Saturday, January 30, 2010

காதல் பயங்கரவாதிகள்?


”சீனப் பெண்ணுக்கும் தமிழ் இளைஞர் ஒருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. ஐந்து வருடங்களாக காதலித்து வந்த அவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் இந்து முறைப்படி கல்யாணம் செய்து கொண்டார்கள் ” என்பது சில நாட்களுக்கு முன் வெளியான ஒரு செய்தி. உலகமே ஒரு கிராமம் என்ற அளவில் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில் இந்த செய்திக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று உங்களில் சிலர் கேட்கக் கூடும். அல்லது இதைப் போல எத்தனையோ செய்திகள் இதற்கு முன்பும் வந்திருக்கும் நிலையில் இந்த திருமணத்தில் என்ன புதுமை இருக்கிறது என்று வேறு சிலர் நினைக்கலாம். ஏற்கனவே ஜப்பானியப் பெண், கொரியப் பெண், பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பல நாடுகளைச் சேர்ந்த பெண்களை இந்துமுறைப்படி இந்தியர்கள் மணந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான்!

ஆனால் ஒவ்வொரு தடவை அதைப் போன்ற செய்தியை நாம் படிக்கும் போதும் இந்து முறைப்படி அல்லது இந்திய முறைப்படி திருமணம் நடந்தது என்ற வாசகங்களை பார்க்கிறோம். எந்த சம்பிரதாயத்தின் அடிப்படையில் திருமணச் சடங்குகள் நடந்தனவோ, அவற்றை செய்தியில் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்றும் அது செய்தியாளர்களின் கடமை என்றும் ஊடக நண்பர்கள் வாதிடக் கூடும். எந்தப் பண்பாட்டின் அடிப்படையில் சடங்குகள் நடந்தன என்பதைக் குறிப்பிடுவதில் தவறில்லைதான். ஆனால் சீனர்கள் திருமணம் செய்து கொள்வதைப் போல இந்தத் திருமணம் ஏன் நடக்கவில்லை என்ற கேள்வி நமக்குள் எழுவதில்லையே, அது ஏன்? ஆண் என்ன இனத்தை சார்ந்தவரோ அவருடைய மரபிலேயே திருமணம் நடக்க வேண்டும் என்று நம் சமூகத்தில் இருக்கும் ஒரு நியதியை நாம் ஏற்றுக் கொண்டிருப்பதால்தான் நமக்கு அந்தக் கேள்வி எழுவதில்லையா?

”வேலை பார்ப்பதற்காக வெளிநாடு சென்றாலும், அயல்நாட்டுப் பெண் மீது காதல் கொண்டிருந்தாலும், இந்திய மரபுகளை நம் இளைஞர்கள் மறந்துவிடுவதில்லை; கைவிடுவதும் இல்லை” என்று பலர் பெருமிதத்தோடு பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்திய மரபு என்று பலர் சொல்வது பெரும்பாலும் இந்து மரபாகவே இருக்கிறது. இந்து மரபு என்று கூட பொதுவாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சைவம், வைணவம், சமணம் உள்ளிட்ட பல மரபுகளே நடைமுறையில் காண முடிகிறது. அவற்றிலும் கூட ஒரே பிரிவில் இருக்கும் உட்பிரிவுகளுக்குள் சடங்குகளில் ஒற்றுமை இல்லை என்பது வேறு விஷயம்! உண்மையான நிலைமைகள் இப்படி இருக்கும்போது, இந்திய இஸ்லாமியர்களாலும் இந்திய கிறித்தவர்களாலும் இந்த வகை சடங்குகளில் தங்களை அடையாளம் காண முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பானது. இருந்தும் அந்த விவாதத்துக்குள் நாம் இப்போது போனால், அது நாம் இப்போது பேசத் தொடங்கியிருக்கும் பொருளில் இருந்து வெகுதூரம் விலகிச் செல்வதாகிவிடும்.

நாம் முதலில் பார்த்த செய்தியை ஒட்டி நமக்கு எழும் முக்கியமான கேள்வி, நம்முடைய பெண் சீன இளைஞனை சீன முறைப்படி திருமணம் செய்து கொண்டாள் என்ற செய்தியையும் நாம் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோமா என்பதுதான். ஜப்பானியரை, அமெரிக்கரை, ஆங்கிலேயரை மணந்து கொண்ட இந்தியப் பெண்கள் உண்டு. அந்த திருமணம் தமிழகத்தில் ஒரு கோயிலில் இந்திய முறைப்படி தாலி கட்டி நடந்தால், நமது செய்திகளில் இடம் பெற்றிருக்கும். அதாவது வெளிநாட்டவர் இந்திய முறைப்படி கல்யாணம் செய்து கொள்வது நமக்கு விநோதமாக இருக்கின்ற காரணத்தால் அது ஒரு செய்திக்குரிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து விட்டு நேரடியாக வரவேற்பளித்தால், அதில் நமக்கு சுவாரஸ்யம் எதுவும் இல்லை என்று ஊடகங்கள் விட்டுவிடுகின்றன.

இந்தத் திருமணங்களுக்கு காரணமாக இருக்கின்ற காதல் நம் கண்களுக்கு தெரிவதில்லை. காதலிலும் நம்மைச் சார்ந்தவர் ஆணாக இருந்தால் ஒரு அளவுகோல், பெண்ணாக இருந்தால் வேறு பார்வை என்பது நமக்கு பழகிவிட்டது. அதில் ஒரு முரண்பாடு இருக்கிறதே என்ற உணர்வு கூட நமக்கு ஏற்படுவதில்லை. நம் வீட்டுப் பெண் நமது மரபை விட்டு விலகி வேறு ஒருவரை காதலித்தால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ”குடும்ப கௌரவத்தைக்” காப்பாற்றுவதற்காக கொலை செய்யும் அளவுக்குக் கூட நம்மில் சிலர் போவதை நாம் பார்க்க முடிகிறது. தந்தையின் சொந்த அந்தஸ்தைக் காப்பதற்காகவோ குடும்ப கௌரவம் அல்லது சாதி மரியாதையைப் பாதுகாப்பதற்காகவோ மதத்தைக் காப்பதற்காகவோ நடக்கும் பல சட்ட விரோதமான நடவடிக்கைகளை நாம் காண முடிகிறது.

உண்மையில் எல்லாவித கட்டுமானங்களையும் தகர்க்கும் அளவு நம் இளைய தலைமுறையின் காதல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறதா? நம்மை காதலிக்கும் இணை வேற்று மதத்தை சேர்ந்தவராக இருக்கும்போது, திருமணம் செய்து கொள்வதற்கு முதல் நிபந்தனையாக மதம் மாற வேண்டும் என்று சொல்லும் நிலை மாறி இருக்கிறதா? நடைபெறும் திருமணங்களில் காதல் திருமணங்கள் ஒப்பீட்டளவில் குறைவு; அவற்றிலும் கலப்பு திருமணங்கள் இன்னும் குறைவு; வேற்று மதத்தை சேர்ந்தவர்களை கல்யாணம் செய்வது மிக மிகக் குறைவு; அந்தக் குறைவான நபர்களில் மதம் மாறாமல் இருவரும் அவரவர் மதங்களில் நீடித்துக் கொண்டே இணைந்து வாழ்வது மிகவும் அரிது. திருமணத்துக்கு பிறகு ஒருவருடைய வழிபாட்டு உரிமையை அப்படியே நீடிக்கச் செய்வதற்குக் கூட உத்தரவாதம் அளிக்காத காதல் என்ன காதல்? அங்கே தன்னலமற்ற அன்பு இருக்கிறதா என்ன? சிறு வயது முதல் ஊட்டி வளர்க்கப்பட்ட மதம் தொடர்பான கருத்துக்களை ஒருவர் அப்படியே கட்டிக் காப்பதற்காக ஒருவர் முழுவதுமாக விட்டுக் கொடுத்து மதம் மாறும் இடத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது? மதம் மாற மறுத்த காரணத்தால், காவல்துறை முன்னிலையில் காதலர்கள் பிரிந்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட “திண்டுக்கல் செந்தில்குமாரும் சென்னை ரியாஸ் பாத்துமாவும் காதலர்கள். ஆனால் இந்து முறைப்படி திருமணம் செய்வதா, முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்வதா என ஸ்டேஷனில் காதல் ஜோடிகளுக்குள் விவாதம் நடந்தது. இது தகராறாக மாறி இருவரும் பிரிந்து தங்களது வீட்டிற்கு திரும்பினர்” என்று ஒரு செய்தி .

இருந்தாலும் காதல் சக்திவாய்ந்ததுதான்! காதலைவிட வலிமை மிக்கதாக நம்முடைய சமூகக் கட்டமைப்பு இருக்கிறது. அந்தக் கட்டமைப்பு அனுமதிக்கும் எல்லைகளுக்குள் இருக்கும் வரை காதல் சக்தி மிகுந்ததுதான்! ”நாம் ஒருவரால் காதலிக்கப்படுகிறோம் என்று நாம் உணரும் நொடியே நம் வாழ்வில் மிக சந்தோஷமான நொடி. அந்த வினாடியில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் புத்துணர்ச்சிக்கும் இணையானது வேறெதுவும் இல்லை” என்று காதலர்கள் கூறுவதை நாம் அனைவரும் கேட்டிருக்கக் கூடும். அந்த மென்மையான உணர்வை ஒரு கருவியாக பயன்படுத்தி திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியுமா? “என்னுடைய சொத்துக்களைக் குறிவைத்து என் பெண்ணை நீ மயக்கி இருக்கிறாய்” என்று ஏழை நாயகனிடம் வசதிபடைத்த நாயகியின் தந்தை கூறும் காட்சியை எத்தனையோ திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். அதைப் போல மதமாற்றத்துக்கு காதலைப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்திருக்கிறது.

காதலிலும் போரிலும் வெற்றி பெறுவதற்காக எதைச் செய்தாலும் அது நியாயம்தான் என்று சொல்வார்கள். காதல் என்ற மெல்லிய உணர்வுக்கும் போர் என்ற வன்செயலுக்கும் என்ன தொடர்பு? இரண்டிலும் அனைத்து விதிகளையும் மீறலாம் என்ற உரிமம் யாரால் கொடுக்கப்பட்டது? இன்னும் எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. ஆனால் அவையெல்லாம் இங்கு முக்கியமில்லை. “காதல் புனிதப்போர்” என்ற புதிய சொற்றொடர் சில மாதங்களாக ஊடகங்களில் அடிபடுகிறது. ‘லவ் ஜிகாத்’ என்று ஆங்கிலத்தில் ஊடகங்கள் சொல்கின்றன. கேரள உயர்நீதிமன்றமும் கர்நாடக உயர்நீதிமன்றமும் இது தொடர்பாக ஆணைகள் பிறப்பித்த காரணத்தால் அவை அனைத்து ஊடகங்களிலும் செய்திகளாகின.

அது என்ன லவ் ஜிகாத்? காதல் புனிதப்போர்? காதலர்களை சேர்த்து வைக்கும் லட்சியத்தில் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பா? அல்லது காதலுக்கு எதிரான - காதலர்களை சேரவிடாமல் தடுக்கும் நோக்கத்தோடு உருவான இயக்கமா? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ”இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் வேற்று மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களுக்கு காதல் வலைவீசி மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணையும் 4 குழந்தைகளுக்கு தாயாக்கி, இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை பெருக்க வேண்டும் என்பது அவர்கள் திட்டம். இதற்காக அந்த இளைஞர்களுக்கு மொத்தமாக ஒரு லட்ச ரூபாய், அல்லது தினமும் இருநூறு ரூபாய் பணம் வழங்கப்படுகிறது” என்று ஒரு செய்தி ஊடகங்களில் கசிய விடப்பட்டது. வெறும்வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்துவிட்டது. ஏற்கனவே இந்துக்களின் தொகை குறைந்து இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று பிரசாரம் செய்து கொண்டிருந்தவர்களுடைய கையில் இந்தச் செய்தி ஆயுதமாக கிடைத்தது. எத்தனையோ பிரசாரங்களுக்கு நடுவில் இதுவும் ஓர் இஸ்லாமிய எதிர்ப்பு பிரசாரம் என்று விட்டுவிடலாம் என்று இருந்தவர்கள் கூட அடுத்து வந்த உயர்நீதிமன்றத்தின் ஆணையைப் பார்த்து அதிர்ந்து போனார்கள்.

இஸ்லாமிய இளைஞர்களைக் காதலித்த இரு பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி முஸ்லீமாக மதம் மாறி அவர்களை திருமணம் செய்து கொள்ள இருந்தார்கள். அந்தப் பெண்களுடைய குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ’திட்டமிட்டு இந்துப் பெண்கள் கடத்தப்படுகிறார்களா’ என்று விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மாநில காவல்துறையை கேரள நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. லவ் ஜிகாத் என்ற திட்டமிட்ட நடவடிக்கை எதுவும் நடைமுறையில் இல்லை’ என்று காவல்துறை கேரளாவில் சொல்லிவிட்டது என்பது வேறு கதை. இருந்தாலும் அது ‘மார்க்சிஸ்ட் அரசின் காவலர்களுடைய கருத்து’ என்று அரசியல் சாயம் பூசப்படலாம். ஏனென்றால் அந்த இருவரில் ஒரு பெண் கொடுத்த வாக்குமூலம் இஸ்லாமிய காதலனுக்கு எதிராக இருந்தது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் பாதுகாப்பு இல்லை என்று வீடியோக்கள் மூலம் ‘மூளைச்சலவை’ செய்ய முயன்றார் என்று அந்தப் பெண் கூறி பெற்றோருடன் மீண்டும் இணைந்துவிட்டாள். அதை ஒரு தனி சம்பவமாக காவலர்கள் கருதக் கூடாது என்று இந்து அமைப்புகள் கூறலாம்.

இதைப்போலவே, கர்நாடகத்திலும் ஒரு பெண்ணின் பெற்றோர் ஆட்கொணர்வு மனுவை கர்னாடக உயர்நீதிமன்றத்தில் போட்டார்கள். விசாரணையில் அந்தப் பெண் தானாகவே விருப்பப்பட்டு இஸ்லாம் மதத்தைத் தழுவியதாகவும் தான் நேசித்த இஸ்லாமிய இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தாள். ஆனாலும் நீதிமன்றம் அந்த வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டி, அந்தப் பெண்ணை அவளுடைய பெற்றோருடன் போகுமாறு பணித்தது. அத்துடன் ‘லவ் ஜிகாத்’ குறித்து தீர விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கர்நாடக காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு சமூகத்தில் பலத்த விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. சட்டத்தின் அடிப்படையில் பார்க்காமல், சமூகத்தில் நடக்கும் பிரசாரத்தால் நீதிபதிகள் ஈர்க்கப்படுகிறார்களோ என்று மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கர்நாடகத்தில் ஏற்கனவே ஸ்ரீராம் சேனை போன்ற அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மதுக்கூடத்துக்கு வந்த பெண்களை ஸ்ரீராம் சேனைத் தொண்டர்கள் அடித்துத் துரத்திய காட்சி இன்னும் நமக்கு மறந்திருக்காது. காதலர் தினத்தன்று ஆணும் பெண்ணும் சேர்ந்து நின்று பேசிக் கொண்டிருந்தால் தாலி கொடுத்து கட்டச் சொல்வோம் என்று சிலர் கொக்கரித்த செய்தியும் இன்னும் நம் நினைவை விட்டு அகலவில்லை. குஜராத்தில் ஏற்கனவே பாபு பஜ்ரங்கி என்ற பண்பாட்டுக் காவலர் இந்துக் குடும்பங்களின் ‘மானம்’ காக்கும் சேவையை செய்து வருகிறார். அதாவது சாதி விட்டு சாதி அல்லது வேறு மத இளைஞனை ஓர் இந்துப் பெண் திருமணம் செய்து கொண்டால், அந்த ஜோடியைப் பிரித்து பெண்ணை பெற்றோருடன் சேர்த்து வைக்கிறார்! மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஓர் உத்தரவைப் போட்டது. பிறகு எதிர்ப்பு காரணமாக அந்த ஆணையை விலக்கிக் கொண்டது. ஓர் இந்துப் பெண்ணை முஸ்லீம் இளைஞன் திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் ஒவ்வொன்றையும் தீர விசாரிக்க வேண்டும் என்பதே அந்த உத்தரவு. கொல்கத்தாவில் பிரியங்கா என்ற பெண்ணை காதலித்த ரிஸ்வான்-உர்-ரஹ்மான் ‘தற்கொலை’ கொண்ட செய்தியும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்தப் பின்னணியிலேயே ‘லவ் ஜிகாத்’ குறித்து பரவும் வதந்திகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்து மற்றும் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கில் பெண்கள் காதல் காரணமாக இஸ்லாமிய மதத்துக்கு மாறி விட்டார்கள் என்றும் இந்தப் போக்கைத் தடுக்க வேண்டும் என்றும் வாய்வார்த்தையாகவே கட்டுக்கதை காட்டுத் தீயாக பரவியது. பணத்தைக் காட்டியோ வேலைவாய்ப்பு காட்டியோ மதமாற்றம் நடைபெறுகிறது என்ற பிரசாரம் கடந்த காலங்களில் நடந்தது. இப்போது அந்த வழிமுறைகளில் புதிதாக சேர்ந்துள்ளது காதல்! சொந்த காரணங்களுக்காக அல்லது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் தன்னுடைய வழிபாட்டு முறையை மாற்றிக் கொள்வதற்கு ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் உரிமையை யாரும் தடுக்க முடியாது. அதேசமயம் ஏதாவது ஒன்றைக் காட்டி மூளைச் சலவை செய்து மதம் மாறச் சொல்வதும் தேவையில்லாத செயல். மதங்களை சாதாரண மக்கள் உண்மையென்று நம்புகிறார்கள்; பகுத்தறிவாளர்கள் புறந்தள்ளுகிறார்கள்; அரசியல்வாதிகள் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஓர் இந்துப் பெண்ணுக்கும் முஸ்லீம் இளைஞனுக்கும் இடையில் உள்ள காதலை மதமாற்றத்துக்கான கருவியாக மட்டும் பார்ப்பது எந்தவகையிலும் சரியான அணுகுமுறை அல்ல. அந்த அணுகுமுறை நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது? சமூகத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் வெறுப்பை விதைப்பதிலும், அந்த வெறுப்பு உருவாக்கும் சமூகப் பிளவில் அரசியல் ஆதாயம் அடைவதிலும் போய் முடிகிறது; நம்மை பாதிக்கும் உண்மையான பிரச்னைகளில் இருந்து நம்முடைய கவனத்தை திசைதிருப்புகிறது; பெண்ணை ஆணின் சொத்தாக நினைக்கச் செய்கிறது; ஒரு குடும்பத்தின் கௌரவம், அந்த குடும்பத்தைச் சார்ந்த பெண்களின் நடத்தையில்தான் இருப்பதாக நம்மை நம்பச் செய்கிறது; பெண்களுடைய விருப்பு வெறுப்பையும் சுதந்திரத்தையும் நசுக்குகிறது; அன்பு என்ற உன்னதமான உணர்வை மனிதர்களிடம் இருந்து பிரிக்க முயல்கிறது.

நாம் மதம் இல்லாமல் வாழ முடியும். சக மனிதர்களின் அன்பு இல்லாமல் வாழ முடியுமா?

-ஜென்ராம்

நன்றி: அம்ருதா

டிசம்பர் 2009