Friday, October 01, 2010

வளர்ச்சி என்பது யாதெனில்......

“வெள்ளிக்கிழமை லீவு போட்டுவிட்டு வியாழக்கிழமை ராத்திரியே பஸ்ஸில் ஊருக்கு வந்து விடவா?” தமிழ்நாட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு மாநிலத்தின் தலைநகரில் வேலைபார்க்கும் இளைஞன் கேட்டான். சனி, ஞாயிறு விடுமுறையை சென்னையில் எங்களுடன் கழிக்கலாம் என்பது ஏற்கனவே செய்து கொண்ட ஏற்பாடு.

மொட்டையாக கேட்கப்பட்ட இந்தக் கேள்வியில் எனக்கு தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

“என்ன விஷயம்? நீ நாளைக்கு ராத்திரி ட்ரெயினில் தானே ரிசர்வ் செய்திருந்தாய். இப்போ ஏன் சீக்கிரம் வரணும்னு நினைக்கிறாய்?” என்று சாதாரணமாகக் கேட்டேன்.

“இல்லே, நாளைக்கு அயோத்தி தொடர்பான அலாகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருது.. அது எப்படி வந்தாலும் கலவரம் நடக்கலாம்னு இங்கே ஒரே பரபரப்பா இருக்கு.. அதனால நாளைக்கு வரை காத்திருக்காம இன்னிக்கே ஊருக்கு போறவங்க போயிடுங்கன்னு ஆபீஸ்ல பேசிக்கறாங்க. அதுதான் கேட்டேன்,” என்றான்.

பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் பல நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் வார இறுதியை குடும்பத்துடன் கழிப்பதற்காக முன்கூட்டியே சென்னைக்கு டிக்கெட் எடுத்திருந்தார்கள். இன்னும் எத்தனையோ காரணங்களுக்காக எத்தனையோ லட்சம் பேர் கடந்த 24-ம் தேதி பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்திருப்பார்கள். அவர்களும், அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் கடந்த 23-ம் நாள் இதுபோன்ற மன அழுத்தத்தை அனுபவித்திருப்பார்கள்.

மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதால் யாரும் பதற்றம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைதி காக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தீர்ப்பு எப்படி இருந்தாலும், இந்து இயக்கங்களும் முஸ்லீம் அமைப்புகளும் தங்கள் தரப்பு தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி கோரியிருந்தன. இருந்தாலும் நம்முடைய மனிதர்களுக்கு சக மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லை. அந்த இளைஞன் கேட்டது சாதாரண கேள்விதான். ஆனால் அந்தக் கேள்விக்கு என்னால் உடனடியாக பதில் சொல்ல இயலவில்லை என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

என்ன பதிலை அந்த இளைஞனுக்கு சொல்வது? நிமிட நேரத்தில் அலையலையாய் கேள்விகள் எழுந்தன. பெங்களூரிலோ, ஹைதராபாத்திலோ, மதரீதியான மோதல்கள் வராது என்று யாரேனும் வாக்குறுதி கொடுக்க முடியுமா? சமூகத்தை மதரீதியாக பிளவுபடுத்தும் சக்திகள் அங்கு அரசியல்ரீதியாகவும் வலுவாக இருக்கும்போது எப்போது என்ன நடக்கும் என்று யாரால் சொல்ல முடியும்? நம்முடைய ரயில்களில் குண்டு வெடிக்காது என்ற உத்தரவாதத்தை தரும் நிலையில் நம்முடைய அரசாங்கங்கள் இருக்கின்றனவா? பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுகள் சிறப்பாக செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் நம்முடைய வழக்கில் இருக்கும் “கள்வன் பெரிதா காப்பான் பெரிதா” என்ற கேள்வியின்படி, ஒரு சில சமயங்களில் கள்வன் பெரியவனாகி விட்டால், விளைவுகள் மோசமாகி விடுமே!

தமிழ்நாட்டில் மதக் கலவரம் வருவதற்கு வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக அசம்பாவிதங்கள் நடக்காது என்று சொல்ல முடியுமா? தஞ்சாவூர் போகவிருந்த பயணத்திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ரத்து செய்திருக்கிறாரே? அவர் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை கண்காணித்து உத்தரவிடுவதற்காக தலைநகரில் இருக்க வேண்டும் என்ற முடிவில் பயணத்தை ரத்து செய்திருப்பார். தகவல் தொடர்பு ‘புரட்சி’க்குப் பிறகு தஞ்சாவூராக இருந்தால் என்ன, சென்னையாக இருந்தால் என்ன, எங்கிருந்தும் தான் செயல்பட முடியுமே, பிறகு ஏன் அவர் பயணத்தை ரத்து செய்தார்? நாடு முழுக்க ஒரு பதற்றத்தில் இருக்கும்போது அவர் ஒரு விழாவைக் கொண்டாடப் போய்விட்டார் என்று எதிர்க்கட்சிகள் அவரை உலுக்கி விடுவார்கள் என்பதால் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாம் என்று அவர் ரத்து செய்திருப்பார்; இப்படி எல்லாம் எண்ணங்கள் ஓடின.

கடைசியாக என்ன நடந்தது? அடுத்த நாள் அலாகாபாத் உயர்நீதிமன்றக் கிளை அயோத்தி தொடர்பான தீர்ப்பு அளிக்கவில்லை. முந்தைய நாளே உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. அலாகாபாத் நீதிமன்றம் வெளியிட இருக்கும் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஹெச்.எல்.கோகலே ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அதைத் தொடர்ந்து அலாகாபாத் நீதிமன்றம் ஒரு வாரம் தீர்ப்பை வெளியிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் 24-ம் தேதி தீர்ப்பு வெளியாகவில்லை!

ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் நம்பிக்கையுடன் பேசுகிறார். நாம் கொண்டிருக்கும் அவநம்பிக்கையும் எதிர்மறை உணர்வும் அவரிடத்தில் இல்லை. “தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஏன் கருதுகிறீர்கள்? தீர்ப்பு வரட்டும்! ஏதாவது ஒரு பக்கத்துக்கு சாதகமாக... எப்படியும் மேல் முறையீட்டில் இந்த வழக்கு இங்கு வந்துவிடும். தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மக்கள் முதிர்ச்சி அடையவில்லை என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?” என்று அவர் மனுதாரர் தரப்பைக் கேட்கிறார். மற்ற நீதிபதியான கோகலே வேறுவிதமாக பேசுகிறார். “ இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உங்களைவிட இதில் தொடர்பில்லாதவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். எதிர்த்தரப்பினர் இருவரும் சேர்ந்து தீர்ப்புக்கு தடை விதிக்காதீர்கள் என்று சொல்கிறீர்கள். இதே ஒற்றுமையை கோர்ட்டுக்கு வெளியில் சமாதானமாகப் போவதில் காட்டலாமே.. உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளித்து அதனால் ஏதாவது நடந்தால், நீங்கள் முதலில் எங்களைத் தான் குற்றம் சாட்டுவீர்கள்” என்று அவர் சொல்லி இருக்கிறார். எத்தனை வழக்குகளில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் ஆட்சியை விட்டு விலகுங்கள் என்று மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் நெறிப்படுத்தியது? எத்தனை முறை சட்டத்தின் பார்வையில் எது சரி, எது நீதி என்று சொல்வதுதான் நீதிமன்றத்தின் பணி என்று திட்டவட்டமாகச் சொன்னது? இப்போது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரே சொல்கிறார்!

இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு 28-ம் தேதி உச்சநீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது. இந்த சர்ச்சையில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்ட தரப்பினரை விசாரணையில் கலந்து கொள்ள வரும்படி நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. மத்திய அரசின் கருத்தையும் தெரிந்து கொள்ள வசதியாக ’அட்டார்னி ஜெனரலையும்’ கோர்ட்டில் அன்று இருக்க வேண்டும் என்று பணித்திருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? இந்த வழக்கில் ஒரு தரப்பாக மத்திய அரசு இதுவரை இல்லை. இப்போது அட்டார்னி ஜெனரல் அங்கு இருக்க வேண்டும் என்றால், அவர் மூலமாக மத்திய அரசு தன்னுடைய நிலையை தெளிவுபடுத்தலாம். அந்த ஒரு நாளில் எல்லா தரப்பினரையும் விசாரித்து அவர்களுடைய கருத்துக்களை அறிந்து, உச்சநீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பை வழங்கி விடுமா?

அப்படி வழங்கி விட்டால், அலாகாபாத் நீதிமன்றம் அடுத்த இரு நாட்களில், அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள், ‘சர்ச்சைக்குரிய’ இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பை அளித்துவிட முடியும். ஒருவேளை 28-ம் தேதியுடன் உச்சநீதிமன்ற விசாரணை முடியாமல் வேறு ஒரு நாளுக்கு விசாரணை தொடர வேண்டியிருந்தால் நிலைமை என்னாகும்? அலாகாபாத் தீர்ப்பு இப்போதைக்கு வராது. ஏனென்றால் அலாகாபாத் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான தரம் வீர் சர்மா வரும் அக்டோபர் முதல் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெறுவதற்குள் அந்த பெஞ்ச் தீர்ப்பளிக்க வேண்டும். இல்லை என்றால் விசாரணை முதலில் இருந்து வேறு ஒரு நீதிபதியுடன் தொடங்க வேண்டும். ஒரு சிக்கலுக்கு தீர்வு காணாமல் ஆறப்போடுவதே அந்த சிக்கலுக்கான சிறந்த தீர்வு என்பது முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் அணுகுமுறை. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமும் அதே அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறதோ என்று தோன்றுகிறது!

அதேசமயம் சில சிக்கல்களுக்கு நீதிமன்றங்களில் தீர்வே கிடையாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தாரா என்பதை எந்த நீதிமன்றம் எந்த சட்ட அடிப்படையில் முடிவு செய்ய முடியும்? இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தவில்லை என்பதால் அது வழிபாட்டுத் தலம் இல்லை என்றோ, அதனால் அவர்களுக்கு அதில் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றோ ஒரு நீதிமன்றம் எப்படி சொல்ல முடியும்? எத்தனையோ காரணங்களால் நாம் பிளவுபட்டு நிற்கிறோம்; இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை சாதி நம்மைப் பிரிக்கிறது; மதம் நம்மை மோதச் செய்கிறது; பொருளாதார ஏற்றத்தாழ்வு நமக்குள் இணைய முடியாத இடைவெளியை உருவாக்குகிறது; மொழி, இனம், நாடு போன்ற காரணிகளும் உலகில் மக்களை தீர்க்க முடியாத சிக்கலிலும் போரிலும் தள்ளுகின்றன. இவை எல்லாவற்றையும் படைத்த இறைவன் மோதல்களுக்குக் காரணமாக இருக்கலாமா? ”எல்லா நதிகளும் கடலில் சென்று கலப்பதைப் போல, எல்லா மனிதர்களும் கடைசியில் ஒரே இறைவனைச் சென்றடைகிறார்கள்” என்று சிலர் சொல்வதை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவராலும் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?

கடவுள் எங்கே இருக்கிறார்? 13-ம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஜலாலுதீன் ரூமி இதைப் பற்றி எழுதி இருக்கும் புத்தகத்தை உத்தமர் காந்தி படித்திருக்கிறார். அந்த நூலுக்கு ‘இந்தியன் ஒப்பினியன்’ இதழில் விமர்சனம் எழுதி இருக்கிறார். “நான் கடவுளை சிலுவையில் தேடினேன்; கண்டறிய முடியவில்லை. கடவுளைத் தேடி நான் கோவிலுக்குப் போனேன்; அங்கும் அவர் இல்லை. எந்த மலையிலும் குகையிலும் அவர் இருப்பதாகத் தெரியவில்லை. கடைசியாக என்னுடைய இதயத்தைத் தேடினேன்; அங்கே அவர் இருந்தார். ஒவ்வொரு மனிதனின் இதயத்தில் மட்டும் தான் கடவுள் இருக்கிறாரே தவிர வேறெங்கும் அவர் இல்லை” என்ற ரூமியின் வரிகளை காந்தி மிகவும் போற்றுகிறார். “இந்த புத்தகத்தை நான் ஒவ்வொருவருக்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்துக்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் பயனளிக்கும் நல்ல நூல் இது” என்ற பரிந்துரையுடன் அந்த விமர்சனத்தை காந்தி முடிப்பதாக வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

13-ம் நூற்றாண்டின் கவிஞர் சொன்ன கருத்தின் அளவு கூட 21-ம் நூற்றாண்டு மனிதர்களாகிய நாம் வளரவில்லை என்றால், நாம் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கும் வளர்ச்சிக்கு என்ன அர்த்தம் இருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 03.10.10

1 Comments:

At 2:15 PM, Blogger mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty

 

Post a Comment

<< Home