Thursday, May 12, 2011

குப்புறத் தள்ளி குழியும் பறித்த கதை!

“நல்ல நாள் பார்த்து செய்யுங்கள்” என்று சில பெரியவர்கள் சொல்வதை நாம் இங்கு கேட்டிருக்கிறோம். அதைப் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லும் நல்ல நாள், நல்ல நேரம் என்றே நான் இவ்வளவு காலமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய அந்தப் பார்வை கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மாறியது. அந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன? மாற்றியவர் யார்? எத்தனையோ ‘சாதனைகளைச்’ செய்து முடித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே அந்த மாற்றத்தை என்னுள் உருவாக்கியது. அந்த முக்கியமான செயலைச் செய்து ‘வரலாற்றில்’ இடம் பிடித்தவர் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

ஒரு ‘சுப யோக சுப தினத்தில்’ மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் அணு மின் நிலையத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக சொன்னார். என்றைக்கு அப்படி ஓர் உறுதியை வெளிப்படுத்துகிறார்? ஏப்ரல் 26-ம் நாள். அந்த நாளுக்கு அப்படி என்ன சிறப்பு? 1986-ம் வருடம் அதே நாளில் தான் அன்றைய சோவியத் யூனியனின் உக்ரைன் மாநிலத்தில் செர்னோபில் அணுமின் நிலையத்தில் பெரிய விபத்து நடந்தது. மிக மோசமான அணு விபத்து என்று வரலாறு அதைப் பதிவு செய்திருக்கிறது. அந்த உலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக கதிர்வீச்சு காற்றில் கலந்து சோவியத் யூனியனின் மேற்குப் பகுதி முழுவதையும் பாதித்தது.

கடந்த மார்ச் மாதம் 11-ம் நாள் ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் சுனாமியால் நடந்த விபத்து நம்முடைய நினைவை விட்டு இன்னும் போயிருக்காது. அந்த விபத்துக்கு 7 என்ற ஆபத்து வகை எண் கொடுத்து அதன் தீவிரத்தை நமக்குப் புரிய வைத்தார்கள். அதைப் போலவே செர்னோபிலில் நடந்த விபத்துக்கும் ஏழு என்ற எண்ணையே கொடுத்தார்கள். சுற்றுச் சூழலில் அந்தக் கதிர்வீச்சு ஏற்படுத்திய பாதிப்பை சரி செய்வதற்காக ஏறத்தாழ 5 லட்சம் பேர் இறங்கி வேலை செய்தார்கள். அதற்காக கிட்டத்தட்ட 1800 கோடி ரூபிள்களை அரசு செலவழிக்க நேர்ந்தது.

அப்படிப்பட்ட ஒரு நாளை ஜெய்ராம் ரமேஷ் தேர்ந்தெடுத்திருக்கிறார்; அணுமின் உற்பத்தியைக் கைவிட மாட்டோம் என்ற கொள்கையை அந்த நாளில் அவர் பிரகடனம் செய்கிறார். ஜெய்தாப்பூர் திட்டத்துக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களையும் மீறி திட்டம் செயல்படுத்தப்படும் என்ற உறுதியையும் அவர் வெளிப்படுத்துகிறார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு விபத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, இப்போது நடந்த ஃபுகுஷிமா விபத்தின் பாதிப்பையாவது கருத்தில் கொள்ளுங்கள் என்று பல அறிஞர்கள் சொல்லிப் பார்த்தார்கள். “நீங்கள் கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை எங்களுக்குத் தேவையில்லை; நாங்கள் எங்கள் நிலங்களைத் தர மாட்டோம்” என்று அந்தப் பகுதி மக்கள் உறுதியாகப் போராடினார்கள். துப்பாக்கிச் சூட்டுக்கு அங்கு உயிர் பலி வேறு கொடுத்தாகி விட்டது. இவை எதுவும் இந்த அரசிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை!

ரத்னகிரி மாவட்டத்து மக்களுக்கு இது போன்ற போராட்டங்கள் ஒன்றும் புதியது இல்லை. தங்களுடைய போராட்டங்களை மீறி திட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்திருப்பதை வரும் காலத்தில் அவ்வளவு சுலபமாக அவர்கள் விட்டுவிட மாட்டார்கள். 1990- களின் தொடக்கத்தில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை அங்கு உருவாக்க அரசு தீர்மானித்தது. ஆனால் அந்தப் பகுதி மக்களின் தொடர்ச்சியான போராட்டம் அந்த ஆலையைத் தூத்துக்குடிக்கு விரட்டி விட்டது. ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் அந்தப் பகுதியில் விளையும் ‘அல்போன்சா’ மாம்பழ உற்பத்தியைப் பாதிக்கும் என்று மக்கள் அங்கு போராடினார்கள். இறுதியில் வெற்றியும் பெற்றார்கள்.
மேற்கு வங்கத்தில் சிங்கூரில் இருந்து டாடா நானோ கார் தொழிற்சாலை பின்வாங்க நேர்ந்தது. நந்திகிராமில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த சலீம் குழுமம் ரசாயனத் தொழிற்சாலை தொடங்க முடியாமல் மக்கள் ஒன்றுபட்டு நின்றார்கள். அதே சமயத்தில் மக்கள் தோற்றுப் போய் கைவிட்ட போராட்டங்களும் இருக்கின்றன. என்ரான் நிறுவனத்தின் உதவியுடன் வந்த தாபோல் மின் திட்டத்துக்கு எதிராக மகாராஷ்டிராவில் மக்கள் போராடினார்கள். ஆனால் அவர்களால் அந்தத் திட்டத்தைத் தடுக்க முடியவில்லை.

இந்த வகைப் போராட்டங்கள் எல்லாமே தொடங்கப்படும்போது அரசியல் கட்சிகளால் ஆதரிக்கப்படுவதில்லை. மக்கள் ஒன்றுபட்டு உறுதியுடன் நிற்கிறார்கள் என்று தெரிந்த பிறகு மெல்ல உள்ளே நுழைந்து போராட்டத்தின் தலைமையை அரசியல் கட்சிகள் கைப்பற்றி விடுகின்றன. போராட்ட்த்தின் வீச்சு மாநிலம் முழுவதும் பரவி ஆட்சி மாற்றத்துக்கு உதவுகிறது. போராட்டத்தை ஆதரித்த கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ‘அந்தர் பல்டி’ அடித்து அந்த தொழில் குழுமத்துடன் ஒரு ‘புதிய ஒப்பந்தம்’ போட்டுவிடுகிறது! வெளிப்படையான நிர்வாகம் என்பது இன்னும் நம் கனவு மட்டுமே!

ஆனால் வேறு சில நாடுகளில் மக்கள் எழுப்பும் குரல்களுக்கு உடனடியாக பதில் கிடைக்கிறது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் அணு உலைகளைக் கட்டுவது தொடர்பாக ஒரு மறு மதிப்பீடு தேவை என்று அரசு சொல்லி இருக்கிறது. அந்த ஆய்வுக்கும் மதிப்பீட்டுக்கும் பிறகு அந்த நாடுகள் அணு உலைகளைக் கட்டலாம்; ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுப்பார்களாக இருக்கலாம். பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி அபூர்வமாக நடப்பதே விபத்து. அப்படி ஒரு விபத்து நடந்தால், நாம் அதன் விளைவுகளைச் சமாளிப்பதற்கோ, எதிர்கொள்வதற்கோ எந்த அளவு தயாராக இருக்கிறோம் என்பதே நம்முடைய மனதில் எழும் கேள்வி.

சரி, விபத்துக்களே நடக்காமல் நம் அரசு பார்த்துக் கொள்ளும் என்று நாம் நம்புகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அணு உலைகளை பயங்கரவாதிகள் தாக்கக் கூடும் என்று நம்முடைய அரசு சார்பாக அவ்வப்போது எச்சரிக்கை வருகிறதே, அதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? அப்படி எதுவும் நடக்காது என்று அரசாங்கம் உறுதி அளிக்குமா? மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையும் அக்கறையும் நம்முடைய அரசுகளிடம் இருக்கின்றனவா? போபாலில் நடந்த விஷவாயுக் கசிவு விபத்துக்குப் பிறகு இன்று வரை அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

முதலில் மக்களிடம் இருந்து நிலத்தைப் பறிக்கிறோம்; அங்கு ஏதோ ஒன்றைக் கட்டி சுற்றுச்சூழலைக் கெடுக்கிறோம்; அவர்களுடைய வேலை வாய்ப்புகளைப் பறிக்கிறோம்; இவ்வளவுக்கும் பிறகு மக்கள் எப்படி இருப்பார்கள்? அணு ஆபத்தைப் போலவே இந்தச் சூழலில் வேறு ‘அச்சுறுத்தலுக்கான’ ஆபத்தும் அதிகம் இருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home