Monday, May 30, 2011

பெருமையல்ல!

இப்படி ஒன்று நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னால் யாராவது சொல்லி இருந்தால், யாரும் அதைக் காதிலேயே போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். கட்சியிலும் வெளியிலும் இப்படி ஒரு காட்சியை யாரும் எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள். பொதுவாழ்க்கையில் குற்றம் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட சிலர் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகளின் அவசியம் பற்றி தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி டெல்லியில் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என்பதை எப்படித்தான் கட்சியினரால் எதிர்பார்க்க முடியும்?

மே 23-ம் நாள் சூரியன் உமிழும் வெப்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கும் மாலை நேரத்தில், கருணாநிதி திகார் சிறையில் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார். அவரது துணைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, டி.ஆர்.பாலு ஆகியோர் அப்போது உடன் இருந்ததாக செய்திகள் சொல்கின்றன. “இந்த சந்திப்பு உணர்வுபூர்வமாக இருந்தது” என்று அதிகாரிகள் சொன்னதாக ஒரு செய்தி சொல்கிறது. அது உணர்ச்சிபூர்வமானதா உணர்வு பூர்வமானதா அல்லது இரண்டும்தானா என்ற வார்த்தை விளையாட்டுக்குள் போக நான் விரும்பவில்லை. முப்பது நிமிடங்கள் அந்த சந்திப்பு நடந்ததாக சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அந்த முப்பது நிமிடமும் அந்த அப்பாவின் மனதுக்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடியிருக்கும்!

“உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்குத் தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் என்ன பாடுபடுமோ அந்த நிலையில் என் மனம் இருக்கிறது” என்று கருணாநிதி சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். செய்தியாளர்களிடம் அவர் அந்த வார்த்தைகளைச் சொன்னதை அறிந்த நொடியில், “எவ்வளவு திறமையாக நம்முடைய சிந்தனையைத் திசைமாற்றி விடுகிறார்” என்ற வியப்பே என் மனதில் எழுந்தது. சட்டம் தன் கடமையைச் செய்யும், இந்த சிக்கலை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் உணர்வு வேறுவகையானது. “உங்க மகளுக்கு இப்படி நடந்தா உங்க மனசு என்ன பாடுபடும்?” என்ற கேள்வி நம்முடைய மனதில் உருவாக்கும் உணர்வுகள் வேறு வகை!

ஒரே ஒரு பெண்ணாக வீட்டில் வளரும் பெண்களுக்கும் அப்பாக்களுக்கும் இடையே இருக்கும் உணர்ச்சிமயமான உறவை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? சைக்கிள் ஓட்டப் பழகும்போது கீழே விழுந்து முழங்காலில் ரத்தம் கசியும் சிராய்ப்போடு வந்த மகளைப் பார்த்து நம்மில் சிலர் பதறி இருக்கலாம். கல்லூரியில் சேர்க்கும்போதோ அல்லது படித்து முடித்தபின் வேலையில் சேரும்போதோ, வசதிக் குறைவான விடுதி அறையில் மகளை சேர்த்து விட்டு வீடு திரும்பி இருக்கிறீர்களா? இதெல்லாம் அனைவருக்குமான அன்றாட நடைமுறை என்று உங்கள் அறிவு சொல்லும்போது, மகள் கஷ்டப்படுவாளோ என்று உணர்வு உள்ளுக்குள் தவிப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நம்முடைய கண் முன்னாலேயே மகளைக் கடுமையான வார்த்தைகளில் ஆசிரியர் திட்டும்போது, அவள் முகம் சுருங்குவதைப் பார்த்து உங்கள் மனம் வாடி இருக்கிறதா?

இவற்றைப் போன்ற பல கேள்விகளில் சில வினாக்களுக்கு உங்கள் பதில் ஆம் என்றால் உங்களால் கருணாநிதியின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். புகுந்த வீட்டில் இருக்கும் மகள் சாதாரணமான ஒரு காரணத்துக்காக லேசாக கண் கலங்கினாலே, அப்பாக்களாலும் அம்மாக்களாலும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. வசதிகளும் வாய்ப்புகளும் பெருகியதற்குப் பிறகு பிறந்து வளர்ந்த செல்ல மகளை, செல்வ மகளைச் சிறையில் சென்று சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் அப்பாவின் உணர்ச்சிகளை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

அதேசமயம், சிறையில் மகனையோ மகளையோ பார்க்க நேர்கின்ற எல்லா அப்பாக்களும் அம்மாக்களும் இதே போன்ற உணர்ச்சிப் போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு வரும் சிக்கல்களை எல்லோரும் பரிவுடன் அணுக வேண்டும் என்றும் மற்றவர்களின் துன்பங்களைப் பற்றி தாம் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நினைப்பது சுயநலம். அப்படிப்பட்ட சுயநலம் கொஞ்சமும் இல்லாமல் எல்லா மக்களுக்கும் பொதுவான கோரிக்கைக்காக பத்து வருடங்களாக உண்ணாவிரதமும் சிறை வாழ்க்கையும் கொண்டிருக்கும் ஐரோம் ஷர்மிளா சானுவின் அம்மாவுக்கும் மனம் இருக்கிறது. சமூகத்தில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகளை அதிக அளவில் உருவாக்கப் பாடுபட்ட மருத்துவர் பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டதை நாம் மறக்கவில்லை. அவருடைய அம்மாவுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன.

எதற்காக வெளிமாநில உதாரணங்கள்? கடந்துபோன திமுக ஆட்சியில் எத்தனை முறை சீமான் சிறையில் அடைக்கப்பட்டார்? அவர் கையை வீசி நடக்கும்போது அவர் கைவிரல் நகங்கள் யாரையாவது காயப்படுத்தின என்று எங்காவது ஒரு வழக்கு இருக்கிறதா? பிறகு எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்? அவர் நேரடியாக வானத்தில் இருந்தா பூமியில் குதித்தார்? அவரும் ஒரு அம்மாவின் கருப்பையில் பத்து மாதம் இருந்து பிறந்தவர்தானே! சீமானின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உணர்ச்சிகள் இல்லையா?

ஓர் ஆண் சிறையில் இருக்கலாம்; செய்யாத குற்றத்துக்குத் தண்டனை அனுபவிக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று ராம் ஜேத்மலானியைப் போல சிலர் வாதிடக் கூடும். இன்றைய முதல்வர் ஜெயலலிதாவைக் கைது செய்த போது இந்த வாதம் பொருந்தவில்லையா என்று சிலர் பதில் கேள்வியும் கேட்கக்கூடும். இப்போது கனிமொழிக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையும் எதிர்க்கட்சி அரசாங்கத்தால் அவருக்கு எதிராக உருவாக்கப்பட்டதல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அரசாங்கத்தில் இன்னும் திமுக அங்கமாகத் தான் இருக்கிறது. ராசாவும் கனிமொழியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வளவு அதிகாரம் மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சந்தர்ப்ப சாட்சியங்கள் இல்லாமல் செய்யாத குற்றத்துக்காக தண்டனை வழங்கிவிட முடியாது.

அபியும் நானும் என்ற திரைப்படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒவ்வொரு விஷயத்தையும் அப்பாவிடம் கேட்டுக் கேட்டு செய்யும் மகள் அபி, வளர்ந்த பிறகு அப்பாவின் கண்காணிப்பை ஒதுக்கத் தொடங்குவார். அப்பா தலையிடும் போதெல்லாம், “ ஐ நோ வாட் ஐ யம் டூயிங்” என்பார். அதாவது “என்ன செய்கிறேன் என்பதைத் தெரிந்தே நான் செய்கிறேன்” என்று சொல்வார். மேல்படிப்பு, காதல், திருமணம் என்று மகளின் விருப்பப்படியே அனைத்தும் நடக்கும். அதீதமான அன்பு காரணமாக மகளைத் தன்னுடனேயே வைத்திருக்க நினைக்கும் அப்பாவின் தவிப்புகளைச் சொல்லும் படம் அது.

அந்தப் படத்தின் மகளைப் போல ‘ஐ நோ வாட் ஐ யம் டூயிங்’ என்று கனிமொழி சொன்னாரா என்று தெரியவில்லை. அப்பாவின் வேண்டுகோளைக் கேட்டு கலைஞர் தொலைக்காட்சியில் பங்குதாரர் ஆனது தான் அவருடைய குற்றம் என்பதில் கூட உண்மையிருக்கலாம். ஆனால் அதுவல்ல பிரச்னை? எதற்காக சிறை செல்கிறோம் என்பதே இங்கு முக்கியம். நெருக்கடி நிலையின் போது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் சிறையில் இருந்தாரே, அதை யாராவது சிறுமையாகப் பார்க்கிறார்களா என்ன? அது அவருக்குப் பெருமையையும் புகழையுமே தேடித் தந்தது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டனை பெறுவது அப்படிப்பட்டதல்ல!


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Labels: , , ,

2 Comments:

At 3:37 PM, Blogger viji said...

Arumai....

 
At 3:38 PM, Blogger viji said...

Arumai

 

Post a Comment

<< Home