Monday, June 13, 2011

தடுக்கப்பட வேண்டிய வன்முறை

“ரத்தத்தில் தோய்த்தெடுத்த சிவந்த கரங்களுடன் சுதந்திர தேவி வந்தால், அவளைக் கை குலுக்கி வரவேற்பது கடினம்” என்று சொல்வார்கள். வன்முறையைக் கொள்கையாக அரசியலில் வரித்துக் கொண்டவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லோருக்கும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது. ஆனால் அப்படி எளிதாக நம்மால் அரசியலில் ஈடுபடுகிறவர்களை வகைப்படுத்திவிட முடிகிறதா? இந்த சமூகத்தை வன்முறை நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே மாற்ற முடியும் என்று அறிவித்துவிட்டு செயல்படுகிறவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். உதடுகள் ஒன்றை உச்சரிக்கும் போது, கைகள் வேறொன்றைச் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே மற்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்!

வன்செயல் என்றால் என்ன? ஏதாவது ஆயுதம் கொண்டோ அல்லது ஆயுதம் இல்லாமலோ ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்துவதா? அல்லது ஒருவரை இன்னொருவர் கொல்வதா? வழக்கமாக நாம் இது போன்ற செயல்களை மட்டுமே வன்முறை என்று கருதுகிறோம்; ஆனால் கண்ணுக்குத் தெரியாத வன்செயல்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் ஒருவரை கடுமையான வார்த்தையால் முகம் சுருங்கச் செய்வதும் வன்செயல்தான். ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே. அதை நான் எப்போதாவது தருவேன். நான் தரும்போது நீ பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று சொல்வதும் ஒருவிதமான வன்செயல்தான்!

நமக்கு எதிராக நான்கு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களில் ஒருவரையோ அல்லது இருவரையோ புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுடன் முகம் கொடுத்துப் பேசாமல் இருக்கிறோமே, அந்த செயலில் கூட வன்முறை இருக்கிறது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டு மனதளவில் ஏற்றுக் கொள்ளாமல், அதிகாரத்துக்குப் பயந்து ‘கீழ்ப்படிதலுடன்’ செய்து முடிக்கிறோமே, நாம் கண்டு அஞ்சும் அந்த அதிகாரத்தில் வன்முறை படிந்து கிடக்கிறது. சாதி, மதம், பாலினம், இனம், நாடு போன்ற பல காரணங்களுக்காக இன்று உலகம் முழுவதும் வன்செயல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

இந்தியாவிலும் இதுபோன்ற மத அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வன்செயல்களுக்கு பலியாகி இருக்கிறார்கள். இந்திய விடுதலையை ஒட்டிய காலங்களில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். 1960 - களில் ஜெபல்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மோதல்கள் குறித்து அறிய முடிகிறது. 1984-ல் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு நாடெங்கும் சீக்கியர்கள் மிக மோசமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பாபர் மசூதி இடிப்புக்கான பிரசார காலத்திலும் அந்த மசூதி இடிக்கப்பட்ட பிறகும் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த படுகொலைகளை நாம் இன்னும் மறந்திருக்க முடியாது.

எல்லாவிதமான மத மோதல்கள் அல்லது படுகொலைகளையும் மிஞ்சும் வகையில் 2002-ல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை இருந்தது என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. எல்லா கலவரங்களும் முஸ்லீம்களுடன் தான் நடந்ததா என்று நீங்கள் கேட்கக் கூடும். ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில் 2008-ல் கிறிஸ்தவர்களுக்கு எதிராக படுகொலைகளும் துன்புறுத்தல்களும் நடந்தன. காஷ்மீரில் இந்துக்கள் அவர்களுடைய வாழ்விடங்களை விட்டு அடித்து விரட்டப்பட்டார்கள்.

நம்முடைய சட்டதிட்டங்களின்படி சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பது மாநிலங்களின் கடமை. அதில் மத்திய அரசு நேரடியாகத் தலையிட முடியாது. ஆனால் இந்திய மக்களுடைய உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. 24 மணி நேரத்துக்கும் மேலாக – சில சமயங்களில் 48 மணி நேரத்துக்கும் மேலாக - ஒரு மாநிலத்தில் தொடர்ச்சியான வன்செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்றால் அதற்கு என்ன பொருள்? மாநில அரசு அந்த வன்முறையை ஒடுக்கி சட்டம் ஒழுங்கைக் காக்க விரும்பவில்லை என்று அர்த்தம். அப்படி ஒரு நிலை வந்தால், மத்திய அரசு தலையிடாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?

கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்க முடியாது என்று மத்திய அரசு கருதுகிறது. அதனால் மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்தது. அந்த சட்டத்துக்கான முன்வரைவு ஒன்றை தேசிய ஆலோசனைக் குழுமம் தயாரித்தது. அதைப் பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் வைத்தது. ஜூன் 4-ம் தேதி வரை மக்களிடம் இருந்து ஆலோசனைகளும் கருத்துகளும் வரவேற்கப்பட்டன.

சட்டங்கள் மட்டுமே மாற்றங்களைக் கொண்டு வந்துவிட முடியுமா என்று சிலர் கேட்கலாம். சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் என்னென்ன மதிப்பீடுகளின் அடிப்படையில் வாழ்க்கை நடத்துகிறவர்களாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பலாம். அடிப்படையில் இப்படி ஒரு சட்டத்துக்கான தேவை இருக்கிறது என்று நினைப்பவர்கள் கூட, இந்த சட்ட மசோதாவில் வேறு சில குறைகள் இருக்கின்றன என்று சொல்லலாம். எவ்வளவு குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு சட்டத்தின் தேவையை நாம் மறுக்க முடியாது.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி இந்த சட்ட மசோதாவைக் கடுமையாக எதிர்க்கிறது. இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை மட்டுமே பேசுகிறது என்றும் பெரும்பான்மையினருக்கு எதிரான வன்செயல்களைக் கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது. அதாவது இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்பது அவர்களுடைய வாதம்! ஆனால் மசோதா அப்படிச் சொல்வதாகத் தெரியவில்லை. இந்தியாவில் ஏழு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள்; ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், மிசோரம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மறும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை அந்த ஏழு மாநிலங்கள். அங்கெல்லாம் இந்த சட்டம் பாதுகாக்கும் சிறுபான்மையினர் பிரிவில் இந்துக்களும் இருக்கிறார்கள்!

‘குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் பெண்களைப் பாதுகாக்கும் முயற்சி இருக்கிறது; அப்படி என்றால் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு என்ன தீர்வு சொல்கிறீர்கள்’ என்று சிலர் கேட்கிறார்கள். இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்செயல்கள், உயர்சாதிகளுக்கு எதிராக வன்முறை, ஆண்களுக்கு எதிரான கொடுமைகள் எல்லாம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானவை. அதற்காக அவற்றின் மீது நடவடிக்கைகள் தேவையில்லை என்று யாரும் சொல்வதில்லை!

சிலர் மீது வெறுப்பை உமிழும் கருத்துகள் என்ற வன்முறை உட்பட ‘எல்லாவிதமான’ வன்செயல்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் எனக்கு இல்லை. “உலகில் எந்த நாட்டிலும் ஜனநாயகத்தின் ஆட்சி நடக்கவில்லை. வன்முறையே ஆள்கிறது. இதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த உண்மையை பகிரங்கமாக சொல்லாமல் விட்டுவிடுவது சிறப்பானது” என்பதை நீங்கள் ஏற்கனவே புரிந்தவராக இருந்தால், உங்களிடம் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை!

குமுதம் ரிப்போர்ட்டர் 09.06.11

0 Comments:

Post a Comment

<< Home