Monday, April 03, 2006

மக்கள் யார் பக்கம்?

ஏப்ரல் மாத திசைகள் மின்னிதழில் அருணா ஸ்ரீனிவாசன் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த எனது பத்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. அந்தப் பத்தியை இங்கு இடுகிறேன். ஏற்கனவே இதை வாசித்தவர்கள் பொறுத்தருளுங்கள்.

மக்கள் யார் பக்கம்?

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல், வருகிற 2006 மே மாதம் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. கட்சித் தொண்டர்கள் மத்தியில் தேர்தல் ஜுரம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் பரபரப்பைப் பயன்படுத்தி ஊடகங்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கான முயற்சியில் முழுமூச்சாக இறங்கி இருக்கின்றன.

இந்நிலையில் இந்தத் தேர்தல் தமிழகத்தில் வாழும் மக்களின் அன்றாட வாழ்வில் ஏதேனும் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. இந்தத் தேர்தல் மட்டுமல்ல, இந்தியாவில் இதுவரை நடந்த எந்தத் தேர்தலும் மக்கள் வாழ்வில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தியதில்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது.

இருந்தபோதிலும் மக்கள் இதுபோன்ற தேர்தல்களில் ஆர்வம் காட்டுகின்றனர். தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக நம்புகின்றனர். சில மேல்நாட்டு அறிஞர்கள் அரசுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு குறித்து அளித்திருக்கும் விளக்கங்கள் மக்களிடம் போய்ச் சேரவில்லை. அல்லது அவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அத்தகைய அறிஞர்களின் வாதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்ற முடிவே கிடைக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதைக் காப்பதற்கு இருக்கும் பிற சட்டங்கள், காவல்துறை, நிர்வாகம், ராணுவம், நீதித்துறை போன்றவற்றை உள்ளடக்கிய அரசு நிரந்தரமாக எந்த மாற்றமும் இன்றித் தொடரப் போகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் இவற்றில் எந்த மாறுதல்களையும் கொண்டுவர இயலாது. இந்தியாவில் ஒரு மாநிலமாக உள்ள தமிழகத்தில் வாழும் மக்களுக்குத் தேவையான சட்டங்களை உருவாக்கும் அமைப்பே தமிழக சட்டப்பேரவை. இங்கு இயற்றப்படும் சட்டங்கள்கூட தன்னளவில் இறுதியானவை அல்ல என்பது வேறு விஷயம்.

இதுபோன்ற அடிப்படையான விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மேலோட்டமான அரசியல் குறித்தே எல்லா இடங்களிலும் விவாதிக்கப்படுகிறது. அரசாங்கம் வழங்கும் அதிகாரத்திற்கான போட்டியே நமது தேர்தல் என்னும்போது அதன் போக்கிலேயே தேர்தல் குறித்தும் கட்சிகள் குறித்தும் பேச வேண்டியதாகி விடுகிறது. அடிப்படை மாற்றங்கள் குறித்துப் பேசுவது பட்டுத் துணிக்கான கனவாக இருக்கலாம்; இப்போது நாம் கட்டி இருக்கும் கோவணத்தைப் பறிகொடுக்காமல் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? 2001 முதல் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சில மாதங்கள் ஓ.பன்னீர்செல்வம் இருந்ததைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த அரசாங்கம் தமிழகத்தை ஆட்சி செய்தவிதம் குறித்து மக்கள் அளிக்கும் தீர்ப்பே நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு சீர்தூக்கிப் பார்ப்பார்கள்? மக்கள் இரண்டு விதங்களில் இந்தப் பிரச்னையை அணுகக் கூடும்.

ஒன்று, ஆட்சியின் செயல்பாடுகளை அரசியல் ரீதியாக அணுகலாம்; மற்றொன்று மக்கள் தங்களுக்கு நேரடியாக கிடைத்த பலன்களின் அடிப்படையில் பார்க்கலாம்.

ஆட்சியை அரசியல் ரீதியாக அணுக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஜெயலலிதா ஆட்சியின் மே 2001 முதல் மே 2004 வரையிலான மூன்றாண்டுகளை எடுத்துக் கொள்வார்கள். கையில் கிட்டிய பலன்களைப் பார்க்க நினைப்பவர்கள் மே 2004 முதல் பிப்ரவரி 2006 வரையிலான காலத்தில் அவரது அறிவிப்புகளை முன்வைப்பார்கள்.

முதல் மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் நிறைந்த ஆண்டுகள். சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினராகத் தேர்வு செய்து ஏதாவது ஒரு நடவடிக்கை மூலம் அவர்களது எதிர்ப்பை ஜெயலலிதா சம்பாதித்துக் கொண்டார். கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம், ஆடு, கோழி கோவில்களில் பலியிடத் தடை, போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர் போராட்டங்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். இதைத் தொடர்ந்து 2001 தேர்தல் வெற்றிக்குக் காரணமான கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாகத் தம்மிடம் இருந்து பிரிந்து போவதற்கு இடமளித்தார்.

மே 2004க்குப் பிந்தைய ஒன்றரை ஆண்டுகள், ஜெயலலிதா மக்களுக்கு சலுகை மழையாகப் பொழிந்த ஆண்டுகள். எப்படி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவாக தன்னை விட்டு விலகச் செய்தாரோ அதே போல் ஒவ்வொரு பிரிவாகத் தேர்வு செய்து அவர்களுக்கு பலனளிக்கும் விதத்தில் சலுகைகளை அள்ளி வழங்கினார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த ஒவ்வொரு அறிவிப்பும் அவருக்கு ஆதரவைப் பெருகச் செய்தது. மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச பாடநூல்கள், விவசாயிகளுக்குக் காப்பீடு, சுனாமி மற்றும் மழை வெள்ள காலங்களில் நிவாரண உதவி, அதிலும் கையில் பணமாக உதவி ஆகிய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமைக்கு நற்பெயரையே பெற்றுத் தந்திருக்கின்றன. அரசாங்கத்திடம் இருந்து ஐந்து ரூபாய் வாங்குவதற்கே ஐம்பது ரூபாய் செலவழிக்கும் பரிதாப நிலையில் இருந்த மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து பண உதவி வீடு தேடி வந்த விதம் ஆச்சர்யத்தை அளித்தது.

ஜனரஞ்சகமான திட்டங்கள் தொலைநோக்கில் மக்களுக்கு பயன்தராது என்று ‘அறிவு ஜீவிகள்' ஒருபுறம் முழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும், காமராஜர் என்றவுடன் இலவசக் கல்வியும், மதிய உணவும் நினைவுக்கு வருகின்றன. எம்ஜிஆர் என்றவுடன் சத்துணவுத் திட்டமே மக்கள் மனதில் நிற்கிறது. அதைப்போல ஜெயலலிதா ஆட்சியில் நடைமுறைக்கு வந்த கோயில்களில் அன்னதானம், மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச புத்தகங்கள் போன்ற திட்டங்கள் நீண்ட நாட்களுக்கு மக்கள் நினைவில் பசுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஜெயலலிதாவின் செயல்பாட்டில் தலைகீழ் மாற்றம் எப்படி நேர்ந்தது? மே 2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஓரிடம் கூட வெற்றி பெறவில்லை. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்தது ஜெயலலிதாவுக்குப் பெருஞ்சுமையே. எதிரில் இருந்த கூட்டணி வலுவானதாக இருந்தது என்பது உண்மைதான். ஆனாலும் அ.இ.அ.தி.மு.க. தனியாக நின்று கணிசமாக வாக்குகள் பெற்றிருந்தது. என்றாலும், ஓரிடம் கூட வெல்லாதது அவரது கட்சிக்குப் பின்னடைவுதான். இதைச் சரி செய்வதற்கான முயற்சியே அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகள்.

இதையே வேறுவிதமாகவும் பார்க்கலாம். மே 2004 வரை மத்தியில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்தது. இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. மத்திய அரசாங்கத்தின் பாதையிலேயே தமிழக அரசாங்கமும் சென்ற காரணத்தால், மாநிலத்திலும் நெருக்கடிகள் அதிகமாக இருந்தன. மே 2004க்குப் பிறகு மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. வெளியில் இருந்து இடதுசாரிகள் தரும் ஆதரவின் தயவில் ஆட்சி நடக்கிறது. ஆட்சியின் தொடக்கத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் மந்தகதியில் இருந்தன. அவை தீவிரமாகும்போது இடதுசாரிகளின் எதிர்ப்பும் தீவிரமாகிறது. இடதுசாரிகளின் எதிர்ப்பை மீறி சமீப காலமாக மத்திய அரசு செயல்படத் தொடங்கிவிட்டது என்பது வேறு விஷயம். ஜெயலலிதாவும் மத்திய அரசைப் போலவே தமிழகத்தில் ஜனரஞ்சகமான திட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சட்டப் பேரவைக்கான தேர்தல் விரைவில் வர இருக்கிறது என்பதும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

ஜெயலலிதாவின் ஜனரஞ்சகமான திட்டங்கள் மக்கள் மத்தியில் ஒரு வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தி அவருக்கு செல்வாக்கை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. வைகோவும், திருமாவளவனும் அவரது அணியில் சேர்ந்துள்ளார்கள். தங்களது பிரசார வலிமையாலும் தொண்டர் பலத்தாலும் அவர்கள் இருவரும் ஜெயலலிதாவே வெற்றி பெறுவார் என்ற தோற்றத்தை எளிதில் மக்கள் மனதில் உருவாக்கி வருகிறார்கள். 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது தாக்குதல் நிலையில் இருந்த திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி இப்போது தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தயாநிதிமாறனும் அன்புமணியும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். நான்கைந்து முறை பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் இயற்கை பலத்த சேதங்களை ஏற்படுத்திய போது மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக உடனடியாக மாநில அரசுக்கு உதவியை வழங்கிடவில்லை. மாநிலத்தில் ஆட்சியில் இல்லாதபோது மாநில சுயாட்சி என்ற முழக்கம் ஜமுக்காளத்திற்கு அடியில் மறைக்கப்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு நிதி உதவி அளித்தால் அது ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிக்கே பயன்படும் என்று கருதி ஜனநாயக முற்போக்குக் கூட்டணி துடிப்புடன் செயல்படவில்லை. சேது சமுத்திரத் திட்டமும் தமிழ் செம்மொழியும் சாதனைகளாக இருந்த போதிலும் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் தேர்தல் களத்தைப் பார்க்கும்போது பிரசார வலிமையில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. ஜெயலலிதா தவிர வைகோ, திருமாவளவன், பழ கருப்பையா, நெல்லை கண்ணன் மற்றும் சினிமா துறையில் இருந்து கூட்டம் சேர்க்கும் ஒரு பட்டாளம் பிரச்சாரத்தில் முன்நிற்கிறது.

எதிரணியில் கருணாநிதியால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கு அவரது முதுமையும் உடல்நிலையும் இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் ஏழை எளிய மக்களைச் சென்றடையும் விதத்தில் பேசுவதற்கு தமிழகத்தில் குறிப்பிடும்படி யாரும் இல்லை. டாக்டர் ராமதாஸின் பிரசாரம் வட மாவட்டங்களுடன் நின்று போய்விடும். இடதுசாரிகள் தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளைத் தாண்டி பெரிய அளவில் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு வாய்ப்பில்லை. தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களும் குறைந்த அளவிலான இடதுசாரி தொண்டர்களும் மட்டுமே பிரச்சாரத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும்.

இந்தக் கூட்டணியின் ஒரே பலம் வாய்ந்த சாதனம் சன் டிவியும், தினகரன் குழும நாளிதழ்களும்தான். ஆனாலும் கூட இவற்றின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் ‘பண்டிதர்களுக்கு’ அதிர்ச்சி அளிக்கக் கூடும். அரசியல் கட்சிகளின் வாக்குவங்கிக் கூட்டல் கணக்குகளுக்கும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் வேதியியல் மாற்றத்திற்கும் இடையில் எது வெற்றி பெறும் என்பதே இன்று முக்கிய கேள்வி. ஜெயலலிதா அணியில் விஜயகாந்த் சேர்ந்தால் ஜெயலலிதா நிச்சயம் வெற்றி பெறுவார் என்றே கருதத் தோன்றுகிறது. விஜயகாந்த் தனித்து நின்றாலும் கூட சூழல் ஜெயலலிதாவுக்கே சாதகமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

இந்தத் தேர்தலுக்குப் பின் அரசியல் வேறு திசையில் பயணிக்கும். சோனியா காந்தியுடன் ஜெயலலிதாவுக்கு இருக்கும் தனிப்பட்ட முரண்பாடுகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மாநிலக் கட்சிகளின் கூட்டணியில் ஜெயலலிதா இணைவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எதிர்காலத்தில் அந்த அணிக்கு இடதுசாரிகளும் ஆதரவளிப்பார்கள். சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த சில மாதங்களில் இந்திய அரசியல் இந்தத் திசையில் நகரத் தொடங்கும். அப்போது மீண்டும் ‘சந்தர்ப்பவாத அரசியல்’ குறித்து தமிழகத்தில் மயிர் பிளக்கும் விவாதங்கள் நடைபெறக் கூடும்.

இறுதியாக, குறைந்தபட்சம் ஒவ்வொரு தேர்தலும் நடைபெறும் நாட்களிலாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களுக்காக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்தல் காலத்திலாவது சில விஷயங்கள் குறித்த விவாதம் அவசியம் என்று கருதுவதால் சிறுபான்மைக் குரலை எழுப்புவதும் அவசியமாகிறது.

தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் "மேலே உள்ள யாருக்கும் என் வாக்கு இல்லை'' என்ற பொத்தானும் "தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லை'' என்ற பொத்தானும் இடம்பெறவேண்டும். அந்தப் பொத்தான்களும் இடம் பெறும் நிலையிலேயே மக்கள் உண்மையில் யார் பக்கம் என்பது தெரிய வரும்.