Wednesday, May 18, 2011

புதைந்து போகும் உண்மை

யமுனா எக்ஸ்பிரஸ்வே என்று அழைக்கப்படும் யமுனா விரைவுச்சாலையை அமைப்பதற்காக உத்தரப்பிரதேச அரசு விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்துகிறது. பறிகொடுத்த நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை நடந்திருக்கிறது. இரண்டு காவலர்களும் இரண்டு விவசாயிகளும் அந்த வன்செயல்களில் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்துப் பேசின. புதிய சட்டத் திருத்தம் வர இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதியாக சொல்கிறது. அந்த சட்டத் திருத்தம் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதாக இருக்குமா என்பது விவாதத்துக்குரிய வேறு விஷயம்!

நோய்டா மாநகரம், அலிகார், ஆக்ரா பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்களுடைய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடுவதும் அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடிப்பதும் இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இதைப் போலவே தீவிரமான போராட்டங்களைக் கடந்த சில வருடங்களில் அவர்கள் நடத்தி இருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 2008-இல் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலிலும் 4 பேர் கொல்லப்பட்டார்கள். அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 66 பேரைக் காணவில்லை என்ற செய்தியும் உண்டு. கடந்த மே 2010, பிப்ரவரி 2011 ஆகிய மாதங்களில் அவர்கள் அரசின் கவனத்தை தங்களுடைய கோரிக்கைகளை நோக்கி ஈர்ப்பதற்கான போராட்டங்களை அவர்கள் நடத்தினார்கள்.

அதுவும் தவிர விவசாயிகள் அல்லது நிலத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் பொதுமக்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் போராடிக் கொண்டிருக்கவில்லை. கடந்த 2006-ஆம் வருடம் ஒரிசாவில் கலிங்காநகரில் நடந்த போராட்டத்தில் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்கள். மேற்குவங்கத்தில் சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் மக்கள் நடத்திய போராட்டங்களும் அவற்றை ஒடுக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளும் தான் இப்போது அந்த அரசையே ஆட்டம் காண வைத்திருக்கின்றன. ஹரியானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் என்று பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன; நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அரசு இந்தப் போராட்டங்களை முறையாக எதிர்கொண்டதாகத் தெரியவில்லை.

மக்களுடைய போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியதும் அரசியல் கட்சிகள் அவற்றில் குளிர்காயத் தொடங்கி விடுகின்றன. மேற்குவங்கத்தில் நடந்த போராட்டங்களின் அரசியல் ஆதாயத்தை மமதா பானர்ஜி அறுவடை செய்கிறார். மகாராஷ்டிரப் போராட்டங்களை சிவசேனை தனக்கு ஆதரவாக வளைக்க முயல்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்’ என்ற நிலையை எடுக்கிறது. ஆட்சிக்கு எதிராக எழுந்து நிற்கும் மக்கள்சக்தியை காங்கிரஸ் ஆதரவாக மடைமாற்றுவதற்கு அது முயல்கிறது. தாங்கள் முன்வைத்த ‘வளர்ச்சி’ குறித்த கொள்கையும் நடைமுறையுமே இந்த முரண்பாட்டைத் தோற்றுவித்திருக்கிறது என்பது தெரிந்தாலும் அந்த இடத்தில் மௌனமாக இருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் மக்களுடைய பிரச்னைகள் மட்டும் தீர்க்கப்படுவதில்லை!

இப்போது உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த யமுனா விரைவுச்சாலைத் திட்டத்திற்கா ஏற்கனவே பல இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுவிட்டன. நோய்டா மாநகரப்பகுதியில் ஒரு சதுர மீட்டர் நிலத்துக்கு 6000 ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அலிகார், ஆக்ரா பகுதிகளில் 400 அல்லது 600 ரூபாய் அளிக்கப்படுகிறது. நிலத்தின் மதிப்பு நகரத்துக்கு நகரம் வேறுபடுகிறது என்பது உண்மைதான். ஆனால் நிலத்துக்கான சந்தைவிலை என்று அரசு சொல்வது பதிவாளர் அலுவலக மதிப்பீடுகளை வைத்துத்தானே? நிலம் வாங்குவதிலும் விற்பதிலும் கருப்புப் பணம் இல்லாமல் கைமாறும் பணத்துக்கு பத்திரம் வாங்குபவர்கள் எத்தனை பேர்? அப்படி என்றால் அரசு போடும் மதிப்பீடு எப்படி உண்மையான சந்தை நிலையை பிரதிபலிக்கும்? தங்களுடைய வாழ்நாள் சேமிப்பான நிலத்தையும் அரசாங்கத்திடம் இழந்துவிட்டு அதற்குரிய இழப்பீட்டையும் பெற முடியாத ஏழை எளிய மக்களுடைய வாழ்க்கை என்ன ஆகிறது?

மேற்குவங்கத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 45 சதவீத மக்கள் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். 50 சதவீத மக்கள் வறுமையில் துன்பப்படுகிறார்கள். குடும்பத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக கிராமங்களில் குழந்தைகள் படிப்பை பாதியில் விட்டுவிட்டு சின்னச் சின்ன வேலைகளுக்குப் போகிறார்கள். வயிற்றுப்பாட்டுக்கு வேறு வழியே இல்லாத நிலையில் சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பதாக அந்த ஆய்வு சொல்கிறது.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நெடுஞ்சாலைகள் போட வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. ரயில் போக்குவரத்துக்காக இருப்புப் பாதை அமைக்க வேண்டியிருக்கிறது. இதற்காக மக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்த வேண்டியதாகிறது. அப்படித் தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்தும் அதிகாரத்தை காலனிய பிரிட்டன் அரசுக்கு நில கையகப்படுத்தும் சட்டம், 1894 கொடுத்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு அதில் எப்போது மாற்றம் வந்தது? 1984-ம் வருடம் அந்த சட்டம் திருத்தப்பட்டது. அரசின் திட்டங்களுக்காக மட்டுமல்லாமல், தனியார் தொழில் நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்காகவும் மக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு வந்தது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகத் தொடங்கின.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை நமக்குள் விதைக்கப்பட்டது. ஆனால் இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அளவும், இந்த மண்டலங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு எண்ணிக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கவலையே மேலோங்குகிறது. இதுவரை 40 லட்சம் ஏக்கர் நிலம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறதாம்! ஆனால் அது உற்பத்தி செய்திருக்கும் வேலை வாய்ப்புகள் வெறும் ஐந்து லட்சம்தான் என்கிறது அந்த செய்தி.

இன்னொரு தகவல் இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு கடந்த 2000-ம் வருடம் வரையிலான ஐம்பத்து மூன்று வருடங்களில் அரசுத் திட்டங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களில் 20 சதவீத மக்களுக்குக் கூட முறையான மறு குடியமர்த்தலோ மறுவாழ்வுத் திட்டங்களோ கிடைக்கவில்லை என்பதே அந்தத் தகவல். இவை எல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இப்படிப்பட்ட வளர்ச்சியையா நாம் விரும்புகிறோம் என்ற வேதனை எழுவதைத் தடுக்க இயலவில்லை.

கடந்த காலத்தில் நடந்திருப்பது என்ன என்பதில் இருந்து நிகழ்கால போராட்டங்களின் தீவிரத்தை அறிந்து கொள்ளும்போது ஒருவருக்கு புதிய வெளிச்சம் கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இந்த பின்னணி குறித்துப் பேசுவதில்லை. போராட்டங்களில் நடந்த வன்முறை பற்றியே அதிகம் பேசுகின்றன. போராட்டங்களில் வன்முறை வெடிக்கும்போது அதில் முதலில் பலியாவது உண்மையே!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home