Sunday, November 28, 2010

குற்றங்கள் போற்றேல்!

அது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை. இந்திய வரைபடத்தில் பெருமையுடன் குறிப்பிட முடியாத லட்சக்கணக்கான கிராமங்களின் அங்கமாக இருக்கும் கிராமம் ஒன்றில் அந்தக் கிளை இருந்தது. வங்கியின் மேலாளரையும் சேர்த்து மொத்தமே ஐந்து ஊழியர்கள்தான் அங்கு இருந்தார்கள். எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் அன்றாட அலுவல்களை அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அன்று வழக்கத்துக்கு விரோதமாக கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. ”அதை எடு; இதை எடு” என்று அந்த ஆய்வாளர் அந்த வங்கியைக் கலக்கிக் கொண்டிருந்தார். வங்கியின் மத்திய அலுவலகத்தின் ‘இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்டில்’ இருந்து கிளையின் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்வதற்காக அவர் வந்திருந்தார். நகர்ப்புறத்தில் இருக்கும் ஊழியர்களைவிட பொதுவாக கிராமங்களில் இருக்கும் ஊழியர்கள் அப்பாவியாக இருப்பார்கள். வங்கியின் உயர் அலுவலகங்களில் நடக்கும் பெரும்பாலான விஷயங்களை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த அப்பாவித்தனத்தை அடிப்படையாக வைத்துத் தான் அந்த இன்ஸ்பெக்டர் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தார்.

அந்த கிளையில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு என்று தனியாக ஒரு தொழிற்சங்கம் இருந்தது. அதன் செயலாளர் அலுவலகத்துக்கு கொஞ்சம் ‘லேட்’ ஆக வந்தார். அந்தக் கிளைக்கு வந்திருந்த அந்த ஆய்வாளரை யூனியன் செயலாளருக்கு வங்கியின் மேலாளர் அறிமுகம் செய்து வைத்தார். “சார்! இதுக்கு முன்னாடி நீங்க எங்கே இருந்தீங்க? ‘தென்காசி’யில் தானே மேனேஜரா இருந்தீங்க?” என்று கேட்டார் அந்த செயலாளர். அவ்வளவுதான்! அந்த இன்ஸ்பெக்டரின் ஆர்ப்பாட்டம் எல்லாம் அடங்கி விட்டது. முகம் சுருங்கி விட்டது. அதற்குப் பிறகு அவர் யாரிடமும் எதுவும் அநாவசியமாக பேசவில்லை.

கிளையில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு ஒரே ஆச்சர்யம். ”என்ன விஷயம்? ஏன் அந்த ஒரு கேள்வியிலேயே ’பார்ட்டி’ பதுங்கிட்டாரு?” என்று செயலாளரிடம் கேட்டார்கள். ”தென்காசியில் அவர் மேனேஜராக இருந்தார். எல்லாவிதமான கடன் கொடுக்கும்போதும் இவரும் கொஞ்சம் ‘கறந்திருக்காரு’. இதெல்லாம் கம்ப்ளெயிண்ட் ஆயிடுச்சு.. இடையில மூணு மாசம் சஸ்பெண்ட் பண்ணி வைச்சிருந்தாங்க.. அப்புறம் யாரையோ பிடிச்சு மறுபடியும் வேலைக்கு சேர்ந்துட்டாரு. கிளை எதுவும் கொடுக்காமல் இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்ட்டில் கொண்டு போட்டுட்டாங்க” என்று அவர் பதில் சொன்னார். ஒரு வங்கியில் தப்பு செய்தார் என்று தண்டிக்கப்பட்டவருக்கு வங்கிக் கிளைகளை தணிக்கை செய்யும் அதிகாரமா? இப்படி எல்லாம் கூட நிர்வாகத்தில் முடிவு செய்வார்களா என்று அந்தக் கிளையின் ஊழியர்கள் பேசிப் பேசி மாய்ந்து போனார்கள்!

அந்த அப்பாவிகளின் தார்மீக கோபம் வெளியில் தெரியாமல் அந்தக் கிளையின் சுவர்களுக்குள் அமுங்கிப் போனது. இப்போது உச்சநீதிமன்றம் அதே போன்றதொரு உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறது. ”ஊழலைத் தடுப்பதற்கும் ஊழல் நடைபெறாமல் கண்காணிப்பதற்கும் உருவாக்கப்பட்ட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கு குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை நியமிப்பது சரியா என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறது. ”இப்போது எப்படி வேலை நடக்கும்? ‘நீங்களே குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கிறீர்கள். நீங்கள் எப்படி என் மேல் நடவடிக்கை எடுக்க முடியும்?’ என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கேட்டால் ஆணையம் எப்படி செயல்பட முடியும்?” என்று ஒரு நீதிபதி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரைக் கேட்டிருக்கிறார்.

ஓர் அமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது? ஒரு சட்டம் என்ன நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டிருக்கிறது? இது போன்ற அடிப்படையான கேள்விகளைக் கூட மத்திய அரசு கருத்தில் கொள்ள மறுக்கிறது. வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு எவ்வளவு அலட்சியமாக விளக்கம் கொடுக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அட்டார்னி ஜெனரல் வாகன்வதி எவ்வளவு பொறுப்புடன் நீதிமன்றத்தில் மத்திய அரசைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் பாருங்கள். “ ஊழல் கண்காணிப்பு ஆணையர் அப்பழுக்கு இல்லாதவராகவும் நாணயமானவராகவும் இருக்க வேண்டியதில்லை. ஏனென்றால், ‘அப்பழுக்கில்லாத நாணயம்’ என்னும் தகுதி ஆணையருக்கு இருக்க வேண்டும் என்று மத்திய கண்காணிப்புச் சட்டம் அவருக்கான தகுதியை வரையறை செய்யவில்லை என்று அவர் சொல்லி இருக்கிறார்!

ஏற்கனவே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் ‘குற்றம் குறையற்ற நாணயமானவராக’ இருக்க வேண்டும் என்று 1998-ல் உச்சநீதிமன்றம் சொல்லி இருப்பதாக அறிய முடிகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வார்த்தைகளைக் கேட்டு அவர் எரிச்சலடைந்து விட்டார் போலிருக்கிறது. “ நாணயமாக இருக்க வேண்டும் என்பதை ஒரு தகுதியாக்கினால், ஒவ்வொரு நீதிபதி நியமனமும் ஆய்வுக்கு உட்பட வேண்டியிருக்கும்” என்று அதிரடியாகப் பேசி இருக்கிறார். தற்காப்புக்கு சிறந்த வழி எதிரியை அதிரடியாகத் தாக்குவதுதான் என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார் போலிருக்கிறது. யார் எதைப் புகாராக சொன்னாலும் ‘நீ என்ன யோக்கியமா’ என்று கேட்கும் நம்முடைய சராசரி மனநிலையில் இருந்து அட்டார்னி ஜெனரலும் மத்திய அரசும் விதிவிலக்கல்ல என்பதைத் தெளிவாக அவர் உணர்த்தி இருக்கிறார்!

இந்த சர்ச்சையின் நாயகன் யார்? அவர் பெயர் பி.ஜே.தாமஸ். அவர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக கடந்த 2010 செப்டம்பர் மாதம் 7-ம் தேதி பொறுப்பேற்றார். அவரை யார் நியமனம் செய்ய முடியும்? இந்தியப் பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட மூவர் குழுவே அவரை நியமிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. நேர்மை பற்றியும் நல்லாட்சி பற்றியும் மன்மோகன்சிங்கும் ப.சிதம்பரமும் எப்போதும் பேசுகிறார்கள். அவர்கள் எப்படி ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, உயர் பதவிகளில் நடக்கும் ஊழலைக் கண்காணித்து தடுக்கும் ஆணையத்துக்கு தலைவராக நியமித்தார்கள் என்பது புரியாத கேள்வியாகவே இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் அப்போதே இந்த நியமனத்தை எதிர்த்தார். இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். ஆனாலும் மன்மோகன்சிங்கும் சிதம்பரமும் அவரை நியமித்திருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய நம்பகத்தன்மையும் இதனால் பாதிக்கப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது அதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை அல்லது அவர்களால் மறுக்க முடியாத ஓர் அதிகார பீடத்தில் இருந்து அவர்களுக்கு அந்த ஆணை வந்திருக்கிறது!

பி.ஜே.தாமஸ் மேல் அப்படி என்ன குற்றச்சாட்டு? 1992-ம் வருடம் கேரளாவில் உணவு எண்ணெய் பற்றாக்குறையாக இருந்தது. இதைப் போக்குவதற்காக மலேசியாவில் இருந்து 15000 டன் பாமாயிலை மாநில அரசு இறக்குமதி செய்தது. இந்த இறக்குமதியில் எண்ணெய்க்கு சந்தை விலையை விட அதிக விலையை அரசு கொடுத்திருக்கிறது. இதனால் அரசுக்கு இரண்டு கோடியே 82 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதற்காக போடப்பட்ட வழக்கில் தாமஸ் மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஏனென்றால், அப்போது இறக்குமதிக்குப் பொறுப்பான துறையின் செயலராக இருந்தவர் இந்த பி.ஜே.தாமஸ்!

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் இணையதளத்துக்குப் போய்ப் பாருங்கள். முகப்பிலேயே நம்மிடம் பல கோரிக்கைகளை அது முன்வைக்கிறது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் நீங்களும் ஓர் அங்கமாகப் பங்கேற்று செயல்படுங்கள் என்று அது நம்மிடம் கோருகிறது; எல்லா அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்காமல் வாய் திறந்து பேசுங்கள் என்று நம்மை அழைக்கிறது. அத்துடன் அது நிற்கவில்லை. ”ஊழல் இல்லாத இந்தியா என்ற கனவை நனவாக்க உதவுங்கள்” என்று அறைகூவல் விடுக்கிறது. அதை ஏற்றுக் கொண்டு நாமும் நம்மாலான ஊழலை – மன்னிக்கவும் – உதவியைச் செய்யலாம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

’அக்னிப் பரீட்சை’

”மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்று அன்றாடம் நாம் யாராவது ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆ.ராசாவின் ராஜினாமாவுடன் முடிந்துபோகும் என்று எளிதாக நினைக்கப்பட்ட விவகாரம் இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது. சில சமயங்களில் ’தூவானமே’ பலத்த சேதத்தை ஏற்படுத்துவதும் உண்டு. இது தொடர்பாக ஒரு சம்பவம் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரலாம். கடந்த 2009-ம் வருடம் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி திடீரென்று உண்ணாவிரதம் இருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இலங்கையில் நடந்த போரை நிறுத்தும்படி, இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும் என்பது கோரிக்கை. போர் நிறுத்தப்படும் என்று மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டு அவர் அந்த அறப்போரை நிறுத்திக் கொண்டார்.

அதற்கு அடுத்த நாள் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடைய போராட்டத்தின் விளைவாக இலங்கை அரசு எடுத்துவரும் போர்நிறுத்த நடவடிக்கைகளில் மனநிறைவடைவதாக அப்போது அவர் சொன்னார். போர் தொடர்ந்து நடைபெறுவதாக இலங்கையில் இருந்து செய்திகள் வருகின்றனவே என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு முதலமைச்சர் கருணாநிதி பதில் சொன்ன போது, ”மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்று குறிப்பிட்டார்! அவர் சொன்ன சிறிய “தூறலால்” மே,2009-ல் ஈழத்தில் என்ன நடந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும்!

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த விவகாரத்திலும், மத்திய அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்தவுடன், அந்த சிக்கலின் சூடு தணிந்து விடும் என்பது பரவலான எதிர்பார்ப்பு. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ராசா ராஜினாமாவுக்குப் பிறகு, பிரதமர் மன்மோகன்சிங் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன; நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று உறுதியாக நிற்கின்றன. அரசு தரப்பு இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ”தணிக்கை அதிகாரியின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம்; இந்த விவகாரம் குறித்து மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகிறது; நீதிமன்ற விசாரணையும் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்றும் அரசு தரப்பில் பதில் சொன்னார்கள். காங்கிரஸ் கட்சியின் இந்த பதில் அரசியல் களத்தில் அதனுடைய ஆதரவாளர்களை திருப்திப்படுத்த போதுமானதாக இருந்தது.

ஆனால் உச்சநீதிமன்றம் பிரதமரின் செயல்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது. மத்திய அமைச்சராக இருந்த ராசா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு டாக்டர் சுப்பிரமணியசுவாமி அனுப்பிய கடிதத்துக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்று கேட்டது. அவ்வளவுதான்! ஊடகங்கள் பிடித்துக் கொண்டன. பிரதமர் செயலற்று இருக்கிறாரா, ஊழலை மறைக்க முயல்கிறாரா, ஏன் பேச மறுக்கிறார் என்றெல்லாம் பரபரப்பை உருவாக்கின. இதனால் பிரதமர் மன்மோகன்சிங் மனச்சோர்வடைந்து இருப்பதாகவும் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்றும் வதந்திகள் உலவத் தொடங்கின. இதனால் காங்கிரஸ் கட்சி அவரைப் பாதுகாக்கும் வகையில் வரிசையாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் விவாதப் பொருள் ஆனதில் பிரதமருக்கு எந்த தர்மசங்கடமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று ராகுல்காந்தியும் ’மன்மோகன் பாதுகாப்புப் படையில்’ ஒரு வீரராக களம் இறங்கினார்!

தொலைத் தொடர்புத் துறையின் புதிய அமைச்சர் கபில் சிபல் பல அவதாரங்கள் எடுத்தார். ’ஒரே நேரத்தில்’ பல தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றார். பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையானவர் என்றும் அநீதிக்குத் துணை போக மாட்டார் என்றும் சொல்லிவிட்டு எதிர்க்கட்சிகளை ’விளாசித்’ தள்ளினார். ”நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை கேட்பது அரசியல்; பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்வது அரசியல்; எதிர்க்கட்சிகள் செய்து வரும் செயல்களில் அரசியல் தான் இருக்கிறதே தவிர மக்கள் நலன் பற்றிய அக்கறை இல்லை ” என்று இவரும் ‘அரசியல்’ செய்தார். ”நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள் அல்லது செய்யவில்லை” என்று ஒருவரிடம் கேட்டால், அதற்கு நாம் பதில் சொல்லமாட்டோம்; கேள்வி கேட்டவர் அதைச் செய்யவில்லையா என்று பதில் கேள்வி கேட்பதே நம்முடைய வழக்கம். இதில் எந்த அரசியல்கட்சியும் விதிவிலக்கல்ல என்பதை கபில்சிபல் உறுதி செய்தார்!

யார் என்ன சொன்னாலும் பிரதமர் மன்மோகன்சிங் சமாதானமாவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அவருடைய நிர்வாகத் திறமைக்கு இன்றைய ‘சூழல்’ பெரிய சவாலாகவே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இந்தியாவின் ஆட்சி நிர்வாகம், நேரு குடும்பத்தின் கடமை. 1991-ல் நரசிம்மராவுக்கும் 2004-ல் இருந்து மன்மோகன்சிங்குக்கும் அந்தப் பணியை செய்து தரும்படி ‘அவுட் சோர்சிங்’ கொடுத்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் இன்றைய சூழல் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இல்லை. பல முக்கிய சிக்கல்களில் வாய் திறக்காமல் அமைதியாக இருந்த சோனியா காந்தி கூட இந்த விவகாரத்தில் பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் ஊழல்களை முடிவுக்குக் கொண்டுவர ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் சோனியா காந்திக்கு இருக்கிறது. “ இந்தியாவில் பொருளாதாரம் வளர்வதைப் போல ஊழலும் பேராசையும் அதிகரித்து வருகின்றன. நம்முடைய முன்னோர்கள் எந்த லட்சியங்களுக்காகப் போராடினார்களோ அவை எல்லாம் இப்போது தூக்கி எறியப்படும் அபாயத்தில் இருக்கின்றன. பொதுவாழ்வில் நேர்மையையும் வெளிப்படையான நிர்வாகத்தையும் உறுதிசெய்ய வேண்டும்” என்று டெல்லியில் அவர் பேசினார்!

ஒருபுறம் எதிர்க்கட்சித் தலைவர்களின் தாக்குதல்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டே அவர்களை நிலைகுலையச் செய்வதற்கும் காங்கிரஸ் முயல்வதாகத் தெரிகிறது. ”எதிர்க்கட்சிகளின் அச்சுறுத்தல்களுக்கு காங்கிரஸ் கட்சியோ பிரதமர் மன்மோகன்சிங்கோ பயப்படப் போவதில்லை. தொலைத் தொடர்புத் துறையில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை நியமிக்க அவர் தயார். அதற்குப் பிறகும் எதிர்க்கட்சிகள் முரண்டு பிடித்தால், மக்களவையைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கவும் பிரதமர் தயாராக இருக்கிறார். கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி இல்லாமல் தனிக்கட்சி ஆட்சிக்கு ஆதரவாக மக்கள் காங்கிரசையே தேர்வு செய்வார்கள்” என்று காங்கிரஸ் நம்புவதாக செய்திகள் கசிகின்றன. கூட்டுக்குழு விசாரணைக்கு நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என்று திமுகவும் சொல்கிறது.

இடைத்தேர்தலுக்குத் தயார் என்று காங்கிரஸ் சொல்வதும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் முறைகேடுகள் பற்றிய செய்திகளும் பாரதிய ஜனதாவின் தார்மீக வலிமையைக் குலைக்கக் கூடும். பா.ஜ.க.வையும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் கொஞ்சம் ‘அமைதிப்படுத்திவிட்டால்’, பிறகு நிலைமையை எளிதாக சமாளித்துவிட முடியும் என்பது காங்கிரஸ் கட்சியின் கணக்காக இருக்கலாம். எந்தெந்த வழிகளில் யார்யாரை மௌனிக்கச் செய்வது என்ற கலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திறமையானவர்கள். ஆடுகளத்தில் காங்கிரஸ் துருப்புச் சீட்டுகளை இறக்க இறக்க ஊடகங்களில் இனி பரபரப்புதான்!

இந்த பரபரப்புகளுக்கு இடையில் நாம் ஏராளமாகத் தொலைத்துவிடுகிறோம் என்பதை நாம் அறிவதில்லை. அவற்றில் ஒன்று “நியாயமாக இல்லை என்றால் அதைச் செய்யாதே! உண்மையாக இல்லை என்றால் அதைச் சொல்லாதே!” என்ற நம் முன்னோர்களின் அறிவுரை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

”நாம் எல்லாம் முட்டாளுங்க”

”எல்லாரும் உன்னை கோபால கிருஷ்ணன்னுதானே கூப்பிடறாங்க?”

"எவன் கூப்பிடறான்? நான் தான் சொல்லிட்டுத் திரியறேன்.. எல்லோரும் என்னை சப்பாணின்னுதான் கூப்பிடறாங்க”

பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தின் பிரபலமான வசனம் இது.

கமலஹாசன் ஏற்று நடித்த அந்த சப்பாணி என்ற கதாபாத்திரம் சொல்வதைப் போலத்தான் நாமும் ’இந்திய ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் நாங்கள்தான்’ என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். யார் கேட்கிறார்கள்? நமக்கு சேவை செய்வதற்காகவே பிறந்திருப்பதாக நம்மிடம் பிரசாரம் செய்தவர்கள் எல்லாம் நம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால் நாம் அவர்களை மிகவும் மதிக்கிறோம்; ஏதாவது ஓர் அரசியல் கட்சியை உறுதியாக ஆதரிக்கிறோம்; எந்தவித ஊசலாட்டமும் இல்லாமல் அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுகிறோம்; அத்துடன் நம்முடைய உறுதியும் நம்பிக்கையும் நின்று விடுவதில்லை. நாம் ஆதரிக்கும் கட்சி, எந்தக் கட்சிகளுடன் எல்லாம் கூட்டணி வைத்திருக்கிறதோ, அந்தக் கட்சிகளுக்கும் நாம் வாக்களிக்கிறோம். கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பற்றி எந்தக் கேள்வியும் நாம் கேட்பதில்லை. ’ஆதரிக்கும்போது உறுதியாக ஆதரிப்பது; எதிர்க்கும்போதும் உறுதியாக எதிர்ப்பது’ என்பது நம்முடைய ‘மரபாகவே’ இருக்கிறது!

”இந்த உலகத்தில் பிரச்னை என்ன என்றால், முட்டாள்கள் எதையும் உறுதியாக சொல்கிறார்கள்; செய்கிறார்கள். புத்திசாலிகள் எல்லாவற்றையும் ஒரு சந்தேகத்துடனேயே அணுகுகிறார்கள்” என்பது பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் சொன்ன கருத்து. ரஸ்ஸலின் மேற்கோளின்படி பார்த்தால், நாம் யார்? நம்மை முட்டாள்கள் என்றுதான் பல அரசியல் தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக இந்திய அரசியலில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அந்த எண்ணம் இன்னும் உறுதிப்படுகிறது. நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு நாம் பேசாமல் இருப்பதைப் பார்த்தவுடன், நம்மை முட்டாள்கள் என்று அவர்கள் நிச்சயம் செய்துவிடுகிறார்கள். நம்மைப் பற்றி என்ன வேண்டுமானாலும் அவர்கள் மனதுக்குள் நினைத்துக் கொள்ளட்டும். நம்மிடம் பேசும்போது வெளித் தோற்றத்துக்கு நம்மை சராசரி அறிவுடன் இருப்பவர்கள் என்றாவது மதித்துப் பேசலாம். ஆனால் அந்த போலி நடிப்பைக் கூட மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. ஏன் ஒரே நாளில் அந்தர்பல்டி அடிக்க நேர்கிறது என்பதை ’தவறே செய்யாதவர்களும்’ ‘தெளிவான மனசாட்சி’ கொண்டவர்களும் நம்மை மதித்து ஒருநாளும் சொல்லப் போவதில்லை!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முறைகேடுகள் பற்றி மணிசங்கர் அய்யர் பேசியதில் இருந்து இப்போது காங்கிரஸ் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நாள் வரை சுரேஷ் கல்மாடி பேசியதை வரிசையாகப் பாருங்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து புகார்கள் வரத் தொடங்கிய நாளில் இருந்து பதவி விலகும் நாள் வரை ஆ.ராஜா சொன்னதை எல்லாம் பட்டியல் போட்டுப் பாருங்கள். கேட்பவர்களுக்கு மதி இருக்கிறது என்ற எண்ணம் எள்முனையளவு கூட அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. “முதலமைச்சராக இருந்த போது சுற்றுலா வளர்ச்சிக்காக ‘லாவசா’ என்ற ஏரி நகர்த் திட்டத்தைக் கொண்டு வந்தேன். அத்திட்டத்தை செயல்படுத்த இருந்த நிறுவனத்தில் என் மகள் சுப்ரியாவுக்கும் அவரது கணவர் சதானந்துக்கும் பங்குகள் இருந்தன” என்று மத்திய அமைச்சர் சரத்பவார் சொல்கிறார். முதலமைச்சராக இருந்து மக்கள் நலனுக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது குடும்பத்தின் வர்த்தக நலனையும் காப்பாற்ற முயன்றதற்காக அவர் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை!

நம்மைப் போன்ற சாதாரண மக்களைத்தான் இந்த அரசியல்வாதிகள் பந்தாடுகிறார்கள் என்பது நம்முடைய இயல்பான எண்ணம். ஆனால் இந்திய அரசியலையே ஆட்டிப்படைக்கும் தொழிலதிபர் என்று பலர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் ரத்தன் டாடா என்ன சொல்கிறார் பாருங்கள். ”மூன்று பிரதமர்களை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். ஆனால் ஒரே ஒரு நபர் எங்கள் முயற்சிகள் எல்லாவற்றையும் காலி செய்து விட்டார்” என்று அவர் பேசி இருக்கிறார். ஊழல்களே அடுத்தடுத்து அன்றாட செய்திகளாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் சில வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியின் வேதனை இப்போது அவரை இப்படிப் பேச வைத்திருக்கிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸூடன் சேர்ந்து ஒரு விமான சேவையைத் தொடங்குவதற்கு டாடா நிறுவனம் முயற்சி செய்தது. ஆனால் அதற்கான உரிமம் கிடைக்கவில்லை. இதற்கு என்ன அர்த்தம்? டாடாவின் அதிகாரத்தை விட சாமான்யர்களின் அதிகாரம் இந்தியாவில் செல்வாக்கு பெற்றுவிட்டது!

நாம் ஒரு பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ போய்க் கொண்டிருக்கிறோம். நமக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் நம்மை முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவன் என்றும் சொன்னால், எப்படி இருக்கும்? அப்படித்தான் ரத்தன் டாடாவுக்கும் இருந்திருக்க வேண்டும். ஒரு விமானப் பயணத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு தொழில் அதிபர் டாடாவைப் பார்த்து “ நீங்கள் முட்டாளாக இருக்கிறீர்கள். அமைச்சர் உங்களிடம் என்ன எதிர்பார்த்தார்? 15 கோடி ரூபாய்! அதைக் கொடுத்திருந்தால் நீங்கள் உங்கள் விமானப் போக்குவரத்து சேவையை ஆரம்பித்திருக்கலாம்” என்று சொன்னாராம். ரத்தன் டாடாவுக்கு 15 கோடி ரூபாய் பெரிய விஷயமில்லை. ஆனாலும் அவர் லஞ்சமாக அந்தப் பணத்தைக் கொடுக்க விரும்பவில்லை. தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் ‘கொடுத்துக்’ கெடுக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியமாக இருக்கும்!

’ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனுஷனையே கடிக்க வந்துட்டாங்க’ என்று சாதாரணமாக மக்கள் சொல்வதைப் போல, நமது பிரதிநிதிகள் ‘டாடா’விடமே தங்கள் சுயரூபத்தைக் காட்டி இருக்கிறார்கள். லஞ்சம் கேட்ட அமைச்சரை மீறி, அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. விமான சேவைக்கான புதிய முயற்சிகளை டாடா கைவிட நேர்ந்தது. டாடா யார் என்று தெரியாமலா அந்த அமைச்சர் லஞ்சம் கேட்டிருப்பார்? அவர் அடிக்கடி பறந்து சென்ற ’ஏர் இந்தியா’ விமான சேவை 1953-ல் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு முன்னால் டாடா குழுமத்தால் தொடங்கி நடத்தப்பட்டது என்ற விபரத்தை லஞ்சம் கேட்ட அந்த அமைச்சர் அறியாமலா இருந்திருப்பார்? மும்பையில் வாட்சன் என்ற ஹோட்டலுக்குள் இந்தியர்களை அனுமதிக்கவில்லை என்ற காரணத்தால் தாஜ் மஹால் பேலஸ் என்ற நட்சத்திர விடுதியைக் கட்டி இந்தியப் ‘பெருமை’ காத்தது டாடா குழுமம் என்பது அவருக்குத் தெரியாதா என்ன? பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியாவில் ஆங்கிலேயர்களால் நட்த்தப்பட்ட விடுதிகளில் ஐரோப்பியர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது அந்நாளில் இயல்பான ஒரு நடைமுறையாக இருந்திருக்கிறது. அதற்கு எதிராக தேசபக்தி உணர்வுடன் டாடா கட்டி எழுப்பியதே தாஜ் ஹோட்டல் என்பது வரலாறு நமக்கு சொல்லும் சேதி!

1995, 1997 மற்றும் 2001 ஆகிய வருடங்களில் டாடா குழுமம் மீண்டும் விமான சேவையில் இறங்க முயன்றதாக ஒரு செய்தி சொல்கிறது. அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியாவைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் அதை டாடாவுக்கு அரசு தாரை வார்க்க முயல்கிறது என்றும் தொழிற்சங்கங்களின் போராட்டங்களாலும் அரசியல்ரீதியான எதிர்ப்புகளாலும் தான் அந்த முயற்சி கைவிடப்பட்டது என்றும் அப்போது வெளியான செய்திகளைப் பார்த்துவிட்டு எத்தனை பேர் நம்பினோம்! இப்போதுதான் தெரிகிறது, அது நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே என்று! டாடா 15 கோடி ரூபாய் கொடுத்திருந்தால் போராட்டங்களை அரசு ஒடுக்கி இருக்கும் என்று! சே! எவ்வளவு சுலபமாக நாம் முட்டாளாகி விடுகிறோம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

திமுகவுக்கு காங்கிரஸ் தரும் நெருக்கடி

அவர்கள் ஐம்பது பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை திரும்பிப் போகச் சொல்லி முழக்கம் இட்டுக் கொண்டே சென்னை தி.நகரின் முக்கிய சாலை ஒன்றின் வழியாக வந்தார்கள். உலக அரங்கில் அமெரிக்காவின் செயல்பாடுகள் குறித்தும் இந்தியாவுக்கு ஒபாமா வருவதன் பின்னணி குறித்தும் அவர்களுக்கு இருந்த பார்வையை கோஷங்களாக வெளிப்படுத்திக் கொண்டு வந்தார்கள். அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற பதாகை எதுவும் இல்லை. அன்று நாடு முழுவதும் ஒபாமாவின் வருகைக்கு எதிராக பல்வேறு இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன. ஒருவேளை ஏதேனும் ஓரிடத்தில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு திரும்பும் சிறு குழுவாகக் கூட இருக்கலாம். கலைந்து போகும் வழியிலும் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் அந்த சாலை எங்கும் பரவி நிற்கும் மக்களுடன் உரையாடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

அரசியல் கட்சிகளின் ‘மாபெரும்’ ஊர்வலங்களையும் பொதுக் கூட்டங்களையும் பார்த்த நமக்கு அந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது வித்தியாசமாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எத்தனை பெரிய கோலமாக இருந்தாலும் முதலில் ஒரு புள்ளியில் இருந்துதான் போடத் தொடங்க முடியும் என்றோ அல்லது எவ்வளவு பெரிய மராத்தான் ஓட்டமாக இருந்தாலும் முதல் அடியில் இருந்துதான் ஆரம்பிக்க முடியும் என்றோ அவர்கள் அறிந்திருந்தார்கள். ‘கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும் சக்தியாக வடிவெடுக்கும்’ என்ற வாசகமே அவர்களை வழிநடத்தக் கூடிய மேற்கோளாக இருக்கும் போலிருக்கிறது. ஆனால் கூட்டிவரப்படும் கூட்டங்களை வியந்து பார்த்துப் பழகிப் போன நம்மில் பலருக்கு அந்தக் கூட்டம் கேலிக்குரியதாக தோன்றியிருக்கும்.

”ஒபாமாவே திரும்பிப் போ” என்ற இடதுசாரிகளுடைய கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டாரா அல்லது அவர் வந்த வேலை முடிந்து விட்டதா தெரியவில்லை. அவர் மீண்டும் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்! அமெரிக்க அதிபரின் பறக்கும் அலுவலகமான ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானம், இந்திய வான்வெளியை விட்டு வெகுதூரம் பறந்து போனது. ஆனால் அவர் இந்தியாவில் ‘நிரந்தரமாக’ சில தடங்களை விட்டுச் சென்றிருப்பார். அடுத்து வரும் மாதங்களில் அவற்றிற்கான ‘பலன்களை’ நாம் அனுபவிக்கத் தொடங்குவோம்!

‘ஒபாமா வந்து விட்டுப் போகட்டும்; அதன் பிறகு பாருங்கள்’ என்ற ரீதியில் தமிழக காங்கிரஸ் கட்சியில் கூட சில குரல்கள் ஒலித்தன. காங்கிரஸ் கட்சி அப்படி என்ன செய்யப் போகிறது என்று ஓர் எதிர்பார்ப்பை அந்தப் பேச்சு மக்கள் மத்தியில் உருவாக்கியது. தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தடாலடியாக ஏதேனும் செய்யப் போகிறது என்று சிலர் நினைத்திருக்கலாம். அல்லது மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்கும் போது, திமுக அமைச்சர் ஆ.ராசா அமைச்சர் பதவியையோ அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையையோ இழக்க நேரிடும் என்று நம்மில் சிலர் கணித்திருக்கலாம். ஆனால் நடந்தது என்ன? இந்தியாவை விட்டு ஒபாமா கிளம்பிய சிறிது நேரத்தில் மகாராஷ்டிர முதலமைச்சர் அசோக் சவான் தன்னுடைய ராஜினாமாவை ஆளுநர் சங்கர நாராயணனிடம் கொடுத்தார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதியும் கட்சிப் பதவியில் நீடிக்க முடியவில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் நடந்த ஊழல் பற்றியோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் குறித்தோ யாரும் எதுவும் பேசவில்லை. அசோக் சவானும் சுரேஷ் கல்மாதியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். மதவாத்த்தைப் பற்றிப் பேசிய காங்கிரஸ் ஊழல் குறித்து எதுவும் பேசாதது ஏன் என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேள்வி எழுப்பின. இந்த விஷயத்தில் காங்கிரஸ் அப்போதே முடிவு செய்து விட்டது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா எப்போது போவார் என்று காத்திருந்து அதன் பிறகு விரைவாக நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது.

இப்போது எல்லோருடைய கவனமும் மத்திய தொலைத் தொடர்புத் துறை மேல் இருக்கிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாக சொல்லப்படும் முறைகேடுகள் பற்றிய விசாரணை முடியும் வரை மத்திய அமைச்சர் ஆ.ராசா அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. ’இன்னும் அந்த அமைச்சர் அதே பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறாரே’ என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங் சார்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் கருணாநிதியைப் பார்த்து இது பற்றிப் பேசியதாக ஊடகங்களில் ஊகங்கள் வெளியிடப்பட்டன. அந்த ஊகத்தில் உண்மை இருக்கக் கூடும். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் ‘நவம்பர் பாதிக்குப் பிறகு பாருங்கள்’ என்று சொல்வது வெறும் சவடாலாக மட்டுமே இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.

ஏற்கனவே எழுதித் தயாரிக்கப்பட்ட திரைக்கதையைப் போல அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறுகின்றன. சுரேஷ் கல்மாதியும் அசோக்சவானும் பதவி பறிக்கப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் ‘ராஜா’ பதவி விலக வேண்டும் என்று குரலை எழுப்புகிறார்கள். கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் என்றழைக்கப்படும் தணிக்கை அதிகாரி ஓர் அறிக்கையை பிரதமர் அலுவலகத்தில் கொடுக்கிறார். 2ஜி ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று அந்த அறிக்கை சொல்வதாக செய்திகள் கசியவிடப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் கண்டனம், ஊழல் புகாருக்கு உள்ளான காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மீது சோனியா எடுத்த நடவடிக்கை, ஊடகங்கள் கொடுக்கும் அழுத்தம், தணிக்கை அதிகாரியின் அறிக்கை என்று அடுத்தடுத்த நிகழ்வுகள், தி.மு.க. தலைமைக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றன.

1996-ல் ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக விசாரித்த ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையை 1997-98ல் கொடுத்தது. சிறுபான்மை அரசாக ஐ.கே.குஜரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு இருந்தது. ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்து காங்கிரஸ் குஜரால் அரசை ஆதரித்துக் கொண்டிருந்தது. இந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கும்போது ஜெயின்கமிஷனின் இடைக்கால அறிக்கை வெளியானது. அதன் அடிப்படையில் மத்திய அரசில் தி.மு.க. இடம் பெறக் கூடாது என்றும் திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்தது. ”ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை; பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை” என்று தி.மு.க.தரப்பில் சொல்லப்பட்டது. சிறுபான்மை ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்றது. ஐக்கிய முன்னணி ஆட்சி கவிழ்ந்தது!

அன்று காங்கிரஸ் மட்டுமே நெருக்கடி கொடுத்தது. இன்று காங்கிரஸ், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் என்ற நிலையில், இந்த நெருக்கடியைத் திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Saturday, November 13, 2010

காந்தி உயிருடன் இருக்கிறார்!

"காந்தி மாதிரி இன்னொரு தலைவர் இந்தியாவில் இல்லையே என்று நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா?”

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் நடிகர் கமலஹாசனிடம் அனுஹாசன் கேட்டார். பொதுவாக கமலஹாசன் எல்லா விழா நாட்களிலும் டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அபூர்வமாகவே அவர் இதுபோன்ற நாட்களில் பங்கேற்பார். ஒரு ஹீரோவின் படம் வெளியானால், அதை விளம்பரப்படுத்துவதற்காக அந்த ஹீரோ முக்கியமான தொலைக்காட்சிகளில் தலையைக் காட்டுவார். கமலுடைய படம் எதுவும் அன்று வெளியாகவில்லை. பிறகு ஏன் கமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்? காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அனுவின் கேள்விக்கு அவர் அளித்த பதிலே நமக்கு முக்கியம்.

”காந்தி இப்போது இல்லை என்று நான் கவலைப்படவில்லை. நீங்கள் காந்தியை பாராளுமன்றத்தில் தேடினால் கிடைக்க மாட்டார்; எத்தனையோ துறைகளில் காந்தியைப் போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள்” என்ற அர்த்தத்தில் கமல் பதில் சொன்னார். கமல் சரியாகவே சொல்லி இருக்கிறார்! அஹிம்சை, நேர்மை, மனவுறுதி, போர்க்குணம், தேசபக்தி போன்ற காந்தியின் போற்றத்தக்க குணங்கள் கொண்ட எத்தனையோ மனிதர்கள் ஊடக வெளிச்சத்துக்கு வராமல் வாழ்ந்து வருகிறார்கள். நாம் அவர்களை இனம்கண்டு பாராட்டத் தவறுகிறோம். நல்ல பண்புகள் அனைத்தும் காந்தியோடு முடிந்து போய்விட்டன என்று அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை!

ஐரோம் சர்மிளா சானு என்ற பெண்ணுக்கு இப்போது வயது 38. இந்தப் பத்து வருடங்களாக சொட்டுத் தண்ணீர் கூட அவருடைய பல்லில் படவில்லை. அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைப் பத்து வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை அரசாங்கம் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பது அவருடைய கோரிக்கை. பத்து வருடங்களாக எதுவும் சாப்பிடாமல் எப்படி ஒருவர் உயிர்வாழ முடிகிறது? அவருடைய மூக்கில் ஒரு குழாயைச் செருகி அதன் வழியாக சத்துநீர் செலுத்தப்படுகிறது. இது அவருடைய உடலில் பல பகுதிகளை பலமிழக்கச் செய்திருந்தாலும் அவருடைய உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது!

கடந்த 2000-ம் வருடம் நவம்பர் முதல் நாள், மணிப்பூரில் ஆயுதப்படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு பதிலடியாக, அடுத்த நாளே, மலோம் என்ற இடத்தில் பஸ்ஸூக்காக பஸ் ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்த மக்கள் மீது அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் 10 பேர் கொல்லப்பட்டார்கள். சிறுவனாக இருந்த போது வீரத்துக்காக தேசிய விருது வாங்கிய இளைஞனும் 68 வயதான பெண்மணி ஒருவரும் பலியான பத்து பேரில் அடக்கம்! இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் நவம்பர் 3-ம் தேதி வந்த செய்தித் தாள்களில் வெளியாகின. தேவையில்லாமல் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான ஆயுதப் படையினர் மீது எந்த புகாரும் அளிக்க முடியாது; மக்களைக் கொன்றவர்கள் மீது சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனென்றால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அவர்களுக்கு பாதுகாப்பை கொடுக்கிறது!

வேறு என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு சர்மிளா கொடுத்த பதில்தான் இந்தப் போராட்டம்! மணிப்பூரில் இருந்து இந்த சட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையுடன் ஐரோம் ஷர்மிளா தன்னுடைய உண்ணாநிலைப் போராட்டத்தை 2000-ம் வருடம் நவம்பர் 4-ம் நாள் தொடங்கினார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 309-ன் படி தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. உண்ணாநிலையை அவர் கைவிடாத நிலையில், வலுக்கட்டாயமாக மூக்குவழியே திரவ உணவு கொடுக்கப்பட்டது. ஒரு வருட தண்டனை முடிந்து வெளியில் வந்தவுடன் மீண்டும் போராட்டம், மீண்டும் கைது, மீண்டும் மூக்கு வழியே உணவு என்று போராட்டம் தொடர்ந்தது. கடந்த நவம்பர் முதல் வாரத்துடன் இந்த போராட்டம் பத்து வருடங்கள் நிறைவடைகிறது!

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பல பகுதிகளில் பிரிவினைக் கோரிக்கையும் போராட்டங்களும் நடந்தன; நடந்து கொண்டும் இருக்கின்றன. இதுபோன்ற ‘கலகப் பகுதிகளில்’ போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஈடுபடுத்தப்படும் ராணுவத்துக்கு கூடுதலாக சிறப்பு அதிகாரங்களைக் கொடுக்கும் ‘ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரம்) சட்டம்’ இந்திய நாடாளுமன்றத்தில் 1958-ல் நிறைவேற்றப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்தபோது, கலகம் நடக்கும் பகுதிகளில் மிகவும் குறைந்த காலத்துக்கு தற்காலிகமாகவே இந்த சட்டம் அமலில் இருக்கும் என்று நேரு அரசு பதில் சொல்லியதாம்! ஆனால் எதிர்ப்புகள் குறையவில்லை; சட்டமும் தொடர்கிறது.

மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், இன்னும் பல பகுதிகளில் அது நடைமுறையில் இருக்கிறது. அதனால் சர்மிளாவின் போராட்டமும் தொடர்கிறது. தன்னுடைய மாநிலத்தில், எதிர்கால சந்ததியினர் சட்டவிரோதமான கொலைகளுக்கும் துயரங்களுக்கும் ஆட்படக் கூடாது என்ற எண்ணத்தில் துன்பங்களையும் துயரங்களையும்தானே ஏற்றுக் கொள்ளும் ‘காந்திய’ நடைமுறையை நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் பார்க்க முடியாது. காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு தொடங்கி மதிய உணவு நேரத்துக்கு முன்னால் முடித்துக் கொள்ளும் சில தலைவர்களின் உண்ணாநிலைப் போராட்டங்கள் இந்திய அரசைக் கிடுகிடுக்க வைத்தன என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பத்து வருடங்களாக நடக்கும் ஐரோம் சர்மிளாவின் போராட்டத்துக்கு இந்திய அரசு கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.

சர்மிளாவை யாரும் எளிதாக சந்தித்து விட முடியாது; மாநில முதலமைச்சர், உயர்நிலை அதிகாரிகள் அனுமதியுடன் தான் அவரை மற்றவர்கள் சந்திக்க முடியும். அவருடைய அஹிம்சை வழியிலான போராட்டத்தை அங்கீகரித்து இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ப்ளானிங் அண்ட் மேனேஜ்மெண்ட் (ஐஐபிஎம்) அவருக்கு ரவீந்திரநாத் தாகூர் நினைவு அமைதிப் பரிசாக 51 லட்சம் ரூபாய் வழங்கியது. அமைதிக்கான நோபல் பரிசுக்கும் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அவருடைய போராட்டத்துக்கு ரிக்‌ஷா ஓட்டுநர்கள் சங்கம் தொடங்கி சர்வதேசப் புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர்கள் வரை ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 2006-ல் புதுடெல்லிக்கு வந்து காந்தி சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, ஐரோம் சர்மிளா ஜந்தர்மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது கைது செய்யப்பட்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இரானிய வழக்கறிஞர் ஷிரின் எபடி அங்கு அவரை சந்தித்தார். அதன்பிறகு வெளியில் வந்து செய்தியாளர்களிடம் ஷிரின் பேசினார்.

“ஒருவேளை இந்தப் போராட்டத்தில் சர்மிளா இறந்து போனால், அதற்கு இந்திய நாடாளுமன்றமே பொறுப்பு; அப்படி அவர் செத்துப் போனால், அதற்கு இந்திய நீதிமன்றங்களும் ராணுவமும் பொறுப்பு; நிர்வாகம், பிரதமர், குடியரசுத் தலைவர் அனைவரும் அதற்குப் பொறுப்பு; உங்கள் கடமையை செய்யத் தவறியதால், செய்தியாளர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் அதற்குப் பொறுப்பு” என்று அவர் சொன்னார். ஒருவேளை அவர் இறந்து போனால், யாரெல்லாம் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது பாருங்கள். அப்படி இருக்கும் ஒரு விவகாரத்தில் அந்தப் பொறுப்புணர்வில் இருந்து நெட்டை மரமாக நின்று புலம்பும் நானும் நீங்களும் மட்டும் விலக்கு பெற முடியுமா என்ன?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Sunday, November 07, 2010

‘அவர்களும்’ மனிதர்களே!

அந்தப் பெண்ணின் பெயர் பூஜா. அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அந்த இரண்டு குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் இருக்கும் வி.என்.தேசாய் மருத்துவமனைக்கு குழந்தைகளை பூஜா அழைத்து வந்தார். அவருக்குத் துணையாக அவருடைய அம்மா சியாமளாவும் வந்தார். மருத்துவமனையில் பர்தா அணிந்த ஒரு பெண் அவர்களுடன் அறிமுகமாகி பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவர் போய் விட்டார். அதன்பிறகு சியாமளாவும் பூஜாவும் இரு வேறு தளங்களில் ஆளுக்கொரு குழந்தையுடன் இருந்திருக்கிறார்கள். அப்போது ஏற்கனவே அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பர்தா பெண்மணி சியாமளாவிடம், ‘போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக குழந்தையை பூஜா கேட்கிறாள். நீங்கள் வீணாக அலைய வேண்டாம். நீங்கள் இங்கேயே இருங்கள். குழந்தையை என்னிடம் கொடுங்கள். இந்தக் குழந்தையை பூஜாவிடம் கொடுத்துவிட்டு, முதலில் போலியோ மருந்து போட்ட குழந்தையை பூஜாவிடம் இருந்து வாங்கி நானே கொண்டு வந்து உங்களிடம் தருகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.

சியாமளா மும்பைக்கு புதியவர். அவர் அந்தப் பெண்ணிடம் குழந்தையைக் கொடுத்து விட்டார். சில நிமிடங்கள் கழித்து பூஜா வந்தார். முதலில் பூஜா கொண்டு போன குழந்தை மட்டும் அவரிடம் இருந்தது. அந்த புதிய பெண்மணியிடம் சியாமளா கொடுத்த குழந்தை பூஜாவிடம் போய்ச் சேரவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் புரிந்தது. மருத்துவமனைக் காவலர்களிடம் புகார் கொடுத்தார்கள். அங்கு நிறுவப்பட்டிருக்கும் ’குளோஸ்ட் சர்க்யூட் டி.வி’யில் காட்சிகளைப் பார்த்தால் அந்தப் பெண்மணி குழந்தையுடன் மருத்துவமனையை விட்டு வெளியேறியிருப்பது தெரிந்தது. வெள்ளை நிற காலணிகளும் கண்களும் மட்டுமே அதில் தெரிந்தது. அந்தப் பெண்ணின் முகத்தை பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அவர் பர்தா அணிந்திருந்தார்! இந்த சம்பவம் நடந்தது கடந்த அக்டோபர் 15-ம் தேதி. இதே போல் பிறந்து நான்கே நாட்களான ஒரு குழந்தை மும்பை சியான் மருத்துவமனையில் ‘திருட்டு’ போயிருக்கிறது. அந்தக் குழந்தை கடத்தலுக்குப் பிறகே அனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி பொருத்தி இருக்கிறார்கள்!

இதுபோன்ற சம்பவங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்க்க் கூடியவைதான். மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகள் திருடப்படுவதற்கான காரணம் என்ன, இதுபோன்ற நிகழ்வுகளை எப்படித் தடுப்பது என்பதில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சராசரியான மனிதர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் பால்தாக்ரேயின் சிவசேனை என்ன சொல்கிறது பாருங்கள். அந்தக் கட்சியின் நாளிதழான ‘சாமனா’ பொது இடங்களில் பர்தா அணிந்து பெண்கள் வருவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தலையங்கம் எழுதியது. ‘குழந்தையைக் கடத்துவதற்கு பர்தா உதவும் என்றால் பர்தாவைத் தடைசெய்ய வேண்டும்’ என்று கோருகிறது. மேலும் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி, பொது இடங்களில் பர்தா அணிவதற்குத் தடைவிதித்து சட்டம் கொண்டு வந்த்தை ‘புரட்சிகரமான நடவடிக்கை’ என்று பாராட்டுகிறது. ஏறத்தாழ 97 முதல் 98 சதவீதம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் துருக்கியில் கமால் பாட்சா பர்தாவைத் தடைசெய்தபோது இஸ்லாம் அதற்குத் தடையாக இல்லை என்னும் போது இந்தியாவில் மட்டும் ஏன் தடைசெய்ய முடியவில்லை என்று கேள்வி எழுப்புகிறது.

சென்ற இதழின் இதே பகுதியில் இறுதியாக சாமனா எழுதிய இந்த தலையங்கத்தைப் பற்றி ஒரு வரியில் குறிப்பிட்டிருந்தோம். மீண்டும் அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டுமா என்ற தயக்கம் முதலில் எழுந்தது. உங்களில் சிலர் ‘இது என்ன சிவசேனை வாரமா?’ என்று கேள்வி எழுப்பக் கூடும். ஆனால், அடுத்தடுத்து சிவசேனை செயல்படும் வேகமே, மீண்டும் சிவசேனை பற்றி எழுதத் தூண்டுகிறது. பாடத்திட்டத்தில் இருந்து புத்தகம் நீக்கம், பர்தாவுக்குத் தடை என்ற அம்புகளுக்குப் பிறகு அடுத்த கணையை மற்றொரு தலையங்கம் வழியாக சிவசேனை எய்திருக்கிறது. மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளுக்குத் தடை விதிக்க வேண்டுமாம்! இதற்கு என்ன காரணம்? சிவசேனை சார்பில் தசரா ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில் அனுமதிக்கப்பட்ட 50 டெசிபல் அளவை விட அதிகமான ஒலி அளவில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஒலி மாசு ஏற்படுவதை எதிர்க்கும் சுமைரா அப்துல் அலி என்பவர் இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தார். சிவசேனையின் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது ஒலிமாசு ஏற்படுத்தியதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதற்கு எதிர்வினையாக மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று சிவசேனை தன்னுடைய பழைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறது.

கோவில்களிலும் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிறந்தநாள், நினைவுநாட்களில் ஆங்காங்கே ஒலிபெருக்கிகளில் தலைவர்களுடைய பேச்சுகளும் பாட்டுகளும் ஒலிபரப்பப்படுகின்றன. இவற்றை எல்லாம் பொதுவாகப் பார்த்து ஒலி மாசு என்று சொல்பவர்களைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அம்மன் கோவில்களில் அல்லது தேவாலயங்களில் அல்லது மசூதிகளில் அல்லது குறிப்பிட்ட பிரிவினர் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதை மட்டும் தடை செய்ய வேண்டும் என்று கேட்பவர்களை எப்படிப் புரிந்து கொள்வது? அதிலும் அந்தக் கோரிக்கைக்கு பின்னணியாக மத வெறி அல்லது சாதி வெறி அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கும் என்றால் எப்படி அதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?

இன்றைய இந்திய சூழலில் சிவசேனை மீண்டும் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வை மகாராஷ்டிர மக்கள் மத்தியில் எழுப்புவதற்கு முயல்கிறது. அதற்கு பிரான்சையும் துருக்கியையும் எடுத்துக்காட்டுகளாக துணைக்கு அழைத்துக் கொள்கிறது. ஜெர்மனியின் கலாச்சாரத்தையும் கிறித்துவ மதிப்பீடுகளையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஜெர்மனியில் இருக்கத் தேவையில்லை என்று ஜெர்மன் அதிபர் பேசி இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அதன் வழியாக வேறொரு கலாசாரத்தைப் பார்க்கும் முறை சரியல்ல என்று உலகம் முழுவதும் நடுநிலையாளர்கள் கரடியாகக் கத்தினாலும் அது இன்னும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத நிலையிலேயே இருக்கிறது.

கொல்கத்தாவில் கடந்த 2010 ஏப்ரல்-மே மாதங்களில் நடந்த இன்னொரு சம்பவம் பற்றிய செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். அலியா பல்கலைக்கழகத்தில் வேலைபார்த்த எட்டு பேராசிரியைகளையும் ‘பர்தா’ அணிந்து கொண்டு வர வேண்டும் என்று மாணவர் சங்கம் ஆணையிட்டது. விருப்பத்துடனோ அல்லது விருப்பம் இல்லாமல் கட்டாயத்தின் பேரிலோ ஏழு பேர் பர்தா அணிந்து வகுப்பெடுக்கத் தொடங்கினார்கள். சிரின் மித்தியா என்ற ஆசிரியை மட்டும் அந்தக் கட்டளைக்கு அடிபணிய மறுத்தார். பல்கலைக்கழக விதிகள் ‘உடை’ குறித்து எந்த கட்டுப்பாடும் விதிக்காத நிலையில் மாணவர்களின் இந்த செயல் அத்துமீறல் என்று அவர் வாதிட்டார். எது சரி என்று பார்க்காமல் நிர்வாகம் சமரசத் தீர்வை முன்வைத்தது. நிர்வாகத்துக்கு சொந்தமான நூலகத்திற்கு சிரின் வந்து போகலாம். ஆனால் அவர் வகுப்புகளுக்குப் போகத்தேவையில்லை. அவருக்கான முழு ஊதியம் கொடுக்கப்படும்!

ஒருபுறம் குறிப்பிட்ட உடை அணியத் தடை! மறுபுறம் அந்த உடையைக் கட்டாயம் உடுத்த வேண்டும் என்று நிர்ப்பந்தம்! அது உடுத்துபவர்களின் விருப்பம் சார்ந்தது என்ற குரல் சராசரிக்கும் அதிகமான டெசிபல் அளவில் எப்போது ஒலிக்கும்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

மயக்கம் என்ன மௌனம் என்ன

”இவனுக்கு என்ன பாதுகாப்பு வேண்டியிருக்கு?”

என்னோடு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நண்பர் கொந்தளித்தார். ’விசாரணை, அது, இதுன்னு இழுத்து அடிக்கக் கூடாது.. இந்தப் பயல்களை உடனே தூக்குல போடணும்’ என்று ஆத்திரப்பட்டார். கோவையில் ஒரு ஜவுளிக்கடை அதிபரின் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதிலும் அந்தப் பெண் குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

”உங்களுக்கு ரத்தக் கொதிப்பு இருக்கிறதா? மனச் சோர்வு இருக்கிறதா? தினம்தோறும் செய்திகளைப் படிக்காதீர்கள்” என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்லும் நாள் விரைவில் வந்துவிடும் போலிருக்கிறது. கோவையைத் தொடர்ந்து, சென்னையில் கத்தி முனையில் பள்ளி சிறுவன் கடத்தப்பட்டிருக்கிறான். மிகவும் குறுகிய காலத்தில் சென்னையில் லிப்ட் விபத்துகள் அடுத்தடுத்து நடந்திருக்கின்றன. ஒரு அடுக்ககத்தில் பூ கொண்டு போன சிறுவன் லிப்ட்டில் சிக்கி இறந்து போனான்; பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் நடந்த லிப்ட் விபத்தில் இரண்டுபேர் பலி ஆனார்கள்; வேறு என்னென்ன செய்திகள் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றன? ரயிலில் பயணம் செய்த சக பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த பால் கொடுத்து நகை, பணம் கொள்ளை என்று ஒரு செய்தி. முன்பு மயக்க பிஸ்கட் கொடுத்து ரயிலில் ஒரு கும்பல் கொள்ளை அடிப்பதாக செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. இப்போது மயக்கப் பால்! பெண் மயக்கம் தொடர்பான குற்றங்கள் ஏராளம்!

நம்மிடம் இருக்கும் கடவுள் பக்தியை தங்களுடைய மூலதனமாக வைத்து நம்மை மயக்கிக் கொள்ளை அடிக்கும் நபர்களையும் அவ்வப்போது நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்போது நம்முடைய தேசபக்தியையும் நமக்கு மயக்க மருந்தாகக் கொடுத்து சில அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள்! இவை எல்லாம் நம்மைக் குடைந்து கொண்டு இருக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் நமக்கு கொடையாகக் கொடுத்திருப்பது மது மயக்கம்! நம்முடைய தேசபக்தி உணர்வை மயக்கம் என்று சொல்லவில்லை. ஆனால் அந்த உணர்வை அடிப்படையாக வைத்து நம்மை மயக்கத்தில் ஆழ்த்தி விட்டு, சிலர் நம்மிடம் இருந்து கிடைப்பதைச் சுருட்டிக் கொள்கிறார்கள். இது தான் நாம் மயக்கத்தில் இருக்கும்போது நடத்தப்படும் கொள்ளை!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் எதற்காக நடத்தப்பட்டன? இந்த வகையான போட்டிகளை நடத்தும் அளவு இந்தியா வளர்ந்து விட்டது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்துவதற்காக! இந்த உணர்வுக்குப் பின்னால் நடந்தது என்ன? ஏராளமான முறைகேடுகள்! அப்பட்டமான பகல் கொள்ளை! அதைவிட இன்னும் உணர்வு பூர்வமான ஒரு விஷயத்தில் இப்போது பெரிய ஊழல் நடந்திருக்கிறது. கார்கில் வீரர்களுக்காகவும் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்காகவும் என்று சொல்லி அனுமதி வாங்கி, எழுப்பப்பட்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களுடைய தரகர்களுக்கும் வீடுகளை ஒதுக்கி இருக்கிறார்கள்! நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்பவர்களுடைய குடும்பங்கள் ஆதரவில்லாமல் நடுத்தெருவில் நிற்காது என்பதை உணர்த்தும் வகையில் ‘முன்மாதிரி’ அடுக்ககமாக அந்தக் குடியிருப்பு இருந்திருக்க வேண்டும். ஆறு தளங்களுடன் இருக்க வேண்டிய அந்த அடுக்ககம், இப்போது பிரமாண்டமான 31 மாடிக் கட்டிடமாக இருக்கிறது. ஆனாலும் அது இப்போது ‘கேவலப்பட்டு’ நிற்கிறது!

மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு, பாவம், அந்தக் கட்டிடம் என்ன செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். தியான்மேன் சதுக்கம் என்று சொன்னவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? தாஜ்மகால் என்றவுடன் யார் யார் உங்கள் நினைவுக்கு வருகிறார்கள்? தஞ்சை பெரிய கோவிலைப் பார்த்தவுடன் ராஜராஜ சோழன் என்ற பெயரும் நம்முடைய மனதில் வந்து விடுகிறது. அதைப் போல ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கம் என்ற பெயரைக் கேட்டாலே கார்கில் போர்த் தியாகிகளின் பெயரில் நடந்த மோசடிகளே எதிர்காலத்தில் எல்லோருடைய நினைவுக்கும் வரும்.

இந்த சங்கத்தைத் தொடங்கியவர்களுக்கு உண்மையிலேயே கார்கில் வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்குமா என்பதே இப்போது சந்தேகமாக இருக்கிறது. கார்கில் தியாகிகளை முன்னால் நிறுத்தி நிலத்தைப் பெற வேண்டும் என்பதே சங்கத்தின் நோக்கமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. ராணுவக் குடும்பங்கள் தவிர, 40 சதவீத வீடுகளை பிறருக்கும் ஒதுக்கலாம் என்று சங்கத்தின் விதிகளைத் திருத்தியிருக்கிறார்கள். எதற்காக? விதிமீறல்களையும் முறைகேடுகளையும் கண்டு கொள்ளாமல் அனுமதி அளிக்கும் அதிகார வட்டத்துக்கு ‘எலும்புத் துண்டுகளைப்’ போடுவதற்காக! ஒரு சதுர அடி 60000 ரூபாய் விற்கும் இடத்தில் வெறும் ஆறாயிரம் ரூபாய்க்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. வீரர்களுக்கும் தியாகிகளின் குடும்பத்துக்கும் சலுகை விலையில் வீடுகளை ஒதுக்குவதைக் கூடப் புரிந்து கொள்ள முடிகிறது. அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இங்கு எதற்காக வீடுகள்? இன்றைய மகாராஷ்டிர முதலமைச்சர் அசோக் சவானின் மாமியாருக்கும், மைத்துனருக்கும், மைத்துனிக்கும் எப்படி இந்த இடத்தில் வீடு ஒதுக்கப்பட்டது? இவர்கள் நாட்டுக்காக செய்த தியாகம் என்ன? மகாராஷ்டிர மாநில அரசாங்கத்தில் அசோக் சவான் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தார்! அப்போது ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கத்திற்கு இந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதற்கு அவர்தான் அனுமதி கொடுத்தார்! இந்த மாபெரும் தியாகத்துக்கு கிடைத்த பரிசு மூன்று வீடுகள் போலிருக்கிறது!

வேறு எந்த விதமான தியாகங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது? சென்ற வருடம் அந்த குடியிருப்பில் கூடுதலாக 10 வீடுகள் கட்டப்பட்டன. அதற்கு மும்பை மாநகராட்சியிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும். அப்படி ஒரு சான்றிதழ் தேவையில்லை என்று மாநகராட்சி கமிஷனர் ஜெயராஜ் பதக் முடிவு செய்தார். அவருடைய மகன் கனிஷ்காவுக்கு அங்கு ஒரு வீடு இருக்கிறது! ராணுவத்தில் முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் சிலருக்கும் இங்கு வீடுகள் இருக்கின்றன. இந்த வீட்டு வசதி சங்க விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கிறது. ராணுவத்திலும் விசாரணை நடக்கிறது. அவசரமாக டெல்லி போய் சோனியாகாந்தியிடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர முதலமைச்சர் அசோக் சவான் கொடுத்திருக்கிறார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று எப்படி முடிவெடுப்பது? மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் இந்த சிக்கலை விசாரித்து ஓர் அறிக்கை கொடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆணை!

சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடையாது. கடற்கரை மேலாண்மை விதிகள் மீறப்பட்டிருக்கின்றன. பணிமுடிந்து குடிபோவதற்கான தகுதிச் சான்றிதழைக் கொடுக்கவில்லை என்றால் இதுவரை வழங்கப்பட்ட மின்சாரமும் தண்ணீரும் நிறுத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் திடீரென்று ‘அரிச்சந்திரர்’களாக அவதாரம் எடுக்கிறார்கள். எப்போதெல்லாம் மக்கள் மத்தியில் ஊழல் அம்பலப்பட்டு நிற்கிறதோ, அப்போதெல்லாம் விசாரணைகளும் அரிச்சந்திர அவதாரங்களும் வழக்கமான நடைமுறைகளாகவே இருக்கின்றன.

வீடுகள் ஒதுக்கீட்டில் இந்த நாடகமாவது அரங்கேறுகிறது. வேறு ஒரு ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்குப் பிறகும் மத்திய அரசிடம் எந்த அசைவும் இல்லை. இந்தப் பகுதியின் முதல் வரியை ஆத்திரத்துடன் வெளிப்படுத்திய நண்பர் இதற்காக எல்லாம் கோபப்படமாட்டார்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 07.11.10

ஆதித்யாவின் அரசியல் அதிரடி

அவர் சொல்லியிருக்கும் கருத்துக்கு எதிராக நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை” என்பது பேரன் ஆதித்யாவின் பதில். ம்..ம்..கற்பனையைக் கன்னாபின்னா என்று ஓட விடாதீர்கள். ந்த ஆதித்யா, வேறு யாருமல்ல, சிவசேனை நிறுவனர் தலைவர் பால் தாக்ரேயின் பேரன். “பாடத் திட்டத்தில் இருந்த ஒரு புத்தகத்துக்கு எதிராக நீங்கள் நடத்திய போராட்டம் தவறானது என்று உங்கள் கல்லூரி முதல்வர் சொல்லி இருக்கிறாரே?” என்ற கேள்விக்கு ஆதித்யா அப்படிப் பதில் கொடுத்திருக்கிறார். “அவர் என்னுடைய கல்லூரி முதல்வர். அவரை நான் மதிக்கிறேன். எனவே அவர் கருத்தை மறுத்து வேறு எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை” என்று அதற்கான காரணத்தையும் விளக்கி இருக்கிறார். ஆதித்யா புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். அவர் கவிஞரும் கூட. இப்போது அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அவர் சிவ சேனையின் இளைஞர் அணியைக் கவனித்துக் கொள்வார்!

“வெள்ளையும் கருப்பும்” என்ற கவிதை நூல் ஒன்றை அவர் 2007-ல் வெளியிட்டு இருக்கிறார். இப்போது அவருக்கு வயது 20. அப்படி என்றால் அந்தக் கவிதை நூலை வெளியிடும்போது அவருக்கு வயது 17. எப்படியும் அந்தக் கவிதைகள் ஒரே மாதத்தில் எழுதிக் குவித்தவையாக இருக்காது என்றும் கடந்த ஒரு வருடமாக எழுதியவையாக இருக்கக் கூடும் என்றும் வைத்துக் கொண்டால், அவர் 16 வயதினிலே கவிதைகள் எழுதத் தொடங்கி விட்டார். தாத்தாவின் கலை உணர்வு அவருக்கு இயல்பாக வந்திருக்கும் போலிருக்கிறது. அந்தக் கவிதைகளை அவர்தான் உண்மையிலேயே எழுதினாரா அல்லது ‘யாராவது மண்டபத்திற்கு வந்து எழுதிக் கொடுத்தார்களா’ என்று நீங்கள் சந்தேகப்பட்டால், அதிகாரத்துக்கு அருகில் இருப்பவர்கள் மேல் அவநம்பிக்கை கொண்டவர் நீங்கள் என்று தான் சொல்ல முடியும்.

ஆதித்யா நடத்திய போராட்டம் எதற்காக? ரோஹிந்தன் மிஸ்ட்ரி என்பவர் எழுதிய ‘ஸச் அ லாங் ஜர்னி’ என்ற நாவலை மும்பை பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆதித்யா தலைமையில் அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் புத்தகத்தை ஏன் நீக்க வேண்டும்? ‘பூக்கர்’ பரிசுக்கான போட்டியில் பங்கு கொண்ட பெருமையை அந்தப் புத்தகம் பெற்றதற்காகவா? இல்லையென்றால் ஏதாவது மதத்தையோ அல்லது மாநிலத்தையோ சேர்ந்தவர்களுக்கு எதிராக வெறுப்பையும் விஷத்தையும் அந்தப் புத்தகம் உமிழ்கிறதா? அப்படி முஸ்லீம்களுக்கு எதிராகவும் மதராசிகளுக்கு எதிராகவும் கடந்த காலத்தில் பேசியவர்களையும் இப்போதைய சீசனில் பீகார், உ.பியைச் சேர்ந்த வட இந்தியர்களுக்கு எதிராக அனல் கக்கும் வார்த்தைகளைக் கொட்டுபவர்களையும் கூட எந்த அரசும் தடை செய்யவில்லை. இந்தப் புத்தகம் ‘சிவசேனையின் மனதுக்கு நெருக்கமான சில விஷயங்கள்’ மீது இந்த நாவல் விமர்சனம் வைக்கிறதாம்! அதனால் அந்தப் புத்தகம் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்!

இந்த நாவல் திடீரென்று இந்த வருடம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்குப் பாடமாக இது இருந்து வருகிறது. இந்த நாவல் கற்பிக்கப்பட்டதால் எந்த மாணவரும் யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எந்த ஒரு மாணவனும் இந்த நாவலில் வரும் வரிகளால் தான் பாதிக்கப்பட்டதாக எந்த ஒரு புகாரையும் யாரிடத்திலும் கொடுக்கவில்லை. ஆனால் ஆதித்யா படிக்கும்போது அந்த நாவல் அவருக்கு உறுத்தியது. போராட்டம் நடத்தினார். பல்கலைக்கழக துணைவேந்தரும் ஒரு குழுவினருடன் ‘ஆய்வு’ செய்தார். அந்த நாவல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. மாநில முதலமைச்சரும் அந்த நாவலை வாசித்துப் பார்த்து அதில் ‘ஆட்சேபகரமான வரிகள்’ இருக்கின்றன என்பதை உறுதி செய்தார். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்து ஒரே முடிவுக்கு வந்த பிறகு, நம்முடைய ஜனநாயகத்தில் வேறு ஏதாவது குரலுக்கு வழி இருக்கிறதா என்ன? தமிழ்நாட்டில் மதுரைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக இருந்த இன்குலாப் கவிதைகளுக்கு இதே கதிதானே நேர்ந்தது!

சென்னையிலும் தஞ்சாவூரிலும் மழை பெய்கிறது. சென்னை பீட்டர்ஸ் சாலையில் நடைபாதையில் வசிக்கும் ராஜம் என்ற இளம்பெண் மழையும் குளிரும் தாங்க முடியாமல் விறைத்து செத்துப் போகிறாள். தஞ்சையில் பெரிய கோவில் வாசலில் நிற்கும் ராஜராஜனின் சிலையும் மழையில் நனைந்தது. ராஜராஜன் மன்னனாகவே இருந்திருந்தாலும் அவனுடைய சிலைக்கு நரம்புகள் இல்லை; நாளங்கள் இல்லை. இதயத் துடிப்பு இல்லை. ஆனாலும் மழையில் சிலை நனைகிறதே என்று கவலைப்பட மனிதர்கள் இருந்தார்கள். அதைக் கோவிலுக்குள் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று பதறினார்கள். ஆனால் பீட்டர்ஸ் சாலையில் செத்துப்போன நடைபாதைவாசி ராஜத்துக்காக கண்ணீர் சிந்த மனிதர்கள் இல்லை. “பண்பாடு மிக்க பாரத நாட்டில் மானுடம் மலிவாய்ப் போனது. வாடையில் வருந்திய மயிலுக்காக போர்வை தந்த புண்ணிய பூமியில் மனிதர்கள் மட்டும் வாடையில் விறைத்தனர். பாஞ்சாலி என்ற ராஜகுமாரிக்குத் தான் பரமாத்மாவும் பட்டாடை கொடுப்பான். ராஜத்திற்கு ஒரு பருத்தி ஆடை கொடுப்பானா?” என்று கவிதை எழுதியிருந்தார் இன்குலாப்.

மற்ற நாடுகள் மீது போர் தொடுத்து வெற்றி பெறுவதை வீரம் என்று கொண்டாடும் மனிதர்களுக்கு மத்தியில் அதை காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமல் என்று இன்குலாப் சொன்னார். பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக குடும்ப விளக்கின் கொழுந்துகளை எல்லாம் மண்ணில் தேய்த்த மாபாதகன் என்றும் தஞ்சை நகரில் தேவடியார் தெருக்களுக்கு கால்கோள் விழாச் செய்த காமுகன் என்றும் ராஜராஜன் மீது இன்குலாப் அந்தக் கவிதையில் விமர்சனம் வைத்தார். மன்னர்களுக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை அவர் அந்தக் கவிதையில் விளக்கி இருந்தார். “மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கவில்லை; மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்” என்று வசனம் பேசி மக்களை ஈர்த்தவர் முதலமைச்சராக இருந்தார். “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்” என்று சொன்ன இயக்கம் எதிர்க்கட்சியாக இருந்தது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இப்படி மக்களுக்காகப் போராடுபவர்களாக இருந்த சூழலில் இன்குலாபின் அந்தக் கவிதை நூலுக்கு விருதுகள் குவிந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? மதுரைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து அந்த நூலை அரசு எடுத்து விட்டது!

மகாராஷ்டிர அரசும் தமிழக அரசும் என்ன கருத்தைக் கொண்டிருந்தனவோ அந்தக் கருத்தையே தான் ஆதித்யாவும் வைத்திருக்கிறார். “அந்தப் புத்தகத்தையே தடை செய்யுங்கள் என்று நான் கோரவில்லை. அது சந்தையில் விற்பனைக்கு இருப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் பல்கலைக்கழகத்தில் பாடமாக இருக்கக் கூடாது” என்பதே ஆதித்யாவின் நிலை. அதாவது நெடுங்காலமாக சமூகத்தில் சரியானதானது என்று போற்றப்படுகிற எந்த விஷயத்தைப் பற்றிய மாற்றுக் கருத்தும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படக் கூடாது என்பதே அவருடைய அரசியல். ஆதித்யா நடத்திய முதல் போராட்டம் ‘வெற்றி’ பெற்று விட்டது. அடுத்து என்ன செய்யப் போகிறார்? “இளைஞர்கள் மத்தியில் அரசியல் உணர்வையும் குடிமை உணர்வையும் வளர்ப்பதிலும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுவதிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம்” என்று சொன்னார். அடுத்த நாட்களில், சிவசேனையின் நாளேடு சாம்னா, “பெண்கள் பர்தா அணிவதை சட்டரீதியாக தடை செய்ய வேண்டும்” என்று தலையங்கம் எழுதியது. ஆதித்யா தலைமையில் யுவ சேனை எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான சிவசேனையின் வழிகாட்டுதல் இதுதான் போலிருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்