Monday, May 30, 2011

பெருமையல்ல!

இப்படி ஒன்று நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னால் யாராவது சொல்லி இருந்தால், யாரும் அதைக் காதிலேயே போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். கட்சியிலும் வெளியிலும் இப்படி ஒரு காட்சியை யாரும் எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள். பொதுவாழ்க்கையில் குற்றம் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட சிலர் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகளின் அவசியம் பற்றி தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி டெல்லியில் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என்பதை எப்படித்தான் கட்சியினரால் எதிர்பார்க்க முடியும்?

மே 23-ம் நாள் சூரியன் உமிழும் வெப்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கும் மாலை நேரத்தில், கருணாநிதி திகார் சிறையில் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார். அவரது துணைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, டி.ஆர்.பாலு ஆகியோர் அப்போது உடன் இருந்ததாக செய்திகள் சொல்கின்றன. “இந்த சந்திப்பு உணர்வுபூர்வமாக இருந்தது” என்று அதிகாரிகள் சொன்னதாக ஒரு செய்தி சொல்கிறது. அது உணர்ச்சிபூர்வமானதா உணர்வு பூர்வமானதா அல்லது இரண்டும்தானா என்ற வார்த்தை விளையாட்டுக்குள் போக நான் விரும்பவில்லை. முப்பது நிமிடங்கள் அந்த சந்திப்பு நடந்ததாக சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அந்த முப்பது நிமிடமும் அந்த அப்பாவின் மனதுக்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடியிருக்கும்!

“உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்குத் தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் என்ன பாடுபடுமோ அந்த நிலையில் என் மனம் இருக்கிறது” என்று கருணாநிதி சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். செய்தியாளர்களிடம் அவர் அந்த வார்த்தைகளைச் சொன்னதை அறிந்த நொடியில், “எவ்வளவு திறமையாக நம்முடைய சிந்தனையைத் திசைமாற்றி விடுகிறார்” என்ற வியப்பே என் மனதில் எழுந்தது. சட்டம் தன் கடமையைச் செய்யும், இந்த சிக்கலை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் உணர்வு வேறுவகையானது. “உங்க மகளுக்கு இப்படி நடந்தா உங்க மனசு என்ன பாடுபடும்?” என்ற கேள்வி நம்முடைய மனதில் உருவாக்கும் உணர்வுகள் வேறு வகை!

ஒரே ஒரு பெண்ணாக வீட்டில் வளரும் பெண்களுக்கும் அப்பாக்களுக்கும் இடையே இருக்கும் உணர்ச்சிமயமான உறவை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? சைக்கிள் ஓட்டப் பழகும்போது கீழே விழுந்து முழங்காலில் ரத்தம் கசியும் சிராய்ப்போடு வந்த மகளைப் பார்த்து நம்மில் சிலர் பதறி இருக்கலாம். கல்லூரியில் சேர்க்கும்போதோ அல்லது படித்து முடித்தபின் வேலையில் சேரும்போதோ, வசதிக் குறைவான விடுதி அறையில் மகளை சேர்த்து விட்டு வீடு திரும்பி இருக்கிறீர்களா? இதெல்லாம் அனைவருக்குமான அன்றாட நடைமுறை என்று உங்கள் அறிவு சொல்லும்போது, மகள் கஷ்டப்படுவாளோ என்று உணர்வு உள்ளுக்குள் தவிப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நம்முடைய கண் முன்னாலேயே மகளைக் கடுமையான வார்த்தைகளில் ஆசிரியர் திட்டும்போது, அவள் முகம் சுருங்குவதைப் பார்த்து உங்கள் மனம் வாடி இருக்கிறதா?

இவற்றைப் போன்ற பல கேள்விகளில் சில வினாக்களுக்கு உங்கள் பதில் ஆம் என்றால் உங்களால் கருணாநிதியின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். புகுந்த வீட்டில் இருக்கும் மகள் சாதாரணமான ஒரு காரணத்துக்காக லேசாக கண் கலங்கினாலே, அப்பாக்களாலும் அம்மாக்களாலும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. வசதிகளும் வாய்ப்புகளும் பெருகியதற்குப் பிறகு பிறந்து வளர்ந்த செல்ல மகளை, செல்வ மகளைச் சிறையில் சென்று சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் அப்பாவின் உணர்ச்சிகளை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

அதேசமயம், சிறையில் மகனையோ மகளையோ பார்க்க நேர்கின்ற எல்லா அப்பாக்களும் அம்மாக்களும் இதே போன்ற உணர்ச்சிப் போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு வரும் சிக்கல்களை எல்லோரும் பரிவுடன் அணுக வேண்டும் என்றும் மற்றவர்களின் துன்பங்களைப் பற்றி தாம் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நினைப்பது சுயநலம். அப்படிப்பட்ட சுயநலம் கொஞ்சமும் இல்லாமல் எல்லா மக்களுக்கும் பொதுவான கோரிக்கைக்காக பத்து வருடங்களாக உண்ணாவிரதமும் சிறை வாழ்க்கையும் கொண்டிருக்கும் ஐரோம் ஷர்மிளா சானுவின் அம்மாவுக்கும் மனம் இருக்கிறது. சமூகத்தில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகளை அதிக அளவில் உருவாக்கப் பாடுபட்ட மருத்துவர் பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டதை நாம் மறக்கவில்லை. அவருடைய அம்மாவுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன.

எதற்காக வெளிமாநில உதாரணங்கள்? கடந்துபோன திமுக ஆட்சியில் எத்தனை முறை சீமான் சிறையில் அடைக்கப்பட்டார்? அவர் கையை வீசி நடக்கும்போது அவர் கைவிரல் நகங்கள் யாரையாவது காயப்படுத்தின என்று எங்காவது ஒரு வழக்கு இருக்கிறதா? பிறகு எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்? அவர் நேரடியாக வானத்தில் இருந்தா பூமியில் குதித்தார்? அவரும் ஒரு அம்மாவின் கருப்பையில் பத்து மாதம் இருந்து பிறந்தவர்தானே! சீமானின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உணர்ச்சிகள் இல்லையா?

ஓர் ஆண் சிறையில் இருக்கலாம்; செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவிக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று ராம் ஜேத்மலானியைப் போல சிலர் வாதிடக் கூடும். இன்றைய முதல்வர் ஜெயலலிதாவைக் கைது செய்த போது இந்த வாதம் பொருந்தவில்லையா என்று சிலர் பதில் கேள்வியும் கேட்கக்கூடும். இப்போது கனிமொழிக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையும் எதிர்க்கட்சி அரசாங்கத்தால் அவருக்கு எதிராக உருவாக்கப்பட்டதல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அரசாங்கத்தில் இன்னும் திமுக அங்கமாகத் தான் இருக்கிறது. ராசாவும் கனிமொழியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வளவு அதிகாரம் மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சந்தர்ப்ப சாட்சியங்கள் இல்லாமல் செய்யாத குற்றத்துக்காக தண்டனை வழங்கிவிட முடியாது.

அபியும் நானும் என்ற திரைப்படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒவ்வொரு விஷயத்தையும் அப்பாவிடம் கேட்டுக் கேட்டு செய்யும் மகள் அபி, வளர்ந்த பிறகு அப்பாவின் கண்காணிப்பை ஒதுக்கத் தொடங்குவார். அப்பா தலையிடும் போதெல்லாம், “ ஐ நோ வாட் ஐ யம் டூயிங்” என்பார். அதாவது “என்ன செய்கிறேன் என்பதைத் தெரிந்தே நான் செய்கிறேன்” என்று சொல்வார். மேல்படிப்பு, காதல், திருமணம் என்று மகளின் விருப்பப்படியே அனைத்தும் நடக்கும். அதீதமான அன்பு காரணமாக மகளைத் தன்னுடனேயே வைத்திருக்க நினைக்கும் அப்பாவின் தவிப்புகளைச் சொல்லும் படம் அது.

அந்தப் படத்தின் மகளைப் போல ‘ஐ நோ வாட் ஐ யம் டூயிங்’ என்று கனிமொழி சொன்னாரா என்று தெரியவில்லை. அப்பாவின் வேண்டுகோளைக் கேட்டு கலைஞர் தொலைக்காட்சியில் பங்குதாரர் ஆனது தான் அவருடைய குற்றம் என்பதில் கூட உண்மையிருக்கலாம். ஆனால் அதுவல்ல பிரச்னை? எதற்காக சிறை செல்கிறோம் என்பதே இங்கு முக்கியம். நெருக்கடி நிலையின் போது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் சிறையில் இருந்தாரே, அதை யாராவது சிறுமையாகப் பார்க்கிறார்களா என்ன? அது அவருக்குப் பெருமையையும் புகழையுமே தேடித் தந்தது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டனை பெறுவது அப்படிப்பட்டதல்ல!


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Labels: , , ,

Tuesday, May 24, 2011

தமிழகத்தின் இடிமுழக்கம் டெல்லியில் கேட்குமா?

ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றி தேசிய அரசியலில் எதிரொலிக்கும் என்று சென்னையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற விழாவுக்கு வந்த போது அவர் அப்படிப் பேசி இருக்கிறார். சென்ற இதழுக்கு முந்தைய ரிப்போர்ட்டர் இதழில் ’எரிதழல்’ பகுதியில் நானும் அவர் இந்திய அரசியலில் ஆற்ற வேண்டிய பங்கு பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

ஜெயலலிதாவின் அரசியல் நடவடிக்கைகள் அந்தத் திசையில் இருக்குமா இருக்காதா என்பதை இப்போதே உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத ஓர் அணியை இந்திய அளவில் அமைப்பதில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும். அது அவசியமா இல்லையா என்பதை அவர்தான் முடிவுசெய்து கொள்ள வேண்டும்!

‘தேசிய அரசியலில் ஜெயலலிதா மாற்றத்தை உருவாக்குவார்’ என்று நரேந்திரமோடி நம்புவது நான் சொல்லும் பொருளில் இருக்காது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜெயலலிதா இணைய வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கலாம். இந்திய அரசியலில் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருக்க முடியும் என்று அவர் நினைக்கக் கூடும். அது நடக்கவில்லை என்றாலும் மோடிக்கு ஒன்றும் இழப்பு இல்லை. காங்கிரஸ் எதிர்ப்புக்கு ஒரு வலுவான முதலமைச்சர் தேசிய அளவில் கிடைத்திருக்கிறார் என்று அவர் மனநிறைவு அடையலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா எந்த உறவையும் வைத்துக் கொள்ள மாட்டார் என்று நரேந்திரமோடி உறுதியாக நம்புகிறாரா என்பது தெரியவில்லை.

அரசியல் என்பது என்ன? ஓர் எண்ணிக்கை விளையாட்டு. தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவோ, அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றவோ தேவையான எண்ணிக்கையை பெறுவதற்கு ஒரு கட்சி நடத்தும் ’சாகசங்களே’ இன்று அரசியல் என்று கொண்டாடப்படுகிறது. அடுத்த மக்களவைத் தேர்தலில் திமுகவால் தமக்கு பயன் இல்லை என்று சோனியா காந்தி நினைத்தால், அவர் என்ன செய்வார்? கருணாநிதியைக் கைகழுவி விட்டு ஜெயலலிதாவுடனோ, விஜயகாந்துடனோ கூட்டணி வைப்பதற்கு முயல்வார். வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி வாழ்த்துச் சொன்னதைக் கூட சாதாரண நடைமுறையாக நம்மவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போதே ஜெயல்லிதாவுடனான உறவுகளைச் சீர்செய்ய முனைகிறார்களோ என்று அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் நரேந்திரமோடிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா மதவாதி ஆகிவிடுவாரா என்ன?

இப்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் எல்லோருக்கும் ஒரு செய்தியைத் தெளிவாக உணர்த்தி இருக்கிறது. தமிழகத்தை ஆள்வதற்கு இப்போது மீண்டும் தி.மு.க.வுக்கு வாய்ப்பு கொடுக்க தமிழக மக்கள் மறுத்திருக்கிறார்கள். திமுக மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது. 1996 சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வென்ற அண்ணா திமுக, 1998 மக்களவைத் தேர்தலில் 30 இடங்களை ஜெயித்தது என்பதை நாம் இங்கு நினைத்துப் பார்க்கலாம். சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த 2009 மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியே அதிக இடங்களை வென்றது. இரண்டு வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறி விடவில்லையா? இந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் மனதை மாற்றிக் கொள்ளும் அளவு அப்படி என்ன நடந்தது?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தன என்ற அடிப்படையில் திமுகவின் ஆ.ராசா அமைச்சர் பதவியை இழந்தார்; கைது செய்யப்பட்டார். திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்துக்குள் வந்து கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடத்தியது. யாரிடம்? திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியிடமும் மகளிடமும் தான் அந்த விசாரணை நடத்தப்பட்டது. டெல்லியில் இருந்து சென்னைக்கு ஆ.ராசா வந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் அவர் பாதிக்கப்பட்டவர் என்ற உணர்வை ஏற்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இலங்கையின் தமிழர் பகுதிகளில் அந்த நாட்டு அரசு வான் தாக்குதல்களை நடத்தியது. இந்திய அரசும் தமிழக அரசும் அந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் அந்தத் தேர்தலின்போது நெடுமாறன், சீமான் போன்றவர்கள் தீவிரமான பிரசாரத்தை காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு எதிராக மேற்கொண்டார்கள். இருந்தபோதிலும் திமுக கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் தேர்தல் முடிந்த ஒரு வாரத்துக்குள் இலங்கையில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடந்தன. இன்று பேசப்படும் அனைத்துவிதமான போர்க்குற்றங்களும் இலங்கை அரசால் இழைக்கப்பட்டன. தமிழர்களின் தேசிய விடுதலைக்காக அங்கு போராடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையை இப்போது தமிழகத்தில் மக்களுக்கு நினைவூட்டினார்கள். மக்கள் திமுக காங்கிரஸ் கூட்டணியை படுதோல்விக்கு உள்ளாக்கினார்கள்!

வேறு எந்தவித மாற்றங்களும் இல்லாத சூழ்நிலையில், அடுத்த மக்களவைத் தேர்தல் 2014-ம் வருடம்தான் நடக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட தோல்வியில் இருந்து எப்படி மீள்வது என்றும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கூடுதல் இடங்களை எப்படி பிடிப்பது என்றும் காங்கிரஸ் தலைமை வியூகங்களை வகுக்கும். அந்த செயல்திட்டங்களுக்கு ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் உடன்பட்டுப் போவார்களா என்பதை இப்போதே கணிக்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலோ ஜெயலலிதா இடம் பெறவில்லை என்றால் அவர் முன் இருக்கும் அடுத்த தேர்வு என்ன? சந்திரபாபு நாயுடு மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஓர் அணிக்கு தலைமை ஏற்கலாம். அல்லது தமிழ்நாட்டில் ஒரு கூட்டணியை அமைத்து கணிசமான இடங்களைக் கைப்பற்றிய பிறகு, அப்போதைய முடிவுகள் உருவாக்கும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவெடுக்கலாம்.

தமிழ்நாடு தவிர இப்போது நடந்த மற்ற மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வரும் வலிமை கொண்டவையா? புதுச்சேரியில் இருந்து ஒரே ஒரு மக்களவை உறுப்பினர்தான். அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தனியாகவே வெற்றி பெற்றிருக்கிறது. மேற்குவங்கம், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கிறது. இடதுசாரிகள் ஆட்சியை இழந்திருக்கிறார்கள். காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத அணியை உருவாக்கும் வலிமை இப்போது இடதுசாரிகளுக்குக் குறைந்திருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் அவர்களுடைய எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்குமா என்பதும் கேள்விக்குறியே!

இதன் விளைவு என்ன? இந்தியா இரு கட்சி அரசியலுக்கு அல்லது இரு கூட்டணி அரசியலுக்கு மாறி வருகிறது என்று பல ஊடகங்களும் காங்கிரஸ், பாஜக ஆதரவாளர்களும் பேசத் தொடங்குவார்கள். மாயாவதி, முலாயம்சிங் யாதவ், நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற வலிமையான மாநிலத் தலைவர்களை ஓரங்கட்ட இரு கட்சிகளும் முயலும். அல்லது அவர்களைத் தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு பங்காளிகளாக மாற்ற முயல்வார்கள். அந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் அது இந்தியாவின் பன்மைத் தன்மைக்கு நல்லதல்ல!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Monday, May 23, 2011

புன்னகை இழந்த புத்ததேவ்

இதுவரை ஒரு தேர்தல் வெற்றியை ஊடகங்கள் இந்த அளவு கொண்டாடி இருக்குமா என்பது சந்தேகம்தான். மமதா பானர்ஜியின் தேர்தல் வெற்றியை இந்திய ஊடகங்கள் அவ்வளவு சந்தோஷமாகக் கொண்டாடுகின்றன. இரண்டாவது சுதந்திர தினம் என்று தேர்தல் முடிவுகள் வந்த நாளை வர்ணிக்கின்றன. மமதாவும் அப்படியே சொல்கிறார். நெருக்கடி நிலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை சிலர் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்றார்கள்; வேறு சிலர் பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சியை இழந்த போது மிகப் பெரிய நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை அனைத்து தரப்பினரும் கொண்டாடுகிறார்கள்.

மமதாவின் கொள்கைகள் மீது ஊடகங்களுக்கு அப்படி என்ன ஒரு பிடிப்பு என்ற கேள்வி உங்களுக்குள் எழக் கூடும். மமதாவுக்குக் கொள்கை என்று ஒன்று இருக்கிறதா என்றும் உங்களில் சிலர் கேட்கக் கூடும். அவருக்குத் தனியாக கொள்கை இருந்தாலும் சரி, அந்தக் கொள்கை ஊடகங்களுக்கு உடன்பாடானதாக இல்லாமல் இருந்தாலும் சரி, ஊடகங்கள் இப்போது அவரைக் கொண்டாடுகின்றன. அந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் மமதா வெற்றி பெற்றதற்கான நேர்மறை உணர்வாகத் தெரியவில்லை. முப்பத்து நான்கு வருடங்கள் நடந்த இடது முன்னணி ஆட்சிக்கு மேற்கு வங்க மக்கள் விடை கொடுத்திருக்கிறார்கள் என்பதே அந்த மகிழ்ச்சிக்கு காரணம்!

மேற்கு வங்கத்தில் இடது முன்னணியும் கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியும் ஆட்சியை இழந்திருக்கின்றன. கேரளத்தில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இப்படித்தான் நடக்கிறது என்று அரசியல் வல்லுநர்கள் சாதாரணமாக விட்டு விடுகிறார்கள். ஆனால் 34 வருடங்களாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த மாநிலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைமையில் இயங்கும் இடது முன்னணியும் எப்படி இழந்தது? புத்ததேவ் பட்டாச்சார்யா அவருடைய தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய அமைச்சரவை சகாக்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் களத்திலும் சமூகத் தளத்திலும் வேலை செய்த ஒரு கட்சிக்கு மக்கள் இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுப்பார்கள் என்று அந்தக் கட்சி எதிர்பார்த்திருக்காது!

இதனால் அந்தக் கட்சிக்கு அங்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது என்று எடுத்துக் கொள்ள முடியுமா? ஏழு சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் ஒரு கட்சி வெற்றி பெறுவது என்பது ஒரு சாதாரணமான விஷயமா? இப்படி ஒரு சாதனையை வேறு ஏதேனும் ஓர் அரசியல் கட்சி எந்த மாநிலத்திலாவது செய்து காட்டி இருக்கிறதா? இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக எத்தனை வருடங்கள் மத்தியில் ஆட்சி நடத்தியது? 1952-ல் நடந்த முதல் தேர்தலில் இருந்து ஐந்து தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1977-ல் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. மூன்று வருடங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது என்பது வேறு கதை!

இப்படி எல்லாம் பேசுவதால் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் தோல்விக்காக நான் வருந்துவதாக நீங்கள் நினைத்துவிடாதீர்கள். சிங்கூர், நந்திகிராம் போன்ற பிரச்னைகள் தீவிரமாவதற்கு முன்பே புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ஆட்சி, அந்தக் கட்சியின் கொள்கையில் இருந்து வழிதவறி நடக்கத் தொடங்கியது என்பதைச் சுட்டிக் காட்டி நான் எழுதி இருக்கிறேன். ஆட்சிக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நடந்த விழாவில் முதன்மை விருந்தினர் யார் தெரியுமா? முகேஷ் அம்பானி! டால்மியாவுக்கு எதிராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு புத்ததேவ் நிறுத்தினார். தேவையே இல்லாமல் அவருடைய ‘கௌரவப் பிரச்னையாக’ அந்தத் தேர்தலைக் கருதினார். மார்க்சிஸ்ட் கட்சியிலேயே கூட பலர் முதலமைச்சருடைய அந்த நிலையை ஆதரிக்கவில்லை.

2006-ல் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்குக் கிடைத்த வெற்றி சாதாரணமானது அல்ல! 294 தொகுதிகளில் 235 தொகுதிகளை இடது முன்னணி வென்றது. “பழைய கெட்டிதட்டிப் போன இறுக்கமான கொள்கைகளை இன்னும் கம்யூனிஸ்டுகள் பேசிக் கொண்டிருக்க முடியாது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது; நாம் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் நாம் அழிந்து போக நேரிடும்” என்பதே அந்த வெற்றிக்குப் பின் அவர் பேசிய வார்த்தைகள். இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். சந்தைப் பொருளாதாரத்துக்கும் மார்க்சீயத்துக்கும் இடையில் அவர் ஒரு பாலமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் உருவானது. ஜோதிபாசுவை விட மாபெரும் வெற்றியை அவர் கட்சிக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் என்று கூட யாரேனும் அவரைப் புகழ்ந்திருக்கக் கூடும்!

“பொது வேலை நிறுத்தங்களுக்கு நான் எதிரானவன். துரதிர்ஷ்டவசமாக நிறைய பொது வேலைநிறுத்தங்களை நடத்தும் கட்சியில் நான் உறுப்பினராக இருக்கிறேன். இனி இதையெல்லாம் நான் அனுமதிக்கப் போவதில்லை” என்று கூட அவர் பேசினார். மேற்கு வங்க மக்களும் கட்சியினரும் இது போன்ற அவருடைய பல பேச்சுக்களில் அதிர்ச்சி அடைந்தார்கள். ஊடகங்களும் தொழிலதிபர்களும் அப்போது அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள். சிங்கூரிலும் நந்திகிராமிலும் தொழிலதிபர்களின் நலனைக் காக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் மக்களிடம் இருந்து கட்சியை தனிமைப்படுத்தியது. தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான எச்சரிக்கைகளை பலர் பலவிதமாக முன்வைத்த போதும் மாநில அரசு அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் தவறுகளைச் சரிசெய்ய முற்படும்போது காலம் கடந்து போய்விட்டது!

சிங்கூரில் டாடா குழுமத்துடன் மேற்குவங்க அரசு மிக நெருக்கமான உறவை வைத்திருந்த போது, அதே மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசு என்ன செய்தது? மூணாறில் டாடா குழுமம் செய்திருந்த ஆக்கிரமிப்புகளை இடித்துத் தரை மட்டமாக்கியது. ஆனால் அந்த மாநில அரசை சுதந்திரமாக செயல்பட விடாமல் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு கட்சிக்குள் பல நெருக்கடிகள். இருந்தும் அவர் வெற்றியை மயிரிழையில் தான் தவற விட்டிருக்கிறார். ஆட்சியை இழந்தாலும், வயது முதிர்ந்தாலும் மக்களுக்கான போராட்டங்களில் உடனடியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்பவராகவே அச்சுதானந்தன் அறியப்படுகிறார்!

ஆனால் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் நிலை அப்படி இல்லை. தனிப்பட்ட முறையில் மிகவும் நேர்மையான மனிதராக அவர் அறியப்பட்டாலும் கொள்கை சார்ந்த குழப்பங்களால் மக்களிடம் இருந்து விலகிப் போயிருக்கிறார். வேட்புமனுவின் போது அவர் தாக்கல் செய்திருக்கும் சொத்து விபரங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அவருக்கு என்று சொந்தமாக ஒரு வீடு இல்லை; கார் இல்லை; முதலீடுகள் இல்லை; மொத்தமே ஐயாயிரம் ரூபாய் தான் அவருடைய உடமை என்கிறது அந்த பிரமாண பத்திரம். அவருடைய மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். அவரே குடும்பத்தை நிர்வகித்துக் கொள்கிறார்!
மக்களிடம் செல்வாக்கைப் பெறுவதற்கு தனிப்பட்ட நேர்மை மட்டும் போதாது; மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மேற்கு வங்க மக்கள் புத்த்தேவ் பட்டாச்சார்யாவுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். இதில் இருந்து நேர்மையாளர் மன்மோகன்சிங் பாடம் கற்றுக் கொள்ளலாம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Wednesday, May 18, 2011

இறுதி வெற்றி மக்களுக்கே!

“இந்த வெற்றி எங்களுக்குக் கிடைத்த வெற்றி அல்ல; தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி” என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். ‘பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்’ என்ற எம்.ஜி.ஆர். பாடலுக்குத் தகுந்தபடி பணிவாகவும் தன்னடக்கத்துடனும் அவர் அப்படி சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையிலேயே தமிழக மக்கள் தங்களுடைய விருப்பத்தை சுதந்திரமாகவும் ஆவேசத்துடனும் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பது 2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. அதனால் இந்த வெற்றி தமிழக மக்களின் வெற்றிதான் என்பதில் சந்தேகம் இல்லை!

தமிழ்நாடு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்து இருக்கிறார்கள். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி பெரும்பான்மையைக் கைப்பற்றி இருக்கிறது. கேரளத்தில் மிகக் குறைவான இடங்கள் வித்தியாசத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை இழந்திருக்கிறது. இடது ஜனநாயக முன்னணிக்கு 68 இடங்களும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 72 இடங்களும் கிடைத்திருக்கின்றன. இரண்டு இடங்கள் மாறி இருந்தால், இரு அணிகளுக்கும் சமமான இடங்கள் கிடைத்திருக்கும். சுவாரஸ்யமான பல காட்சிகள் அரங்கேறி இருக்கும். ஆனால் அப்படி ஒரு நிலையை கேரள மக்கள் உருவாக்கவில்லை. அசாம் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கிறது.

மேற்கு வங்கத்தில் 34 வருட இடது முன்னணி ஆட்சிக்கு அந்த மாநில மக்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். 1977 முதல் 2000 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசுவும் அதன் பிறகு இந்த தேர்தல் வரை புத்ததேவ் பட்டாச்சார்யாவும் அங்கு முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். குஜராத்திலும் பீகாரிலும் ‘வளர்ச்சி’ என்று ஊடகங்களும் ஆட்சியாளர்களும் சித்தரிக்கும் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இடது முன்னணி முயன்றது. ஆனால் மேற்கு வங்க மக்களுக்கு இடதுசாரிகள் கடந்த காலத்தில் கற்றுக் கொடுத்திருந்த அரசியல் பாடம், அவர்களுடைய முயற்சிக்குத் தடை போட்டது. தடைகளைத் தகர்க்க அரசு அடக்குமுறையை ஏவியது. மக்கள் அரசுக்கு எதிராக அணி திரண்டார்கள். தேர்தல் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி இடது முன்னணி அரசுக்கு மக்கள் ‘ஓய்வு’ கொடுத்தார்கள்!

தமக்கு நல்ல ஓய்வை அளித்ததற்காக திமுக தலைவர் கருணாநிதியும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்! ஆனால் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஓய்வு அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட ‘விருப்ப ஓய்வு’ அல்ல. ஆற்காடு வீராசாமிக்கும் கோ.சி.மணிக்கும் திமுக கொடுத்த இயல்பான பணி ஓய்வும் அல்ல. இது தமிழக மக்கள் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் கொடுத்த ‘கட்டாய ஓய்வு!’ சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட கஷ்டப்பட வேண்டாம் என்று அவர்கள் அந்த பணிச்சுமையை விஜயகாந்த் தலையில் சுமத்தி இருக்கிறார்கள்! திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் அவருக்குக் கொடுத்திருக்கும் பணியைச் செய்வதில் அவருக்கு எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை.
ஏராளமான மாநிலக் கடன் சுமையும் தேர்தலில் வாக்குறுதிகளாக மக்களிடம் சொன்னதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புச் சுமையும் இப்போது ஜெயலலிதாவின் தோள்களில் ஏறியிருப்பதாக ஜெயலலிதா சொல்கிறார். இருந்தும் தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்! ஒளிமயமான எதிர்காலத்தை தமிழக மக்களுக்கு அவரால் வழங்க முடியுமா? அல்லது அவரிடம் இருந்து தமிழக மக்கள் அதை எதிர்பார்க்கிறார்களா? அதெல்லாம் விவாதத்துக்குரிய வேறு விஷயங்கள்!

குறைந்தபட்சம் அவர்கள் ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். தடையில்லா மின்சாரம் மூலமாக வீடுகளில் தமிழக அரசு ‘ஒளியை’ வழங்கினாலே போதுமானது! ஐந்தாண்டு கால திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியதில் மின்சாரப் பற்றாக்குறை ஒரு முக்கியமான காரணம் என்பதை அவர் அறிவார். ‘இந்த ஆட்சி ஒருவேளை போனால், அதற்கு மின்வெட்டு காரணமாக இருந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்’ என்று பல மாதங்களுக்கு முன்பாகவே அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியது உங்களுக்கு நினைவிருக்கலாம்!

இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கை அதிபர் ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசிடம் வலியுறுத்துவேன் என்று ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு வாக்களித்திருக்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டம், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம், அதைச் செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் என்று அடுத்தடுத்து ஜெயலலிதா செயலில் இறங்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நடைமுறை தொடர்பாக பழ.நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், சீமான் போன்றவர்களையும் உள்ளடக்கிய ஓர் ஆலோசனைக் குழுவை தமிழக அரசு உருவாக்கினால் நல்லது!

ஆட்சிக்கு வந்ததும் கட்சியிடம் இருந்து சில தலைவர்கள் தனிமைப்பட்டு விடுகிறார்கள்; அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும் நிர்வாகிகளாக மாறிவிடுகிறார்கள். நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு கூடாது என்ற பார்வையையும் முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் அனைத்து முடிவுகளும் நிர்வாகரீதியான முடிவுகளாக இருக்க முடியாது. அரசியல்ரீதியாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகளுக்கு அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால் அப்படிப்பட்டவர்களை ஏதாவது ஒரு வகையில் ஆலோசனை வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்வது அரசுக்கு உதவியாக இருக்கும்!

அரசியல்ரீதியாக, காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் மாற்றாக ஒரு தேசிய அரசியல் அணிக்கான தேவை இன்னும் இந்திய அளவில் இருக்கிறது. மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் இடதுசாரிகள் ஆட்சியை இழந்திருக்கிறார்கள். மாயாவதி, முலாயம்சிங் போன்றவர்கள் ஒரு தெளிவான அரசியல்நிலையை எடுக்க மறுப்பவர்களாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் சூழலில், காங்கிரஸ் அல்லாத, பாரதிய ஜனதா இல்லாத ஓர் அணியை உருவாக்குவதிலும் அதற்குத் தலைமை தாங்குவதிலும் ஜெயலலிதா முக்கியமான பங்காற்ற வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுகவை வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தை அதிமுக பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை ஜெயலலிதாவுக்கு வந்து விடக் கூடாது!

மத்திய அரசுடன் சுமுகமான உறவுகளை வளர்த்துக் கொண்டே மாநிலத்தின் உரிமைகளுக்காக போராடும் ஓர் அணிக்கான தலைமையை தமிழகம் ஏற்க வேண்டும். மற்ற மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் சேர்ந்து ஓர் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்க தமிழக முதல்வர் முயல வேண்டும். காலம் சிலருக்கு சரியான சமயத்தில் கதவுகளைத் திறக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பை ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அரசியல் சரிவுகளுக்கு இடம் கொடுக்காத வெளிப்படையான நிர்வாகத்தை அவர் அளிக்க வேண்டும். இதன் மூலம் வாக்களித்த தமிழக மக்களுடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியும். இந்திய அரசியலிலும் முக்கியமான இடத்தை அவர் பிடிக்க முடியும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

புதைந்து போகும் உண்மை

யமுனா எக்ஸ்பிரஸ்வே என்று அழைக்கப்படும் யமுனா விரைவுச்சாலையை அமைப்பதற்காக உத்தரப்பிரதேச அரசு விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்துகிறது. பறிகொடுத்த நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை நடந்திருக்கிறது. இரண்டு காவலர்களும் இரண்டு விவசாயிகளும் அந்த வன்செயல்களில் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்துப் பேசின. புதிய சட்டத் திருத்தம் வர இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதியாக சொல்கிறது. அந்த சட்டத் திருத்தம் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதாக இருக்குமா என்பது விவாதத்துக்குரிய வேறு விஷயம்!

நோய்டா மாநகரம், அலிகார், ஆக்ரா பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்களுடைய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடுவதும் அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடிப்பதும் இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இதைப் போலவே தீவிரமான போராட்டங்களைக் கடந்த சில வருடங்களில் அவர்கள் நடத்தி இருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 2008-இல் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலிலும் 4 பேர் கொல்லப்பட்டார்கள். அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 66 பேரைக் காணவில்லை என்ற செய்தியும் உண்டு. கடந்த மே 2010, பிப்ரவரி 2011 ஆகிய மாதங்களில் அவர்கள் அரசின் கவனத்தை தங்களுடைய கோரிக்கைகளை நோக்கி ஈர்ப்பதற்கான போராட்டங்களை அவர்கள் நடத்தினார்கள்.

அதுவும் தவிர விவசாயிகள் அல்லது நிலத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் பொதுமக்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் போராடிக் கொண்டிருக்கவில்லை. கடந்த 2006-ஆம் வருடம் ஒரிசாவில் கலிங்காநகரில் நடந்த போராட்டத்தில் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்கள். மேற்குவங்கத்தில் சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் மக்கள் நடத்திய போராட்டங்களும் அவற்றை ஒடுக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளும் தான் இப்போது அந்த அரசையே ஆட்டம் காண வைத்திருக்கின்றன. ஹரியானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் என்று பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன; நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அரசு இந்தப் போராட்டங்களை முறையாக எதிர்கொண்டதாகத் தெரியவில்லை.

மக்களுடைய போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியதும் அரசியல் கட்சிகள் அவற்றில் குளிர்காயத் தொடங்கி விடுகின்றன. மேற்குவங்கத்தில் நடந்த போராட்டங்களின் அரசியல் ஆதாயத்தை மமதா பானர்ஜி அறுவடை செய்கிறார். மகாராஷ்டிரப் போராட்டங்களை சிவசேனை தனக்கு ஆதரவாக வளைக்க முயல்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்’ என்ற நிலையை எடுக்கிறது. ஆட்சிக்கு எதிராக எழுந்து நிற்கும் மக்கள்சக்தியை காங்கிரஸ் ஆதரவாக மடைமாற்றுவதற்கு அது முயல்கிறது. தாங்கள் முன்வைத்த ‘வளர்ச்சி’ குறித்த கொள்கையும் நடைமுறையுமே இந்த முரண்பாட்டைத் தோற்றுவித்திருக்கிறது என்பது தெரிந்தாலும் அந்த இடத்தில் மௌனமாக இருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் மக்களுடைய பிரச்னைகள் மட்டும் தீர்க்கப்படுவதில்லை!

இப்போது உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த யமுனா விரைவுச்சாலைத் திட்டத்திற்கா ஏற்கனவே பல இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுவிட்டன. நோய்டா மாநகரப்பகுதியில் ஒரு சதுர மீட்டர் நிலத்துக்கு 6000 ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அலிகார், ஆக்ரா பகுதிகளில் 400 அல்லது 600 ரூபாய் அளிக்கப்படுகிறது. நிலத்தின் மதிப்பு நகரத்துக்கு நகரம் வேறுபடுகிறது என்பது உண்மைதான். ஆனால் நிலத்துக்கான சந்தைவிலை என்று அரசு சொல்வது பதிவாளர் அலுவலக மதிப்பீடுகளை வைத்துத்தானே? நிலம் வாங்குவதிலும் விற்பதிலும் கருப்புப் பணம் இல்லாமல் கைமாறும் பணத்துக்கு பத்திரம் வாங்குபவர்கள் எத்தனை பேர்? அப்படி என்றால் அரசு போடும் மதிப்பீடு எப்படி உண்மையான சந்தை நிலையை பிரதிபலிக்கும்? தங்களுடைய வாழ்நாள் சேமிப்பான நிலத்தையும் அரசாங்கத்திடம் இழந்துவிட்டு அதற்குரிய இழப்பீட்டையும் பெற முடியாத ஏழை எளிய மக்களுடைய வாழ்க்கை என்ன ஆகிறது?

மேற்குவங்கத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 45 சதவீத மக்கள் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். 50 சதவீத மக்கள் வறுமையில் துன்பப்படுகிறார்கள். குடும்பத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக கிராமங்களில் குழந்தைகள் படிப்பை பாதியில் விட்டுவிட்டு சின்னச் சின்ன வேலைகளுக்குப் போகிறார்கள். வயிற்றுப்பாட்டுக்கு வேறு வழியே இல்லாத நிலையில் சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பதாக அந்த ஆய்வு சொல்கிறது.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நெடுஞ்சாலைகள் போட வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. ரயில் போக்குவரத்துக்காக இருப்புப் பாதை அமைக்க வேண்டியிருக்கிறது. இதற்காக மக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்த வேண்டியதாகிறது. அப்படித் தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்தும் அதிகாரத்தை காலனிய பிரிட்டன் அரசுக்கு நில கையகப்படுத்தும் சட்டம், 1894 கொடுத்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு அதில் எப்போது மாற்றம் வந்தது? 1984-ம் வருடம் அந்த சட்டம் திருத்தப்பட்டது. அரசின் திட்டங்களுக்காக மட்டுமல்லாமல், தனியார் தொழில் நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்காகவும் மக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு வந்தது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகத் தொடங்கின.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை நமக்குள் விதைக்கப்பட்டது. ஆனால் இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அளவும், இந்த மண்டலங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு எண்ணிக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கவலையே மேலோங்குகிறது. இதுவரை 40 லட்சம் ஏக்கர் நிலம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறதாம்! ஆனால் அது உற்பத்தி செய்திருக்கும் வேலை வாய்ப்புகள் வெறும் ஐந்து லட்சம்தான் என்கிறது அந்த செய்தி.

இன்னொரு தகவல் இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு கடந்த 2000-ம் வருடம் வரையிலான ஐம்பத்து மூன்று வருடங்களில் அரசுத் திட்டங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களில் 20 சதவீத மக்களுக்குக் கூட முறையான மறு குடியமர்த்தலோ மறுவாழ்வுத் திட்டங்களோ கிடைக்கவில்லை என்பதே அந்தத் தகவல். இவை எல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இப்படிப்பட்ட வளர்ச்சியையா நாம் விரும்புகிறோம் என்ற வேதனை எழுவதைத் தடுக்க இயலவில்லை.

கடந்த காலத்தில் நடந்திருப்பது என்ன என்பதில் இருந்து நிகழ்கால போராட்டங்களின் தீவிரத்தை அறிந்து கொள்ளும்போது ஒருவருக்கு புதிய வெளிச்சம் கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இந்த பின்னணி குறித்துப் பேசுவதில்லை. போராட்டங்களில் நடந்த வன்முறை பற்றியே அதிகம் பேசுகின்றன. போராட்டங்களில் வன்முறை வெடிக்கும்போது அதில் முதலில் பலியாவது உண்மையே!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Thursday, May 12, 2011

பொய் சொன்னாலும் நீயே ...........

‘உலகத்திலேயே மிகவும் மோசமான பயங்கரவாதி’ என்று அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்டவர் ஒசாமா பின்லேடன்; அவர் இப்போது உயிருடன் இல்லை. அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த சிறப்பு அதிரடிப் படை அவரைக் கொன்றுவிட்டது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகில் ஒரு பிரமாண்டமான பங்களாவில் அவர் தங்கி இருந்தார். அங்கு அதிரடியாக உள்ளே நுழைந்த அதிரடிப்படை அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவரைக் கொன்று விட்டது. இதுவே ஊடகங்களும் அமெரிக்க அதிபரும் நமக்கு தந்த செய்தி.

ஆங்கிலத் திரைப்படங்களுக்கு இணையாக பரபரப்பான காட்சி அமைப்புகளுடன் ‘ஒசாமா வதைப் படலம்’ சித்தரிக்கப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்குள் புதிய காட்சிகளை அமெரிக்க அரசு சார்பில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நாட்டு மக்களுக்கான உரையில் சொல்லப்பட்ட திரைக்கதையின் முக்கிய காட்சிகளைக் கூட மாற்றும் அதிகாரம் அங்குள்ள அதிகாரிகளுக்கு இருக்கிறது போலிருக்கிறது. ஆனால் மாறாத செய்தி ஒன்று இருக்கிறது. ஒசாமா பின்லேடன் இப்போது உயிருடன் இல்லை என்பதே அது!

இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படி இறந்தார் என்பது சர்ச்சைக்குரிய செய்தியாகவே பல காலம் இருந்தது. அந்த ஒரு சர்ச்சையை வைத்துக் கொண்டு, போராளிகளின் சாவுகள் மட்டுமே சர்ச்சைகளை உருவாக்குகின்றன என்று சொல்லி விட முடியாது. பேரினவாத அடிப்படையிலான அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட இலங்கை அரசுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடினார்கள். அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக உயிரற்ற ஓர் உடலைக் காட்டினார்கள். அடுத்த சில நாட்களுக்கு ஏராளமான கதைகள் உலா வந்தன!
தமிழ்நாடு அதிரடிப்படையின் கைகளில் சிக்காமல் நீண்டநாட்களாக இருந்த வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் சர்ச்சைகள் கிளம்பின. மோரில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட வீரப்பனின் உடலை ஒரு வேனில் வைத்து பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டதாக அப்போது சொன்னவர்கள் உண்டு. பேட்டை ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்து தாதாக்கள் சிலர் ‘என்கவுண்டரில்’ கொல்லப்படும் போதும் சர்ச்சைகள் எழுகின்றன. ஏன்? அரசுத் தரப்பு சொல்லும் கதைகளில் ஓட்டைகளும் முரண்பாடுகளும் இருக்கின்றன!

“உண்மை வீட்டை விட்டு கிளம்புவதற்குள் பாதி உலகத்தைப் பொய் சுற்றி வந்து விடுகிறது” என்று சொல்வார்கள். ஒசாமா பின்லேடனின் இப்போதைய மரணச் செய்தியையும் ‘அப்பட்டமான பொய்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று சிலர் சொல்வதைப் போல, ஒசாமா இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று இவர்கள் சொல்லவில்லை. மாறாக, கடந்த 2001-ம் ஆண்டே சிறுநீரகம் செயல் இழந்து போனதால் அவர் இறந்து போய்விட்டார் என்பது அவர்களுடைய கருத்து. டேவிட் ரே க்ரிஃபின் என்பவர் எழுதிய ‘ஒசாமா பின்லேடன்: டெட் ஆர் அலைவ்’ என்ற நூலை ஆதாரமாகச் சொல்கிறார்கள். அவர் முன்வைக்கும் ஆதாரங்கள் என்னென்ன?

2001-ம் வருடம் டிசம்பர் மாதம் 13-ம் தேதியில் இருந்து ஒசாமாவின் தகவல்கள் அமெரிக்க உளவுத் துறையால் இடைமறித்துக் கேட்கப்படவில்லை. அதே ஆண்டு டிசம்பர் 26-ம் நாள் பாகிஸ்தானின் ஒரு பிரபல செய்தித்தாளில் ஒரு செய்தி வந்தது. பாகிஸ்தானில் இருக்கும் தலிபான் பயங்கரவாதிகளில் முக்கியமான ஒருவர், ‘ஒசாமா பின்லேடனின் இறுதிச் சடங்குகளில்’ தான் பங்கேற்றதாகத் தெரிவித்து இருந்தார். மிகவும் மோசமாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 2001, செப்டம்பர் மாதத்தில் ராவல்பிண்டி மருத்துவமனையில் ஒசாமா அனுமதிக்கப்பட்டிருந்ததாக சிபிஎஸ் நியூஸ் சொன்னது. ஜூலை, 2001 –இல் துபாயில் ஒரு மருத்துவமனையில் ஒசாமா சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அப்போது அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் அதிகாரி அவரை அங்கு சந்தித்ததாகவும் ஒரு தகவல் சொல்கிறது.

2002, ஜூலை மாதத்தில் சி.என்.என் ஒரு செய்தி வெளியிட்டது. அந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே ஒசாமா பின்லேடனின் மெய்க்காவலர்கள் பிடிபட்டார்கள் என்கிறது அந்த செய்தி. அதற்கு என்ன அர்த்தம் என்றும் அந்த செய்தி அறிக்கை விளக்கியது. ‘பின்லேடனின் மெய்க்காவலர்கள் தனியாகப் பிடிபடுகிறார்கள் என்றால், அந்தக் காவலர்கள் யாருடைய பாதுகாவலர்களாக இருந்தார்களோ, அந்த முக்கியமான நபர் உயிருடன் இல்லை என்று பொருள்’ என்பதே அந்த விளக்கம்! அத்துடன் அவருடைய ஆதாரங்கள் நிற்கவில்லை. பாகிஸ்தான் அதிபராக அப்போது இருந்த பர்வேஸ் முஷாரப், ஆப்கானிஸ்தான் அதிபர் கர்ஸாய், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எஃப். பி.ஐ.யின் பயங்கரவாத தடுப்புப் பிரிவுத் தலைவர் டேல் வாட்சன் உள்ளிட்ட பலர் பின்லேடன் உயிரோடு இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அவ்வப்போது பின்லேடன் பேசியதாக வெளியான டேப்கள் உண்மையானவை அல்ல என்றும் உருவாக்கப்பட்டவை என்றும் சொல்கிறார்கள்!

இவை எல்லாம் பின்லேடன் 2001-லேயே இறந்து போய்விட்டார் என்று சொல்பவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள். ஒருவேளை இவை சொல்வது உண்மை என்று வைத்துக் கொள்வோம். உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் இவ்வளவு பெரிய உண்மைக்கு மாறான தகவலை நாட்டு மக்களிடம் சொல்வாரா? அல்லது அவருக்கே தெரியாமல் இதெல்லாம் நடக்கிறதா? ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் ஒசாமா நிராயுதபாணியாக இருந்தார் என்று அமெரிக்கா இப்போது சொல்கிறது. அப்படி என்றால் அவரை ஏன் கொல்ல வேண்டும்? உலகம் முழுவதும் பயங்கரவாத வலைப்பின்னலை தலைமை தாங்கி நடத்தும் ஒருவர் உயிருடன் சிக்கினால் தானே அரசுக்கு பயன்?

ஒரு மனிதனுடைய மரணத்தை உறுதிசெய்வது எது? அவனுடைய உயிரற்ற உடல்தானே? ஒசாமாவின் உடலை உலக மக்களுக்குக் காட்டாமல், அவசர அவசரமாக கடலில் ‘அடக்கம்’ செய்வதற்கு என்ன காரணம்? சாட்சியாக சடலத்தைக் காட்டாமல் இருந்தால் ஒரு மரணத்தை சட்டம் ஏற்றுக் கொள்ளுமா? இப்படி ஏராளமான கேள்விகள் வரலாம் என்பது தெரிந்தும் ஓர் அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது? அமெரிக்க அதிபர் மீண்டும் ஒருமுறை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறார். ஆனால் அவருடைய கவர்ச்சி இப்போது அமெரிக்க மக்களிடம் எடுபடவில்லை. அவருக்கான மக்கள் ஆதரவு குறைந்திருந்தது. ஆனால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என்றும் 9/11 நிகழ்வுக்கு நீதி வழங்கப்பட்டது என்றும் ஒபாமா உரை ஆற்றினார். இதனால் அமெரிக்க தேசியத்தின் பெருமை உயர்த்திப் பிடிக்கப்பட்டவுடன், அவருக்கான ஆதரவு இப்போது பெருகி இருக்கிறது.

ஒசாமா பின்லேடன் உயிருடன் இல்லை என்று அதிகாரப் பூர்வமாக ஏற்றாகி விட்டது. நல்லது! இப்போது பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் போர் முடிவுக்கு வருமா? வரும்.. ஆனா வராது. ஏன்? ஒசாமாவின் சாவுக்கு அல்கைதாவும் தலிபானும் பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தும் என்று அமெரிக்கா எச்சரிக்கிறது! அந்தத் தாக்குதல்களில் இருந்து உலக மக்களை அமெரிக்காவைத் தவிர வேறு யாரால் காப்பாற்ற முடியும்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

குப்புறத் தள்ளி குழியும் பறித்த கதை!

“நல்ல நாள் பார்த்து செய்யுங்கள்” என்று சில பெரியவர்கள் சொல்வதை நாம் இங்கு கேட்டிருக்கிறோம். அதைப் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லும் நல்ல நாள், நல்ல நேரம் என்றே நான் இவ்வளவு காலமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய அந்தப் பார்வை கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மாறியது. அந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன? மாற்றியவர் யார்? எத்தனையோ ‘சாதனைகளைச்’ செய்து முடித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே அந்த மாற்றத்தை என்னுள் உருவாக்கியது. அந்த முக்கியமான செயலைச் செய்து ‘வரலாற்றில்’ இடம் பிடித்தவர் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

ஒரு ‘சுப யோக சுப தினத்தில்’ மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் அணு மின் நிலையத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக சொன்னார். என்றைக்கு அப்படி ஓர் உறுதியை வெளிப்படுத்துகிறார்? ஏப்ரல் 26-ம் நாள். அந்த நாளுக்கு அப்படி என்ன சிறப்பு? 1986-ம் வருடம் அதே நாளில் தான் அன்றைய சோவியத் யூனியனின் உக்ரைன் மாநிலத்தில் செர்னோபில் அணுமின் நிலையத்தில் பெரிய விபத்து நடந்தது. மிக மோசமான அணு விபத்து என்று வரலாறு அதைப் பதிவு செய்திருக்கிறது. அந்த உலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக கதிர்வீச்சு காற்றில் கலந்து சோவியத் யூனியனின் மேற்குப் பகுதி முழுவதையும் பாதித்தது.

கடந்த மார்ச் மாதம் 11-ம் நாள் ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் சுனாமியால் நடந்த விபத்து நம்முடைய நினைவை விட்டு இன்னும் போயிருக்காது. அந்த விபத்துக்கு 7 என்ற ஆபத்து வகை எண் கொடுத்து அதன் தீவிரத்தை நமக்குப் புரிய வைத்தார்கள். அதைப் போலவே செர்னோபிலில் நடந்த விபத்துக்கும் ஏழு என்ற எண்ணையே கொடுத்தார்கள். சுற்றுச் சூழலில் அந்தக் கதிர்வீச்சு ஏற்படுத்திய பாதிப்பை சரி செய்வதற்காக ஏறத்தாழ 5 லட்சம் பேர் இறங்கி வேலை செய்தார்கள். அதற்காக கிட்டத்தட்ட 1800 கோடி ரூபிள்களை அரசு செலவழிக்க நேர்ந்தது.

அப்படிப்பட்ட ஒரு நாளை ஜெய்ராம் ரமேஷ் தேர்ந்தெடுத்திருக்கிறார்; அணுமின் உற்பத்தியைக் கைவிட மாட்டோம் என்ற கொள்கையை அந்த நாளில் அவர் பிரகடனம் செய்கிறார். ஜெய்தாப்பூர் திட்டத்துக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களையும் மீறி திட்டம் செயல்படுத்தப்படும் என்ற உறுதியையும் அவர் வெளிப்படுத்துகிறார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு விபத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, இப்போது நடந்த ஃபுகுஷிமா விபத்தின் பாதிப்பையாவது கருத்தில் கொள்ளுங்கள் என்று பல அறிஞர்கள் சொல்லிப் பார்த்தார்கள். “நீங்கள் கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை எங்களுக்குத் தேவையில்லை; நாங்கள் எங்கள் நிலங்களைத் தர மாட்டோம்” என்று அந்தப் பகுதி மக்கள் உறுதியாகப் போராடினார்கள். துப்பாக்கிச் சூட்டுக்கு அங்கு உயிர் பலி வேறு கொடுத்தாகி விட்டது. இவை எதுவும் இந்த அரசிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை!

ரத்னகிரி மாவட்டத்து மக்களுக்கு இது போன்ற போராட்டங்கள் ஒன்றும் புதியது இல்லை. தங்களுடைய போராட்டங்களை மீறி திட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்திருப்பதை வரும் காலத்தில் அவ்வளவு சுலபமாக அவர்கள் விட்டுவிட மாட்டார்கள். 1990- களின் தொடக்கத்தில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை அங்கு உருவாக்க அரசு தீர்மானித்தது. ஆனால் அந்தப் பகுதி மக்களின் தொடர்ச்சியான போராட்டம் அந்த ஆலையைத் தூத்துக்குடிக்கு விரட்டி விட்டது. ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் அந்தப் பகுதியில் விளையும் ‘அல்போன்சா’ மாம்பழ உற்பத்தியைப் பாதிக்கும் என்று மக்கள் அங்கு போராடினார்கள். இறுதியில் வெற்றியும் பெற்றார்கள்.
மேற்கு வங்கத்தில் சிங்கூரில் இருந்து டாடா நானோ கார் தொழிற்சாலை பின்வாங்க நேர்ந்தது. நந்திகிராமில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த சலீம் குழுமம் ரசாயனத் தொழிற்சாலை தொடங்க முடியாமல் மக்கள் ஒன்றுபட்டு நின்றார்கள். அதே சமயத்தில் மக்கள் தோற்றுப் போய் கைவிட்ட போராட்டங்களும் இருக்கின்றன. என்ரான் நிறுவனத்தின் உதவியுடன் வந்த தாபோல் மின் திட்டத்துக்கு எதிராக மகாராஷ்டிராவில் மக்கள் போராடினார்கள். ஆனால் அவர்களால் அந்தத் திட்டத்தைத் தடுக்க முடியவில்லை.

இந்த வகைப் போராட்டங்கள் எல்லாமே தொடங்கப்படும்போது அரசியல் கட்சிகளால் ஆதரிக்கப்படுவதில்லை. மக்கள் ஒன்றுபட்டு உறுதியுடன் நிற்கிறார்கள் என்று தெரிந்த பிறகு மெல்ல உள்ளே நுழைந்து போராட்டத்தின் தலைமையை அரசியல் கட்சிகள் கைப்பற்றி விடுகின்றன. போராட்ட்த்தின் வீச்சு மாநிலம் முழுவதும் பரவி ஆட்சி மாற்றத்துக்கு உதவுகிறது. போராட்டத்தை ஆதரித்த கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ‘அந்தர் பல்டி’ அடித்து அந்த தொழில் குழுமத்துடன் ஒரு ‘புதிய ஒப்பந்தம்’ போட்டுவிடுகிறது! வெளிப்படையான நிர்வாகம் என்பது இன்னும் நம் கனவு மட்டுமே!

ஆனால் வேறு சில நாடுகளில் மக்கள் எழுப்பும் குரல்களுக்கு உடனடியாக பதில் கிடைக்கிறது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் அணு உலைகளைக் கட்டுவது தொடர்பாக ஒரு மறு மதிப்பீடு தேவை என்று அரசு சொல்லி இருக்கிறது. அந்த ஆய்வுக்கும் மதிப்பீட்டுக்கும் பிறகு அந்த நாடுகள் அணு உலைகளைக் கட்டலாம்; ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுப்பார்களாக இருக்கலாம். பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி அபூர்வமாக நடப்பதே விபத்து. அப்படி ஒரு விபத்து நடந்தால், நாம் அதன் விளைவுகளைச் சமாளிப்பதற்கோ, எதிர்கொள்வதற்கோ எந்த அளவு தயாராக இருக்கிறோம் என்பதே நம்முடைய மனதில் எழும் கேள்வி.

சரி, விபத்துக்களே நடக்காமல் நம் அரசு பார்த்துக் கொள்ளும் என்று நாம் நம்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அணு உலைகளை பயங்கரவாதிகள் தாக்கக் கூடும் என்று நம்முடைய அரசு சார்பாக அவ்வப்போது எச்சரிக்கை வருகிறதே, அதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? அப்படி எதுவும் நடக்காது என்று அரசாங்கம் உறுதி அளிக்குமா? மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையும் அக்கறையும் நம்முடைய அரசுகளிடம் இருக்கின்றனவா? போபாலில் நடந்த விஷவாயுக் கசிவு விபத்துக்குப் பிறகு இன்று வரை அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

முதலில் மக்களிடம் இருந்து நிலத்தைப் பறிக்கிறோம்; அங்கு ஏதோ ஒன்றைக் கட்டி சுற்றுச்சூழலைக் கெடுக்கிறோம்; அவர்களுடைய வேலை வாய்ப்புகளைப் பறிக்கிறோம்; இவ்வளவுக்கும் பிறகு மக்கள் எப்படி இருப்பார்கள்? அணு ஆபத்தைப் போலவே இந்தச் சூழலில் வேறு ‘அச்சுறுத்தலுக்கான’ ஆபத்தும் அதிகம் இருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

நிறம் மாறாத புள்ளிகள்

“அவங்க வேறு எப்படி நடந்துக்குவாங்கன்னு நீங்க நினைக்கறீங்க?” என்று அந்த நண்பரிடம் கேட்டேன். நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் நடந்த கலாட்டாக்கள் பற்றி அப்போது செய்தி வந்திருந்தது. அந்தக் குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் யார்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள்; அவர்களை நியமித்திருப்பது எது? மக்களவை. பிறகு அந்தக் குழுவில் மட்டும் அமளியும் போட்டிக் கூட்டங்களும் எப்படி இல்லாமல் போகும்?

தமிழ்நாடு, ஆந்திரா, உ.பி, மகாராஷ்டிரா,ஒரிசா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் அந்தக் குழுவில் இருக்கிறார்கள். அந்தந்த மாநில சட்டமன்றக் கூட்டங்களில் அவ்வப்போது என்னென்ன நடந்தன என்பது அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்? அங்கே கற்ற பாடங்களை வேறு எங்கே பரிசோதித்துப் பார்ப்பது? அதனால் அந்த கலாட்டா பற்றி எனக்கு ஆச்சரியமோ அதிர்ச்சியோ எதுவும் இல்லை!

ஆனால் பேசிக் கொண்டிருந்த நண்பர்களுக்கு வருத்தம் இருந்தது. அவர்களுக்கு இன்னும் நாடாளுமன்றத்தின் மீதும் அது அமைக்கும் நிலைக் குழுக்கள் மீதும் நம்பிக்கை இருந்தது. அவநம்பிக்கையாளர்களாக அவர்கள் இன்னும் மாறவில்லை. மரபுகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன என்பதால் அவர்கள் வருத்தப்பட்டிருக்கலாம். அல்லது காங்கிரஸ், பிரதமர் மன்மோகன்சிங், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக என்று பல முனைகளில் தாக்கும் அற்புத ஆயுதமான ஓர் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாமல் போகிறதே என்ற வருத்தமாகவும் இருக்கலாம். அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம். அவர்களுடைய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் பல வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்!

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டம் நடந்தது. அதன் தலைவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து அந்தக் குழு விசாரித்து ஒரு வரைவு அறிக்கையைத் தயாரித்து இருந்தது. அந்த அறிக்கை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அவரைக் கண்காணிக்கத் தவறிய பிரதமர், பிரதமர் அலுவலகம், அப்போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் என்று எல்லோரையும் குற்றம் சாட்டி இருந்தது. அந்த வரைவு அறிக்கையைக் குழு ஏற்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்யவே அன்றைய கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்களுக்கு அந்த வரைவு அறிக்கையின் நகல் கொடுக்கப்பட்ட நாளே அதன் உள்ளடக்கம் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியது. திமுகவுக்கும் காங்கிரசுக்கும் சங்கடங்களை உருவாக்கும்படி அந்த அறிக்கை இருந்ததால், அந்தக் கட்சிகள் ‘ஊடகங்களுக்கு அறிக்கை கசிந்தது எப்படி’ என்று கண்டனம் தெரிவித்தன. முரளி மனோகர் ஜோஷி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அந்த வரைவு அறிக்கையை ஏற்காமல் நிராகரிப்பதற்கு குழுவுக்குள் பெரும்பான்மையைத் தேடும் முயற்சிகளில் ஆளும் தரப்பு இறங்கியது.

ஒவ்வொரு வருடமும் பொதுக் கணக்குக் குழு அமைக்கப்படும். 22 உறுப்பினர்களுக்கு மிகாமல் அந்த குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். மக்களவையில் இருந்து 15 பேரும், மாநிலங்களவையில் இருந்து 7 பேரும் இருக்கலாம். இந்த 22 பேரும் மத்திய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கக் கூடாது என்பது விதி. இப்போது இந்தக் குழுவில் மொத்தம் 21 உறுப்பினர்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏழு பேர். திமுகவில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் முறையே இரண்டு பேர். பாஜகவுக்கு நான்கு பேர்; சிவசேனை, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒவ்வொரு உறுப்பினர்.

இந்தக் கணக்கில், காங்கிரசும் திமுகவும் சேர்ந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் எண்ணிக்கை ஒன்பது. பா.ஜ.க கூட்டணியின் எண்ணிக்கை ஏழு. அதிமுகவும் மார்க்சிஸ்ட்டும் சேர்ந்து மூன்று. இந்த மூன்று பேரும் ஆளும் கூட்டணிக்கு எதிராக இருப்பதால் வரைவு அறிக்கைக்கு ஆதரவான வாக்குகள் பத்து. எதிரான வாக்குகள் ஒன்பது. இங்கே தான் இந்திய அரசியலை தங்கள் விருப்பப்படி வளைக்கும் வலிமை கொண்ட உத்தரப் பிரதேச அரசியல் வருகிறது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒரே கட்சியை ஆதரிக்க மாட்டார்கள் என்று சொல்லும் நண்பர்கள் கவனிக்க வேண்டிய இடம் இது. தங்களுடைய சிண்டு அல்லது குடுமியின் பிடி மத்திய ஆட்சியாளர்களிடம் இருந்தால், சிற்றரசர்களும் குட்டிராணிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் சரணடையத் தயாராக இருப்பார்கள் என்பதை நாம் மாயாவதி, முலாயம்சிங் நடவடிக்கைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஆம். பொதுக் கணக்குக் குழுவில் வரைவு அறிக்கைக்கு எதிராகவும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாகவும் மாயாவதியின் கட்சியும் முலாயம் சிங் கட்சியும் ஒரே பக்கத்தில் நின்றன!

இப்போது குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு நெருக்கடி உருவானது. அவர் தயாரித்த வரைவு அறிக்கைக்கு அவர் தலைவராக இருக்கும் குழுவில் பெரும்பான்மை இல்லை. அவருக்கு எதிராக 11 வாக்குகளும் ஆதரவாக 10 வாக்குகளும் இருந்தன. மொத்த எண்ணிக்கை 20 ஆக இருந்து ஆதரவும் எதிர்ப்பும் சமமாக இருந்தால் தலைவர் என்ற முறையில் அவர் ‘தீர்மானிக்கும்’ வாக்கை அளிக்கலாம். இப்போது அதற்கும் வழியில்லை. முடிவுகளைத் தள்ளிப் போடுவதற்காக முரளி மனோகர் ஜோஷி கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு வெளியேறினார். அவருக்கு ஆதரவானவர்களும் வெளியேறினார்கள். அரசுக்கு ஆதரவான 11 பேரும் காங்கிரஸைச் சேர்ந்த சைபுதீன் சோஸ் என்ற முன்னாள் மத்திய அமைச்சரை தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அவர் வரைவு அறிக்கை நிராகரிக்கப்பட்டது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்!

இந்த செயல் சட்டரீதியாக செல்லத்தக்கதா என்பது வேறு விஷயம். பொதுக் கணக்குக் குழுவில் வரைவு அறிக்கைக்கு பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்படையான உண்மை. இது ‘ஊழலுக்கு’ எதிராக இருக்கும் ஒரு பகுதி மக்களுக்கு தார்மீக ரீதியாக சோர்வைக் கொடுக்கும். வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் காங்கிரஸ் கட்சி என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதைக் கடந்த கால வரலாற்றில் பல சம்பவங்களில் இருந்து பார்க்க முடியும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் நரசிம்மராவ்! முலாயம் சிங்- அமர்சிங்கிடம் பேரம் நடத்தியும் எதிர்க்கட்சி எம்.பிக்களை ‘வாங்கியும்’ 2008-ல் பிரதமர் மன்மோகன்சிங் தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்!

இந்த முலாயம்சிங் யாதவ், மாயாவதி போன்றவர்களை நம்பித்தான் சிலர் மூன்றாவது அணி என்றும் மாற்று அணி என்றும் பேசி வருகிறார்கள். இந்த மண்குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கும் அவர்களைப் பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

நெருக்கடியில் திமுக

அவர்கள் வானத்தில் இருந்து குதித்த தேவதூதர்கள் இல்லைதான். எந்தவிதமான அரசியல் நிர்ப்பந்தங்களுக்கும் இடம் கொடுக்காத சுதந்திரமான அமைப்பினர் என்றும் சொல்ல முடியாது. ஆனால் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அவர்களுடைய செயல்பாடு நாடு முழுக்க ஏதோ ஒருவித உணர்வை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.
சி.பி.ஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய புலனாய்வு நிறுவனம் அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் கல்மாடியைக் கைது செய்தது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை டெல்லியில் நடத்தும்போது நடந்த முறைகேடுகளுக்கு அவர் காரணமாக இருந்தார் என்பது குற்றச்சாட்டு. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டின் இரண்டாம் குற்றப்பத்திரிகையையும் அன்றுதான் சிறப்பு நீதிபதியிடம் சி.பி.ஐ தாக்கல் செய்தது!

இந்தக் குற்றப்பத்திரிகையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருக்கிறது; கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. அந்தத் தொலைக்காட்சியில் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் இடம் பெறவில்லை.

அவருடைய உடல்நலக் குறைவு காரணமாகவும் முதுமை காரணமாகவும் அவரால் கலைஞர் டிவி வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட முடி யாது; சரத்குமாரே நிர்வாகம் முழுவதையும் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் சொல்லியதை அந்தத் தொலைக்காட்சியின் இயக்குநர் குழுமக் கூட்டத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் அவருக்குத் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் பேசவோ எழுதவோ பேசினால் புரிந்து கொள்ளவோ முடியாது; சட்டத்தின் தேவைக்காக அவர் கூட்டத்தில் கலந்து கொள்வாரே தவிர அங்கு என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியாது. அதனால் அவரை விசாரித்த போதிலும் அவருடைய பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை என்று சிபிஐ சொல்லி இருக்கிறது.

ஆனால் கலைஞர் தொலைக்காட்சியைத் தொடங்கும் காலத்தில் இருந்து கனிமொழி அதை உருவாக்குவதில் தீவிரமாகப் பணியாற்றினார் என்று சிபிஐ சொல்கிறது. அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவைத் தொடர்பு கொண்டு அவர் மூலமாக பல வேலைகளைச் செய்து வாங்கி இருக்கிறார். தொலைக்காட்சியில் 20 சதவீத பங்குகள் கனிமொழிக்கு இருக்கின்றன. அதன் செயல்பாடுகளில் மூளையாக செயல்பட்டிருக்கிறார் என்று சிபிஐ தன் குற்றப்பத்திரிகையில் கனிமொழி குறித்து குறிப்பிடுகிறது.

மாறன் சகோதரர்களுடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு முரண்பாடுகள் தோன்றுவதற்கு முன்னால் கனிமொழி தீவிர இலக்கியவாதியாக அறியப்பட்டார். அரசியல் அதிகாரத்தின் அருகாமை அவரிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தியதாக அந்தக் காலகட்டங்களில் எந்த செய்தியும் வந்தது கிடையாது. இந்திய மக்களிடம் கவிஞராகவும் கனிந்த மனம் கொண்ட மனித உரிமை ஆர்வலராகவும் அறியப்பட்டிருக்க வேண்டிய ஒருவர், இன்று இந்தியா முழுவதும் நேர்மாறான விதத்தில் பிரபலமாகி இருக்கிறார். ‘அதிகாரம் தவறு செய்யத் தூண்டுகிறது; முழுவதுமான அதிகாரம் முழுவதுமான பெரிய தவறுகளைச் செய்யவைக்கிறது’ என்பதை வேத வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது! சிபிஐ சொல்வதைப் போல் அவர் குற்றம் செய்தவராக இருந்தாலும் வேறு ‘உள் முரண்பாடுகளைப்’ பார்க்கும்போது அவரை ‘பாதிக்கப்பட்டவராகவே’ புரிந்து கொள்ள முடிகிறது!

மத்திய அமைச்சராக இருந்த ராசா திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்தார். மத்திய அமைச்சரவையில் இருந்து அவர் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். அதனால் திமுக – காங்கிரஸ் உறவு பாதிக்காது என்று இரண்டு தரப்பிலும் சொன்னார்கள். கருணாநிதியின் மனைவியும் மகளும் சிபிஐயால் விசாரிக்கப்பட்டார்கள்; திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்குள் வந்து கலைஞர் தொலைக்காட்சி அலுவலகம் சோதனை செய்யப்பட்டது. “அதனால் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையில் இருக்கும் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை” என்றார்கள். இப்போது கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இப்போதும் காங்கிரசில் இருந்து அதே பல்லவியைப் பாடுகிறார்கள். “ 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கனிமொழி பெயர் இடம்பெற்றதால், திமுகவுடன் உள்ள உறவில் விரிசல் வராது; எங்கள் கூட்டணி எப்போதும் போல் தொடரும்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி சொல்கிறார்.

திமுகவும் அதே கருத்தை எதிரொலிக்கப் போகிறதா தெரியவில்லை. இந்த வரிகளை உள்ளீடு செய்து கொண்டிருக்கும்போது திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம் ஏப்ரல் 27-ம் தேதி நடக்க இருக்கிறது என்ற செய்தி மட்டுமே வந்திருக்கிறது. ஆனால் இந்த இதழ் உங்கள் கைகளில் இருக்கும்போது அந்தக் கூட்டத்தின் தீர்மானங்களும் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கும் இந்த நாட்களில் திமுக அதிரடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றே தோன்றுகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்களா என்ற கேள்வியை ஊடகங்கள் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. இந்தவிதமான ‘உசுப்பேற்றல்களுக்கு’ எல்லாம் திரைப்படங்களில் வடிவேலு பலியாகி இருக்கலாம். ஆனால் வடிவேலுவை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய திமுக அதுமாதிரியான சூழலுக்கு இடம்தராது என்ற எண்ணமே மேலோங்குகிறது.

அதை உறுதிசெய்வது போல ஜெயலலிதா ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்ற அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோருகிறார். அது மட்டுமா? கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார். ஒருவேளை மே 13-ல் வர இருக்கும் தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக இருந்தால், அவர் இன்னும் வேகமாக இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பார். அப்போது மத்திய அமைச்சரவையில் இல்லாமல் இருந்தால் இன்னும் நெருக்கடிகளை திமுக சந்திக்க நேரிடலாம். அதனால் அமைச்சர்களை விலக்கிக் கொள்ளும் முடிவை திமுக உயர்நிலைக் குழு எடுக்காது என்றே தோன்றுகிறது.

அதே சமயம் காங்கிரஸ் என்னவெல்லாம் செய்கிறது? சுரேஷ் கல்மாடியை காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்கிறது. ஆனால் ஆ.ராசா கைது செய்யப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் அவர் மீது கட்சி ரீதியாக திமுக இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொலைக்காட்சி விவாதங்களுக்கு வரக் கூடிய காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் ‘தவறு செய்பவர்களை நாங்கள் விட்டு வைப்பதில்லை; அவர்கள் மீதெல்லாம் நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் அப்படி நடவடிக்கை எடுக்கின்றனவா?” என்று மார்தட்டுகிறார்கள். ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுப்பது காங்கிரஸ் கட்சி மட்டும்தான் என்று அவர்களுடைய ஊழல்களையும் எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிடுகிறார்கள். அப்படி ஓர் நெருக்கடியை அவர்கள் திமுகவுக்கும் உருவாக்கக் கூடும். ராசா மீதும் கனிமொழி மீதும் நடவடிக்கை எடுங்கள் என்ற நிர்ப்பந்தம் வருமானால் திமுக என்ன செய்யும்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

“அடங்க மறுத்தால் அவதூறு செய்”!

எதிர்ப்பவர்களை எப்படி அடக்கி ஒடுக்குவது என்பதை தனிமனிதர்களை விட அரசாங்கம் நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அதிகாரத்தைக் கேள்வி கேட்பவர்கள் மத்தியில் முதலில் பயத்தை விதைக்க வேண்டும்; அவர்களிடம் இருக்கும் அறியாமையை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; சாதி, மதம், இனம் போன்ற விஷயங்களின் மூலம் எதிர்ப்பவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்; இவற்றை எல்லாம் மீறியும் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் அணி திரண்டார்கள் என்றால் எதிர்க்கும் தலைவர்கள் மீது அவதூறுகளை அள்ளி விட வேண்டும். இந்த வழிமுறைகளை எல்லாம் ஏதேனும் நிர்வாகப் பள்ளி சொல்லிக் கொடுக்கிறதா என்று தயவுசெய்து கேட்காதீர்கள். இருக்கும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இருக்கும் தனிமனிதர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் காலம்காலமாக இந்த வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்!

அப்படி ஒரு நிலையைத் தான் அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கம் இன்று எதிர்கொள்கிறது. அந்த இயக்கத்தால் எந்த அடிப்படைகளும் தகர்ந்து போகப்போவதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது நன்றாகத் தெரிந்தாலும் கூட, அன்னா ஹசாரே குழுவினரை அவ்வளவு சுலபமாக அவர்களால் விட்டுவிட முடியவில்லை. “ஊழல் குடியரசு” என்று இளைஞர்கள் இணையத்திலும் செல்பேசி குறுஞ்செய்திகளிலும் இந்தியாவைக் கிண்டல் செய்கிறார்கள். எந்த ஒரு அரசுத் திட்டமும் ஊழல் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படாது என்று பொதுமக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

இந்த நிலையில் லோக்பால் சட்டம் நம்முடைய நாட்டில் ஊழலைக் கட்டுப்படுத்தும் அல்லது அறவே ஒழிக்கும் என்ற நம்பிக்கை நம்மிடம் விதைக்கப்பட்டது. டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் மாபெரும் அறப் போராட்டமாக சித்தரிக்கப்பட்டது. லோக்பால் சட்டம் இயற்றுவதற்கான குழுவில் அன்னா ஹசாரே சொல்லும் நபர்களும் சேர்க்கப்பட்டனர். முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூஷண், அவருடைய மகன் பிரசாந்த் பூஷண் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றார்கள். இப்போது அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

சாந்தி பூஷண் என்ற பெயர் எனக்குப் பரவசமூட்டிய நாட்களை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். 1971 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவருடைய தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ராஜ் நாராயண் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றுப் போனவர் அவர். அந்த வழக்கில் ராஜ்நாராயண் வெற்றி பெற்றார். இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த ஆறு வருடங்களுக்கு அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தடை விதித்தது. அதை அடுத்து சட்டங்கள் வளைக்கப்பட்டதும் நாடு முழுவதும் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டதும் தனிக்கதை! ராஜ்நாராயணனின் அந்த வழக்கை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தவர் சாந்திபூஷண்!

நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டு 1977-ல் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அடுத்து அமைந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் அமைச்சரவையில் இதே சாந்தி பூஷண் சட்ட அமைச்சரானார். எதற்காக இப்போது அதை எல்லாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது? மத்திய சட்ட அமைச்சராக இருந்த காலத்திலேயே சாந்திபூஷண் லோக்பால் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆட்சி போனதோடு அந்த மசோதாவும் கிடப்பில் போடப்பட்டது!

இன்றைய கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் போட்ட ஒரு வழக்கிலும் உச்சநீதிமன்றத்தில் சாந்திபூஷண் வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்றுக் கொடுத்தார். இடமலையார் அணையில் நீர்மின் திட்டப்பணிக்காக கொடுக்கப்பட்ட ஓர் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு அது. அமைச்சர் பாலகிருஷ்ணபிள்ளை போட்ட அந்த ஒப்பந்தத்தால் மாநில அரசுக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அச்சுதானந்தன் வழக்கு போட்டார். உச்சநீதிமன்றம் வரை வந்த அந்த வழக்கில் பாலகிருஷ்ண பிள்ளைக்கு 10000 ரூபாய் அபராதமும் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் கொடுக்கப்பட்டது. நீதித்துறை பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கோரி சாந்தி பூஷணும் அவருடைய மகன் பிரசாந்த் பூஷணும் இயக்கம் நடத்தி வருகிறார்கள்.

“நீங்கள் சட்ட அமைச்சராக இருந்திருக்கிறீர்கள்; ஆனால் தெருவில் குறும்புகள் செய்து கொண்டு திரியும் சிறுவன் மாதிரி பேசுகிறீர்கள்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த காலத்தில் சாந்தி பூஷணைக் கண்டித்திருக்கிறார்கள்; அதேபோல் ஒரு சமயம், “நான் சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அதற்காக நான் மன்னிப்பு கேட்கவும் போவதில்லை. நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்” என்று சாந்தி பூஷண் நீதிமன்றத்தில் உறுதியாக இருந்த நிகழ்வும் நடந்திருக்கிறது.

இந்தப் பின்னணியில் இப்போது அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. நீதிபதிகளைச் ‘சமாளிப்பதில்’ மகன் பிரசாந்த் கில்லாடி என்றும் அதற்கான செலவு 4 கோடி ரூபாய் வரை ஆகலாம் என்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங்கிடம் சாந்திபூஷண் பேசிக் கொண்டிருக்கும் ஒரு குறுந்தகடு வெளியானது. அது ஒட்டுவேலை செய்யப்பட்ட சி.டி என்று ட்ரூத் லேப்ஸ் என்ற தனியார் நிறுவனம் சொல்கிறது. அதில் எந்த ஒட்டு வேலையும் இல்லை என்றும் உண்மையான பதிவுதான் என்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வகம் தெளிவுபடுத்துகிறது. எது உண்மை என்று இப்போது யாரும் அறிந்து கொள்ள முடியாது.

நில ஒதுக்கீடு பற்றிய அடுத்த குற்றச்சாட்டு கவலை அளிக்கிறது. நொய்டா நகரத்தில் 10000 சதுர மீட்டர் பரப்பு கொண்ட பண்ணை இல்ல நிலத்தை உத்தரப் பிரதேச மாநில அரசு சாந்தி பூஷணுக்கு ஒதுக்கி இருக்கிறது. இதற்காக அவர் மூன்றரை கோடி ரூபாய் கட்டியிருக்கிறார். ஆனால் இதன் மதிப்பு பல மடங்கு அதிகமாக இருக்கும். அவருடைய இன்னொரு மகனான ஜெயந்துக்கும் ஒரு பண்ணை இல்ல நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான ஒதுக்கீட்டில் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டது என்று பூஷண்கள் சொல்கிறார்கள். அந்த ஒதுக்கீடு தற்செயலானதா அல்லது திட்டமிட்டு கொடுக்கப்பட்டதா என்பது வேறு விஷயம். ஆனால் லோக்பால் சட்ட மசோதாவை உருவாக்கும் குழுவில் இருந்து பூஷண்கள் விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகத் தொடங்கி விட்டது.

இதை எல்லாம் பார்க்கும்போது என்ன எண்ணம் தோன்றுகிறது? பதவிகளில் இருப்பவர்களை விட அதிகாரத்தை எதிர்ப்பவர்கள் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும் போலிருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்