Friday, October 01, 2010

உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து..

“அந்த எண்ணிக்கையைப் பார்த்தால் பயமும் பீதியும் ஏற்படுகிறது” என்று கவிஞர் கனிமொழி பேசி இருக்கிறார். நாகர்கோவிலில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் பேசும்போது அவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். எந்த எண்ணிக்கை அவருக்கு பயத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றன? அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துக்களில் பலியாகும் அப்பாவிப் பயணிகளின் எண்ணிக்கையா? துணை ராணுவத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் நடக்கும் மோதலில் பலியாகும் அனைத்து தரப்பு மக்களின் கூட்டுத் தொகையா? அன்றாடம் செய்தித் தாள்களில் வெளியாகும் முதியவர்கள் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களா? அதே கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசும்போது “ஒவ்வொரு நாளும் பத்திரிகையைப் படிப்பதற்கு கை நடுங்குகிறது; இத்தனை பேர் இறந்தார்கள், இத்தனைபேர் கொல்லப்பட்டார்கள், இத்தனை பேர் காயம்பட்டார்கள், இத்தனை வீடுகள் கொளுத்தப்பட்டன என்ற செய்திகள் காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கின்றன” என்று அவர் காஷ்மீர் வன்செயல்கள் பற்றி சுட்டிக் காட்டி இருக்கிறார்.

ஆனால் ‘பயமும் பீதியும் ஏற்படுகிறது’ என்று கனிமொழி குறிப்பிட்டுப் பேசியது காஷ்மீர் பிரச்னை பற்றி அல்ல. “பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டால் ராணுவத்தில் சேர்ந்து போருக்கு போகிறீர்களா என்று கேட்கிறார்கள். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்த போரில் 1853 பேர் இறந்தார்கள். ஆனால் இந்தியாவில் பிள்ளை பெற்றுக் கொள்ளும்போது உயிர் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? ஒரு வருடத்துக்கு 80 ஆயிரம் பேர். இந்த எண்ணிக்கையைப் பார்த்தால் பயமும் பீதியும் ஏற்படுகிறது” என்று ஒரு அடிப்படையான பிரச்னையைத் தொட்டுப் பேசி இருக்கிறார். சவால்களும் வசைகளும் குற்றச்சாட்டுகளும் மோதல் உணர்வை உசுப்பிவிடும் மேலோட்டமான பிரச்னைகளும் மட்டுமே பல அரசியல் பொதுக் கூட்டங்களில் பேசுபொருளாக போய்விட்ட இன்றைய சூழலில், கனிமொழி முக்கியமான ஒரு பிரச்னையை கோடிட்டுக் காட்டி இருக்கிறார்!

சில வாரங்களுக்கு முன்னால் டெல்லியில் இருந்து வருகிற ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ என்ற ஆங்கில நாளிதழில் அந்த செய்தியை வெளியிட்டிருந்தார்கள். “அவள் பெற்றெடுத்தாள்; இறந்தாள். டெல்லி அவளைக் கடந்து சென்றது” என்ற தலைப்பில் தெருவோரம் குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு செத்துப் போன ஒரு தாயைப் பற்றிய செய்தியைப் போட்டிருந்தார்கள். நம்முடைய முதலமைச்சர் சொன்னதைப் போல சில செய்திகளைப் படிக்கும்போது கை நடுங்குகிறது; வேறு செய்திகளைப் படிக்கும்போது மனம் கொதிக்கிறது; இன்னும் சில செய்திகளைப் பார்க்கும்போது அவமானத்தில் கூனிக் குறுக வேண்டியிருக்கிறது!

டெல்லியில் கொட்டிய மழையில் வீடுகளே மிதக்கும்போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக கட்டிடங்களை கட்ட வந்தவர்களுடைய இருப்பிடங்கள் என்ன கதிக்கு ஆளாகி இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான். அப்படி தனியான இருப்பிடங்களும் இல்லாமல் வேலை செய்யும் இடங்களிலேயே ஒட்டிக் கொண்டு இருப்பவர்களில் அந்தப் பெண்ணும் ஒருவர். அவர் ஒன்பது மாத கர்ப்பிணி. சேறும் சகதியுமாக கிடக்கும் அந்த மணலில் அவர் படுத்துக் கிடக்கிறார். அவருடைய தோற்றம் ஆரோக்கியமாக இல்லை. பெருத்திருந்த வயிற்றின் மேல் ஈக்கள் கூட்டம் மொய்த்துக் கிடக்கிறது. நாய்கள் அவரைச் சுற்றுகின்றன. டெல்லியின் கனாட் ப்ளேஸ் பகுதியில் இருக்கும் சங்கர் மார்க்கெட் என்ற இடத்தில் அவர் தரையில் கிடக்கிறார்.

எந்த வித வசதியும் இல்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் அவரே குழந்தையை பெற்றெடுக்கிறார். அவருடைய அவலமான நிலையைப் பார்த்து அருகில் வந்த பெண்ணிடம் குழந்தையை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகிறார். பிறகு அந்தப் பெண் இறந்து போகிறாள். வேலைக்குப் போகிறவர்களும் கடைகளில் பொருட்கள் வாங்க வந்தவர்களும் பொழுதுபோக்க வருபவர்களுமாக டெல்லி மக்கள் அவரைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ‘ஆதரவற்ற பிணம்’ ஒன்றை காவல்துறையினர் எடுத்துப் போய் எரித்தார்கள் என்பதுடன் அந்தக் கதை முடிந்து போனது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் அந்த செய்தியை வெளியிடவில்லை என்றால், பிரசவத்தின் போது அந்தத் தாய் இறந்தாள் என்பதும் இதுபோன்ற சாவுகள் இன்னும் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் வெளி உலகத்துக்கு வராமலே போயிருக்கும்!

ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து பூமிக்கு கொண்டு வந்து சேர்க்கும் போது அந்தத் தாயின் உயிர் பறிக்கப்படுகிறது. இது மிகவும் கொடுமையானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இப்படித்தான் நடந்தது; இப்படித்தான் நடக்கிறது. பிரசவத்தின் போது சாகும் தாய்மாரின் எண்ணிக்கையும் குழந்தைகளின் எண்ணிக்கையும் இப்போது குறைந்திருக்கலாம். சுகாதார வசதிகள் அதிகமாக ஏழை எளிய மக்களைப் போய்ச் சேரச் சேர இந்த மரணங்களின் எண்ணிக்கை குறைகிறது. ஆனால் மழை, வெயில், வெள்ளம் எதுவாக இருந்தாலும் திறந்த வெளியிலேயே கல்யாணம் செய்து, அங்கேயே கருத்தரித்து, பிரசவித்து செத்தும் போகும் நிலையில் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை நம்மை நடுங்கச் செய்கிறது. இந்த மாதிரியான வாழ்க்கை வாழும் மக்களுடைய எண்ணிக்கை குறைவதற்கு பதில் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் அவ்வப்போது எழுகிறது.

ஆனால் யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதியம் இந்தியாவை மிகவும் பாராட்டுகிறது. 1990-ம் வருடம் இருந்த நிலையை விட இப்போது பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 59 சதவீதம் இந்தியாவில் குறைந்திருக்கிறது என்பதே அந்தப் பாராட்டுக்கு காரணம். ஒரு லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன என்றால் 1990-ல் 570 தாய்மார்கள் இந்தியாவில் பிரசவத்தின் போது உயிர் இழந்தார்கள். இந்த எண்ணிக்கை 2000-ல் 390 ஆகவும் 2005-ல் 280 ஆகவும் 2008-ல் 230 ஆகவும் குறைந்திருக்கிறது. இந்த அளவுகளின் படி 2008-ல் இந்தியாவில் பிரசவத்தின் போது உயிர் இழந்த தாய்மார்களின் எண்ணிக்கை 63000 என்கிறார் யுனிசெஃப்பின் தொடர்புத் துறையின் இந்திய தலைவர் ஏஞ்சலா வாக்கர்.

கனிமொழி குறிப்பிட்ட எண்ணுக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். கனிமொழி எடுத்துச் சொன்னது சில ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். அது தவிர, அந்த எண்ணிக்கையில் நம்முடைய கவனம் குவிவதை விட, பிரசவத்தை தாங்கக் கூடிய வலிமையை எல்லாப் பெண்களும் பெறுவதற்கு இந்திய சுகாதாரத் துறை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்பதே இங்கு முக்கியம். 2005-லிருந்து 2008-க்குள் சுகாதார வசதிகள் அதிகரித்து மக்களைப் போய் சேர்ந்ததால் பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்திருக்கிறது என்று யுனிசெஃப் தரும் விபரம் சுட்டிக் காட்டுகிறது. அந்த கால கட்டத்தில் இந்திய சுகாதார அமைச்சராக இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்பது நினைவுக்கு வருகிறது.

இப்போது சுகாதார அமைச்சராக இருக்கும் குலாம் நபி ஆசாத் பெயரை சொன்னவுடன் உங்கள் மனதில் என்ன எண்ணம் தோன்றும்? “மக்கள் இரவில் அதிக நேரம் டி.வி. பார்ப்பதால், களைப்பில் அப்படியே தூங்கி விடுகிறார்கள். இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த டி.வி.உதவுகிறது” என்று அவர் பேசியது உங்கள் நினைவில் வரக் கூடும். சுகாதார அமைச்சகம் இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 30.09.10

0 Comments:

Post a Comment

<< Home