Monday, October 11, 2010

யாரைத்தான் நம்புவதோ?

அடுத்து வரும் தேர்தலில் நாம் வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கப் போகிறோமா அல்லது வாக்குச் சீட்டில் வாக்களிக்கப் போகிறோமா என்ற கேள்வி சிலரிடம் இருக்கிறது. ஏனென்றால் வாக்குப் பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. தேர்தல் ஆணையம் இந்தப் புகார்களுக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது வேறு விஷயம். சிலர் அவர்களுடைய தொகுதியில் கிரிமினல்கள் தேர்தலில் நின்று வெற்றி பெறக் கூடாது என்று கவலைப்படுகிறார்கள். இன்னும் சிலர் தேர்தல்களின் போது புழங்கும் பணத்தின் வலிமையைப் பார்த்து ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை இழக்கிறார்கள். இன்னும் பலர் ஊடகங்களில் வரும் செய்திகளையே நம்பலாமா நம்பக் கூடாதா என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறார்கள். ஏனென்றால் வேட்பாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சில ஊடகங்கள் அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுகின்றன என்றும் அவ்வப்போது கண்டனக் குரல்கள் எழுகின்றன.

இந்த சந்தேகங்களை எல்லாம் யாரால் போக்க முடியும்? இப்படி எல்லாம் நடக்காமல் இருப்பதற்கு யார் முன்முயற்சி எடுக்க வேண்டும்? இது போன்ற கண்டனங்களும் புகார்களும் எழுவதற்குக் காரணமாக யார் இருக்கிறார்கள்? எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி செல்கின்றன என்று சொல்வதைப் போல ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் செயல்களைச் செய்பவர்கள் நம்முடைய பிரதிநிதிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் விதிகளை மீறாமல் ஒழுங்காக நடந்து கொள்கிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் முறையாக தேர்தல்களை நடத்தவும் இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படையிலான சுதந்திரமான அமைப்பாக தேர்தல் ஆணையம் இருக்கிறது. அந்தத் தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது என்றால், இந்தியத் தேர்தல் முறைகளில் ஆரோக்கியமான ஒரு மாற்றம் வந்து விடாதா என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது.

சில அறிவிப்புகள் நமக்குள் நம்பிக்கையை விதைக்கின்றன. சில அறிவிப்புகள் மிகவும் முக்கியமான பிரச்னைகள் தொடர்பானவையாக இருந்தாலும் நமக்குள் ‘இது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை; நாடகம்’ என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் அக்டோபர் 4-ம் தேதி டெல்லியில் நடத்துகிறது என்ற அறிவிப்பு வந்த போது, சிலருக்கு நம்பிக்கை பிறந்திருக்கும். சிலர் அவநம்பிக்கையுடன் அந்த செய்தியைப் படித்திருப்பார்கள். கூட்டம் நடந்து முடிந்த இன்றைய சூழலில் எந்த உணர்வு சரியானது என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். கடந்த அக்டோபர் 4-ம் நாள் திட்டமிட்டபடி அந்தக் கூட்டம் ‘இனிதே’ நடந்து முடிந்தது. மூன்று மணி நேரம் நடந்து முடிந்த அந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பேசினார்கள். தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதைத் தடுப்பது, பணபலம் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்து நிறுத்துவது, வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுவது குறித்து எழுந்திருக்கும் புகார்கள், ஊடகங்களில் பணம் கொடுத்து ‘செய்திகள்’ வரவழைப்பது குறித்த பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்தார்கள்.

கூட்டம் எவ்வளவு நேரம் நடந்திருக்கிறது? மூன்று மணி நேரம்! எத்தனை கட்சிகள் கலந்து கொண்டன? இந்த எண்ணிக்கை செய்திகளில் கிடைக்கவில்லை என்றாலும், ஒரு வாதத்துக்காக குறைந்த எண்ணிக்கையாக நான்கு என்றே வைத்துக் கொள்வோம். ஏனென்றால், கூட்டத்தில் என்ன நடந்தது என்று காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளின் பிரமுகர்கள் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார்கள். எத்தனை பிரச்னைகள் குறித்து பேசினார்கள்? குறைந்த பட்சம் 4 சிக்கல்களைப் பற்றி கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரச்னையும் எவ்வளவு ஆழமாக நம்முடைய தேர்தல்களில் புரையோடிப் போய் இருக்கிறது? அதை நீக்குவதற்கு அல்லது தடுப்பதற்கு ஆலோசனை செய்வதற்கான கூட்டம் மூன்று மணி நேரம் மட்டுமே நடந்தால், அங்கு என்ன கலந்தாலோசனை நடந்திருக்கும்?

சரி அதை விடுங்கள். கூட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்னை குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதா? வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து இந்த முக்கியமான நான்கு தேசிய கட்சிகளும் ஒருமித்த கருத்தில் இருப்பதாகவே தெரிகிறது. வாக்குப் பதிவுக்கு ஒரு ரசீது கேட்கிறது பாஜக. இடதுசாரிகள் எந்திரத்தின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார்கள். மேலே குறிப்பிட்டிருக்கும் நான்கு பிரச்னைகளும் இந்திய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கிக் கொண்டு இருக்கின்றன. இவர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள்!

இந்திய ஜனநாயகத்தின் ஆணிவேர் நாம் நடத்தும் தேர்தல். அரசாங்க நிர்வாக அதிகாரத்துக்கு உயிர்க்காற்று நம்முடைய தேர்தல். அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒரு வாக்கு என்ற தேர்தல் முறையை உருவாக்கினார்கள். பணக்காரர்களுக்கும் ‘உயர்’சாதியினருக்கும் படித்தவர்களுக்கும் நகர்ப்புற மக்களுக்கும் மட்டும் வாக்குரிமையை கொடுக்கவில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை என்பது அனைத்து மக்களையும் பங்கேற்கச் செய்யும் சிறந்த ஒரு அரசியல் நடவடிக்கை. ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்களோ, அந்த ஜனநாயக அடிப்படைகளை நாம் இன்று காத்திருக்கிறோமா என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நம்முடைய தேர்தல்களில் யாரும் நிற்கலாம். ஏழை என்றும் பணக்காரன் என்றும் வேறுபாடு இல்லை. பிறப்பால் உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் வித்தியாசம் இல்லை. இப்படி எல்லாம் நாம் ‘பெருமைப்படுகிறோம்’. ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமாகி இருக்கிறதா? தேர்தல் ஆணையத்துக்கு வேட்பாளர்கள் கொடுக்கும் கணக்குகளை விடுங்கள். உங்கள் பார்வையில் உங்கள் தொகுதியில் ஒரு வேட்பாளர் செலவழிக்கும் தொகை எவ்வளவு என்று உங்களால் ஊகிக்க முடியாதா என்ன? பெரும்பாலான அரசியல் கட்சிகளில் கட்சிக்கு ‘பெட்டி’ கொடுப்பவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக முடியும். தலைவர்களுக்குப் பெட்டி தூக்கும் சிலருக்கு அபூர்வமாக வாய்ப்புகள் கிடைக்கலாம். பெட்டியும் கொடுத்து பெட்டி தூக்கவும் தயாராக இருந்தால், அவர்களுக்கு விசுவாசி என்ற பட்டத்துடன் பல பதவிகள் தேடி வரக் கூடும்!

அடுத்ததாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேர்தலில் போட்டியிடத் தடைசெய்ய வேண்டும் என்று பல வருடங்களாக தேர்தல் ஆணையம் பேசி வருகிறது. அரசியல் கட்சிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோருகிறார்கள். இயற்கை நீதி என்ற அடிப்படையில் பார்த்தால் இந்த வாதம் நியாயமானதே. ஆனால் இந்த நியாயத்தை விசாரணைக் கைதிகளாக சிறைகளில் வாடும் சாதாரண மக்களுக்கும் பொருத்திப் பார்த்து வாக்களிக்கும் உரிமையை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்று அரசியல் கட்சிகள் நினைத்துப் பார்க்கிறார்களா? பல பத்தாண்டுகளுக்கு முன்னதாக எங்கோ நடந்த ஏதோ ஒரு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களுக்கு இடையில் இந்தப் பிரச்னை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று சொல்வதில் பொருள் இல்லை. தொடர்ந்து அதற்காக இயக்கம் நடத்தி இருக்கிறோமா என்பதே முக்கியமானதாகத் தெரிகிறது.

வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து விவாதங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. முக்கியமான தேசிய கட்சிகளும் எந்திரங்களின் மீது நம்பிக்கையுடன் இருக்கின்றன. அதனால் அடுத்து வரும் தேர்தல்களிலும் எந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால் இது எந்திரங்களின் காலம் என்று விட்டு விடலாம். செய்திகளை சேகரிக்க வரும் சில செய்தியாளர்களுக்கு பணம் அல்லது பொருள் கொடுத்து சூழலைக் கெடுப்பதில் இருந்து ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை வளைத்துப் போட்டுக் கொள்வது வரை ஏராளமான வழிகளில் ‘பணம் கொடுத்து செய்தி’ வரவழைக்கும் செயல்களும் நடப்பதாக வரும் செய்திகளை மறுப்பதற்கில்லை.

தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டம் குறித்த செய்திகள் வரும்போதே பீகார் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு பற்றிய செய்திகளையும் பார்க்க முடிகிறது. காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் என்று எல்லா கட்சிகளில் இருந்தும் கிரிமினல்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு செய்தி. பணபலம், சாதிபலம் ஆகியவற்றிலும் இந்தக் கட்சிகளுக்கு மத்தியில் பெரிய வேறுபாடு இல்லை. இந்த நிலையைப் பார்க்கும்போது சமீபத்தில் பார்த்த ஒரு வீடியோ வருகிறது. தேர்வுரிமைகளில் கூட ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமான சிந்தனை நிலவுகிறது என்பதை ரஷ்யாவில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லி ஒரு பெண்மணி விளக்கி இருந்தார்.

அவர் ரஷ்யாவில் ஒரு சர்வே நடத்துவதற்காக சென்றிருந்தார். சர்வேயில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் பருகுவதற்கு மென்பானங்களை அவர் ஏற்பாடு செய்திருந்தார். “உங்களுக்கு இதோ வாய்ப்புகளை அளிக்கிறோம். நீங்கள் பருகுவதற்கு ஏழுவிதமான மென்பானங்களை வைத்திருக்கிறோம். உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்” என்று வந்தவர்களிடம் அவர் சொன்னார். “இதுவரை நீங்கள் ஒன்றே ஒன்றைத்தான் அறிந்திருப்பீர்கள். கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒரே கட்சி ஆட்சி.. அரசாங்கம் கொடுக்கும் கல்வியில் இருந்து அதுவே வழங்கும் வோட்கா வரை சந்தையில் போட்டியே இருந்திருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த உங்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்யும் வாய்ப்புகளே இருந்திருக்காது. நாங்கள் உங்களுக்கு “சாய்ஸ்” கொடுக்கிறோம்” என்று அவர் சொல்ல நினைத்திருக்கலாம்.

ஆனால் அவர் வழங்கியதை ‘தேர்வுக்குரிய வாய்ப்புகளாக’ ரஷ்யர்கள் நினைக்கவில்லை. “இல்லை.. நீங்களும் எங்களுக்கு வாய்ப்புகளை கொடுக்கவில்லை.. ஒரே பானத்தைத் தானே வைத்திருக்கிறீர்கள்?” என்றார்கள். “கோக், பெப்சி, செவன் அப், ஸ்பிரைட், டாக்டர் பெப்பர், மவுண்டன் டியூ, க்ரஷ் என்று ஏழுவிதமான பானங்களை நீங்கள் குடிப்பதற்காக கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் ’சாய்ஸ்’ இல்லை என்கிறீர்களே” என்றார் அவர். ஆனால் அவர் சொன்னதைப் போல பார்ப்பதற்கு ரஷியர்கள் பழகவில்லை. “அவை அனைத்தையும் நாங்கள் சோடா என்ற ஒரே வகையாகத்தான் பார்க்கிறோம். சோடா தவிர தண்ணீர், பால், காபி, ஜூஸ் என்று நீங்கள் எங்களுக்கு தேர்வு செய்யும் வாய்ப்பை கொடுக்கவில்லை” என்பதே அவர்களுடைய வாதமாக இருந்தது.

அந்த அரங்கத்தில் இருந்த ரஷியர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைப் போலவே நம்முடைய தேர்தலிலும் நமக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள், பணபலத்தை பயன்படுத்துபவர்கள், அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகிறவர்கள் என்றே பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. அப்படி இருக்கும்போது நம்பிக்கை வைத்து தேர்வு செய்வதற்கு நமக்கு எங்கே இருக்கிறது ‘சாய்ஸ்’?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 14.10.10

0 Comments:

Post a Comment

<< Home