Tuesday, June 21, 2011

ஓய்வறியாப் போராட்டம்

“எத்தனை வருஷம்தான் இப்படி ஓடிக்கிட்டே இருப்பீங்க? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க” என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் அவர் கேட்கவில்லை. இதைப் போன்ற கோரிக்கைகளை உரிய காலத்தில் யார்தான் கேட்கிறார்கள்? பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி வேலைக்குப் போய் நன்றாக சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள்; அதன் பிறகும் வயதான காலத்தில் வேலைக்குப் போகும் அப்பாக்களும் அம்மாக்களும் இருக்கிறார்கள். பொது சேவைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபடும் ஒருவரை குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஒதுங்கி ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள். அவர் அந்த வார்த்தைகளைக் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. அதைப் போலவே நியாயத்துக்காக போராடுபவர்களிலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அநியாயங்களை அம்பலப்படுத்துவதை எந்த வயதிலும் நிறுத்துவதில்லை!

அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர் ஜோதிர்மாய் தேய். மும்பையில் இருந்து வெளிவரும் ‘மிட்-டே’ என்ற ஆங்கில நாளிதழில் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் ஆசிரியராக இருந்தார். அவர் கடந்த ஜூன் 11-ம் நாள் காலையில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். புலனாய்வுப் பிரிவு என்றவுடன் நீங்கள் கற்பனையைக் கன்னாபின்னாவென்று அலைய விட்டு விடாதீர்கள். அரைகுறையாகக் கிடைத்த தகவலை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் ‘புலனாய்வு பத்திரிகையாளர்’ அல்ல அவர்! நிழல் உலக தாதாக்களும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் எல்லாத் துறைகளிலும் எப்படி ஊடுருவி நிற்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து அவர் அம்பலப்படுத்தி வந்தார். அவரைத் தான் நண்பர்கள் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். அவர் கேட்கவில்லை. இப்போது எதிரிகள் அவருக்கு ‘நிரந்தர ஓய்வைக்’ கொடுத்திருக்கிறார்கள்!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழின் மும்பை பதிப்பு 2005-ல் வெளியிடப்பட்டது. முதல் நாள் வெளியான பத்திரிகை கடைகளுக்கு வந்த சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. அதோடு அந்த நாளுக்கும் அந்த வாரத்துக்குமான செய்தியை அது கொடுத்தது. நடிகை ஐஸ்வர்யா ராயுடன் நடிகர் சல்மான்கான் பேசிய டேப்பின் உரையாடலை அது வெளியிட்டது. நிழல் உலக தாதாக்களுடன் சல்மான் கானுக்கு இருந்த தொடர்பு, பாலிவுட் வட்டாரத்தில் தாதாக்களின் செல்வாக்கு போன்றவை அம்பலமாயின. அந்த செய்தியை வெளியிட்டவர் ஜோதிர்மாய் தேய்.

கடத்தல், போதை மருந்து, சூதாட்டம் போன்ற தொழில்களுடன் மட்டுமே நிழல் உலக தாதாக்களை 1970 களிலும் எண்பதுகளிலும் நாம் பார்க்க முடியும். ஆனால் தொண்ணூறுகளுக்குப் பிறகு அவர்கள் கை வைக்காத துறையே இல்லை என்றாகிவிட்டது. சினிமா, வட்டி, ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை என்று நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பல துறைகளில் அவர்களுடைய செல்வாக்கு அதிகரித்து விட்டது. அரசியலில் இறங்கி சட்டமன்ற உறுப்பினர்களாகவும் சில மாபியா கும்பல் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்.

இதற்கு என்ன பொருள்? நாம் நேரடியாக நம்முடைய பைகளில் இருந்து பணத்தை எடுத்து அவர்களுடைய கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தொழிலதிபர்கள் என்ற முகம் கிடைக்கிறது. அவர்களுடைய சாயம் வெளுக்கத் தொடங்கினால், அதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணமாக இருப்பவர்களைக் கொன்று போடுகிறார்கள்; அதன் மூலம் மற்றவர்களையும் வாய் மூடி மௌனியாக இருக்கும்படி அச்சுறுத்துகிறார்கள். இந்த நிலைமைகளை சரியான முறையில் புலனாய்வு செய்து தேய் கட்டுரைகளை எழுதி வந்தார்!

கடந்த மே 27-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு குண்டு வெடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த செய்தியின் அடிப்படையில் தேய் மும்பையில் இருக்கும் நீதிமன்றங்களுக்கு நேரில் சென்றார்; ஆய்வுகளை நடத்தினார்; பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள நீதிமன்றங்கள் தயார்நிலையில் இல்லை என்று செய்தி வெளியிட்டார்; பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைகளை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று போட்டுடைத்தார்.

மும்பையில் புராதனப் பெருமை கொண்ட ஒரு கட்டிடத்தை இடித்து விட்டு, பத்து தளங்களைக் கொண்ட ஒரு வணிக வளாகம் கட்டப் போகிறார்கள். இந்த வளாகத்தில் இருந்து தாக்கப்படும் தூரத்தில் தான் மும்பை காவல்துறைத் தலைவர் அலுவலகம் இருக்கிறது. இந்த அபாயத்தைக் கருத்தில் கொள்ளாமல் புதிய வளாகப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையை கடந்த மே 18-ம் தேதி வெளிப்படுத்தினார். மே 16-ம் நாள் வேறொரு பரபரப்பான செய்தியை அவர் கொண்டு வந்தார். மும்பை நகரத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பெட்ரோல், டீசல் மோசடி நடக்கிறது என்பது அந்த முதல் பக்க கட்டுரையின் சாரம்.

கடந்த மே மாதம் 10-ம் தேதி அவர் இன்னொரு முக்கியமான நபரைத் தொட்டார். ஒசாமா பின்லேடன் அமெரிக்காவால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது என்று ஒரு செய்தியை வெளியிட்டார். மே 19-ம் நாள், தாவூதின் தம்பி இக்பால் காஸ்கர் மீது நடந்த கொலை முயற்சி, தாவூத் இப்ராஹிமை மறைவிடத்தில் இருந்து வெளிவரச் செய்வதற்கான தூண்டில் என்ற ரீதியில் ஒரு கட்டுரையை அவர் எழுதினார். இப்படித் தொடர்ந்து பல செய்திகளை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர் வெளியிட்டுக் கொண்டிருந்ததால், அவருக்கு அச்சுறுத்தல்கள் இருந்திருக்கலாம்.

மற்ற துறையில் இருக்கும் ஒருவருக்கு அச்சுறுத்தல் இருந்தால், அவர் போய் காவல்துறையில் பாதுகாப்பு கேட்க முடியும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், கிரிமினல்கள், மாஃபியாக்கள் ஆகியோருக்குள் இருக்கும் கூட்டணியை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையாளன் என்ன செய்ய முடியும்? போலீஸ் பாதுகாப்பு கேட்க முடியுமா? கேட்டு அவர்கள் பாதுகாப்புக் கொடுத்து விட்டால், அவனால் வேலை செய்ய முடியுமா? அவனுக்குத் தகவல் கொடுக்கும் ‘சோர்ஸ்’களை அவன் போலீஸ் துணையுடன் போய் சந்திக்க முடியுமா? இந்த நிலை அயோக்கியர்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஒரு சில நாட்கள் ஒருவரைத் தொடர்ந்து கண்காணித்து விட்டு, ஒரு நாள் அவர்களால் ‘போட்டுத் தள்ள’ முடிகிறது.

பிறகு இந்த மாதிரி பத்திரிகையாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் என்ன பாதுகாப்பு நம் சமூகத்தில் இருக்கிறது? பாதுகாப்பாவது புடலங்காயாவது! இந்தியாவில் இதழாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்பதே செய்தி. முன்பெல்லாம் இந்த மாதிரியான தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீரிலோ அஸ்ஸாமிலோ, பஞ்சாபிலோ அல்லது மாவோயிஸ்ட் செல்வாக்கு இருக்கும் மாநிலங்களிலோ மட்டும் இருப்பதாக ஒரு கருத்து நிலவியது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நாட்டின் எந்த மூலையில் வேண்டும் என்றாலும் கிரிமினல்களால் எதுவும் செய்ய முடியும் என்ற நிலையே இருக்கிறது.

அப்படி என்றால் அரசு எதுவுமே செய்வதில்லையா? அரசு ஏதாவது செய்யாமல் இருக்குமா? “பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்கள் பிணையில் வெளி வர முடியாத குற்றத்தைச் செய்தவர்களாகிறார்கள்” என்று ஒரு சட்டத்தை மகாராஷ்டிர அரசு கொண்டு வரப் போகிறது. ஏற்கெனவே, டாக்டர்களைத் தாக்குபவர்களுக்கு பிணை கிடையாது என்று அங்கு சட்டம் இருக்கிறது. இப்போது பத்திரிகையாளர்கள்! சில வாரங்களில் வழக்கறிஞர்கள்! அடுத்த சில மாதங்களில் ஆசிரியர்கள்! அடப்பாவமே! தலைவலி, காய்ச்சல் எல்லாவற்றுக்கும் புதுசு புதுசா சட்டம் கொண்டு வர்ற அரசாங்கத்தை ‘இன்னுமா இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்கு’?

குமுதம் ரிப்போர்ட்டர் 26.06.11

0 Comments:

Post a Comment

<< Home