Friday, February 02, 2007

அமைதிக்காக அராஜகப் போர்?

தங்களது லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு பொதுவாக எதிரிகள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதில்லை. ஆனால், தெரியாத்தனமாக அது போன்ற உதவிகரமான சம்பவங்கள் அபூர்வமாக நடந்து விடுவதுண்டு. லெபனான் நாட்டில் இருந்து செயல்படும் ‘ஹிஸ்புல்லா’ என்ற இயக்கம், இரண்டு இஸ்ரேலிய ராணுவ வீரர்களை சிறைப் பிடித்துச் சென்ற நிகழ்ச்சி அத்தகைய சம்பவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஏராளமான லெபனான் நாட்டவர்களை இஸ்ரேல் பிடித்து சிறை வைத்துள்ளது. அவர்களை எல்லாம் மீட்பதற்கு பேரம் பேசுவதற்கு வசதியாக இருக்கும் என்று இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இருவரை உயிருடன் பிடித்துச் சென்றது ‘ஹிஸ்புல்லா’. ஆனால், ‘கிடைத்தது சான்ஸ்... ஹிஸ்புல்லாவின் உதவிக்கு நன்றி’ என்றபடியே அந்த இயக்கம் செல்வாக்குடன் திகழும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழிகின்றன. லெபனானில் வசிக்கும் சாதாரண பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கில் காயமடைந்துள்ளனர். இதில் இந்தியர் ஒருவர் பலியாகி இருக்கிறார். மூவர் காயம் அடைந்துள்ளனர்.

‘ஹிஸ்புல்லா’வினால் சிறை வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் ராணுவ வீரர்களை மீட்பதற்காகவும் ‘ஹிஸ்புல்லா’ இயக்கத்தவரை அழிப்பதற்காகவும் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால், தொலைக்காட்சிகளில் பார்க்க நேர்கின்ற காட்சிகள், நம்மைக் கலங்க வைக்கின்றன. மணிக்கட்டுப் பகுதியில் இருந்து கைகள் முழுவதும் கட்டுப் போட்ட ஓரிரு வயதுக் குழந்தைகள், தோல்கள் கருகிய காயங்களுடன் பிஞ்சுக் குழந்தைகள் போன்ற காட்சிகள் போரின் குரூரத்தைப் பறைசாற்றுகின்றன. இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் கடத்தலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

துப்பாக்கிகளும் பீரங்கிகளும் ஏவுகணைகளும் போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் மனித சமூகத்தின் தோல்வியை உணர்த்தும் அடையாளங்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு துப்பாக்கியும் ஒவ்வொரு பீரங்கியும் ஒவ்வொரு ஆயுதமும் எந்தப் பணத்தில் உருவாக்கப்படுகிறது அல்லது வாங்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. பசியால் வாடும் ஒரு சிறுவனுக்குத் தேவையான தொகையிலிருந்தோ அல்லது கல்வி கற்க வசதியில்லாத சிறுவர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய தொகையில் இருந்தோ வாங்கப்பட்டது என்ற உணர்வே மேலோங்குகிறது.

நடைபாதைகளில் வசித்துக் கொண்டு தங்கள் மானத்தை மறைத்துக் கொள்ள மாற்றுத் துணிகூட இல்லாத மக்களின் வாழ்க்கையில் சிறு ஒளி ஏற்றுவதற்குப் பயன்படாத பணம், எதிரிகள் என்று கருதப்படும் மனிதர்கள் மீது பெரும் நெருப்பைக் கக்கும் ஆயுதங்கள் வாங்குவதற்குப் பயன்படுகிறது! இந்த எண்ணமே நாகரிக மனிதர்களின் நெஞ்சங்களைப் பதறச் செய்கிறது. இங்கே வீணாவது பணம் மட்டும் அல்ல; அறிவியல் அறிஞர்களின் அறிவுத் திறன், அதற்குச் செயல்வடிவம் கொடுக்கும் தொழிலாளர்களின் உழைப்பு, சொந்த நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்களின் நம்பிக்கைகள் எல்லாமே ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் சிதறி சின்னாபின்னமாகின்றன.

இரு ராணுவ வீரர்களை விடுவிப்பதற்காகவும் கடத்திச் சென்றவர்களைக் கொன்று ஒழிப்பதற்காகவும் தாக்குதல் நடத்துவதாக சொல்லும் இஸ்ரேல், நடத்திவரும் தாக்குதல்களைப் பார்க்கும்போது லெபனானின் பொருளாதார முதுகெலும்பையே நொறுக்கி விடுவதும் அதன் நோக்கமாகத் தெரிகிறது.

போர், லெபனான் நாட்டு மக்களுக்குப் புதிதல்ல. இரு போர்களுக்கு இடையிலான காலம் அமைதிக்காலமா அல்லது இரு அமைதி காலங்களுக்கு இடையில் நடப்பது போர்க்காலமா என்று சொல்ல இயலாத அளவு லெபனான் தொடர்ச்சியாகப் பல மோதல்களைச் சந்தித்து வந்துள்ளது.

இப்போது, ‘ஹிஸ்புல்லா’வை அழிப்பதற்காகவும் அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவைப் பிடித்துக் கொல்வது அல்லது கொன்று பிடிப்பது என்பதற்காகவும் இந்தப் போரை நடத்துவதாகச் சொல்கிறது இஸ்ரேல்.

இதன் பின்னணியில் இருப்பது, முழுக்க முழுக்க அமெரிக்கா. மத்திய கிழக்கு ஆசியாவில் ஜனநாயகத்தை நிறுவ விரும்புகிறது அமெரிக்கா. இந்த ஜனநாயகத்துக்கு அந்தந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்று பொருள் இல்லை... மாறாக, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷ§க்கு இணக்கமாகச் செல்லும் ஆட்சி என்று அர்த்தம் போலும்!

லெபனானில் நாடாளுமன்றத்துக்கு 12 ‘ஹிஸ்புல்லா’ உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தெற்கு லெபனான் முழுவதும் ‘ஹிஸ்புல்லா’ கூட்டணிக்கே மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். தெற்கு லெபனானை ஆக்கிரமித்து இருந்த இஸ்ரேலை வெளியேறச் செய்ததில் ‘ஹிஸ்புல்லா’வுக்குப் பெரும்பங்கு இருந்தது என்று மக்கள் அதை ஆதரிக்கிறார்கள்.

ஆனால், மக்களின் உணர்வை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்றுக் கொள்ளவில்லை. கைகள் முழுவதும் ரத்தக் கறைகளுடன் உலகின் எந்தப் பகுதியிலும் யாரும் ‘ஜனநாயகத்தை’ நிலைநாட்டிவிட முடியாது. இருந்தும் ஆப்கானிஸ்தான், ஈராக் வரிசையில் லெபனான் மீது அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பட்டியல் இத்துடன் முடிவடைவதாகவும் தெரியவில்லை. சிரியா, ஈரான் என்று தொடர இருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் போர்களை ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு முடிவுக்குக் கொண்டுவர இயலவில்லை. லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலைக் கண்டித்து ஒரு தீர்மானம் கூட ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிறைவேற்ற முடியவில்லை. அமெரிக்கா தனது ரத்து செய்யும் சிறப்பு உரிமை மூலமாக தீர்மானத்தை ரத்து செய்தது.

பொதுவாக போர்களில் பலியாவது, மனித உயிர்கள் மட்டுமல்ல. உண்மை, நேர்மை அனைத்தும் பலியாகின்றன. போரிலும் காதலிலும், அனைத்தும் நியாயமானவை என்ற கருத்தின் மூலம் அனைத்து விஷயங்களும் மறைக்கப்படுகின்றன. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் போர் என்றும் அமைதியை ஏற்படுத்துவதற்குப் போர் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு பெண்ணின் ‘கற்பைக்’ காப்பதற்காகத்தான் அவளை வன்புணர்ந்தேன் என்று ஒருவன் சொல்ல முடியுமா? இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானது என்பதை ஏன் இவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால், அவர்களை ஒழிப்பதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுக்கும் போர் புதிய பயங்கரவாதிகளையே உருவாக்குகிறது. அதாவது, போரில் அவர்களால் கொல்லப்படும் பயங்கரவாதிகளைவிட புதிதாக உருவாகும் பயங்கரவாதிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள். ஏனென்றால், பயங்கரவாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது அந்தக் குடும்பங்களில் இருந்து புதியவர்கள் விரக்தியிலும் பழிவாங்கும் உணர்விலும் தவறான பாதையில் புறப்படுகிறார்கள். ‘‘ஏழைகள் தொடுக்கும் போருக்குப் பயங்கரவாதம் என்று பெயர்; வலியவர்களின் பயங்கர வாதத்துக்குப் போர் என்று பெயர்’’ என்பதே ஏழை நாடுகளின் குரலாக இருக்கிறது!
- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (02-08-06)

5 Comments:

At 4:47 PM, Blogger தி.ராஸ்கோலு said...

தெளிவான நடுநிலையான அலசல். உங்களைப் போன்றவர்கள் பத்திரிகைத் துறையில் இருப்பது உண்மையில் மகிழ்ச்சி.

கட்டுரைக்கு நன்றி

 
At 6:44 PM, Blogger SP.VR. SUBBIAH said...

//அதாவது, போரில் அவர்களால் கொல்லப்படும் பயங்கரவாதிகளைவிட புதிதாக உருவாகும் பயங்கரவாதிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள். ஏனென்றால், பயங்கரவாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது அந்தக் குடும்பங்களில் இருந்து புதியவர்கள் விரக்தியிலும் பழிவாங்கும் உணர்விலும் தவறான பாதையில் புறப்படுகிறார்கள்.///

இதை உணரும் பக்குவத்தை விட
வன்மம்தானே மனதில் மேலோங்கி நிற்கிறது!

அதைவிட ஏற்படப்போகும்
மோசமான விளைவுகள் அதிகாரத்தில் உள்ளவர்களையா பாதிக்கப் போகிறது?
அதுவும் அவர்களுடைய நாட்டின் அப்பாவி மக்களைத்தானே பாதிக்கும்.

அவர்களையும் எதிர் விளைவுகள் பாதித்தால் மட்டுமே உணர்வார்கள்!

 
At 7:58 PM, Blogger தாணு said...

my long comment is erased by your blogger.

 
At 9:21 PM, Blogger ஜென்ராம் said...

தி.ராஸ்கோலு:

கனிவான வார்த்தைகளுக்கு என் மனப்பூர்வமான நன்றி..

sp.vr.சுப்பையா:

//அதைவிட ஏற்படப்போகும்
மோசமான விளைவுகள் அதிகாரத்தில் உள்ளவர்களையா பாதிக்கப் போகிறது?
அதுவும் அவர்களுடைய நாட்டின் அப்பாவி மக்களைத்தானே பாதிக்கும். //

சரியாகச் சொன்னீர்கள்!

 
At 9:24 PM, Blogger ஜென்ராம் said...

தாணு:

இது என்ன மாயம்! எது வரை போகும்?

நீங்கள் பதிவைப் படித்ததும் பின்னூட்டியதும் இன்றைய நாளில் அதிசயம் அல்லது மாயம் என்றால் அதை பிளாக்கர் உண்டு செரித்துவிட்டது என்பது இன்னும் மாயமாக இருக்கிறது..

எப்படி ஆனது என்பது எனக்குத் தெரியாது என்பதை தனியே நான் விளக்க வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன்..

 

Post a Comment

<< Home