Friday, August 27, 2010

நடக்கும்..ஆனா நடக்காது...

வன்முறையைக் கைவிட்டு அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்” என்று மத்திய அரசு சில காலமாகவே மாவோயிஸ்டுகளைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது. நம்முடைய 64-வது சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் நாட்டு மக்களிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். அடுத்த நாள் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன்சிங்கும் மாவோயிஸ்டுகளை பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அழைத்தார். அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் பேசிய சில முதலமைச்சர்களும் இதே கருத்துக்கு முன்னுரிமை கொடுத்துப் பேசி இருந்தார்கள். இவர்கள் எல்லோருடைய பேச்சுக்களையும் ஊடகங்களில் பார்க்க முடிந்தது என்பது உண்மைதான். ஆனால் அதற்கும் சில நாட்களுக்கு முன்னால் மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி லால்காரில் நடத்திய பேரணியும் அங்கு அவர் விட்ட ’பேச்சுவார்த்தை’ அறைகூவலும் ஊடகங்களில் கூடுதல் பரபரப்புடன் வெளியிடப்பட்டன!

மமதா பானர்ஜியின் கோரிக்கைக்கு மட்டும் அல்ல, குடியரசுத் தலைவரும் பிரதமரும் விடுத்த வேண்டுகோளுக்கும் மாவோயிஸ்டுகள் பதில் சொல்லி இருக்கிறார்கள். அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கிஷன்ஜி குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு ஒரு ‘டேப்’ அனுப்பி இருந்தார். அதில் மூன்று மாத ‘போர் நிறுத்தம்’, பேச்சு வார்த்தை நடக்கும் போது இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய நபர் பற்றி எல்லாம் அவர் பேசி இருந்தார். மமதா பானர்ஜி அல்லது சுவாமி அக்னிவேஷ் பேச்சுவார்த்தைக்கு நடுவராக இருந்தால் நல்லது என்று அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாக ஊடகங்களில் வந்த செய்திகளில் இருந்து அறிய முடிகிறது. சுவாமி அக்னிவேஷ் பெயரை அவர்கள் முன்மொழிவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே கடந்த மே மாதம் சுவாமி அக்னிவேஷ் மூலம் பேச்சுவார்த்தைக்கான முயற்சி நடந்தது. கடந்த மே முதல் வாரத்தில் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து தந்தேவாதா வரை அவர் அமைதிக்கான ஊர்வலம் நடத்தி இருந்தார். அதை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பாராட்டி கடிதம் எழுதி இருந்தார். ’உங்கள் கருத்துக்களை நான் மதிக்கிறேன்; இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண நீங்கள் உதவ வேண்டும்’ என்றும் அவர் சுவாமி அக்னிவேஷிடம் தெரிவித்து இருந்தார்.

வன்முறையைக் கைவிடுவதாக மாவோயிஸ்டுகள் அறிவிக்க வேண்டும். அதன்பிறகு பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பேசி, மத்திய அரசு மாவோயிஸ்டுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். ஒரு குறிப்பிட்ட நாளில் இருந்து 72 மணிநேர போர்நிறுத்தம் தொடங்கட்டும். மாவோயிஸ்டுகள் அந்த அறிவிப்பில் உறுதியாக இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, ‘வன்முறை இல்லாத’ அந்த மூன்று நாட்களில் எப்போது வேண்டுமானாலும் நாம் பேச்சு வார்த்தையைத் தொடங்கலாம்” என்று அந்தக் கடிதத்தில் சிதம்பரம் சொல்லி இருந்தார். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் ரகசியமாக இருந்தால் நல்லது என்று உள்துறை அமைச்சர் அதில் குறிப்பிட்டிருந்தார். இருந்த போதிலும், அந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியானது!

அந்தக் கடிதத்தை மாவோயிஸ்டுகளிடம் சுவாமி அக்னிவேஷ் காட்டியிருப்பார் என்று தெரிகிறது. இதற்கு பதிலாக ஒரு கடிதத்தை மாவோயிஸ்டுகள் சுவாமி அக்னிவேஷிடம் கொடுத்தார்கள். ”போர்நிறுத்தம் இருதரப்பாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்ற பெயரில் துணைராணுவத்தினர் நாள்தோறும் அப்பாவி மக்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் அரசு போர்நிறுத்தம் பற்றிப் பேசினால் எப்படி நம்ப முடியும்? இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இரண்டு தரப்பும் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று அரசாங்கம் சொல்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? மாவோயிஸ்டுகள் வன்முறையாளர்கள் என்றும் அரசுத் தரப்பு அமைதிக்காக பாடுபடுகிறது என்றும் பொருளாகிறது. ஆனால், உண்மை இதற்கு மாறானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மீதும் அதன் முன்னணி அமைப்புகள் மீதும் விதித்திருக்கும் தடையை விலக்கிக் கொள்ள வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். துணைராணுவப் படையினர் மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் ‘நிபந்தனைகள்’ பட்டியல் நீண்டது.

கட்சியின் மத்தியக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஆசாத் அந்தக் கடிதத்தில் கையொப்பம் இட்டிருந்தார். அடுத்த சில நாட்களில் ஆசாத் ‘என்கவுண்டரில்’ கொல்லப்பட்டார். பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளுக்கு அதனால் பெருமளவில் பின்னடைவு ஏற்பட்டதாக பிறகு சுவாமி அக்னிவேஷ் சொன்னார். இது நடந்து முடிந்து இன்னும் இரண்டு மாதங்கள் முடியவில்லை; இந்த இரண்டு மாதங்களில் அரசியல் சூழலில் ஏதேனும் மாற்றம் நடந்திருக்கிறதா? சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தாக்கப்பட்டதும் ஆசாத் ‘கொல்லப்பட்டதும்’ இரு தரப்புக்கும் இரண்டு முக்கியமான சம்பவங்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த சம்பவங்கள் இரண்டு தரப்பிலும் பெரிய மாற்றங்கள் எதையும் ஏற்படுத்திவிடவில்லை!

வன்முறையை மாவோயிஸ்டுகள் கைவிட வேண்டும் என்ற அரசு தரப்பு நிபந்தனையில் மாற்றம் இல்லை. மாவோயிஸ்டுகளுடைய நிபந்தனைகளிலும் மாற்றம் எதுவும் இல்லை. ஆசாத் ‘கொலை’ குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை புதிதாக சேர்ந்திருக்கிறது. நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை என்று இரண்டு தரப்பும் சொல்லிக் கொண்டிருந்தாலும் அது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது. அரசுத் தரப்புக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை என்று ஒன்று நடந்தால், அது நிபந்தனைகளுடன் கூடியதாகவே இருக்க முடியும். ஆயுதப் புரட்சியின் மூலம் இந்திய அரசைத் தூக்கி எறிய வேண்டும் என்ற கொள்கையை மாவோயிஸ்டுகள் மாற்றிக் கொண்டார்களா? இல்லை; அரசை வன்முறை மூலம் தகர்த்தெறிவதே நோக்கம் என்று பிரகடனப்படுத்தியிருக்கும் மாவோயிஸ்டுகள் மீது இருக்கும் தடையை அரசு விலக்கிக் கொள்ளப் போகிறதா? நிச்சயம் இல்லை; சில மாநிலங்களின் சில மாவட்டங்களில் சட்டத்தின் ஆட்சி நடக்க வழியில்லாமல், மாவோயிஸ்டுகளின் ஆட்சி நடைபெறுவதை இந்திய அரசு பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறதா? எந்த ஒரு அரசும் அப்படிப் பொறுத்துக் கொண்டிருந்ததாக வரலாறு இல்லை.

அப்படி என்றால் இந்தப் பேச்சுவார்த்தை எதற்காக நடத்தப்படுகிறது? அடிப்படையான விஷயங்களில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு தரப்பும் எதைப் பற்றிப் பேசப் போகிறார்கள்? ஒருவேளை நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் இரண்டு தரப்பும் பேசுவதற்காக அமர்ந்தால் என்ன முடிவுகள் எட்டப்படும்? புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மாவோயிஸ்டுகளின் ஒத்துழைப்பை அரசு கோரப் போகிறதா? மற்ற அரசியல் கட்சிகள் இந்த மாதிரி நேரங்களில் மக்களிடம் இருந்து விலகி இருப்பது ஏன்? ஆயுதங்களை வைத்திருப்பதாலும் ஆங்காங்கே துணை ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதாலும் மக்கள் பிரதிநிதிகளாக மாவோயிஸ்டுகளை அரசு பார்க்கிறதா? இப்படி ஏராளமான கேள்விகளுக்கு பதில்களைத் தேட வேண்டியிருக்கிறது.

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக பெரிய தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசுகள் போட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை செயல்படுத்த வரும்போது அந்தப் பகுதி மக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது. மக்களிடம் இருந்து எழும் இந்த எதிர்ப்பை அடிப்படையாக வைத்து மாவோயிஸ்டுகள் உள்ளே வருகிறார்கள். அந்தப் பகுதிக்கான திட்டங்களை வகுக்கிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் அந்தப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்கிறார்கள்; அல்லது வழிகாட்டுகிறார்கள்; அல்லது போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார்கள். அந்தப் போராட்டத்தை அரசு ஒடுக்கும்போது பாதிக்கப்படும் மக்களோடு உடன் நிற்கிறார்கள். இதனால் ஒரு பிரிவு மக்களுடைய பார்வையில், மாவோயிஸ்டுகள் ‘ஆபத்பாந்தவனாக’ தெரிகிறார்கள்!

இந்த நிலை நீடிக்க வேண்டும் என்று எந்த அரசும் விரும்பாது. சட்டவிரோதமான செயல்களைத் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருக்காது. வன்செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்கும். அதேசமயம் பேச்சுவார்த்தைக்கான கதவுகளையும் அரசு திறக்கும். அல்லது பேச்சுவார்த்தை என்று பேசிக் கொண்டே மிகத் தீவிரமான நடவடிக்கைகளுக்கு அரசு தயாராகும். அதைப் போலவே தான் எதிர்தரப்பிலும் செயல்பாடு இருக்கும். ‘அரசின் ஒடுக்குமுறையால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் என்ற முறையில் அமைதியை நாங்கள் விரும்புகிறோம். பேச்சுவார்த்தைக்கு தயாராகிறோம்’ என்று சொல்வார்கள். அதேசமயம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது என்று அறிவிக்கும்போது, பலத்த தாக்குதல் நடத்துவதற்கான தயாரிப்பு வேலைகளிலும் இறங்கிக் கொண்டிருப்பார்கள். உலக அளவில் எல்லா இடங்களிலும் இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் நிலங்களைக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. கனிமச் சுரங்கமோ தொழிற்சாலையோ கட்டப்பட்டு தொழில் தொடங்க வேண்டியிருக்கிறது. அந்த முயற்சிகளுக்கு, எதிர்ப்புகள் வந்தால், அந்த எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டியிருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை நடவடிக்கை, சட்டத்தை மீறுபவர்களைத் தேடும் அதிரடி தேடுதல் வேட்டை, உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்படும் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று பல பெயர்களில் அரசு நடவடிக்கைகளில் இறங்குகிறது. இதையெல்லாம் ‘அடக்குமுறை’ என்று உலகம் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக பேச்சுவார்த்தைக்கான கதவையும் திறந்து வைக்கிறது.

அதாவது, இரண்டு தரப்புமே ஆயுதங்களை விட பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மக்களை நம்பவைக்க முயல்கின்றன. பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி அடைந்ததற்கு எதிர்தரப்பே காரணம் என்று மக்களிடம் பிரசாரம் செய்யும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றன. “மாவோயிஸ்டுகள் நிபந்தனைகளை விதிக்கிறார்கள்; நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தை என்ற அவர்களுடைய பதிலை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று மத்திய அரசு ஏற்கனவே சொல்லிவிட்டது. உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை இதைத் தெளிவாக விளக்கிவிட்டார். இருந்தாலும் அரசியல் மட்டத்தில் இன்னும் சில மாதங்களுக்கு இந்த பேச்சு ஓடிக் கொண்டிருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்த விஷயத்தை மமதா பானர்ஜி உயிர்ப்புடன் வைத்திருப்பார். பேச்சுவார்த்தை என்ற வகையில் ஏதாவது ஒன்றைத் தொடங்கி விடுவதன் மூலம் மாவோயிஸ்டுகளுக்கு ஒரு சட்ட அங்கீகாரம் கிடைக்கிறது. அதற்குப் பிறகு ”உள்நாட்டு அச்சுறுத்தல் என்று நீங்கள் சொல்லும் மாவோயிஸ்டுகளுடன் உங்கள் அமைச்சர் கூட்டு வைத்திருக்கிறாரே” என்று மார்க்சிஸ்டு கட்சி பிரதமரைக் கேட்க முடியாது. பலன் எதுவும் விளையப் போவதில்லை என்று நன்றாகத் தெரிந்தாலும், பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை அரங்கேற்ற மத்திய அரசு, மாவோயிஸ்டுகள், மமதா பானர்ஜி ஆகிய மூன்று தரப்பும் தயாராகின்றன. அதற்கான நிர்ப்பந்தம் தனித்தனியாக இருந்தாலும், மூன்று தரப்பும் ஒரு பொதுப் புள்ளியில் இணைகின்றன. அது என்ன? விரைவில் வர இருக்கும் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட வேண்டும் என்பதே அது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 29.08.10

தொலைதூரத்தில் வெளிச்சம்

ஒளிமயமான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது; நம்முடைய கனவுகள் நனவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை” என்று யாராவது உங்களிடம் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நம் எல்லோருக்குமே அந்த வார்த்தைகள் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், எல்லோருக்கும் அவரவர் எதிர்காலம் பற்றிய சிந்தனை மனதின் ஒரு மூலையில் ஓடிக் கொண்டிருக்கும். போட்டிகள் நிறைந்த உலகத்தில் நம்முடைய இலக்குகளை எப்படி அடைவது என்ற கவலை அவ்வப்போது கவலை எட்டிப் பார்க்கும். இந்த மாதிரியான நிலையில் நாம் இருக்கும்போது நமக்கு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை யாராவது சொன்னால், இனம்புரியாத சந்தோஷம் நமக்குள் பரவும்.

யாராவது சொன்னாலே நமக்கு நம்பிக்கை வருகிறது. நாட்டின் பிரதமரே அப்படி ஒரு நம்பிக்கையை நமக்குள் விதைக்கும்படி பேசினால், நம்முடைய மகிழ்ச்சி இன்னும் பல மடங்கு அதிகமாகிறது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லியில் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அந்த பேச்சின் கடைசியில்தான் முதலில் சொல்லப்பட்ட நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை அவர் சொன்னார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம்முடைய அரசாங்கத்தின் அடுத்தடுத்த திட்டங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. சுதந்திர தினத்தின் போது மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றிப் பேசுவதை மாநிலத்தில் இருக்கும் மக்கள் ஆர்வத்துடன் கேட்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் முதல் சட்டமன்றத் தொடரின் முதல் நாள் சட்டமன்றத்தில் ஆளுநர் பேசும் பேச்சும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையும் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது; மாநிலத்தின் நிதியமைச்சர் சட்டமன்றத்திலும் மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கும் நிதிநிலை அறிக்கையும் அதேபோல் அனைவரையும் கவனிக்கச் செய்கிறது.

இந்த முக்கியமான நிகழ்வுகளில் பேசக் கூடியவர்கள் பிரமாதமான பேச்சாளர்களாக இருக்க வேண்டியதில்லை; அவர்களுடைய பேச்சு அல்லது உரை நம்மை வசீகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால், அந்த பேச்சில் அல்லது உரையில் சொல்லப்படும் விஷயங்களே நமக்கு முக்கியமாக இருக்கின்றன. அப்படித்தான் 63வது ஆண்டு நிறைவடைந்த 64 -வது சுதந்திரதினத்தில் நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் பேசிய பேச்சையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங் உணர்ச்சிகரமாக உரையாற்றக் கூடியவர் இல்லை; செங்கோட்டைக்கு நேரில் வந்த மக்களையும் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களையும் அவருடைய பேச்சு அசையவிடாமல் கட்டிப் போடுவதில்லை. அவருடைய கொள்கைகள் பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு நன்மை செய்யாது என்ற நம்புவோர் கூட, அவர் அடிப்படையில் நேர்மையானவர் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியதாகிறது.

அவர் சொல்வதைப் போல பெரும்பான்மையான இந்தியர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அவரால் உறுதிசெய்ய உதவுமா? அதற்கு அவருடைய தனிமனித நேர்மை மட்டுமே போதுமானதாக இருக்க முடியுமா? இது தொடர்பாக அவர் என்ன சொல்கிறார் பாருங்கள். “தொடர்ச்சியான வறுமையிலும் பசியிலும் நோயிலும் பெரும்பான்மையான மக்கள் இருந்து வருகிறார்கள். 2004-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, முற்போக்கான சமூகத் திட்டங்கள் மூலம் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். வளர்ச்சியின் பலன்கள் சாதாரண மனிதனையும் போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக பல திட்டங்களைக் கொண்டு வந்தோம்,” என்று பேசுகிறார். இந்த இடத்தில் அவரோடு வேறுபடுவதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் ஏழை மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அந்தத் திட்டங்கள் மட்டுமே போதும் என்ற முடிவில் அவர் இருப்பதாகத் தெரிகிறது. “இப்போது நம்முடைய இலக்குகளை அடைவதற்காக புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே கொண்டு வந்த திட்டங்களை ஊழல் இல்லாமலும் மக்களுடைய பணத்தில் முறைகேடுகள் செய்யாமலும் நிறைவேற்றினால் போதுமானது” என்பதே அவருடைய இன்றைய முடிவு. அதாவது அடுத்த மூன்றரை வருடங்களில் சாதாரண மக்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தெரியும்படி குறிப்பிடத்தக்க புதிய திட்டங்கள் எதையும் அரசு கொண்டு வராது என்று பிரதமர் அறிவித்து இருக்கிறார். மற்ற தலைவர்களைப் போல போலி நாடகங்களைப் போடாமல், அவர் ’பளிச்’ என்று உண்மையைச் சொல்லி விட்டார்!

வறுமை ஒழிப்புக்கு மன்மோகன்சிங் அரசாங்கம் ஏற்கனவே கொண்டு வந்த திட்டங்கள் மட்டும் போதுமானவையா? அந்தத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன? குடும்பத்தில் ஒருவருக்கு வருடத்துக்கு நூறு நாள் வேலையை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் பல மாநிலங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக அரசாங்கத்திடம் இருந்து இத்திட்டம் தொடர்பாக பெறப்படும் தகவல்கள் மகிழ்ச்சி தருவதாக இல்லை. நாட்டின் பல பகுதிகளிலும் இந்தத் திட்டம் தொடர்பாக தகவல் கேட்பவர்கள் காண்டிராக்டர்களிடம் ‘படும் பாட்டைப்’ பார்க்கும்போது அந்த முடிவுக்கே வர நேர்கிறது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம், உணவுப் பொருட்களின் பற்றாக்குறை எல்லாம் எளிய மக்களைப் பெரிய அளவில் பாதிக்கிறது என்பதைப் பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் இந்திய உணவுக் கழகத்தின் பல்வேறு கிடங்குகளில் ஆறு கோடியே இருபது லட்சம் டன் உணவு தானியங்கள் அழுகிப் போனதாக ஊடகங்களில் செய்தி வருகிறது. ‘பட்டினியால் மக்கள் வாடும் ஒரு நாட்டில் – நாட்டின் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை இருக்கிறது என்று அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கையே குறிப்பிடுகின்ற ஒரு நாட்டில் – இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் உணவு தானியங்கள் அழுகிப் போவதை எப்படி அனுமதிக்க முடியும்?’ என்று உச்சநீதிமன்றம் கேட்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் என்று அரசாங்கம் பேசிக் கொண்டிருக்கும்போது உணவுப் பொருட்களின் நிலை இப்படி இருக்கிறது!

வளர்ச்சிக்கு முக்கியமான கல்வித் துறையில் என்ன நடக்கிறது? கல்வி உரிமைச் சட்டம் பல நல்ல நோக்கங்களுடன் கொண்டு வரப்பட்டது. ஆரம்பக் கல்வியை கட்டாயமாகவும் இலவசமாகவும் கொடுப்பதன் மூலம் கல்வி வெளிச்சத்தை இதுவரை பார்க்க முடியாமல் இருந்த மக்கள் பலன் பெறுவார்கள். ஆரம்பக் கல்வியை பரவலாக கொடுப்பதற்கு முயற்சி எடுக்கும் அரசு, உயர் கல்வியைப் பொறுத்தவரை செய்வது என்ன? நடுத்தரக் குடும்பங்களுக்குக் கூட உயர்கல்வி எட்டாத உயரத்தில் இருக்கிறது. கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கும் மாணவர்களில் பதினைந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களே கல்லூரிகளில் சேர்கிறார்கள் என்ற தகவல் இதைத்தான் காட்டுகிறது. கல்லூரிகளில் இவ்வளவு குறைவான விழுக்காடு மாணவர்கள் படிக்கும் நிலையிலேயே, உலக அளவில் எங்கு பார்த்தாலும் இந்திய இளைஞர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். எளியவர்களுக்கும் எட்டும் தூரத்தில் உயர்கல்வி இருந்தால், இன்னும் எவ்வளவு இலக்குகளை நம்மால் எட்ட முடியும் என்று நினைத்துப் பாருங்கள்.

வேறு என்னென்ன கனவுகளை விரைவில் நமக்கு நனவாக்கித் தருவதாக மன்மோகன்சிங் சொல்லி இருக்கிறார்? பகையை நீக்கி பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்த வேண்டும். தினந்தோறும் ராணுவத்துக்கும் இளைஞர்களுக்கும் காஷ்மீரில் நடக்கும் மோதலுக்கு முற்றுப் புள்ளி வைத்து அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும். நாட்டின் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் மாவோயிஸ்டுகளின் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். எல்லோருடைய ஒத்துழைப்போடும் காமன்வெல்த் போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இப்படி அவருடைய கனவுகள் நீள்கின்றன.

இந்த எல்லா பிரச்னைகளிலும் அவரைப் போலவெ அவருடைய அமைச்சரவை சகாக்களும், கட்சித் தளபதிகளும் ஒரே பார்வையில் இருக்கிறார்களா? காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையில் ஒருமித்த கருத்து நிலவுகிறதா? அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு வலியுறுத்தியபோது சசிதரூர், எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற அமைச்சர்கள் அரசாங்கத்துடன் முரண்பட்டார்கள். பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடந்தபோது உள்துறை அமைச்சகத்துக்கும் வெளியுறவுத் துறைக்கும் இடையில் இருந்த இடைவெளி எல்லோருக்கும் தெரிந்துபோனது. உள்கட்டமைப்பு வேலைகளில் பிரதமரின் நம்பிக்கையைப் பெற்ற திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியாவுக்கும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கமல்நாத்துக்கும் இடையில் பகிரங்கமாக கருத்து மோதல் வந்தது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக மணிசங்கர் அய்யரும் சுரேஷ் கல்மாதியும் மோதிக் கொண்டார்கள். மாவோயிஸ்டுகளை அரசு எப்படிக் கையாள்கிறது என்ற விஷயத்தில் உள்துறை அமைச்சரின் அணுகுமுறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் செயலர் திக்விஜய்சிங் கட்டுரை எழுதினார்; பேட்டி கொடுத்தார்.

இவையெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் வேறுபாடுகள்; இவை தவிர, கூட்டணிக் கட்சிகள் எழுப்பும் சிக்கல்கள் தனியாக இருக்கின்றன. எப்படியாவது இடது முன்னணி அரசாங்கத்தை வீழ்த்திவிட்டு மேற்குவங்க முதலமைச்சராகிவிட வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி நினைக்கிறார். அதற்காக அவர் மாவோயிஸ்டுகளின் ஆதரவைப் பெறுவதற்கும் தயங்கவில்லை. உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாவோயிஸ்டுகள் இருப்பதாக பிரதமர் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அவருடைய அமைச்சர் ஒருவர் மாவோயிஸ்டுகளின் உதவியை நாடுகிறார்! தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரிந்துவிடும்!

இவைதவிர, அரசாங்கத்தின் வேறு பல நடவடிக்கைகளும் சாமான்ய மக்களுக்கு ஆதரவாக இல்லை. பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசு விலக்கிக் கொண்டது. இதனால் சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் லாபம் குவியும். உணவுப் பொருட்கள் வர்த்தகத்தில் ஊக வணிகத்தை உணவு ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை அனுமதிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, பரந்து வாழும் மக்களை விட ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெரு நிறுவனங்களுக்கும் மன்மோகன்சிங் அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கிறதோ என்ற எண்ணம் வலுவடைகிறது. அதுதான் உண்மை என்றால், பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் விரைவில் வசப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் சொல்லும் வார்த்தைகள் செயல் வடிவம் பெறாத வெற்று முழக்கமாகவே இருக்கும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 26.08.10

Saturday, August 21, 2010

அர்ஜூன் சொல்லும் கீதை

அவர் மௌனம் கலைத்து வாய் திறந்துவிட்டார் என்று ஊடகங்களில் ஒரே பரபரப்பு! ”வாரன் ஆண்டர்சனை விடுதலை செய்யும்படி என்னிடம் பிரதமர் ராஜீவ்காந்தி சொல்லவே இல்லை,” என்று அர்ஜூன்சிங் நாடாளுமன்றத்தில் பேசினார்; வாரன் ஆண்டர்சன் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்; மத்தியப் பிரதேசம் போபாலில் அந்த கம்பெனி நடத்திய உரத் தொழிற்சாலையில் இருந்து 1984 டிசம்பர் 3-தேதி இரவு விஷவாயு வெளியே வந்து காற்றில் கலந்தது. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். அந்த நாட்களில் அமெரிக்காவில் இருந்து ஆண்டர்சன் இந்தியா வந்தார். அவரை கைது செய்த மத்தியப் பிரதேச மாநில அரசு, பிறகு விடுதலை செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது. அங்கிருந்து அவர் பத்திரமாக அமெரிக்காவுக்கு போய்ச் சேர்ந்தார். அந்த சமயத்தில் மத்தியப் பிரதேச முதலமைச்சராக இருந்தவர் அர்ஜூன்சிங்!

அப்போது அவர் விடுதலை செய்து அனுப்பி வைத்த ஆண்டர்சனை இப்போது இந்தியாவுக்கு வரவழைக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். பிரதமர் மன்மோகன்சிங் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பேச வேண்டும் என்று அவர் கேட்கிறார். போபால் பேரழிவு வழக்கில் போபால் உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் ஒரு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆனால் அர்ஜூன்சிங் அப்போது எதுவும் பேசவில்லை; செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை; அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. அவர் முதலமைச்சராக இருந்த போது நடந்த விபத்து என்பதால் ஊடகங்கள் அவருடைய கருத்தைக் கேட்க முயன்றன. ஆனால் அவர் அப்போது பிடியே கொடுக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசும்போதுதான் அவர் கருத்தை எல்லோரும் தெரிந்து கொள்ள முடிந்தது. அதனால்தான் அவர் மௌனத்தைக் கலைத்து விட்டார் என்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன!

மற்றபடி அவர் புதிய தகவல்கள் எதையும் சொல்லிவிடவில்லை; இதுவரை வெளிவராத ரகசியங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. வாரன் ஆண்டர்சன் எப்படி கைது செய்யப்பட்டார் என்று அவர் விவரித்தார். அவருடைய பேச்சில் இருந்தே நாம் பழைய நிகழ்ச்சிகளை நினைவுக்குக் கொண்டு வரலாம். விஷவாயு கசிவு மூலம் போபாலில் பேரழிவு நடந்த பிறகு வாரன் ஆண்டர்சன் போபாலுக்கு வந்தார்; இவ்வளவு கோரமான விபத்துக்குப் பிறகும் ஆண்டர்சன்னால் எப்படித் துணிச்சலாக இந்தியாவுக்கு வர முடிகிறது என்று அர்ஜூன்சிங் ஆச்சரியப்பட்டார். நாடு முழுவதும் ஆலைக்கு எதிராக மக்கள் கோபம் கொண்டிருந்தார்கள். அதனால் அரசாங்கம் ஆண்டர்சன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகி இருந்தது. இந்நிலையில் அவரைக் கைது செய்துவிட வேண்டும் என்று அர்ஜூன்சிங் முடிவு செய்தார். ஆனால் அவருடைய முடிவை அவர் யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உத்தரவு பிறப்பித்தார். வாரன் ஆண்டர்சன் கைதுசெய்யப்பட்டதற்கு ‘நானே பொறுப்பு’ என்று அர்ஜூன்சிங் பொறுப்பேற்றுக் கொள்கிறார்!

அந்தக் கைது சம்பவம் எப்படி நடந்ததாம்? போபால் விமான நிலையத்தில் ஆண்டர்சன் விமானத்தில் இருந்து இறங்கினார். உடனே போலீஸ் அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்தார்கள். அவரை ஒரு காருக்குள் உட்கார வைத்தார்கள். ‘நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்’ என்று சொன்னார்கள்; ஆண்டர்சனுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகைக்கு கொண்டு போனார்கள். அங்கு அவர் ‘பாதுகாப்பாக’ வைக்கப்பட்டார். அந்த போலீஸ் அதிகாரியிடம் ’என்னை வரவேற்க உங்கள் முதலமைச்சர் வரவில்லையா’ என்று ஆண்டர்சன் கேட்டாராம். அவருக்குத் தான் கைது செய்யப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே வந்திருக்காது; தனக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது என்ற நினைப்பு கூட ஒருவேளை அவருக்கு வந்திருக்கலாம்.

இந்த கைது சம்பவம் நடந்ததற்குப் பிறகு ஆண்டர்சன்னுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பிரதமர் ராஜிவ் காந்தி முதலமைச்சர் அர்ஜூன்சிங்கிடம் எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை! அதாவது கைது செய் என்றும் ராஜிவ் சொல்லவில்லை; விடுதலை செய்து அவரை அனுப்பி வை என்றும் ராஜிவ் உத்தரவிடவில்லை. ஆண்டர்சன்னைக் கைது செய்யும் முடிவை அர்ஜூன்சிங் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று சொல்வதன் அர்த்தம் இதுதான் என்று புரிகிறதா? உள்துறை அமைச்சகத்தில் இருந்துதான் ஆண்டர்சனை விடுதலை செய்யுங்கள் என்று தொலைபேசியில் சொன்னார்கள்! இதையும் நேரடியாக அர்ஜூன்சிங்கிடம் யாரும் சொல்லவில்லை. மாநில அரசின் தலைமைச் செயலாளரிடம் சொல்லி இருக்கிறார்கள். அவர்தான் அர்ஜூன்சிங்கிடம் அந்தத் தகவலைச் சொன்னார்! அர்ஜூன்சிங்கும் ‘ஏதாவது செய்யுங்கள்’ என்று தலைமைச் செயலாளரிடம் பொறுப்பை விட்டுவிட்டார்; அதன்பிறகு பிணையில் விடுதலைக்கான சடங்குகள் நடந்தன. சிறப்பு விமானத்தில் ஆண்டர்சன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்; அங்கு அவர் ‘யாரையோ’ சந்தித்துப் பேசினார்; அப்படியே அங்கிருந்து அமெரிக்கா போய் விட்டார்.

சாதாரணமான நிலையில் இருக்கும் ஒரு அமெரிக்கருக்கு எந்த நாட்டில் பிரச்னை என்றாலும், அமெரிக்க அரசாங்கம் உடனடியாக செயல்படுவதை பல சமயங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆண்டர்சன் சாதாரணமான மனிதர் அல்ல. அவர் இன்னொரு நாட்டில் கைது செய்யப்பட்டார் என்றால், அவரை விடுவிக்க அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்காது. அப்படி அதற்காக இந்தியாவுடன் அமெரிக்கா பேசியிருந்தால், யார் பேசி இருப்பார்கள்? யாரிடம் பேசி இருப்பார்கள்? அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்திருந்தால், வெளியுறவுத் துறை சம்பந்தப்பட்டிருக்கும். ஆனால் ‘வாரன் ஆண்டர்சன் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு எந்த ஆவணமும் அரசாங்கத்திடம் இல்லை’ என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெளிவாக சொல்லிவிட்டார். அங்கு ‘தடயங்கள்’ எதுவும் அழிக்கப்படவில்லை என்று எடுத்துக் கொண்டால், இன்னும் பெரிய பதவிகளில் இருந்தவர்களுக்கு இடையேதான் பேச்சு வார்த்தை நடந்திருக்கும். வெளியுறவுத் துறைக்கு அடுத்த உயர்ந்த இடம் எது? பிரதமர் அலுவலகம்தானே! இந்த லாஜிக் தான் அப்போது பரவிய வதந்திக்கு வலு சேர்க்கிறது. அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியிடம் பேசினார் என்பதும் அதன் பிறகு ராஜிவ் காந்தி ஆண்டர்சன்னை விடுதலை செய்யச் சொன்னார் என்பதும் அப்போது பரவிய வதந்தி!

இவ்வளவு நாள் மௌனமாக இருந்த அர்ஜூன்சிங் இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன? நாடாளுமன்றத்தில் போபால் விபத்து பற்றி விவாதம் நடக்கிறது; அதில் அர்ஜூன்சிங் கலந்து கொண்டு பேசுவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அந்த விபத்து நடக்கும்போது மத்தியப் பிரதேச முதலமைச்சராக அவர் இருந்திருக்கிறார். ஆனால் அர்ஜூன்சிங் அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதற்கு அந்த தார்மீக உணர்வு மட்டும்தான் காரணமா? ‘அர்ஜூன்சிங் பேச வேண்டும்; அவர் பேசுகின்ற வார்த்தைகள் பல மாங்காய்களை அடித்து வீழ்த்த வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருக்கக் கூடும். அதனால் அவர் பேசிய பேச்சைக் கூட கட்சியே தயாரித்துக் கொடுத்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அப்படி இல்லை என்றாலும் கூட, அர்ஜூன்சிங் பேசிய ஒவ்வொரு சொல்லும் கட்சித் தலைமையால் பார்த்து அங்கீகரிக்கப்பட்டிருக்கக் கூடும்.

அப்படி ஒரு பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ராஜிவ் காந்தி ஆணையிட்டதால்தான், அர்ஜூன்சிங் ஆண்டர்சன்னை விடுதலை செய்தார் என்று எதிர்க்கட்சிகள் செய்யும் பிரசாரம் முறியடிக்கப்பட வேண்டும்; அதுவும் அர்ஜூன்சிங் வாயாலேயே அந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான இந்தியர்களுடைய உயிரைப் பறித்த ஒரு கம்பெனியின் தலைவர் நம்முடைய நாட்டின் விசாரணை வளையத்தில் இருந்து தப்பித்துப் போக ராஜிவ் காந்தி விடுவாரா? ஒருநாளும் அப்படி நடக்க விட்டிருக்கமாட்டார் என்று மக்கள் நம்ப வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அப்படி என்றால் அந்தப் பழியை யார் மேலே போடுவது? இருக்கவே இருக்கிறார் நரசிம்மராவ்! ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் அப்போது உள்துறை அமைச்சராக நரசிம்மராவ் இருந்தார். அவர் இப்போது உயிருடன் இல்லை; அர்ஜூன்சிங் பேச்சை மறுத்து அவர் அறிக்கை வெளியிட வாய்ப்பு இல்லை! அர்ஜூன்சிங்குக்கும் நரசிம்மராவுக்கும் இருந்த மோதல் உலகம் அறிந்த ரகசியம். சோனியா காந்தியுடனும் நரசிம்மராவுக்கு இணக்கமான உறவு இருந்ததாக தெரியவில்லை. இன்றைய பிரதமர் மன்மோகன்சிங் மட்டும்தான் ஒருவேளை வருத்தப்படலாம். ஏனென்றால், அவரை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வந்து நிதியமைச்சராக்கியது நரசிம்மராவ்! இன்று அவர் பிரதமராக இருப்பது ராஜிவ் குடும்பத்தால்தானே, பிறகு ஏன் அவர் வருத்தப்படப் போகிறார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது!

நாடாளுமன்றத்தில் அர்ஜூன்சிங் பேசிய பேச்சு நமக்கு சில விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறது. முதலாவது, இந்தியாவில் தொழில் நடத்த வருபவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது. ஆயிரக்கணக்கான மக்கள் பலியான போபால் நகரத்தில் கூட ஆண்டர்சன்னுக்கு எதுவும் நடந்துவிடவில்லை. மக்களுடைய கோபம் அவர் மேல் திரும்பி அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே அர்ஜூன்சிங் அவர் மீது வழக்கு போட்டார்; கைது செய்தார்; பத்திரமாக அமெரிக்காவுக்கும் அனுப்பி வைத்தார்; பொருளாதார சீர்திருத்தத்தின் தொடக்க நாட்களிலேயே இந்தியாவில் தொழில் நடத்தும் வெளிநாட்டவர்க்கு நாங்கள் இவ்வளவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம்; இப்போது எவ்வளவு பாதுகாப்பு கொடுப்போம் என்று புரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாவதாக அவருடைய பேச்சில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி மிகவும் முக்கியமானது. இதை எழுதும்போது, மாதவனும் வடிவேலுவும் நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சி என் நினைவுக்கு வருகிறது. வடிவேலு ஒரு கவுன்சிலர்; அவரைப் பார்க்க மக்கள் காத்திருப்பார்கள். வடிவேலுவுக்கு எதிராக மக்களைத் திருப்ப வேண்டும். அதற்காக மக்களுக்கு நன்றாக கேட்கும்படி சில செய்திகளை யாரிடமோ பேசுவது போல் மாதவன் சொல்லுவார். மக்கள் அதை நம்பி வடிவேலுவுக்கு எதிராக திரும்புவார்கள். ‘அவன் சொன்னதை நம்பியா என்னை எதிர்க்கறீங்க’ என்று கும்பலைப் பார்த்து வடிவேலு கேட்பார். அப்போது கூட்டத்தில் ஒருவர், ‘சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்று சொல்வார்.

அதைப் போல அர்ஜூன்சிங் நமக்கு ஒரு தகவல் சொல்கிறார். அது என்ன? நேரு குடும்பத்து வாரிசுகள் தப்பு செய்ய மாட்டார்கள்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 22.08.10

தப்பு நடந்தால் விசில் அடியுங்கள்

எதிரிகள் அவரை போட்டுத் தள்ளிய பிறகு அவர்களை எதிர்த்து சண்டை போடுவதைவிட, இப்போதே அவருடைய போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்” என்று அந்தப் பெண்மணி முடிவு செய்தார். அவர் பெயர் ஜெயஸ்ரீ. அவருடைய கணவர் எம்.என்.விஜயகுமார் கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேலைபார்க்கிறார். நிர்வாகத்தில் சில சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்த ஊழல்களை உயரதிகாரிகளிடம் அவர் புகார்களாக கொடுத்தார். என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதுதான் அங்கும் நடந்தது. விஜயகுமார் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் அதிகாரத்தை அதிகமாக வைத்திருப்பவர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டப்பட்டார்!

ஒருநாள் நள்ளிரவில் அவருடைய வீட்டின் அழைப்பு மணி அடித்தது. அவர் கதவைத் திறந்து பார்த்தபோது சிலர் அங்கு நின்றுகொண்டு இருந்தார்கள். ‘உங்களுடைய மகன் விபத்தில் அடிபட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் இருக்கிறான். உடனே வாருங்கள்’ என்று சொன்னார்கள். அவருடைய மகன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறான்; இது விஜயகுமாருக்கு நன்றாகத் தெரியும். அது ஒருவேளை வந்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். எதிரிகள் நம்மை அச்சுறுத்துகிறார்கள் என்றும் உளவியல்ரீதியான தொல்லைகளைக் கொடுக்கிறார்கள் என்றும் அவர் புரிந்து கொண்டார். இது போல் நாற்பது முறை பலவகைகளில் மிரட்டப்பட்டிருக்கிறார். மூன்று முறை அவரைக் கொல்ல முயற்சி நடந்திருக்கிறது. இந்த நிலையில் தான் கணவருடைய உயிரை எதிரிகள் பறிப்பதற்கு முன்னால், அவர் எதிர்த்து வரும் ஊழல்களை பொதுமக்களிடம் அம்பலப்படுத்தி விட வேண்டும் என்று அவருடைய மனைவி ஜெயஸ்ரீ களத்தில் குதித்தார். ஊழலை எதிர்த்துப் போராட வாருங்கள் என்ற அறைகூவலுடன் ஒரு வலைத்தளத்தைத் தொடங்கினார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பல தகவல்களைத் திரட்டி உடனுக்குடன் வெளியிடுகிறார். இந்த வகையில் அவருடைய போராட்டம் தொடர்கிறது.

விஜயகுமார் கொடுத்து வைத்தவர்; அவருடைய போராட்டத்தை அவருடைய குடும்பத்தில் இருப்பவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; அலுவலகத்தில் அவர் எடுக்கும் நிலையால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு அவருடைய மனைவியும் இரண்டு மகன்களும் தயாராக இருக்கிறார்கள். பெரும்பாலான குடும்பங்களில் அப்பா யாரை எதிர்த்து எதற்காக போராடுகிறார் என்பது குழந்தைகளுக்குத் தெரிவதில்லை; யாரால் கணவருடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை மனைவி அறிந்திருப்பதில்லை. இவையெல்லாம் தெரிந்தால் மனைவியோ குழந்தைகளோ பயப்படுவார்கள்; ’நமக்கு ஏன் வம்பு’ என்று பிரச்னையில் இருந்து ஒதுங்கி விடும்படி கணவனை நெருக்குவார்கள்; அவர்களுடைய அன்புக்கும் கண்ணீருக்கும் முன்னால் கணவன் கரைந்து விடக் கூடும். இதனால் பல குடும்பங்களில் மனைவியிடம் கணவன் எல்லா விபரங்களையும் சொல்வதில்லை. இதுதவிர இன்னொரு கோணத்திலும் விஜயகுமார் ‘அதிர்ஷ்டசாலி’; இன்னும் அவர் உயிரோடு இருக்கிறார்; எதிரிகளால் அவர் கொலை செய்யப்படவில்லை.

ஆனால் முறைகேடுகளைத் தட்டிக் கேட்கப் போனவர்கள் எல்லோருக்கும் இந்த நல்வாய்ப்பு கிடைப்பதில்லை. சத்தியேந்திர துபே என்ற இளைஞர் ஐ.ஐ.டி.யில் படித்த ஒரு ‘இன்ஜினியர்’; தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலைபார்த்து வந்தார். சாலைப் பணிகளுக்காக ஒப்பந்தம் போட்டிருந்த பெரிய நிறுவனம் ஒன்று உள்ளூர் தாதாக்களிடம் ‘சப்-காண்ட்ராக்ட்டில்’ வேலைகளைக் கொடுத்திருப்பதாக அவர் மேலதிகாரியிடம் புகார் தெரிவித்தார். எந்தவிதமான பலனும் இல்லை; அதற்காக அவர் அப்படியே இருந்துவிடவில்லை. ‘நான் யார் என்பதை வெளியில் சொல்லி விடாதீர்கள்’ என்ற வேண்டுகோளுடன், இந்த முறைகேடுகள் பற்றி அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார். பிரதமர் அலுவலகத்தில் இருந்தவர்களில் ஒரு ‘நேர்மையான’ அதிகாரி, நெடுஞ்சாலைத் துறைக்கு அந்தப் புகாரை அனுப்பி விசாரிக்கச் சொன்னார். இது சரியான நடவடிக்கைதான். என்ன கோளாறு என்றால், அவர் புகார் கொடுத்தவர் பற்றிய விபரங்களுடன் அந்த புகாரை அனுப்பி விட்டார். அடுத்த சில வாரங்களில் சத்தியேந்திர துபேயின் உயிரற்ற உடல் சாலையில் கிடந்தது. ஏதோ வழிப்பறி தகராறில் அவர் கொல்லப்பட்டாராம்!

மஞ்சுநாத் சண்முகம் என்பவர் லக்னோவில் இருக்கும் ஐ.ஐ.எம்.கல்லூரியில் எம்.பி.ஏ. படித்தவர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் மார்க்கெட்டிங் மானேஜராக வேலைபார்த்தார். அப்போது அவர் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல் விற்பனை செய்வதைக் கண்டுபிடித்தார். இதற்காக அந்த பெட்ரோல் நிலையத்தை இழுத்து மூடினார். யாரை, எங்கே, எப்படி கவனிக்க வேண்டுமோ அப்படி கவனித்துவிட்ட அந்த நிலையம் மீண்டும் பெட்ரோல் விற்பனையைத் தொடர்ந்தது. மஞ்சுநாத் மீண்டும் அங்கு சோதனை நடத்தினார். அதற்குப் பின், ஆறு குண்டுகள் துளைத்திருந்த நிலையில் அவருடைய உடல் அவருடைய காரில் கிடந்தது.

லலித் மேத்தா என்பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளிலும் உணவுரிமைச் சட்டத்துக்காகவும் மக்களிடம் வேலை செய்து வந்தார். அவரை கடந்த 2008 மே மாதம் 14-ம் தேதி காணவில்லை. மிருகங்களால் கடித்துக் குதறப்பட்டு அழுகிய நிலையில் மே 16-ம் தேதி காட்டில் இருந்து அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரும் வழிப்பறிக் கொள்ளையரால் கொல்லப்பட்டாராம்! அரசுத் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் நபர்களாகப் பார்த்து இந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் ஏன் கொலை செய்கிறார்கள் என்ற ரகசியம் நமக்கு புரியாத புதிராகத் தான் இருக்கிறது!

புகார் தெரிவிப்பவர்களின் பெயர்களை வெளியில் சொல்லக் கூடாது என்பதன் அவசியத்தை நாம் அமெரிக்காவில் நடந்த இரு சம்பவங்களை ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம். ஒன்று அமெரிக்க அமைச்சர் நடந்து கொண்ட முறையால் ஏற்பட்ட பாதிப்பு. துபே விஷயத்தில் நம்முடைய பிரதமர் அலுவலக அதிகாரி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதைப் போலவே, அமெரிக்காவிலும் அமைச்சர் ஒருவர் நடந்து கொண்டார். ஜோசப் டார்பி என்பவர் அமெரிக்க ராணுவத்தில் வேலைபார்த்தார். 2004-ம் வருடம் ஜனவரி மாதம் அவர் புகைப்படங்கள் அடங்கிய ஒரு சி.டி.யை ராணுவ மேலதிகாரியிடம் கொடுத்தார். அபுகிரைப் சிறையில் அமெரிக்க ராணுவத்தினர் இராக் கைதிகளுக்கு செய்த கொடுமைகள் எல்லாம் புகைப்படங்களாக அதில் இருந்தன. இதைக் கொடுத்தது நான்தான் என்ற செய்தி வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். ஆனால், செனட் விசாரணையின் போது அப்போதைய அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்ஃப்ல்டு புகார் கொடுத்தவருடைய விபரங்களை சொல்லிவிட்டார். இது தெரிந்தவுடன், ஒரு கும்பல் ஜோசப் டார்பியை தேசவிரோதி என்று வசைபாடி அவருடைய வீட்டைத் தாக்கி நாசமாக்கியது. அதன் பிறகு எங்கோ ஓர் இடத்தில் ராணுவ பாதுகாப்புடன் அவர் வாழ நேர்ந்தது!

எழுபதுகளின் தொடக்கத்தில் அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழல் மிகவும் பரபரப்பாக இருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில் நிக்சன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று செயல்பட்ட ஒரு குழு செய்த முறைகேடுகளும் அவர்கள் பிடிபட்டபோது அந்த விசாரணையை முடக்க அதிபர் எடுத்த முயற்சிகளும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அம்பலமாக்கப்பட்டன. அந்தப் பத்திரிகை நிருபர்களுக்கு அந்த விபரங்களை கொடுக்கும் ‘சோர்ஸ்’ எது என்ற கேள்வி எழுந்தது. ’டீப் த்ரோட்’ என்ற புனைபெயரில் ஒருவர் கொடுக்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் அவர் யார் என்பதை அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த வாட்டர்கேட் விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன் பதவி விலகினார். இவையெல்லாம் நடந்து முடிந்து ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பிறகு 2005-ல் அந்த ‘டீப் த்ரோட்’ தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவருடைய பெயர் வில்லியம் மார்க் ஃபெல்ட். அந்த ரகசியத்தை அவர் பகிர்ந்து கொண்டபோது அவருக்கு வயது 91! அவர் யாரென்று அந்த பத்திரிகை அப்போதே காட்டிக் கொடுத்திருந்தால், அவர் இவ்வளவு நாட்கள் உயிரோடு இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.

புகார் கொடுப்பவர்களைப் பாதுகாப்பது தொடர்பான நல்ல செய்தி ஒன்று வந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுநல வெளியீடு மற்றும் புகார் அளிப்பவர் பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, புகார் அளிப்பவர்களின் பெயர்களை வெளியில் சொல்லும் அதிகாரிகளுக்கு மூன்று வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள் அபராதம் கட்ட நேரிடும். அதேசமயம் நேர்மையான அதிகாரிகள் மீது பொய்யான புகார்களை முன்வைக்கும் நபர்களும் தண்டிக்கப்படுவார்கள். மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு சிவில் கோர்ட் போன்ற அதிகாரத்தை இந்த சட்ட மசோதா கொடுக்கிறது. இதன் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

இதுபோன்ற ஒரு சட்டம் தேவை என்று நீண்ட நாட்களாகவே சமூக ஆர்வலர்கள் கோரிவந்தார்கள். சத்தியேந்திர துபே படுகொலை அவர்களுடைய கோரிக்கைக்கு ஒரு வேகத்தை கொடுத்தது. சத்தியேந்திர துபேக்கு முன்னதாகவும் ‘உண்மை விளம்பிகள்’ சிலர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்குப் பிறகுதான் புகார்களை தெரிவிக்கும் நபர்களைப் பாதுகாப்பதற்காக அரசுத் தரப்பில் இருந்து ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவானது. பொதுநல வெளியீடு மற்றும் புகார் அளிப்பவர்கள் பாதுகாப்பு மசோதாவை அரசு பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்னது. இது 2004-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் நடந்தது. இப்போது ஆறு வருடங்கள் கழிந்த நிலையில், இதுபோன்ற ஒரு சட்ட முன்வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. இந்த ஆறு வருடங்களில் சதீஷ் ஷெட்டி உட்பட இன்னும் சில உயிர்கள் பலியாகி இருக்கின்றன என்பது கவலை அளிக்கும் வேறு செய்தி!

மத்திய அரசு இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதுடன் நின்றுவிடக் கூடாது. ஊழல் புகார்களைத் தெரிவிப்பவர்களுடைய பெயர்களும் அடையாளங்களும் பாதுகாக்கப்படும் என்று மக்களிடம் விளம்பரங்கள் மூலம் உறுதி அளிக்க வேண்டும். இந்த உறுதியால் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கி புகார்கள் கொடுப்பது ஊக்குவிக்கப்படவேண்டும். தனிப்பட்ட முறையில் பணத்தாசை இல்லாமல் எளிய மனிதனாக இருக்கும் டாக்டர் மன்மோகன்சிங் இதையெல்லாம் செய்யவில்லை என்றால் வேறு யார்தான் செய்வார்கள்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 19.08.2010

Saturday, August 14, 2010

படம் பார்த்து கதை சொல்லுங்கள்

அந்தப் பெண்ணின் பெயர் ஆயிஷா; வயது 18; ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்; கடந்த ஆகஸ்ட் 9, 2010 தேதியிட்ட ‘டைம்’ வார இதழின் அட்டைப்படமாக அவர் இருந்தார்; அந்தப் படம் அமெரிக்காவில் ஒரு சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. வார இதழ்களின் அட்டைகளில் அழகான இளம்பெண்கள் தானே பெரும்பாலும் இருப்பார்கள், இதில் சர்ச்சை என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஒருவேளை படம் மிகவும் ஆபாசமாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட வரலாம். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. அந்தப் பெண்ணின் மூக்கும் காதுகளும் சிதைக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் குரூரமாக இருக்கும் அந்தப் படத்தை அட்டையில் போட்டு, ‘நாங்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினால் என்ன நடக்கும்?” என்று ‘டைம்’ கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறது. அந்தப் படத்தைப் பார்க்கும்போது இப்படி எல்லாம் மனிதர்கள் செய்வார்களா என்று கோபம் வருகிறது!

அந்தக் கொடுமையை செய்தது யார்? தலிபான் தீவிரவாதிகள் கொடுத்த தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு அவளுடைய கணவனே அவளுடைய மூக்கை அறுத்தான் என்கிறார் ஆயிஷா; கணவனுடைய குடும்பத்தார் அவளை தினமும் கொடுமைப்படுத்தினார்கள்; துன்பம் தாங்க முடியாமல் ஆயிஷா வீட்டை விட்டு வெளியேறினார்; அந்த செயலை அந்தக் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே போன குற்றத்துக்காக தலிபான் தீவிரவாதிகள் அவளுடைய காதுகளையும் மூக்கையும் அறுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடக்கவில்லை என்றாலும் அதன் உறுப்பினர்கள் இன்னும் இதுபோல் ‘தண்டனைகள்’ வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அங்கு பெண்களும் குழந்தைகளும் சொல்லமுடியாத பல துயரங்களுக்கு ஆளாகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு உரிய மனித உரிமைகளை வாங்கிக் கொடுக்காமல் அமெரிக்கா எப்படி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடியும்? இந்தக் கேள்வியை உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடைய மனதில் அந்தப் படம் மூலமாகவும் கட்டுரை மூலமாகவும் ‘டைம்’ வார இதழ் பதியச் செய்கிறது!

அரசியல்வாதியின் உணர்ச்சிகரமான பேச்சை விட சில சமயங்களில் ஒரு புகைப்படம் நம்முடைய உணர்வைத் தட்டி எழுப்பும் சக்தி கொண்டதாக இருக்கிறது. சில புகைப்படங்கள் அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன; சில புகைப்படங்கள் நம்முடைய மனதில் ஏற்படுத்தும் தாக்கம் எத்தனை வருடங்கள் ஆனாலும் நம்மை விட்டுப் போவதில்லை. ஏறத்தாழ இருபது வருடங்கள் வியட்நாம் மீது அமெரிக்கா போர் நடத்தியது. அந்த நாட்களில் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க மக்கள் அரசை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினார்கள். அவர்களுடைய மனசாட்சியைப் பிடித்து உலுக்கி அவர்களை போராட்ட களத்துக்கு கொண்டு வந்து சேர்த்ததில், இரண்டு புகைப்படங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆடை எதுவும் இல்லாத நிலையில் ஒரு சிறுமி கதறிக் கொண்டே ஓடி வரும் ஒரு புகைப்படம். இன்னொன்று ஒரு வியட்நாமிய இளைஞனின் தலைக்கு நேராக துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு அமெரிக்க ஆதரவு வியட்நாமிய படைத் தளபதியின் புகைப்படம்.

”போருக்குப் பிறகு அந்த தளபதி அமெரிக்காவில் குடியேறினார்; அங்கு ஒரு ஹோட்டல் நடத்தினார்; அந்த ஹோட்டலுக்கு வந்த மக்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள்; அந்த ஹோட்டல் கழிப்பறை சுவரில், ‘நீ யார் என்று எங்களுக்குத் தெரியும், பொறுக்கி!’ என்று எழுதி அவரை எச்சரித்தார்கள்” என்பது அந்தக் கால செய்தி. எத்தனை வருடங்கள் உருண்டோடி இருந்தாலும் அந்த முகத்தை சிலரால் மறக்க முடியவில்லை என்று அதில் இருந்து தெரிகிறது. குத்புதீன் அன்சாரி என்ற பெயர் உங்களுக்கு மறந்திருக்கலாம். ஆனால், அவரைக் கொல்ல வந்த ஒரு கும்பலிடம் உயிர்ப்பிச்சை கேட்டு நின்ற அவருடைய டத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கண்களில் பயமும் கண்ணீருமாக இரண்டு கைகளையும் கும்பிட்டபடி அவர் மன்றாடும் அந்தப் படம் வெளிவராத எத்தனையோ துயரங்களுக்கான ஒரு மாதிரி! 2002 மார்ச் மாதம் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த படுகொலைகள் பற்றி நினைக்கும் போதெல்லாம் இந்த படம் ஒருவருடைய நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் துணை ராணுவத்தினர் பலி என்ற செய்தி வந்த போது வரிசையாக ராணுவ வீரர்களின் சடலங்கள் காட்டப்பட்டன. உயிரோடு இருக்கும் வீரர்கள் அந்த உயிரற்ற உடல்களை ’ இறுகிய முகங்களுடன் ஸ்ட்ரெச்சர்களில்’ எடுத்துச் சென்றார்கள். பலியான வீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களுடைய இழப்புக்காக கதறி அழும்போது, நமக்கு நெஞ்சில் ஏதோ அடைக்கிறது. அந்த வீரர்களைப் பறிகொடுத்துவிட்டு அவர்களுடைய குடும்பங்கள் அடுத்து அனுபவிக்கப் போகும் வாழ்க்கைத் துயரங்கள் நம்மைத் தாக்குகின்றன. அந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது ’அநீதியான போரை நியாயமான போர் மூலமாகவே ஒழிக்க முடியும்’ போன்ற வன்முறைக்கு ஆதரவான பிரசாரங்கள் தவிடுபொடியாகின்றன. மாவோயிஸ்டுகள் மேல் இயல்பாக நமக்குக் கோபம் வருகிறது.

ஊடகங்களில் வெளியாகும் காட்சிகளுக்கு அந்த வலிமை இருக்கிறது. ஒருவருடைய நம்பிக்கைகளை தலைகீழாக சில சமயங்களில் அவை புரட்டிப் போட்டுவிடுகின்றன. நாளெல்லாம் பிரம்மச்சரியத்தை போதிக்கும் ஒரு சாமியாரை ஒரு பெண்ணுடன் படுக்கையறையில் பார்க்கும்போது, அந்த சாமியாரின் பக்தர்கள் அவர் மீது நம்பிக்கை இழக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையை கொஞ்சமாவது முன்னேற்றுவார்கள் என்று எந்தக் கட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்தார்களோ, அந்த கட்சித் தொண்டர்களே மக்களை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதை படங்களில் பார்க்கும்போது மக்களுக்கு அந்தக் கட்சியின் மீது ருந்த நம்பிக்கை தகர்ந்து போகிறது. ராணுவமாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக போராடுவதாக சொல்லும் தீவிரவாதிகளாக இருந்தாலும் சரி, அவர்கள் செய்யும் செயல்களில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்று நாகரிக சமூகம் எதிர்பார்க்கிறது. யார் செய்தாலும் வக்கிரமும் காட்டுமிராண்டித்தனமும் மிகுந்த ஒரு செயலை அந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாது. சோரபுதீன் என்கவுண்டர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அந்த நம்பிக்கை உறுதியாகிறது. இன்னும் நீதி கிடைக்காமல் நிறைய வழக்குகள் இருக்கின்றன என்பது விவாதத்துக்குரிய வேறு விஷயம்!

அண்மைக்காலத்தில் இன்னொரு படம் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. பரவலாக எல்லா ஊடகங்களிலும் வெளியாகவில்லை என்றாலும் கூட சில பத்திரிகைகளில் அந்தப் படம் வந்திருந்தது. வேட்டைக்குப் போய் மானையோ புலியையோ கொன்று தலைகீழாக ஒரு கம்பில் கட்டி ராஜாக்களும் இளவரசர்களும் வெற்றிப் பெருமிதத்துடன் கொண்டு வருவார்கள் என்று கதை கேட்டிருக்கிறோம். அதைப் போலவே, துணை ராணுவப் படையால் கொல்லப்பட்ட ஒரு பெண் மாவோயிஸ்ட்டின் உடலை கம்பில் கட்டி இரண்டு படைவீரர்கள் தூக்கி வருகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் வரும் வீரர் தோளிலும் கம்பு இருப்பதைப் பார்த்தால் அவரும் ஒரு சடலத்தை தூக்கி வருகிறார் என்று தெரிகிறது. பிணங்களை எடுத்து வருவதற்கு வேறு வசதிகள் இல்லாத நிலையில் இப்படி எடுத்து வந்தார்களா அல்லது கிராமத்து மக்களிடத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காக இப்படி கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை. எது காரணமாக இருந்தாலும் இறந்தவர்களை தெய்வங்களாக மதிக்கும் பண்பாடு கொண்டிருப்பதாக சொல்லப்படும் நம் நாட்டில் இப்படி ஒரு புகைப்படத்தை பார்ப்பது மனதை நெருடுகிறது!

எந்தப் புகைப்படத்தை அட்டையில் வைப்பது, எந்த போட்டோவை இதழின் எந்தப் பக்கத்திலும் வெளியிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்த பத்திரிகைக்கே இருக்கிறது. அதன் அடிப்படையில் ‘டைம்’ வார இதழ் ஆயிஷாவின் படத்தை அட்டையில் வைக்கிறது; அமெரிக்க ஆங்கில கூட்டுப் படையின் ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்துகிறது. எந்தச் சூழ்நிலையில் இது நடக்கிறது? ’போரை நிறுத்துவேன் என்று சொல்வதோடு நின்றுவிட மாட்டேன், அடிக்கடி போர் தொடுக்கும் நம் மனநிலையை மாற்றுவேன்’ என்று ஆரம்பத்தில் முழங்கிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அதன் பிறகு மாறி விட்டார். கூடுதலாக முப்பதாயிரம் வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார். போர் தொடங்கி ஏறத்தாழ ஒன்பது வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பவில்லை. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு விரைவில் அமெரிக்க படையை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் வலுவடைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான், அமெரிக்கப் படை ஆப்கானிஸ்தானில் நீடிக்க வேண்டும் என்ற உணர்வை அமெரிக்க மக்களிடத்தில் ’டைம்’ விதைக்கிறது.

இந்த அரசியலை நன்கு புரிந்து கொண்ட சில அமெரிக்கர்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். ‘ஆயிஷாவுக்கு 18 வயது. அதில் ஒன்பது வருடங்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் தான் அவள் வளர்ந்திருக்கிறாள். அவள் மூக்கு அறுக்கப்பட்டதும் தலிபான் ஆட்சியில் இல்லை. அமெரிக்க ராணுவம் அங்கே இருக்கும்போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அமெரிக்கப் படையால் தான் அதைத் தடுக்க முடியவில்லையே’ என்று சொல்லி, படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். அங்கு நடந்து கொண்டிருக்கும் போரில் பலியான அமெரிக்க வீரர்களின் பிணங்களை அட்டைப்படமாக ‘டைம்’ போட்டிருக்கிறதா அல்லது அமெரிக்காவின் தலைமையில் அங்கு இருக்கும் கூட்டுப் படையினரின் குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான அல்லது முகம் கருகிய ஆப்கன் பெண்கள் அல்லது குழந்தைகளின் படங்களை ‘டைம்’ போடுமா என்று கேள்விகளை அடுக்குகிறார்கள். ”பெண்களுடைய உரிமைகளைக் காப்பதற்காக நாம் அங்கு இருக்க வேண்டியது அவசியம் என்ற வாதத்தை இப்போது நீங்கள் சொல்கிறீர்கள். தலிபானுக்கு எதிராக இதே கருத்தைத்தான் அன்று சோவியத் யூனியனும் சொன்னது. ஆப்கானிஸ்தானில் தன்னுடைய ராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக சோவியத் யூனியன் இப்படி சொல்கிறது என்று நாம் அப்போது சொன்னோம். இன்று நாமும் அதே வார்த்தைகளைப் பேசுகிறோமே, து நியாயமா?” என்று கேட்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டால் என்ன நடக்கும்? இந்தக் கேள்விக்கு அமெரிக்கர் ஒருவர் பதில் சொல்கிறார். ”ஹை-டெக் வகுப்பறைகளில் நம்முடைய மாணவர்கள் கல்வி கற்பார்கள்; உயர்ந்த தரமான அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்; களத்தில் இருந்து படைவீரர்கள் திரும்பி வந்து குடும்பங்களுடன் இணைவார்கள்; அதனால் பெண்களும் குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்; எல்லா அலுவலகங்களிலும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் இருக்கும்,என்று போரில் விரயமாகும் பணத்தால் என்னென்ன செய்ய முடியும் என்று அடுக்குகிறார். அது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

நதி போல ஓடிக் கொண்டிரு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கொடுக்கப்பட்டு வந்த மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை அந்தக் கட்சி பெற்றிருந்ததால் அதற்குக் கிடைத்த அங்கீகாரம் ரத்தாகிறது. ஆனால் அடுத்த ஆறு வருடங்களுக்கு அதாவது 2016 ஜூன் 29 வரை தமிழகத்தில் அந்தக் கட்சி பம்பரம் சின்னத்திலேயே போட்டியிடலாம். உடனடியாக சின்னம் மாறாத நிலையில், இந்த அங்கீகாரம் ரத்தாவதால் அந்தக் கட்சிக்கு ற்படும் இழப்பு என்ன? அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வானொலி, அரசுத் தொலைக்காட்சி ஆகியவற்றில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு மதிமுகவுக்கு வாய்ப்பு கிடைக்காது!

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சிக்கு மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் எப்படி வழங்கப்படுகிறது? தேர்தல் ஆணையம் அதற்கு இரண்டு நிபந்தனைகளை முன்வைக்கிறது. இரண்டில் ஒன்றை நிறைவேற்றினால் கூட அந்தக் கட்சிக்கு மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைக்கும். முதல் நிபந்தனை ஒரு கட்சி வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பானது. மக்களவைத் தேர்தலை எடுத்துக் கொண்டால், ஒரு மாநிலத்தில் இருக்கும் மக்களவைத் தொகுதிகளில் 25க்கு ஒன்று என்ற அளவில் ஒரு கட்சியின் உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும். அதாவது தமிழகத்தில் 39 தொகுதிகள் என்றால், ஒரு கட்சி சார்பாக இரண்டு எம்.பி.க்கள் ஜெயிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டால், மொத்த தொகுதிகளில் 30க்கு ஒரு தொகுதி ஜெயிக்க வேண்டும். தமிழகத்தில் 234 தொகுதிகள் என்றால் 7.8 தொகுதிகள் அதாவது அந்தக் கட்சி எட்டு தொகுதிகளில் வெல்ல வேண்டும். இரண்டாவது நிபந்தனை, ஒரு கட்சி பெறும் மொத்த வாக்குகள் சம்பந்தப்பட்டது. ஒரு தேர்தலில் அந்த மாநிலத்தில் பதிவான மொத்த செல்லத்தக்க வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகளை அந்தக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் சேர்ந்து பெற்றிருக்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை ஒரு கட்சி பெற்றிருந்தால் அது மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறும்.

கடந்த மக்களவைத் தேர்தலிலும் சரி, மாநில சட்டமன்றத் தேர்தலிலும் சரி, இந்த விதிகளில் சொல்லப்பட்ட எண்ணிக்கையை மதிமுக எட்டவில்லை. 2009 மக்களவைத் தேர்தலில் மதிமுக நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் வென்றது. தேர்தல் ஆணையத்தின் விதிப்படி மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் பெற இரண்டு தொகுதிகளையாவது கைப்பற்றி இருக்க வேண்டும். நான்கு தொகுதிகளிலும் சேர்த்து அந்தக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளும் மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறு சதவீதத்தை எட்டவில்லை. 2006 சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக எடுத்துக் கொண்டாலும் 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு இடங்களில் மட்டுமே மதிமுக வென்றது. கட்சிக்குக் கிடைத்த வாக்குகளும் பதிவான மொத்த செல்லத்தக்க வாக்குகளில் 5.98 சதவீதமாகவே இருந்தது. எனவே தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை மதிமுக இழந்திருக்கிறது.

மதிமுகவின் பொதுச் செயலர் வைகோ இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். ” குடியரசுத் தலைவர் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணும் போது, 0.5 அல்லது அரை சதவிகிதத்திற்குமேல் கிடைக்கும் ஓட்டுகளை ஒன்றாக கணக்கிடலாம் என்று இந்திய அரசியல் சட்ட விதி கூறுகிறது. அரசியல் சட்டமே அங்கீகரித்துள்ள விதியின்படி, ம.தி.மு.கழகத்திற்கு .98 சதவிகிதம் ஓட்டுக் கணக்கை 1 என ஏற்றுக்கொள்ள வேண்டும் என நமது கருத்தை முன்வைத்தோம். தேர்தல் ஆணையம் அதனை ஏற்கவில்லை. கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் 52 வாக்குகள் வித்தியாசத்திலும் தொட்டியம் தொகுதியில் 53 வாக்குகள் வித்தியாசத்திலும் துறைமுகம் பகுதியில் 412 வாக்குகள் வித்தியாசத்திலும், சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் சில தொகுதிகளிலும் நாம் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது” என்று அந்த அறிக்கையில் விளக்கம் கொடுத்திருந்தார்.

வைகோ முன்வைக்கும் இரண்டு சமாதானங்களும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்படாததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. “பதிவான மொத்த செல்லத்தக்க வாக்குகளில் ஆறு சதவீதத்துக்குக் குறையாமல் ஒரு கட்சி வாக்குகளைப் பெற வேண்டும்’ என்று விதி தெளிவாக சொல்கிறது. அப்படி இருக்கும்போது .02 சதவீதம் தானே குறைகிறது என்று கேட்பதில் அர்த்தம் இல்லை. அதைப் போலவே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சில தொகுதிகளை இழந்தோம் என்ற வாதமும் நிராகரிக்கப்பட்டதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ‘வெற்றிக் கோட்டை முதலில் யார் தொடுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்’ என்ற அடிப்படையில் நம்முடைய தேர்தல் நடக்கிறது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோல்வி தோல்விதான் என்று சொல்லும் ஒரு தேர்தல் முறையில் இந்த சமாதானங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படாது! சென்ற தேர்தலை விட இந்தத் தேர்தலில் கட்சிக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் அதிகமாகி இருக்கிறது என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரை விட மீதி வேட்பாளர்கள் அனைவரும் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என்னும்போது அந்தத் தொகுதி மக்கள் அவரை நிராகரித்திருக்கிறார்கள் என்று தான் அர்த்தம் என்று சொல்லிக் கொள்ளலாம். இதனால் எல்லாம் ஒருவருடைய மனம் அமைதியடையலாம் என்பதைத் தவிர வேறு பலன் ஒன்றும் இல்லை!

மதிமுக 1994-ம் வருடம் உருவானது; 1996-ல் முதன்முதலில் தேர்தலை சந்தித்தது. மார்க்சிஸ்ட் கட்சியுடனும் ஜனதா தளத்துடனும் சேர்ந்து போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் மதிமுக தோற்றது. விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலும் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்ட வைகோ இரண்டிலுமே தோற்றுப் போனார். திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி கிளப்பிய சூறாவளியில் வைகோவின் கையில் இருந்த குடை’ பறந்து போனது. 1998-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து நின்ற போது சிவகாசி, பழனி, திண்டிவனம் ஆகிய மூன்று தொகுகளில் மதிமுக வெற்றி பெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையம் மதிமுகவை மாநிலக் கட்சியாக அங்கீகரித்தது. அதன்பின் 2001 சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடைக்கவில்லை என்றாலும், 1999, 2004 மக்களவைத் தேர்தல்களில் நான்கு உறுப்பினர்களை அந்தக் கட்சி மக்களவைக்கு அனுப்பி வைத்தது. அதற்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் அந்தக் கட்சிக்குக் கிடைத்த முடிவுகளால் இப்போது அந்தக் கட்சி மாநிலக்கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து நிற்கிறது.

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை மீண்டும் பெறுவோம் என்று வைகோ அவருடைய கட்சித் தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். கூட்டணியின் உதவியுடன் அடுத்த 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் எட்டு தொகுதிகளில் மதிமுக ஜெயிக்கலாம்; அல்லது 2014 மக்களவைத் தேர்தலில் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் அல்லது அதற்கும் மேலான தொகுதிகளில் மதிமுக வெல்லக் கூடும். அப்படி ஜெயிக்கும் நிலையில், அந்தக் கட்சியை மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையம் மறுபடியும் அங்கீகரிக்கும். 2016-க்குள் மறுபடியும் தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைத்தால், கட்சிக்கு கிடைத்த சின்னம் மாறாது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், பம்பரம் சின்னத்தைக் காப்பாற்றித் தக்கவைத்துக் கொள்வதற்கு அந்தக் கட்சிக்கு இன்னும் மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என்பது தேர்தல் நடைமுறை தொடர்பானது. அதை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், கட்சியில் வைகோவின் தலைமையை தொண்டர்கள் அங்கீகரிக்கிறார்களா என்பதும் அந்தக் கட்சியை பொதுமக்கள் அங்கீகரிக்கிறார்களா என்பதும் முக்கியமாகிறது. இப்போது கட்சியில் இருக்கும் தொண்டர்கள் வைகோவின் தலைமையை ஏற்றவர்களாகவே இருக்கிறார்கள். வைகோவின் தலைமையை ஏற்க இயலாதவர்கள் கட்சியை விட்டு போய்விடுகிறார்கள். எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் போன்ற ஊடக தொடர்பு கொண்டவர்கள் சிலரும் கட்சியை விட்டு போயிருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேசமயம் புதிய இளைஞர்களை அந்தக் கட்சிக் கூட்டங்களில் பார்க்க முடிகிறது என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை!

அடுத்ததாக, கட்சியை பொதுமக்கள் அங்கீகரிக்கிறார்களா என்ற கேள்வி வருகிறது. தேர்தல் முடிவுகளையே மக்கள் அங்கீகாரமாக இன்றைய சூழலில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமும் மக்கள் அங்கீகாரமும் ஏறத்தாழ ஒன்றாகிறது. இந்நிலையில் கட்சியின் ஆதரவுத் தளம் என்ன என்று பார்ப்பது அவசியமாகிறது. வேறு சில கட்சிகளைப் போல, மதிமுகவுக்கு பலமான சாதிய பின்னணி இல்லை. கொள்கை அடிப்படையிலேயே அந்தக் கட்சியின் ஆதரவுத் தளம் இருக்கிறது. தமிழீழ ஆதரவாளர்களில் ஒரு பிரிவினரே மதிமுகவின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அந்த ஆதரவை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அடுத்தடுத்த தளங்களில் மக்களுடைய ஆதரவை விரிவுபடுத்தினால் மட்டுமே அந்தக் கட்சியால் தேர்தல் வெற்றிகளைப் பெற முடியும். அரசியல் உணர்வை மக்களிடம் அரசியல் கட்சிகள் வளர்க்காத நிலையில், கொள்கை சார்ந்த அரசியல் கட்சிகள் ஒரு தேக்க நிலையை அடையக் கூடும். ’எதிரி விரும்புவதை செய்யாதிரு’ என்ற முழக்கத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்தான். ஆனால் அந்த ஒரே நிலைப்பாடு மட்டுமே மக்களிடம் கட்சியை வளர்ப்பதற்கு உதவி செய்யுமா என்பதையும் மதிமுக சிந்திக்க வேண்டும்.

அந்த வகுப்பில் இருந்த மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பற்றி அந்த ஆசிரியர் வகுப்பு எடுத்துக் கோண்டிருந்தார். அவர் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து மாணவர்களிடம் காட்டினார். ’இந்தப் பணம் உங்களுக்குக் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்வீர்களா?’ என்று கேட்டார். எல்லா மாணவர்களும் ஒரே குரலில் மாட்டோம் என்றார்கள். அவருடைய கை விரல்கள் அந்த நோட்டை கசக்கின. கசங்கிய ஆயிரம் ரூபாய் தாளை மீண்டும் அவர்களிடம் காட்டி,”உங்களுக்கு இந்த நோட்டு வேணுமா?” என்று கேட்டார். எல்லோரும் ஆமாம்; எங்களுக்கு கொடுங்கள் என்றார்கள். புத்தம் புதுசா இருந்த ரூபாய் நோட்டு கசங்கி இருக்கிறதே, அதுவா உங்களுக்கு வேண்டும் என்று கேட்டார். “ரூபாய் நோட்டு கசங்கி இருப்பதாலோ அழுக்காய் இருப்பதாலோ அதன் மதிப்பு மாறிவிடுவதில்லை” என்று மாணவர்கள் பதில் சொன்னார்கள். அதன் பின் ஆசிரியர் சொன்னார்,” நீங்களும் அந்த ரூபாய் நோட்டைப் போன்றவர்களே. உங்களுக்கு என்று தனி மதிப்பு இருக்கிறது. உங்களை யாரும் அங்கீகரிக்கவில்லை என்றாலோ, மரியாதை கொடுக்கவில்லை என்றாலோ உங்கள் மதிப்பு குறைந்துவிடுவதில்லை. தன்னம்பிக்கையோடு நீங்க செயல்படறவரைக்கும் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாதுஎன்று சொன்னார்.

அங்கீகாரங்களைப் பற்றி கவலைப்படாமல், கொள்கையில் ஒரு கட்சி கொண்டிருக்கும் உறுதியே அதன் மதிப்பைக் குறையாமல் பாதுகாக்கும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Monday, August 09, 2010

சோம்நாத் சாட்டர்ஜியால் மார்க்சிஸ்ட் கட்சியில் சலசலப்பு

”வாழ்க்கைக் குறிப்புகளை நான் விரும்புவதில்லை; ஏனென்றால், தம்முடைய வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மறந்தவர்களோ அல்லது தங்களுடைய வாழ்க்கையில் நினைவில் வைத்துக் கொள்ளும்படி எதுவுமே செய்யாதவர்களோதான் அவற்றை எழுதுகிறார்கள்” என்கிறார் ஆஸ்கார் வைல்டு என்னும் எழுத்தாளர். இந்த இரு வகைகளிலும் முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை சேர்க்க முடியாது. ஆனால் அவர் ஒரு சுயசரிதை எழுதி இருக்கிறார்; “நம்பிக்கை காக்கிறேன்: ஒரு நாடாளுமன்றவாதியின் வாழ்க்கைக் குறிப்புகள்” என்பது அந்த புத்தகத்தின் பெயர். அந்த நூலில் அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை அவர் மனம் திறந்து சொல்லி இருப்பார் என்று நம்பலாம். அந்த நூலை வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் வெளியிடுகிறார். புத்தகம் வெளியாவதற்கு முன்னதாகவே, அது மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிடிவாதத்தோடும் மூர்க்கத்தனத்தோடும் பல சர்ச்சைகள் நம்முடைய சமூகத்தில் உருவாக்கப்படுகின்றன. அவற்றில் பல சிக்கல்களை ஆராய்ந்து பார்த்தால், நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் எந்தத் தரப்பிலும் இருப்பதில்லை. பெரும்பாலும் ஒவ்வொரு தரப்பும் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அந்த மோதல்கள் நடக்கின்றன. அதற்காக சர்ச்சைகளில் எந்த நன்மையும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. யார் சொல்வதையாவது எல்லோரும் கேட்டு கீழ்ப்படிந்து நடக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டிய அவசியம் இல்லை. முக்கியமான பிரச்னைகள் குறித்து அடிக்கடி ஒரு சமூகத்தில் சர்ச்சைகள் உருவாக வேண்டும். அப்படி சர்ச்சைகள் எழுந்து மக்களுக்கிடையில் விவாதங்கள் நடக்க வேண்டும். அப்படி நிகழவில்லை என்றால் அந்த சமூகம் சர்வாதிகாரத்தை நோக்கிப் போகிறது என்று புரிந்து கொள்ளலாம்!

ஒரு அரசியல் தலைவர் சுயசரிதை எழுதுகிறார்; அந்தப் புத்தகம் வெளியாகப் போகிறது என்றால் என்ன நடக்கும்? அதில் இருந்து சில பகுதிகள் ஊடகங்களில் கசிய விடப்படும். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த சில குறிப்புகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்; அல்லது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பார்கள். அவ்வளவுதான்! ஊடகங்கள் எல்லா தரப்பையும் விடாமல் துரத்தும். அடுத்தடுத்து விரிவான பேட்டிகளும் அலசல்களும் ஊடகங்களில் இடம் பெறும். அதற்குப் பிறகு புத்தக வெளியீட்டு விழா நடக்கும். அந்தப் புத்தகம் வெளியானவுடன் வாங்கி படிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு நாம் ஏற்கனவே வந்துவிட்டிருப்போம். இதை நூலுக்கான விளம்பரம் என்றோ விற்பனைத் தந்திரம் என்றோ நாம் எடுத்துக் கொள்கிறோம்!

சோம்நாத் சாட்டர்ஜி எழுதிய புத்தகத்தில் இருந்தும் சில பகுதிகள் செய்தியாக வெளியில் வந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ’அகந்தை’ மிகுந்தவர் என்று சோம்நாத் சாட்டர்ஜி குற்றம் சாட்டியிருப்பதாக அந்த செய்திகளில் இருந்து அறிய முடிகிறது. புத்தகம் வந்தபிறகு படித்துவிட்டு பிறகு அதைப் பற்றி விவாதிக்கலாம் என்று இருந்தவர்களைக் கூட அடுத்தடுத்த நிகழ்வுகள் முன்கூட்டியே பேச வைத்துவிடுகிறது. பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சோம்நாத் அதில் புகழ்ந்திருக்கிறார் என்று ஒரு செய்தி.. கடந்த 2009 ஆகஸ்ட் 3-ம் நாள் மறைந்த மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் சுபாஷ் சக்கரவர்த்தியின் முதலாண்டு நினைவு விழாவுக்கு சோம்நாத் சாட்டர்ஜி அழைக்கப்பட்டிருக்கிறார். சுபாஷ் குறித்த ஆவணப்படத்தை சோம்நாத் வெளியிடப் போகிறார். அதாவது, கட்சியின் மேற்கு வங்க கிளையில் சிலர் நேரடியாக மத்திய தலைமையுடன் மோதுவதற்குத் தயாராகி விட்டார்கள் என்று ஊடகங்களில் செய்தி வருகிறது. சோம்நாத் சாட்டர்ஜியும் ஊடகங்களில் விரிவான பேட்டிகளைக் கொடுக்கிறார்!

கடந்த 2008-ம் வருடம், சோம்நாத் சாட்டர்ஜிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட மோதலும் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கும். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மோதலில், ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை மார்க்சிஸ்டுகள் விலக்கிக் கொண்டார்கள். மன்மோகன்சிங் ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்தபோது உருவான ‘டீல்’ காரணமாக அந்தக் கட்சியின் எம்.பி.யான சோம்நாத் சாட்டர்ஜி மக்களவைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இப்போது ஆதரவை விலக்கிக் கொள்வதால், சோம்நாத் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி முடிவு செய்தது. ஆனால் அவர் சபாநாயகர் பதவியில் இருந்து விலகவில்லை. எனவே கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

’ஜோதிபாசுவிடம் ஆலோசனை கேட்ட பிறகே சபாநாயகர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்தேன்’ என்று அவருடைய புத்தகத்தில் அவர் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. அப்படி அவர் சொல்லி இருந்தால், அதற்கு என்ன அர்த்தம்? கட்சியின் முடிவுக்கு எதிரான கருத்தை ஜோதிபாசுவும் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுமாறு சோம்நாத் சாட்டர்ஜிக்கு ஆலோசனையும் சொன்னார் என்று பொருளாகிறது. அதனால் ‘இறந்த தலைவரை சர்ச்சைக்குள்ளாக்காதீர்கள்’ என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் சொல்கிறார்கள். அதற்கு ’என்னுடைய ஒரே தலைவர் ஜோதிபாசு தான் ; அவர் சொல்லாத எதையாவது சொல்லியதாக புத்தகத்தில் எழுதும் அளவு நான் என்ன மோசமானவனா?’ என்று சோம்நாத் சாட்டர்ஜி கண்கலங்குகிறார்.

ஒரு விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எப்படி முடிவெடுக்கும் என்று சோம்நாத் சாட்டர்ஜிக்கு நன்றாக தெரிந்திருக்கும். அப்படி இருக்கும்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர்தான், கட்சியில் இருந்து தன்னை வெளியேற்றினார்கள் என்று அவர் எப்படி எழுதினார்? அந்தக் கட்சி அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. ‘நான் அங்கு நேரில் இல்லை. பொலிட்பீரோ உறுப்பினர்கள் ஐந்து பேர்தான் என்னை வெளியேற்றினார்கள் என்று என்னிடம் சொல்லப்பட்டது’ என்று சாட்டர்ஜி இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். சோம்நாத் யாரைத் தலைவர் என்று சொல்கிறாரோ, அந்தத் தலைவர் ஜோதிபாசு தொடர்பான ஒரு பிரச்னையில் கட்சி என்ன முடிவெடுத்தது என்பதை சோம்நாத் சாட்டர்ஜி மறந்திருக்கமாட்டார்.

1996 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ’தொங்கு மக்களவை’ அமைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ் ஆதரவுடன் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. பிரதமராக ஜோதிபாசுவின் பெயரை ஏகமனதாக பலர் முன்மொழிந்தார்கள். ‘இடதுசாரிகளுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சியில் பங்கேற்பதில்லை’ என்று கட்சியின் முடிவு ஏற்கனவே அமலில் இருந்தது. அதனால் கட்சியிடம் கேட்டுச் சொல்கிறோம் என்று மற்ற கட்சித் தலைவர்களிடம் அப்போது பொதுச் செயலாளராக இருந்த ஹர்கிஷன்சிங் சுர்ஜித் சொன்னார். ”ஐக்கிய முன்னணி ஜோதிபாசுவை பிரதமராக்க விரும்புகிறது; இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று மார்க்சிஸ்ட் கட்சியில் விவாதம் நடந்தது. அந்தக் கட்சியின் முடிவு என்ன தெரியுமா? ‘ஆட்சியில் பங்கேற்பதில்லை; வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம்’ என்பதே!

அதாவது கட்சியில் செல்வாக்கு மிகுந்த முதலமைச்சர் ஜோதிபாசுவும், கட்சியின் சர்வ அதிகாரம் மிகுந்த பதவியாக இப்போது சொல்கிறார்களே, அந்தப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும் ஆதரித்த ஒரு கோரிக்கையை அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும் மத்திய குழுவும் நிராகரித்தது. சோனியா காந்தி கொண்டு வரும் தீர்மானம் காங்கிரஸில் தோற்குமா? ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்ற தீர்மானத்தை அதிமுக செயற்குழு தோற்கடிக்குமா? ஆட்சியில் பங்கேற்பதில்லை என்று அன்றைக்கு மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த முடிவு சரியா தவறா என்பதில் உங்களுக்கு வேறு கருத்து இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு ஜனநாயகத்தை தேர்தலில் போட்டியிடும் வேறு எந்தக் கட்சியிலாவது பார்க்க முடியுமா? அந்த முடிவை பிற்காலத்தில் ஜோதிபாசு ‘வரலாற்றுப் பிழை’ என்று விமர்சனம் செய்ததும் அதற்காக அவர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் கட்சி ‘பெருந்தன்மையுடன்’ நடந்து கொண்டதும் வேறு கதை!

’ஜோதிபாசு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். சோம்நாத் சாட்டர்ஜியும் தேர்தலில் நின்று வென்றவர். மக்கள் அவர்களைத் தங்களுடைய பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் தேர்தலில் ஒரு தடவை கூட நின்று ஜெயிக்காதவர்கள் கட்சியில் அதிகாரத்துடன் இருக்கிறார்கள். மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறார்கள்’ என்று சிலர் பேசுகிறார்கள். ஆங்கில நாளிதழ்களில் தலையங்கம் எழுதுகிறவர்களும் ஆங்கில தொலைக்காட்சிகளில் பேசுகிறவர்களும் கிண்டலாக இதைக் குறிப்பிடுகிறார்கள். இவர்களில் பலருடைய இலக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத். சிலருடைய குறி பாரதிய ஜனதாவின் தலைவர் நிதின் கத்காரி. இந்த நிபுணர்கள் இந்திய ஜனநாயகத்தை தனிமனிதர்கள் வழியாகப் பார்க்கிறார்கள். கட்சிகளை விலக்கி விட்டு நாடாளுமன்ற ஜனநாயகம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே இருக்கிறார்கள் என்பதையும் நம்முடைய ஜனநாயகம் அரசியல் கட்சிகளின் அடிப்படையில் தான் செயல்படுகிறது என்பதையும் இவர்கள் பார்க்கத் தவறுகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. அதுதான் முக்கியம். பிரகாஷ் காரத் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை. பாரதிய ஜனதாவுக்கு எம்.பி.க்கள் இருந்தால் போதும். நிதின் கத்காரி எம்.பி. ஆக வேண்டியதில்லை. 1991முதல் 1996 வரை முதலமைச்சர் கருணாநிதி சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லை. அந்த ஐந்து வருடமும் எம்.எல்.ஏ.வாக இருந்த பரிதி இளம்வழுதியின் வழிகாட்டுதலில் திமுக செயல்பட வேண்டும் என்று அவர்கள் சொல்வார்கள் போலிருக்கிறது. 1996 தேர்தலில் ஜெயலலிதா தோற்றுப் போனார்; அப்போது நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களிடம் அதிமுகவின் அதிகாரத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்கிறார்களா இவர்கள்? டாக்டர் ராமதாஸ் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவே இல்லை; பாமகவின் சட்டமன்ற உறுப்பினர்களை அவர் வழிநடத்தக் கூடாதா? 2004 தேர்தலில் வைகோ போட்டியிடாத போது, சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் பேச்சைக் கேட்டா மதிமுக தொண்டர்கள் செயல்பட்டார்கள்?

ஒரு கட்சியில் விவசாயிகள் அணி, இளைஞர் அணி என்று பல அணிகள் இருப்பதைப் போல, நாடாளுமன்ற அணியும் கட்சியின் ஒரு பிரிவு. அவ்வளவுதான்! நாடாளுமன்ற கட்சியை அந்தக் கட்சியை விட மேலானதாகவோ, அல்லது அதையே கட்சியாகவோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை!

நன்றி: ரிப்போர்ட்டர்