ஆட்டுக்கு வளர்ந்த தாடி
“தங்கக் கூண்டில் வாழும் கிளியைப் போல ஆளுநர் பதவியில் இங்கு நான் இருக்கிறேன்” என்று கவிக்குயில் சரோஜினி நாயுடு சொன்னதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்டவர் அவர். இந்திய விடுதலைக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் ஆளுநராக ஒன்றரை வருடங்கள் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதி ‘ஐக்கிய மாகாணங்கள்’ என்று அழைக்கப்பட்டது. சிலர் மட்டுமே அவர்களுடைய ஆளுமையால் அவர்கள் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்க்கிறார்கள். மற்றவர்கள் அந்தப் பதவியின் பெருமையை மூலதனமாக வைத்து தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். இதில் உங்களுக்குத் தெரிந்தவர்களில் யார் யார் எந்த ரகம் என்பதை உங்கள் பார்வையில் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
கர்நாடக மாநில ஆளுநர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜை மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பாரதிய ஜனதா தலைவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் அத்வானி தலைமையில் அந்தக் கட்சியினர் பிரதமரை நேரில் சந்தித்து அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியிலும் சிலரிடம் இதே மனநிலை இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் கட்சித் தலைமையிடம் ஆளுநரின் நடவடிக்கைகள் ‘அந்தப் பதவிக்கு அவப்பெயரை’ உருவாக்கிவிட்டன என்று முறையிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களால் பரத்வாஜை எதிர்த்து பகிரங்கமாக எதுவும் பேச முடியவில்லை. ஏனென்றால் அவர் காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்; தலைமுறை தலைமுறையாக அந்த நெருக்கம் தொடர்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இருந்து நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவராக பரத்வாஜ் இருந்து வருகிறார். அவருடைய அப்பா ஜெகன்னாத் பிரசாத் சர்மா பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு செயலராக இருந்தவர். இந்திய ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்த நெருக்கடிநிலை நாட்களில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்திக்கு எதிரான வழக்குகளை அவருடைய வழக்கறிஞராக எதிர்கொண்டவர் பரத்வாஜ். சஞ்சய் காந்திக்கு மட்டுமல்ல, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோருக்கு எதிரான சில வழக்குகளிலும் அவரே வழக்கறிஞர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு பரத்வாஜின் மகன் அருண் சட்ட ஆலோசகர்!
இந்திய சட்ட அமைச்சகத்தில் துணை அமைச்சராக ஒன்பது ஆண்டுகளும் காபினட் அமைச்சராக ஐந்து வருடங்களும் பரத்வாஜ் இருந்திருக்கிறார். அதாவது இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோருடைய அமைச்சரவை சகாக்களில் அவர் ஒருவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்து வருடங்கள் சட்ட அமைச்சராக அவர் இருந்த நாட்களிலும் அவரைச் சுற்றி சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதாயம் தரும் இன்னொரு பொறுப்பிலும் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த போது பரத்வாஜ் கொண்டு வந்த சட்டத் திருத்தம் பதவி இழப்பில் இருந்து பலரைக் காப்பாற்றியது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஒட்டாவியோ குவத்ரோச்சியின் லண்டன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன. அந்த முடக்கத்தை நீக்கி குவத்ரோச்சி அவற்றில் பணம் போட்டு எடுக்க சட்ட அமைச்சராக பரத்வாஜ் அனுமதி கொடுத்தபோது, அவரைப் பதவிநீக்கம் செய்யும்படி எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின.
இவ்வளவு தீவிரமாக அரசியலில் இருந்தவரை கர்நாடக மாநிலத்தின் ஆளுநர் பதவிக்கு மத்திய அரசு நியமிக்கும்போதே சர்ச்சைகள் எழுந்தன. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி நடத்தும் மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவுக்கு தொந்தரவு கொடுப்பதற்காகவே அவர் அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று ஊடகங்களில் ஊகம் வெளியானது. அமைச்சராக இருக்கும்போது எடுக்கும் ஒரு நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தால், அவற்றை அரசியல்ரீதியானவை என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆளுநராக இருக்கும் போது தேவையில்லாத சிக்கல்களுக்கு ஒருவருடைய பேச்சும் செயலும் காரணமாக இருந்தால் அவை ‘அதீதமான’ நடவடிக்கைகள் என்றே அறிந்து கொள்ளப்படும்.
எடியூரப்பாவின் அமைச்சரவை சகாக்களான ’சட்ட விரோத சுரங்கப் புகழ்’ ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக ஆளுநர் பரத்வாஜ் பகிரங்கமாக பேசினார். மாநில அரசுக்கு எதிரான உணர்வுகள் கொண்ட தொழிலதிபர்களுடைய சுமைதாங்கியாகவும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர்களுக்கு ஆலோசகராகவும் ஆளுநர் பரத்வாஜ் செயல்படுவதாக அவ்வப்போது புகார்கள் வந்தன. அதன் உச்சகட்டமாகவே முதல் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, ‘மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை’ அமல்படுத்த வேண்டும் என்று அவர் கூறியதைப் பார்க்க முடிகிறது. அடுத்தநாளே அந்தர்பல்டி அடித்து முதல்வரை இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தச் சொன்னார் என்பது வேறு கதை! அதுவும் முதல் வாக்கெடுப்பின்போது பேரவைத் தலைவர் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது செல்லுமா என்ற வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக இப்படி ஒரு வாக்கெடுப்பு தேவை இல்லை தான்! இந்த ஏற்பாட்டின்படி எடியூரப்பா ஒரே வாரத்தில் இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்புகளை நடத்தி வெற்றி பெற்று “வரலாறு” படைத்திருக்கிறார்! இனி தீர்ப்பு எப்படி இருந்தாலும் மேல்முறையீடுக்கான வாய்ப்பு எடியூரப்பாவுக்கு ‘மூச்சுவிடுவதற்கான’ நிம்மதியையும் அவகாசத்தையும் கொடுக்கும். சபாநாயகருடைய முடிவுக்கு எதிராக தீர்ப்பு இருந்தால், மீண்டும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான சட்டமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் இன்னொரு மோதல் உருவாகும்!
ஆளுநர் பரத்வாஜ் செய்ததை மட்டுமே இங்கு விமர்சனம் செய்வதாகவும் முதலமைச்சர் எடியூரப்பாவையோ, கர்நாடக சட்டமன்றத் தலைவரையோ பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எல்லா அரசியல்வாதிகளும் மேற்கொள்ளும் ‘முறையற்ற’ நடவடிக்கைகளை அவர்களும் எடுத்தார்கள். ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால், அடுத்து நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘அரசியல் நேர்மை’யுடன் நடந்து கொள்ளும் அரசியல் கட்சி ஏதாவது இருக்கிறதா என்ன? சபாநாயகரும் முதலமைச்சரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களைத் தலைகுனியச் செய்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த நெருக்கடிக்கு எல்லாம் முன்பாகவே ஆளுநர் இப்படி ஒரு நெருக்கடியை உருவாக்கும்வகையில் செயல்படத் தொடங்கினார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!
நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற கட்டிடத்தின் அடித்தளத்தையே தகர்ப்பது போல கடந்த காலத்தில் பல ஆளுநர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் ஆளுநர் பதவியைத் தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி இருக்கின்றன. மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்க்காமல் மௌனசாட்சிகளாக இருந்து அந்த பாவத்தில் சில கட்சிகள் பங்கேற்றிருக்கின்றன. மாநில மக்களுடைய ஜனநாயகரீதியிலான தீர்ப்பைக் குலைக்கும் வகையில் மாநிலத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் செயல்படுவதும் அவரை அப்படி மத்திய அரசு பயன்படுத்துவதும் நாம் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. 1957-ல் கேரளாவில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு தலைமையில் ஒன்றுபட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது. மாநில சட்டப்பேரவையில் அந்த அமைச்சரவைக்குப் பெரும்பான்மை இருக்கும்போதே, ஆளுநரின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அந்த ஆட்சியைக் கலைத்தது. இந்திய ஜனநாயக அமைப்பில் மத்திய அரசின் ‘ஏஜெண்டாக’ ஆளுநர் பகிரங்கமாக செயல்படுகிறார் என்பதை முதன் முதலில் அந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் என்ற ஒரே கட்சி ஆட்சியில் இருந்தவரை இந்த சிக்கல் பெரிய அளவில் எழவில்லை. 1967-க்குப் பிறகு அந்த நிலையில் பெரிய அளவில் மாறுதல்களை மக்கள் தீர்ப்புகள் உருவாக்கியபோது ஆளுநர் பதவி ‘அரசியல் சதுரங்கத்தில்’ நகர்த்தப்படும் காயாக மாறத் தொடங்கியது. 1977-ல் காங்கிரஸைத் தோற்கடித்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோதும், அதன்பிறகு ஜனதாவை வீழ்த்தி இந்திரா காந்தி 1980-ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய போதும் வகைதொகை இல்லாமல் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. மத்திய அரசின் கைப்பாவையாக மாநில ஆளுநர்கள் செயல்பட்டதை உணர்த்திய உச்சகட்ட காட்சிகள் அவை! இப்போது தனிக்கட்சி ஆட்சி என்ற நிலை மத்தியில் இல்லை. மாநிலங்களிலும் நிலைமைகள் வேகமாக மாறி வருகின்றன. ஆட்சிக்கலைப்புகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு புதிய வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறது. பரணிலே போடப்பட்டிருந்தாலும், சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகள் பயமுறுத்தும் கனவுகளாகத் தொடர்ந்து வருகின்றன. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளால், இன்று ஆட்சிக் கலைப்புகள் குறைந்திருக்கின்றன என்ற போதிலும் ஆளுநர்களுடைய மனநிலையில் மாற்றம் இருக்கிறதா என்பது விவாதத்துக்குரிய பொருளாகவே இருக்கிறது.
ஆளுநர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற யோசனை, இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு அல்லது அரசமைப்புப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால் வரைவுக் குழுவினர் அதை ஏற்கவில்லை. குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுவதையே அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். காலனிய பிரிட்டிஷ் அரசாங்கம் ஆளுநருக்குக் கொடுத்திருந்த சிறப்பு அதிகாரங்களையும் அப்படியே அவர்கள் இந்திய ஆளுநர்களுக்கும் வழங்கினார்கள். கால ஓட்டத்தில் மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையில் அந்த அதிகாரங்கள் இப்போது ஜனநாயக விரோதமாகத் தெரிகின்றன. அந்த ஆளுநர் பதவியே தேவையில்லாத பதவி என்ற கருத்தும் தீவிரமாக சில அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.
குடியரசுத் தலைவராக வி.வி.கிரி இருந்தபோது போட்ட ஆளுநர்கள் குழு, ராஜமன்னார் குழு, சர்க்காரியா விசாரணைக் குழு உள்ளிட்ட எல்லா குழுக்களும் சொல்வது ஒன்றுதான். அதாவது, ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவை அல்ல என்பதே. ஆனாலும் ஆளுநர்கள் தங்களை நியமித்த மத்திய அரசுக்கு விசுவாசமாக இருக்க விரும்புகிறார்கள். ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக தங்களை அடையாளப்படுத்தி மத்திய அரசை மகிழ்விப்பதன் மூலம் அடுத்து வேறு பதவிகள் தங்களைத் தேடி வரக் கூடும் என்ற அரசியல் கணக்குகள் அவர்களிடம் எழுந்துவிடுகின்றன. இப்படிப் பேசிக் கொண்டே போகலாம். கடைசியாக ஒரு கேள்வியை மட்டும் பார்க்கலாம். இன்று ஆளுநரை பதவி நீக்கம் செய்யும்படி பிரதமரை வலியுறுத்தும் பாஜக, சர்க்காரியா கமிஷனிடம் ஆளுநர் பதவி நீக்கம் குறித்து என்ன சொன்னது?
“ஆளுநருடைய பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் நீடிக்க அனுமதிக்க வேண்டும். அவரை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடையில் மாற்றக் கூடாது. உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கு இருக்கும் நடைமுறையைப் போல, நாடாளுமன்றமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு அங்கு ஏற்றுக் கொண்டபிறகே ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யலாம்” என்ற ரீதியில் தன்னுடைய கருத்தை பாஜக பதிவு செய்திருக்கிறது. இப்போது ஆளுநரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகிறது!
அரசமைப்புச் சட்டத்தை விடுங்கள். கட்சிக் கோட்பாட்டின்படி தான் தங்கள் நடைமுறை இருக்கிறது என்று கூட அரசியல் கட்சிகளால் சொல்ல முடியாது போலிருக்கிறது!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
0 Comments:
Post a Comment
<< Home