Sunday, January 14, 2007

திரும்பி வராத முருகேசன்கள்...

உடலில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் அந்தச் சிறுவன் சுடுமணலில் படுத்துக்கிடக்கிறான். அவனது கைகளும் கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன. பள்ளிக்குச் செல்லாமல் வகுப்புக்கு ‘கட்’ அடித்துவிட்டு சினிமாவுக்குப் போன சிறுவனுக்கு அந்தக் கிராமத்துத் தந்தை வழங்கிய தண்டனை இது. அன்றிரவே அந்தச் சிறுவன் வீட்டில் உள்ள பணத்தையும் நகைகளையும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடி விடுகிறான். எல்லாவற்றையும் சில நாட்களில் தொலைத்துவிட்டு, அடுத்து வந்த ஆண்டுகளில் வாழ்க்கையையும் இழந்து தோற்றுப்போன மனிதனாக அவன் ஊருக்குத் திரும்பி வருகிறான்.

‘வெயில்’ என்ற திரைப்படத்தின் கதையில் இடம்பெறும் அந்தச் சிறுவனின் பெயர் முருகேசன். இந்த முருகேசன் மீண்டும் கிராமத்து வீட்டுக்குத் திரும்பி வராமலே இருந்திருந்தால்கூட அவனுடைய வீட்டில் யாரும் அவனைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியையும் எடுத்திருக்கப் போவதில்லை. பள்ளியிலும் வீட்டிலும் அளிக்கப்படும் கடுமையான தண்டனைகள் அல்லது சுடுசொற்களுக்குப் பயந்து ஏராளமான சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். ‘நாலு காசு’ சம்பாதித்துவிட்டு ஒரு மரியாதையுடன் மட்டுமே வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற உறுதி இவர்களில் பெரும்பாலான சிறுவர்களுக்கு இருக்கும். ஆனால், அதற்குள் இவர்களில் பலர் ‘எங்கேயோ’ காணாமல் போய்விடுகிறார்கள்.

சென்னையில் கடந்த 2006 ஆம் ஆண்டு மட்டும் 189 சிறுவர், சிறுமியர் காணாமல் போயிருப்பதாக ‘குழந்தைகளுக்கான உதவி மையம்’ ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் சிறுமிகளின் எண்ணிக்கை 36 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து இந்த அமைப்பினரிடம் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையிலேயே இந்த எண்ணிக்கை தொகுக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்கப்படாத நிலையில் இன்னும் எத்தனை சிறுவர், சிறுமியர் ‘தொலைந்து’ போயிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சென்னையின் நிலவரம் இப்படி இருக்க, உத்தரப்பிரதேசம் நொய்டா நகரில் உள்ள நிதாரி பகுதியில் 38 சிறுவர்& சிறுமியர் கொல்லப்பட்டு ‘சாக்கடை’யில் வீசப்பட்டிருக்கிறார்கள். அது பற்றி தனது கருத்தை வழங்கி இருக்கிறார், அந்த மாநிலத்தின் பொதுப்பணித் துறை அமைச்சர் ஷிவ்பால் யாதவ். அது ‘‘இதுபோன்ற சிறிய நிகழ்ச்சிகள் வழக்கமாக அவ்வப்போது ஆங்காங்கே நடப்பதுண்டு’’ என்பதுதான்!

நிதாரியில் கொல்லப்பட்டிருக்கும் அந்த சிறுமிகளெல்லாம் மொஹிந்தர் என்பவரது ‘பசி’க்கு இரையாகி இருக்கிறார்கள். இதைதான் ‘வழக்கமான சிறிய நிகழ்ச்சி’ என்று அம்மாநில அமைச்சர் சொல்கிறார்! அவர் என்ன நினைத்து இப்படி இந்த விஷயத்தை மிகச் சாதாரணமாகச் சொன்னாரோ தெரியவில்லை. அவர் சொல்வதும் உண்மைதானோ என்று எண்ணத் தோன்றும்படியாக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மனித உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன.

பஞ்சாப்பில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.க்கு சொந்தமான மூடப்பட்ட ஓர் அரிசி ஆலையில் இருந்து அரை குறையாக எரிக்கப்பட்ட நிலையில் நான்கு சிறுவர், சிறுமியரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த நவம்பர் 14ஆம் தேதி பொதிகலன் என்ற கிராமத்தில் இருந்து காணாமல் போன 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனின் உடல்களாக அவை இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் குழந்தைகள் காணாமல் போன நாள் ‘குழந்தைகள் தினம்’. இது இன்னும் வேதனையைக் கூட்டுகிறது. ஹைதராபாத் நகரில் 9 பேர், கடலூரில் 3 பேர், என்று இப்படி கொன்று புதைக்கப்பட்டவர்களின் பட்டியல் தினந்தோறும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சென்னையில் காணாமல் போன குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புக்குக் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோருடன் வசிக்கும் குழந்தைகள் காணாமல் போனால் காவல்துறைக்குப் புகார்கள் வரக்கூடும். பெற்றோரும் காப்போரும் இல்லாமல் நாள்தோறும் நடைபாதைகளிலும், பாலத்தடியிலும் சுருண்டு படுத்திருக்கும் சிறுவர், சிறுமியர் எத்தனை ஆயிரங்கள் இந்தியா முழுவதும் இருப்பார்கள்? இவர்களில் சிலர் காணாமல் போகும்போது, யார் வந்து புகார் கொடுக்கப் போகிறார்கள்?

போக்குவரத்து சிக்னல்கள் சிலவற்றில் நீங்கள் பார்த்திருக்கலாம். சிக்னலில் நாம் காத்திருக்கும் சில நொடிகளில் வாகனங்களைத் துணியால் துடைத்துவிட்டு சில நாணயங்களை எதிர்பார்த்து சிறுவர்கள் கையேந்துகிறார்கள். அவர்களில் சிலருடைய முகங்கள் நமக்குப் பரிச்சயமாகும் தருணத்தில், அந்த இடத்துக்கு அவர்கள் வருவதை நிறுத்தியிருப்பார்கள். வேறு சிக்னல்களுக்கோ அல்லது வேறு வேலைக்கோ அவர்கள் போயிருக்கக்கூடும் என்பதைத் தாண்டி நாம் அவர்களைப் பற்றிச் சிந்திக்க முடிவதில்லை.

இப்படிப்பட்ட சிறுவர், சிறுமியர் காணாமல் போய் விட்டார்கள் என்று காவல்துறைக்குப் புகார் வந்தாலும் அவர்கள் பெரிதாக எதுவும் செய்வதில்லை. அவர்களுடைய வேலைப் பளுவும் பணி முன்னுரிமைகளும் வேறு மாதிரியானவை. மக்களிடம் பரபரப்பை உண்டாக்கும் வழக்குகள், அதிகார மையத்துக்கு நெருக்கமானவர்களின் பிரச்னைகள் போன்றவற்றுக்கு இயல்பாகவே கிடைக்கும் முக்கியத்துவம் மற்றவற்றுக்குக் கிடைப்பதில்லை. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரியின் குழந்தை டெல்லியில் கடத்தப்பட்டபோது, ஏற்பட்ட பரபரப்பும் நெருக்கடியும் சாதாரணமாக மற்ற சம்பவங்களின் போது ஏற்படுவதில்லை.

பல விஷயங்களில் நன்றாகச் செயல்படுகின்ற தேசிய மகளிர் ஆணையம்கூட நொய்டா விவகாரத்தில் அதிக அக்கறை காட்டவில்லை. தனது பத்து வயது மகளைக் காணவில்லை என்று ஒரு தந்தை கொடுத்த புகாரின் பேரில் தேசிய மகளிர் ஆணையம் களத்தில் இறங்கியது. ‘இரண்டு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட சிறுமியர் அந்தப் பகுதியில் காணாமல் போயிருக்கிறார்கள்’ என்பதை ஆகஸ்ட் 2005 இல் கண்டுபிடித்திருக்கிறது. உடனே உ.பி. மாநில அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அரசு எதுவும் செய்யாமல் இருந்ததைப் பார்த்து நவம்பர் மாதத்தில் ஒரு நினைவூட்டுக் கடிதம் அனுப்பிவிட்டு மௌனமாகி விட்டது. மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் போன்றவை அனுப்பும் கடிதங்களுக்கு மாநில அரசுகள் என்ன மரியாதையை அளிக்குமோ, அந்த அளவுக்கான கவனமே அந்தக் கடிதத்துக்குக் கிடைத்தது !

இப்படி எல்லா நிறுவனங்களாலும் கைவிடப்பட்ட நிலையில்தான் ஏழைக் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் காணாமல் போவதால் பங்குச் சந்தை வீழ்ச்சி அடையப் போவதில்லை. மதுக்கடைகளிலும் ‘பார்’களிலும் வியாபாரம் குறையப் போவதில்லை. அந்தப் பகுதி அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுக்குத் தடை ஏதும் இருக்கப் போவது இல்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்களில் சில குழந்தைகள் ‘தொலைந்து’ போயிருப்பதால் யாருடைய அன்றாட வாழ்க்கையிலும் எந்த மாறுதலும் ஏற்படுவதில்லை. இதனால்தான் மூன்று வருடங்களாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட போதும் நிதாரியில் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

ஒரு சில சாக்லெட்களுக்கும் ஐம்பது அல்லது நூறு ரூபாய்த் தாளுக்கும் ஆசைப்பட்டு நிதாரியில் உள்ள மணீந்தர் வீட்டுக்குள் குழந்தைகள் சென்றார்களாம். இவர்களது உடலும் உயிரும் அவ்வளவு மலிவாக அந்த மிருகங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. ‘‘மனிதர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை மீண்டும் வீட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்கிறார்கள்’’ என்ற மேற்கோளை மணீந்தர் தவறாகப் புரிந்து கொண்டார் போலிருக்கிறது. இவரைப் போன்றவர்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் ‘கடவுள்’ எவ்வளவு அன்பானவராக இருக்கிறார் என்று ரவீந்திரநாத் தாகூரின் கூற்று ஒன்று உண்டு. அது இதுதான்-
‘மனிதனின் நடவடிக்கைகளால் கடவுள் இன்னும் விரக்தி அடையவில்லை என்ற செய்தியைத்தான் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கொண்டு வருகிறது!’


ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (17.01.07)

2 Comments:

At 5:50 PM, Blogger Padma said...

இந்தியாவில் இருந்து குழந்தைகள் கடத்துவதும் (குறிப்பிட்ட தொகைக்கு வாங்கி அடிமையாக) அதிகரித்திருக்கிறது. நிறைய கோணங்கள் உள்ள ஒரு பிரச்சினை இது. சிந்திக்க வேண்டிய விஷயம்.

 
At 6:15 PM, Blogger வல்லிசிம்ஹன் said...

நீங்கள் குறிப்பிடும் அத்தனை விவரங்களும் மனதை கவலைக்குள்ளாக்குகின்றன.
சென்னையில் முடிந்தவரை சக்திக்கு ஏற்ற வகையில்,


நாங்கள் சந்திக்கும் சிறுமியர்,சிறுவர்களுக்கு உதவுகிறோம்.

 

Post a Comment

<< Home