Friday, July 01, 2011

எதிராக இருப்பது யார்?

கடிதம்! நம்மில் பலருக்கு முற்றிலுமாக மறந்து போன ஒரு பொருள்! தாளும் பேனாவும் எடுத்து நாம் கடிதம் எழுதி வருடங்கள் ஆகி இருக்கும் என்றே தோன்றுகிறது. இருந்த போதிலும் இன்னும் நமக்கு கடிதத்தை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது யார்?

அரசியல்வாதிகள் தான்! உள்ளூர் பிரச்னையில் இருந்து உலகப் பிரச்னை வரை டெல்லிக்கு கடிதம் எழுதும் தலைவர்கள்! டெல்லியிலேயே அடுத்தடுத்து இருந்தாலும் நேரில் சந்திக்க முடியவில்லை என்றால் ஒரு கடிதம் எழுதிப் போடும் தலைவர்கள்! நேரில் சந்திப்பதை விட கடிதம் எழுதுவதில் ஏதேனும் கூடுதல் பயன் இருக்கிறதா? ஆம். கடிதத்தின் நகலை உடனடியாக ஊடகங்களில் வெளியிட முடியும்!

அப்படி ஊடகங்களில் வெளியான ஒரு கடிதத்துக்கு சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஊழல் எதிர்ப்பு ‘நாயகன்’ அன்னா ஹசாரேக்கு அவர் பதில் கடிதம் எழுதி இருக்கிறார். கடந்த ஏப்ரலில் ஒரு முறையும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி ஒரு முறையும் அன்னா ஹசாரே சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அவரைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் என்று சோனியாவிடம் கண்ணைக் கசக்கி இருந்தார். அதற்கு சோனியா காந்தி “உங்களை சிலர் விமர்சிப்பதை நான் ஆதரிக்கவில்லை; அவர்களை நான் ஊக்கப்படுத்தவும் இல்லை” என்று பதில் அனுப்பி இருந்தார்!

ஆனால், சோனியா காந்தி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் ஊக்கப்படுத்தாமல் இருக்கலாம்; அதேசமயம் கட்சியில் இருந்து வரும் பொறுப்பற்ற விமர்சனங்களை அவர் கட்டுப்படுத்தவும் இல்லை. திக்விஜய்சிங், ஜனார்த்தன் திவேதி போன்ற தலைவர்கள் அன்னா ஹசாரே அணிக்கு எதிராகவும் ராம் தேவ் குழுவுக்கு எதிராகவும் ‘பிய்த்து உதறுகிறார்கள்’; உண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் அன்னா ஹசாரே, ராம் தேவ் போன்றவர்களை மட்டுமா எதிர்த்துப் பேசுகிறார்கள்? அல்லது அவர்களைத் தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்துவதோடு நின்று விடுகிறார்களா என்ன?

அவர்கள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தையே கொச்சைப்படுத்துகிறார்கள்; நாடாளுமன்றம் பெரியதா அல்லது சிவில் சமூகம் பெரியதா என்று புதிய பட்டிமன்றத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். ஊழலை எதிர்த்துத் தானே அன்னா ஹசாரே போராடுகிறார் என்று அவர்களால் சும்மா இருந்துவிட முடியவில்லை. அரசை எதிர்த்துப் போராடுவதாக அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அரசும் ஊழலும் பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் என்று அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் போலிருக்கிறது!

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் யார் யாரோ அப்படிப் பேசினால் நமக்குப் பெரிதாக ஒன்றும் தோன்றாது. நம்முடைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிவில் சமூகப் போராட்டங்களைக் குறை சொல்கிறார். “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தங்களுடைய பொறுப்புகளை விட்டுக் கொடுப்பதை நான் ஆதரிக்க மாட்டேன். இந்த நாட்டின் அடித்தளம் நாடாளுமன்ற ஜனநாயகம்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்! ஊழலுக்கு எதிராக பொதுநல அமைப்புகள் குரல் எழுப்புவதை ஆதரிக்கிறேன் என்றும் அவர் சேர்த்தே சொல்கிறார்!

இதற்கு என்ன பொருள்? “நீங்கள் போராடலாம்; ஆனால் நாங்கள் நிறுத்தச் சொல்லும்போது நிறுத்திவிட வேண்டும்; நாங்கள் எடுக்கும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் என்று அர்த்தம்! காங்கிரஸ் கட்சியின் ஜெயந்தி நடராஜனும் பொதுநல அமைப்புகளின் போராட்டம், ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்துக்கு எதிராக இருக்கிறது என்ற ரீதியில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் வேண்டும் என்று லோக்பால் சட்ட முன்வரைவில் சில விஷயங்களை பொதுநல அமைப்புகள் வலியுறுத்துவதை காங்கிரஸ் கட்சியால் தாங்க முடியவில்லை! அதனால் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மக்கள் போராட்டங்கள் அபகரிக்க முயல்கின்றன என்று கூக்குரல் இடுகிறார்கள்!

அன்னா ஹசாரே, ஐரோம் ஷர்மிளா சானு, ராம் தேவ் போன்றவர்கள் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைத் தங்களுடைய கைகளில் எடுக்க முயல்கிறார்களா? நிச்சயம் இல்லை. அவர்களுடைய போராட்டங்களில் ஒருவருக்கு விமர்சனம் இருக்கலாம். ஊடகங்களின் பாரபட்சம் குறித்து வேறுபட்ட பார்வை இருக்கலாம். அன்னா ஹசாரே, ராம் தேவ் போன்றவர்களின் கோரிக்கைகள் ஊழல் ஒழிப்புக்கோ அல்லது கருப்புப் பண ஒழிப்புக்கோ முழுமையான தீர்வு அளிப்பவை அல்ல என்று ஒருவர் கருதலாம். அதற்காக அரசு சொல்லும் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது!

அரசாங்கமும் ஆட்சியாளர்களை ஆதரிப்பவர்களும் ஏன் இப்படிப் பேசுகிறார்கள்? இவர்களை இப்படிப் பேசத் தூண்டும் சிந்தனை எது? மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் சாவடிக்கு வர வேண்டும்; வரிசையில் நின்று ஓட்டுப் போட்டு விட்டு வீட்டுக்குப் போக வேண்டும்; அதோடு அவர்களுடைய ஜனநாயகக் கடமை முடிந்து விடுகிறது. சட்டம் இயற்றும் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மட்டுமே; அந்த நடைமுறையில் பிரதிநிதிகளுக்கு மக்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது. இந்த ஆளுவோரின் சிந்தனைதான் பொதுநல அமைப்புகளின் போராட்டங்களுக்கு எதிராக மக்களைத் ‘திசைதிருப்பும்’ வேலைக்கு அடிநாதமாக இருக்கிறது!

உண்மையில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை யார் பறித்துக் கொண்டிருகிறார்கள்? ராடியா டேப்களும் விக்கி லீக்ஸ் செய்திகளும் நமக்கு என்ன தகவலை நமக்குத் தருகின்றன? ரத்தன் டாடாக்களும் முகேஷ் அம்பானிகளும் ராடியாக்கள் மூலம் அமைச்சர்களைத் தீர்மானித்தார்களே, அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகமா? ‘எங்கள் தலைவருக்கு ஜலதோஷம், அதனால் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் தும்மிக் கொண்டிருக்கிறோம்’ என்று அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் மனம் திறந்தார்களே, இதுதான் இந்திய இறையாண்மையா?

தேசிய சிறப்பு அடையாள அட்டையை இந்திய மக்கள் அனைவருக்கும் கொடுக்கும் திட்டத்துக்காக நந்தன் நிலகேனியை மத்திய அரசாங்கம் தலைவராக நியமித்தது. எந்த நாடாளுமன்றத்திடம் அதற்காக அனுமதி வாங்கியது நம் அரசு? தேசிய நுண்ணறிவுக் கழகத்துக்கு தலைவராக கேப்டன் ரகுராமன் என்பவரை அரசு நியமித்தது. இதற்கு மக்களவை கூடியா அனுமதி அளித்தது? நந்தன் நிலகேனியும் கேப்டன் ரகுராமனும் யார்? இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி நந்தன்! மகேந்திரா சிறப்பு சேவைகள் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் ரகுராமன்! அவ்வளவு ஏன்? சோனியா காந்தியின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் தேசிய ஆலோசனைக் குழுமத்தைக் கூட நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் அமைப்பு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையை சிதம்பரத்தை விடவும் ஜெயந்தி நடராஜனை விடவும் யார் சரியாகப் புரிந்து கொண்டிருக்க முடியும்? நான் தான் விபரம் தெரியாமல் அவர்கள் பேசியதை விமர்சித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்! தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுடைய பொறுப்புகளை போராட்டங்களை நடத்தும் பொதுநல அமைப்புகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்வது ‘சரி’தான். பிறகு யாருக்கு அவர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும்? பெரிய தொழில் நிறுவனங்களிடமும் நாட்டைக் கொள்ளையடிக்கும் அந்நிய நிறுவனங்களிடமும் தான் அந்த அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும்! அவர்களுக்கு இருக்கும் ‘தெளிவு’ மக்களாகிய நமக்குத்தான் இல்லை!

குமுதம் ரிப்போர்ட்டர் 30.06.11

0 Comments:

Post a Comment

<< Home