Thursday, February 01, 2007

பிரம்பு பேசுமா அன்பு?

பாலர் வகுப்பில் படிக்கும் நான்கு வயதுக் குழந்தை ஒன்றின் பெற்றோரிடம் நீண்ட அனுபவம் கொண்ட அந்த ஆசிரியை மன்னிப்புக் கேட்டார், ‘‘நான் அவளது தலைமுடியை எல்லாம் பற்றி இழுக்கவில்லை. காதைப் பிடித்துதான் திருகினேன். தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று. தங்கள் குழந்தையை உடல்ரீதியாக துன்புறுத்தியதாக அந்தக் குழந்தையின் பெற்றோர் புகார் கொடுத்ததையடுத்தே அந்த ஆசிரியை இப்படி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இவ்வளவுக்கும் மிகவும் நன்றாகப் பாடம் எடுக்கும் ஆசிரியை என்று பெயர் வாங்கியவர்தான் அந்த ஆசிரியை.

மிகவும் நன்றாகப் பாடம் நடத்தும் ஆசிரியர் ஏன் இதுபோன்று நடந்து கொள்கிறார்? குழந்தைகளிடத்தில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதற்கு உடல்ரீதியான தண்டனை வழங்குவதுதான் சுலபமான வழி என்ற நமது சமூகத்தில் நிலவி வருகிற பரவலான நம்பிக்கை காரணமாக இருக்கலாம். இதனால் தான் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது தலைமை ஆசிரியரிடம், ‘‘தப்பு செய்தான்னா, ரெண்டு கண்ணை மட்டும் விட்டுட்டு, உரிச்சு உப்புக் கண்டம் போடுங்க’’ என்று சொல்வதுண்டு.

மாணவர்கள் மறந்து ஒரு நோட்டை எடுத்துவராமல் இருந்து விட்டாலும் ஆசிரியர்களும் அவர்களை வெயிலில் நின்று தோப்புக்கரணம் போட வைக்கிறார்கள். சிலர் மாணவர் களை முழங்காலிட்டு வகுப்பு முடியும் வரை இருக்கச் செய்கிறார்கள். பக்கத்து இருக்கையில் உள்ள மாணவியிடம் இருந்து இரண்டு ரூபாய் திருடிவிட்டதாக இன்னொரு சக மாணவியை சந்தேகப்பட்ட ஆசிரியை, அவளை ஒரு மணி நேரம் கழிப்பறையில் அடைத்து வைத்துவிடுகிறார். இது போன்ற தண்டனைகள் எல்லாம் நமது நாட்டில் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

கடந்த வாரம் சென்னை தாம்பரத்தில், மோட்டார் சைக்கிளை தொட்டதற்காக அலெக்சாண்டர் என்ற மாணவனை தலைமை ஆசிரியர் அருள்ராஜ், வயிற்றுக்குக் கீழே எட்டி உதைத்திருக்கிறார். தண்டையார் பேட்டையில் உள்ள மேனிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக பள்ளி மாணவிகள் திரண்டு போலீஸில் புகார் கொடுத்திருக்கின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் தரையைத் துடைக்கச் சொல்லி ஆசிரியை கொடுமைப்படுத்துவதாக ஒரு மாணவன் புகார் கொடுத்துள்ளான். உச்சகட்டமாக சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள பெண்கள் மேனிலைப் பள்ளி ஒன்றில் மாணவி சுகன்யா, பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார்.

தொடர்ந்து நடைபெற்றுவரும் இப்படியான சம்பவங்களும் அவற்றுக்கு பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பும் இப்போது அரசை நடவடிக்கை எடுப்பதற்குத் தூண்டியுள்ளன. பள்ளி மாணவர்களைக் கொடுமைப்படுத்தினால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருக்கிறார். தேவைப்பட்டால், பள்ளியை அரசே ஏற்று நடத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்காக அமைச்சரைப் பாராட்டலாம்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. குழந்தைகள் சட்டம் 1960 இன் கீழ் 1962 ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம், மாணவரை அடித்ததற்காக ஓர் ஆசிரியரைத் தண்டித்திருப்பதாக அறிய முடிகிறது. சமீப காலங்களில் குழந்தைகளின் உளவியல் குறித்து ஊடகங்களில் விளக்கமாக விவாதிக்கப்படுகிறது. இருந்தும் இன்னும் பள்ளியில் குழந்தைகளுக்கு உடல்ரீதியான தண்டனைகள் வழங்கப்பட்டுதான் வருகின்றன. வேறுவார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கண்களுக்கு மட்டுமே குற்றங் களாகத் தெரிகின்றனவே தவிர, மக்கள் மனதில் இவை குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை.

குழந்தைகளை கட்டுப்பாடான வாழ்க்கைக்குள் கொண்டு வருவதற்கு உடல்ரீதியான தண்டனை பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை மக்களிடம் மிகவும் ஆழமாக இருக்கிறது. சட்டங்கள் மூலம், பள்ளிகளில் அளிக்கப்படும் தண்டனையைக் குறைக்க முடிந்தாலும் குடும்பங்களில் பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கும் தண்டனையை ஒழிப்பதற்கு இன்னும் நிறைய தூரம் நாம் போக வேண்டியதிருக்கிறது.

குழந்தைத் தொழிலாளர்கள், வீதிகளில் வளரும் சிறுவர்கள், காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறுவர் சிறைகள், பள்ளிகள், குடும்பங்கள் மற்றும் பல இடங்களில் பலவிதங்களில் குழந்தைகள் தாக்கப்படுகின்றனர். சம்பளம் கொடுக்கும் முதலாளி, கற்றுக் கொடுக்கும் ஆசிரியர், பெற்று வளர்க்கும் பெற்றோர் ஆகியோரை அவரவர் இடங்களுக்குத் தக்கபடி குழந்தைகள் மதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது நமக்குக் கிடைக்கும் அதிகாரத்தை நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம். குழந்தைகள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மாறாக அவர்களிடம் நடந்து கொள்கிறோம். அவர்களை அடிப்பதையும் கடுமையான சொற்களால் திட்டுவதையும் வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

குழந்தைகளின் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டுத் தீர்மானங்களை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே அலட்சியம், சுரண்டல், துன்புறுத்தல், பாலியல் கொடுமை மற்றும் பிற கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது இந்திய அரசின் கடமையாகும். இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு அளித்துள்ள உரிமைகளும் ஐ.நா. மாநாடு அளித்துள்ள உரிமைகளும் இந்தியக் குழந்தைகளுக்கும் உரியவை. மனித உரிமை என்ற அணுகுமுறையில் குழந்தைகளையும் பார்ப்பதே சரியான பார்வையாக இருக்கும். ஏனெனில், குழந்தைகளும் இந்த நாட்டு மக்களே. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் கொடுமையான குற்றங்களாகப் பார்க்கப்பட வேண்டும்.

குழந்தைகளின் மனம் சுத்தமானது. அதில் நாம் என்ன விதைக்கிறோமோ அதுவே வளரும். தவறுகளைத் திருத்துவதற்காக என்று சொல்லிக் கொண்டு, அடி, உதை, சுடுசொற்கள் போன்ற வன்செயல்களை அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அவர்களும் வளர்ந்து இளைஞர்களாவார்கள். நாம் இப்போது அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதை அவர்கள் அப்போது நமக்கு எதிராகப் பிரயோகிப்பார்கள். அப்படி நடந்தால், அப்போது நாடே தாங்காது. ஏனெனில், எந்த சமூகத்திலும் குழந்தைகளை விட அதிக அளவில் தவறுகள் செய்பவர்கள் பெரியவர்களே!

- ஜென்ராம்

நன்றி: ஜூனியர் விகடன் (29.11.06)

5 Comments:

At 8:52 AM, Blogger வெற்றி said...

நல்ல பதிவு.

 
At 2:09 PM, Blogger thiru said...

குழந்தைகள் மனதில் வன்முறையை திணிப்பதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இடம்பெறுகின்றனர். ஒரு மனிதன் இன்னொருவனை வதைப்பதும், அதுவும் தன்னைப் போல பலமில்லாத குழந்தைகளை வதைப்பது கண்டிக்கத்தக்கது. மிருகவதைக்கு சட்டம், இயக்கம் பல ஆண்டுகளுக்கு முன்னரே வந்த நமது நாட்டில், குழந்தைகள் நலனில் அக்கறை காலம் தாழ்ந்து வருவது வேதனையானது.

 
At 7:12 AM, Blogger SP.VR. SUBBIAH said...

//நாம் இப்போது அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதை அவர்கள் அப்போது நமக்கு எதிராகப் பிரயோகிப்பார்கள்//

உண்மை!

 
At 9:34 PM, Blogger ஜென்ராம் said...

வெற்றி, SP.VR.சுப்பையா:

மிக்க நன்றி

 
At 9:36 PM, Blogger ஜென்ராம் said...

திரு:

//குழந்தைகள் மனதில் வன்முறையை திணிப்பதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இடம்பெறுகின்றனர். ஒரு மனிதன் இன்னொருவனை வதைப்பதும், அதுவும் தன்னைப் போல பலமில்லாத குழந்தைகளை வதைப்பது கண்டிக்கத்தக்கது. மிருகவதைக்கு சட்டம், இயக்கம் பல ஆண்டுகளுக்கு முன்னரே வந்த நமது நாட்டில், குழந்தைகள் நலனில் அக்கறை காலம் தாழ்ந்து வருவது வேதனையானது.//

குழந்தைகளை உடைமைகளில் ஒன்றாகக் கருதுகிறோமா? நமது விருப்பப்படி மேஜை நாற்காலிகளை மாற்றுவதைப் போல அவர்களையும் நாம் கையாள்கிறோமா?

 

Post a Comment

<< Home