Friday, July 01, 2011

இருட்டினில் மறையும் நீதி

“கிரிக்கெட் வீரர்களுடைய மட்டையிலும் சட்டையிலும் அவர்களுடைய ‘ஸ்பான்சர்கள்’ யார் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. நம் அமைச்சர்களின் சட்டைகளில் அது தெரிவதில்லை!” இந்த வரிகளை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ரிப்போர்ட்டர் இதழில் இந்த எரிதழல் பகுதியில் நான் எழுதிய முதல் பத்தியின் கடைசி வரிகள். கடந்த 11.07.2010 இதழுக்காக ஜூலை இரண்டாம் தேதி நான் அந்தக் கட்டுரையை எழுதினேன். எதைப் பற்றி? பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டது குறித்த விமர்சனமாக அது எழுதப்பட்டது. ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து அதே பிரச்னையைப் பற்றி மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது. இடையில் எத்தனையோ முறை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது என்பது வேறு விஷயம்!

எதற்காக நான் எழுதிய அந்த பத்தியை இங்கு நினைவூட்டுகிறேன் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதே பிரச்னை.. அரசாங்கத்திடம் இருந்து அதே வாசகங்கள்.. “விலை உயரும் போது சாதாரண மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதை நாங்கள் நன்றாக உணர்ந்திருக்கிறோம்; ஆனாலும் நாட்டு நலன் கருதி சில கடுமையான முடிவுகளை அரசு எடுக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் இப்போது காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி! அதே சொற்கள், அதே பொருள்! அன்று பேசியவர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி! இப்போது அவர் இன்னும் ஒரு படி மேலே ஏறி உயரத்தில் இருந்து கொண்டு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்குகிறார். விற்பனை வரியைக் குறைத்து, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றைக் குறைந்த விலையில் அந்தந்த மாநில மக்களுக்கு மாநில அரசுகள் வழங்கலாம் என்று ஆலோசனை வழங்குகிறார்!

ஒரு லிட்டர் டீசலின் விலை மூன்று ரூபாய் உயர்ந்திருக்கிறது; சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ஐம்பது ரூபாயும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாயும் விலை ஏறி இருக்கிறது. இந்த விலையேற்றத்தை ஏறத்தாழ எல்லா எதிர்க்கட்சிகளும் கண்டித்து இருக்கின்றன. “உத்தரப் பிரதேசத்தில் சாமான்யனுக்கு ஆதரவாக வேஷம் போடும் காங்கிரஸ் கட்சி, அகில இந்திய அளவில் ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கிறது” என்று உ.பி. முதலமைச்சர் மாயாவதி குற்றம் சாட்டி இருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் திமுக, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும் மெல்லிய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றன.

திமுகவின் எதிர்ப்பை ஏன் மெல்லிய எதிர்ப்பு என்று சொல்ல வேண்டும் என்ற கேள்வி பலருக்கு எழக் கூடும். பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தை மத்திய அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கை சொல்கிறது. மிகவும் தீவிரமான கண்டனச் சொற்கள் இல்லையே என்றெல்லாம் பேசுவதில் பொருள் இல்லை. ஏதோ இந்த அளவிற்காவது, விலையேற்றம் நியாயமான செயல் அல்ல என்று சொல்கிறாரே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். முதலமைச்சர் ஜெயலலிதா விலைஉயர்வைக் கண்டித்திருக்கிறார் என்பதால் நாம் அந்த விலையேற்றத்தை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுக்காமல் இருக்கிறாரே என்று மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.

“லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைச் சேர்ப்பதால் அவருடைய அதிகார வரம்பு குறைக்கப்படுகிறது; அதனால் நான் அந்த ஆலோசனையை எதிர்க்கிறேன்” என்று ஜெயலலிதா சொல்வதை நினைத்துப் பாருங்கள். லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர வேண்டும் என்று கருணாநிதி சொன்னதன் எதிர்விளைவு என்று சிலர் நினைப்பதை எப்படி தடுக்க முடியும்? அதையும் மீறிய அரசியல் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது விவாதத்துக்குரிய வேறு விஷயம்!

இதுவரை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு சொல்லி வந்த காரணம் மக்களிடம் இப்போது எடுபடவில்லை என்பதை அரசு புரிந்து கொண்டிருக்கிறது. அதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வதுதான் இங்கு விலையேற்றத்துக்குக் காரணம் என்ற பழைய பல்லவி இன்று பொருந்தாது என்பதை மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். சர்வதேச சந்தையில் விலை குறையும் போது இங்கு விலை குறைவதில்லை. இதற்கு என்ன காரணம்? இங்கு விலை ஏறுவதற்கு மத்திய அரசு விதித்திருக்கும் உற்பத்தி வரி, சுங்க வரி ஆகியவையும் மாநில அரசின் விர்பனை வரியும் காரணம் என்பதை பரவலான பிரசாரம் மூலமாக மக்கள் அறிந்திருக்கிறார்கள். இருந்தும் அவர்கள் காதில் பூச்சுற்ற முயற்சி நடக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் உரிமையை மத்திய அரசு வைத்திருக்காது; எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலைமைக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற கொள்கையை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தாகி விட்டது. இந்நிலையில் மத்திய அரசின் சுங்க வரிக்கோ அல்லது உற்பத்தி வரிக்கோ எந்த பாதகமும் இல்லாமல் அரசு பார்த்துக் கொள்ளும். ஆனால் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணமாக மாநில அரசு விற்பனை வரியைக் குறைத்துக் கொள்ள வேண்டுமாம்! மத்திய நிதியமைச்சர் சொல்கிறார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதை ஆமோதிக்கிறார்!

அதாவது “நாங்கள் ஐம்பது ரூபாய் விலை உயர்த்துவோம்; நீங்கள் உங்கள் வருவாயில் 14 முதல் 15 ரூபாயை குறைத்துக் கொள்ளுங்கள்” என்று மத்திய அரசு மாநில அரசுகளைச் சொல்கிறது. டெல்லிக்குப் போக வேண்டியது தமிழகத்தில் இருந்து போய்விடும்; சென்னைக்குக் கிடைக்க வேண்டியதை தமிழகம் இழக்க வேண்டும். இதை ஒரு தீர்வாக மத்திய அரசு சொல்கிறது; மாநில சுயாட்சி பற்றிப் பேசுபவர்கள் அதை ஏற்றுக் கொண்டு இன்றைய தமிழக அரசுக்கும் ஆலோசனை சொல்கிறார்கள். தமிழ்நாட்டு நலனில் இருக்கும் அக்கறையை விட மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நலனில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடே இதன் மூலம் வெளிப்படுகிறது!

இந்த விலை உயர்வால் நம்முடைய வாழ்க்கையில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? ஏற்கனவே சரக்குக் கட்டணங்களை லாரி உரிமையாளர்கள் உயர்த்திவிட்டார்கள்; ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் அதிரடியாக அதிகரித்து இருக்கின்றன. காய்கறிகளில் தொடங்கி அனைத்துப் பொருட்களின் விலையும் படிப்படியாக எகிறத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஊழலின் தொகையை ஏற்றிக் கொண்டே போகிறவர்களுக்கு விலையேற்றத்தின் கடுமையான விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் நம்மால் அவர்களைப் போல இருக்க முடியாது!

குமுதம் ரிப்போர்ட்டர் 07.07.11

0 Comments:

Post a Comment

<< Home