Friday, February 13, 2009

மாய விளையாட்டு

Zee தமிழ் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு குறித்த ‘முதல் குரல்’ நிகழ்ச்சி குறித்து பத்ரி சேஷாத்ரி எண்ணங்கள் பதிவில் எழுதியிருக்கிறார். அதைத் தொடர்ந்து மாலனும் தன்னுடைய பதிவை எழுதி இருக்கிறார். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்வதாக இல்லாமல் அல்லது அவர்களுடைய கருத்துக்களை ஒட்டியோ வெட்டியோ இல்லாமல் நான் கீழ்க்கண்ட வரிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் :

’மாய விளையாட்டு!’

பொதுவாகப் பார்க்கும்போது, ’கருத்துக் கணிப்புகள் மக்களிடம் எந்தவித செல்வாக்கும் செலுத்துவதில்லை. மக்கள் அரசியல்ரீதியாகவோ அல்லது அந்தத் தேர்தல் நடைபெறும் சூழலில் எது சரி என்று நினைக்கிறார்களோ அந்த முறையிலே தான் வாக்களிக்கிறார்கள்’ என்பது ஒரு தரப்பின் சிந்தனை.

மற்றொரு தரப்பினரோ, ’இந்தக் கருத்துக் கணிப்புகள், வெற்றிபெறும் அணிக்கு வாக்களிக்குமாறு செய்வதில் உளவியல்ரீதியாகப் பெரும் பங்காற்றுகின்றன’ என்று நம்புகிறார்கள். அதாவது, ‘சாய்ந்தா சாயற பக்கமே சாயும் செம்மறி ஆடுகள்’ மனநிலை மக்களிடம் நிலவுவதாகக் கருதுகிறார்கள். ‘ஜெயிக்கற கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், தமது ஓட்டு வேஸ்ட்’என்ற சிந்தனை பெரும்பான்மை மக்களிடம் இருப்பதாக இவர்கள் நினைக்கிறார்கள்.
கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்துவதாகக் கருதப்படும் இந்த விளைவை ஆங்கிலத்தில் ‘பேண்ட்வேகன் எஃபெக்ட்’ ('Bandwagon effect) என்று அழைக்கிறார்கள். அதாவது வெற்றி பெற்றவர்கள் ஏறிச் செல்லும் வண்டியிலேயே தாமும் போக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் விளைவு என்று இதற்குப் பொருள்.

இதற்கு நேர்மாறாக ஒரு விளைவும் இருக்கிறது. அதை ‘அண்டர்டாக் எஃபெக்ட்’ (underdog effect) என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், தோல்விபெறும் நிலையில் பரிதாபமாக இருப்பவருக்கு அனுதாபம் காரணமாகக் கிடைக்கும் ஆதரவு என்று இதற்கு அர்த்தம்.

கருத்துக் கணிப்புகளால் ஏற்படும் இன்னொரு விளைவாக ‘மிதப்பு’ இருக்கிறது. முதல்வர் கருணாநிதி பல சமயங்களில் தனது தொண்டர்களுக்கு இந்த விளைவை மேற்கோள் காட்டுவார். ‘கருத்துக் கணிப்புகளின் முடிவுகளில் மனம் மகிழ்ந்து, தேர்தல் களத்திலே வெற்றி உறுதி என்று செயல்படாமல் இருந்து விடாதீர்கள்’என்று அடிக்கடி நினைவுபடுத்துவார்.

அதேசமயம், இந்தக் கருத்துக் கணிப்புகள் அரசியல் கட்சிகளுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் இருக்கின்றன. எந்த எந்தப் பகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கருத்துக் கணிப்பு சொல்கிறதோ, அந்தப் பகுதிகளில் இன்னும் தீவிரமாகப் பணியாற்றி, வெற்றி பெற முயற்சி செய்யலாம். மக்களிடம் இருந்து சுதந்திரமாகப் பெறப்பட்ட கருத்துக்களாகவே இவற்றைக் கட்சித் தலைமை எடுத்துக்கொள்ள வேண்டும். வேறுவிதமாக அவற்றைப் பார்க்கத் தொடங்கினால் உண்மை நிலையில் இருந்து மிகவும் விலகிச் செல்ல நேரிடும் என்பது கருத்துக் கணிப்புக்கு ஆதரவானவர்களின் கருத்து.

இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் நமது ஜனநாயகத்துக்கு நல்லதுதானா? அவை ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கின்றனவா? நியாயமற்ற வகையில் மக்களைப் பாதிக்கின் றனவா? அரசியல் கட்சிகள் சம தளத்தில் நின்று மோதுவதற்கு இடமளிக்காமல், ஏதாவது ஓர் அணிக்கு சாதகமான பலனை இவை அளிக்குமா? இப்படிக் கேள்விகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் எழுப்பப்படுகின்றன.

’கருத்துக் கணிப்புகளையும், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தபின் வாக்குச் சாவடியில் இருந்து வெளியில் வரும் மக்களிடம் நடத்தப்படும் கணிப்புகளையும் தடை செய்ய வேண்டும்’ என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கடந்த காலத்தில் வலியுறுத்தின. தேர்தல் ஆணையமும் இவற்றுக்குத் தடைவிதித்து ஆணை பிறப்பித்தது. ஆனால், இந்தத் தடை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று ஓர் ஆங்கில நாளிதழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கவில்லை. அரசியல் கட்சிகளிடம் கருத்தொற்றுமை ஏற்பட்டு விட்டது என்பதால் மட்டுமே இந்த ஆணையை சட்ட ரீதியாக செயல்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. எனவே கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

கருத்துக் கணிப்புகள் உள்நோக்கம் இன்றி நடத்தப்பட வேண்டும். போதுமான அளவு மாதிரிகள், கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்களின் சமூக நிலை, கல்வி அறிவு, கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் உள்ள சிந்தனை வேறுபாடு, வேட்பாளர் அறிவிப்புக்குப் பின் மக்கள் மனநிலை, உட்கட்சிப் பூசல், கூட்டணிக் குழப்பங்கள், இடம்பெறும் கேள்விகளின் பரந்த தன்மை போன்ற பல விஷயங்கள் கருத்துக் கணிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அவற்றையும் கருத்துக் கணிப்புடன் வெளியிட வேண்டும்.

இப்படி எல்லாம் பல காரணிகளை மனதில் வைத்துக் கருத்துக் கணிப்புகளை ஒரு நிறுவனம் நடத்தினால், அது நேர்மையான முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும், அவை அப்படியே நடக்கும் என்று அறுதியிட்டுக் கூறுவதற்கு அடிப்படையான ஆதாரங்கள் இல்லை. தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் கணிப்புகளில் கிடைக்கும் முடிவுகள், தேர்தலின் இறுதி நாட்களில் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று கூறுவோரும் உள்ளனர்.

அரசியல் கட்சிகளில் ஏற்படும் பிளவுகள், ஒரு தேர்தலுக்கும் இன்னொரு தேர்தலுக்கும் இடையில் மாறுகின்ற கூட்டணிகள், சில பிரபலங்களின் விலகல், புதிதாக ஓர் கட்சியில் பிரபலங்கள் சேர்தல், போட்டி வேட்பாளர்கள் போன்றவை கருத்துக் கணிப்புகளைத் தோற்கடிக்கச் செய்யும் வல்லமை படைத்தவை. ‘பொய்கள் மூன்று வகையானவை. அவை பொய்கள், கடைந்தெடுத்து வடிகட்டிய பொய்கள், புள்ளிவிவரங்கள்’ என்று ஒரு மேற்கோள் உண்டு. இதை சில சமயங்களில் நினைவில் கொள்வதும் அவசியமாகிறது.

நமது உளவுத் துறை, நிறுவனங்கள் மற்றும் மீடியாக்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகள் துல்லியமானவை என்று நம்புவதற்கு இடம் இல்லை. சில சமயங்களில் துல்லியமாக இருக்கலாம். சில சமயங்களில் அவ்வாறு இருப்பதில்லை.

கருத்துக் கணிப்புகளுக்கான மாதிரித் தேர்தல்கள், வாக்குப் பதிவுக்குப் பின் எடுக்கப்படும் கணிப்புகளுக்கான தேர்தல்கள் போன்றவற்றின் முடிவுகளை அவற்றை எடுத்த நிறுவனங்கள் வெளியிடலாம். ஆனால், தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்குப்பதிவிலும் அதன் பிறகு வெளியிடும் முடிவுகளிலும்தான் அனைவருக்கும் உண்மையான ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கின்றன.
ஏராளமான புள்ளிவிவரங்களுடன் எடுக்கப்படுகின்ற கருத்துக் கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்றால், தேர்தல் ஆணையம் மிகுந்த செலவுடனும் சிரமங்களுடனும் தேர்தல் நடத்தத் தேவையில்லை!
-- --
19.04.2006 தேதியிட்ட ஜூனியர் விகடனுக்காக நான் எழுதிய பத்தியில் பொதுவாக இருக்கும் பகுதி என்று நான் கருதும் பகுதியே இந்த வரிகள். இந்த பத்தி “கூட்டத்திலிருந்து வரும் குரல்” என்ற எனது நூலிலும் இடம் பெற்றிருக்கிறது. மீண்டும் படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தி இருந்தால், அதற்காக வருந்துகிறேன்.