரும்பி வராத முருகேசன்கள்...

உடலில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் அந்தச் சிறுவன் சுடுமணலில் படுத்துக்கிடக்கிறான். அவனது கைகளும் கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன. பள்ளிக்குச் செல்லாமல் வகுப்புக்கு ‘கட்’ அடித்துவிட்டு சினிமாவுக்குப் போன சிறுவனுக்கு அந்தக் கிராமத்துத் தந்தை வழங்கிய தண்டனை இது. அன்றிரவே அந்தச் சிறுவன் வீட்டில் உள்ள பணத்தையும் நகைகளையும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடி விடுகிறான். எல்லாவற்றையும் சில நாட்களில் தொலைத்துவிட்டு, அடுத்து வந்த ஆண்டுகளில் வாழ்க்கையையும் இழந்து தோற்றுப்போன மனிதனாக அவன் ஊருக்குத் திரும்பி வருகிறான்.

‘வெயில்’ என்ற திரைப்படத்தின் கதையில் இடம்பெறும் அந்தச் சிறுவனின் பெயர் முருகேசன். இந்த முருகேசன் மீண்டும் கிராமத்து வீட்டுக்குத் திரும்பி வராமலே இருந்திருந்தால்கூட அவனுடைய வீட்டில் யாரும் அவனைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியையும் எடுத்திருக்கப் போவதில்லை. பள்ளியிலும் வீட்டிலும் அளிக்கப்படும் கடுமையான தண்டனைகள் அல்லது சுடுசொற்களுக்குப் பயந்து ஏராளமான சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். ‘நாலு காசு’ சம்பாதித்துவிட்டு ஒரு மரியாதையுடன் மட்டுமே வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற உறுதி இவர்களில் பெரும்பாலான சிறுவர்களுக்கு இருக்கும். ஆனால், அதற்குள் இவர்களில் பலர் ‘எங்கேயோ’ காணாமல் போய்விடுகிறார்கள்.

சென்னையில் கடந்த 2006 ஆம் ஆண்டு மட்டும் 189 சிறுவர், சிறுமியர் காணாமல் போயிருப்பதாக ‘குழந்தைகளுக்கான உதவி மையம்’ ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் சிறுமிகளின் எண்ணிக்கை 36 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து இந்த அமைப்பினரிடம் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையிலேயே இந்த எண்ணிக்கை தொகுக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்கப்படாத நிலையில் இன்னும் எத்தனை சிறுவர், சிறுமியர் ‘தொலைந்து’ போயிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சென்னையின் நிலவரம் இப்படி இருக்க, உத்தரப்பிரதேசம் நொய்டா நகரில் உள்ள நிதாரி பகுதியில் 38 சிறுவர்& சிறுமியர் கொல்லப்பட்டு ‘சாக்கடை’யில் வீசப்பட்டிருக்கிறார்கள். அது பற்றி தனது கருத்தை வழங்கி இருக்கிறார், அந்த மாநிலத்தின் பொதுப்பணித் துறை அமைச்சர் ஷிவ்பால் யாதவ். அது ‘‘இதுபோன்ற சிறிய நிகழ்ச்சிகள் வழக்கமாக அவ்வப்போது ஆங்காங்கே நடப்பதுண்டு’’ என்பதுதான்!

நிதாரியில் கொல்லப்பட்டிருக்கும் அந்த சிறுமிகளெல்லாம் மொஹிந்தர் என்பவரது ‘பசி’க்கு இரையாகி இருக்கிறார்கள். இதைதான் ‘வழக்கமான சிறிய நிகழ்ச்சி’ என்று அம்மாநில அமைச்சர் சொல்கிறார்! அவர் என்ன நினைத்து இப்படி இந்த விஷயத்தை மிகச் சாதாரணமாகச் சொன்னாரோ தெரியவில்லை. அவர் சொல்வதும் உண்மைதானோ என்று எண்ணத் தோன்றும்படியாக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மனித உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.

பஞ்சாப்பில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.க்கு சொந்தமான மூடப்பட்ட ஓர் அரிசி ஆலையில் இருந்து அரை குறையாக எரிக்கப்பட்ட நிலையில் நான்கு சிறுவர், சிறுமியரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த நவம்பர் 14ஆம் தேதி பொதிகலன் என்ற கிராமத்தில் இருந்து காணாமல் போன 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனின் உடல்களாக அவை இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் குழந்தைகள் காணாமல் போன நாள் ‘குழந்தைகள் தினம்’. இது இன்னும் வேதனையைக் கூட்டுகிறது. ஹைதராபாத் நகரில் 9 பேர், கடலூரில் 3 பேர், என்று இப்படி கொன்று புதைக்கப்பட்டவர்களின் பட்டியல் தினந்தோறும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சென்னையில் காணாமல் போன குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புக்குக் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோருடன் வசிக்கும் குழந்தைகள் காணாமல் போனால் காவல்துறைக்குப் புகார்கள் வரக்கூடும். பெற்றோரும் காப்போரும் இல்லாமல் நாள்தோறும் நடைபாதைகளிலும், பாலத்தடியிலும் சுருண்டு படுத்திருக்கும் சிறுவர், சிறுமியர் எத்தனை ஆயிரங்கள் இந்தியா முழுவதும் இருப்பார்கள்? இவர்களில் சிலர் காணாமல் போகும்போது, யார் வந்து புகார் கொடுக்கப் போகிறார்கள்?

போக்குவரத்து சிக்னல்கள் சிலவற்றில் நீங்கள் பார்த்திருக்கலாம். சிக்னலில் நாம் காத்திருக்கும் சில நொடிகளில் வாகனங்களைத் துணியால் துடைத்துவிட்டு சில நாணயங்களை எதிர்பார்த்து சிறுவர்கள் கையேந்துகிறார்கள். அவர்களில் சிலருடைய முகங்கள் நமக்குப் பரிச்சயமாகும் தருணத்தில், அந்த இடத்துக்கு அவர்கள் வருவதை நிறுத்தியிருப்பார்கள். வேறு சிக்னல்களுக்கோ அல்லது வேறு வேலைக்கோ அவர்கள் போயிருக்கக்கூடும் என்பதைத் தாண்டி நாம் அவர்களைப் பற்றிச் சிந்திக்க முடிவதில்லை.

இப்படிப்பட்ட சிறுவர், சிறுமியர் காணாமல் போய் விட்டார்கள் என்று காவல்துறைக்குப் புகார் வந்தாலும் அவர்கள் பெரிதாக எதுவும் செய்வதில்லை. அவர்களுடைய வேலைப் பளுவும் பணி முன்னுரிமைகளும் வேறு மாதிரியானவை. மக்களிடம் பரபரப்பை உண்டாக்கும் வழக்குகள், அதிகார மையத்துக்கு நெருக்கமானவர்களின் பிரச்னைகள் போன்றவற்றுக்கு இயல்பாகவே கிடைக்கும் முக்கியத்துவம் மற்றவற்றுக்குக் கிடைப்பதில்லை. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரியின் குழந்தை டெல்லியில் கடத்தப்பட்டபோது, ஏற்பட்ட பரபரப்பும் நெருக்கடியும் சாதாரணமாக மற்ற சம்பவங்களின் போது ஏற்படுவதில்லை.

பல விஷயங்களில் நன்றாகச் செயல்படுகின்ற தேசிய மகளிர் ஆணையம்கூட நொய்டா விவகாரத்தில் அதிக அக்கறை காட்டவில்லை. தனது பத்து வயது மகளைக் காணவில்லை என்று ஒரு தந்தை கொடுத்த புகாரின் பேரில் தேசிய மகளிர் ஆணையம் களத்தில் இறங்கியது. ‘இரண்டு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட சிறுமியர் அந்தப் பகுதியில் காணாமல் போயிருக்கிறார்கள்’ என்பதை ஆகஸ்ட் 2005 இல் கண்டுபிடித்திருக்கிறது. உடனே உ.பி. மாநில அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அரசு எதுவும் செய்யாமல் இருந்ததைப் பார்த்து நவம்பர் மாதத்தில் ஒரு நினைவூட்டுக் கடிதம் அனுப்பிவிட்டு மௌனமாகி விட்டது. மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் போன்றவை அனுப்பும் கடிதங்களுக்கு மாநில அரசுகள் என்ன மரியாதையை அளிக்குமோ, அந்த அளவுக்கான கவனமே அந்தக் கடிதத்துக்குக் கிடைத்தது !

இப்படி எல்லா நிறுவனங்களாலும் கைவிடப்பட்ட நிலையில்தான் ஏழைக் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் காணாமல் போவதால் பங்குச் சந்தை வீழ்ச்சி அடையப் போவதில்லை. மதுக்கடைகளிலும் ‘பார்’களிலும் வியாபாரம் குறையப் போவதில்லை. அந்தப் பகுதி அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுக்குத் தடை ஏதும் இருக்கப் போவது இல்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்களில் சில குழந்தைகள் ‘தொலைந்து’ போயிருப்பதால் யாருடைய அன்றாட வாழ்க்கையிலும் எந்த மாறுதலும் ஏற்படுவதில்லை. இதனால்தான் மூன்று வருடங்களாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட போதும் நிதாரியில் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

ஒரு சில சாக்லெட்களுக்கும் ஐம்பது அல்லது நூறு ரூபாய்த் தாளுக்கும் ஆசைப்பட்டு நிதாரியில் உள்ள மணீந்தர் வீட்டுக்குள் குழந்தைகள் சென்றார்களாம். இவர்களது உடலும் உயிரும் அவ்வளவு மலிவாக அந்த மிருகங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. ‘‘மனிதர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை மீண்டும் வீட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்கிறார்கள்’’ என்ற மேற்கோளை மணீந்தர் தவறாகப் புரிந்து கொண்டார் போலிருக்கிறது. இவரைப் போன்றவர்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் ‘கடவுள்’ எவ்வளவு அன்பானவராக இருக்கிறார் என்று ரவீந்திரநாத் தாகூரின் கூற்று ஒன்று உண்டு. அது இதுதான்-
‘மனிதனின் நடவடிக்கைகளால் கடவுள் இன்னும் விரக்தி அடையவில்லை என்ற செய்தியைத்தான் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கொண்டு வருகிறது!’


ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (17.01.07)

Thursday, January 11, 2007

எதிர்க்கட்சிகளை முடக்கலாமா?

ம.தி.மு.க.வின் பொதுக்குழு, ஜனவரி 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வில் இன்னும் அடிப்படை உறுப்பினர்களாக எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இரு எம்.பி.க்களும் நீடித்து வருகிறார்கள். இவர்கள் கட்சிக்குள் எழுப்பிய சலசலப்பு இந்தப் பொதுக்குழுக் கூட்டத்துடன் ஓரளவு அடங்கிப் போகும் என்று எல்லோருடைய எதிர்பார்ப்புமாக இருக்கிறது. அதாவது அந்தக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு இருக்கிறது என்ற சர்ச்சைக்கு இந்த பொதுக்குழு முடிவு கட்டிவிடும் என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு.

இருந்தாலும், இந்தப் பொதுக்குழுவோடு இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு விடும் என்று நம்புவதற்கு இடமில்லை. எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும் இன்னும் வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வில் அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டார்கள். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம், ‘உண்மையான ம.தி.மு.க. எங்களிடம்தான் இருக்கிறது...’ என்ற அங்கீகார உரிமை கோரி மனுக்கள் அளிக்கப் பட்டுள்ளன.

ஓர் அரசியல் கட்சியில் கருத்து வேறுபாடு எழுவது இயல்பான ஒன்றுதான். கட்சியின் பெரும்பான்மை முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவது என்ற கட்டுப்பாட்டுடன் இயக்கம் தொடர்ந்து இயங்கும். சமரசங்களுக்கு வாய்ப்பில்லாத சூழலில் அந்த இயக்கம் பிளவுபடக்கூடும். அல்லது தங்களுடைய அரசியல் ஆசைகள் நிறைவேறாத நிலையில், இனி தொடர்ந்து இந்த இயக்கத்தில் நீடிப்பதில் எந்த பயனும் இல்லை என்று சில தலைவர்கள் முடிவு செய்யக்கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த இயக்கத்தில் இருந்து சிலர் தாமாக விலகி விடுவார்கள். சிலர் அந்தக் கட்சிக்கு சிறிதாவது சேதம் ஏற்படுத்தும் விதத்தில் கட்சியின் ஒரு பிரிவினருடன் வெளியேறுவார்கள். சிலருடைய வெளியேற்றம் ஒரு கட்சிக்கு பலத்த சேதத்தைக்கூட எதிர்காலத்தில் ஏற்படுத்தி விடுவதுண்டு.

ஒன்றுபட்ட காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக இந்திராகாந்தி வெளியேற நேர்ந்தது. 1977 முதல் 1979 வரையிலான காலம் தவிர, அவர் இறக்கும்வரை இந்திரா பிரதமராகவே இருந்தார். அதேபோல் தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆரும் அவர் உயிரோடு இருக்கும் வரை தமிழகத்தில் 1977, 1980, 1984 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று முதலமைச்சரானார். தான் இருந்து உழைத்த கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில், அந்தக் கட்சிக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியவர்களில் இவர்கள் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்திராகாந்தி உருவாக்கிய கட்சியிலும் எம்.ஜி.ஆர். நிறுவிய கட்சியிலும்கூட, அவர்கள் வாழ்நாளிலேயே பிரிவுகளும் பிளவுகளும் ஏற்பட்டன. அவை எல்லாம் அவர்களுடைய செல்வாக்கைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அரசியல் களத்துக்காக தி.மு.க. உருவானது. அதில் இருந்தும் ஈ.வி.கே. சம்பத், எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், வைகோ போன்றவர்கள் வெளியில் வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது. கேரளத்தில் அந்தக் கட்சியில் இருந்து எம்.பி.ராகவன், கே.ஆர்.கவுரி ஆகியோர் சிறிய பிளவுகளை ஏற்படுத்தினர். எனவே, ஒரு கட்சியில் இருந்து பிரிந்து இன்னொரு கட்சியை உருவாக்குபவர்களுடைய கட்சியில் ஒரு பிளவு வரும் போது, ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்று சொல்வது பொருத்தமாக இல்லை.

தி.மு.க.வில் இருந்து வெளியேறியவர்களில் ஈ.வி.கே.சம்பத் தொடர்ந்து தனிக்கட்சி நடத்த இயலாமல் குறுகிய காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நெடுஞ்செழியனும் மக்கள் தி.மு.க.வைத் தொடர முடியாமல் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வில் இணைந்தார். தமிழக அரசியலில் சிறிய அளவிலான செல்வாக்கு என்ற அளவில் வைகோ ம.தி.மு.க.வை நடத்தி வருகிறார். அதாவது தி.மு.க.வில் கருணாநிதி தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் கட்சியை விட்டுப் போனவர்களில் இன்று வைகோ மட்டுமே ஒரு கட்சித் தலைவராக வெளியில் இருக்கிறார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு தி.மு.க. எதிர்ப்பில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. இருக்கிறது என்பது வேறு விஷயம்!

இந்தப் பின்னணியில் இன்று ம.தி.மு.க.வில் நடைபெற்று வரும் ‘குழப்பங்களைப்’ பார்க்க வேண்டியதிருக்கிறது. தி.மு.க.வின் தூண்டுதலின் பெயரிலேயே எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும் கட்சிக்குள் கலகம் செய் கிறார்கள் என்பது வைகோ வின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை தி.மு.க. மறுத்துள்ளது.

‘‘பொய்யுரைத்துப் புலம்புகிறவர்கள் புலம்பட்டும்; புழுதிவாரித் தூற்றி அலைபவர்கள் அலையட்டும். அவர்களை மறப்போம்; அவர்தம் சகவாசம் அறவே துறப்போம்; நமக்கு வேலை நிரம்ப இருக்கிறது’’ என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதாவது, ம.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் தி.மு.க.வினர் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று கட்சித் தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தி இருந்தார்.

ஆனால், அதற்கு சில தினங்களுக்குப் பிறகு, ‘‘நமது முயற்சி எதுவும் இல்லாமலே அப்படி ஒரு முயற்சி நாம் செய்ய வேண்டும் என்று நாம் எண்ணிடாமலே ‘நானூறு பொதுக்குழு உறுப்பினர்களுடன் நாங்கள் வெளியேறி விட்டோம்’ என்று கறாராகக் கணக்கு காட்டியுள்ளார்கள்’’ என்று முதல்வர் கருணாநிதி ஓர் அறிக்கையில் கூறி உள்ளார். இந்த அறிக்கையில் எல்.கணேசன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோருக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதத்தில் தி.மு.க. அணியில் மேலும் ஒரு கட்சி இணையும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி ஆறாம் தேதி தி.மு.க&வின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் நேரடியாகவே ம.தி.மு.க.வில் இருந்து வெளியேறி, தி.மு.க.வில் இணைகிறவர்களுக்கு உட்கட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதி அளிப்பதாகக் கூறுகிறது. அதாவது ம.தி.மு.க.வினரைத் தி.மு.க.வில் சேருமாறு பகிரங்கமாக தூண்டுகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது வைகோவை அரசியல்ரீதியாகத் தனிமைப் படுத்துவதற்கு ம.தி.மு.க.வில் நடைபெறும் குழப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள தி.மு.க. தயாராக இருப்பதாகத் தெரிகிறது. 1976 முதல் 1989 வரையிலான 13 வருடங்கள் ஆட்சியில் இல்லாமல் தி.மு.க.வைக் கட்டிக் காப்பதற்கு கருணாநிதி என்னென்ன சிரமங்களைச் சந்தித்தார் என்பதை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்திருக்க முடியாது. அதைப் போலவேதான் வைகோவும் இன்று இருக்கிறார். ஆட்சி நிர்வாகத்துக்கான வாய்ப்பே இல்லாமல் 13 வருடங்களாக கட்சியை நடத்தி வருகிறார். ம.தி.மு.கவுடன் ஒப்பிடும் போது தி.மு.க மிகப் பெரிய இயக்கம். வைகோவுடன் ஒப்பிடும்போது, கருணாநிதிக்கு மக்கள் செல்வாக்கு மிகவும் அதிகம். ம.தி.மு.க தோன்றியதற்குப் பிறகு நடந்த 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் தமிழக மக்கள் இதை நிரூபித்திருக்கிறார்கள்.

இப்போது மத்தியில் நடைபெறும் ஆட்சியில் தி.மு.க. இடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆளும் கூட்டணி பலமாக இருக்கிறது. இந்நிலையில் ஜனநாயகத்தின் வெற்றிக்கு எதிர்க்கட்சிகளின் செயல்பாடு மிகவும் அவசியம். எதிர்க்கட்சிகள் தங்கள் பொறுப்புகளை உணராமல் இருந்தாலும்கூட, ஜனநாயகவாதிகள் அவர்களுடைய செயல்பாட்டை முடக்க முயல மாட்டார்கள்!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (14.01.07)

Thursday, January 04, 2007

தியாகியாக்கப்பட்ட ‘சர்வாதிகாரி!’

‘‘அவர்கள் என்னை நரகத்தின் தீயில் போட்டுப் பொசுக்கினாலும் நான் அழமாட்டேன். இராக் மக்களுக்குக்காக அதை நான் தாங்கிக் கொள்வேன்.’’
வழக்கு விசாரணையின்போது கூறியபடியே சதாம் உசேன் தனது மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்.

‘‘இந்த வழக்கு நியாயமாக விசாரிக்கப்படவில்லை என்று சந்தேகப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த சந்தேகத்தை முழுவதுமாகப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே இந்த வழக்கில் சதாம் உசேனுக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் நிறுத்தி வையுங்கள்’’ என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர், இராக் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இன்றைய உலகச் சூழலில் ஐ.நா-&வின் வேண்டுகோளை யார் மதிக்கிறார்கள்?

அதேசமயம், ‘‘ஒரு நியாயமான விசாரணைக்குப் பிறகு, சதாம் உசேன் இன்று தூக்கில் இடப் பட்டிருக்கிறார். அவர் இராக்கிய மக்களுக்கு அளிக்க மறுத்த நீதி அவருக்கு வழங்கப்பட்டி ருக்கிறது’’ என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்திருக்கிறார்.

உண்மையில் சதாம் மீதான விசாரணை நியாயமான முறையில் நடந்ததா? அது கேலிக்கூத்தாக நடந்தது என்றும் நியாயமாக நடைபெறவில்லை என்றும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை குற்றம் சாட்டியிருக்கிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய மனித உரிமை அமைப்பான ‘மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு’ இந்த விசாரணையில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறியது. இந்த விசாரணையின் நீதிபதி மாற்றப்பட்டிருக்கிறார். சதாமுக்கு ஆதரவாக வாதாடுவதற்கு முன்வந்த மூன்று வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஹிட்லரின் நாஜிப் படைத் தலைவர்களின் போர்க் குற்றங்களை விசாரித்த நூரெம்பர்க் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய தரப்பு நியாயத்தைச் சொல்வதற்குப் போதிய வாய்ப்புகளை வழங்கியது. ஆனால், சதாம் உசேன் வழக்கில் அதுகூட நடக்கவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தால், வழக்கின் இறுதியில் சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட மாட்டாது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். எனவே இராக் நாட்டுக்குள்தான் விசாரணை என்று முடிவானபோதே தீர்ப்பு என்ன என்பதையும் அனைவரும் ஊகித்துவிட்டார்கள். அந்தத் தீர்ப்பையும்கூட அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், தனது அரசியலுக்கு சாதகமான நாளில் வெளியிடவும் அவ்வாறே தண்டனையை நிறைவேற்றவும் இராக் அரசு தயாராக இருக்கிறது என்னும்போது, அமெரிக்கா ஏன் சர்வதேச விசாரணையை ஆதரிக்கப் போகிறது?

மேலும் சர்வதேச விசாரணைகளில் குற்றம்சாட்டப் பட்ட தரப்புக்குப் பதிலளிக்க உரிய வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால், சதாமுக்கு அதுவும் கிட்டவில்லை. அவருக்கு நவம்பர் 5ஆம் தேதி தூக்குத் தண்டனை என்ற தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதற்கான நீதிமன்ற ஆவணங்கள், சதாமின் வழக்கறிஞர்களின் கைகளுக்கு நவம்பர் 22ஆம் தேதி கிடைக்கின்றன. அந்த 300 பக்கத் தீர்ப்பைப் படித்து அவர்கள் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். 300 பக்க தீர்ப்பு மற்றும் அதில் உள்ள விஷயங்கள் குறித்து சதாம் வழக்கறிஞர்களின் எழுத்துப்பூர்வமான முறை யீடுகள் அனைத்தையும் இராக் தீர்ப்பாயம், இராக் சட்டங்களின்படி விசாரிக்க வேண்டும். ஆனால், அதற்கு அது எடுத்துக்கொண்ட கால அவகாசம் மூன்று வாரங்கள் மட்டுமே. நான்காவது வாரத்தில் சதாம் தூக்கில் போடப் பட்டுவிட்டார். இதுதான் ஜார்ஜ் புஷ் கூறும் ‘நியாயமான’ விசாரணை!

இந்தத் தூக்குத் தண்டனையில் எந்தவித நியாயமான விசாரணையோ நீதியோ இல்லை. மாறாக, இந்தத் தண்டனை முழுக்க முழுக்க அரசியல்ரீதியானது என்றே பெரும் பாலான மக்கள் கருதுகிறார்கள். ஆரம்பத்தில் ஈரானில் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒடுக்குவதற்கு அமெரிக்கா சதாமைப் பயன்படுத்தியது. அப்போது சதாம் இராக்கில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகவும் குர்து இன மக்களுக்கு எதிராகவும் கொடிய பல செயல்கள் செய்தார். அந்த காலகட்டங்களில் அவர் அமெரிக்காவுக்கு நம்பிக்கைக்குரிய நண்பனாக இருந்தார் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய செய்தி.

அடுத்தடுத்த விசாரணைகளின்போது அமெரிக்காவின் உதவியுடனும் அங்கீகாரத்துடனும் தான் செய்த குற்றங்கள் குறித்து ‘அப்ரூவர்’ போல சதாம் வாய்திறக்கக் கூடும். அதற்குமுன் அவர் பேசுவதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவசரமாகத் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்பட்டிருக்கலாம்.

இராக்கில் எக்குத்தப்பாக சிக்கிக் கொண்ட அமெரிக்காவுக்கு, தன்னுடைய ஆக்கிரமிப்புப் படையை விலக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்து விட்டது. இந்நிலையில், படைவிலக்கல் அமெரிக்காவின் தோல்வி யாகக் கருதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் சதாம் உசேன் கொல்லப்பட்டிருக்கலாம். இராக் மக்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த சர்வாதிகாரியை அழித்து, அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டி விட்டோம் என்று கூறி, இனி படை விலக்கலுக்கான திட்டங்களை அமெரிக்கா அறிவிக்கக்கூடும்.

இராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. சதாமின் மரணத்துக்கு ஷியா பிரிவு மக்கள் வருத்தப்படவில்லை. அவர் மரண தண்டனைக்குத் தகுதியானவர்தான் என்று அந்தப் பிரிவுத் தலைவர்கள் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். இந்த முரண்பாட்டை மேலும் அதிகரிக்கும் விதத்திலேயே சதாமுக்கு தூக்குத் தண்டனையை அவசரமாக வழங்கி யிருக்கிறார்கள். அதாவது சதாமின் மரணத்தை ஒரு தரப்பினர் கொண்டாடும்போது, மற்ற தரப்புக்கு அது கோபத்தை ஏற்படுத்தும். அதன் விளைவாக இருதரப்புக்குமான பகை முரண்பாடுகளும் அதிகரிக்கும் என்று கருதியே அமெரிக்கா சதாமை தூக்கிலிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

இவை ஒருபுறமிருக்க, இராக் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்வியும் கூடவே எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு இராக்கின் நிலைமைகள் மாறியிருக்க வேண்டும். ஆனால், சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு வேறுவிதமான சித்திரத்தை அளிக்கிறது. அமெரிக்க, ஆங்கிலக் கூட்டுப்படையின் ஆக்கிரமிப்பின்போது இருப்பதைவிட சதாம் உசேனின் சர்வாதிகார ஆட்சியில் மகிழ்ச்சியாக இருந்ததாக 90 சதவிகித இராக்கியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சதாம் காலத்தைவிட இப்போதுதான் தங்கள் உயிருக்குப் பதுகாப்பு இல்லை என்று 95 சதவிகித மக்கள் கருதுகிறார்கள்.

அதிகாரத்தில் சதாம் இல்லாத நிலையில், இத்தகைய மோசமான சூழலை இப்போது இராக்கில் உருவாக்கியது யார்? சதாமுடைய குற்றங்களுக்காக விசாரணை நடத்தப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், இராக்கின் இன்றைய அவலங்களுக்குக் காரணமானவர்கள் மீது யார் விசாரணை நடத்துவது? அதற்கான வலிமை இன்று உலகில் யாருக்கு இருக்கிறது?

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் 07.01.07

Labels: , , ,

Tuesday, January 02, 2007

வராத மணமகளுக்கு ஏங்கும் மாப்பிள்ளைகள்!

‘‘பிரிட்டன் ஜனநாயக மரபுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவரே அடுத்து பதவியேற்கக் காத்திருக்கும் பிரதமர்’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான எல்.கே.அத்வானி, ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறினார். அவ்வளவுதான்! பா.ஜ.க. வின் மூத்த தலைவர்கள் பலர் கொதித்துப் போய்விட்டனர். நேற்றும் இன்றும் நாளையும் அடல் பிகாரி வாஜ்பாய்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்றார்கள் அவர்கள்.

‘‘பிரதமர் பதவிக்கு வாஜ்பாய் பெயரை நான் தான் முன்மொழிந்தேன். அப்போது நான் பா.ஜ.க. வின் தலைவராக இருந்தேன். அடுத்த தேர்தலில் அவர் என்னுடைய பெயரை முன்மொழிவாரா என்பது சந்தேகம் தான்’’ என்று இன்னொரு சமயத்தில் அத்வானி கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது கட்சித் தலைவராக ராஜ்நாத்சிங் இருக்கிறார். பிரதமர் பொறுப்புக்கு தனது பெயரை ராஜ்நாத்சிங் முன்மொழிய வேண்டும் என்பது அத்வானியின் எதிர்பார்ப்பாக இருக்கலாம். சமீபத்தில் நடந்து முடிந்த லக்னோ தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தின் முடிவில், அத்வானியை தான் ஆதரிப்பதாக வாஜ்பாய் செய்தியாளர்களிடம் கூறினார் என்பது வேறு விஷயம்!
ஆனால், எப்போதெல்லாம் பா.ஜ.க. வின் ஆட்சித் தலைமை குறித்து சர்ச்சை எழுகிறதோ அப்போதெல்லாம் வாஜ்பாய்க்கு இருக்கும் செல்வாக்கு உறுதி செய்யப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் கிடைத்தால், பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய்க்கு மட்டுமே தங்கள் ஆதரவு அளிக்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சொல்லியிருக்கிறார். ‘‘கட்சியின் மூத்த தலைவர் வாஜ்பாய். அவருடைய கருத்துக்களை மனதில் கொள்ளாமல் புறக்கணித்து, பா.ஜ.க. தனது வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது’’ என்று உ.பி. முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் பேசியிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முலாயம் சிங் யாதவ் இல்லை. இருந்தும் அவர் வாஜ்பாயின் தலைமை குறித்து இப்படிப் பேசியிருக்கிறார்.

தலைவர்கள் பேசும் வார்த்தைகள் அறியாமல் வந்து விழுபவை அல்ல; உணர்ச்சி வேகத்தில் சிலர் வேண்டுமானால் பேசலாம். ஆனால், ‘நானே பிரதமராக வேண்டும்’ என்று அத்வானி அறியாமல் சொல்வதற்கு வாய்ப்பில்லை. பாகிஸ்தான் சென்றிருந்தபோது, முகமது அலி ஜின்னா ‘மதச்சார்பற்றவர்’ என்று அத்வானி சொன்னதுகூட தற்செயல் நிகழ்வாக நிச்சயம் இருக்காது. அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று வாஜ்பாய் சொன்னதற்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படும் தலைவராக அத்வானி உருவாக வேண்டும். அதற்கு அவருடன் இருக்கும் தீவிர இந்துத்துவ முத்திரை தடையாக இருக்கிறது. அந்தத் தடையைத் தகர்க்கும் முயற்சியின் முதல் படியாகவே அத்வானி அப்படிப் பேசியிருக்க வேண்டும்.

நடந்து முடிந்த லக்னோ தேசிய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், ‘லக்னோ வழியாகவே டெல்லி செங்கோட்டையைச் சென்றடைய முடியும்’ என்று வாஜ்பாய் பேசியிருக்கிறார். இதுவும் பொருள் பொதிந்ததாகவே தெரிகிறது. அதாவது, உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்காமல் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பில்லை என்பது அதன் பொருள். இன்றைய அரசியல் சூழலில் உ.பி.யில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பு பா.ஜ.க. வுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்கும்போது இதற்கு என்ன அர்த்தம்? முலாயம் அல்லது மாயாவதியுடன் கூட்டணி மூலமாக உ.பி.யில் தனது செல்வாக்கை உறுதி செய்து கொள்ளவேண்டும். அல்லது எதிர்அணி போலத் தோற்றம் அளித்தாலும், தங்களுக்குத் தொல்லைகள் கொடுக்காத ஆட்சி அங்கு அமைய வேண்டும். அப்படி ஒரு புரிதல் பா.ஜ.க.வுக்கும் முலாயமுக்கும் இருப்பதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியை நோக்கியும் மாயாவதியை நோக்கியும் நகர்வதற்குத் தயாராக இருக்கும் ‘உயர்’ சாதியினரின் வாக்கு வங்கியைத் தங்களிடம் தக்க வைப்பதற்கு பா.ஜ.க. போராடுகிறது. இதற்காகவே தீவிரமான இந்துத்துவ முழக்கங்களை மீண்டும் முன்வைக்கிறது. முதலமைச்சராக பா.ஜ.க. முன்னிறுத்துகின்ற கல்யாண்சிங்குக்கும் முலாயம் சிங்குக்கும் நல்ல உறவு நீடிக்கிறது.

கல்யாண்சிங்கின் மகன் முலாயம் அரசில் இருந்து வெளியேறி, பா.ஜ.கவில் சேர்ந்த பின்னும் அமைச்சராக இருந்தபோது தனக்கு தரப்பட்ட மாளிகையை அவர் இன்னும் காலி செய்யவில்லை. கல்யாண்சிங்கின் வீட்டுக்கு அடுத்த பங்களாவை அவரது தோழியரான குசும்ராய் 30 வருடங்கள் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்து முலாயம் அரசு ஆணையிட்டுள்ளது. அங்கு குசும்ராய் அவரது அப்பாவின் பெயரில் அறக்கட்டளை நடத்துகிறார். அவரது அப்பா பொதுவாழ்வில் பிரபலமானவர் இல்லை என்னும்போது இந்த சலுகை ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கெனவே ராஜ்நாத்சிங் பா.ஜ.க. தலைவராக்கப் பட்டதில் இருந்து ராஜபுத்திரர்களின் வாக்குகள் முலாயமிடம் இருந்து பா.ஜ.க.வுக்கு இடம் மாறியிருக்கக் கூடும். ‘மதச்சார்பற்ற’ கட்சிகளான காங்கிரஸ் எதிர்ப்பு, இடதுசாரிகளின் ஆதரவின்மை, வி.பி.சிங்கின் எதிர்ப்பு போராட்டங்கள், புதிதாக உருவாகியிருக்கும் இஸ்லாமிய அமைப்புகள், ஆட்சியில் இருந்ததால் எழும் எதிர்ப்பு ஆகியவை முலாயமின் முதலிடத்தை அசைத்துப் பார்க்கும் காரணிகளாக இருப்பதை ஒதுக்கிவிட முடியாது. இவற்றால் ஏற்படுகின்ற இழப்புகளைச் சரிசெய்வதற்கு பா.ஜ.க.வின் மறைமுக உதவி அவருக்குத் தேவைப்படலாம். அதை பா.ஜ.கவும் அங்கீகரிக்கலாம். அதேபோல் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு சொந்தமாகவோ அல்லது முலாயம் மூலமாகவோ உருவாகும் உ.பி. ஆட்சி அவசியம் என்பதை வாஜ்பாயும் உணர்ந்து, அதை அவருடைய பாணியில் தனது கட்சியினருக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

மத்தியில் உடனடியாக இடைத்தேர்தல் நடைபெறு வதற்கான வாய்ப்பு எதுவும் இல்லாதபோது, அடுத்த பிரதமர் யார் என்ற சர்ச்சை எழுவதற்கான அவசியம் இல்லை. இருந்தும், அப்படி ஒரு சர்ச்சை வலிந்து உருவாக்கப்படுகிறது. ஏன்?

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிறப்பான எதிர்க்கட்சியாக பா.ஜ.க. செயல்படவில்லை. அந்த எதிர்க்கட்சியின் இடத்தை ஆளும் கூட்டணியை ஆதரிக்கும் இடதுசாரிகளே ஆக்கிரமித்துக் கொண்டனர். இந்த நிலையில் தங்களது செயல்திட்டத்தின் தவறுகளை மறைப்பதற்கு பா.ஜ.க.வுக்கு ஏதாவது சர்ச்சைகள் தேவைப்படுகின்றன. இதன் விளைவாகவே 2009- இல் வர இருக்கும் மக்களவைத் தேர்தல் முடிந்தபின், கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் தொடக்கப்படுகிறது. 1999 இல் அவர்களே பரணில் தூக்கிப் போட்ட ராமர் கோயில், பொது சிவில் சட்டம் மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 ஆகியவற்றை இப்போது மீண்டும் கையில் எடுக்கிறார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான சில கொள்கைகளால் துன்பப்படும்போது மக்கள் மாற்று அணியைத் தேடுவார்கள். தீவிர இந்துத்துவ கொள்கைகளை முன்னெடுத்தால், பா.ஜ.க.வை அந்த மாற்றாக மக்கள் பார்க்க மாட்டார்கள். தீவிரமான கொள்கைகளை அரசியல் இயக்கங்கள் கைவிட்ட பிறகே, மக்கள் அவற்றை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். இந்தக் கடந்தகால நிகழ்வுகளில் இருந்து பாரதிய ஜனதா பாடம் கற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (03.01.07)

Labels: , ,