Monday, January 29, 2007

சுஷ்மிதாவோடு நிற்கட்டும்!

அந்தப் பெண்ணுக்கு வயது 25. எம்.எஸ்.சி., வேதியியலில் முதல் இடம் பெற்று தங்க மெடல் வாங்கியவர். கைநிறைய சம்பளமும் வசதியான வாழ்க்கையும் தேடி அவர் ஏதேனும் கம்ப்யூட்டர் கம்பெனிக்கு வேலைக்குப் போயிருக்கலாம். அல்லது அதிகாரம் நிறைந்த அரசு அதிகாரியாவதற்காக ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை . மாறாக அவர் இந்திய ராணுவத்தில் அதிகாரியாகச் சேர்ந்தார். அவரது தந்தையும் தாயும் மத்தியப் பிரதேசம் போபாலில் வசிக்கிறார்கள். அவருக்கு ஒரு தம்பி. அவன் ப்ளஸ் 2 படிக்கிறான். அந்தப் பெண்ணின் பெயர் சுஷ்மிதா சக்ரபர்த்தி.

அளவான குடும்பம் என்பதால், அவர்களது வாழ்க்கை அமைதியாகதான் நடந்து கொண்டிருந்தது. ஆனால், இன்று அந்தக் குடும்பம் சோகத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது. ஆசை ஆசையாய் வளர்த்த மகள் சாகசங்களுக்கு ஆசைப்பட்டதால், அந்தப் பெற்றோர் அவளை ராணுவத்தில் சேர அனுமதித்தார்கள். இன்று அந்த ராணுவத்தின் ஒரு துப்பாக்கி, சுஷ்மிதாவின் உயிரைப் பறித்திருக்கிறது.

விருந்தினர் மாளிகையில் காவலுக்கு நின்றிருந்த ராணுவ வீரனிடம் அவனது கையில் இருந்த துப்பாக்கியை சுஷ்மிதா கேட்டிருக்கிறார். அதாவது, அந்தத் துப்பாக்கியைக் கையில் ஏந்தியவாறு ஒரு புகைப்படம் எடுத்து விட்டுத் தருகிறேன் என்று கேட்டிருக்கிறார். சட்டென்று அவரும் தனது துப்பாக்கியைக் கொடுத்துவிட்டார். அந்தத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சுஷ்மிதா இதுவே ராணுவத்தின் தரப்பில் இருந்து சொல்லப்பட்டிருக்கும் செய்தி.

ஆனால், இந்த வாதத்தை சுஷ்மிதாவின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ‘‘எங்களுக்கு ‘அது தற்கொலை’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது’’ என்று எச்சரிக்கையுடன் பேசுகின்றனர். மிகவும் துடிப்பான, துணிச்சலான சுஷ்மிதாவுக்கு மிகக் கடுமையான மன அழுத்தம் இருந்திருக்கிறது.

ஏராளமான சாகசக் கனவுகளுடன் ராணுவத்தில் சேர்ந்த சுஷ்மிதாவுக்கு, வாகனங்கள் பராமரிப்பு அதிகாரியாகப் பணியாற்றவே வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவருக்கு முன்னணிப் பணிகளுக்குப் பதிலாக ‘பெண்களுக்கான’ வேலைகளே வழங்கப்பட்டன என்பதில் அவருக்குள் கடுமையான வருத்தம் இருந்துள்ளது.

பின்னிரவு கேளிக்கை விருந்துகளுக்குத் தன்னை ‘ஏற்பாடு’ செய்யுமாறு அதிகாரிகள் சொல்கிறார்கள் என்று விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தபோது பெற்றோரிடம் புலம்பி இருக்கிறார். மிக உயர்ந்த அதிகாரிகள் விருந்துக்கு வரும்போது, அவர்களை வாசலில் பூச்செண்டு கொடுத்து வரவேற்கும் அலங்காரப் பதுமையாக நிற்குமாறு அவர் பணிக்கப்பட்டிருக்கிறார். இந்த வேலைகளைச் செய்வதற்காக ராணுவத்தில் தான் சேரவில்லை என்ற எண்ணம் அவருக்கு மிகப் பெரிய உறுத்தலாக இருந்திருக்கிறது. இவை எல்லாம் அவர் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள். இன்னும் பகிர்ந்து கொள்ளமுடியாத பாலியல் தொல்லைகளையும் அவர் எதிர்கொள்ள நேரிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

முழுக்க முழுக்க ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் ராணுவத்தில், கடந்த 1993 முதல் பெண்களையும் சேர்க்கத் தொடங்கினர். இந்தியத் தரைப் படையில் 918 பெண் அதிகாரிகளும் கப்பற்படையில் 100 பெண் அதிகாரிகளும் விமானப்படையில் 450 பெண் அதிகாரிகளும் இருக்கிறார்கள். ஒவ்வொரு படையின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த விகிதத்தில் இருப்பது தெரிய வருகிறது. நீண்ட மராத்தான் ஓட்டப் பந்தயம்கூட முதல் அடியில் இருந்துதான் தொடங்குகிறது. வாசலை அடைத்துப் போடப்படும் மிகப் பெரிய கோலம்கூட ஒரு சிறிய புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது. இப்படியெல்லாம் சமாதானம் செய்து கொண்டாலும், அதை மீறி ஏன் இந்த நிலை என்ற கேள்வியும் எழுவதைத் தடுக்க இயலவில்லை.

பெண்களின் முன்னேற்றம் குறித்து எல்லோரும் பேசினாலும், அவர்களை இன்னும் ஆண்களுக்கு சமமாகப் பார்க்கும் பார்வை நமது சமூகத்தில் இல்லை. ஒரு பெண் குழந்தையிடம் விளையாடுவதற்கு ஒரு கரடி பொம்மையையும் ஒரு பந்தையும் கொடுத்தால், அது விளையாடுவதற்கு பந்தையே தேர்வு செய்யக் கூடும். ஆனால், இந்த இரண்டையும் வீட்டுக்கு வாங்கிவரும் நாம் பந்தை வீட்டில் உள்ள ஆண் குழந்தையிடமும் பொம்மையைப் பெண் குழந்தையிடமும் கொடுக்கிறோம். இந்த செயலின் பின்னால் உள்ள எண்ணம் என்ன? உடலை வருத்தும் விளையாட்டுகளையும் வேலைகளையும் பெண்களால் செய்ய இயலாது என்பதே.

இந்த எண்ணம் நமது பிறப்பில் இருந்து குடும்பத்திலும், அக்கம்பக்கத்திலும், கல்வி நிறுவனங்களிலும் பணி இடங்களிலும் மேலோங்கி இருக்கிறது. தீவிரமான சுயமுயற்சிகள் இல்லாமல் இதுபோன்ற கருத்துக்களின் தாக்கத்தில் இருந்து நம்மால் வெளிவர முடிவதில்லை.

ஒரு துறவியிடம் சீடராகச் சேர்ந்து பாடம் கற்பதற்காக இன்னொரு துறவி வந்தார். வீட்டுக்கு வந்தவரை உபசரித்து இருக்கையில் அமரச் செய்தார் குரு. ஒரு தேநீர் நிரம்பிய குவளையைக் கொண்டுவந்து புதியவரின் முன்வைத்து, குடுவையில் இருந்து மேலும் தேநீரைக் குவளையில் ஊற்றினார். குவளை நிரம்பி வழிந்தபிறகும் குரு தேநீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. ஏராளமான தேநீர் வெளியில் கொட்டிக் கொண்டிருந்தது. புதியவருக்கு எரிச்சலும் கோபமும் வந்தது. ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்... நல்ல தேநீர் யாருக்கும் பயனில்லாமல் வீணாகிறது’’ என்றார்.
குரு அவரைப் பார்த்துப் புன்னகைத்தார். ‘‘குவளைக்குள் முதலிலேயே இருக்கும் தேநீரை வெளியில் கொட்டாமல் புதிய தேநீரை ஊற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. அதுபோல்தான் நீங்கள் இதுவரை கற்று ‘சரி’ என்று நம்பிக்கொண்டிருக்கும் சிந்தனைகளை அகற்றாமல் நான் புதிதாக உங்களுக்கு எந்தப் பாடமும் கற்றுத்தர இயலாது. அப்படி நான் கற்பித்தாலும் அதனால் எந்தப் புதிய விளைவும் ஏற்படப் போவதில்லை’’ என்றார். புதியவருக்கு அதன் பொருள் புரிந்தது.
இந்தக் கதையைப் போலத்தான் ராணுவத்தின் நிலையும் இருக்கிறது. சமூகத்தில் இருந்து கற்றுக்கொண்ட பெண்கள் குறித்த பார்வை ராணுவ உயர் அதிகாரிகளுக்கு மாறவில்லை. அதனால்தான் தரைப்படை துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன், ‘‘பெண்கள் இல்லாமலே நமது ராணுவம் செயல்பட முடியும்’’ என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சர்ச்சையைக் கிளப்பினார். ‘பொறுப்பற்ற கருத்தைத் தெரிவித்திருக்கும் பட்டாபிராமன் இல்லாமலும் நமது ராணுவம் செயல்பட முடியும்’ என்று கூறி அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார். இதன் பிறகு லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன் தான் கூறியது மற்றவர்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்பதாகக் கூறியிருக்கிறார். அவர் மன்னிப்புக் கேட்டதுடன் இந்தப் பிரச்னை முடிவடைந்து விட்டதாக சுஷ்மா ஸ்வராஜும் நிறைவு செய்திருக்கிறார்.
உண்மையில் அத்துடன் பிரச்னை முடிவடைகிறதா? கடந்த மே 29ஆம் தேதி மேஜர் ஷோபனா ராணி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார். சென்ற 2006 ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ராணுவத்தில் நான்கு தற்கொலைகள் நடந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் நானூறு தற்கொலைகள் ராணுவத்தில் நடந்திருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. ஆக, பிரச்னைகள் முடியவில்லை... தினம்தினம் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன...
சுஷ்மிதாவின் தற்கொலையைச் சாக்கிட்டாவது மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் 28.06.06

13 Comments:

At 12:29 AM, Blogger சிவபாலன் said...

ராம்கி அய்யா,

நிச்சயம் ஏற்கக் கூடிய கருத்து!!

நல்ல கட்டுரை!!

நன்றி!

 
At 1:02 AM, Blogger மஞ்சூர் ராசா said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.


இந்த பதிவை ஏற்கனவே ஜூனியர் விகடனில் படித்திருக்கிறேன்.

பெண்களுக்கு இன்னும் நமது நாட்டில் சரியான உரிமை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

 
At 1:29 AM, Blogger துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள் ராம்கி.

இதென்ன சோக செய்தியோடு வாரத்தை ஆரம்பிச்சுட்டீங்க? (-:

 
At 6:03 AM, Blogger SP.VR. SUBBIAH said...

ராணுவத்தில் பணியாற்றுகிறவர்கள் மன
அழுத்தம் ஏற்படும்போது வேலையை
just like that என்று உதறிவிட்டு வருவதுதான் இதற்குத்தீர்வு!
உயிரைவிட வேலையா முக்கியம்?

எனக்கு இராணுவ விதிமுறைகளைப் பற்றித் தெரியாது!
விதிமுறைகள் கடுமையாக இருப்பின்,தற்கொலைகளைத் தவிர்க்கும் முகமாக மத்திய அரசு ஆதற்குரிய சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

செய்தி ஊடகங்கள் இதை ஆட்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டூம்!

 
At 6:39 AM, Blogger வடுவூர் குமார் said...

எனக்கென்னவோ பெண்களுக்கு எல்லா இடத்திலும் வேலை கொடுக்கவேண்டும் என்பதில் உடன்பாடில்லை.
அவர்களின் பிரச்சனை முக்கால் வாசி நேரங்களில் உணர்வுப்பூர்வமாகவே அனுகப்படுவதால்.

 
At 9:01 AM, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஒரு பெண் குழந்தையிடம் விளையாடுவதற்கு ஒரு கரடி பொம்மையையும் ஒரு பந்தையும் கொடுத்தால், அது விளையாடுவதற்கு பந்தையே தேர்வு செய்யக் கூடும். ஆனால், இந்த இரண்டையும் வீட்டுக்கு வாங்கிவரும் நாம் பந்தை வீட்டில் உள்ள ஆண் குழந்தையிடமும் பொம்மையைப் பெண் குழந்தையிடமும் கொடுக்கிறோம்.//

உண்மையான வரிகள்.அரிதாகத்தான் இப்படி எழுதுவதைக் காண்கிறேன் இங்கே.பெண்ணுக்கு இது தான் இயல்பு என்று இல்லாமல் ஒவ்வொரு உயிரும் தன்னுள்ளே தனிப்பட்ட இயல்புகளுடன் இருக்கும் என்பதை பலர் உணருவதில்லை .

 
At 11:01 AM, Blogger Bagath said...

i am aasath

I thought that the indian army should be return their house to change as the civilians. Because they treated as a Animal during their so-called training period. So they become Uncivilised one. Their humanity feelings were suffered by the Higher officials. This problem has occurred at Police/CRPF/BSF also. So they need such good study from counsellers who is the rebelions.

Because the weapon of Rebel has fight for his Valuable thoughts not for Money and Settled life. Do you know the RED ARMY at earlier stage of 20th century. After the World war and Revolution they went to the cross-over of the root of the country to form the Socialist Society. They construct bridges, demolish the backward cultures, worked as a Teacher etc. This is possible due to their understanding of Historic Dialectic Materialism. They couldn't work for SAlary, Such Benefits like ex-service man. The original scenerio on army has'nt any patriotism. If any younger fellow go with this correct approach, he has disappointed by the capitalist military. It is same for US army also. So this suppression also inciate them to done the suicide. We honured the sacrification also. But what is the use of their sacrification. They protect India against their living. That India has for MNCs and TATA, Birla, Ambani families not for Vidharbaas' Suicided farmers or Gurgon Hero Honda Company's Employees. They have used as Security guard in front of the Bunglows not Country. On 1857 Sepoys monument, Regimend of Bengal which has fulfilled with sons of suffered farmers of Outh had raise their voce and weapon. They fought against their Higher officials and East India Co., Today our army should fought against our State which is suffered them and their Farmer fathers and Labour Brothers. But they has gone to suicide. History ask them to sacrifice to the society. But the soldiers came back to their fearness.


Female Gender problem is not for Army only. It is occurred in all fields at any cast.

This Semi-Feudal Indian Society has give the role to them as a Property. Please remember the massacres of Kairanchi or Gujarath Massacre on 2002. If that system will destry by the New Democratic Revolution, We came out from Superior of Male and Castism.

 
At 12:05 PM, Blogger ஜென்ராம் said...

சிவபாலன், மஞ்சூர்ராசா, துளசி கோபால், சுப.வீர.சுப்பையா, வடுவூர் குமார், லட்சுமி அனைவருக்கும் எனது நன்றி..

ஆசாத்: நீங்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு என் உளமார்ந்த நன்றி. ராணுவம் குறித்த உங்கள் பார்வையும் இந்திய சமூகம் அரை நிலப்பிரபுத்துவ சமூகம் என்று நீங்கள் வரையறை செய்வதும் உங்கள் அரசியலை வெளிப்படுத்துகின்றன. வருகைக்கு நன்றி..

 
At 12:50 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

சுஷ்மிதா மட்டுமல்லாது, ராணுவத்தில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு இடையிலும் இது போன்ற தற்கொலைகள் அதிகம் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

பொதுவாகவே நம் ராணுவத்தில் இருப்பவர்களுக்கு டென்சன் போக்குவதற்கான மனப்பயிற்சிகள் எந்தவகையிலாவது கொடுக்கப் படுகின்றனவா என்று புரியவில்லை. ராணுவம் என்றில்லை; மற்ற துறைகளிலேயே கூட இது போன்ற பிரச்சனைகளைக் கவனிப்பதற்கென யாரும் இருக்கிறார்களா என்பது கேள்வியே..

 
At 3:50 PM, Blogger மாசிலா said...

பெண்ணுரிமைக்காக வாதிடும் நல்ல பதிவு.

ஆணாதிக்கம் ஒழிந்து பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வழி விடுவோம்.

 
At 7:52 AM, Blogger ஜென்ராம் said...

மாசிலா:

நன்றி

 
At 7:54 AM, Blogger ஜென்ராம் said...

//மற்ற துறைகளிலேயே கூட இது போன்ற பிரச்சனைகளைக் கவனிப்பதற்கென யாரும் இருக்கிறார்களா என்பது கேள்வியே.. //

இந்த மற்ற துறைகளில் 'வீடுகளும்' அடங்கும்.. சரிதானா?

 
At 7:57 AM, Blogger ஜென்ராம் said...

சென்ற பதில் "பொன்ஸ்" எழுதிய மறுமொழிக்கானது என்பதைக் குறிப்பிடாமல் விட்டு விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.

 

Post a Comment

<< Home