Monday, May 23, 2011

புன்னகை இழந்த புத்ததேவ்

இதுவரை ஒரு தேர்தல் வெற்றியை ஊடகங்கள் இந்த அளவு கொண்டாடி இருக்குமா என்பது சந்தேகம்தான். மமதா பானர்ஜியின் தேர்தல் வெற்றியை இந்திய ஊடகங்கள் அவ்வளவு சந்தோஷமாகக் கொண்டாடுகின்றன. இரண்டாவது சுதந்திர தினம் என்று தேர்தல் முடிவுகள் வந்த நாளை வர்ணிக்கின்றன. மமதாவும் அப்படியே சொல்கிறார். நெருக்கடி நிலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை சிலர் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்றார்கள்; வேறு சிலர் பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சியை இழந்த போது மிகப் பெரிய நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை அனைத்து தரப்பினரும் கொண்டாடுகிறார்கள்.

மமதாவின் கொள்கைகள் மீது ஊடகங்களுக்கு அப்படி என்ன ஒரு பிடிப்பு என்ற கேள்வி உங்களுக்குள் எழக் கூடும். மமதாவுக்குக் கொள்கை என்று ஒன்று இருக்கிறதா என்றும் உங்களில் சிலர் கேட்கக் கூடும். அவருக்குத் தனியாக கொள்கை இருந்தாலும் சரி, அந்தக் கொள்கை ஊடகங்களுக்கு உடன்பாடானதாக இல்லாமல் இருந்தாலும் சரி, ஊடகங்கள் இப்போது அவரைக் கொண்டாடுகின்றன. அந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் மமதா வெற்றி பெற்றதற்கான நேர்மறை உணர்வாகத் தெரியவில்லை. முப்பத்து நான்கு வருடங்கள் நடந்த இடது முன்னணி ஆட்சிக்கு மேற்கு வங்க மக்கள் விடை கொடுத்திருக்கிறார்கள் என்பதே அந்த மகிழ்ச்சிக்கு காரணம்!

மேற்கு வங்கத்தில் இடது முன்னணியும் கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியும் ஆட்சியை இழந்திருக்கின்றன. கேரளத்தில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இப்படித்தான் நடக்கிறது என்று அரசியல் வல்லுநர்கள் சாதாரணமாக விட்டு விடுகிறார்கள். ஆனால் 34 வருடங்களாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த மாநிலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைமையில் இயங்கும் இடது முன்னணியும் எப்படி இழந்தது? புத்ததேவ் பட்டாச்சார்யா அவருடைய தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய அமைச்சரவை சகாக்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் களத்திலும் சமூகத் தளத்திலும் வேலை செய்த ஒரு கட்சிக்கு மக்கள் இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுப்பார்கள் என்று அந்தக் கட்சி எதிர்பார்த்திருக்காது!

இதனால் அந்தக் கட்சிக்கு அங்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது என்று எடுத்துக் கொள்ள முடியுமா? ஏழு சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் ஒரு கட்சி வெற்றி பெறுவது என்பது ஒரு சாதாரணமான விஷயமா? இப்படி ஒரு சாதனையை வேறு ஏதேனும் ஓர் அரசியல் கட்சி எந்த மாநிலத்திலாவது செய்து காட்டி இருக்கிறதா? இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக எத்தனை வருடங்கள் மத்தியில் ஆட்சி நடத்தியது? 1952-ல் நடந்த முதல் தேர்தலில் இருந்து ஐந்து தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1977-ல் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. மூன்று வருடங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது என்பது வேறு கதை!

இப்படி எல்லாம் பேசுவதால் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் தோல்விக்காக நான் வருந்துவதாக நீங்கள் நினைத்துவிடாதீர்கள். சிங்கூர், நந்திகிராம் போன்ற பிரச்னைகள் தீவிரமாவதற்கு முன்பே புத்ததேவ் பட்டாச்சார்யாவின் ஆட்சி, அந்தக் கட்சியின் கொள்கையில் இருந்து வழிதவறி நடக்கத் தொடங்கியது என்பதைச் சுட்டிக் காட்டி நான் எழுதி இருக்கிறேன். ஆட்சிக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நடந்த விழாவில் முதன்மை விருந்தினர் யார் தெரியுமா? முகேஷ் அம்பானி! டால்மியாவுக்கு எதிராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு புத்ததேவ் நிறுத்தினார். தேவையே இல்லாமல் அவருடைய ‘கௌரவப் பிரச்னையாக’ அந்தத் தேர்தலைக் கருதினார். மார்க்சிஸ்ட் கட்சியிலேயே கூட பலர் முதலமைச்சருடைய அந்த நிலையை ஆதரிக்கவில்லை.

2006-ல் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்குக் கிடைத்த வெற்றி சாதாரணமானது அல்ல! 294 தொகுதிகளில் 235 தொகுதிகளை இடது முன்னணி வென்றது. “பழைய கெட்டிதட்டிப் போன இறுக்கமான கொள்கைகளை இன்னும் கம்யூனிஸ்டுகள் பேசிக் கொண்டிருக்க முடியாது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது; நாம் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் நாம் அழிந்து போக நேரிடும்” என்பதே அந்த வெற்றிக்குப் பின் அவர் பேசிய வார்த்தைகள். இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். சந்தைப் பொருளாதாரத்துக்கும் மார்க்சீயத்துக்கும் இடையில் அவர் ஒரு பாலமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் உருவானது. ஜோதிபாசுவை விட மாபெரும் வெற்றியை அவர் கட்சிக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார் என்று கூட யாரேனும் அவரைப் புகழ்ந்திருக்கக் கூடும்!

“பொது வேலை நிறுத்தங்களுக்கு நான் எதிரானவன். துரதிர்ஷ்டவசமாக நிறைய பொது வேலைநிறுத்தங்களை நடத்தும் கட்சியில் நான் உறுப்பினராக இருக்கிறேன். இனி இதையெல்லாம் நான் அனுமதிக்கப் போவதில்லை” என்று கூட அவர் பேசினார். மேற்கு வங்க மக்களும் கட்சியினரும் இது போன்ற அவருடைய பல பேச்சுக்களில் அதிர்ச்சி அடைந்தார்கள். ஊடகங்களும் தொழிலதிபர்களும் அப்போது அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள். சிங்கூரிலும் நந்திகிராமிலும் தொழிலதிபர்களின் நலனைக் காக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் மக்களிடம் இருந்து கட்சியை தனிமைப்படுத்தியது. தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான எச்சரிக்கைகளை பலர் பலவிதமாக முன்வைத்த போதும் மாநில அரசு அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் தவறுகளைச் சரிசெய்ய முற்படும்போது காலம் கடந்து போய்விட்டது!

சிங்கூரில் டாடா குழுமத்துடன் மேற்குவங்க அரசு மிக நெருக்கமான உறவை வைத்திருந்த போது, அதே மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசு என்ன செய்தது? மூணாறில் டாடா குழுமம் செய்திருந்த ஆக்கிரமிப்புகளை இடித்துத் தரை மட்டமாக்கியது. ஆனால் அந்த மாநில அரசை சுதந்திரமாக செயல்பட விடாமல் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு கட்சிக்குள் பல நெருக்கடிகள். இருந்தும் அவர் வெற்றியை மயிரிழையில் தான் தவற விட்டிருக்கிறார். ஆட்சியை இழந்தாலும், வயது முதிர்ந்தாலும் மக்களுக்கான போராட்டங்களில் உடனடியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்பவராகவே அச்சுதானந்தன் அறியப்படுகிறார்!

ஆனால் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் நிலை அப்படி இல்லை. தனிப்பட்ட முறையில் மிகவும் நேர்மையான மனிதராக அவர் அறியப்பட்டாலும் கொள்கை சார்ந்த குழப்பங்களால் மக்களிடம் இருந்து விலகிப் போயிருக்கிறார். வேட்புமனுவின் போது அவர் தாக்கல் செய்திருக்கும் சொத்து விபரங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அவருக்கு என்று சொந்தமாக ஒரு வீடு இல்லை; கார் இல்லை; முதலீடுகள் இல்லை; மொத்தமே ஐயாயிரம் ரூபாய் தான் அவருடைய உடமை என்கிறது அந்த பிரமாண பத்திரம். அவருடைய மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். அவரே குடும்பத்தை நிர்வகித்துக் கொள்கிறார்!
மக்களிடம் செல்வாக்கைப் பெறுவதற்கு தனிப்பட்ட நேர்மை மட்டும் போதாது; மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மேற்கு வங்க மக்கள் புத்த்தேவ் பட்டாச்சார்யாவுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். இதில் இருந்து நேர்மையாளர் மன்மோகன்சிங் பாடம் கற்றுக் கொள்ளலாம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home