Thursday, May 12, 2011

நெருக்கடியில் திமுக

அவர்கள் வானத்தில் இருந்து குதித்த தேவதூதர்கள் இல்லைதான். எந்தவிதமான அரசியல் நிர்ப்பந்தங்களுக்கும் இடம் கொடுக்காத சுதந்திரமான அமைப்பினர் என்றும் சொல்ல முடியாது. ஆனால் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அவர்களுடைய செயல்பாடு நாடு முழுக்க ஏதோ ஒருவித உணர்வை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.
சி.பி.ஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய புலனாய்வு நிறுவனம் அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் கல்மாடியைக் கைது செய்தது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை டெல்லியில் நடத்தும்போது நடந்த முறைகேடுகளுக்கு அவர் காரணமாக இருந்தார் என்பது குற்றச்சாட்டு. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டின் இரண்டாம் குற்றப்பத்திரிகையையும் அன்றுதான் சிறப்பு நீதிபதியிடம் சி.பி.ஐ தாக்கல் செய்தது!

இந்தக் குற்றப்பத்திரிகையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பெயர் இடம் பெற்றிருக்கிறது; கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. அந்தத் தொலைக்காட்சியில் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் இடம் பெறவில்லை.

அவருடைய உடல்நலக் குறைவு காரணமாகவும் முதுமை காரணமாகவும் அவரால் கலைஞர் டிவி வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட முடி யாது; சரத்குமாரே நிர்வாகம் முழுவதையும் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் சொல்லியதை அந்தத் தொலைக்காட்சியின் இயக்குநர் குழுமக் கூட்டத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் அவருக்குத் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் பேசவோ எழுதவோ பேசினால் புரிந்து கொள்ளவோ முடியாது; சட்டத்தின் தேவைக்காக அவர் கூட்டத்தில் கலந்து கொள்வாரே தவிர அங்கு என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியாது. அதனால் அவரை விசாரித்த போதிலும் அவருடைய பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை என்று சிபிஐ சொல்லி இருக்கிறது.

ஆனால் கலைஞர் தொலைக்காட்சியைத் தொடங்கும் காலத்தில் இருந்து கனிமொழி அதை உருவாக்குவதில் தீவிரமாகப் பணியாற்றினார் என்று சிபிஐ சொல்கிறது. அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவைத் தொடர்பு கொண்டு அவர் மூலமாக பல வேலைகளைச் செய்து வாங்கி இருக்கிறார். தொலைக்காட்சியில் 20 சதவீத பங்குகள் கனிமொழிக்கு இருக்கின்றன. அதன் செயல்பாடுகளில் மூளையாக செயல்பட்டிருக்கிறார் என்று சிபிஐ தன் குற்றப்பத்திரிகையில் கனிமொழி குறித்து குறிப்பிடுகிறது.

மாறன் சகோதரர்களுடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு முரண்பாடுகள் தோன்றுவதற்கு முன்னால் கனிமொழி தீவிர இலக்கியவாதியாக அறியப்பட்டார். அரசியல் அதிகாரத்தின் அருகாமை அவரிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தியதாக அந்தக் காலகட்டங்களில் எந்த செய்தியும் வந்தது கிடையாது. இந்திய மக்களிடம் கவிஞராகவும் கனிந்த மனம் கொண்ட மனித உரிமை ஆர்வலராகவும் அறியப்பட்டிருக்க வேண்டிய ஒருவர், இன்று இந்தியா முழுவதும் நேர்மாறான விதத்தில் பிரபலமாகி இருக்கிறார். ‘அதிகாரம் தவறு செய்யத் தூண்டுகிறது; முழுவதுமான அதிகாரம் முழுவதுமான பெரிய தவறுகளைச் செய்யவைக்கிறது’ என்பதை வேத வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது! சிபிஐ சொல்வதைப் போல் அவர் குற்றம் செய்தவராக இருந்தாலும் வேறு ‘உள் முரண்பாடுகளைப்’ பார்க்கும்போது அவரை ‘பாதிக்கப்பட்டவராகவே’ புரிந்து கொள்ள முடிகிறது!

மத்திய அமைச்சராக இருந்த ராசா திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்தார். மத்திய அமைச்சரவையில் இருந்து அவர் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். அதனால் திமுக – காங்கிரஸ் உறவு பாதிக்காது என்று இரண்டு தரப்பிலும் சொன்னார்கள். கருணாநிதியின் மனைவியும் மகளும் சிபிஐயால் விசாரிக்கப்பட்டார்கள்; திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்குள் வந்து கலைஞர் தொலைக்காட்சி அலுவலகம் சோதனை செய்யப்பட்டது. “அதனால் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையில் இருக்கும் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை” என்றார்கள். இப்போது கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இப்போதும் காங்கிரசில் இருந்து அதே பல்லவியைப் பாடுகிறார்கள். “ 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கனிமொழி பெயர் இடம்பெற்றதால், திமுகவுடன் உள்ள உறவில் விரிசல் வராது; எங்கள் கூட்டணி எப்போதும் போல் தொடரும்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி சொல்கிறார்.

திமுகவும் அதே கருத்தை எதிரொலிக்கப் போகிறதா தெரியவில்லை. இந்த வரிகளை உள்ளீடு செய்து கொண்டிருக்கும்போது திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம் ஏப்ரல் 27-ம் தேதி நடக்க இருக்கிறது என்ற செய்தி மட்டுமே வந்திருக்கிறது. ஆனால் இந்த இதழ் உங்கள் கைகளில் இருக்கும்போது அந்தக் கூட்டத்தின் தீர்மானங்களும் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கும் இந்த நாட்களில் திமுக அதிரடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றே தோன்றுகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்களா என்ற கேள்வியை ஊடகங்கள் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. இந்தவிதமான ‘உசுப்பேற்றல்களுக்கு’ எல்லாம் திரைப்படங்களில் வடிவேலு பலியாகி இருக்கலாம். ஆனால் வடிவேலுவை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய திமுக அதுமாதிரியான சூழலுக்கு இடம்தராது என்ற எண்ணமே மேலோங்குகிறது.

அதை உறுதிசெய்வது போல ஜெயலலிதா ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்ற அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோருகிறார். அது மட்டுமா? கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார். ஒருவேளை மே 13-ல் வர இருக்கும் தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக இருந்தால், அவர் இன்னும் வேகமாக இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பார். அப்போது மத்திய அமைச்சரவையில் இல்லாமல் இருந்தால் இன்னும் நெருக்கடிகளை திமுக சந்திக்க நேரிடலாம். அதனால் அமைச்சர்களை விலக்கிக் கொள்ளும் முடிவை திமுக உயர்நிலைக் குழு எடுக்காது என்றே தோன்றுகிறது.

அதே சமயம் காங்கிரஸ் என்னவெல்லாம் செய்கிறது? சுரேஷ் கல்மாடியை காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்கிறது. ஆனால் ஆ.ராசா கைது செய்யப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் அவர் மீது கட்சி ரீதியாக திமுக இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொலைக்காட்சி விவாதங்களுக்கு வரக் கூடிய காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் ‘தவறு செய்பவர்களை நாங்கள் விட்டு வைப்பதில்லை; அவர்கள் மீதெல்லாம் நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் அப்படி நடவடிக்கை எடுக்கின்றனவா?” என்று மார்தட்டுகிறார்கள். ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுப்பது காங்கிரஸ் கட்சி மட்டும்தான் என்று அவர்களுடைய ஊழல்களையும் எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிடுகிறார்கள். அப்படி ஓர் நெருக்கடியை அவர்கள் திமுகவுக்கும் உருவாக்கக் கூடும். ராசா மீதும் கனிமொழி மீதும் நடவடிக்கை எடுங்கள் என்ற நிர்ப்பந்தம் வருமானால் திமுக என்ன செய்யும்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home