Monday, February 05, 2007

இவர் யார் என்று தெரிகிறதா?ஒரு வாரம் முடிந்து விட்டது.


தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஒளிர வாய்ப்பளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி..

ஸ்டேஷன் பெஞ்சுக்காக இப்போது புதிதாக எழுத இயலாத நிலைக்கு வருந்துகிறேன். பிற ஊடகங்களில் எழுதுவதை மட்டும் இப்போதைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

உங்களிடம் இருந்து விடைபெறும் நேரத்தில் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்.

இந்த படத்தில் உள்ளவர் யார்? அவருடைய பெயர் என்ன?

Sunday, February 04, 2007

பொய் பேசும் ‘சமத்துவங்கள்!’

மனிதர்கள் அடையும் மகிழ்ச்சி சில சமயங்களில் அதிக நாட்கள் நீடிப்பதில்லை. சமத்துவப் பெருவிழாவால் கிடைத்த சந்தோஷத்துக்கு இப்படி ஒரு நிலை நேரும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கொட்டக்கச்சியேந்தல் ஆகிய ஊராட்சிகளில் தலைவர்களாக தலித் பிரதிநிதிகள் பொறுப்பேற்றார்கள். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள். இதைச் சாதிப்பதற்கு உறுதுணையாக இருந்த முதல்வர் கருணாநிதிக்கு ‘சமத்துவப் பெரியார்’ என்று தொல்.திருமாவளவன் பட்டமளித்து மகிழ்ந்தார். 1996 முதல் 2001 வரையிலான தி.மு.க. ஆட்சியில் இதை நிறைவேற்ற முடியவில்லை என்பதும், அந்த ஆட்சிக் காலத்தில் மேலவளவு முருகேசன் படுகொலை செய்யப்பட்டதும் இன்றைய மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், மதுரை மாவட்டத்தில் நடந்ததாக வந்திருக்கும் வேறொரு சம்பவம் குறித்த செய்தி, நமது மகிழ்ச்சியைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

‘என்னைத் தயவுசெய்து ஏலம் போடாதீர்கள். இந்தப் பதவி மூலமாக இந்த ஐந்தாண்டுகளில் எவ்வளவு கமிஷன் கிடைத்தாலும் அதை ‘ஊரிடம்’ ஒப்படைத்து விடுகிறேன் என்று மன்றாடிப் பார்த்தேன். ஆனால், கிராமத்துப் பெரியவர்கள் எனது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை’ என்று அந்தப் பெண்மணி, ஓர் ஆங்கில நாளிதழ் செய்தியாளரிடம் பேசியிருக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் பாலமணி. அவர் மதுரை மாவட்டம் கொடிகுளம் ஊராட்சியின் தலைவர். அவரைத்தான் கிராமத்துப் ‘பெரியவர்கள்’ ஏலம் போட்டிருக்கிறார்கள். இதன்படி தலைவரை ஏலத்தில் எடுத்தவர், கிராம கமிட்டிக்கு ஏலத்தொகையை செலுத்துவார். இந்த ஐந்து ஆண்டுகளில் அந்த ஊராட்சித் தலைவர் போடும் கையப்பங்களினால் கிடைக்கும் ‘வருமானம்’ முழுவதும் ஏலத்தில் வெற்றி பெற்றவரையே சாரும். வேறுவார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அந்தத் தலைவர் ஏலம் எடுத்தவரின் கையில் இருக்கும் வெறும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’தான்!

ஆனால், இந்தச் செய்தியை கிராமத்து மக்கள் மறுக்கின்றனர். ஊராட்சித் தலைவருக்கு அவரது பணிகளில் உதவி செய்வதற்காகக் கிராமத்தில் இருந்து ஒருவரைத் ‘தேர்வு’ செய்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். 2006- க்கு முன்னதாக நடந்த தேர்தல்களில் பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் நடந்தது போலவே பாலமணியை ராஜினாமா செய்யச் சொல்லலாம் என்று கிராமத்தில் சிலர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஊரில் ஒருவரை அவருக்கு ‘உதவுவதற்காகத் தேர்வு’ செய்வது என்ற முடிவு எடுத்ததும், ராஜினாமா என்ற சிந்தனையைக் கைவிட்டு விட்டார்கள். ஊருக்குள் யாரைக் கேட்டாலும் ‘ஏலம் நடக்கவில்லை’ என்ற பதிலே கிடைக்கும். ஊராட்சித் தலைவர் கூறியதாகப் பத்திரிகையில் வந்திருக்கும் செய்தி மட்டுமே அங்கு ஜனநாயக விரோதமான செயல் ஏதோ நடந்திருப்பதை உலகறியச் செய்திருக்கிறது.

ஒருவேளை, அடுத்த சில தினங்களில் இந்த செய்தி மறுக்கப்படக்கூடும். ஊருக்குள் சேர்ந்து வாழவேண்டிய சொந்த வாழ்க்கை நிர்ப்பந்தம் அந்தப் பெண்மணிக்கு இருக்கிறது. ‘சமத்துவ புரமாக’த் திகழும் தமிழகத்தில் இப்படி ஒரு பிரச்னை செய்தியாக எழுவதைத் தடுக்கும் அவசரம் நிர்வாகத்துக்கு இருக்கலாம். இவற்றில் ஒன்றோ அல்லது இரண்டுமோ அந்தப் பத்திரிகைச் செய்தியை பாலமணி மறுப்பதற்குக் காரணமாக இருக்கக் கூடும். கிராமத்தில் பிற சாட்சிகள் கிடைப்பதும், இந்தச் சூழலில் சாத்தியப்படாமல் போகலாம். எனவே பிரச்னையைப் பூசிமெழுகும் முயற்சிகளில் நிர்வாகம் இறங்கலாம்.

இதைத் தவிர்த்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான நிர்ப்பந்தத்தை நிர்வாகத்துக்கு சில அரசியல் கட்சிகள் கொடுக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், அவை கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு ஆளும் கூட்டணியில் இடங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்னும் நிலைமைகள் மோசமாக இருக்கின்றன. எது எதற்கெல்லாமோ பரபரப்பு காட்டும் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும், முக்கியமான ஒரு நிகழ்வைக் கண்டுகொள்ளவில்லை! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மராட்டிய மாவீரர் சரத்பவாரை தள்ளி நிற்குமாறு அவமானப்படுத்திய பிரச்னையில், துணை முதல்வர் நேரம் கழிந்தது. பார்வையற்றவர்களின் ஊர்வலத்தில் மகாராஷ்டிர காவல்துறை தடியடி நடத்தித் தனது செயல்வேகத்தைக் காட்டியது. ஐஸ்வர்யா ராய்க்கு பார்சல் கடிதம் மூலம் வந்த பணம் குறித்துப் பரபரப்பான புலன்விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பந்தாரா மாவட்டத்தில் உள்ள காயர்லான்ஜி கிராமத்தில் நடந்த ஒரு படுபாதகச் செயலை மாநில அரசும் ஊடகங்களும் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் பல நாட்களாகக் கண்டுகொள்ளவே இல்லை.
ஊர்ப் பெரியவர்கள் கேட்கும் தனது நிலத்தின் பகுதியைத் தரமறுத்து வாதாடியதுதான் சுரேகா என்ற அந்த 44 வயது பெண் செய்த குற்றம். அவரும் அவரது 18 வயது மகள் பிரியங்காவும் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ஊருக்குள் நடத்திச் செல்லப்பட்டு, பகிரங்கமாக வன்புணரப்பட்டு அதன்பிறகு சாகடிக்கப் பட்டிருக்கிறார்கள். 23 வயது மகன் ரோஷனும் 21 வயது மகன் சுதிரும் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளை எல்லாம் பிரியங்காவின் தந்தை வேறொரு உறவினரின் குடிசையில் மறைந்திருந்து பார்த்திருக்கிறார்.

அவரைத் தவிர வேறு யாரும் நடந்த சம்பவங்களுக்கு சாட்சியில்லை. இரு பெண்களும் வன்புணரப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறிக்கை அளித்திருக்கிறார்கள். இப்போது மார்க்சிஸ்ட் கட்சியும் இன்னும் சில தலித் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் தலையிட்டு நடத்திய போராட்டங்களுக்குப் பிறகுதான் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது! புதைக்கப்பட்ட உடல்களை மீண்டும் தோண்டி எடுத்து மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டிருக்கிறது. ஆனால், எடுக்கப்பட்ட உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் முழுமையான உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று சிலர் வாதிடக்கூடும். இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளையும் சகிப்புத் தன்மையில்லாத நிலையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. சாதி, பொருளாதார நிலை, பாலினம் போன்ற வேறுபாடுகள் தொடர்பான பிரச்னைகளைக் கையாளும்போது, நிர்வாகத்தில் இருப்பவர்களிடம் ‘உயர்ந்த’ நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவான சார்பு இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மூலமாக ‘மதச்சார்பற்ற மற்றும் சமத்துவ’ என்ற இரு சொற்களைச் சேர்ப்பதால் மட்டுமே இந்திய சமூகத்தில் சமத்துவம் வந்துவிடாது. கண்களையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டு சமூகத்தைப் பார்ப்பவர்களுக்கு, இந்திய சமூகத்தில் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு மற்றும் இறப்புக்குப் பின் உள்ள வழக்கு, வரலாறு என்று எல்லாவிதங்களிலும் வேறுபாடுகள் இன்னும் நிலவி வருகின்றன என்பது நன்றாகத் தெரியும்.

டெல்லியில் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி பலியான பிரியதர்ஷினி மட்டூ, அதிகார போதையில் தள்ளாடிய வாரிசு ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஜசீகா லால் மற்றும் பலரின் வழக்குகளையும் பாருங்கள்... இந்தப் பிரியங்காவின் வழக்கையும் தொடர்ந்து கண்காணியுங்கள். உங்களுக்கு உண்மை புரியும். இதற்கு மாறாகத் தனிமனிதர்கள் சிலரின் முயற்சியால் இந்திய சமூகத்தில் சமத்துவம் நிலவுவதாகக் காட்டப்படும் சித்திரம் சரியானதல்ல. சமூகப் போராளிகள்கூட சில சமயங்களில் சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கி உண்மைக்கு மாறான தகவல்களை அளிக்கலாம். ஆனால், சடலங்கள் பொய் பேசுவதில்லை!

- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (26.11.06)

Saturday, February 03, 2007

தமிழக அரசியலில் ‘துரோகம்!

அந்த மடம் மிகவும் இறுக்கமான மடம். அங்குள்ள துறவிகள் ஒருவருக்கொருவர் பேசவே முடியாது. ஒரு வருடத்துக்கு ஒரு முறை தலைமைத் துறவி வந்து கேட்கும்போது இரு வார்த்தைகள் மட்டுமே பேசலாம். அந்த மடத்தில் ஒரு துறவிக்கு மட்டும் அங்கு நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தலைமைத் துறவியிடம் அவர் முதலாண்டு இறுதியில், ‘மனநிறைவு இல்லை’ என்றார். இரண்டாம் ஆண்டு, ‘மூச்சு முட்டுகிறது’ என்றார். மூன்றாம் ஆண்டு, ‘நான் வெளியேறுகிறேன்’ என்றார். தலைமைத் துறவி, ‘இது நான் எதிர்பாராதது அல்ல. நீங்கள் மட்டுமே இங்கு உங்களுக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை விட்டுவிட்டு குறைகளைப் பெரிதுபடுத்திக் கொண்டிருந்தீர்கள்’ என்று கூறினார். எந்த நிகழ்வையும் நேர்மறையாகப் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறப்படும் கதைகளில் இதுவும் ஒன்று.

குறைசொல்லும் துறவியின் நிலையைப் போலவே இப்போது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிலையும் இருப்பதாகத் தோன்றுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. பச்சைத் துரோகம் செய்துவிட்டது என்று பகிரங்கமாக செய்தியாளர்களிடம் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். ‘அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். தி.மு.க. ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளுக்குத் துரோகம் செய்ய நினைப்பதில்லை’ என்று தி.மு.க. தரப்பில் இருந்து பதில் அறிக்கை வந்துள்ளது. ‘தி.மு.க. அறிக்கை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது. பதிலுக்குப் பதில் என்று அறிக்கைப் போரைத் தொடர விரும்பவில்லை’ என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பிரச்னைக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ம.க.வுக்கு நேர்ந்தது போலவே காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கும் நேர்ந்திருக்கின்றன. அந்தத் தலைவர்கள் எல்லாம் தவறுகள் நடந்திருக்கின்றன என்று சொல்கிறார்களே தவிர, திமுக ‘துரோகம்’ செய்துவிட்டதாகச் சொல்லவில்லை.
தமிழக அரசியலில் ‘கூட்டணி’, ‘அலையன்ஸ்’ போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று தலைவர்கள் விளக்கம் அளித்த அளவுக்கு, ‘துரோகம்’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை விளக்காமல் விட்டுவிட்டார்கள்.

கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு கொண்டு கட்சியில் இருந்து வெளியேறுபவர்களையும் துரோகிகள் என்றுதான் குற்றம்சாட்டுகிறார்கள். கூட்டணித் தலைமையுடன் வேறுபாடு கொண்டு வெளியேறுபவர்களுக்கும் அதே பெயர்தான். ஆட்சியாளர்கள் தாக்கல் செய்யும் பட்ஜெட் மீது விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகளும், ‘வாக்களித்த மக்களுக்கு முதல்வர் துரோகம் செய்துவிட்டார்’ என்று குற்றம் சாட்டுகின்றன. கால மாற்றத்தின் காரணமாகவோ அல்லது மாறிவிட்ட அரசியல் சூழல்கள் காரணமாகவோ ஆரம்பத்தில் சொல்லி வந்த கொள்கைகளில் இருந்து வேறுபட்ட நிலையை ஓர் அரசியல் கட்சி மேற்கொண்டால், அது கொண்ட கொள்கைகளுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக விமர்சனம் எழுகிறது.

ஒரு தமிழ் அகராதியில் துரோகம் என்ற சொல்லுக்கு, ‘தன்னை நம்பும் ஒருவரின் நம்பிக்கைக்கும் நலனுக்கும் மாறாக அல்லது எதிராகச் செய்யும் செயல்’ என்று பொருள் போட்டிருக்கிறது. துரோகி என்ற சொல்லுக்கு ‘எதிர்பார்ப்பதைப் பொய்யாக்கி மோசம் செய்யும் நபர்’ என்று சொல்கிறது. ஒரு கட்சியின் தலைவரோ கூட்டணியின் தலைவரோ தனது நிலையை தனது கட்சியினரும் கூட்டணிக் கட்சியினரும் முழுவதுமாக ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கை கொண்டிருப்பார். அவரது நம்பிக்கைக்கு மாறாக அல்லது எதிராகச் செய்யும் செயல் துரோகம் என்றாகிவிடுகிறது. அதாவது அங்கே மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லாத ஆபத்தான சூழல் உருவாகிவிடுகிறது.

எடுத்துக்காட்டாக 1998 மக்களவைத் தேர்தலை எடுத்துக் கொள்ளலாம். அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தமிழகத்தில் 30 இடங்களை வென்றன. இந்தத் தேர்தலில்தான் ம.தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் மாநிலக் கட்சிகள் என்ற அங்கீகாரம் கிடைத்தது. அதுமட்டுமல்ல, முறையே பம்பரம் மற்றும் மாங்கனி சின்னங்களும் கிடைத்தன. இதற்குப் பெருமளவில் அ.தி.மு.க. வாக்கு வங்கி உதவியது என்பதை இவ்விரு கட்சிகளாலும் மறுக்க இயலாது.

ஆனால் ஜெயலலிதாவுக்கும் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, ம.தி.மு.க.வும் பா.ம.க.வும் எந்தப் பக்கத்தில் நின்றன?

ஜெயலலிதா, வைகோ மீதும் டாக்டர் ராமதாஸ் மீதும் அன்று வைத்திருந்த நம்பிக்கைக்கு மாறாக அவர்கள் செயல்பட்டதால் அந்தச் செயலைத் துரோகம் என்று கூறினால் இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

அல்லது வாஜ்பாயைப் பிரதமர் ஆக்குவதன் மூலம் நிலையான ஆட்சியைத் தருவோம் என்று சொல்லி வாக்குக் கேட்டு, பிறகு ஆதரவைத் திரும்பப் பெற்ற ஜெயலலிதாவின் செயலைத் துரோகம் என்று சொல்ல முடியுமா?

அல்லது பி.ஜே.பி.க்கு எதிராக தமிழக மக்களிடம் வாக்கு வாங்கிச் சென்ற தி.மு.க. எம்.பி.க்கள், வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த செயலைத் துரோகம் என்று சொல்வதா?

ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொன்று துரோகம் என்றாகிறது. நீங்கள் எந்தப் பக்கம் நின்று பார்க்கிறீர்களோ அதற்குத் தகுந்த முடிவுக்கு வருகிறீர்கள்.

இப்படி ஏராளமான சம்பவங்களின் அடிப்படையில் பல தலைவர்களின் அரசியல் நிலைப் பாட்டைத் துரோகம் என்று மக்களாலும் விமர்சிக்க முடியும். பயன்பாட்டு அளவில் மற்ற சொற்களைவிட துரோகம் என்ற சொல் மிகவும் கூர்மையானதாக இருக்கிறது. ‘எதிரிகளை மன்னிக்கலாம், ஆனால் துரோகிகளை மன்னிக்கக் கூடாது’ என்றெல்லாம் பரவலாகப் பேசப்படுகிறது. எதிரிக்கும் துரோகிக்கும் வேறுபாடு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத மிகவும் உயர்ந்த பொருள் கொண்ட சொல் மன்னிப்பு என்பதை நம்மில் பலர் புரிந்து கொள்வதில்லை.

மக்களுடைய எத்தனையோ எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மாறாக அரசியல்வாதிகள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறு அதிகார போதையில் வலம் வருகிற அல்லது வலம் வந்த பல அரசியல் தலைவர்களை மக்கள் எதிரிகள் என்றோ துரோகிகள் என்றோ வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர்கள் எல்லோரையும் மன்னித்து, மீண்டும் மீண்டும் ஆதரித்து ஆட்சியில் அமர்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் செயல்வடிவம் பெறாத வெற்று முழக்கங்களைப் பெரிதுபடுத்துவதில்லை. ஏற்கெனவே தமிழக அரசியலில் ‘புரட்சி’ உள்ளிட்ட பல சொற்கள் பொருள் இழந்து உலவுகின்றன. அந்த வரிசையில் ‘துரோகம்’ என்ற சொல்லும் சேர்ந்து விட்டதுபோல் தெரிகிறது!
- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (08.11.06)

Friday, February 02, 2007

பூஜைக்கு வந்த தோழர்!

வீட்டின் அருகில் இருக்கும் அனுமன் கோயிலில் பூஜை செய்யாமல் அந்தத் தாய், வீட்டில் புதிதாக எந்த வேலையும் செய்வதில்லை. அன்றும் அவர் அந்த அனுமன் கோயிலில் விளக்கேற்றி, கோயில் வளாகத்திலேயே பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். நள்ளிரவு ஆனபிறகும் வீடு திரும்பவில்லை. அவரது நான்கு வயது மகனை அன்று நண்பகலில் இருந்து காணவில்லை.

அடுத்த நாள் அதிகாலை வீட்டினர் அங்கு வந்து தாயைக் கட்டாயமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பச்சிளம் பாலகன் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தகவல் அவர்களுக்குக் கிடைத்து விட்டது. அவனுக்கு அந்தச் சிறுவயதில் பாடம் கற்றுக் கொடுப்பதற்காக அவர்கள் நியமித்த டியூஷன் மாஸ்டர்தான் கொலை செய்திருப்பதாகக் காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது. அந்த அனுமன் தனது குடும்பத்தைக் கைவிட்டுவிட்டதாக அந்தத் தாய் கதறியிருக்கிறார்.

தங்களுக்கு நேர்ந்து விடுகிற திடீர் இழப்புகளில் மனம் கலங்கும் தீவிர பக்தர்கள் உணர்ச்சிப் பிழம்பாகி கடவுளை நம்பிப் பயனில்லை என்று சொல்வதுண்டு. அதேபோல் நாத்திகராகவே தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவர்கள் வயதான காலத்தில் கடவுள் நம்பிக்கையை ஏற்றுக் கொள்வதும் உண்டு. முதலில் சொல்லப்பட்ட சம்பவம் நடந்த அதே மேற்குவங்கத்தில் அதற்கு நேர்மாறான இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.

50 ஆண்டு காலமாக நாத்திகராக இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மேற்கு வங்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி, சென்ற வாரம் தாரபீட காளி கோயிலுக்குச் சென்று பூஜை செய்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சரான அவர் மேலும், ‘‘இந்தியாவில் எங்கு சென்றாலும் நான் எனது பெயரைச் சொன்னதும், முதலில் இந்துவாகவும் பிராமணராகவும்தான் நான் பார்க்கப்படுகிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார். இவரது இந்த செயலை மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறார்.

‘‘என்ன காரியம் செய்திருக்கிறார்? காளி எங்காவது இருக்கிறாரா? உலகில் இல்லாதவருக்குப் போய் ஏன் பூஜை செய்து வழிபட்டிருக்கிறார்?’’ என்று ஜோதிபாசு கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால், சுபாஷ் சக்ரவர்த்தி அத்துடன் விடவில்லை. ‘‘ஜோதிபாசு எனக்குக் கடவுளுக்கு நிகரானவர். ஆனால், அனைத்து விஷயங்களிலும் அவர் சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நாட்களில் அவரே சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவுக்குள் சென்றிருக்கிறார். அவர் அந்தக் கோயிலுக்குள் செல்லும்போது சீக்கியர்களின் வழக்கப்படி தலையை மறைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்’’ என்று புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறார்.
‘‘ஜோதிபாசு கலியுகக் கண்ணன். குருஷேத்திரப் போரின்போது கௌரவர்களும் பாண்டவர்களும் கண்ணனின் ஆதரவைக் கோரியது போல, 1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்டபோது இருதரப்பும் ஜோதிபாசுவை தங்கள் பக்கம் கொண்டுவர முயற்சித்தன. அவர் இருந்த இடமே இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறது’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

‘இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து நாட்டின் பல நகரங்களில் சீக்கியர்கள் கொல்லப் பட்டனர். அந்த சமயத்தில் அப்பாவி சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் சீக்கியர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அடையாளமாகவும் ஜோதிபாசு அரசியல் நடவடிக்கையாகவே குருத்வாரா சென்றார்’ என்று மார்க்சிஸ்ட்கள் பதில் அளிக்கக் கூடும். மாநில முதலமைச்சர் என்ற முறையில் சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் தமது மாநிலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்காக அவர் சென்றிருக்கலாம்.

ரோமன் கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப் ஜான்பால் மறைவின்போது, கியூபாவில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்த ஒரு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ கலந்து கொண்டார். போப் ஜான்பால் கியூபாவுக்கு வந்திருந்தபோது, கியூபாவுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளைக் கண்டித்துப் பேசியிருந்தார் என்பது வேறுவிஷயம்.

ஒரு கம்யூனிஸ்ட்டாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டவர் மதம் தொடர்பான கூட்டங்களுக்குச் செல்லலாமா? ஒரு கம்யூனிஸ்ட்டே அப்படிச் செல்லக் கூடாது என்னும் போது, கடவுள் நம்பிக்கையும் மதநம்பிக்கையும் இல்லாத அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள் எப்படி இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

மார்க்சிய நெறிகளின்படி ஒரு மார்க்சிஸ்ட் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கலாமா என்ற விவாதத்தை சுபாஷ் சக்ரவர்த்தியின் காளி பூஜை ஏற்படுத்தி இருக்கிறது. ‘கட்சியினர் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை’ என்று சுபாஷ் சக்ரவர்த்தியால் எழுந்த சர்ச்சைக்கு சிலர் முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளின் முன்னணி அமைப்புகளான தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், மாணவர், இளைஞர் அமைப்புகளின் உறுப்பினர்கள் கடவுள் நம்பிக்கையுடன் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், அவற்றில் கட்சி உறுப்பினர்கள் மட்டும் இடம்பெறுவதில்லை. சாதாரண மக்கள் அவற்றில் உறுப்பினர்களாகிறார்கள்.

‘‘மதம் கற்பனையான சொர்க்கங்களை மக்களிடம் முன் வைக்கிறது. உண்மையில் தாங்கள் வாழும் உலகிலேயே ஒரு மாற்றத்தை உருவாக்கி, பெரும்பாலான மக்களுக்கு நிறைவான வாழ்க்கையைப் பெறும் சக்தி மக்களிடம் இருக்கிறது. இந்த உண்மையை மக்கள் அறியவிடாமல் மதம் தடுக்கிறது’’ என்பதே மார்க்சியத்தின் மதம் குறித்த பார்வை.

இந்நிலையில், கடவுள் நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு கட்சியில் இல்லை என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி சொல்ல இயலாது. ஏனெனில், இந்த உலகத்தை இறைவன் படைத்தான் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டால், அதனை ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுந்து விடுகிறது. உலகை மாற்றுவதற்கான அவசியம் இல்லாதபோது கம்யூனிஸ்ட் கட்சிக்கான தேவையே இல்லாமல் போய்விடுகிறது.

சுபாஷ் சக்ரவர்த்தி என்ற தனிமனிதரோ அல்லது வேறு யாருமோ கடவுள் நம்பிக்கையுடன் இருப்பதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபணையும் இருக்கத் தேவையில்லை. ஆனால், அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருப்பதாலேயே இதுகுறித்த சர்ச்சை எழுகிறது. இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில், ஆட்சியில் இருப்பவர்கள் உண்மையான மதச்சார்பற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும்.

மதச்சார்பின்மையை மத நல்லிணக்கம் என்று குறுக்கி விளக்கம் அளிக்கும் கட்சிகளின் மத்தியில், உண்மையான மதச்சார்பின்மைக்கு கம்யூனிஸ்ட்களே முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதிலும் நம் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இன்னும் கடவுள் நம்பிக்கையுடனும் மத நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். அவர்களுக்கான வழிபாட்டு உரிமையையும் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது.

ஆனால், ஆட்சியில் இருப்பவர்களும் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் எந்த மதரீதியிலான நடவடிக்கைகளிலும் பங்கேற்பது முறையல்ல! அவர்களை வழிநடத்துவது இந்திய அரசமைப்புச் சட்டமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, வேறெந்த நூலாகவும் இருக்கக் கூடாது!
-ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (27.09.06)

அமைதிக்காக அராஜகப் போர்?

தங்களது லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு பொதுவாக எதிரிகள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதில்லை. ஆனால், தெரியாத்தனமாக அது போன்ற உதவிகரமான சம்பவங்கள் அபூர்வமாக நடந்து விடுவதுண்டு. லெபனான் நாட்டில் இருந்து செயல்படும் ‘ஹிஸ்புல்லா’ என்ற இயக்கம், இரண்டு இஸ்ரேலிய ராணுவ வீரர்களை சிறைப் பிடித்துச் சென்ற நிகழ்ச்சி அத்தகைய சம்பவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஏராளமான லெபனான் நாட்டவர்களை இஸ்ரேல் பிடித்து சிறை வைத்துள்ளது. அவர்களை எல்லாம் மீட்பதற்கு பேரம் பேசுவதற்கு வசதியாக இருக்கும் என்று இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இருவரை உயிருடன் பிடித்துச் சென்றது ‘ஹிஸ்புல்லா’. ஆனால், ‘கிடைத்தது சான்ஸ்... ஹிஸ்புல்லாவின் உதவிக்கு நன்றி’ என்றபடியே அந்த இயக்கம் செல்வாக்குடன் திகழும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழிகின்றன. லெபனானில் வசிக்கும் சாதாரண பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கில் காயமடைந்துள்ளனர். இதில் இந்தியர் ஒருவர் பலியாகி இருக்கிறார். மூவர் காயம் அடைந்துள்ளனர்.

‘ஹிஸ்புல்லா’வினால் சிறை வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் ராணுவ வீரர்களை மீட்பதற்காகவும் ‘ஹிஸ்புல்லா’ இயக்கத்தவரை அழிப்பதற்காகவும் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால், தொலைக்காட்சிகளில் பார்க்க நேர்கின்ற காட்சிகள், நம்மைக் கலங்க வைக்கின்றன. மணிக்கட்டுப் பகுதியில் இருந்து கைகள் முழுவதும் கட்டுப் போட்ட ஓரிரு வயதுக் குழந்தைகள், தோல்கள் கருகிய காயங்களுடன் பிஞ்சுக் குழந்தைகள் போன்ற காட்சிகள் போரின் குரூரத்தைப் பறைசாற்றுகின்றன. இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் கடத்தலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

துப்பாக்கிகளும் பீரங்கிகளும் ஏவுகணைகளும் போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் மனித சமூகத்தின் தோல்வியை உணர்த்தும் அடையாளங்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு துப்பாக்கியும் ஒவ்வொரு பீரங்கியும் ஒவ்வொரு ஆயுதமும் எந்தப் பணத்தில் உருவாக்கப்படுகிறது அல்லது வாங்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. பசியால் வாடும் ஒரு சிறுவனுக்குத் தேவையான தொகையிலிருந்தோ அல்லது கல்வி கற்க வசதியில்லாத சிறுவர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய தொகையில் இருந்தோ வாங்கப்பட்டது என்ற உணர்வே மேலோங்குகிறது.

நடைபாதைகளில் வசித்துக் கொண்டு தங்கள் மானத்தை மறைத்துக் கொள்ள மாற்றுத் துணிகூட இல்லாத மக்களின் வாழ்க்கையில் சிறு ஒளி ஏற்றுவதற்குப் பயன்படாத பணம், எதிரிகள் என்று கருதப்படும் மனிதர்கள் மீது பெரும் நெருப்பைக் கக்கும் ஆயுதங்கள் வாங்குவதற்குப் பயன்படுகிறது! இந்த எண்ணமே நாகரிக மனிதர்களின் நெஞ்சங்களைப் பதறச் செய்கிறது. இங்கே வீணாவது பணம் மட்டும் அல்ல; அறிவியல் அறிஞர்களின் அறிவுத் திறன், அதற்குச் செயல்வடிவம் கொடுக்கும் தொழிலாளர்களின் உழைப்பு, சொந்த நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்களின் நம்பிக்கைகள் எல்லாமே ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் சிதறி சின்னாபின்னமாகின்றன.

இரு ராணுவ வீரர்களை விடுவிப்பதற்காகவும் கடத்திச் சென்றவர்களைக் கொன்று ஒழிப்பதற்காகவும் தாக்குதல் நடத்துவதாக சொல்லும் இஸ்ரேல், நடத்திவரும் தாக்குதல்களைப் பார்க்கும்போது லெபனானின் பொருளாதார முதுகெலும்பையே நொறுக்கி விடுவதும் அதன் நோக்கமாகத் தெரிகிறது.

போர், லெபனான் நாட்டு மக்களுக்குப் புதிதல்ல. இரு போர்களுக்கு இடையிலான காலம் அமைதிக்காலமா அல்லது இரு அமைதி காலங்களுக்கு இடையில் நடப்பது போர்க்காலமா என்று சொல்ல இயலாத அளவு லெபனான் தொடர்ச்சியாகப் பல மோதல்களைச் சந்தித்து வந்துள்ளது.

இப்போது, ‘ஹிஸ்புல்லா’வை அழிப்பதற்காகவும் அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவைப் பிடித்துக் கொல்வது அல்லது கொன்று பிடிப்பது என்பதற்காகவும் இந்தப் போரை நடத்துவதாகச் சொல்கிறது இஸ்ரேல்.

இதன் பின்னணியில் இருப்பது, முழுக்க முழுக்க அமெரிக்கா. மத்திய கிழக்கு ஆசியாவில் ஜனநாயகத்தை நிறுவ விரும்புகிறது அமெரிக்கா. இந்த ஜனநாயகத்துக்கு அந்தந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்று பொருள் இல்லை... மாறாக, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷ§க்கு இணக்கமாகச் செல்லும் ஆட்சி என்று அர்த்தம் போலும்!

லெபனானில் நாடாளுமன்றத்துக்கு 12 ‘ஹிஸ்புல்லா’ உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தெற்கு லெபனான் முழுவதும் ‘ஹிஸ்புல்லா’ கூட்டணிக்கே மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். தெற்கு லெபனானை ஆக்கிரமித்து இருந்த இஸ்ரேலை வெளியேறச் செய்ததில் ‘ஹிஸ்புல்லா’வுக்குப் பெரும்பங்கு இருந்தது என்று மக்கள் அதை ஆதரிக்கிறார்கள்.

ஆனால், மக்களின் உணர்வை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்றுக் கொள்ளவில்லை. கைகள் முழுவதும் ரத்தக் கறைகளுடன் உலகின் எந்தப் பகுதியிலும் யாரும் ‘ஜனநாயகத்தை’ நிலைநாட்டிவிட முடியாது. இருந்தும் ஆப்கானிஸ்தான், ஈராக் வரிசையில் லெபனான் மீது அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பட்டியல் இத்துடன் முடிவடைவதாகவும் தெரியவில்லை. சிரியா, ஈரான் என்று தொடர இருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் போர்களை ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு முடிவுக்குக் கொண்டுவர இயலவில்லை. லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலைக் கண்டித்து ஒரு தீர்மானம் கூட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிறைவேற்ற முடியவில்லை. அமெரிக்கா தனது ரத்து செய்யும் சிறப்பு உரிமை மூலமாக தீர்மானத்தை ரத்து செய்தது.

பொதுவாக போர்களில் பலியாவது, மனித உயிர்கள் மட்டுமல்ல. உண்மை, நேர்மை அனைத்தும் பலியாகின்றன. போரிலும் காதலிலும், அனைத்தும் நியாயமானவை என்ற கருத்தின் மூலம் அனைத்து விஷயங்களும் மறைக்கப்படுகின்றன. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் போர் என்றும் அமைதியை ஏற்படுத்துவதற்குப் போர் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு பெண்ணின் ‘கற்பைக்’ காப்பதற்காகத்தான் அவளை வன்புணர்ந்தேன் என்று ஒருவன் சொல்ல முடியுமா? இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானது என்பதை ஏன் இவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால், அவர்களை ஒழிப்பதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுக்கும் போர் புதிய பயங்கரவாதிகளையே உருவாக்குகிறது. அதாவது, போரில் அவர்களால் கொல்லப்படும் பயங்கரவாதிகளைவிட புதிதாக உருவாகும் பயங்கரவாதிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள். ஏனென்றால், பயங்கரவாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது அந்தக் குடும்பங்களில் இருந்து புதியவர்கள் விரக்தியிலும் பழிவாங்கும் உணர்விலும் தவறான பாதையில் புறப்படுகிறார்கள். ‘‘ஏழைகள் தொடுக்கும் போருக்குப் பயங்கரவாதம் என்று பெயர்; வலியவர்களின் பயங்கர வாதத்துக்குப் போர் என்று பெயர்’’ என்பதே ஏழை நாடுகளின் குரலாக இருக்கிறது!
- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (02-08-06)

Thursday, February 01, 2007

தடை தாண்டும் தலைவிகள்!

நாடாளுமன்றத் தேர்தலை விடவும் சட்டமன்றத் தேர்தலைவிடவும் உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரு தீவிரமான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துவதுண்டு. அதிலும் நாம் வாழும் பகுதியின் வசதிகளையும் தேவைகளையும் நிறைவேற்றும் அமைப்பாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்றங்கள் இருக்கின்றன என்பதால், போட்டியும் மோதலும்கூட அதிகமாக இருக்கக் கூடும். அண்மையில் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனைவியை அவரது கணவரே சுட்டுக் கொன்று விட்டார். வீட்டில் தனக்கென்று ஒரு கருத்தை ஒரு பெண் வலியுறுத்த முடியவில்லை என்பதற்குச் சான்றாக இந்த சம்பவம் இருக்கும்போது, சமூகத்துக்குத் தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகளில் பெண்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறித்து வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம் பின்னோக்கித் திருப்பிப் பார்த்தால் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமைகூட இல்லாத நிலை இருந்திருக்கிறது. முதல் கட்டமாகப் பெண்கள் வாக்குரிமைக்கான இயக்கத்தைத் தொடங்கி நடத்தி இருக்கிறார்கள்.

அதன்பிறகே 1920 முதல் 1930 வரையிலான காலத்தில் சொத்துக்களுடைய பெண்களுக்கு மட்டும் வாக்குரிமை கிடைத்திருக்கிறது. ஆனாலும் சட்டமன்றங்களில் அவர்கள் போட்டியிடத் தடை இருந்திருக்கிறது. அந்தத் தடையையும் நீக்குவதற்கு இந்தியப் பெண்கள் சங்கம் முயற்சிகள் மேற்கொண்டதற்குப் பிறகே 1930 இல் சட்டமன்றங்களில் பெண்கள் நியமிக்கப்படுவதற்கு கவர்னர் ஜெனரல் அனுமதித்திருக்கிறார். அப்படிப் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை 1930 இல் தொடங்கி வைத்தவர்தான் முத்துலட்சுமி ரெட்டி. அதாவது இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்.

அதன்பின்னும் ஏராளமான சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தடைகள் பெண்களைப் பொதுவாழ்வில் ஈடுபட அனுமதிக்கவில்லை. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான போராட்டங்களில் பெண்கள் மாபெரும் பங்கை ஆற்றி இருந்தாலும், அவர்கள் அதிகார மையங்களுக்கான தேர்தல்களில் ஆர்வமாகப் பங்கேற்கவில்லை. நமது மரபுகள் பெண்களைக் குடும்பத்துக்குள் பூட்டி வைப்பதாகவே இருந்தன என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இறுதியில் 1993ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த 73 மற்றும் 74 -வது இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்குப் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்தன.

எவ்வளவோ வளர்ச்சி பெற்றிருக்கும் அமெரிக்காவில் இன்னும் ஒரு பெண் அதிபர்கூட வரவில்லை. ஆனால், தெற்காசியப் பகுதியில்தான் பல பெண்கள் அரசியலில் மிக உயர்ந்த பதவிக்கு வந்திருக்கிறார்கள். இலங்கையில் சிரிமாவோ பண்டாரநாயகா, இந்தியாவில் இந்திரா காந்தி, பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோ, வங்காள தேசத்தில் கலீதா ஜியா மற்றும் ஷேக் ஹசீனா ஆகியோர் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த நாட்டில் உள்ள பெண்கள் வாழ்வில், பெரிய முன்னேற்றம் இல்லை!

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, 73-வது அரசமைப்புச் சட்டத்திருத்தம், நமது பெண்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுவரை அப்பா, சகோதரர்கள், கணவன் மற்றும் மகன்களுடைய அரசியல் வாழ்க்கைக்குப் பின்னால் இருந்து உழைத்துக்கொண்டிருந்த பெண்கள், முன்னணிக்கு வந்தனர். நேரடி அனுபவம் இல்லாத சூழலில் அவர்களது பதவிகளின் அதிகாரத்தை அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஓர் ஆண் கையில் வைத்திருந்திருக்கலாம். அதையே அவர்களுக்கு எதிரான பிரசாரமாக மேற்கொள்வது சரியல்ல. அதேபோல் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ள இடங்களில் போட்டியிட முடியாத ஆண் அரசியல்வாதிகள், தங்கள் குடும்பத்துப் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி, அவர்களைப் பொம்மைகளாக்கி அரசியல் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அதிகாரங்கள் கைமாறும்போது அவற்றை இழப்பவர்கள் மவுனமாக வேடிக்கை பார்க்க மாட்டார்கள். எனவே ஒரு நகராட்சியின் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த நகராட்சியின் துணைத்தலைவராக இருக்கும் ஆண், இந்தப் பெண் தலைவரின் அதிகாரங்களைத் தனது கையில் எடுப்பதற்கான முயற்சியில் இறங்கக் கூடும். அலுவலக அதிகாரியாக இருந்தாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் புதிதாக அதிகாரத்துக்கு வரும் எந்தப் பெண்ணுக்கும் இதுபோன்று நிகழக் கூடும். கையில் இருக்கும் அதிகாரம், மக்கள் துணை, சட்டரீதியிலான உதவி போன்ற கையில் கிடைக்கும் அனைத்தையும் பற்றிக்கொண்டு தங்கள் இடத்தை அந்தப் பெண்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுடன் 1996, 2001 இரு உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து இப்போது மூன்றாவது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்ததைப்போல் அல்லாமல் இப்போது பெண்கள் தங்கள் இடங்களை உறுதி செய்து கொள்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் மைக்கேல்பட்டினம் என்ற கிராமத்தின் தலைவர் ஜேசுமேரி, 1996, 2001 இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஊர்த்தலைவி ஆகியிருக்கிறார். கிராமத்து மக்களை ஒன்றுதிரட்டி கிராமத்தின் தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்கி இருக்கிறார். 100 சதவிகிதம் மழைநீர் சேமிப்புத் திட்டத்தையும் ஊரில் நடைமுறைப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாடு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் சங்கம், அவரது தலைமையையும் சேவையையும் பாராட்டி அவருக்கு ‘சேவாரத்னா’ விருது வழங்கியிருக்கிறது. உலக வங்கி விருதையும் பெற்றிருக்கிறார். இவரைப்போல சிறப்பாகச் செயல்படுகின்ற தலைவியர் ஏராளமாக இருக்கின்றனர். சமீபகாலத்தில் வலிமையுடன் வளர்ந்துவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களும் பெண் தலைவர்களுடைய செயல்பாட்டுக்கு பக்க துணையாக இருக்கும் என்று நம்பலாம்.


இன்னும் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம். உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு கிடைக்க உதவி செய்த அரசமைப்புச் சட்டத் திருத்தம், பெண்களின் அரசியல் பயணத்துக்கான துவக்கத்தை அளித்திருக்கிறது. அந்தத் திருத்தமும் இட ஒதுக்கீடு காரணமாகப் பெறும் பதவியும் மட்டும் அவர்கள் மேம்பாட்டுக்குப் போதாது. கல்விரீதியாகவும் சமூகரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் பெண்கள் உயர்ந்த நிலையை அடைவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இந்தக் கடமையைச் செய்யத் தவறும் ஆண் அரசியல்வாதிகளுக்கு, பெண்கள் தலைமையில் இயங்கும் உள்ளாட்சி அமைப்புகளைக் குறை சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. ஏனெனில், அந்தக் குறைகளுக்கான காரணங்கள் நமது சமூகத்தில் இருக்கின்றனவே தவிர அந்தப் பெண்களிடத்தில் இல்லை!
- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (01.10.06)

வரலாற்றுப் பிழைகள்

‘கிறிஸ்தவர்களுக்கு மதமாற்றம் செய்வதற்கான உரிமை உள்ளது என்று சொன்னவர் இவர்களில் யார்?’
அ) சோனியா காந்தி ஆ) சகோதரி நிர்மலா இ)போப் பெனடிக்ட் ஈ) அருட்தந்தை பிரகாஷ்.

இந்தியாவில் சிறுபான்மையினரால் கறுப்பு நாள் என்றும் ஆர்.எஸ்.எஸ்-&ஸால் வெற்றி நாள் என்றும் கொண்டாடப்படும் நாள் எது?’
அ) செப்டம்பர் 11 ஆ) ஜூலை 2 இ) ஜனவரி 26 ஈ) டிசம்பர் 6.

இந்தக் கேள்விகள் ஆர்.எஸ்.எஸ். உணர்வு கொண்ட தொலைக்காட்சியில் நடைபெற்ற பொது அறிவு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் என்று நினைத்து விடாதீர்கள். ஆயுர்வேத மருத்துவர்களை வேலைக்கு எடுப்பதற்காக ‘குஜராத் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ நடத்திய தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள்.

இவை மட்டுமல்ல... குஜராத் அரசின் பசுவதைத் தடைச் சட்டம், மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவைக் கேலி செய்யும் கேள்வி, முகமது நபி குறித்த கேலிச்சித்திர சர்ச்சை, அமீர்கான் நடித்த ‘ஃபனா’ என்று அரசியல் ரீதியாகவும் மதக் கண்ணோட்ட ரீதியிலும் பல கேள்விகள் அதில் இருந்ததாக வந்த ஒரு செய்தியை நீங்கள் படித்திருக்கக் கூடும்.

இந்தத் தேர்வை எழுதிய ஒருவர் இந்தக் கேள்வித்தாள் குறித்து, ‘‘பொதுஅறிவு, கணிதம், புவியியல் மற்றும் வரலாறு குறித்த கேள்விகளே இந்தத் தேர்வில் இடம்பெற வேண்டும். ஆனால், இந்தக் கேள்விகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்’’ என்றார்.

பாவம்! அவருக்கு உலகம் புரியவில்லை என்பதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை.
எங்கும் எப்போதும் வெற்றி பெற்றவர்களின் பார்வையிலேயே வரலாறு எழுதப்படுகிறது.

புலிகள் தங்களுக்கென்று வரலாற்று ஆசிரியர்களை வைத்துக் கொள்ளாதவரை, புலி வேட்டையில் சிறந்த மன்னனின் வீரமே வரலாற்றின் பக்கங்களில் நிறைந்திருக்கும். மான்கள் தங்களுக்கென்று தங்கள் பார்வையில் அச்சம் நிறைந்த வாழ்க்கையைப் பதிவு செய்யாதவரை, புலிகளின் பாய்ச்சலே போற்றிப் புகழப்பட்டுக் கொண்டிருக்கும். தீர்வு கிடைக்காமல் இழுத்துக் கொண்டிருக்கும் பிரச்னைக்கு எங்கோ, யாரோ, எப்போதோ செய்த ஒரு செயல்தான் காரணம் என்று கூறும் வலியவர்களின் குரலே வரலாறாகப் பதிவாகி இருக்கும்.

வரலாறு என்பது என்ன? அதில் சொல்லப்படும் விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா? ஒரு முட்டாள்கூட ஒரு வரலாற்று சம்பவத்தின் நாயகனாக இருக்க முடியும். ஆனால், அந்த வரலாறு அவனால் எழுதப்படாது. வேறு யாராவது ஓர் அறிஞனால் எழுதப்படும். ஒருவேளை, அந்த முட்டாளின் பார்வையிலேயேகூட எழுதப்படலாம். அது அந்த முட்டாள் வெற்றி பெற்றானா அல்லது தோல்வி அடைந்தானா என்பதைப் பொறுத்த விஷயம்!

இதனால்தானோ என்னவோ, இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி நடந்தது. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசியக் கழகம் போன்ற அமைப்புகளில் முரளி மனோகர் ஜோஷி மற்றும் ராஜு பையா என்றழைக்கப்பட்ட ராஜேந்திர சிங் ஆகியோரின் சீடர்கள் நியமிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. மாணவர்களின் இளம் மனங்களில், ‘வெறுப்பு’ விதையைத் தூவக் கூடாது என்ற பெயரில் நாதுராம் கோட்சே, மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றான் என்ற செய்தியைக்கூட மறைப்பதற்கு முயற்சி நடைபெற்றது.

இதற்கெல்லாம் முன்னதாகவே உத்தரப்பிரதேசத்தில் கல்யாண்சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது, மாநில அரசின் பாடநூல்களில் இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. ஒரு குறிப்பிட்ட வேலையை இத்தனை மணி நேரம் இவ்வளவு மனிதர்கள் செய்து முடிக்கிறார்கள் என்றால், வேறு ஒரு வேலையை இத்தனை மனிதர்கள் எவ்வளவு மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும் என்ற ரீதியிலான கேள்வியை நாம் கணிதத்தில் படித்திருப்போம். அதையே அங்கு ‘ஒரு மசூதியை இடிப்பதற்கு இத்தனை நபர்களுக்கு இவ்வளவு மணி நேரம் ஆகிறது’ என்று மாற்றிக் கணக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இந்த முயற்சிக்கு அப்போது நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் கேட்டது.

இப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த அரசும் தேசிய பாடத்திட்டத்தில் மாறுதல்களை முன்வைத்திருக்கிறது. சர்ச்சைகளுக்கு இடமில்லாத சம்பவங்களை மட்டுமே பாடங்களில் சேர்ப்பதாக முதலில் இருந்த கொள்கை இப்போது மாற்றப்பட்டுள்ளது. ஏராளமான சர்ச்சைகளுடன் சமகால அரசியலில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை அவற்றின் சர்ச்சைத்தன்மை காரணமாகப் பாடங்களில் இருந்து ஒதுக்கி வைப்பதில்லை என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது.

இதன் காரணமாகக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசியக் கழகம் பிளஸ் 2 வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடத்தில் இந்திய அரசியலில் முக்கியமான திருப்புமுனை சம்பவங்களைச் சேர்த்திருக்கிறது. இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு நடந்த 1984 சீக்கியர் படுகொலை, சமீபத்திய குஜராத் கலவரத்தில் நடந்த இஸ்லாமியர் படுகொலைகள், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு சவால் விட்ட நெருக்கடி நிலை போன்ற உள்நாட்டு சம்பவங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. நேருவின் வெளியுறவுக் கொள்கை, இந்திய சீனப் போர், 1971 பாகிஸ்தானுடனான போர், இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை, அமெரிக்கா&சோவியத் யூனியன் பனிப் போர் காலம், உலக அரங்கில் அமெரிக்காவின் தனிப் பெரும் செல்வாக்கு, தெற்காசியா என்று பல பாடங்கள் வரவுள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களிலும் மாறுபட்ட பார்வைகளும் சிந்தனைகளும் உள்ளன. அப்படி இருக்கும்போது, அரசு எந்தப் பார்வையை மாணவர்களிடம் எடுத்துச் சொல்லும் என்ற கேள்வி எழுவது இயல்பு. சர்ச்சைகளுக்கு இடமே இல்லாத அரசாங்கத்தின் பார்வை மட்டுமே பாடமாக இடம் பெறும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த வாக்கியமே ஏராளமான சர்ச்சைகளுக்கு இடமளிக்கக் கூடியது. இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலை குறித்து எந்த அரசாங்கத்தின் பார்வை பாடமாக வரும்? இந்திராவின் காங்கிரஸ் அரசாங்கத்தின் பார்வையா அல்லது மொரார்ஜி தேசாயின் ஜனதா அரசாங்கத்தின் பார்வையா என்பது புரியவில்லை. இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் கொல்லப்பட்டது குறித்து பிரதமர் ராஜீவ் காந்தி, ‘ஒரு மிகப்பெரிய ஆலமரம் விழும்போது பூமியில் அதிர்வுகள் ஏற்படுவது சகஜம்தான்’ என்று சொன்ன தகவலும், அதன் பின்னால் இருக்கும் அரசியலும் இடம்பெறுமா? ‘ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர்ச்செயல் இருக்கும்’ என்று குஜராத்தில் இஸ்லாமியர் கொல்லப்பட்டபோது நரேந்திர மோடி பேசியதும், அதன்பின் உள்ள அரசியலும் இடம்பெறுமா?

பதினைந்து முதல் இருபது ஆண்டுகளுக்கு முன், பாபர் மசூதி என்றும் அது அமைந்திருக்கும் இடம் என்றும் அயோத்தியில் ஒரு பகுதி அழைக்கப்பட்டது. அதன்பின் சில ஆண்டுகளில் ‘சர்ச்சைக்குரிய கட்டடம் மற்றும் நிலப்பரப்பு’ என்றானது. இப்போது அங்கு ‘தற்காலிகமாக’ அமைக்கப்பட்ட ராமர் கோயில் என்றுகூடக் குறிப்பிடப்படாமல், ‘அயோத்தியில் ராமர் கோயிலுக்குள் குண்டுகள் துளைக்காத பாதுகாப்பு ஏற்பாடுகள்’ என்று பேசப்படுகிறது. இவற்றில் எந்தப் பார்வையைப் பாடத்தில் நாம் படிக்கப் போகிறோம்? நமது வாழ்நாளின் மிகக் குறுகிய காலத்திலேயே நம் கண் எதிரில் வரலாறும் அரசியல் அறிவியலும் படும்பாட்டை நாம் பார்க்க முடிகிறது.

வரலாறு மனிதர்களால் படைக்கப்படுகிறது. மனிதர்கள் வரலாற்றில் சிக்கிக் கொள்கிறார்கள். வரலாறும் மனிதர்களிடத்தில் மாட்டிக்கொண்டு விடுகிறது. அதை எழுதுபவர்களுக்கும் பதிப்பவர்களுக்கும் வருமானத்தைத் தருவதைத் தவிர, வரலாற்றால் எந்த பயனும் இல்லை என்று கருதுபவர்களும் உண்டு. கவிதைக்குப் பொய் அழகு என்று நாம் கூறினாலும்கூட, வரலாற்றைவிட கவிதை உண்மையின் அருகில் இருக்கிறது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். அழுக்குப் படிந்த அரசியலைச் சுத்தம் செய்து, சிறுவர்களுக்கும் அப்பாவிகளுக்கும் படிக்கத் தருவதே வரலாறு என்ற பார்வையும் நம்மிடையே உள்ளது. வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மைதான்... என்ன பாடம்? இது போன்ற ‘வரலாறு’களில் இருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்ற பாடம்தான் அது!
ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் 27.08.06

பிரம்பு பேசுமா அன்பு?

பாலர் வகுப்பில் படிக்கும் நான்கு வயதுக் குழந்தை ஒன்றின் பெற்றோரிடம் நீண்ட அனுபவம் கொண்ட அந்த ஆசிரியை மன்னிப்புக் கேட்டார், ‘‘நான் அவளது தலைமுடியை எல்லாம் பற்றி இழுக்கவில்லை. காதைப் பிடித்துதான் திருகினேன். தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று. தங்கள் குழந்தையை உடல்ரீதியாக துன்புறுத்தியதாக அந்தக் குழந்தையின் பெற்றோர் புகார் கொடுத்ததையடுத்தே அந்த ஆசிரியை இப்படி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இவ்வளவுக்கும் மிகவும் நன்றாகப் பாடம் எடுக்கும் ஆசிரியை என்று பெயர் வாங்கியவர்தான் அந்த ஆசிரியை.

மிகவும் நன்றாகப் பாடம் நடத்தும் ஆசிரியர் ஏன் இதுபோன்று நடந்து கொள்கிறார்? குழந்தைகளிடத்தில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதற்கு உடல்ரீதியான தண்டனை வழங்குவதுதான் சுலபமான வழி என்ற நமது சமூகத்தில் நிலவி வருகிற பரவலான நம்பிக்கை காரணமாக இருக்கலாம். இதனால் தான் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது தலைமை ஆசிரியரிடம், ‘‘தப்பு செய்தான்னா, ரெண்டு கண்ணை மட்டும் விட்டுட்டு, உரிச்சு உப்புக் கண்டம் போடுங்க’’ என்று சொல்வதுண்டு.

மாணவர்கள் மறந்து ஒரு நோட்டை எடுத்துவராமல் இருந்து விட்டாலும் ஆசிரியர்களும் அவர்களை வெயிலில் நின்று தோப்புக்கரணம் போட வைக்கிறார்கள். சிலர் மாணவர் களை முழங்காலிட்டு வகுப்பு முடியும் வரை இருக்கச் செய்கிறார்கள். பக்கத்து இருக்கையில் உள்ள மாணவியிடம் இருந்து இரண்டு ரூபாய் திருடிவிட்டதாக இன்னொரு சக மாணவியை சந்தேகப்பட்ட ஆசிரியை, அவளை ஒரு மணி நேரம் கழிப்பறையில் அடைத்து வைத்துவிடுகிறார். இது போன்ற தண்டனைகள் எல்லாம் நமது நாட்டில் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

கடந்த வாரம் சென்னை தாம்பரத்தில், மோட்டார் சைக்கிளை தொட்டதற்காக அலெக்சாண்டர் என்ற மாணவனை தலைமை ஆசிரியர் அருள்ராஜ், வயிற்றுக்குக் கீழே எட்டி உதைத்திருக்கிறார். தண்டையார் பேட்டையில் உள்ள மேனிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக பள்ளி மாணவிகள் திரண்டு போலீஸில் புகார் கொடுத்திருக்கின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் தரையைத் துடைக்கச் சொல்லி ஆசிரியை கொடுமைப்படுத்துவதாக ஒரு மாணவன் புகார் கொடுத்துள்ளான். உச்சகட்டமாக சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள பெண்கள் மேனிலைப் பள்ளி ஒன்றில் மாணவி சுகன்யா, பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார்.

தொடர்ந்து நடைபெற்றுவரும் இப்படியான சம்பவங்களும் அவற்றுக்கு பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பும் இப்போது அரசை நடவடிக்கை எடுப்பதற்குத் தூண்டியுள்ளன. பள்ளி மாணவர்களைக் கொடுமைப்படுத்தினால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருக்கிறார். தேவைப்பட்டால், பள்ளியை அரசே ஏற்று நடத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்காக அமைச்சரைப் பாராட்டலாம்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. குழந்தைகள் சட்டம் 1960 இன் கீழ் 1962 ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம், மாணவரை அடித்ததற்காக ஓர் ஆசிரியரைத் தண்டித்திருப்பதாக அறிய முடிகிறது. சமீப காலங்களில் குழந்தைகளின் உளவியல் குறித்து ஊடகங்களில் விளக்கமாக விவாதிக்கப்படுகிறது. இருந்தும் இன்னும் பள்ளியில் குழந்தைகளுக்கு உடல்ரீதியான தண்டனைகள் வழங்கப்பட்டுதான் வருகின்றன. வேறுவார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கண்களுக்கு மட்டுமே குற்றங் களாகத் தெரிகின்றனவே தவிர, மக்கள் மனதில் இவை குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை.

குழந்தைகளை கட்டுப்பாடான வாழ்க்கைக்குள் கொண்டு வருவதற்கு உடல்ரீதியான தண்டனை பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை மக்களிடம் மிகவும் ஆழமாக இருக்கிறது. சட்டங்கள் மூலம், பள்ளிகளில் அளிக்கப்படும் தண்டனையைக் குறைக்க முடிந்தாலும் குடும்பங்களில் பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கும் தண்டனையை ஒழிப்பதற்கு இன்னும் நிறைய தூரம் நாம் போக வேண்டியதிருக்கிறது.

குழந்தைத் தொழிலாளர்கள், வீதிகளில் வளரும் சிறுவர்கள், காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறுவர் சிறைகள், பள்ளிகள், குடும்பங்கள் மற்றும் பல இடங்களில் பலவிதங்களில் குழந்தைகள் தாக்கப்படுகின்றனர். சம்பளம் கொடுக்கும் முதலாளி, கற்றுக் கொடுக்கும் ஆசிரியர், பெற்று வளர்க்கும் பெற்றோர் ஆகியோரை அவரவர் இடங்களுக்குத் தக்கபடி குழந்தைகள் மதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது நமக்குக் கிடைக்கும் அதிகாரத்தை நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம். குழந்தைகள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மாறாக அவர்களிடம் நடந்து கொள்கிறோம். அவர்களை அடிப்பதையும் கடுமையான சொற்களால் திட்டுவதையும் வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

குழந்தைகளின் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டுத் தீர்மானங்களை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே அலட்சியம், சுரண்டல், துன்புறுத்தல், பாலியல் கொடுமை மற்றும் பிற கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது இந்திய அரசின் கடமையாகும். இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு அளித்துள்ள உரிமைகளும் ஐ.நா. மாநாடு அளித்துள்ள உரிமைகளும் இந்தியக் குழந்தைகளுக்கும் உரியவை. மனித உரிமை என்ற அணுகுமுறையில் குழந்தைகளையும் பார்ப்பதே சரியான பார்வையாக இருக்கும். ஏனெனில், குழந்தைகளும் இந்த நாட்டு மக்களே. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் கொடுமையான குற்றங்களாகப் பார்க்கப்பட வேண்டும்.

குழந்தைகளின் மனம் சுத்தமானது. அதில் நாம் என்ன விதைக்கிறோமோ அதுவே வளரும். தவறுகளைத் திருத்துவதற்காக என்று சொல்லிக் கொண்டு, அடி, உதை, சுடுசொற்கள் போன்ற வன்செயல்களை அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அவர்களும் வளர்ந்து இளைஞர்களாவார்கள். நாம் இப்போது அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதை அவர்கள் அப்போது நமக்கு எதிராகப் பிரயோகிப்பார்கள். அப்படி நடந்தால், அப்போது நாடே தாங்காது. ஏனெனில், எந்த சமூகத்திலும் குழந்தைகளை விட அதிக அளவில் தவறுகள் செய்பவர்கள் பெரியவர்களே!

- ஜென்ராம்

நன்றி: ஜூனியர் விகடன் (29.11.06)