Friday, October 22, 2010

மரணபயம் அவர்களுக்கு இல்லை!


”அந்தக் காலத்தில் எல்லாம் நீதிமன்றத் தீர்ப்புகளை பற்றி ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச மாட்டாங்க.. இப்போ பார்த்தா தீர்ப்பு பற்றிய செய்தி வரும்போதே அதிருப்திக் குரல்களும் சேர்ந்துதான் வருது!” எனக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்த பெரியவர் சொன்னதைத் தொடர்ந்து அவருடன் வந்தவர்கள் அவர்களுடைய கருத்தைச் சொல்ல ‘வாக் தி டாக்’ அனல் பறந்தது. அவர்கள் விடிந்தும் விடியாத காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருப்பவர்கள்; உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும் பேசிக் கொண்டே நடப்பார்கள்; அலுவலகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், குடும்பத்தில் வரும் சிரமங்கள், அரசியல் சிக்கல்கள் என்று எதையுமே அவர்கள் விட்டுவைப்பதில்லை. சில செய்திகளை ஊடகங்கள் எப்படிக் கையாள்கின்றன என்று ஆளாளுக்கு மீடியாவைத் தினமும் திட்டுவார்கள் என்பது தனிக்கதை!

நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சனம் இல்லாமல் ஏற்றுக் கொள்வதெல்லாம் கடந்த கால செயல் என்று அவர்கள் பேசிக் கொண்டு போனது அயோத்தி விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பு வழங்கியதற்கு அடுத்த நாள். அதன் பிறகு வந்த சில தீர்ப்புகள் விஷயத்திலும் அதைப் போலவே அதிருப்தி குறித்த செய்திகளைப் பார்க்க முடிந்தது. அதாவது நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதை மறுத்து தனிமனிதர்களும் அரசும் கருத்துத் தெரிவிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதில் தவறு எதுவும் இல்லை என்பதை ‘நடைப்பயிற்சியில்’ இருந்த பெரியவர்களால் உணர முடியவில்லை என்றே தோன்றுகிறது. நீதிமன்றத்தை கோவிலாகவும் நீதிபதிகளை கடவுள்களாகவும் சாதாரண மனிதர்கள் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு ஒருவேளை இருக்கக் கூடும்!

உச்சநீதிமன்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று சொல்லி தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து கடந்த அக்டோபர் 8-ம் தேதி தீர்ப்பளித்தது. அந்த செய்திக்குப் பிறகு அந்த நியமன விவகாரத்தில் ‘விதிமுறைகள் பின்பற்றப்பட்டன’ என்று தமிழக அரசின் விளக்கமும் வருகிறது. டெல்லியில் 1996-ம் வருடம் ஜனவரி மாதம் பிரியதர்ஷினி மட்டூ என்ற சட்டக்கல்லூரி மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சந்தோஷ்குமார் சிங் என்னும் சக மாணவனே அந்தக் கொடூரமான செயலைச் செய்தான் என்று காவல்துறை அவனைக் கைது செய்தது. வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம் ‘குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ என்று சொல்லி விடுதலை செய்தது. டெல்லி உயர்நீதிமன்றம் அவனைக் குற்றவாளி என்று சொல்லி மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் அவனைக் குற்றவாளி என்று உறுதி செய்ததோடு, மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுத்தது. இது கடந்த அக்டோபர் ஆறாம் தேதி நடந்தது. மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் கிரிஜா வியாஸ் வருத்தம் தெரிவித்தார்!

பிரியதர்ஷினி வழக்கைப் போலவே பிரபலமான இன்னொரு வழக்கில் கடந்த அக்டோபர் 8-ம் நாள் பெங்களூரில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த 2005-ம் வருடம் டிசம்பர் மாதம் 13-ம் நாள், பெங்களூரில் ‘கால் சென்டர்’ ஒன்றில் வேலைபார்த்து வந்த பிரதிபா என்ற பெண் மாயமாக மறைந்து போனார். அவரைக் கடத்தி, அவருடன் பாலியல் வல்லுறவு கொண்டு அதன்பிறகு கொன்று விட்டதாக அவரை ‘டாக்ஸியில்’ அழைத்துச் சென்ற டிரைவர் சிவகுமார் போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டார். எந்த இடத்தில் அவருடைய உடல் போடப்பட்டது என்பதை அவர் உடன்வந்து காட்டியதாக காவல்துறை சொன்னது. இப்போது அந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. டிரைவர் சிவகுமாரின் மனைவியும் பிரதிபாவின் உறவினர்களும் தீர்ப்பு குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்!

டிரைவர் சிவகுமார் குற்றவாளி என்று அக்டோபர் ஆறாம் தேதி விரைவு நீதிமன்றம் அறிவித்தது. கொலைக் குற்றத்துக்கான தண்டனையாக சாகும்வரை சிறை என்று அக்டோபர் 8-ம் தேதி தண்டனை வழங்கப்பட்டது. கடத்தலுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் தனித்தனியாக கூடுதல் தண்டனை அளிக்கப்பட்டது. தான் நிரபராதி என்றும் அப்பாவியான தனக்கு தண்டனை கொடுப்பதன் மூலம் குற்றம் செய்யத் தூண்டிவிடாதீர்கள் என்றும் சிவகுமார் நீதிமன்றத்திலேயே சொல்லி இருக்கிறார். அவருடைய மனைவி சுமா, “என் கணவரை விடுதலை செய்யாவிட்டால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசி இருக்கிறார். 2005-ம் வருட இறுதியில் சிவகுமார் கைது செய்யப்பட்டபோது, ‘இந்தக் குற்றத்தை செய்த அவருடைய முகத்தைப் பார்க்கவே நான் விரும்பவில்லை’ என்று சுமா ஆத்திரப்பட்டார் என்பது வேறு விஷயம்!

“என் மகளோடு என் மகிழ்ச்சி எல்லாம் போய்விட்டது. அவள் பிறந்த 15-வது நாளில் என் கணவர் இறந்து போனார். அவர் இல்லாமல் தனி ஆளாக இந்தக் குழந்தையை வளர்த்தேன். அவளைக் கொன்றவனுக்கு தண்டனை கிடைத்தது என்ற வகையில் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது” என்று பிரதிபாவின் அம்மா சொல்லி இருக்கிறார். பிரதிபாவின் மாமா “இந்தத் தீர்ப்பு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இவ்வளவு கொடூரமான கொலையைச் செய்தவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என்று மனக்கசப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்! இந்த செய்தி குறித்து இணைய தளங்களில் கருத்து சொல்லும் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் மரண தண்டனை கொடுக்கப்படாமல் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டதைக் குறைசொல்லி இருக்கிறார்கள். “கண்ணுக்குக் கண் என்பதுதான் நீதி என்றால், உலகம் பார்வையற்றவர்களால்தான் நிரம்பி இருக்கும்” என்ற காந்தியின் வாசகத்தை இவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை!

மரண தண்டனை பற்றிப் பேசுவதற்கு முன்னால், இன்னொன்றை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. பிரதிபாவின் மரணம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்களுடைய பணி நிலைமைகளில் பெரும் மாறுதலைக் கொண்டு வந்தது. இன்று அதன் பலனை அனுபவிக்கும் இளம்பெண்கள் பிரதிபாவை அறிந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. பணி முடிந்து பெண்களை வீட்டில் கொண்டு வந்து விடும் கார்களை சில கம்பெனிகள் தொடர்ந்து கண்காணிப்பதும், ஒரு காரில் கடைசியாக கொண்டுவிடப்படும் நபர் பெண்ணாக இல்லாமல் இருப்பதும் இன்று நடைமுறையாகி இருக்கிறது. இதற்கு பிரதிபாவின் உயிர்த்தியாகமே காரணம்! அதேசமயம் பிரதிபாவின் கொலையைத் தொடர்ந்து இரவுநேரத்தில் பெண்களுக்குப் பணி கொடுக்கப்படக் கூடாது என்றும் கோரிக்கைகள் எழுந்தன. தொழில் நிறுவனங்களின் தேவையின் முன்னால் அந்தக் கோரிக்கை எடுபடாமல் போனது!

பிரதிபா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பல பெண்கள் வன்புணர்ச்சிக்குப் பிறகு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்குகளில் மரணதண்டனையே குற்றவாளிக்கு அல்லது குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற உணர்வு மக்கள் மத்தியில் அதிகரிப்பதாகவே தெரிகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த தனஞ்செயன் சாட்டர்ஜி என்பவர் 14 வயது சிறுமியுடன் வல்லுறவு கொண்டு கொலை செய்த குற்றத்துக்காக 2004-ல் தூக்கில் இடப்பட்டார். குற்றம் செய்பவர்களுக்கு அச்சுறுத்தலாக மரண தண்டனை இருக்கும் என்று மரண தண்டனைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் சொல்கிறார்கள். ஆனால் தனஞ்செயன் சாட்டர்ஜி தூக்கில் இடப்பட்டதற்குப் பிறகு வந்திருக்கும் ஏராளமான வல்லுறவு வழக்குகளைப் பார்க்கும்போது, குற்றங்களைத் தடுக்கும் கருவியாக மரணதண்டனை இல்லை என்ற எண்ணமே வலுப்படுகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home