Tuesday, January 02, 2007

வராத மணமகளுக்கு ஏங்கும் மாப்பிள்ளைகள்!

‘‘பிரிட்டன் ஜனநாயக மரபுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவரே அடுத்து பதவியேற்கக் காத்திருக்கும் பிரதமர்’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான எல்.கே.அத்வானி, ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறினார். அவ்வளவுதான்! பா.ஜ.க. வின் மூத்த தலைவர்கள் பலர் கொதித்துப் போய்விட்டனர். நேற்றும் இன்றும் நாளையும் அடல் பிகாரி வாஜ்பாய்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்றார்கள் அவர்கள்.

‘‘பிரதமர் பதவிக்கு வாஜ்பாய் பெயரை நான் தான் முன்மொழிந்தேன். அப்போது நான் பா.ஜ.க. வின் தலைவராக இருந்தேன். அடுத்த தேர்தலில் அவர் என்னுடைய பெயரை முன்மொழிவாரா என்பது சந்தேகம் தான்’’ என்று இன்னொரு சமயத்தில் அத்வானி கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது கட்சித் தலைவராக ராஜ்நாத்சிங் இருக்கிறார். பிரதமர் பொறுப்புக்கு தனது பெயரை ராஜ்நாத்சிங் முன்மொழிய வேண்டும் என்பது அத்வானியின் எதிர்பார்ப்பாக இருக்கலாம். சமீபத்தில் நடந்து முடிந்த லக்னோ தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தின் முடிவில், அத்வானியை தான் ஆதரிப்பதாக வாஜ்பாய் செய்தியாளர்களிடம் கூறினார் என்பது வேறு விஷயம்!
ஆனால், எப்போதெல்லாம் பா.ஜ.க. வின் ஆட்சித் தலைமை குறித்து சர்ச்சை எழுகிறதோ அப்போதெல்லாம் வாஜ்பாய்க்கு இருக்கும் செல்வாக்கு உறுதி செய்யப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் கிடைத்தால், பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய்க்கு மட்டுமே தங்கள் ஆதரவு அளிக்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சொல்லியிருக்கிறார். ‘‘கட்சியின் மூத்த தலைவர் வாஜ்பாய். அவருடைய கருத்துக்களை மனதில் கொள்ளாமல் புறக்கணித்து, பா.ஜ.க. தனது வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது’’ என்று உ.பி. முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் பேசியிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முலாயம் சிங் யாதவ் இல்லை. இருந்தும் அவர் வாஜ்பாயின் தலைமை குறித்து இப்படிப் பேசியிருக்கிறார்.

தலைவர்கள் பேசும் வார்த்தைகள் அறியாமல் வந்து விழுபவை அல்ல; உணர்ச்சி வேகத்தில் சிலர் வேண்டுமானால் பேசலாம். ஆனால், ‘நானே பிரதமராக வேண்டும்’ என்று அத்வானி அறியாமல் சொல்வதற்கு வாய்ப்பில்லை. பாகிஸ்தான் சென்றிருந்தபோது, முகமது அலி ஜின்னா ‘மதச்சார்பற்றவர்’ என்று அத்வானி சொன்னதுகூட தற்செயல் நிகழ்வாக நிச்சயம் இருக்காது. அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று வாஜ்பாய் சொன்னதற்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படும் தலைவராக அத்வானி உருவாக வேண்டும். அதற்கு அவருடன் இருக்கும் தீவிர இந்துத்துவ முத்திரை தடையாக இருக்கிறது. அந்தத் தடையைத் தகர்க்கும் முயற்சியின் முதல் படியாகவே அத்வானி அப்படிப் பேசியிருக்க வேண்டும்.

நடந்து முடிந்த லக்னோ தேசிய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், ‘லக்னோ வழியாகவே டெல்லி செங்கோட்டையைச் சென்றடைய முடியும்’ என்று வாஜ்பாய் பேசியிருக்கிறார். இதுவும் பொருள் பொதிந்ததாகவே தெரிகிறது. அதாவது, உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்காமல் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பில்லை என்பது அதன் பொருள். இன்றைய அரசியல் சூழலில் உ.பி.யில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பு பா.ஜ.க. வுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்கும்போது இதற்கு என்ன அர்த்தம்? முலாயம் அல்லது மாயாவதியுடன் கூட்டணி மூலமாக உ.பி.யில் தனது செல்வாக்கை உறுதி செய்து கொள்ளவேண்டும். அல்லது எதிர்அணி போலத் தோற்றம் அளித்தாலும், தங்களுக்குத் தொல்லைகள் கொடுக்காத ஆட்சி அங்கு அமைய வேண்டும். அப்படி ஒரு புரிதல் பா.ஜ.க.வுக்கும் முலாயமுக்கும் இருப்பதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியை நோக்கியும் மாயாவதியை நோக்கியும் நகர்வதற்குத் தயாராக இருக்கும் ‘உயர்’ சாதியினரின் வாக்கு வங்கியைத் தங்களிடம் தக்க வைப்பதற்கு பா.ஜ.க. போராடுகிறது. இதற்காகவே தீவிரமான இந்துத்துவ முழக்கங்களை மீண்டும் முன்வைக்கிறது. முதலமைச்சராக பா.ஜ.க. முன்னிறுத்துகின்ற கல்யாண்சிங்குக்கும் முலாயம் சிங்குக்கும் நல்ல உறவு நீடிக்கிறது.

கல்யாண்சிங்கின் மகன் முலாயம் அரசில் இருந்து வெளியேறி, பா.ஜ.கவில் சேர்ந்த பின்னும் அமைச்சராக இருந்தபோது தனக்கு தரப்பட்ட மாளிகையை அவர் இன்னும் காலி செய்யவில்லை. கல்யாண்சிங்கின் வீட்டுக்கு அடுத்த பங்களாவை அவரது தோழியரான குசும்ராய் 30 வருடங்கள் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்து முலாயம் அரசு ஆணையிட்டுள்ளது. அங்கு குசும்ராய் அவரது அப்பாவின் பெயரில் அறக்கட்டளை நடத்துகிறார். அவரது அப்பா பொதுவாழ்வில் பிரபலமானவர் இல்லை என்னும்போது இந்த சலுகை ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கெனவே ராஜ்நாத்சிங் பா.ஜ.க. தலைவராக்கப் பட்டதில் இருந்து ராஜபுத்திரர்களின் வாக்குகள் முலாயமிடம் இருந்து பா.ஜ.க.வுக்கு இடம் மாறியிருக்கக் கூடும். ‘மதச்சார்பற்ற’ கட்சிகளான காங்கிரஸ் எதிர்ப்பு, இடதுசாரிகளின் ஆதரவின்மை, வி.பி.சிங்கின் எதிர்ப்பு போராட்டங்கள், புதிதாக உருவாகியிருக்கும் இஸ்லாமிய அமைப்புகள், ஆட்சியில் இருந்ததால் எழும் எதிர்ப்பு ஆகியவை முலாயமின் முதலிடத்தை அசைத்துப் பார்க்கும் காரணிகளாக இருப்பதை ஒதுக்கிவிட முடியாது. இவற்றால் ஏற்படுகின்ற இழப்புகளைச் சரிசெய்வதற்கு பா.ஜ.க.வின் மறைமுக உதவி அவருக்குத் தேவைப்படலாம். அதை பா.ஜ.கவும் அங்கீகரிக்கலாம். அதேபோல் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு சொந்தமாகவோ அல்லது முலாயம் மூலமாகவோ உருவாகும் உ.பி. ஆட்சி அவசியம் என்பதை வாஜ்பாயும் உணர்ந்து, அதை அவருடைய பாணியில் தனது கட்சியினருக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

மத்தியில் உடனடியாக இடைத்தேர்தல் நடைபெறு வதற்கான வாய்ப்பு எதுவும் இல்லாதபோது, அடுத்த பிரதமர் யார் என்ற சர்ச்சை எழுவதற்கான அவசியம் இல்லை. இருந்தும், அப்படி ஒரு சர்ச்சை வலிந்து உருவாக்கப்படுகிறது. ஏன்?

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிறப்பான எதிர்க்கட்சியாக பா.ஜ.க. செயல்படவில்லை. அந்த எதிர்க்கட்சியின் இடத்தை ஆளும் கூட்டணியை ஆதரிக்கும் இடதுசாரிகளே ஆக்கிரமித்துக் கொண்டனர். இந்த நிலையில் தங்களது செயல்திட்டத்தின் தவறுகளை மறைப்பதற்கு பா.ஜ.க.வுக்கு ஏதாவது சர்ச்சைகள் தேவைப்படுகின்றன. இதன் விளைவாகவே 2009- இல் வர இருக்கும் மக்களவைத் தேர்தல் முடிந்தபின், கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் தொடக்கப்படுகிறது. 1999 இல் அவர்களே பரணில் தூக்கிப் போட்ட ராமர் கோயில், பொது சிவில் சட்டம் மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 ஆகியவற்றை இப்போது மீண்டும் கையில் எடுக்கிறார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான சில கொள்கைகளால் துன்பப்படும்போது மக்கள் மாற்று அணியைத் தேடுவார்கள். தீவிர இந்துத்துவ கொள்கைகளை முன்னெடுத்தால், பா.ஜ.க.வை அந்த மாற்றாக மக்கள் பார்க்க மாட்டார்கள். தீவிரமான கொள்கைகளை அரசியல் இயக்கங்கள் கைவிட்ட பிறகே, மக்கள் அவற்றை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். இந்தக் கடந்தகால நிகழ்வுகளில் இருந்து பாரதிய ஜனதா பாடம் கற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (03.01.07)

Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home