Thursday, February 01, 2007

தடை தாண்டும் தலைவிகள்!

நாடாளுமன்றத் தேர்தலை விடவும் சட்டமன்றத் தேர்தலைவிடவும் உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரு தீவிரமான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துவதுண்டு. அதிலும் நாம் வாழும் பகுதியின் வசதிகளையும் தேவைகளையும் நிறைவேற்றும் அமைப்பாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்றங்கள் இருக்கின்றன என்பதால், போட்டியும் மோதலும்கூட அதிகமாக இருக்கக் கூடும். அண்மையில் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனைவியை அவரது கணவரே சுட்டுக் கொன்று விட்டார். வீட்டில் தனக்கென்று ஒரு கருத்தை ஒரு பெண் வலியுறுத்த முடியவில்லை என்பதற்குச் சான்றாக இந்த சம்பவம் இருக்கும்போது, சமூகத்துக்குத் தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகளில் பெண்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறித்து வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம் பின்னோக்கித் திருப்பிப் பார்த்தால் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமைகூட இல்லாத நிலை இருந்திருக்கிறது. முதல் கட்டமாகப் பெண்கள் வாக்குரிமைக்கான இயக்கத்தைத் தொடங்கி நடத்தி இருக்கிறார்கள்.

அதன்பிறகே 1920 முதல் 1930 வரையிலான காலத்தில் சொத்துக்களுடைய பெண்களுக்கு மட்டும் வாக்குரிமை கிடைத்திருக்கிறது. ஆனாலும் சட்டமன்றங்களில் அவர்கள் போட்டியிடத் தடை இருந்திருக்கிறது. அந்தத் தடையையும் நீக்குவதற்கு இந்தியப் பெண்கள் சங்கம் முயற்சிகள் மேற்கொண்டதற்குப் பிறகே 1930 இல் சட்டமன்றங்களில் பெண்கள் நியமிக்கப்படுவதற்கு கவர்னர் ஜெனரல் அனுமதித்திருக்கிறார். அப்படிப் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை 1930 இல் தொடங்கி வைத்தவர்தான் முத்துலட்சுமி ரெட்டி. அதாவது இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்.

அதன்பின்னும் ஏராளமான சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தடைகள் பெண்களைப் பொதுவாழ்வில் ஈடுபட அனுமதிக்கவில்லை. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான போராட்டங்களில் பெண்கள் மாபெரும் பங்கை ஆற்றி இருந்தாலும், அவர்கள் அதிகார மையங்களுக்கான தேர்தல்களில் ஆர்வமாகப் பங்கேற்கவில்லை. நமது மரபுகள் பெண்களைக் குடும்பத்துக்குள் பூட்டி வைப்பதாகவே இருந்தன என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இறுதியில் 1993ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த 73 மற்றும் 74 -வது இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்குப் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்தன.

எவ்வளவோ வளர்ச்சி பெற்றிருக்கும் அமெரிக்காவில் இன்னும் ஒரு பெண் அதிபர்கூட வரவில்லை. ஆனால், தெற்காசியப் பகுதியில்தான் பல பெண்கள் அரசியலில் மிக உயர்ந்த பதவிக்கு வந்திருக்கிறார்கள். இலங்கையில் சிரிமாவோ பண்டாரநாயகா, இந்தியாவில் இந்திரா காந்தி, பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோ, வங்காள தேசத்தில் கலீதா ஜியா மற்றும் ஷேக் ஹசீனா ஆகியோர் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த நாட்டில் உள்ள பெண்கள் வாழ்வில், பெரிய முன்னேற்றம் இல்லை!

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, 73-வது அரசமைப்புச் சட்டத்திருத்தம், நமது பெண்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுவரை அப்பா, சகோதரர்கள், கணவன் மற்றும் மகன்களுடைய அரசியல் வாழ்க்கைக்குப் பின்னால் இருந்து உழைத்துக்கொண்டிருந்த பெண்கள், முன்னணிக்கு வந்தனர். நேரடி அனுபவம் இல்லாத சூழலில் அவர்களது பதவிகளின் அதிகாரத்தை அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஓர் ஆண் கையில் வைத்திருந்திருக்கலாம். அதையே அவர்களுக்கு எதிரான பிரசாரமாக மேற்கொள்வது சரியல்ல. அதேபோல் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ள இடங்களில் போட்டியிட முடியாத ஆண் அரசியல்வாதிகள், தங்கள் குடும்பத்துப் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி, அவர்களைப் பொம்மைகளாக்கி அரசியல் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அதிகாரங்கள் கைமாறும்போது அவற்றை இழப்பவர்கள் மவுனமாக வேடிக்கை பார்க்க மாட்டார்கள். எனவே ஒரு நகராட்சியின் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த நகராட்சியின் துணைத்தலைவராக இருக்கும் ஆண், இந்தப் பெண் தலைவரின் அதிகாரங்களைத் தனது கையில் எடுப்பதற்கான முயற்சியில் இறங்கக் கூடும். அலுவலக அதிகாரியாக இருந்தாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் புதிதாக அதிகாரத்துக்கு வரும் எந்தப் பெண்ணுக்கும் இதுபோன்று நிகழக் கூடும். கையில் இருக்கும் அதிகாரம், மக்கள் துணை, சட்டரீதியிலான உதவி போன்ற கையில் கிடைக்கும் அனைத்தையும் பற்றிக்கொண்டு தங்கள் இடத்தை அந்தப் பெண்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுடன் 1996, 2001 இரு உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து இப்போது மூன்றாவது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்ததைப்போல் அல்லாமல் இப்போது பெண்கள் தங்கள் இடங்களை உறுதி செய்து கொள்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்தில் மைக்கேல்பட்டினம் என்ற கிராமத்தின் தலைவர் ஜேசுமேரி, 1996, 2001 இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஊர்த்தலைவி ஆகியிருக்கிறார். கிராமத்து மக்களை ஒன்றுதிரட்டி கிராமத்தின் தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்கி இருக்கிறார். 100 சதவிகிதம் மழைநீர் சேமிப்புத் திட்டத்தையும் ஊரில் நடைமுறைப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாடு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் சங்கம், அவரது தலைமையையும் சேவையையும் பாராட்டி அவருக்கு ‘சேவாரத்னா’ விருது வழங்கியிருக்கிறது. உலக வங்கி விருதையும் பெற்றிருக்கிறார். இவரைப்போல சிறப்பாகச் செயல்படுகின்ற தலைவியர் ஏராளமாக இருக்கின்றனர். சமீபகாலத்தில் வலிமையுடன் வளர்ந்துவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களும் பெண் தலைவர்களுடைய செயல்பாட்டுக்கு பக்க துணையாக இருக்கும் என்று நம்பலாம்.


இன்னும் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம். உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு கிடைக்க உதவி செய்த அரசமைப்புச் சட்டத் திருத்தம், பெண்களின் அரசியல் பயணத்துக்கான துவக்கத்தை அளித்திருக்கிறது. அந்தத் திருத்தமும் இட ஒதுக்கீடு காரணமாகப் பெறும் பதவியும் மட்டும் அவர்கள் மேம்பாட்டுக்குப் போதாது. கல்விரீதியாகவும் சமூகரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் பெண்கள் உயர்ந்த நிலையை அடைவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இந்தக் கடமையைச் செய்யத் தவறும் ஆண் அரசியல்வாதிகளுக்கு, பெண்கள் தலைமையில் இயங்கும் உள்ளாட்சி அமைப்புகளைக் குறை சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. ஏனெனில், அந்தக் குறைகளுக்கான காரணங்கள் நமது சமூகத்தில் இருக்கின்றனவே தவிர அந்தப் பெண்களிடத்தில் இல்லை!
- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (01.10.06)

2 Comments:

At 6:35 PM, Blogger SP.VR. SUBBIAH said...

//கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் பெண்கள் உயர்ந்த நிலையை அடைவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.//

இதைச் செய்தால் போதும் மற்றதெல்லாம் தானாக வரும்!

 
At 9:26 PM, Blogger ஜென்ராம் said...

தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்ங்க சார்!

 

Post a Comment

<< Home