Friday, October 22, 2010

ஆட்டுக்கு வளர்ந்த தாடி

“தங்கக் கூண்டில் வாழும் கிளியைப் போல ஆளுநர் பதவியில் இங்கு நான் இருக்கிறேன்” என்று கவிக்குயில் சரோஜினி நாயுடு சொன்னதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்டவர் அவர். இந்திய விடுதலைக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் ஆளுநராக ஒன்றரை வருடங்கள் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதி ‘ஐக்கிய மாகாணங்கள்’ என்று அழைக்கப்பட்டது. சிலர் மட்டுமே அவர்களுடைய ஆளுமையால் அவர்கள் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்க்கிறார்கள். மற்றவர்கள் அந்தப் பதவியின் பெருமையை மூலதனமாக வைத்து தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். இதில் உங்களுக்குத் தெரிந்தவர்களில் யார் யார் எந்த ரகம் என்பதை உங்கள் பார்வையில் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

கர்நாடக மாநில ஆளுநர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜை மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பாரதிய ஜனதா தலைவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் அத்வானி தலைமையில் அந்தக் கட்சியினர் பிரதமரை நேரில் சந்தித்து அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியிலும் சிலரிடம் இதே மனநிலை இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் கட்சித் தலைமையிடம் ஆளுநரின் நடவடிக்கைகள் ‘அந்தப் பதவிக்கு அவப்பெயரை’ உருவாக்கிவிட்டன என்று முறையிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களால் பரத்வாஜை எதிர்த்து பகிரங்கமாக எதுவும் பேச முடியவில்லை. ஏனென்றால் அவர் காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்; தலைமுறை தலைமுறையாக அந்த நெருக்கம் தொடர்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இருந்து நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவராக பரத்வாஜ் இருந்து வருகிறார். அவருடைய அப்பா ஜெகன்னாத் பிரசாத் சர்மா பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு செயலராக இருந்தவர். இந்திய ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்த நெருக்கடிநிலை நாட்களில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்திக்கு எதிரான வழக்குகளை அவருடைய வழக்கறிஞராக எதிர்கொண்டவர் பரத்வாஜ். சஞ்சய் காந்திக்கு மட்டுமல்ல, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோருக்கு எதிரான சில வழக்குகளிலும் அவரே வழக்கறிஞர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு பரத்வாஜின் மகன் அருண் சட்ட ஆலோசகர்!

இந்திய சட்ட அமைச்சகத்தில் துணை அமைச்சராக ஒன்பது ஆண்டுகளும் காபினட் அமைச்சராக ஐந்து வருடங்களும் பரத்வாஜ் இருந்திருக்கிறார். அதாவது இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோருடைய அமைச்சரவை சகாக்களில் அவர் ஒருவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்து வருடங்கள் சட்ட அமைச்சராக அவர் இருந்த நாட்களிலும் அவரைச் சுற்றி சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதாயம் தரும் இன்னொரு பொறுப்பிலும் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த போது பரத்வாஜ் கொண்டு வந்த சட்டத் திருத்தம் பதவி இழப்பில் இருந்து பலரைக் காப்பாற்றியது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஒட்டாவியோ குவத்ரோச்சியின் லண்டன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன. அந்த முடக்கத்தை நீக்கி குவத்ரோச்சி அவற்றில் பணம் போட்டு எடுக்க சட்ட அமைச்சராக பரத்வாஜ் அனுமதி கொடுத்தபோது, அவரைப் பதவிநீக்கம் செய்யும்படி எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின.

இவ்வளவு தீவிரமாக அரசியலில் இருந்தவரை கர்நாடக மாநிலத்தின் ஆளுநர் பதவிக்கு மத்திய அரசு நியமிக்கும்போதே சர்ச்சைகள் எழுந்தன. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி நடத்தும் மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவுக்கு தொந்தரவு கொடுப்பதற்காகவே அவர் அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று ஊடகங்களில் ஊகம் வெளியானது. அமைச்சராக இருக்கும்போது எடுக்கும் ஒரு நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தால், அவற்றை அரசியல்ரீதியானவை என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆளுநராக இருக்கும் போது தேவையில்லாத சிக்கல்களுக்கு ஒருவருடைய பேச்சும் செயலும் காரணமாக இருந்தால் அவை ‘அதீதமான’ நடவடிக்கைகள் என்றே அறிந்து கொள்ளப்படும்.

எடியூரப்பாவின் அமைச்சரவை சகாக்களான ’சட்ட விரோத சுரங்கப் புகழ்’ ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக ஆளுநர் பரத்வாஜ் பகிரங்கமாக பேசினார். மாநில அரசுக்கு எதிரான உணர்வுகள் கொண்ட தொழிலதிபர்களுடைய சுமைதாங்கியாகவும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர்களுக்கு ஆலோசகராகவும் ஆளுநர் பரத்வாஜ் செயல்படுவதாக அவ்வப்போது புகார்கள் வந்தன. அதன் உச்சகட்டமாகவே முதல் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, ‘மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை’ அமல்படுத்த வேண்டும் என்று அவர் கூறியதைப் பார்க்க முடிகிறது. அடுத்தநாளே அந்தர்பல்டி அடித்து முதல்வரை இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தச் சொன்னார் என்பது வேறு கதை! அதுவும் முதல் வாக்கெடுப்பின்போது பேரவைத் தலைவர் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது செல்லுமா என்ற வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக இப்படி ஒரு வாக்கெடுப்பு தேவை இல்லை தான்! இந்த ஏற்பாட்டின்படி எடியூரப்பா ஒரே வாரத்தில் இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்புகளை நடத்தி வெற்றி பெற்று “வரலாறு” படைத்திருக்கிறார்! இனி தீர்ப்பு எப்படி இருந்தாலும் மேல்முறையீடுக்கான வாய்ப்பு எடியூரப்பாவுக்கு ‘மூச்சுவிடுவதற்கான’ நிம்மதியையும் அவகாசத்தையும் கொடுக்கும். சபாநாயகருடைய முடிவுக்கு எதிராக தீர்ப்பு இருந்தால், மீண்டும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான சட்டமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் இன்னொரு மோதல் உருவாகும்!

ஆளுநர் பரத்வாஜ் செய்ததை மட்டுமே இங்கு விமர்சனம் செய்வதாகவும் முதலமைச்சர் எடியூரப்பாவையோ, கர்நாடக சட்டமன்றத் தலைவரையோ பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எல்லா அரசியல்வாதிகளும் மேற்கொள்ளும் ‘முறையற்ற’ நடவடிக்கைகளை அவர்களும் எடுத்தார்கள். ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால், அடுத்து நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘அரசியல் நேர்மை’யுடன் நடந்து கொள்ளும் அரசியல் கட்சி ஏதாவது இருக்கிறதா என்ன? சபாநாயகரும் முதலமைச்சரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களைத் தலைகுனியச் செய்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த நெருக்கடிக்கு எல்லாம் முன்பாகவே ஆளுநர் இப்படி ஒரு நெருக்கடியை உருவாக்கும்வகையில் செயல்படத் தொடங்கினார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!

நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற கட்டிடத்தின் அடித்தளத்தையே தகர்ப்பது போல கடந்த காலத்தில் பல ஆளுநர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் ஆளுநர் பதவியைத் தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி இருக்கின்றன. மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்க்காமல் மௌனசாட்சிகளாக இருந்து அந்த பாவத்தில் சில கட்சிகள் பங்கேற்றிருக்கின்றன. மாநில மக்களுடைய ஜனநாயகரீதியிலான தீர்ப்பைக் குலைக்கும் வகையில் மாநிலத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் செயல்படுவதும் அவரை அப்படி மத்திய அரசு பயன்படுத்துவதும் நாம் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. 1957-ல் கேரளாவில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு தலைமையில் ஒன்றுபட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது. மாநில சட்டப்பேரவையில் அந்த அமைச்சரவைக்குப் பெரும்பான்மை இருக்கும்போதே, ஆளுநரின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அந்த ஆட்சியைக் கலைத்தது. இந்திய ஜனநாயக அமைப்பில் மத்திய அரசின் ‘ஏஜெண்டாக’ ஆளுநர் பகிரங்கமாக செயல்படுகிறார் என்பதை முதன் முதலில் அந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் என்ற ஒரே கட்சி ஆட்சியில் இருந்தவரை இந்த சிக்கல் பெரிய அளவில் எழவில்லை. 1967-க்குப் பிறகு அந்த நிலையில் பெரிய அளவில் மாறுதல்களை மக்கள் தீர்ப்புகள் உருவாக்கியபோது ஆளுநர் பதவி ‘அரசியல் சதுரங்கத்தில்’ நகர்த்தப்படும் காயாக மாறத் தொடங்கியது. 1977-ல் காங்கிரஸைத் தோற்கடித்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோதும், அதன்பிறகு ஜனதாவை வீழ்த்தி இந்திரா காந்தி 1980-ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய போதும் வகைதொகை இல்லாமல் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. மத்திய அரசின் கைப்பாவையாக மாநில ஆளுநர்கள் செயல்பட்டதை உணர்த்திய உச்சகட்ட காட்சிகள் அவை! இப்போது தனிக்கட்சி ஆட்சி என்ற நிலை மத்தியில் இல்லை. மாநிலங்களிலும் நிலைமைகள் வேகமாக மாறி வருகின்றன. ஆட்சிக்கலைப்புகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு புதிய வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறது. பரணிலே போடப்பட்டிருந்தாலும், சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகள் பயமுறுத்தும் கனவுகளாகத் தொடர்ந்து வருகின்றன. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளால், இன்று ஆட்சிக் கலைப்புகள் குறைந்திருக்கின்றன என்ற போதிலும் ஆளுநர்களுடைய மனநிலையில் மாற்றம் இருக்கிறதா என்பது விவாதத்துக்குரிய பொருளாகவே இருக்கிறது.

ஆளுநர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற யோசனை, இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு அல்லது அரசமைப்புப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால் வரைவுக் குழுவினர் அதை ஏற்கவில்லை. குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுவதையே அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். காலனிய பிரிட்டிஷ் அரசாங்கம் ஆளுநருக்குக் கொடுத்திருந்த சிறப்பு அதிகாரங்களையும் அப்படியே அவர்கள் இந்திய ஆளுநர்களுக்கும் வழங்கினார்கள். கால ஓட்டத்தில் மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையில் அந்த அதிகாரங்கள் இப்போது ஜனநாயக விரோதமாகத் தெரிகின்றன. அந்த ஆளுநர் பதவியே தேவையில்லாத பதவி என்ற கருத்தும் தீவிரமாக சில அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.

குடியரசுத் தலைவராக வி.வி.கிரி இருந்தபோது போட்ட ஆளுநர்கள் குழு, ராஜமன்னார் குழு, சர்க்காரியா விசாரணைக் குழு உள்ளிட்ட எல்லா குழுக்களும் சொல்வது ஒன்றுதான். அதாவது, ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவை அல்ல என்பதே. ஆனாலும் ஆளுநர்கள் தங்களை நியமித்த மத்திய அரசுக்கு விசுவாசமாக இருக்க விரும்புகிறார்கள். ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக தங்களை அடையாளப்படுத்தி மத்திய அரசை மகிழ்விப்பதன் மூலம் அடுத்து வேறு பதவிகள் தங்களைத் தேடி வரக் கூடும் என்ற அரசியல் கணக்குகள் அவர்களிடம் எழுந்துவிடுகின்றன. இப்படிப் பேசிக் கொண்டே போகலாம். கடைசியாக ஒரு கேள்வியை மட்டும் பார்க்கலாம். இன்று ஆளுநரை பதவி நீக்கம் செய்யும்படி பிரதமரை வலியுறுத்தும் பாஜக, சர்க்காரியா கமிஷனிடம் ஆளுநர் பதவி நீக்கம் குறித்து என்ன சொன்னது?

“ஆளுநருடைய பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் நீடிக்க அனுமதிக்க வேண்டும். அவரை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடையில் மாற்றக் கூடாது. உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கு இருக்கும் நடைமுறையைப் போல, நாடாளுமன்றமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு அங்கு ஏற்றுக் கொண்டபிறகே ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யலாம்” என்ற ரீதியில் தன்னுடைய கருத்தை பாஜக பதிவு செய்திருக்கிறது. இப்போது ஆளுநரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகிறது!

அரசமைப்புச் சட்டத்தை விடுங்கள். கட்சிக் கோட்பாட்டின்படி தான் தங்கள் நடைமுறை இருக்கிறது என்று கூட அரசியல் கட்சிகளால் சொல்ல முடியாது போலிருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

எங்கும் நிறைந்த ஊழல்

அந்தச் சிறுவனுக்கு சினிமாவுக்குப் போக வேண்டும் என்று ஆசை. அம்மாவிடம் அதற்கான பணத்தைக் கேட்டான். ஏற்கனவே அவன் சினிமா பார்த்துவிட்டு வந்து அதிக நாட்களாகவில்லை. அதற்குள் இன்னொரு சினிமாவா என்று அம்மா தேவை இல்லாத செலவைச் சுட்டிக் காட்டினார். ஆனால் அந்தப் பையனின் மனதில் ஆசை வந்துவிட்டது. ”இது எம்.ஜி.ஆர்.சினிமா. இதை நான் அவசியம் பார்க்க வேண்டும்” என்று பிடிவாதம் காட்டினான். தன்னுடைய வலது கைகளில் சுற்றி இருந்த சேலைத் தலைப்பை அந்த அம்மா விலக்கினார். வலது உள்ளங்கைகளில் காய்த்துப் போன கொப்புளங்கள். ஒன்றிரண்டு உடைந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தன. “இவ்வளவு கஷ்டப்பட்டு நான் வேலை பார்க்கிறேன். நீ சினிமா சினிமா என்று அலையறியே” என்ற ரீதியில் மனவேதனையை அவர் வெளிப்படுத்தினார். அந்தப் பையன் ஆயிரம் சவுக்குகளால் அடித்த உணர்வைப் பெற்றான். அப்போது சினிமா பார்க்கப் போகவேண்டும் என்ற எண்ணத்தையும் கைவிட்டான்.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல. நடிகர் சிவகுமார் தான்! கடந்தவாரம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘அம்மா,மனைவி,மகள்’ என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சின் சில பகுதிகளை மறுஒளிபரப்பு செய்தார்கள். அது ஒரு தனிமனிதனின் அனுபவங்களாக இருந்தாலும் அவற்றில் இருந்து பொதுவான பாடங்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. எளிமையான வார்த்தைகளில் சிவகுமார் போகிற போக்கில் பேசிப் போன பல சம்பவங்கள் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கு அடிப்படையாக இருந்தன. அவற்றில் ஒன்றுதான் மேலே சொல்லப்பட்ட சம்பவம்!

இந்த சம்பவம் ஏன் இப்போது எடுத்துக்காட்டாகிறது?கடந்த வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்த செய்தியே இந்த சம்பவத்தை நினைவுபடுத்தியது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலை எப்படி ஒழிப்பது என்று மூத்த வழக்கறிஞர் வேணுகோபாலிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை கேட்டார்கள். “நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இருக்கும் பாடத்திட்டங்களில் நல்ல நெறிகளை போதிக்கச் செய்தால் எதிர்கால சந்ததியினர் ஊழல் இல்லா சமூகத்தை உருவாக்குவார்கள்” என்று அவர் பதில் சொன்னார். அதாவது சிவகுமாருக்கு இளம்வயதில் அவருடைய அம்மா உழைப்பின் மதிப்பை உணர்த்தியதைப் போல, நல்ல கருத்துகளையும் பழக்கங்களையும் சிறுவர்களிடம் ஊட்டிவிட வேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்துகிறார். அவர் சொல்வது ஒன்றும் புதிதல்ல!

நம்முடைய குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்த போது பள்ளி மாணவர்களிடம் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார். அதாவது இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்தாலும், பிரதமரின் உதவியுடன் அரசு இயந்திரத்தை ஊழல் ஒழிப்புக்கு பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருந்த போதிலும், ஊழலை ஒழிப்பதற்கு அப்துல் கலாம் குழந்தைகளையே நாடினார். ஊழல் நிறைந்த அரசு எந்திரத்தை ஊழலை ஒழிப்பதற்கு பயன்படுத்த முடியாது என்று ஒருவேளை அவர் உணர்ந்திருக்கக் கூடும்! தங்களுடைய அப்பாவும் அம்மாவும் லஞ்சம், ஊழல் நடவடிக்கைகளில் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

கர்நாடகாவில் கனிம வளச் சுரண்டல், ஒரிசாவில் நிலக்கரி ஊழல், மத்தியில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு, ரயில்வேயில் வேலைக்கு ஆள் எடுப்பதில் ஊழல், என்று விசாரணைகளும் வழக்குகளும் புகார்களும் குற்றச்சாட்டுகளும் நாம் தினமும் பார்க்கும் செய்திகளாக இருக்கின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான செய்திகள் ஊழலை அன்றாட நிகழ்வாக ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரையும் கூட எரிச்சல் கொள்ள வைத்தன. சில மாதங்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் ஊழல் பற்றி எழுத வேண்டியதிருக்கிறதே என்று பத்தியாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்குள் புதிய ஊழல்கள் குறித்த செய்திகள் குவிந்து விடுகின்றன!

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வேணுகோபாலிடம் ஆலோசனை கேட்ட நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூவும் டி.எஸ்.தாக்கூரும் ஒரு ‘வேண்டுகோளையும்’ அரசுக்கு விடுத்திருக்கிறார்கள். “ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவு லஞ்சம் என்று அரசே நிர்ணயித்து அறிவித்து விட்டால், அந்தக் ‘கட்டண விபரம்’ சாதாரணக் குடிமகனுக்குத் தெரிந்துவிடும். இதனால் பேரம் பேசுவதில் தேவையற்ற நேரம் வீணாவதைத் தடுக்க முடியும்” என்ற ரீதியில் கிண்டலாக வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீதிபதிகளுக்கு அரசைக் கிண்டல் செய்யும் உரிமை இருக்கிறதா என்று பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் அறிவுறுத்தல்களை வெளியிடலாம். ஆனால் ஒரு செய்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் போதெல்லாம் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உணர்ச்சிவசப்படுகிறார் என்பதே அது!

கடந்த 2007-ம் வருடம் மார்ச் மாதம் ஒரு வழக்கை விசாரிக்கும்போது “ஊழல் செய்பவர்களில் சிலரை விளக்குக் கம்பத்தில் தொங்கவிட்டுக் கொல்ல வேண்டும். இது ஒன்றுதான் ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்கும் ஒரே வழி” என்று சொன்னார். “நம்முடைய நாட்டில் ஊழல் எங்கும் நிறைந்து இருக்கிறது. ஊழல் இல்லாத இடமே இல்லை. எல்லோரும் நாட்டைக் கொள்ளை அடிக்கவே விரும்புகிறார்கள். சில ஊழல் பேர்வழிகளை பொதுமக்கள் பார்வையில் விளக்குக் கம்பத்தில் கட்டி தூக்கில் போட்டால்தான் மற்றவர்களுக்கு மனதில் பயம் வரும். ஆனால் இதைச் செயல்படுத்த நம்முடைய சட்டத்தில் இடம் இல்லை. சட்டத்தில் இடம் இருந்தால் அதற்கே நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்” என்று அப்போது சொல்லி இருந்தார். மூன்றரை வருடங்களுக்குப் பிறகு இப்போது அரசாங்கமே ‘அதிகாரபூர்வமாக அங்கீகரித்து விதிமுறைகளை அறிவித்துவிடலாம்’ என்று சொல்லி இருக்கிறார். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வரும் விரக்தியும் வேதனையும் அவருக்கும் வந்துவிட்டது போலிருக்கிறது!

அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் இந்த ‘ஊழல்’ என்ற நோய் தாக்கியதாகத் தெரியவில்லை. நீதித்துறையையும் அது கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருவதாக பல செய்திகள் சொல்கின்றன. தலைமை நீதிபதிகள் பதவி ஏற்கும் போதெல்லாம் நீதித்துறையில் நடக்கும் சில முறைகேடுகளைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சொல்கிறார்கள்! கடந்த செப்டம்பர் மாதம் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் நடத்திய கணிப்பு ஒன்றின் முடிவுகளைப் பாருங்கள். இந்திய நீதித்துறையில் ஊழல் இருக்கிறதா என்ற கேள்விக்கு 91% பேர் ஆம் என்றும், 7% பேர் இல்லை என்றும் 2% பேர் கருத்தில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். அதே நாளில் ‘தி பயனியர்’ நாளிதழ், ‘இந்திய நீதித்துறை ஆன்ம சோதனை செய்து கொள்ள வேண்டுமா’ என்ற கேள்வியை முன்வைத்தது. அதற்கு 98% மக்கள் ஆம் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். இந்திய அரசின் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண் ஓர் ஆங்கில இதழில் கட்டுரை எழுதினார். 16 இந்தியத் தலைமை நீதிபதிகளில் 8 பேர் தவறு செய்தவர்கள் என்றும் 6 பேர் நேர்மையானவர்கள் என்றும் மீதி இருவரைப் பற்றி தனக்குத் தெரியவில்லை என்றும் எழுதி இருந்தார். அதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுத்திருப்பதாக ஒரு செய்தியையும் நீங்கள் படித்திருக்கக் கூடும்!

அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது கடவுளா என்றால் கூட ‘இல்லை’ என்று சிலர் சொல்லலாம். ஆனால் இந்தியாவில் தூணிலும் துரும்பிலும் ஊழல் இருக்கிறது என்று சொன்னால் அதை மறுப்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் போலிருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

மரணபயம் அவர்களுக்கு இல்லை!


”அந்தக் காலத்தில் எல்லாம் நீதிமன்றத் தீர்ப்புகளை பற்றி ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச மாட்டாங்க.. இப்போ பார்த்தா தீர்ப்பு பற்றிய செய்தி வரும்போதே அதிருப்திக் குரல்களும் சேர்ந்துதான் வருது!” எனக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்த பெரியவர் சொன்னதைத் தொடர்ந்து அவருடன் வந்தவர்கள் அவர்களுடைய கருத்தைச் சொல்ல ‘வாக் தி டாக்’ அனல் பறந்தது. அவர்கள் விடிந்தும் விடியாத காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருப்பவர்கள்; உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும் பேசிக் கொண்டே நடப்பார்கள்; அலுவலகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், குடும்பத்தில் வரும் சிரமங்கள், அரசியல் சிக்கல்கள் என்று எதையுமே அவர்கள் விட்டுவைப்பதில்லை. சில செய்திகளை ஊடகங்கள் எப்படிக் கையாள்கின்றன என்று ஆளாளுக்கு மீடியாவைத் தினமும் திட்டுவார்கள் என்பது தனிக்கதை!

நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சனம் இல்லாமல் ஏற்றுக் கொள்வதெல்லாம் கடந்த கால செயல் என்று அவர்கள் பேசிக் கொண்டு போனது அயோத்தி விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பு வழங்கியதற்கு அடுத்த நாள். அதன் பிறகு வந்த சில தீர்ப்புகள் விஷயத்திலும் அதைப் போலவே அதிருப்தி குறித்த செய்திகளைப் பார்க்க முடிந்தது. அதாவது நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதை மறுத்து தனிமனிதர்களும் அரசும் கருத்துத் தெரிவிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதில் தவறு எதுவும் இல்லை என்பதை ‘நடைப்பயிற்சியில்’ இருந்த பெரியவர்களால் உணர முடியவில்லை என்றே தோன்றுகிறது. நீதிமன்றத்தை கோவிலாகவும் நீதிபதிகளை கடவுள்களாகவும் சாதாரண மனிதர்கள் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு ஒருவேளை இருக்கக் கூடும்!

உச்சநீதிமன்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று சொல்லி தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து கடந்த அக்டோபர் 8-ம் தேதி தீர்ப்பளித்தது. அந்த செய்திக்குப் பிறகு அந்த நியமன விவகாரத்தில் ‘விதிமுறைகள் பின்பற்றப்பட்டன’ என்று தமிழக அரசின் விளக்கமும் வருகிறது. டெல்லியில் 1996-ம் வருடம் ஜனவரி மாதம் பிரியதர்ஷினி மட்டூ என்ற சட்டக்கல்லூரி மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சந்தோஷ்குமார் சிங் என்னும் சக மாணவனே அந்தக் கொடூரமான செயலைச் செய்தான் என்று காவல்துறை அவனைக் கைது செய்தது. வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம் ‘குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ என்று சொல்லி விடுதலை செய்தது. டெல்லி உயர்நீதிமன்றம் அவனைக் குற்றவாளி என்று சொல்லி மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் அவனைக் குற்றவாளி என்று உறுதி செய்ததோடு, மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுத்தது. இது கடந்த அக்டோபர் ஆறாம் தேதி நடந்தது. மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் கிரிஜா வியாஸ் வருத்தம் தெரிவித்தார்!

பிரியதர்ஷினி வழக்கைப் போலவே பிரபலமான இன்னொரு வழக்கில் கடந்த அக்டோபர் 8-ம் நாள் பெங்களூரில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த 2005-ம் வருடம் டிசம்பர் மாதம் 13-ம் நாள், பெங்களூரில் ‘கால் சென்டர்’ ஒன்றில் வேலைபார்த்து வந்த பிரதிபா என்ற பெண் மாயமாக மறைந்து போனார். அவரைக் கடத்தி, அவருடன் பாலியல் வல்லுறவு கொண்டு அதன்பிறகு கொன்று விட்டதாக அவரை ‘டாக்ஸியில்’ அழைத்துச் சென்ற டிரைவர் சிவகுமார் போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டார். எந்த இடத்தில் அவருடைய உடல் போடப்பட்டது என்பதை அவர் உடன்வந்து காட்டியதாக காவல்துறை சொன்னது. இப்போது அந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. டிரைவர் சிவகுமாரின் மனைவியும் பிரதிபாவின் உறவினர்களும் தீர்ப்பு குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்!

டிரைவர் சிவகுமார் குற்றவாளி என்று அக்டோபர் ஆறாம் தேதி விரைவு நீதிமன்றம் அறிவித்தது. கொலைக் குற்றத்துக்கான தண்டனையாக சாகும்வரை சிறை என்று அக்டோபர் 8-ம் தேதி தண்டனை வழங்கப்பட்டது. கடத்தலுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் தனித்தனியாக கூடுதல் தண்டனை அளிக்கப்பட்டது. தான் நிரபராதி என்றும் அப்பாவியான தனக்கு தண்டனை கொடுப்பதன் மூலம் குற்றம் செய்யத் தூண்டிவிடாதீர்கள் என்றும் சிவகுமார் நீதிமன்றத்திலேயே சொல்லி இருக்கிறார். அவருடைய மனைவி சுமா, “என் கணவரை விடுதலை செய்யாவிட்டால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசி இருக்கிறார். 2005-ம் வருட இறுதியில் சிவகுமார் கைது செய்யப்பட்டபோது, ‘இந்தக் குற்றத்தை செய்த அவருடைய முகத்தைப் பார்க்கவே நான் விரும்பவில்லை’ என்று சுமா ஆத்திரப்பட்டார் என்பது வேறு விஷயம்!

“என் மகளோடு என் மகிழ்ச்சி எல்லாம் போய்விட்டது. அவள் பிறந்த 15-வது நாளில் என் கணவர் இறந்து போனார். அவர் இல்லாமல் தனி ஆளாக இந்தக் குழந்தையை வளர்த்தேன். அவளைக் கொன்றவனுக்கு தண்டனை கிடைத்தது என்ற வகையில் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது” என்று பிரதிபாவின் அம்மா சொல்லி இருக்கிறார். பிரதிபாவின் மாமா “இந்தத் தீர்ப்பு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இவ்வளவு கொடூரமான கொலையைச் செய்தவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என்று மனக்கசப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்! இந்த செய்தி குறித்து இணைய தளங்களில் கருத்து சொல்லும் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் மரண தண்டனை கொடுக்கப்படாமல் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டதைக் குறைசொல்லி இருக்கிறார்கள். “கண்ணுக்குக் கண் என்பதுதான் நீதி என்றால், உலகம் பார்வையற்றவர்களால்தான் நிரம்பி இருக்கும்” என்ற காந்தியின் வாசகத்தை இவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை!

மரண தண்டனை பற்றிப் பேசுவதற்கு முன்னால், இன்னொன்றை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. பிரதிபாவின் மரணம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்களுடைய பணி நிலைமைகளில் பெரும் மாறுதலைக் கொண்டு வந்தது. இன்று அதன் பலனை அனுபவிக்கும் இளம்பெண்கள் பிரதிபாவை அறிந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. பணி முடிந்து பெண்களை வீட்டில் கொண்டு வந்து விடும் கார்களை சில கம்பெனிகள் தொடர்ந்து கண்காணிப்பதும், ஒரு காரில் கடைசியாக கொண்டுவிடப்படும் நபர் பெண்ணாக இல்லாமல் இருப்பதும் இன்று நடைமுறையாகி இருக்கிறது. இதற்கு பிரதிபாவின் உயிர்த்தியாகமே காரணம்! அதேசமயம் பிரதிபாவின் கொலையைத் தொடர்ந்து இரவுநேரத்தில் பெண்களுக்குப் பணி கொடுக்கப்படக் கூடாது என்றும் கோரிக்கைகள் எழுந்தன. தொழில் நிறுவனங்களின் தேவையின் முன்னால் அந்தக் கோரிக்கை எடுபடாமல் போனது!

பிரதிபா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பல பெண்கள் வன்புணர்ச்சிக்குப் பிறகு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்குகளில் மரணதண்டனையே குற்றவாளிக்கு அல்லது குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற உணர்வு மக்கள் மத்தியில் அதிகரிப்பதாகவே தெரிகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த தனஞ்செயன் சாட்டர்ஜி என்பவர் 14 வயது சிறுமியுடன் வல்லுறவு கொண்டு கொலை செய்த குற்றத்துக்காக 2004-ல் தூக்கில் இடப்பட்டார். குற்றம் செய்பவர்களுக்கு அச்சுறுத்தலாக மரண தண்டனை இருக்கும் என்று மரண தண்டனைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் சொல்கிறார்கள். ஆனால் தனஞ்செயன் சாட்டர்ஜி தூக்கில் இடப்பட்டதற்குப் பிறகு வந்திருக்கும் ஏராளமான வல்லுறவு வழக்குகளைப் பார்க்கும்போது, குற்றங்களைத் தடுக்கும் கருவியாக மரணதண்டனை இல்லை என்ற எண்ணமே வலுப்படுகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Monday, October 11, 2010

யாரைத்தான் நம்புவதோ?

அடுத்து வரும் தேர்தலில் நாம் வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கப் போகிறோமா அல்லது வாக்குச் சீட்டில் வாக்களிக்கப் போகிறோமா என்ற கேள்வி சிலரிடம் இருக்கிறது. ஏனென்றால் வாக்குப் பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. தேர்தல் ஆணையம் இந்தப் புகார்களுக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது வேறு விஷயம். சிலர் அவர்களுடைய தொகுதியில் கிரிமினல்கள் தேர்தலில் நின்று வெற்றி பெறக் கூடாது என்று கவலைப்படுகிறார்கள். இன்னும் சிலர் தேர்தல்களின் போது புழங்கும் பணத்தின் வலிமையைப் பார்த்து ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை இழக்கிறார்கள். இன்னும் பலர் ஊடகங்களில் வரும் செய்திகளையே நம்பலாமா நம்பக் கூடாதா என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறார்கள். ஏனென்றால் வேட்பாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சில ஊடகங்கள் அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுகின்றன என்றும் அவ்வப்போது கண்டனக் குரல்கள் எழுகின்றன.

இந்த சந்தேகங்களை எல்லாம் யாரால் போக்க முடியும்? இப்படி எல்லாம் நடக்காமல் இருப்பதற்கு யார் முன்முயற்சி எடுக்க வேண்டும்? இது போன்ற கண்டனங்களும் புகார்களும் எழுவதற்குக் காரணமாக யார் இருக்கிறார்கள்? எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி செல்கின்றன என்று சொல்வதைப் போல ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் செயல்களைச் செய்பவர்கள் நம்முடைய பிரதிநிதிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் விதிகளை மீறாமல் ஒழுங்காக நடந்து கொள்கிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் முறையாக தேர்தல்களை நடத்தவும் இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படையிலான சுதந்திரமான அமைப்பாக தேர்தல் ஆணையம் இருக்கிறது. அந்தத் தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது என்றால், இந்தியத் தேர்தல் முறைகளில் ஆரோக்கியமான ஒரு மாற்றம் வந்து விடாதா என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது.

சில அறிவிப்புகள் நமக்குள் நம்பிக்கையை விதைக்கின்றன. சில அறிவிப்புகள் மிகவும் முக்கியமான பிரச்னைகள் தொடர்பானவையாக இருந்தாலும் நமக்குள் ‘இது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை; நாடகம்’ என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் அக்டோபர் 4-ம் தேதி டெல்லியில் நடத்துகிறது என்ற அறிவிப்பு வந்த போது, சிலருக்கு நம்பிக்கை பிறந்திருக்கும். சிலர் அவநம்பிக்கையுடன் அந்த செய்தியைப் படித்திருப்பார்கள். கூட்டம் நடந்து முடிந்த இன்றைய சூழலில் எந்த உணர்வு சரியானது என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். கடந்த அக்டோபர் 4-ம் நாள் திட்டமிட்டபடி அந்தக் கூட்டம் ‘இனிதே’ நடந்து முடிந்தது. மூன்று மணி நேரம் நடந்து முடிந்த அந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பேசினார்கள். தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதைத் தடுப்பது, பணபலம் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்து நிறுத்துவது, வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுவது குறித்து எழுந்திருக்கும் புகார்கள், ஊடகங்களில் பணம் கொடுத்து ‘செய்திகள்’ வரவழைப்பது குறித்த பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்தார்கள்.

கூட்டம் எவ்வளவு நேரம் நடந்திருக்கிறது? மூன்று மணி நேரம்! எத்தனை கட்சிகள் கலந்து கொண்டன? இந்த எண்ணிக்கை செய்திகளில் கிடைக்கவில்லை என்றாலும், ஒரு வாதத்துக்காக குறைந்த எண்ணிக்கையாக நான்கு என்றே வைத்துக் கொள்வோம். ஏனென்றால், கூட்டத்தில் என்ன நடந்தது என்று காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளின் பிரமுகர்கள் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார்கள். எத்தனை பிரச்னைகள் குறித்து பேசினார்கள்? குறைந்த பட்சம் 4 சிக்கல்களைப் பற்றி கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரச்னையும் எவ்வளவு ஆழமாக நம்முடைய தேர்தல்களில் புரையோடிப் போய் இருக்கிறது? அதை நீக்குவதற்கு அல்லது தடுப்பதற்கு ஆலோசனை செய்வதற்கான கூட்டம் மூன்று மணி நேரம் மட்டுமே நடந்தால், அங்கு என்ன கலந்தாலோசனை நடந்திருக்கும்?

சரி அதை விடுங்கள். கூட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்னை குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதா? வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து இந்த முக்கியமான நான்கு தேசிய கட்சிகளும் ஒருமித்த கருத்தில் இருப்பதாகவே தெரிகிறது. வாக்குப் பதிவுக்கு ஒரு ரசீது கேட்கிறது பாஜக. இடதுசாரிகள் எந்திரத்தின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார்கள். மேலே குறிப்பிட்டிருக்கும் நான்கு பிரச்னைகளும் இந்திய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கிக் கொண்டு இருக்கின்றன. இவர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள்!

இந்திய ஜனநாயகத்தின் ஆணிவேர் நாம் நடத்தும் தேர்தல். அரசாங்க நிர்வாக அதிகாரத்துக்கு உயிர்க்காற்று நம்முடைய தேர்தல். அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒரு வாக்கு என்ற தேர்தல் முறையை உருவாக்கினார்கள். பணக்காரர்களுக்கும் ‘உயர்’சாதியினருக்கும் படித்தவர்களுக்கும் நகர்ப்புற மக்களுக்கும் மட்டும் வாக்குரிமையை கொடுக்கவில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை என்பது அனைத்து மக்களையும் பங்கேற்கச் செய்யும் சிறந்த ஒரு அரசியல் நடவடிக்கை. ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்களோ, அந்த ஜனநாயக அடிப்படைகளை நாம் இன்று காத்திருக்கிறோமா என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நம்முடைய தேர்தல்களில் யாரும் நிற்கலாம். ஏழை என்றும் பணக்காரன் என்றும் வேறுபாடு இல்லை. பிறப்பால் உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் வித்தியாசம் இல்லை. இப்படி எல்லாம் நாம் ‘பெருமைப்படுகிறோம்’. ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமாகி இருக்கிறதா? தேர்தல் ஆணையத்துக்கு வேட்பாளர்கள் கொடுக்கும் கணக்குகளை விடுங்கள். உங்கள் பார்வையில் உங்கள் தொகுதியில் ஒரு வேட்பாளர் செலவழிக்கும் தொகை எவ்வளவு என்று உங்களால் ஊகிக்க முடியாதா என்ன? பெரும்பாலான அரசியல் கட்சிகளில் கட்சிக்கு ‘பெட்டி’ கொடுப்பவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக முடியும். தலைவர்களுக்குப் பெட்டி தூக்கும் சிலருக்கு அபூர்வமாக வாய்ப்புகள் கிடைக்கலாம். பெட்டியும் கொடுத்து பெட்டி தூக்கவும் தயாராக இருந்தால், அவர்களுக்கு விசுவாசி என்ற பட்டத்துடன் பல பதவிகள் தேடி வரக் கூடும்!

அடுத்ததாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேர்தலில் போட்டியிடத் தடைசெய்ய வேண்டும் என்று பல வருடங்களாக தேர்தல் ஆணையம் பேசி வருகிறது. அரசியல் கட்சிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோருகிறார்கள். இயற்கை நீதி என்ற அடிப்படையில் பார்த்தால் இந்த வாதம் நியாயமானதே. ஆனால் இந்த நியாயத்தை விசாரணைக் கைதிகளாக சிறைகளில் வாடும் சாதாரண மக்களுக்கும் பொருத்திப் பார்த்து வாக்களிக்கும் உரிமையை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்று அரசியல் கட்சிகள் நினைத்துப் பார்க்கிறார்களா? பல பத்தாண்டுகளுக்கு முன்னதாக எங்கோ நடந்த ஏதோ ஒரு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களுக்கு இடையில் இந்தப் பிரச்னை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று சொல்வதில் பொருள் இல்லை. தொடர்ந்து அதற்காக இயக்கம் நடத்தி இருக்கிறோமா என்பதே முக்கியமானதாகத் தெரிகிறது.

வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து விவாதங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. முக்கியமான தேசிய கட்சிகளும் எந்திரங்களின் மீது நம்பிக்கையுடன் இருக்கின்றன. அதனால் அடுத்து வரும் தேர்தல்களிலும் எந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால் இது எந்திரங்களின் காலம் என்று விட்டு விடலாம். செய்திகளை சேகரிக்க வரும் சில செய்தியாளர்களுக்கு பணம் அல்லது பொருள் கொடுத்து சூழலைக் கெடுப்பதில் இருந்து ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை வளைத்துப் போட்டுக் கொள்வது வரை ஏராளமான வழிகளில் ‘பணம் கொடுத்து செய்தி’ வரவழைக்கும் செயல்களும் நடப்பதாக வரும் செய்திகளை மறுப்பதற்கில்லை.

தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டம் குறித்த செய்திகள் வரும்போதே பீகார் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு பற்றிய செய்திகளையும் பார்க்க முடிகிறது. காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் என்று எல்லா கட்சிகளில் இருந்தும் கிரிமினல்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு செய்தி. பணபலம், சாதிபலம் ஆகியவற்றிலும் இந்தக் கட்சிகளுக்கு மத்தியில் பெரிய வேறுபாடு இல்லை. இந்த நிலையைப் பார்க்கும்போது சமீபத்தில் பார்த்த ஒரு வீடியோ வருகிறது. தேர்வுரிமைகளில் கூட ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமான சிந்தனை நிலவுகிறது என்பதை ரஷ்யாவில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லி ஒரு பெண்மணி விளக்கி இருந்தார்.

அவர் ரஷ்யாவில் ஒரு சர்வே நடத்துவதற்காக சென்றிருந்தார். சர்வேயில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் பருகுவதற்கு மென்பானங்களை அவர் ஏற்பாடு செய்திருந்தார். “உங்களுக்கு இதோ வாய்ப்புகளை அளிக்கிறோம். நீங்கள் பருகுவதற்கு ஏழுவிதமான மென்பானங்களை வைத்திருக்கிறோம். உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்” என்று வந்தவர்களிடம் அவர் சொன்னார். “இதுவரை நீங்கள் ஒன்றே ஒன்றைத்தான் அறிந்திருப்பீர்கள். கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒரே கட்சி ஆட்சி.. அரசாங்கம் கொடுக்கும் கல்வியில் இருந்து அதுவே வழங்கும் வோட்கா வரை சந்தையில் போட்டியே இருந்திருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த உங்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்யும் வாய்ப்புகளே இருந்திருக்காது. நாங்கள் உங்களுக்கு “சாய்ஸ்” கொடுக்கிறோம்” என்று அவர் சொல்ல நினைத்திருக்கலாம்.

ஆனால் அவர் வழங்கியதை ‘தேர்வுக்குரிய வாய்ப்புகளாக’ ரஷ்யர்கள் நினைக்கவில்லை. “இல்லை.. நீங்களும் எங்களுக்கு வாய்ப்புகளை கொடுக்கவில்லை.. ஒரே பானத்தைத் தானே வைத்திருக்கிறீர்கள்?” என்றார்கள். “கோக், பெப்சி, செவன் அப், ஸ்பிரைட், டாக்டர் பெப்பர், மவுண்டன் டியூ, க்ரஷ் என்று ஏழுவிதமான பானங்களை நீங்கள் குடிப்பதற்காக கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் ’சாய்ஸ்’ இல்லை என்கிறீர்களே” என்றார் அவர். ஆனால் அவர் சொன்னதைப் போல பார்ப்பதற்கு ரஷியர்கள் பழகவில்லை. “அவை அனைத்தையும் நாங்கள் சோடா என்ற ஒரே வகையாகத்தான் பார்க்கிறோம். சோடா தவிர தண்ணீர், பால், காபி, ஜூஸ் என்று நீங்கள் எங்களுக்கு தேர்வு செய்யும் வாய்ப்பை கொடுக்கவில்லை” என்பதே அவர்களுடைய வாதமாக இருந்தது.

அந்த அரங்கத்தில் இருந்த ரஷியர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைப் போலவே நம்முடைய தேர்தலிலும் நமக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள், பணபலத்தை பயன்படுத்துபவர்கள், அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகிறவர்கள் என்றே பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. அப்படி இருக்கும்போது நம்பிக்கை வைத்து தேர்வு செய்வதற்கு நமக்கு எங்கே இருக்கிறது ‘சாய்ஸ்’?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 14.10.10

இரண்டு கணிப்புகள் இரண்டு முடிவுகள்

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் என்று பிரதமர் மன்மோகன்சிங் மாவோயிஸ்டுகளை தொடர்ந்து விளித்து வருகிறார். ஆனால் நாட்டின் பல மாவட்டங்களில் அந்த அச்சுறுத்தல்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட மாவோயிஸ்டுகளுக்கு மக்கள் மத்தியில் உண்மையில் செல்வாக்கு இருக்கிறதா என்பதை அறிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி இருக்கிறது. அந்த கணிப்பின் முடிவுகளை கடந்த செப்டம்பர் 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தது. அதன்படி 58 சதவீத மக்கள் அவர்களுடைய பகுதிக்கு நக்சலைட்டுகளின் பாதை நல்லது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த முடிவு “எங்கள் கண்களைத் திறந்தது. அதேசமயம் எல்லோரையும் கவலைப்பட வைக்கக் கூடியது” என்று டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டிருக்கிறது.

ஆந்திராவின் ஐந்து மாவட்டங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. தெலுங்கானா பகுதியில் இருக்கும் அடிலாபாத், நிசாமாபாத், கரீம்நகர், வாரங்கல் மற்றும் கம்மம் ஆகியவையே அந்த ஐந்து மாவட்டங்கள். இந்த மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களை ஒட்டி இருப்பவை. அந்தப் பகுதியில் இருக்கும் ஏழை எளிய மக்களில் 25 வயது முதல் 50 வயது வரையிலான ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் இந்த கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் சில வருடங்களுக்கு முன்னதாக மாவோயிஸ்டுகள் செல்வாக்குடன் இருந்தார்கள். இப்போது அங்கு அவர்கள் ஒடுக்கப்பட்டு, மாவட்டங்கள் அனைத்தும் அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதாவது இந்தப் பகுதியில் மாவோயிஸ்டுகள் தோற்கடிக்கப்பட்டார்கள். இருந்த போதிலும் அரசாங்கத்தை விட மாவோயிஸ்டுகள் மேல் அதிகமான மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக அந்த சர்வே முடிவு தெரிவிக்கிறது.

இந்த முடிவு ’எங்கள் கண்களைத் திறந்தது’ என்று அந்த நாளிதழ் ஏன் சொல்ல வேண்டும்? இதுவரை அரசாங்கத்தின் தகவலை மட்டுமே அந்த நாளிதழ் கேட்டிருக்கக் கூடும். இந்த சர்வேயின் முடிவுகளின்படி, அப்படிப்பட்ட பல அரசாங்க பிரசாரத்தை பெரும்பான்மையான மக்கள் ஏற்கவில்லை என்ற புதிய செய்தி கிடைத்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் சிலர் சித்தரிப்பதைப் போல மாவோயிஸ்டுகளைக் குண்டர்கள் என்றும் பணம் பறிப்பவர்கள் என்றும் அந்த மக்களில் பலர் நம்பவில்லை. அவர்களுடைய கொள்கைகளும் அவற்றை நிறைவேற்ற அவர்கள் எடுக்கும் கடத்தல் உள்ளிட்ட வன்முறை நடவடிக்கைகள் கூட கணிசமானவர்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றன. இவ்வளவு காலம் புறக்கணிக்கப்பட்டு இருந்த அந்த மாவட்டங்களில் இப்போது வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்குக் கூட மாவோயிஸ்டுகள் காரணம் என்று அதிகமானவர்கள் நம்புகிறார்கள். அந்தப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள், மக்களால் நக்சலைட்கள் என்றே அறியப்படுகிறார்கள். மக்கள் யுத்தக் குழு என்ற நக்சலைட் அமைப்பாக இருந்த போது அந்த மாவட்டங்களில் அவர்கள் செயல்பட்டது அதற்குக் காரணமாக இருக்கக் கூடும். அந்த அமைப்பு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் என்ற குழுவுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற புதிய கட்சியைத் தொடங்கியது. இதற்குப் பிறகே அவர்கள் மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்பட்டார்கள்.

இந்த சர்வே உண்மையிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் அதன் முடிவை அந்த ஆங்கில நாளிதழ் உண்மை என்று நம்புகிறது என்பதும் அந்த செய்தியின் வாசகங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளை விட அந்த மாவட்டங்களில் நீண்ட காலமாக மாவோயிஸ்டுகள் வேலை செய்திருக்கிறார்கள் என்பதால் அங்கு இன்னும் அவர்களுக்கு அனுதாபமும் ஆதரவும் கூடுதலாக இருக்கலாம். அந்தப் பகுதியில் அவர்கள் இப்போது ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் அந்த செய்தி தருகிறது. அவர்களை ஒடுக்குவதற்காக காவல்துறை எடுத்த நடவடிக்கைகளின் தீவிரம் அந்த மக்களிடம் அனுதாபத்தை உருவாக்கி இருக்கலாம்.

இந்தியாவின் மற்ற மாவட்டங்களை விட இந்த மாவட்டங்களில் அவர்களுக்கான ஆதரவு அதிகமாக இருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அங்கு வாழும் ஏழை எளிய மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள் என்ற முடிவு உண்மை நிலையை பிரதிபலிப்பதாக தோன்றவில்லை. பிறகு எப்படி அந்த முடிவு கிடைத்தது? அந்த மக்களிடம் நீங்கள் முன்வைக்கும் கேள்விப்பட்டியலில் இருக்கும் கேள்விகளின் தொனியையும் தேர்வு செய்வதற்காக முன்வைக்கப்படும் விடைகளின் தன்மையையும் பொறுத்தே முடிவுகள் அமைகின்றன.

மக்களில் பாதிக்கு மேல் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் நம்ப விரும்பினால் நீங்கள் மேலே இருக்கும் வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பீர்கள். உங்களுக்கு சிஎன்என் – ஐபிஎன் என்ற ஆங்கில தொலைக்காட்சியும் தி வீக் வார இதழும் இணைந்து நடத்திய இன்னொரு கருத்துக் கணிப்பின் முடிவுகள் நினைவுக்கு வருகிறதா? அந்த சர்வே நீண்ட நாட்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டதில்லை. ந்த சர்வே முடிவுகள் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிடப்பட்டது. அதாவது ஏறத்தாழ 50 நாட்களுக்கு முன்னதாகத்தான் இந்த சர்வே முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது. நக்சலிசத்தால் பாதிக்கப்பட்டதாக இந்தியத் திட்டக் குழு குறிப்பிடும் 36 மாவட்டங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார்,ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் இந்த 36 மாவட்டங்கள் இருக்கின்றன.

ரண்டு சர்வேக்களின் முடிவுகளும் நேர் எதிராக இருக்கின்றன. சிஎன்என்-ஐபிஎன் கேள்விகளையும் முடிவுகளையும் பாருங்கள். தற்போதைய மோதலில் நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் என்ற கேள்விக்கு நக்சலைட்டுகள் பக்கம் என்று 5 சதவீதம் பேர் சொல்லி இருக்கிறார்கள். அரசின் பக்கம் என்று 49 விழுக்காடு மக்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் செயல்படும் பகுதிகளில் அரசு நிர்வாகம் செயலற்றுப் போயிருக்கிறது என்பதும் மாவோயிஸ்டுகளின் புரட்சிகர நிர்வாகமே நடக்கிறது என்பதும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் என்று இந்த கணிப்பு சொல்கிறது. பத்தில் ஒரு பங்கினர் மட்டுமே மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில் அவர்களுடைய பகுதி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். நிபந்தனை எதுவும் இல்லாமல் இருதரப்பும் மோதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று 56% மக்களும், இந்திய ஜனநாயகத்தில் தன்னுடைய ஓட்டுக்கு மதிப்பு இருக்கிறது என்று 60% மக்களும் தெரிவித்திருக்கிறார்கள். நக்சலைட்டுகளை அரசு எப்படிக் கையாள வேண்டும் என்ற கேள்விக்கு 37% கருத்து இல்லை என்றும் 33% வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமாக என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

அரசாங்கம் உங்கள் பகுதியில் திட்டங்களை செயல்படுத்தி, காவல்துறையும் முறையாக நடந்து கொண்டால், நீங்கள் நக்சலைட்டுகளை ஆதரிப்பீர்களா என்று கேள்வி கேட்டால், பெரும்பான்மை மக்கள் ”நக்சலைட்டுகளை ஆதரிக்க மாட்டோம்” என்று சொல்லக் கூடும். மாவோயிஸ்டுகள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டால் “மாட்டோம்” என்ற பதிலை மக்கள் அளிப்பார்கள். தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் நீங்கள் நக்சலைட்டுகளின் செயல்களை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால் “ஆதரிக்கிறோம்” என்று மக்களில் பெரும்பாலானவர்கள் சொல்வார்கள். இதுபோன்ற கணிப்புகளில் கேள்விகளும் தேர்வு செய்வதற்குக் கொடுக்கப்படும் விடைகளும் முக்கிய பங்காற்றுகின்றன.

கேள்விகள் எப்படி இருந்தாலும் இரண்டு கணிப்புகளிலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மக்களிடம் ஒருமித்த கருத்து இருப்பதை அறிய முடிகிறது. நக்சலைட்டுகளை என்கவுண்டர்கள் மூலமாக தீர்த்துக்கட்டுவதை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 10.10.10

நாயிடம் இல்லை வெறி!

அந்த மனிதர் தினமும் அந்தக் கறுப்பு நிற நாயை ‘வாக்கிங்’ அழைத்துப் போவார்; அது ‘உயர்ந்த ரக’ நாய்; வழக்கமாக நாம் தெருவில் பார்க்கும் நாய்களைப் போல் அதன் தோற்றம் இருக்காது. அந்த நாயின் கழுத்தில் ஒரு சங்கிலி கட்டப்பட்டிருக்கும். அந்த சங்கிலியின் இன்னொரு பக்கத்தை அந்த மனிதர் கையில் இழுத்துப் பிடித்துக் கொண்டு நடப்பார்; அவர் நாயை அழைத்துப் போவதாக சொல்கிறோமே தவிர, உண்மையில் அவரை இழுத்துக் கொண்டுதான் அந்த நாய் வேகமாக நடக்கும். அவர் சங்கிலியை இழுத்துப் பிடித்துக் கொண்டே நாயின் வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டு அதன் பின்னால் நடந்து வருவார்.

‘பிரபலங்களுடன்’ வரும் ’அல்லக்கைகளைப்’ போல, அந்த கறுப்பு நாயைச் சுற்றி இரண்டு பக்கங்களிலும் இன்னும் ஐந்தாறு நாய்கள் நடந்து வரும். கறுப்பு நாய் மட்டும்தான் அந்த மனிதர் வளர்க்கும் நாய். மற்ற நாய்கள் எல்லாம் தெரு நாய்கள். அவர் வீட்டு வாசலில் அவை ஒன்று கூடும். அங்கு அந்த நாய்களுக்கு சாப்பாடு கிடைக்கும். வேறு வேறு நிறங்களில் அந்த நாய்கள் இருந்தாலும் அவை தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதில்லை. இந்தக் குழுவைச் சேராத வேறு நாய் கண்ணில் பட்டால், எல்லாம் சேர்ந்து அந்தப் புதிய நாய்க்கு எதிராகக் குரல் எழுப்பும். தினமும் இந்தக் காட்சியை பார்க்க முடிந்தாலும், கடந்த வாரத்தில் ஒரு நாள் நாய்களைப் பற்றிய செய்திகளை அதிகம் படிக்க நேர்ந்ததால், இந்த தினசரி காட்சியும் நினைவுக்கு வந்தது.

லண்டனில் ஒரு நாயின் எஜமானர் கடந்த ஆகஸ்ட் மாதம் இறந்து போனார். அன்றிலிருந்து அந்த நாய் தனக்குக் குளிராமல் இருப்பதற்காக போடப்பட்டிருக்கும் போர்வையைக் கடித்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. போர்வை அதிகமாக அதன் வயிற்றுக்குள் போனதாலோ என்னவோ, அந்த நாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில், அவசரமாக அறுவை சிகிச்சை செய்து அந்த நாயின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்கள். பிரிவு காரணமாக எழும் துயரமும் மன அழுத்தமும் நாய்க்கு இருந்தால் இதுபோல் விநோதமான பொருட்களைக் கடித்துக் கொண்டிருக்கும் என்று பிரைட்டன் மருத்துவர் ரபேகா சொன்னார் என்று பிபிசியில் ஒரு செய்தி வந்தது.

எஜமான விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டாக நாய் குறித்த பல செய்திகள் அவ்வப்போது வருவதுண்டு. ஆனால் அப்படிப்பட்ட நாயை ஒரு இந்தியர் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். மத்தியப் பிரதேசத்தில் மொரெனா மாவட்டத்தில் அந்த சம்பவம் நடந்திருக்கிறது. சுனிதா ஜாதவ் என்ற ஒரு பெண், விவசாயக் கூலியான தன்னுடைய கணவனுக்கு சாப்பாடு போடுகிறாள். அவர் சாப்பிட்டது போக ஒரு ரொட்டி மீதி இருக்கிறது. ஒரு நாய் அதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறது. அந்த நாயை அழைத்து அந்த ரொட்டியை சுனிதா ஊட்டி விடுகிறாள். அப்போது அந்த நாயை வளர்க்கும் பண்ணையார் வருகிறார். “ஏய்! கீழ்சாதிப் பெண்ணே! என்னுடைய நாய்க்கு ஏன் உன்னுடைய ரொட்டியை சாப்பிடக் கொடுக்கிறாய்” என்று அவளைத் திட்டுகிறார். அந்த ஏச்சையும் பேச்சையும் வாங்கிக் கொண்டு அந்தப் பெண் அமைதியாக நிற்கிறாள். அத்துடன் அந்தப் பிரச்னை முடிந்து போனதாக நினைத்து சுனிதா விட்டு விடுகிறாள்.

ஆனால் அந்தப் பண்ணையாரைப் பொறுத்தவரை அந்தப் பெண்ணுடைய செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாழ்த்தப்பட்ட பெண் ஒருத்தி கொடுத்த ரொட்டியை சாப்பிட்டதால் அந்த நாய் ‘தீண்டத்தகாத’ நாய் ஆகிவிட்டது என்று அவர் நினைத்தார். அதனால் அவருடைய வீட்டில் வளரும் தகுதியை அந்த நாய் இழந்துவிட்டது என்று அவர் முடிவுக்கு வந்தார். அவருக்கு ஏற்பட்ட ‘மன உளைச்சலுக்கு’ நீதி கேட்டு ஊர் பஞ்சாயத்தைக் கூட்டச் செய்தார். அந்த நாயை இனி சுனிதாவே வளர்க்க வேண்டும் என்றும் பண்ணையார் நாயை இழப்பதற்குக் காரணமாக இருந்ததற்காக சுனிதா 15000 ரூபாய் பண்ணையாருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் சுனிதாவும் அவருடைய சகோதரரும் அருகில் இருந்த காவல் நிலையத்துக்குப் போய் புகார் கொடுக்கிறார்கள். அங்கு அவர்களுடைய புகார் வாங்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு காவல் நிலையத்தை அணுகுமாறு அங்கு இருந்த காவலர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி அந்த போலீஸை போய்ப் பார்த்தால், “அவங்க நாய்க்கு நீ ஏன் சாப்பாடு கொடுத்தாய்?” என்று அங்கு இருந்த அதிகாரி கேட்டாராம்! நாய்க்கு வெறி பிடிக்கும் என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கிராமத்தில் வாழ்கிற, படிக்காத, பண்ணையாருக்கும் ஊர்ப்பஞ்சாயத்தாருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் பிடித்திருக்கும் வெறியை எப்படிப் புரிந்து கொள்வது?

மூன்று மாதங்களுக்கு முன்னால் நண்பர் மாதவராஜ் ஒரு பதிவு எழுதி இருந்தார். நம்முடைய சமூகம் எப்படி ஒரு பிரச்னையை தேவையில்லாமல் இழுத்துப் போட்டுக் கொண்டு அவதிப்படுகிறது என்பதை ஒரு நாயின் நடவடிக்கைகளைக் கொண்டு அற்புதமாக விவரித்திருந்தார். அதை உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறோம்.

"நேற்றிலிருந்து ஒரு பழைய துணியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது அந்த நாய்..

துணியை வாயில் கவ்விக்கொண்டே கொஞ்ச தூரம் ஓடும்; கீழே போடும்; ஓரிடத்தில் அமைதியாகி, நாக்கு வெளியே தள்ளி மூச்சிறைக்கும்; முகர்ந்து பார்க்கும்; தள்ளிப் போய் முறைத்துப் பார்க்கும்; பதுங்கும்; பின்னங்காலால் மண் அள்ளிப் போடும்; உர்ரென்று துணி மீது பாயும்; திரும்பவும் கவ்வி, ஏதோ குழறியபடி தன்னையே சுற்றும்.

அப்படியே உட்கார்ந்து ஒரு வெற்றி வீரனைப் போல கம்பீரமாய் தெருவைப் பார்க்கும். சட்டென எழுந்து அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தலையை ஆட்டி துணியைக் கிழித்து எறிய முயலும். ஏதோ ஒரு அசைவில் துணி தலையைச் சுற்றிக் கொள்ளும்போது, அரண்டு போய் ‘வாள்’ ‘வாள்’ என்று கத்திக்கொண்டே அங்குமிங்கும் ஓடியலையும்.

தலையை மண்ணில் கவிழ்த்தபடியே கொஞ்ச நேரம் அசையாமல் நிற்கும். உதறும். துணி கீழே விழுந்ததும் எட்டிப் போய் நிற்கும். வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு பாவம் போல விழிக்கும். தலையை சரித்துக்கொண்டு மீண்டும் துணி அருகில் வரும்.

அசையாமல் கிடந்த அந்தத் துணி நாயின் உயிரை வாங்கிக் கொண்டிருந்தது.”

இதுதான் அவர் எழுதிய பதிவு. அந்தத் துணி அப்படியே கிடக்கட்டும் என்று விட்டுவிட்டு அந்த நாய் விலகிப் போய்விடலாம். ஆனால் நாய் விலகிப் போகவில்லை. அந்தத் துணியோடு மல்லுக்கட்டி தன்னுடைய சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறது. அதைப் போல சாதி, மதம் உள்ளிட்ட எத்தனையோ சிக்கல்களை நாம் விடாமல் பிடித்துக் கொண்டு நம்முடைய அமைதியை இழந்து கொண்டிருக்கிறோம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 07.10.10

Friday, October 01, 2010

வளர்ச்சி என்பது யாதெனில்......

“வெள்ளிக்கிழமை லீவு போட்டுவிட்டு வியாழக்கிழமை ராத்திரியே பஸ்ஸில் ஊருக்கு வந்து விடவா?” தமிழ்நாட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு மாநிலத்தின் தலைநகரில் வேலைபார்க்கும் இளைஞன் கேட்டான். சனி, ஞாயிறு விடுமுறையை சென்னையில் எங்களுடன் கழிக்கலாம் என்பது ஏற்கனவே செய்து கொண்ட ஏற்பாடு.

மொட்டையாக கேட்கப்பட்ட இந்தக் கேள்வியில் எனக்கு தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

“என்ன விஷயம்? நீ நாளைக்கு ராத்திரி ட்ரெயினில் தானே ரிசர்வ் செய்திருந்தாய். இப்போ ஏன் சீக்கிரம் வரணும்னு நினைக்கிறாய்?” என்று சாதாரணமாகக் கேட்டேன்.

“இல்லே, நாளைக்கு அயோத்தி தொடர்பான அலாகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருது.. அது எப்படி வந்தாலும் கலவரம் நடக்கலாம்னு இங்கே ஒரே பரபரப்பா இருக்கு.. அதனால நாளைக்கு வரை காத்திருக்காம இன்னிக்கே ஊருக்கு போறவங்க போயிடுங்கன்னு ஆபீஸ்ல பேசிக்கறாங்க. அதுதான் கேட்டேன்,” என்றான்.

பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் பல நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் வார இறுதியை குடும்பத்துடன் கழிப்பதற்காக முன்கூட்டியே சென்னைக்கு டிக்கெட் எடுத்திருந்தார்கள். இன்னும் எத்தனையோ காரணங்களுக்காக எத்தனையோ லட்சம் பேர் கடந்த 24-ம் தேதி பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்திருப்பார்கள். அவர்களும், அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் கடந்த 23-ம் நாள் இதுபோன்ற மன அழுத்தத்தை அனுபவித்திருப்பார்கள்.

மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதால் யாரும் பதற்றம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைதி காக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தீர்ப்பு எப்படி இருந்தாலும், இந்து இயக்கங்களும் முஸ்லீம் அமைப்புகளும் தங்கள் தரப்பு தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி கோரியிருந்தன. இருந்தாலும் நம்முடைய மனிதர்களுக்கு சக மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லை. அந்த இளைஞன் கேட்டது சாதாரண கேள்விதான். ஆனால் அந்தக் கேள்விக்கு என்னால் உடனடியாக பதில் சொல்ல இயலவில்லை என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

என்ன பதிலை அந்த இளைஞனுக்கு சொல்வது? நிமிட நேரத்தில் அலையலையாய் கேள்விகள் எழுந்தன. பெங்களூரிலோ, ஹைதராபாத்திலோ, மதரீதியான மோதல்கள் வராது என்று யாரேனும் வாக்குறுதி கொடுக்க முடியுமா? சமூகத்தை மதரீதியாக பிளவுபடுத்தும் சக்திகள் அங்கு அரசியல்ரீதியாகவும் வலுவாக இருக்கும்போது எப்போது என்ன நடக்கும் என்று யாரால் சொல்ல முடியும்? நம்முடைய ரயில்களில் குண்டு வெடிக்காது என்ற உத்தரவாதத்தை தரும் நிலையில் நம்முடைய அரசாங்கங்கள் இருக்கின்றனவா? பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுகள் சிறப்பாக செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் நம்முடைய வழக்கில் இருக்கும் “கள்வன் பெரிதா காப்பான் பெரிதா” என்ற கேள்வியின்படி, ஒரு சில சமயங்களில் கள்வன் பெரியவனாகி விட்டால், விளைவுகள் மோசமாகி விடுமே!

தமிழ்நாட்டில் மதக் கலவரம் வருவதற்கு வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக அசம்பாவிதங்கள் நடக்காது என்று சொல்ல முடியுமா? தஞ்சாவூர் போகவிருந்த பயணத்திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ரத்து செய்திருக்கிறாரே? அவர் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை கண்காணித்து உத்தரவிடுவதற்காக தலைநகரில் இருக்க வேண்டும் என்ற முடிவில் பயணத்தை ரத்து செய்திருப்பார். தகவல் தொடர்பு ‘புரட்சி’க்குப் பிறகு தஞ்சாவூராக இருந்தால் என்ன, சென்னையாக இருந்தால் என்ன, எங்கிருந்தும் தான் செயல்பட முடியுமே, பிறகு ஏன் அவர் பயணத்தை ரத்து செய்தார்? நாடு முழுக்க ஒரு பதற்றத்தில் இருக்கும்போது அவர் ஒரு விழாவைக் கொண்டாடப் போய்விட்டார் என்று எதிர்க்கட்சிகள் அவரை உலுக்கி விடுவார்கள் என்பதால் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாம் என்று அவர் ரத்து செய்திருப்பார்; இப்படி எல்லாம் எண்ணங்கள் ஓடின.

கடைசியாக என்ன நடந்தது? அடுத்த நாள் அலாகாபாத் உயர்நீதிமன்றக் கிளை அயோத்தி தொடர்பான தீர்ப்பு அளிக்கவில்லை. முந்தைய நாளே உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. அலாகாபாத் நீதிமன்றம் வெளியிட இருக்கும் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஹெச்.எல்.கோகலே ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அதைத் தொடர்ந்து அலாகாபாத் நீதிமன்றம் ஒரு வாரம் தீர்ப்பை வெளியிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் 24-ம் தேதி தீர்ப்பு வெளியாகவில்லை!

ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் நம்பிக்கையுடன் பேசுகிறார். நாம் கொண்டிருக்கும் அவநம்பிக்கையும் எதிர்மறை உணர்வும் அவரிடத்தில் இல்லை. “தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஏன் கருதுகிறீர்கள்? தீர்ப்பு வரட்டும்! ஏதாவது ஒரு பக்கத்துக்கு சாதகமாக... எப்படியும் மேல் முறையீட்டில் இந்த வழக்கு இங்கு வந்துவிடும். தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மக்கள் முதிர்ச்சி அடையவில்லை என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?” என்று அவர் மனுதாரர் தரப்பைக் கேட்கிறார். மற்ற நீதிபதியான கோகலே வேறுவிதமாக பேசுகிறார். “ இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உங்களைவிட இதில் தொடர்பில்லாதவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். எதிர்த்தரப்பினர் இருவரும் சேர்ந்து தீர்ப்புக்கு தடை விதிக்காதீர்கள் என்று சொல்கிறீர்கள். இதே ஒற்றுமையை கோர்ட்டுக்கு வெளியில் சமாதானமாகப் போவதில் காட்டலாமே.. உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளித்து அதனால் ஏதாவது நடந்தால், நீங்கள் முதலில் எங்களைத் தான் குற்றம் சாட்டுவீர்கள்” என்று அவர் சொல்லி இருக்கிறார். எத்தனை வழக்குகளில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் ஆட்சியை விட்டு விலகுங்கள் என்று மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் நெறிப்படுத்தியது? எத்தனை முறை சட்டத்தின் பார்வையில் எது சரி, எது நீதி என்று சொல்வதுதான் நீதிமன்றத்தின் பணி என்று திட்டவட்டமாகச் சொன்னது? இப்போது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரே சொல்கிறார்!

இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு 28-ம் தேதி உச்சநீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது. இந்த சர்ச்சையில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்ட தரப்பினரை விசாரணையில் கலந்து கொள்ள வரும்படி நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. மத்திய அரசின் கருத்தையும் தெரிந்து கொள்ள வசதியாக ’அட்டார்னி ஜெனரலையும்’ கோர்ட்டில் அன்று இருக்க வேண்டும் என்று பணித்திருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? இந்த வழக்கில் ஒரு தரப்பாக மத்திய அரசு இதுவரை இல்லை. இப்போது அட்டார்னி ஜெனரல் அங்கு இருக்க வேண்டும் என்றால், அவர் மூலமாக மத்திய அரசு தன்னுடைய நிலையை தெளிவுபடுத்தலாம். அந்த ஒரு நாளில் எல்லா தரப்பினரையும் விசாரித்து அவர்களுடைய கருத்துக்களை அறிந்து, உச்சநீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பை வழங்கி விடுமா?

அப்படி வழங்கி விட்டால், அலாகாபாத் நீதிமன்றம் அடுத்த இரு நாட்களில், அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள், ‘சர்ச்சைக்குரிய’ இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பை அளித்துவிட முடியும். ஒருவேளை 28-ம் தேதியுடன் உச்சநீதிமன்ற விசாரணை முடியாமல் வேறு ஒரு நாளுக்கு விசாரணை தொடர வேண்டியிருந்தால் நிலைமை என்னாகும்? அலாகாபாத் தீர்ப்பு இப்போதைக்கு வராது. ஏனென்றால் அலாகாபாத் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான தரம் வீர் சர்மா வரும் அக்டோபர் முதல் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெறுவதற்குள் அந்த பெஞ்ச் தீர்ப்பளிக்க வேண்டும். இல்லை என்றால் விசாரணை முதலில் இருந்து வேறு ஒரு நீதிபதியுடன் தொடங்க வேண்டும். ஒரு சிக்கலுக்கு தீர்வு காணாமல் ஆறப்போடுவதே அந்த சிக்கலுக்கான சிறந்த தீர்வு என்பது முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் அணுகுமுறை. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமும் அதே அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறதோ என்று தோன்றுகிறது!

அதேசமயம் சில சிக்கல்களுக்கு நீதிமன்றங்களில் தீர்வே கிடையாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தாரா என்பதை எந்த நீதிமன்றம் எந்த சட்ட அடிப்படையில் முடிவு செய்ய முடியும்? இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தவில்லை என்பதால் அது வழிபாட்டுத் தலம் இல்லை என்றோ, அதனால் அவர்களுக்கு அதில் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றோ ஒரு நீதிமன்றம் எப்படி சொல்ல முடியும்? எத்தனையோ காரணங்களால் நாம் பிளவுபட்டு நிற்கிறோம்; இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை சாதி நம்மைப் பிரிக்கிறது; மதம் நம்மை மோதச் செய்கிறது; பொருளாதார ஏற்றத்தாழ்வு நமக்குள் இணைய முடியாத இடைவெளியை உருவாக்குகிறது; மொழி, இனம், நாடு போன்ற காரணிகளும் உலகில் மக்களை தீர்க்க முடியாத சிக்கலிலும் போரிலும் தள்ளுகின்றன. இவை எல்லாவற்றையும் படைத்த இறைவன் மோதல்களுக்குக் காரணமாக இருக்கலாமா? ”எல்லா நதிகளும் கடலில் சென்று கலப்பதைப் போல, எல்லா மனிதர்களும் கடைசியில் ஒரே இறைவனைச் சென்றடைகிறார்கள்” என்று சிலர் சொல்வதை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவராலும் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?

கடவுள் எங்கே இருக்கிறார்? 13-ம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஜலாலுதீன் ரூமி இதைப் பற்றி எழுதி இருக்கும் புத்தகத்தை உத்தமர் காந்தி படித்திருக்கிறார். அந்த நூலுக்கு ‘இந்தியன் ஒப்பினியன்’ இதழில் விமர்சனம் எழுதி இருக்கிறார். “நான் கடவுளை சிலுவையில் தேடினேன்; கண்டறிய முடியவில்லை. கடவுளைத் தேடி நான் கோவிலுக்குப் போனேன்; அங்கும் அவர் இல்லை. எந்த மலையிலும் குகையிலும் அவர் இருப்பதாகத் தெரியவில்லை. கடைசியாக என்னுடைய இதயத்தைத் தேடினேன்; அங்கே அவர் இருந்தார். ஒவ்வொரு மனிதனின் இதயத்தில் மட்டும் தான் கடவுள் இருக்கிறாரே தவிர வேறெங்கும் அவர் இல்லை” என்ற ரூமியின் வரிகளை காந்தி மிகவும் போற்றுகிறார். “இந்த புத்தகத்தை நான் ஒவ்வொருவருக்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்துக்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் பயனளிக்கும் நல்ல நூல் இது” என்ற பரிந்துரையுடன் அந்த விமர்சனத்தை காந்தி முடிப்பதாக வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

13-ம் நூற்றாண்டின் கவிஞர் சொன்ன கருத்தின் அளவு கூட 21-ம் நூற்றாண்டு மனிதர்களாகிய நாம் வளரவில்லை என்றால், நாம் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கும் வளர்ச்சிக்கு என்ன அர்த்தம் இருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 03.10.10

உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து..

“அந்த எண்ணிக்கையைப் பார்த்தால் பயமும் பீதியும் ஏற்படுகிறது” என்று கவிஞர் கனிமொழி பேசி இருக்கிறார். நாகர்கோவிலில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் பேசும்போது அவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். எந்த எண்ணிக்கை அவருக்கு பயத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றன? அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துக்களில் பலியாகும் அப்பாவிப் பயணிகளின் எண்ணிக்கையா? துணை ராணுவத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் நடக்கும் மோதலில் பலியாகும் அனைத்து தரப்பு மக்களின் கூட்டுத் தொகையா? அன்றாடம் செய்தித் தாள்களில் வெளியாகும் முதியவர்கள் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களா? அதே கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசும்போது “ஒவ்வொரு நாளும் பத்திரிகையைப் படிப்பதற்கு கை நடுங்குகிறது; இத்தனை பேர் இறந்தார்கள், இத்தனைபேர் கொல்லப்பட்டார்கள், இத்தனை பேர் காயம்பட்டார்கள், இத்தனை வீடுகள் கொளுத்தப்பட்டன என்ற செய்திகள் காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கின்றன” என்று அவர் காஷ்மீர் வன்செயல்கள் பற்றி சுட்டிக் காட்டி இருக்கிறார்.

ஆனால் ‘பயமும் பீதியும் ஏற்படுகிறது’ என்று கனிமொழி குறிப்பிட்டுப் பேசியது காஷ்மீர் பிரச்னை பற்றி அல்ல. “பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டால் ராணுவத்தில் சேர்ந்து போருக்கு போகிறீர்களா என்று கேட்கிறார்கள். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்த போரில் 1853 பேர் இறந்தார்கள். ஆனால் இந்தியாவில் பிள்ளை பெற்றுக் கொள்ளும்போது உயிர் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? ஒரு வருடத்துக்கு 80 ஆயிரம் பேர். இந்த எண்ணிக்கையைப் பார்த்தால் பயமும் பீதியும் ஏற்படுகிறது” என்று ஒரு அடிப்படையான பிரச்னையைத் தொட்டுப் பேசி இருக்கிறார். சவால்களும் வசைகளும் குற்றச்சாட்டுகளும் மோதல் உணர்வை உசுப்பிவிடும் மேலோட்டமான பிரச்னைகளும் மட்டுமே பல அரசியல் பொதுக் கூட்டங்களில் பேசுபொருளாக போய்விட்ட இன்றைய சூழலில், கனிமொழி முக்கியமான ஒரு பிரச்னையை கோடிட்டுக் காட்டி இருக்கிறார்!

சில வாரங்களுக்கு முன்னால் டெல்லியில் இருந்து வருகிற ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ என்ற ஆங்கில நாளிதழில் அந்த செய்தியை வெளியிட்டிருந்தார்கள். “அவள் பெற்றெடுத்தாள்; இறந்தாள். டெல்லி அவளைக் கடந்து சென்றது” என்ற தலைப்பில் தெருவோரம் குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு செத்துப் போன ஒரு தாயைப் பற்றிய செய்தியைப் போட்டிருந்தார்கள். நம்முடைய முதலமைச்சர் சொன்னதைப் போல சில செய்திகளைப் படிக்கும்போது கை நடுங்குகிறது; வேறு செய்திகளைப் படிக்கும்போது மனம் கொதிக்கிறது; இன்னும் சில செய்திகளைப் பார்க்கும்போது அவமானத்தில் கூனிக் குறுக வேண்டியிருக்கிறது!

டெல்லியில் கொட்டிய மழையில் வீடுகளே மிதக்கும்போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக கட்டிடங்களை கட்ட வந்தவர்களுடைய இருப்பிடங்கள் என்ன கதிக்கு ஆளாகி இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான். அப்படி தனியான இருப்பிடங்களும் இல்லாமல் வேலை செய்யும் இடங்களிலேயே ஒட்டிக் கொண்டு இருப்பவர்களில் அந்தப் பெண்ணும் ஒருவர். அவர் ஒன்பது மாத கர்ப்பிணி. சேறும் சகதியுமாக கிடக்கும் அந்த மணலில் அவர் படுத்துக் கிடக்கிறார். அவருடைய தோற்றம் ஆரோக்கியமாக இல்லை. பெருத்திருந்த வயிற்றின் மேல் ஈக்கள் கூட்டம் மொய்த்துக் கிடக்கிறது. நாய்கள் அவரைச் சுற்றுகின்றன. டெல்லியின் கனாட் ப்ளேஸ் பகுதியில் இருக்கும் சங்கர் மார்க்கெட் என்ற இடத்தில் அவர் தரையில் கிடக்கிறார்.

எந்த வித வசதியும் இல்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் அவரே குழந்தையை பெற்றெடுக்கிறார். அவருடைய அவலமான நிலையைப் பார்த்து அருகில் வந்த பெண்ணிடம் குழந்தையை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகிறார். பிறகு அந்தப் பெண் இறந்து போகிறாள். வேலைக்குப் போகிறவர்களும் கடைகளில் பொருட்கள் வாங்க வந்தவர்களும் பொழுதுபோக்க வருபவர்களுமாக டெல்லி மக்கள் அவரைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ‘ஆதரவற்ற பிணம்’ ஒன்றை காவல்துறையினர் எடுத்துப் போய் எரித்தார்கள் என்பதுடன் அந்தக் கதை முடிந்து போனது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் அந்த செய்தியை வெளியிடவில்லை என்றால், பிரசவத்தின் போது அந்தத் தாய் இறந்தாள் என்பதும் இதுபோன்ற சாவுகள் இன்னும் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் வெளி உலகத்துக்கு வராமலே போயிருக்கும்!

ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து பூமிக்கு கொண்டு வந்து சேர்க்கும் போது அந்தத் தாயின் உயிர் பறிக்கப்படுகிறது. இது மிகவும் கொடுமையானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இப்படித்தான் நடந்தது; இப்படித்தான் நடக்கிறது. பிரசவத்தின் போது சாகும் தாய்மாரின் எண்ணிக்கையும் குழந்தைகளின் எண்ணிக்கையும் இப்போது குறைந்திருக்கலாம். சுகாதார வசதிகள் அதிகமாக ஏழை எளிய மக்களைப் போய்ச் சேரச் சேர இந்த மரணங்களின் எண்ணிக்கை குறைகிறது. ஆனால் மழை, வெயில், வெள்ளம் எதுவாக இருந்தாலும் திறந்த வெளியிலேயே கல்யாணம் செய்து, அங்கேயே கருத்தரித்து, பிரசவித்து செத்தும் போகும் நிலையில் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை நம்மை நடுங்கச் செய்கிறது. இந்த மாதிரியான வாழ்க்கை வாழும் மக்களுடைய எண்ணிக்கை குறைவதற்கு பதில் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் அவ்வப்போது எழுகிறது.

ஆனால் யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதியம் இந்தியாவை மிகவும் பாராட்டுகிறது. 1990-ம் வருடம் இருந்த நிலையை விட இப்போது பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 59 சதவீதம் இந்தியாவில் குறைந்திருக்கிறது என்பதே அந்தப் பாராட்டுக்கு காரணம். ஒரு லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன என்றால் 1990-ல் 570 தாய்மார்கள் இந்தியாவில் பிரசவத்தின் போது உயிர் இழந்தார்கள். இந்த எண்ணிக்கை 2000-ல் 390 ஆகவும் 2005-ல் 280 ஆகவும் 2008-ல் 230 ஆகவும் குறைந்திருக்கிறது. இந்த அளவுகளின் படி 2008-ல் இந்தியாவில் பிரசவத்தின் போது உயிர் இழந்த தாய்மார்களின் எண்ணிக்கை 63000 என்கிறார் யுனிசெஃப்பின் தொடர்புத் துறையின் இந்திய தலைவர் ஏஞ்சலா வாக்கர்.

கனிமொழி குறிப்பிட்ட எண்ணுக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். கனிமொழி எடுத்துச் சொன்னது சில ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். அது தவிர, அந்த எண்ணிக்கையில் நம்முடைய கவனம் குவிவதை விட, பிரசவத்தை தாங்கக் கூடிய வலிமையை எல்லாப் பெண்களும் பெறுவதற்கு இந்திய சுகாதாரத் துறை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்பதே இங்கு முக்கியம். 2005-லிருந்து 2008-க்குள் சுகாதார வசதிகள் அதிகரித்து மக்களைப் போய் சேர்ந்ததால் பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்திருக்கிறது என்று யுனிசெஃப் தரும் விபரம் சுட்டிக் காட்டுகிறது. அந்த கால கட்டத்தில் இந்திய சுகாதார அமைச்சராக இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்பது நினைவுக்கு வருகிறது.

இப்போது சுகாதார அமைச்சராக இருக்கும் குலாம் நபி ஆசாத் பெயரை சொன்னவுடன் உங்கள் மனதில் என்ன எண்ணம் தோன்றும்? “மக்கள் இரவில் அதிக நேரம் டி.வி. பார்ப்பதால், களைப்பில் அப்படியே தூங்கி விடுகிறார்கள். இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த டி.வி.உதவுகிறது” என்று அவர் பேசியது உங்கள் நினைவில் வரக் கூடும். சுகாதார அமைச்சகம் இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 30.09.10