Thursday, January 04, 2007

தியாகியாக்கப்பட்ட ‘சர்வாதிகாரி!’

‘‘அவர்கள் என்னை நரகத்தின் தீயில் போட்டுப் பொசுக்கினாலும் நான் அழமாட்டேன். இராக் மக்களுக்குக்காக அதை நான் தாங்கிக் கொள்வேன்.’’
வழக்கு விசாரணையின்போது கூறியபடியே சதாம் உசேன் தனது மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்.

‘‘இந்த வழக்கு நியாயமாக விசாரிக்கப்படவில்லை என்று சந்தேகப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த சந்தேகத்தை முழுவதுமாகப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே இந்த வழக்கில் சதாம் உசேனுக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் நிறுத்தி வையுங்கள்’’ என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர், இராக் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இன்றைய உலகச் சூழலில் ஐ.நா-&வின் வேண்டுகோளை யார் மதிக்கிறார்கள்?

அதேசமயம், ‘‘ஒரு நியாயமான விசாரணைக்குப் பிறகு, சதாம் உசேன் இன்று தூக்கில் இடப் பட்டிருக்கிறார். அவர் இராக்கிய மக்களுக்கு அளிக்க மறுத்த நீதி அவருக்கு வழங்கப்பட்டி ருக்கிறது’’ என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்திருக்கிறார்.

உண்மையில் சதாம் மீதான விசாரணை நியாயமான முறையில் நடந்ததா? அது கேலிக்கூத்தாக நடந்தது என்றும் நியாயமாக நடைபெறவில்லை என்றும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை குற்றம் சாட்டியிருக்கிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய மனித உரிமை அமைப்பான ‘மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு’ இந்த விசாரணையில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறியது. இந்த விசாரணையின் நீதிபதி மாற்றப்பட்டிருக்கிறார். சதாமுக்கு ஆதரவாக வாதாடுவதற்கு முன்வந்த மூன்று வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஹிட்லரின் நாஜிப் படைத் தலைவர்களின் போர்க் குற்றங்களை விசாரித்த நூரெம்பர்க் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய தரப்பு நியாயத்தைச் சொல்வதற்குப் போதிய வாய்ப்புகளை வழங்கியது. ஆனால், சதாம் உசேன் வழக்கில் அதுகூட நடக்கவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தால், வழக்கின் இறுதியில் சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட மாட்டாது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். எனவே இராக் நாட்டுக்குள்தான் விசாரணை என்று முடிவானபோதே தீர்ப்பு என்ன என்பதையும் அனைவரும் ஊகித்துவிட்டார்கள். அந்தத் தீர்ப்பையும்கூட அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், தனது அரசியலுக்கு சாதகமான நாளில் வெளியிடவும் அவ்வாறே தண்டனையை நிறைவேற்றவும் இராக் அரசு தயாராக இருக்கிறது என்னும்போது, அமெரிக்கா ஏன் சர்வதேச விசாரணையை ஆதரிக்கப் போகிறது?

மேலும் சர்வதேச விசாரணைகளில் குற்றம்சாட்டப் பட்ட தரப்புக்குப் பதிலளிக்க உரிய வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால், சதாமுக்கு அதுவும் கிட்டவில்லை. அவருக்கு நவம்பர் 5ஆம் தேதி தூக்குத் தண்டனை என்ற தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதற்கான நீதிமன்ற ஆவணங்கள், சதாமின் வழக்கறிஞர்களின் கைகளுக்கு நவம்பர் 22ஆம் தேதி கிடைக்கின்றன. அந்த 300 பக்கத் தீர்ப்பைப் படித்து அவர்கள் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். 300 பக்க தீர்ப்பு மற்றும் அதில் உள்ள விஷயங்கள் குறித்து சதாம் வழக்கறிஞர்களின் எழுத்துப்பூர்வமான முறை யீடுகள் அனைத்தையும் இராக் தீர்ப்பாயம், இராக் சட்டங்களின்படி விசாரிக்க வேண்டும். ஆனால், அதற்கு அது எடுத்துக்கொண்ட கால அவகாசம் மூன்று வாரங்கள் மட்டுமே. நான்காவது வாரத்தில் சதாம் தூக்கில் போடப் பட்டுவிட்டார். இதுதான் ஜார்ஜ் புஷ் கூறும் ‘நியாயமான’ விசாரணை!

இந்தத் தூக்குத் தண்டனையில் எந்தவித நியாயமான விசாரணையோ நீதியோ இல்லை. மாறாக, இந்தத் தண்டனை முழுக்க முழுக்க அரசியல்ரீதியானது என்றே பெரும் பாலான மக்கள் கருதுகிறார்கள். ஆரம்பத்தில் ஈரானில் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒடுக்குவதற்கு அமெரிக்கா சதாமைப் பயன்படுத்தியது. அப்போது சதாம் இராக்கில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகவும் குர்து இன மக்களுக்கு எதிராகவும் கொடிய பல செயல்கள் செய்தார். அந்த காலகட்டங்களில் அவர் அமெரிக்காவுக்கு நம்பிக்கைக்குரிய நண்பனாக இருந்தார் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய செய்தி.

அடுத்தடுத்த விசாரணைகளின்போது அமெரிக்காவின் உதவியுடனும் அங்கீகாரத்துடனும் தான் செய்த குற்றங்கள் குறித்து ‘அப்ரூவர்’ போல சதாம் வாய்திறக்கக் கூடும். அதற்குமுன் அவர் பேசுவதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவசரமாகத் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்பட்டிருக்கலாம்.

இராக்கில் எக்குத்தப்பாக சிக்கிக் கொண்ட அமெரிக்காவுக்கு, தன்னுடைய ஆக்கிரமிப்புப் படையை விலக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்து விட்டது. இந்நிலையில், படைவிலக்கல் அமெரிக்காவின் தோல்வி யாகக் கருதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் சதாம் உசேன் கொல்லப்பட்டிருக்கலாம். இராக் மக்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த சர்வாதிகாரியை அழித்து, அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டி விட்டோம் என்று கூறி, இனி படை விலக்கலுக்கான திட்டங்களை அமெரிக்கா அறிவிக்கக்கூடும்.

இராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. சதாமின் மரணத்துக்கு ஷியா பிரிவு மக்கள் வருத்தப்படவில்லை. அவர் மரண தண்டனைக்குத் தகுதியானவர்தான் என்று அந்தப் பிரிவுத் தலைவர்கள் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். இந்த முரண்பாட்டை மேலும் அதிகரிக்கும் விதத்திலேயே சதாமுக்கு தூக்குத் தண்டனையை அவசரமாக வழங்கி யிருக்கிறார்கள். அதாவது சதாமின் மரணத்தை ஒரு தரப்பினர் கொண்டாடும்போது, மற்ற தரப்புக்கு அது கோபத்தை ஏற்படுத்தும். அதன் விளைவாக இருதரப்புக்குமான பகை முரண்பாடுகளும் அதிகரிக்கும் என்று கருதியே அமெரிக்கா சதாமை தூக்கிலிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

இவை ஒருபுறமிருக்க, இராக் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்வியும் கூடவே எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு இராக்கின் நிலைமைகள் மாறியிருக்க வேண்டும். ஆனால், சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு வேறுவிதமான சித்திரத்தை அளிக்கிறது. அமெரிக்க, ஆங்கிலக் கூட்டுப்படையின் ஆக்கிரமிப்பின்போது இருப்பதைவிட சதாம் உசேனின் சர்வாதிகார ஆட்சியில் மகிழ்ச்சியாக இருந்ததாக 90 சதவிகித இராக்கியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சதாம் காலத்தைவிட இப்போதுதான் தங்கள் உயிருக்குப் பதுகாப்பு இல்லை என்று 95 சதவிகித மக்கள் கருதுகிறார்கள்.

அதிகாரத்தில் சதாம் இல்லாத நிலையில், இத்தகைய மோசமான சூழலை இப்போது இராக்கில் உருவாக்கியது யார்? சதாமுடைய குற்றங்களுக்காக விசாரணை நடத்தப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், இராக்கின் இன்றைய அவலங்களுக்குக் காரணமானவர்கள் மீது யார் விசாரணை நடத்துவது? அதற்கான வலிமை இன்று உலகில் யாருக்கு இருக்கிறது?

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் 07.01.07

Labels: , , ,

7 Comments:

At 11:42 AM, Blogger கோவி.கண்ணன் said...

இரண்டுபக்க அயோக்கியத்தனங்களையும் அலசி ஆராயப்பட்ட ஜூவியின் நல்ல கட்டுரை. 150 பேரைக் கொன்றான், ஆக்கிரமித்தான் என்று சொல்லி 6,00000 பேரைக் கொன்று ஒரு தண்டனையை நிறைவேற்றி, ஆக்கிரமித்து அங்குள்ள எண்ணைவளங்களை திருடுவதும் படுபாதக செயல். இந்த சர்வாதிகார திமிர் உலக மக்களை பயம் கொள்ளச் செய்து விழிக்க வைத்துவிட்டது.

 
At 9:49 PM, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

When he was waging a war against Iran, Soviet Union was a major arms supplier to him.Countries like India did not even oppose his
genocidal policies and human rights abuses.USA was a big bully
that supported him once but many others were silent spectators and supporters.So why blame USA also.
He deserved death.The process was bad but the outcome was justified.
USA invaded with the support of other countries.That was not jutified.But his death was reassuring in the same that horrible ruler was gone,once and
for all.To that extent it is a relief.I oppose USA but the left simply hates USA.

 
At 10:32 PM, Blogger ஜென்ராம் said...

கோவி கண்ணன்:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ரவி ஸ்ரீனிவாஸ்:
அன்றைய சோவியத் யூனியனும் இந்த விளையாட்டின் அங்கம் என்பது உண்மைதான். ஆனாலும் அமெரிக்காவைக் குறிப்பிட்டே எல்லோரும் பேசுவதற்கு அதன் மேலாதிக்க முயற்சிகளின் தொடர்ச்சி என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

அன்று சோவியத் படைகள் வெளியேறியதும் அவசர அவசரமாக ஆப்கானிஸ்தானில் நஜிபுல்லாவையும் அவரது சகோதரரையும் விளக்குக் கம்பத்தில் தாலிபான்கள் தூக்கில் இட்டதற்குப் பின்னால் இருந்ததும் பிறகு தாலிபான்களை வதம் செய்யப் புறப்பட்டதும் இதே அமெரிக்காதான். இன்று இராக் அரசாங்கத்தை ஆட்டுவிப்பதும் அதே அமெரிக்காதான். இதைச் சொல்பவர்கள் அமெரிக்காவை வெறுப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.

ஒரு சம்பவத்திற்கு காரணமான தாதாவைத் தான் குறிப்பிட்டுப் பேசுவார்கள்.. எடுபிடிகளையும் தாதாவுக்கு பயந்து வாய்மூடி இருப்பவர்களையும் பிரதானமாக யாரும் குற்றம் சாட்டுவதில்லை.
உங்கள் அமெரிக்க எதிர்ப்பில் வெறுப்பு இல்லை, மற்றவர்கள் எதிர்ப்பில் வெறுப்பு இருப்பதாக நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க இயலவில்லை.

 
At 12:10 AM, Blogger சீனு said...

//இராக்கில் எக்குத்தப்பாக சிக்கிக் கொண்ட அமெரிக்காவுக்கு//
அதெல்லாம் இல்ல சார். கணக்காத்தான் இருக்காங்க.

சமீபத்தில் எடுத்த கருத்துக் கணிப்பில், ஈராக்கில் உள்ளவர்கள் சதாம் இருந்த பொழுதே தாங்கள் பாதுகாப்பாக இருந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக தான் தங்கள் உயிருக்கு பாதுகாப்பிலாமல் உணருவதாகவும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
At 12:10 AM, Blogger சீனு said...

//இராக்கில் எக்குத்தப்பாக சிக்கிக் கொண்ட அமெரிக்காவுக்கு//
அதெல்லாம் இல்ல சார். கணக்காத்தான் இருக்காங்க.

சமீபத்தில் எடுத்த கருத்துக் கணிப்பில், ஈராக்கில் உள்ளவர்கள் சதாம் இருந்த பொழுதே தாங்கள் பாதுகாப்பாக இருந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக தான் தங்கள் உயிருக்கு பாதுகாப்பிலாமல் உணருவதாகவும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
At 12:17 AM, Blogger ஜென்ராம் said...

சீனு :

நன்றி.. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தையும் பத்தியில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்..

 
At 12:54 AM, Blogger சீனு said...

ஆமாம் ராம்கி. நான் தான் ஒழுங்காக படிக்கவில்லை. அரைகுறை. பின்னூட்டம் இட்டதும் தான் பார்த்தேன்.

 

Post a Comment

<< Home