Tuesday, June 21, 2011

என்ன செய்யப் போகிறீர்கள்?

முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்றிருக்கிறார். மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற பிறகு அவர் இப்போதுதான் முதல் முறையாக டெல்லி போயிருக்கிறார். “பிரதமர் மன்மோகன்சிங்கையும் திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியாவையும் அவர் சந்தித்து தமிழக அரசுக்கு கூடுதல் நிதி கோருவார்” என்பது நமக்குக் கிடைக்கும் செய்தி. அதை மீறிய அரசியல் முக்கியத்துவம் இந்த பயணத்தில் இருக்கும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் ஜெயலலிதாவும் சோனியாவும் சந்திப்பது மட்டுமே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்க முடியும். தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா சோனியா காந்தியை டெல்லியில் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும் அதிகரிக்கத் தொடங்கின.

காங்கிரசுடன் கூட்டணி தொடரும் என்று திமுக உயர்நிலைக் குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தச் சூழலில், சோனியா காந்தி ஜெயலலிதாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார் என்றால் அது திமுகவுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுக்கும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அப்படி எதுவும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. சோனியா காந்தி டெல்லியில் இல்லை. அவர் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதனால் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு டெல்லிக்கு முதல்முறையாக வரும் ஜெயலலிதாவை சோனியா காந்தி சந்திப்பதற்கு வழியில்லை. அதனால் திமுக கவலைப்படத் தேவையில்லை.

டெல்லி வந்து சேர்ந்த பிறகு ஜெயலலிதாவை மூன்று அரசியல் பிரமுகர்கள் தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து இருக்கிறார்கள். டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் அவர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் ஜெயலலிதாவை சந்தித்ததில் எந்தவித அரசியல் முக்கியத்துவமும் இல்லை என்று ஒரு செய்தி சொல்கிறது. “உங்களை எப்போது வந்து நான் பார்க்கலாம்?” என்று ஜெயலலிதா கேட்டதாகவும் அதற்கு ஷீலா தீட்சித் “நானே வந்து உங்களை சந்திக்கிறேன்” என்று சொல்லி நேரில் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் இருந்து எந்த விதமான செய்தியையும் எடுத்துச் சென்றிருக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. சந்திப்பு முடிந்து வெளியில் வந்த ஷீலா தீட்சித் செய்தியாளர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஷீலா தீட்சித்தைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ரவிசங்கர் பிரசாத் ஜெயலலிதாவை சந்தித்தார். “இந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் நடந்த சந்திப்பு. தேர்தல் வெற்றிக்காக நான் ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னேன். அப்போது அவர் நன்றி சொல்லிவிட்டு, டெல்லி வரும்போது நேரில் சந்திக்கலாம் என்று கூறினார். இப்போது அவர் டெல்லி வந்திருக்கிறார். நாங்கள் சந்தித்துப் பேசினோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் சொல்லி இருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவும் தமிழ்நாடு இல்லத்தில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி இருக்கிறார். தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருந்த கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் இந்த சந்திப்பில் ஆச்சர்யம் எதுவும் இல்லை என்று சிலர் கருதக் கூடும். “நாங்கள் அரசியல் பேசவில்லை. தமிழ்நாட்டைப் பாதிக்கும் மின்வெட்டு, நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளையும் மாநிலத்தின் தேவைகளையும் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்” என்று ராஜா செய்தியாளர்களிடம் சொன்னார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் ஷீலா தீட்சித், பாரதிய ஜனதாவின் ரவி சங்கர் பிரசாத், இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா என்று மூன்று அணிகளின் தலைவர்களையும் ஜெயலலிதா சந்தித்துப் பேசி இருக்கிறார். அதாவது தேசிய அளவில் இருக்கக் கூடிய எந்த அணியிலும் இணைத்துக் கொள்ள ஜெயலலிதா விரும்பவில்லை. எல்லாத் தரப்பிலும் திமுகவுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துப் போய் திமுகவை தேசிய அரசியலில் தனிமைப்படுத்த அவர் முயல்கிறார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவசரமாக எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லை என்று அவர் கருதக் கூடும்!

பிரதமர் மன்மோகன்சிங்கையும் மான்டெக்சிங் அலுவாலியாவையும் ஜெயலலிதா சந்திப்பதும் மாநிலத்துக்கு உதவிகள் கோருவதும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள். கனிமொழி கைது உள்ளிட்ட பல பிரச்னைகளால் ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி உறவில் இந்த நிர்வாக நடவடிக்கை பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது. காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இருக்கும் உறவு ஏற்கனவே நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்வதை கருணாநிதி ஏற்றுக் கொள்ள மாட்டார். உயர்நிலைக் குழுக் கூட்டம் முடிந்தபின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மட்டுமல்ல, கடந்த 13-ம் தேதி திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையிலும் அவர் ஒரே புகாரை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அதாவது காங்கிரஸ் கட்சியுடனான திமுகவின் கூட்டணி உறவை உடைப்பதற்கு பத்திரிகைகள் முயற்சி செய்கின்றன என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு!

டெல்லியில் ஜெயலலிதா இருக்கும்போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ஏ.பி.பரதன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் வேறு சர்ச்சைகள் காரணமாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் என்று பரதன் கேட்டிருக்கிறார். பாரதிய ஜனதாவின் சார்பிலும் யாராவது இந்தக் கோரிக்கையை வலியுறுத்தக் கூடும். காங்கிரஸ் கட்சியுடனான திமுகவின் உறவில் அடுத்தடுத்து நெருக்கடிகளை உருவாக்கும் செயல்களைச் செய்யச் சொல்லி அரசியல் கட்சிகளிடம் இருந்து கோரிக்கைகள் எழும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

இந்த வேலையைச் செய்வதில் அந்தக் கட்சிகளுக்கு என்ன பலன்? அந்தக் கட்சிகளின் அரசியல் எதிரியாக இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க முடிகிறது. தேசிய அளவில் இருக்கக் கூடிய மூன்று தரப்புகளிலும் திமுக அரசின் முறைகேடுகளையும் எடுத்துச் சொல்வது என்று அதிமுக முடிவு செய்திருக்கலாம். ஏற்கனவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் திமுகவினர் ‘கறை படிந்த’ பிம்பத்தோடு இருப்பதை தேசிய அரசியல் அரங்கம் அறிந்து வைத்திருக்கிறது. இந்த நிலையில், இடதுசாரிகளும் பாஜகவும் திமுகவுக்கு எதிராக எது செய்தாலும் அது ஜெயலலிதாவின் அரசியலுக்கு சாதகமானதாகவே இருக்கும்.

ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடியும் டி.ராஜாவும் அடுத்தடுத்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த காட்சி ஏனோ இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.
ஜெயலலிதாவின் டெல்லி பயணம் வேறு என்ன சாதிக்கும்? தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேசிய கட்சிகளிடம் ஜெயலலிதா அரசியல் ஆதரவு கோருகிறாரா என்பது தெரியவில்லை. இலங்கைக்கு பொருளாதாரத் தடை, கச்சத்தீவு மீட்பு, தமிழக மீனவர்களின் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் தீர்மானம், கடிதம் போன்ற காகிதப் பணிகள் தவிர, ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள தமிழக மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்!

குமுதம் ரிப்போர்ட்டர் 23.06.11

0 Comments:

Post a Comment

<< Home