Monday, October 11, 2010

நாயிடம் இல்லை வெறி!

அந்த மனிதர் தினமும் அந்தக் கறுப்பு நிற நாயை ‘வாக்கிங்’ அழைத்துப் போவார்; அது ‘உயர்ந்த ரக’ நாய்; வழக்கமாக நாம் தெருவில் பார்க்கும் நாய்களைப் போல் அதன் தோற்றம் இருக்காது. அந்த நாயின் கழுத்தில் ஒரு சங்கிலி கட்டப்பட்டிருக்கும். அந்த சங்கிலியின் இன்னொரு பக்கத்தை அந்த மனிதர் கையில் இழுத்துப் பிடித்துக் கொண்டு நடப்பார்; அவர் நாயை அழைத்துப் போவதாக சொல்கிறோமே தவிர, உண்மையில் அவரை இழுத்துக் கொண்டுதான் அந்த நாய் வேகமாக நடக்கும். அவர் சங்கிலியை இழுத்துப் பிடித்துக் கொண்டே நாயின் வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டு அதன் பின்னால் நடந்து வருவார்.

‘பிரபலங்களுடன்’ வரும் ’அல்லக்கைகளைப்’ போல, அந்த கறுப்பு நாயைச் சுற்றி இரண்டு பக்கங்களிலும் இன்னும் ஐந்தாறு நாய்கள் நடந்து வரும். கறுப்பு நாய் மட்டும்தான் அந்த மனிதர் வளர்க்கும் நாய். மற்ற நாய்கள் எல்லாம் தெரு நாய்கள். அவர் வீட்டு வாசலில் அவை ஒன்று கூடும். அங்கு அந்த நாய்களுக்கு சாப்பாடு கிடைக்கும். வேறு வேறு நிறங்களில் அந்த நாய்கள் இருந்தாலும் அவை தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதில்லை. இந்தக் குழுவைச் சேராத வேறு நாய் கண்ணில் பட்டால், எல்லாம் சேர்ந்து அந்தப் புதிய நாய்க்கு எதிராகக் குரல் எழுப்பும். தினமும் இந்தக் காட்சியை பார்க்க முடிந்தாலும், கடந்த வாரத்தில் ஒரு நாள் நாய்களைப் பற்றிய செய்திகளை அதிகம் படிக்க நேர்ந்ததால், இந்த தினசரி காட்சியும் நினைவுக்கு வந்தது.

லண்டனில் ஒரு நாயின் எஜமானர் கடந்த ஆகஸ்ட் மாதம் இறந்து போனார். அன்றிலிருந்து அந்த நாய் தனக்குக் குளிராமல் இருப்பதற்காக போடப்பட்டிருக்கும் போர்வையைக் கடித்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. போர்வை அதிகமாக அதன் வயிற்றுக்குள் போனதாலோ என்னவோ, அந்த நாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில், அவசரமாக அறுவை சிகிச்சை செய்து அந்த நாயின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்கள். பிரிவு காரணமாக எழும் துயரமும் மன அழுத்தமும் நாய்க்கு இருந்தால் இதுபோல் விநோதமான பொருட்களைக் கடித்துக் கொண்டிருக்கும் என்று பிரைட்டன் மருத்துவர் ரபேகா சொன்னார் என்று பிபிசியில் ஒரு செய்தி வந்தது.

எஜமான விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டாக நாய் குறித்த பல செய்திகள் அவ்வப்போது வருவதுண்டு. ஆனால் அப்படிப்பட்ட நாயை ஒரு இந்தியர் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். மத்தியப் பிரதேசத்தில் மொரெனா மாவட்டத்தில் அந்த சம்பவம் நடந்திருக்கிறது. சுனிதா ஜாதவ் என்ற ஒரு பெண், விவசாயக் கூலியான தன்னுடைய கணவனுக்கு சாப்பாடு போடுகிறாள். அவர் சாப்பிட்டது போக ஒரு ரொட்டி மீதி இருக்கிறது. ஒரு நாய் அதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறது. அந்த நாயை அழைத்து அந்த ரொட்டியை சுனிதா ஊட்டி விடுகிறாள். அப்போது அந்த நாயை வளர்க்கும் பண்ணையார் வருகிறார். “ஏய்! கீழ்சாதிப் பெண்ணே! என்னுடைய நாய்க்கு ஏன் உன்னுடைய ரொட்டியை சாப்பிடக் கொடுக்கிறாய்” என்று அவளைத் திட்டுகிறார். அந்த ஏச்சையும் பேச்சையும் வாங்கிக் கொண்டு அந்தப் பெண் அமைதியாக நிற்கிறாள். அத்துடன் அந்தப் பிரச்னை முடிந்து போனதாக நினைத்து சுனிதா விட்டு விடுகிறாள்.

ஆனால் அந்தப் பண்ணையாரைப் பொறுத்தவரை அந்தப் பெண்ணுடைய செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாழ்த்தப்பட்ட பெண் ஒருத்தி கொடுத்த ரொட்டியை சாப்பிட்டதால் அந்த நாய் ‘தீண்டத்தகாத’ நாய் ஆகிவிட்டது என்று அவர் நினைத்தார். அதனால் அவருடைய வீட்டில் வளரும் தகுதியை அந்த நாய் இழந்துவிட்டது என்று அவர் முடிவுக்கு வந்தார். அவருக்கு ஏற்பட்ட ‘மன உளைச்சலுக்கு’ நீதி கேட்டு ஊர் பஞ்சாயத்தைக் கூட்டச் செய்தார். அந்த நாயை இனி சுனிதாவே வளர்க்க வேண்டும் என்றும் பண்ணையார் நாயை இழப்பதற்குக் காரணமாக இருந்ததற்காக சுனிதா 15000 ரூபாய் பண்ணையாருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் சுனிதாவும் அவருடைய சகோதரரும் அருகில் இருந்த காவல் நிலையத்துக்குப் போய் புகார் கொடுக்கிறார்கள். அங்கு அவர்களுடைய புகார் வாங்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு காவல் நிலையத்தை அணுகுமாறு அங்கு இருந்த காவலர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி அந்த போலீஸை போய்ப் பார்த்தால், “அவங்க நாய்க்கு நீ ஏன் சாப்பாடு கொடுத்தாய்?” என்று அங்கு இருந்த அதிகாரி கேட்டாராம்! நாய்க்கு வெறி பிடிக்கும் என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கிராமத்தில் வாழ்கிற, படிக்காத, பண்ணையாருக்கும் ஊர்ப்பஞ்சாயத்தாருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் பிடித்திருக்கும் வெறியை எப்படிப் புரிந்து கொள்வது?

மூன்று மாதங்களுக்கு முன்னால் நண்பர் மாதவராஜ் ஒரு பதிவு எழுதி இருந்தார். நம்முடைய சமூகம் எப்படி ஒரு பிரச்னையை தேவையில்லாமல் இழுத்துப் போட்டுக் கொண்டு அவதிப்படுகிறது என்பதை ஒரு நாயின் நடவடிக்கைகளைக் கொண்டு அற்புதமாக விவரித்திருந்தார். அதை உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறோம்.

"நேற்றிலிருந்து ஒரு பழைய துணியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது அந்த நாய்..

துணியை வாயில் கவ்விக்கொண்டே கொஞ்ச தூரம் ஓடும்; கீழே போடும்; ஓரிடத்தில் அமைதியாகி, நாக்கு வெளியே தள்ளி மூச்சிறைக்கும்; முகர்ந்து பார்க்கும்; தள்ளிப் போய் முறைத்துப் பார்க்கும்; பதுங்கும்; பின்னங்காலால் மண் அள்ளிப் போடும்; உர்ரென்று துணி மீது பாயும்; திரும்பவும் கவ்வி, ஏதோ குழறியபடி தன்னையே சுற்றும்.

அப்படியே உட்கார்ந்து ஒரு வெற்றி வீரனைப் போல கம்பீரமாய் தெருவைப் பார்க்கும். சட்டென எழுந்து அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தலையை ஆட்டி துணியைக் கிழித்து எறிய முயலும். ஏதோ ஒரு அசைவில் துணி தலையைச் சுற்றிக் கொள்ளும்போது, அரண்டு போய் ‘வாள்’ ‘வாள்’ என்று கத்திக்கொண்டே அங்குமிங்கும் ஓடியலையும்.

தலையை மண்ணில் கவிழ்த்தபடியே கொஞ்ச நேரம் அசையாமல் நிற்கும். உதறும். துணி கீழே விழுந்ததும் எட்டிப் போய் நிற்கும். வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு பாவம் போல விழிக்கும். தலையை சரித்துக்கொண்டு மீண்டும் துணி அருகில் வரும்.

அசையாமல் கிடந்த அந்தத் துணி நாயின் உயிரை வாங்கிக் கொண்டிருந்தது.”

இதுதான் அவர் எழுதிய பதிவு. அந்தத் துணி அப்படியே கிடக்கட்டும் என்று விட்டுவிட்டு அந்த நாய் விலகிப் போய்விடலாம். ஆனால் நாய் விலகிப் போகவில்லை. அந்தத் துணியோடு மல்லுக்கட்டி தன்னுடைய சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறது. அதைப் போல சாதி, மதம் உள்ளிட்ட எத்தனையோ சிக்கல்களை நாம் விடாமல் பிடித்துக் கொண்டு நம்முடைய அமைதியை இழந்து கொண்டிருக்கிறோம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 07.10.10

0 Comments:

Post a Comment

<< Home