Tuesday, May 24, 2011

தமிழகத்தின் இடிமுழக்கம் டெல்லியில் கேட்குமா?

ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றி தேசிய அரசியலில் எதிரொலிக்கும் என்று சென்னையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற விழாவுக்கு வந்த போது அவர் அப்படிப் பேசி இருக்கிறார். சென்ற இதழுக்கு முந்தைய ரிப்போர்ட்டர் இதழில் ’எரிதழல்’ பகுதியில் நானும் அவர் இந்திய அரசியலில் ஆற்ற வேண்டிய பங்கு பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

ஜெயலலிதாவின் அரசியல் நடவடிக்கைகள் அந்தத் திசையில் இருக்குமா இருக்காதா என்பதை இப்போதே உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத ஓர் அணியை இந்திய அளவில் அமைப்பதில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும். அது அவசியமா இல்லையா என்பதை அவர்தான் முடிவுசெய்து கொள்ள வேண்டும்!

‘தேசிய அரசியலில் ஜெயலலிதா மாற்றத்தை உருவாக்குவார்’ என்று நரேந்திரமோடி நம்புவது நான் சொல்லும் பொருளில் இருக்காது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜெயலலிதா இணைய வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கலாம். இந்திய அரசியலில் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருக்க முடியும் என்று அவர் நினைக்கக் கூடும். அது நடக்கவில்லை என்றாலும் மோடிக்கு ஒன்றும் இழப்பு இல்லை. காங்கிரஸ் எதிர்ப்புக்கு ஒரு வலுவான முதலமைச்சர் தேசிய அளவில் கிடைத்திருக்கிறார் என்று அவர் மனநிறைவு அடையலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா எந்த உறவையும் வைத்துக் கொள்ள மாட்டார் என்று நரேந்திரமோடி உறுதியாக நம்புகிறாரா என்பது தெரியவில்லை.

அரசியல் என்பது என்ன? ஓர் எண்ணிக்கை விளையாட்டு. தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவோ, அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றவோ தேவையான எண்ணிக்கையை பெறுவதற்கு ஒரு கட்சி நடத்தும் ’சாகசங்களே’ இன்று அரசியல் என்று கொண்டாடப்படுகிறது. அடுத்த மக்களவைத் தேர்தலில் திமுகவால் தமக்கு பயன் இல்லை என்று சோனியா காந்தி நினைத்தால், அவர் என்ன செய்வார்? கருணாநிதியைக் கைகழுவி விட்டு ஜெயலலிதாவுடனோ, விஜயகாந்துடனோ கூட்டணி வைப்பதற்கு முயல்வார். வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி வாழ்த்துச் சொன்னதைக் கூட சாதாரண நடைமுறையாக நம்மவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போதே ஜெயல்லிதாவுடனான உறவுகளைச் சீர்செய்ய முனைகிறார்களோ என்று அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் நரேந்திரமோடிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா மதவாதி ஆகிவிடுவாரா என்ன?

இப்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் எல்லோருக்கும் ஒரு செய்தியைத் தெளிவாக உணர்த்தி இருக்கிறது. தமிழகத்தை ஆள்வதற்கு இப்போது மீண்டும் தி.மு.க.வுக்கு வாய்ப்பு கொடுக்க தமிழக மக்கள் மறுத்திருக்கிறார்கள். திமுக மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது. 1996 சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வென்ற அண்ணா திமுக, 1998 மக்களவைத் தேர்தலில் 30 இடங்களை ஜெயித்தது என்பதை நாம் இங்கு நினைத்துப் பார்க்கலாம். சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த 2009 மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியே அதிக இடங்களை வென்றது. இரண்டு வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறி விடவில்லையா? இந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் மனதை மாற்றிக் கொள்ளும் அளவு அப்படி என்ன நடந்தது?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தன என்ற அடிப்படையில் திமுகவின் ஆ.ராசா அமைச்சர் பதவியை இழந்தார்; கைது செய்யப்பட்டார். திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்துக்குள் வந்து கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடத்தியது. யாரிடம்? திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியிடமும் மகளிடமும் தான் அந்த விசாரணை நடத்தப்பட்டது. டெல்லியில் இருந்து சென்னைக்கு ஆ.ராசா வந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் அவர் பாதிக்கப்பட்டவர் என்ற உணர்வை ஏற்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இலங்கையின் தமிழர் பகுதிகளில் அந்த நாட்டு அரசு வான் தாக்குதல்களை நடத்தியது. இந்திய அரசும் தமிழக அரசும் அந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் அந்தத் தேர்தலின்போது நெடுமாறன், சீமான் போன்றவர்கள் தீவிரமான பிரசாரத்தை காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு எதிராக மேற்கொண்டார்கள். இருந்தபோதிலும் திமுக கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் தேர்தல் முடிந்த ஒரு வாரத்துக்குள் இலங்கையில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடந்தன. இன்று பேசப்படும் அனைத்துவிதமான போர்க்குற்றங்களும் இலங்கை அரசால் இழைக்கப்பட்டன. தமிழர்களின் தேசிய விடுதலைக்காக அங்கு போராடிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இந்தக் கொடுமையை இப்போது தமிழகத்தில் மக்களுக்கு நினைவூட்டினார்கள். மக்கள் திமுக காங்கிரஸ் கூட்டணியை படுதோல்விக்கு உள்ளாக்கினார்கள்!

வேறு எந்தவித மாற்றங்களும் இல்லாத சூழ்நிலையில், அடுத்த மக்களவைத் தேர்தல் 2014-ம் வருடம்தான் நடக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட தோல்வியில் இருந்து எப்படி மீள்வது என்றும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கூடுதல் இடங்களை எப்படி பிடிப்பது என்றும் காங்கிரஸ் தலைமை வியூகங்களை வகுக்கும். அந்த செயல்திட்டங்களுக்கு ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் உடன்பட்டுப் போவார்களா என்பதை இப்போதே கணிக்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலோ ஜெயலலிதா இடம் பெறவில்லை என்றால் அவர் முன் இருக்கும் அடுத்த தேர்வு என்ன? சந்திரபாபு நாயுடு மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஓர் அணிக்கு தலைமை ஏற்கலாம். அல்லது தமிழ்நாட்டில் ஒரு கூட்டணியை அமைத்து கணிசமான இடங்களைக் கைப்பற்றிய பிறகு, அப்போதைய முடிவுகள் உருவாக்கும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவெடுக்கலாம்.

தமிழ்நாடு தவிர இப்போது நடந்த மற்ற மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வரும் வலிமை கொண்டவையா? புதுச்சேரியில் இருந்து ஒரே ஒரு மக்களவை உறுப்பினர்தான். அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தனியாகவே வெற்றி பெற்றிருக்கிறது. மேற்குவங்கம், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கிறது. இடதுசாரிகள் ஆட்சியை இழந்திருக்கிறார்கள். காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத அணியை உருவாக்கும் வலிமை இப்போது இடதுசாரிகளுக்குக் குறைந்திருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் அவர்களுடைய எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்குமா என்பதும் கேள்விக்குறியே!

இதன் விளைவு என்ன? இந்தியா இரு கட்சி அரசியலுக்கு அல்லது இரு கூட்டணி அரசியலுக்கு மாறி வருகிறது என்று பல ஊடகங்களும் காங்கிரஸ், பாஜக ஆதரவாளர்களும் பேசத் தொடங்குவார்கள். மாயாவதி, முலாயம்சிங் யாதவ், நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற வலிமையான மாநிலத் தலைவர்களை ஓரங்கட்ட இரு கட்சிகளும் முயலும். அல்லது அவர்களைத் தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு பங்காளிகளாக மாற்ற முயல்வார்கள். அந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் அது இந்தியாவின் பன்மைத் தன்மைக்கு நல்லதல்ல!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home