Wednesday, January 31, 2007

தீவிரவாதத்தை ஒடுக்க அராஜக சட்டங்களா?

இரண்டு துறவிகள் ஓர் ஆற்றின் அருகில் நடந்து கொண்டிருந்தனர். ஆற்றில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. ஒருவர், ‘‘அந்த மீன்களைப் பாருங்கள்! எவ்வளவு ஆனந்தமாக நீந்திக் கொண்டிருக்கின்றன’’ என்று சொன்னார்.

மற்றவர், ‘‘நீங்கள் அந்த மீன்கள் அல்ல. அப்படி இருக்கும் போது, அவை ஆனந்தமாக இருக்கின்றன என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?’’ என்றார்.

முதலாமவரும் விடவில்லை. ‘‘நீங்கள் நானல்ல. பின் எப்படி நான் அவை ஆனந்தமாக இருப்பதை அறியவில்லை என்று சொல்கிறீர்கள்?’’ என்றார்.

ஆம்! ஒருவரது உணர்வை அப்படியே மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாதுதான். குண்டுகள் வைத்து அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் பயங்கரவாதிகளின் உணர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், அப்பாவிப் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பயங்கரவாதம் ஏற்படுத்தும் விபரீத விளைவுகளை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. எனவே பயங்கரவாதம் வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்பதன் அவசியம் புரிகிறது.

பயங்கரவாததை ஒடுக்குவதற்கு ‘பொடா’ என்று அழைக்கப்பட்ட ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்’ போன்ற சட்டங்கள் அவசியம் என்று நம்மிடையே இருந்து குரல் எழுகிறது. இதுபோன்ற சட்டங்களின் அவசியம் குறித்துக் குரல் கொடுப்பவர்கள் “இந்தியாவில் இருக்கக் கூடிய மற்ற சட்டங்கள் மூலம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உருப்படியான நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்து விடுகின்றனர். எனவே காவல்துறைக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கும் கடுமையான சட்டங்கள் தேவை. அத்தகைய சட்டங்கள் மூலமாக மட்டுமே பயங்கரவாதிகளை ஒடுக்க முடியும்” என்கிறார்கள். தமிழக அரசியலில் ஜெயலலிதாவும், இந்திய அரசியலில் பி.ஜே.பி. தலைவர்களும் இந்த முழக்கத்தை முன்வைக்கின்றனர்.

ஆனால், இந்திய வரலாற்றின் நெடுகிலும் இதுபோன்ற சட்டங்கள் இருந்துள்ளன. அந்த சட்டங்கள் அனைத்தும் காவல்துறையால் தவறாகப் பயன்படுத்தப்பட்ட செய்திகளே எங்கும் நிறைந்து இருக்கின்றன. 1950இலேயே தடுப்புக் காவல் சட்டம் (The Preventive Detention Act) கொண்டு வரப்பட்டது. இது 1969 வரை அமலில் இருந்தது. 1962 இல் கொண்டு வரப்பட்ட நெருக்கடிநிலையின் தொடக்கத்தில் இந்திய பாதுகாப்புச் சட்டம் (Defence of India Act) நிறைவேற்றப்பட்டது. ‘மிசா’ எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Maintenance of Internal security Act) 1971இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டங்கள் அனைத்தும் சந்தேகப்படும் நபர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதற்குக் காவல் துறைக்கு அதிகாரம் அளித்தன. 1975&76 ஆண்டுகளில் நெருக்கடி நிலையின்போது இந்தச் சட்டங்கள் உச்சகட்டமாக அதிகாரிகளால் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன. வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

1977 தேர்தலில் இந்திராகாந்தி தோற்றுப் போனார். அப்போது மத்தியில் ஏற்பட்ட மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசாங்கம் ஜனநாயகத்துக்கு உயிர் கொடுத்தது. ‘மிசா’ மற்றும் ‘இந்திய பாதுகாப்பு சட்டங்கள்’ திரும்பப் பெறப்பட்டன.

1980இல் மீண்டும் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தனர். சந்தேகத்தின் பேரில் வாரண்ட் இல்லாமல் கைது செய்வதற்கு அதிகாரம் வழங்கும் ‘தேசிய பாதுகாப்பு சட்டம்’ கொண்டு வரப்பட்டது. ஓராண்டு வரை சிறையில் அடைக்கும் அதிகாரத்தைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய தேசிய பாதுகாப்புத் திருத்தச் சட்டம், 1984இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற சட்டங்கள் அமலில் இருந்த போதுதான் பஞ்சாப், அஸ்ஸாம் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் கோரத் தாண்டவமாடியது. பிரதமர் இந்திரா காந்தியின் உயிரையும் பறித்தது.

இந்தியா விடுதலை பெற்றதில் இருந்து இத்தனை சட்டங்கள் இருந்தும், தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை. மாறிவரும் சூழலுக்குத் தகுந்தவாறு பயங்கரவாதமும் தன்னைப் புதுப்புது வடிவங்களில் மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 1985இல் ‘தடா’ எனப்படும் ‘பயங்கரவாதம் மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ அமலுக்கு வந்தது. பிற உயிர்களை அழிக்கும் பயங்கரவாதச் செயலைச் செய்பவருக்கு மரண தண்டனை வழங்க இந்தத் ‘தடா’ அதிகாரம் அளித்தது.

1993, ஏப்ரல் 27ஆம் தேதி நள்ளிரவு.. கௌஹாத்தி நகரில் அஞ்சலி தைமரி என்ற பெண், தனது வேலைக்காரியுடன் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். இவர் அந்த ஊரில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அவரது வீட்டின் கதவு தட்டப்படுகிறது. அஞ்சலி கதவைத் திறக்க மறுக்கிறார். பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்களை அழைத்து வந்து அவர்கள் மூலம் கதவைத் திறக்கச் செய்கின்றனர். பக்கத்தில் வசிப்பவர்கள் குரலுக்குப் பின் வீட்டுக் கதவைத் திறந்த அஞ்சலிக்கு அதிர்ச்சி... வாசலில் முகமூடி அணிந்த சிலர். அவர்களது கைகளில் துப்பாக்கிகள்... திடுதிடுவென்று அஞ்சலியின் வீட்டுக்குள் புகுந்து, தலைகீழாகப் புரட்டி எதையோ தேடுகிறார்கள். அதன்பின் அஞ்சலியையும் இழுத்துக்கொண்டு காரில் எங்கேயோ செல்கின்றனர். கடத்தப்பட்ட அஞ்சலி அந்த இடத்தில் சிறை வைக்கப்படுகிறார்.

கௌஹாத்தி நகரின் வேறு பகுதியில் வசித்த அஞ்சலியின் சகோதரர் மற்றும் இன்னும் இரு உறவினர்கள் வீட்டிலும் அதே நாளில் இதே கதைதான். துப்பாக்கி ஏந்திய முகமூடி அணிந்தவர்களால் கடத்தப்பட்டு எங்கோ சிறைவைக்கப்படுகிறார்கள். டாடா தேயிலைக் கம்பெனி அதிகாரியை போடோ தீவிரவாதிகள் கடத்தி வைத்திருந்தார்கள். இந்த விவகாரத்தில் போலீஸ் சந்தேகப்பட்ட தீவிரவாதி ரஞ்சன் தைமரி என்பவரின் உறவினர்கள்தான் முகமூடி நபர்களால் கடத்தப்பட்டவர்கள். ரஞ்சனைப் பிடிப்பதற்காக இந்தக் கடத்தல்களை நடத்தியவர்கள் காவல் துறையினர்தான் என்று பிறகுதான் தெரிகிறது.

நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் எனப்படும் ஆட்கொணர்வு மனுவின் மீது விசாரணை தொடங்கியது. இந்நிலையில் தீவிரவாதிகள் கடத்தியதாகவும் அவர்களிடம் இருந்து போலீஸ் தன்னைக் காப்பாற்றி அழைத்து வந்ததாகவும் நீதிமன்றத்தில் கூறுமாறு அஞ்சலியை போலீஸ் நிர்ப்பந்திக்கிறது. ஆனால், அவர் மறுத்துவிடுகிறார். இப்படியே மற்ற மூவரும் மறுத்து விடுகிறார்கள். இந்நிலையில் அவர்களை வெளியில்விட முடியாத நிலையில் இருந்த காவல்துறை அதிகாரிகள், அவர்கள் மீது ‘தடா’ வழக்குப் போட்டு கைது செய்து விடுகிறார்கள்!

மேற்கண்ட சம்பவம் ‘தடா’ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கு ஓர் உதாரணம்தான்... இந்தியா முழுவதும் 1994 ஜூன் முப்பதாம் தேதி வரை தடா சட்டத்தின் கீழ் ஏறத்தாழ 76,000 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடத்தி விசாரணை முடிந்து தண்டனை பெற்றவர்கள் இவர்களில் 2 சதவிகிதத்துக்கும் குறைவு. அரசுக்கு மிகவும் கெட்ட பெயரை இந்தத் ‘தடா’ சட்டம் ஏற்படுத்துகிறது என்று ‘உணர்ந்த’ நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1995இல் அதை காலாவதியாகச் செய்தது.

இந்த வரலாறுகளில் இருந்து பாடம் எதுவும் கற்றுக் கொள்ளாத பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ‘பொடா’ என்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டம் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் நிச்சயமாக இது முறைகேடாகவே பயன்படுத்தப்படும் என்றும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் பலமாக வாதாடினார்கள். ஆனால், இந்த சட்டத்தை ஆதரிக்காதவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்ற ரீதியில் அத்வானி முழங்கினார்.

தமிழக வரலாற்றில் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய முக்கிய கட்சிகள் அனைத்தும் கட்சி வேறுபாடுகள் இன்றி இந்த சட்டத்தை ஆதரித்தன. 15 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் பொடாவைப் பயன்படுத்தி யாரையும் கைது செய்யவில்லை. ஆனால், அது பயன்படுத்தப்பட்ட மாநிலங்களில் போலீஸ் கோர தாண்டவம் ஆடியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்களை ஒடுக்குவதற்காக நடைபெற்ற கைதுகளில் பள்ளிச் சிறுவர்களும் இருந்தனர். ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர். கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கைதானவர்கள் மீது ‘பொடா’ வழக்குப் போட்ட குஜராத் அரசு, முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது ‘பொடா’ வழக்குப் போடவில்லை.

அரசியல் கட்சித் தலைவர்களைப் ‘பொடா’வில் கைது செய்து புதிய வரலாறு படைத்தது தமிழகத்தின் ஜெயலலிதா அரசு. வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
2004 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ‘பொடா’ சட்டத்தைத் திரும்பப் பெற்றது. ஆனால் இந்த சட்டத்தை இந்த அரசும் முன்தேதியிட்டுத் திரும்பப் பெறவில்லை. இதனால் முன்னர் போடப்பட்ட ‘பொடா’ வழக்குகள் அப்படியே நிலுவையில் உள்ளன.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ‘பொடா’ போன்ற ஒரு சட்டம் மட்டுமே பயங்கரவாதத்தை ஒடுக்கிவிடாது என்பது தெரிகிறது. இதுபோன்ற சட்டங்கள் இயற்கை நீதிக்கு விரோதமானது. அதாவது குற்றம்சாட்டப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்படாதவரை அவர் நிரபராதி என்பதே இயற்கை நீதி. இந்த பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த இயற்கை நீதிக்கு விரோதமான சட்டத்தைக் கோருகிறார்கள்! இந்தியச் சிறைகளில் இருந்த மூன்று பயங்கரவாதிகளைத் தனி விமானத்தில் அழைத்துச் சென்று காந்தஹாரில் பிற பயங்கரவாதிகளிடம் ஒப்படைத்த பி.ஜே.பி. தலைவர்கள், இன்று கடுமையான சட்டம் வேண்டும் என்கிறார்கள்! எனவே இவர்களது கோரிக்கை, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு அரசுக்கு ஒத்துழைப்பது என்ற நோக்கத்தில் எழுந்ததல்ல. மாறாக, பயங்கரவாதிகளை ஒடுக்கும் அடையாளமாகத் தங்களை முன்னிறுத்துவதாகவே இருக்கிறது.

மனித உரிமைகளை மதித்து நடத்தல், சர்வதேச அளவில் ஆக்கிரமிப்புப் போர்களில் ஈடுபடும் நாடுகளின் துணையின்றித் தனியாகவே பயங்கரவாதத்தை ஒடுக்கும் அரசியல் துணிவு, வறுமை மற்றும் வேலையின்மையை அகற்றுவதற்கான தீவிரமான முயற்சிகள் போன்றவை மட்டுமே பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட உதவும். பலரும் நினைப்பது போல கடுமையான சட்டங்களால் மட்டும் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாது. மாறாக, அவை புதிய பயங்கரவாதிகளை உருவாக்கவே உதவக் கூடும்!

-ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் 26.07.06

12 Comments:

At 8:37 PM, Blogger SP.VR. SUBBIAH said...

//பலரும் நினைப்பது போல கடுமையான சட்டங்களால் மட்டும் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாது. மாறாக, அவை புதிய பயங்கரவாதிகளை உருவாக்கவே உதவக் கூடும்!//

நிதார்சனமான உண்மை!

 
At 9:28 PM, Blogger சிவபாலன் said...

ராம்கி அய்யா

விரிவான அலசல்!!

நல்ல கட்டுரை!!

பதிவுக்கு நன்றி

 
At 11:45 PM, Blogger வெற்றி said...

தென் ஆபிரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவரும், சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டவருமான வண.பிதா.
டெஸ்மெண்ட் ரூற்ரூ அவர்கள் நேற்று தென் ஆபிரிக்காவில் ஆற்றிய உரை கீழே.

In remarks seen as attack on the US, renowned South African freedom fighter Archbishop Desmond Tutu today said war against terror cannot be won till causes behind the scourge are addressed and underlined that disagreements cannot be responded with "force of anhiliation".

"There is no way we can win the war against terror till we address the conditions which make some of the people desperate and our brothers and sisters are treated as rubbish," he said addressing the concluding session of two-day international conference here to commemorate centenary of launch of satyagraha by Mahatma Gandhi.

Addressing delegates from 88 countries at the conference, he also talked about conflicts in Sri Lanka, Chechnya, Sudan, Somalia and Myanmar and stressed the need for resolving these through peaceful means.
[Source : The Hindu]

போராடும் மக்களின் பிரச்சனைக்கான ஆணிவேரைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதன் மூலமே பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்கிறார் அவர். அதுதான் நிதர்சனமான உண்மையும் கூட.

 
At 12:12 AM, Blogger aathirai said...

நன்றாக ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கிறீர்கள்.

 
At 7:45 AM, Blogger ஜென்ராம் said...

sp.vr.சுப்பையா, சிவபாலன் வெ, ஆதிரை : நன்றி

 
At 7:46 AM, Blogger ஜென்ராம் said...

வெற்றி: அவருடைய உரை படித்தேன். நேரம் எடுத்து இங்கு அதைத் தந்தமைக்கு நன்றி..

 
At 1:27 PM, Blogger Thangamani said...

நல்ல கட்டுரை. நன்றி.

 
At 1:47 PM, Blogger ஜென்ராம் said...

தங்கமணி:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்தை - வாழ்த்துக்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. நன்றி..

 
At 2:59 PM, Blogger கரு.மூர்த்தி said...

//பலரும் நினைப்பது போல கடுமையான சட்டங்களால் மட்டும் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாது. மாறாக, அவை புதிய பயங்கரவாதிகளை உருவாக்கவே உதவக் கூடும்!//

சரி , குண்டுவைக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேறு என்னசெய்யலாம் , சொல்லுங்களேன் , அவர்களின் தேவையான் தாலிபான் உலகத்தை தந்துவிடலாமா ?

( என்ன , அப்புறம் நீங்கள் வலைப்பூ எழுதவோ நான் பதில் போடவோ முடியாது , பத்வா விதிக்கபடும்)

 
At 5:10 PM, Blogger ENNAR said...

ராம்கி சார்
நன்றாக விளகியுள்ளீர்கள்

 
At 9:47 PM, Blogger ஜென்ராம் said...

கரு.மூர்த்தி:

உங்கள் கருத்தில் குண்டு வைப்பவர்கள் மட்டுமே பயங்கரவாதி என்ற சிந்தனை தெரிகிறது. அதையும் ஒரு மதத்தோடு இணைத்துப் பார்க்கீறீர்கள் என்று புரிந்து கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் பின்னால் பயன்படுத்தும் ஒரு சொல் அப்படிப்பட்ட முடிவுக்கு வரச் செய்கிறது.

அதுதான் உங்கள் பார்வை என்றால் நான் உங்களிடம் இருந்து முற்றிலும் வேறுபடுகிறேன்.
மகாத்மா காந்தியைக் கொன்றவன் எந்த பிரிவைச் சேர்ந்தவனோ, அந்தப் பிரிவினர்க்கு எதிராக பயங்கரவாத முத்திரை இல்லை.

இந்திராகாந்தியை கொன்றவர்களுடைய இனத்தவரை அதன்பிறகு இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பிரதமராகவும் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஆனால் இன்று விவாதத்தில் இருப்பவர்களை மட்டும் எப்போதும் மடியில் குண்டுகளைக் கட்டி இருப்பவர்கள் போலச் சித்தரிப்பது முறையல்ல.

இணையத்தில் நான் செலவழிக்கும் நேரம் குறைவு என்ற காரணத்தால் விரிவான விவாதங்களில் என்னால் பங்கேற்க இயலாது. என் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அது குறித்து சிறிதாவது யோசித்தீர்கள் என்றால் மகிழ்ச்சி அடைவேன்.

 
At 9:49 PM, Blogger ஜென்ராம் said...

என்னார்:

அய்யா.. நன்றி..இடைவெளிக்குப் பின் இங்கு உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி

 

Post a Comment

<< Home