எங்கும் நிறைந்த ஊழல்
அந்தச் சிறுவனுக்கு சினிமாவுக்குப் போக வேண்டும் என்று ஆசை. அம்மாவிடம் அதற்கான பணத்தைக் கேட்டான். ஏற்கனவே அவன் சினிமா பார்த்துவிட்டு வந்து அதிக நாட்களாகவில்லை. அதற்குள் இன்னொரு சினிமாவா என்று அம்மா தேவை இல்லாத செலவைச் சுட்டிக் காட்டினார். ஆனால் அந்தப் பையனின் மனதில் ஆசை வந்துவிட்டது. ”இது எம்.ஜி.ஆர்.சினிமா. இதை நான் அவசியம் பார்க்க வேண்டும்” என்று பிடிவாதம் காட்டினான். தன்னுடைய வலது கைகளில் சுற்றி இருந்த சேலைத் தலைப்பை அந்த அம்மா விலக்கினார். வலது உள்ளங்கைகளில் காய்த்துப் போன கொப்புளங்கள். ஒன்றிரண்டு உடைந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தன. “இவ்வளவு கஷ்டப்பட்டு நான் வேலை பார்க்கிறேன். நீ சினிமா சினிமா என்று அலையறியே” என்ற ரீதியில் மனவேதனையை அவர் வெளிப்படுத்தினார். அந்தப் பையன் ஆயிரம் சவுக்குகளால் அடித்த உணர்வைப் பெற்றான். அப்போது சினிமா பார்க்கப் போகவேண்டும் என்ற எண்ணத்தையும் கைவிட்டான்.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல. நடிகர் சிவகுமார் தான்! கடந்தவாரம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘அம்மா,மனைவி,மகள்’ என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சின் சில பகுதிகளை மறுஒளிபரப்பு செய்தார்கள். அது ஒரு தனிமனிதனின் அனுபவங்களாக இருந்தாலும் அவற்றில் இருந்து பொதுவான பாடங்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. எளிமையான வார்த்தைகளில் சிவகுமார் போகிற போக்கில் பேசிப் போன பல சம்பவங்கள் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கு அடிப்படையாக இருந்தன. அவற்றில் ஒன்றுதான் மேலே சொல்லப்பட்ட சம்பவம்!
இந்த சம்பவம் ஏன் இப்போது எடுத்துக்காட்டாகிறது?கடந்த வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்த செய்தியே இந்த சம்பவத்தை நினைவுபடுத்தியது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலை எப்படி ஒழிப்பது என்று மூத்த வழக்கறிஞர் வேணுகோபாலிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை கேட்டார்கள். “நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இருக்கும் பாடத்திட்டங்களில் நல்ல நெறிகளை போதிக்கச் செய்தால் எதிர்கால சந்ததியினர் ஊழல் இல்லா சமூகத்தை உருவாக்குவார்கள்” என்று அவர் பதில் சொன்னார். அதாவது சிவகுமாருக்கு இளம்வயதில் அவருடைய அம்மா உழைப்பின் மதிப்பை உணர்த்தியதைப் போல, நல்ல கருத்துகளையும் பழக்கங்களையும் சிறுவர்களிடம் ஊட்டிவிட வேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்துகிறார். அவர் சொல்வது ஒன்றும் புதிதல்ல!
நம்முடைய குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்த போது பள்ளி மாணவர்களிடம் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார். அதாவது இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்தாலும், பிரதமரின் உதவியுடன் அரசு இயந்திரத்தை ஊழல் ஒழிப்புக்கு பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருந்த போதிலும், ஊழலை ஒழிப்பதற்கு அப்துல் கலாம் குழந்தைகளையே நாடினார். ஊழல் நிறைந்த அரசு எந்திரத்தை ஊழலை ஒழிப்பதற்கு பயன்படுத்த முடியாது என்று ஒருவேளை அவர் உணர்ந்திருக்கக் கூடும்! தங்களுடைய அப்பாவும் அம்மாவும் லஞ்சம், ஊழல் நடவடிக்கைகளில் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
கர்நாடகாவில் கனிம வளச் சுரண்டல், ஒரிசாவில் நிலக்கரி ஊழல், மத்தியில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு, ரயில்வேயில் வேலைக்கு ஆள் எடுப்பதில் ஊழல், என்று விசாரணைகளும் வழக்குகளும் புகார்களும் குற்றச்சாட்டுகளும் நாம் தினமும் பார்க்கும் செய்திகளாக இருக்கின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான செய்திகள் ஊழலை அன்றாட நிகழ்வாக ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரையும் கூட எரிச்சல் கொள்ள வைத்தன. சில மாதங்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் ஊழல் பற்றி எழுத வேண்டியதிருக்கிறதே என்று பத்தியாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்குள் புதிய ஊழல்கள் குறித்த செய்திகள் குவிந்து விடுகின்றன!
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வேணுகோபாலிடம் ஆலோசனை கேட்ட நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூவும் டி.எஸ்.தாக்கூரும் ஒரு ‘வேண்டுகோளையும்’ அரசுக்கு விடுத்திருக்கிறார்கள். “ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவு லஞ்சம் என்று அரசே நிர்ணயித்து அறிவித்து விட்டால், அந்தக் ‘கட்டண விபரம்’ சாதாரணக் குடிமகனுக்குத் தெரிந்துவிடும். இதனால் பேரம் பேசுவதில் தேவையற்ற நேரம் வீணாவதைத் தடுக்க முடியும்” என்ற ரீதியில் கிண்டலாக வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீதிபதிகளுக்கு அரசைக் கிண்டல் செய்யும் உரிமை இருக்கிறதா என்று பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் அறிவுறுத்தல்களை வெளியிடலாம். ஆனால் ஒரு செய்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் போதெல்லாம் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உணர்ச்சிவசப்படுகிறார் என்பதே அது!
கடந்த 2007-ம் வருடம் மார்ச் மாதம் ஒரு வழக்கை விசாரிக்கும்போது “ஊழல் செய்பவர்களில் சிலரை விளக்குக் கம்பத்தில் தொங்கவிட்டுக் கொல்ல வேண்டும். இது ஒன்றுதான் ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்கும் ஒரே வழி” என்று சொன்னார். “நம்முடைய நாட்டில் ஊழல் எங்கும் நிறைந்து இருக்கிறது. ஊழல் இல்லாத இடமே இல்லை. எல்லோரும் நாட்டைக் கொள்ளை அடிக்கவே விரும்புகிறார்கள். சில ஊழல் பேர்வழிகளை பொதுமக்கள் பார்வையில் விளக்குக் கம்பத்தில் கட்டி தூக்கில் போட்டால்தான் மற்றவர்களுக்கு மனதில் பயம் வரும். ஆனால் இதைச் செயல்படுத்த நம்முடைய சட்டத்தில் இடம் இல்லை. சட்டத்தில் இடம் இருந்தால் அதற்கே நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்” என்று அப்போது சொல்லி இருந்தார். மூன்றரை வருடங்களுக்குப் பிறகு இப்போது அரசாங்கமே ‘அதிகாரபூர்வமாக அங்கீகரித்து விதிமுறைகளை அறிவித்துவிடலாம்’ என்று சொல்லி இருக்கிறார். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வரும் விரக்தியும் வேதனையும் அவருக்கும் வந்துவிட்டது போலிருக்கிறது!
அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் இந்த ‘ஊழல்’ என்ற நோய் தாக்கியதாகத் தெரியவில்லை. நீதித்துறையையும் அது கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருவதாக பல செய்திகள் சொல்கின்றன. தலைமை நீதிபதிகள் பதவி ஏற்கும் போதெல்லாம் நீதித்துறையில் நடக்கும் சில முறைகேடுகளைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சொல்கிறார்கள்! கடந்த செப்டம்பர் மாதம் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் நடத்திய கணிப்பு ஒன்றின் முடிவுகளைப் பாருங்கள். இந்திய நீதித்துறையில் ஊழல் இருக்கிறதா என்ற கேள்விக்கு 91% பேர் ஆம் என்றும், 7% பேர் இல்லை என்றும் 2% பேர் கருத்தில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். அதே நாளில் ‘தி பயனியர்’ நாளிதழ், ‘இந்திய நீதித்துறை ஆன்ம சோதனை செய்து கொள்ள வேண்டுமா’ என்ற கேள்வியை முன்வைத்தது. அதற்கு 98% மக்கள் ஆம் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். இந்திய அரசின் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண் ஓர் ஆங்கில இதழில் கட்டுரை எழுதினார். 16 இந்தியத் தலைமை நீதிபதிகளில் 8 பேர் தவறு செய்தவர்கள் என்றும் 6 பேர் நேர்மையானவர்கள் என்றும் மீதி இருவரைப் பற்றி தனக்குத் தெரியவில்லை என்றும் எழுதி இருந்தார். அதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுத்திருப்பதாக ஒரு செய்தியையும் நீங்கள் படித்திருக்கக் கூடும்!
அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது கடவுளா என்றால் கூட ‘இல்லை’ என்று சிலர் சொல்லலாம். ஆனால் இந்தியாவில் தூணிலும் துரும்பிலும் ஊழல் இருக்கிறது என்று சொன்னால் அதை மறுப்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் போலிருக்கிறது!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
0 Comments:
Post a Comment
<< Home