Wednesday, May 18, 2011

இறுதி வெற்றி மக்களுக்கே!

“இந்த வெற்றி எங்களுக்குக் கிடைத்த வெற்றி அல்ல; தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி” என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். ‘பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்’ என்ற எம்.ஜி.ஆர். பாடலுக்குத் தகுந்தபடி பணிவாகவும் தன்னடக்கத்துடனும் அவர் அப்படி சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையிலேயே தமிழக மக்கள் தங்களுடைய விருப்பத்தை சுதந்திரமாகவும் ஆவேசத்துடனும் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பது 2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. அதனால் இந்த வெற்றி தமிழக மக்களின் வெற்றிதான் என்பதில் சந்தேகம் இல்லை!

தமிழ்நாடு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்து இருக்கிறார்கள். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி பெரும்பான்மையைக் கைப்பற்றி இருக்கிறது. கேரளத்தில் மிகக் குறைவான இடங்கள் வித்தியாசத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை இழந்திருக்கிறது. இடது ஜனநாயக முன்னணிக்கு 68 இடங்களும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 72 இடங்களும் கிடைத்திருக்கின்றன. இரண்டு இடங்கள் மாறி இருந்தால், இரு அணிகளுக்கும் சமமான இடங்கள் கிடைத்திருக்கும். சுவாரஸ்யமான பல காட்சிகள் அரங்கேறி இருக்கும். ஆனால் அப்படி ஒரு நிலையை கேரள மக்கள் உருவாக்கவில்லை. அசாம் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கிறது.

மேற்கு வங்கத்தில் 34 வருட இடது முன்னணி ஆட்சிக்கு அந்த மாநில மக்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். 1977 முதல் 2000 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசுவும் அதன் பிறகு இந்த தேர்தல் வரை புத்ததேவ் பட்டாச்சார்யாவும் அங்கு முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். குஜராத்திலும் பீகாரிலும் ‘வளர்ச்சி’ என்று ஊடகங்களும் ஆட்சியாளர்களும் சித்தரிக்கும் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இடது முன்னணி முயன்றது. ஆனால் மேற்கு வங்க மக்களுக்கு இடதுசாரிகள் கடந்த காலத்தில் கற்றுக் கொடுத்திருந்த அரசியல் பாடம், அவர்களுடைய முயற்சிக்குத் தடை போட்டது. தடைகளைத் தகர்க்க அரசு அடக்குமுறையை ஏவியது. மக்கள் அரசுக்கு எதிராக அணி திரண்டார்கள். தேர்தல் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி இடது முன்னணி அரசுக்கு மக்கள் ‘ஓய்வு’ கொடுத்தார்கள்!

தமக்கு நல்ல ஓய்வை அளித்ததற்காக திமுக தலைவர் கருணாநிதியும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்! ஆனால் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஓய்வு அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட ‘விருப்ப ஓய்வு’ அல்ல. ஆற்காடு வீராசாமிக்கும் கோ.சி.மணிக்கும் திமுக கொடுத்த இயல்பான பணி ஓய்வும் அல்ல. இது தமிழக மக்கள் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் கொடுத்த ‘கட்டாய ஓய்வு!’ சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட கஷ்டப்பட வேண்டாம் என்று அவர்கள் அந்த பணிச்சுமையை விஜயகாந்த் தலையில் சுமத்தி இருக்கிறார்கள்! திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் அவருக்குக் கொடுத்திருக்கும் பணியைச் செய்வதில் அவருக்கு எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை.
ஏராளமான மாநிலக் கடன் சுமையும் தேர்தலில் வாக்குறுதிகளாக மக்களிடம் சொன்னதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புச் சுமையும் இப்போது ஜெயலலிதாவின் தோள்களில் ஏறியிருப்பதாக ஜெயலலிதா சொல்கிறார். இருந்தும் தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்! ஒளிமயமான எதிர்காலத்தை தமிழக மக்களுக்கு அவரால் வழங்க முடியுமா? அல்லது அவரிடம் இருந்து தமிழக மக்கள் அதை எதிர்பார்க்கிறார்களா? அதெல்லாம் விவாதத்துக்குரிய வேறு விஷயங்கள்!

குறைந்தபட்சம் அவர்கள் ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். தடையில்லா மின்சாரம் மூலமாக வீடுகளில் தமிழக அரசு ‘ஒளியை’ வழங்கினாலே போதுமானது! ஐந்தாண்டு கால திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியதில் மின்சாரப் பற்றாக்குறை ஒரு முக்கியமான காரணம் என்பதை அவர் அறிவார். ‘இந்த ஆட்சி ஒருவேளை போனால், அதற்கு மின்வெட்டு காரணமாக இருந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்’ என்று பல மாதங்களுக்கு முன்பாகவே அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியது உங்களுக்கு நினைவிருக்கலாம்!

இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கை அதிபர் ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசிடம் வலியுறுத்துவேன் என்று ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு வாக்களித்திருக்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டம், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம், அதைச் செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் என்று அடுத்தடுத்து ஜெயலலிதா செயலில் இறங்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நடைமுறை தொடர்பாக பழ.நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், சீமான் போன்றவர்களையும் உள்ளடக்கிய ஓர் ஆலோசனைக் குழுவை தமிழக அரசு உருவாக்கினால் நல்லது!

ஆட்சிக்கு வந்ததும் கட்சியிடம் இருந்து சில தலைவர்கள் தனிமைப்பட்டு விடுகிறார்கள்; அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும் நிர்வாகிகளாக மாறிவிடுகிறார்கள். நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு கூடாது என்ற பார்வையையும் முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் அனைத்து முடிவுகளும் நிர்வாகரீதியான முடிவுகளாக இருக்க முடியாது. அரசியல்ரீதியாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகளுக்கு அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால் அப்படிப்பட்டவர்களை ஏதாவது ஒரு வகையில் ஆலோசனை வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்வது அரசுக்கு உதவியாக இருக்கும்!

அரசியல்ரீதியாக, காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் மாற்றாக ஒரு தேசிய அரசியல் அணிக்கான தேவை இன்னும் இந்திய அளவில் இருக்கிறது. மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் இடதுசாரிகள் ஆட்சியை இழந்திருக்கிறார்கள். மாயாவதி, முலாயம்சிங் போன்றவர்கள் ஒரு தெளிவான அரசியல்நிலையை எடுக்க மறுப்பவர்களாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் சூழலில், காங்கிரஸ் அல்லாத, பாரதிய ஜனதா இல்லாத ஓர் அணியை உருவாக்குவதிலும் அதற்குத் தலைமை தாங்குவதிலும் ஜெயலலிதா முக்கியமான பங்காற்ற வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுகவை வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தை அதிமுக பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை ஜெயலலிதாவுக்கு வந்து விடக் கூடாது!

மத்திய அரசுடன் சுமுகமான உறவுகளை வளர்த்துக் கொண்டே மாநிலத்தின் உரிமைகளுக்காக போராடும் ஓர் அணிக்கான தலைமையை தமிழகம் ஏற்க வேண்டும். மற்ற மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் சேர்ந்து ஓர் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்க தமிழக முதல்வர் முயல வேண்டும். காலம் சிலருக்கு சரியான சமயத்தில் கதவுகளைத் திறக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பை ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அரசியல் சரிவுகளுக்கு இடம் கொடுக்காத வெளிப்படையான நிர்வாகத்தை அவர் அளிக்க வேண்டும். இதன் மூலம் வாக்களித்த தமிழக மக்களுடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியும். இந்திய அரசியலிலும் முக்கியமான இடத்தை அவர் பிடிக்க முடியும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home