Monday, January 29, 2007

கிராமத்தை மறைக்குது உல்லாச உலகம்!

இந்த இடுகை எனது 50 -வது இடுகை என்று ஸ்டேஷன் பெஞ்ச் காட்டுகிறது. புதிதாக எழுதலாம் என்ற எனது முயற்சியில் நான் வெற்றி பெற முடியவில்லை. எனவே ஜூனியர் விகடனில் வெளியான எனது பழைய கட்டுரைகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு மீண்டும் தருகிறேன்.

கிராமத்தை மறைக்குது உல்லாச உலகம்!

அது நீர் விளையாட்டுகள் நிரம்பிய உல்லாசப் பூங்கா. 18 வகையான நீர் மற்றும் பனி விளையாட்டுகளை அங்கு வருவோர் விளையாடலாம். ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். நுழைவுக் கட்டணம் குறைந்தபட்சம் 120 ரூபாய் இருக்கும். இது அந்தப் பூங்காவுக்குள் நுழைவதற்கு மட்டுமே. அந்தக் கட்டணத்திற்கு விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். பனிச் சிகரத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் பனிப்பாறைகளும் செயற்கையாக அந்தப் பூங்காவில் இருக்கின்றன.

நாள்தோறும் சராசரியாக 700 பேர் அங்கு வருகை தருகிறார்கள். அந்தப் பூங்காவை அங்கு நிறுவி நடத்துபவர்களுக்கு தினமும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் லாபம் வருகிறது. அங்கு வந்து செல்பவர்கள் மன மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டம் பசர்கான் என்ற கிராமத்தில் இந்தப் பூங்கா இருக்கிறது. இது போன்ற பூங்காக்கள் அமைக்கப்படுவது இந்தியாவின் வளர்ச்சியைக் காட்டுகிறது என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு ‘காலாவதியாகிப் போன தத்துவங்களைக் கொண்டுள்ள’ கட்சிகள் தடையாக இருக்கின்றன என்று இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் சென்ற வாரத்தில் கூறியிருந்தார். பத்து சதவிகித வளர்ச்சியை இந்தியா எட்டுவதற்கு சில அரசியல் கட்சிகள் முட்டுக் கட்டையாக இருப்பதாக இதற்கு முன்பும் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருக்கிறார். அவர் எந்தக் கட்சிகளை மனதில் நினைத்துக் கொண்டு பேசுகிறாரோ, அந்த அரசியல் கட்சிகளின் தயவில்தான் அவர் பிரதமர் பதவியில் நீடிக்க முடிகிறது என்பது வேறுவிஷயம்!

நாடெங்கிலும் உழைத்துக் களைத்த மக்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதற்காகவே அதிசயப் பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதத்தை பத்திரிகையாளர் பி.சாய்நாத் சித்திரிக்கும் இன்னொரு காட்சி தவிடுபொடியாக்குகிறது. அதே பசர்கான் கிராமத்தின் இன்னொரு பகுதியை அவர் படம்பிடித்துக் காட்டுகிறார்.

கிட்டத்தட்ட 3,000 பேர் அந்தக் கிராமத்தில் வாழ்கிறார்கள். அந்த மக்கள் மிகவும் குறைந்த கூலிக்கு அருகில் உள்ள நகர்ப்பகுதிக்கு ரயிலில் சென்று வேலை செய்து வருகிறார்கள். துப்புரவு செய்வதற்கும் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அதைச் சீர்செய்வதற்காகவும் எப்போதாவது அவர்களில் ஓரிருவர் அந்தப் பூங்காவுக்குள் செல்வதுண்டு. பூங்காவின் அருகிலேயே குடியிருந்த போதிலும் இந்த மக்கள் தங்கள் களைப்பைப் போக்கிக் கொள்ள இந்தப் பூங்காவை பயன்படுத்திக் கொள்ள முடியாது.

ஒருகாலத்தில் நீர்வளம் நிறைந்ததாக இருந்த இந்தக் கிராமத்தில் இப்போது தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு நாளில் பல மணிநேரம் மின்வெட்டு அமல் செய்யப்படுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இதனால் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். ஆனால், இதே கிராமத்தில் இருக்கும் அந்த ‘அதிசயப் பூங்கா’வில் ஒரு நிமிடம் கூட மின் தடை ஏற்படுவதில்லை. 18 வகையான நீர் விளையாட்டுகளுக்குத் தேவையான தண்ணீர் தடையில்லாமல் கிடைக்கிறது. ஒருபுறம் நியாயமான முறையில் கிராம மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இன்னொருபுறம் அவை அனைத்தும் சுலபமாக அந்தப் பூங்காவுக்குக் கிடைக்கிறது. அருகருகில் இருந்தாலும் தொட்டுக் கொள்ள முடியாத தண்டவாளங்களைப் போல ஒரே கிராமத்தில் இரு வேறு உலகங்கள் இயங்குகின்றன.

இந்தப் பூங்கா அந்தக் கிராமத்தில் சிறிதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் கிராமங்களுக்குள் நுழையும்போது பெரிய நிறுவனங்கள் அளிக்கும் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படுவதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இந்த மக்களுக்கு விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் கிடையாது. பழைய கடன்களின் சுமை காரணமாகப் புதிய கடன்கள் கிடைக்காது. எனவே அவர்களால் விவசாயத்தை நடத்த முடியாது. மாற்று வேலைவாய்ப்புகள் கிடையாது. இவர்களுக்கு ஏதாவது செய்து இவர்களை உயிர் பிழைத்திருக்கச் செய்யுங்கள் என்று யாராவது சொன்னால் அதைக் ‘காலாவதியாகிப்போன சிந்தனை’ என்கிறார்கள்! ‘விளைநிலங்களைப் பறிகொடுத்து அங்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதற்கு அனுமதிக்காதீர்கள்’ என்று பேசினால் அவர்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்களாகத் தெரிகிறார்கள்! பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ந்து பேசிவரும் இந்திய வளர்ச்சியின் தன்மை இதுதானா என்ற கேள்வி முன் எப்போதையும்விட இப்போது கூர்மையாக எழுகிறது.

டாக்டர் மன்மோகன் சிங் பொருளாதார நிபுணர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. 1991 முதல் அவர் நடைமுறைப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களால் எத்தனை பேர் பலனடந்திருப்பார்கள்? 15 கோடிப் பேர் இருக்கலாம். ஆனால், இன்னும் 85 கோடி மக்கள் இந்த சீர்திருத்தங்களுடைய பலன்களைப் பெறாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு நன்மைகள் போய்ச் சேரவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் எதிர்மறையாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நகர்ப்புறங்களில் சர்வதேசப் பள்ளிகளின் தரத்துக்கு பல பிரபலமான பள்ளிகள் உருவாகியிருக்கின்றன. இன்னொரு பக்கம், சட்டரீதியாகக் கல்வி பெறும் உரிமை பெற்ற பல லட்சக்கணக்கான சிறுவர்கள் இன்னும் பள்ளிக்கூடம் செல்லாமல் இருக்கிறார்கள். நம்மில் நால்வரில் ஒருவரோ அல்லது ஐவரில் ஒருவரோ இரவு படுக்கைக்குத் தூங்கப் போகும்போது பசித்த காலி வயிறுடன் செல்கிறோம். வறுமை தொடர்பான பிரச்னைகளால் தினந்தோறும் பல நூறு மக்கள் செத்து மடிகிறார்கள். சாதி, மதம், பாலினம் போன்ற பல பாகுபாடுகளால் மனித வாழ்க்கை இங்கு மகிழ்ச்சியற்றதாக இருக்கிறது. வேலையின்மை இளைஞர்களைத் திசைமாற்றுகிறது.

இந்தத் தகவல்கள் அனைத்தும் குற்றம் சொல்லியே பேர் வாங்கப் பார்க்கும் அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுகளில் இருந்து தொகுக்கப்பட்டவை அல்ல. இந்திய அரசே ஒப்புக்கொண்ட புள்ளிவிவரங்கள். அப்படியே அரசு ஒப்புக் கொள்ளாவிட்டாலும் இந்திய மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியாதவையும் அல்ல.

இந்தச் சூழலில் இருக்கும் ஒரு நாடு வளர்ச்சி பெற்ற நாடாகக் கருதப்பட முடியாது. எனவே நாடு வளர்ச்சி அடைந்த நாடாக முன்னேறுவதற்கு இந்தக் குறைகளையும் போக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் பல பிரச்னைகளில் இருந்து அரசு தனது பங்களிப்பை விலக்கிக் கொள்வதை, நவீன சிந்தனை என்றோ சீர்திருத்தம் என்றோ எடுத்துக் கொள்ள முடியாது.

மேலோட்டமாகப் பார்த்தால் மட்டுமே அரசு, மக்கள் பிரச்னைகளில் இருந்து விலகுவது போல் தெரிகிறது. ஆனால், உண்மையில் அது அதிகமாகத் தலையிடுகிறது. அது மக்களுக்கு உதவுவதற்காக அல்ல, உல்லாசப் பூங்காக்களுக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் ஆதரவாக அப்பட்டமாகத் தலையிடுகிறது.

அதேசமயம் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், சமூகத்தின் வளர்ச்சி என்பது சீரானதாகவும் சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுடைய வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். இதை வலியுறுத்துபவர்களை வளர்ச்சிக்குத் தடையானவர்கள் என்று முத்திரை குத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது!

2020இல் இந்தியாவை ‘வல்லரசு’ என்ற நிலைக்குக் காங்கிரஸ் கட்சி கொண்டு செல்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்போதும் ‘வறுமையே வெளியேறு’ என்ற முழக்கத்தைத் தேர்தலுக்காக முன்வைக்க வேண்டிய அவல நிலை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கக் கூடாது! --- - ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன்(19.11.06)

18 Comments:

At 11:54 AM, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதைப் படித்ததும் வறுமை என்பது மிகப்பெரிய வன்முறை என்னும் வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

தில்லியின் மிகப்பெரிய அக்ஷர்தம் கோயிலுக்கு அருகில் குப்பம் போன்ற பகுதி.
எட்டுவழி விரைவுப் பாதையின் அருகில் தார் ரோட்டைக் காணாத மண் சாலைகள்.
சமநிலை தராதபோது நாட்டின் முன்னேற்றம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

 
At 7:47 PM, Blogger ரவி said...

////2020இல் இந்தியாவை ‘வல்லரசு’ என்ற நிலைக்குக் காங்கிரஸ் கட்சி கொண்டு செல்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்போதும் ‘வறுமையே வெளியேறு’ என்ற முழக்கத்தைத் தேர்தலுக்காக முன்வைக்க வேண்டிய அவல நிலை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கக் கூடாது! ////

அப்படிப்போடு...!!!!!!!!

 
At 7:59 PM, Blogger மணியன் said...

நட்சத்திர வாரத்தை சூடான விவாதத்துடன் துவக்கி உள்ளீர்கள். நல்ல கட்டுரை. ஆனால் முன்னேற்றம் என்பது யாருக்கும் பாதிப்பின்றி ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம், முன்னேறுவதே பாவம் என்ற நிலை எடுக்காமல். உல்லாச பூங்கா அமைத்து வேலை வாய்ப்பினை ஏற்படுத்தியது தவறில்லை, வெளியாட்களுக்கென்றாலும்; ஆனால் அந்த கிராம மக்களுக்கு அந்த பூங்கா நிர்வாகம் மூலம் தீர்வு கிடைக்கச் செய்வது அரசு அதிகாரத்தினால் முடியும். அதை விட்டு உல்லாச பூங்காக்களே வேண்டாம் என்பது பிற்போக்குத்தனமே. அந்த பணமுதலைகளிடம் கையூட்டு வாங்கிக் கொண்டு வறியவர்களை நசுக்குவது அரசியல்வாதிகளும்,அரசு அதிகாரிகளுமே தவிர தனிநபர் பொருளாதாரம் இல்லை.

விளநிலங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க வேண்டாம், ஆனால்நந்திகிராம் தவறினால், நாங்குநேரி போன்ற ஏற்கெனவே கையகப் படுத்தப் பட்ட SEZ கூட தடுக்கப் படுவது அந்த பகுதி மக்களின் வளர்ச்சிக்கு எப்படி முற்போக்காகும் ?

//அப்போதும் ‘வறுமையே வெளியேறு’ என்ற முழக்கத்தைத் தேர்தலுக்காக முன்வைக்க வேண்டிய அவல நிலை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கக் கூடாது!//

எந்த ஒரு 'காலாவதியாகிப் போன தத்துவங்களைப்' பேசாத கட்சிகளுக்கும் பொருந்தும்.

 
At 8:15 PM, Blogger குழலி / Kuzhali said...

முதலில் ராம்கி அய்யா அவர்களுக்கு நட்சத்திர வாழ்த்துகள், நான் எப்போதும் ஜென்ராம்(நீங்கதாங்க) கட்டுரைகளுக்கு அந்த ஜென்ராம் நீங்கள் தான் என்று தெரியாத போதிருந்தே வாசகன், ஒரு வெகுசன ஊடகத்தில் அதுவும் விகடனில் என் எண்ணங்களை ஒத்த(இதெல்லாம் கொஞ்சம் ஓவருனு சொல்வது கேக்குது கேக்குது) வெகுசில இடங்களில் மட்டுமே மாறுபட்ட ஜென்ராம் கட்டுரைகள் எழுதி வெளியிடப்படுவது ஆச்சரியமளித்தது....

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி

நன்றி

 
At 10:13 PM, Blogger டண்டணக்கா said...

அருமையான கட்டுரை, நியாங்கள் நிறைந்த குரல்...ஒலிக்கட்டும் உரக்க.

 
At 10:18 PM, Blogger ஜென்ராம் said...

குழலி,
ஜூனியர் விகடனில் நான் எழுதிய நான்காவது கட்டுரையை நீங்கள் உங்கள் பதிவில் போட்டிருந்தீர்கள். தொடர்ந்து படித்து வருவதையும் இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் கருத்தை அல்லது எண்ணங்களை ஒத்த கட்டுரைகள் என்ற வார்த்தைகள் ஓவர் அல்ல..

நமது கருத்துக்கள் நமது மூளையில் இருந்து உதிப்பவை அல்ல. நாம் பார்க்கும் மனிதர்களிடம் இருந்து - அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து- நாம் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து வடிவம் பெறுபவையே. அப்படி இருக்கும் போது உங்கள் தன்னடக்கம் அவசியம் இல்லை. உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள். (நன்றி என்ற சொல்லைப் பன்மையில் பயன்படுத்தலாமா?)

 
At 10:24 PM, Blogger ஜென்ராம் said...

மணியன்:

//முன்னேறுவதே பாவம் என்ற நிலை எடுக்காமல். உல்லாச பூங்கா அமைத்து வேலை வாய்ப்பினை ஏற்படுத்தியது தவறில்லை,//

முன்னேற்றத்தை பாவம் என்று கொள்ளும் தொனி இருக்கிறதென்றால் தவறு என் மீதுதான். இன்னொரு 85 முதல் 90 விழுக்காடு மக்களின் வாழ்க்கையை மறைத்து அதிசய உலகங்களை மட்டும் முன்னேற்றமாக சித்தரிப்பதில் உண்மை இல்லை என்பதே நான் சுட்ட விரும்பியது. நன்றி..

 
At 10:25 PM, Blogger ஜென்ராம் said...

லட்சுமி, செந்தழல் ரவி, டண்டணக்கா:

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றி.

 
At 11:57 PM, Blogger Unknown said...

நீங்கள் விகடனில் இருப்பது தெரியும், ஜென்ராம் நீங்கள் தானா?.

//சமூகத்தின் வளர்ச்சி என்பது சீரானதாகவும் சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுடைய வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். இதை வலியுறுத்துபவர்களை வளர்ச்சிக்குத் தடையானவர்கள் என்று முத்திரை குத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது! //

நமது உதகையில்., உலாச் செல்பவர்கள் களிப்பில் மிதக்க, தேயிலைத் தோட்டத் தொளிலாளர்களின் வாழ்க்கை?????.

முதலைகள்., நீர்யானைகள் ஆகவே பொருளாதாரச் சீர்திருத்தங்கள்.

 
At 12:02 AM, Blogger ஜென்ராம் said...

அப்படிப் போடு:

//நீங்கள் விகடனில் இருப்பது தெரியும், ஜென்ராம் நீங்கள் தானா?.//

ஜென்ராம் நான் என்பது நிஜம். முதல் பகுதி நிஜம் அல்ல.

நன்றி..

 
At 12:25 AM, Blogger சிவபாலன் said...

ராம்கி அய்யா

நடசத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!!

நல்ல கட்டுரை. நன்றி!

 
At 5:42 AM, Blogger SP.VR. SUBBIAH said...

அற்புதமான வெளிப்பாடு!

இதைப் படித்தவுடன், எனக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல் கார்டூனிஸ்ட் திரு. R.K.Lakshman அவர்கள்
போட்டிருந்த படம்தான் நினைவிற்கு வருகிறது!

ஒரு பெரிய அரசு அதிகாரி, கிராமவாசி ஒருவனிடம் அடுத்த ஐந்து ஆண்டுகளில்
அரசின் சீர்திருத்தக் கொள்கையால் ஏற்படவுள்ள நன்மைகளை விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இறுதியில் அந்தக் கிராமவாசி கேட்கும் கேள்வி செவிட்டில் அறைந்ததுபோல இருக்கும்.

அதிகாரி: "So, in the next five years, you will get lot of things!"
கிராமவாசி "Okay Sir, When I will get my next meal?"

 
At 12:12 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ராம்கி; ஐம்பதாவது பதிவிற்கும்

// உல்லாச பூங்கா அமைத்து வேலை வாய்ப்பினை ஏற்படுத்தியது தவறில்லை, வெளியாட்களுக்கென்றாலும்; ஆனால் அந்த கிராம மக்களுக்கு அந்த பூங்கா நிர்வாகம் மூலம் தீர்வு கிடைக்கச் செய்வது அரசு அதிகாரத்தினால் முடியும்.//
மணியன், பூங்கா ஏற்படுத்தியது தவறில்லை என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. பூங்காவினால், வெளியாட்களுக்கு வேலை கிடைக்கிறது என்பது நல்ல விஷயமே! ஆனால், அதே பூங்கா அமைத்த காரணத்தால், ஏற்கனவே அந்தக் கிராமத்தில் இருந்த மக்களின் தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளில் குறை விழுந்திருக்குமானால், பூங்கா எப்படிப் பயனுள்ளதாக இருக்கும்?

பூங்காவின் மூலம் அவர்களுக்குத் தீர்வு என்று சொல்வது முரணாகத் தோன்றுகிறது. கிராம மக்களின் பிரச்சனையே பூங்காவால் தானே உருவானது?!

 
At 2:25 PM, Blogger சோமி said...

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல அது இரு நாடு ஏழைகளின் இந்தியாவுக்கும் பணக்காரர்களின் இந்தியாவுக்கும் தொடர்பேதும் இல்லை. பணக்காரர்களின் இந்தியா ஐ.ரீ யிலும் ஏனைய தொழில் துறைகளிலும் பெரு வளர்ச்சி கண்டுவருகிறது.அவர்களுக்கு தேவையான காளியாட்டங்களுக்கும் பணக்கார இந்தியா தயாராகிறது.

நல்ல எழுத்துகளும் கருத்துக்களும். வாழ்த்துக்கள். அடிமட்ட மக்கள் குறித்து பேசாதவரையில் இந்தியாவின் அபிவிருத்தி பணக்காரர்களுடையதே.

 
At 9:14 PM, Blogger Unknown said...

//முதல் பகுதி நிஜம் அல்ல//

ஆஹா, அங்கு freelance கட்டுரைகள் தருகிறிர்களா?. நீங்கள் இருப்பது நெல்லை பிரிவு மலர் :)... மன்னிக்கவும்.

 
At 9:38 PM, Blogger தருமி said...

வாழ்த்துக்கள்

 
At 11:54 PM, Blogger Raveendran Chinnasamy said...

னானும் பொருளாதர முனெந்த்ரதை கண்டு பல னுபுனர்கலை பிற்பொக்குவாதி என்றூ சாடிருக்கிறேன். ஆனால் ரிலன்யஸ் னிருவனம் காய்கறி விற்க முன்படும் பொது தான் உனருகிரென்.

( I dont dont know how to type in Tamil . ihave tried . )

 
At 8:04 AM, Blogger ஜென்ராம் said...

ரவீந்திரன் சின்னச்சாமி:

இப்படியே தொடர்ந்து தமிழில் தட்டச்சு செய்யுங்கள். பிழைகள் விரைவில் மறைந்துவிடும். சில நாட்களில் தனியாக தமிழில் பதிவு போட்டு விடுவீர்கள். நன்றி.

 

Post a Comment

<< Home