Saturday, February 03, 2007

தமிழக அரசியலில் ‘துரோகம்!

அந்த மடம் மிகவும் இறுக்கமான மடம். அங்குள்ள துறவிகள் ஒருவருக்கொருவர் பேசவே முடியாது. ஒரு வருடத்துக்கு ஒரு முறை தலைமைத் துறவி வந்து கேட்கும்போது இரு வார்த்தைகள் மட்டுமே பேசலாம். அந்த மடத்தில் ஒரு துறவிக்கு மட்டும் அங்கு நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தலைமைத் துறவியிடம் அவர் முதலாண்டு இறுதியில், ‘மனநிறைவு இல்லை’ என்றார். இரண்டாம் ஆண்டு, ‘மூச்சு முட்டுகிறது’ என்றார். மூன்றாம் ஆண்டு, ‘நான் வெளியேறுகிறேன்’ என்றார். தலைமைத் துறவி, ‘இது நான் எதிர்பாராதது அல்ல. நீங்கள் மட்டுமே இங்கு உங்களுக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை விட்டுவிட்டு குறைகளைப் பெரிதுபடுத்திக் கொண்டிருந்தீர்கள்’ என்று கூறினார். எந்த நிகழ்வையும் நேர்மறையாகப் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறப்படும் கதைகளில் இதுவும் ஒன்று.

குறைசொல்லும் துறவியின் நிலையைப் போலவே இப்போது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிலையும் இருப்பதாகத் தோன்றுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. பச்சைத் துரோகம் செய்துவிட்டது என்று பகிரங்கமாக செய்தியாளர்களிடம் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். ‘அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். தி.மு.க. ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளுக்குத் துரோகம் செய்ய நினைப்பதில்லை’ என்று தி.மு.க. தரப்பில் இருந்து பதில் அறிக்கை வந்துள்ளது. ‘தி.மு.க. அறிக்கை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது. பதிலுக்குப் பதில் என்று அறிக்கைப் போரைத் தொடர விரும்பவில்லை’ என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பிரச்னைக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ம.க.வுக்கு நேர்ந்தது போலவே காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கும் நேர்ந்திருக்கின்றன. அந்தத் தலைவர்கள் எல்லாம் தவறுகள் நடந்திருக்கின்றன என்று சொல்கிறார்களே தவிர, திமுக ‘துரோகம்’ செய்துவிட்டதாகச் சொல்லவில்லை.
தமிழக அரசியலில் ‘கூட்டணி’, ‘அலையன்ஸ்’ போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று தலைவர்கள் விளக்கம் அளித்த அளவுக்கு, ‘துரோகம்’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை விளக்காமல் விட்டுவிட்டார்கள்.

கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு கொண்டு கட்சியில் இருந்து வெளியேறுபவர்களையும் துரோகிகள் என்றுதான் குற்றம்சாட்டுகிறார்கள். கூட்டணித் தலைமையுடன் வேறுபாடு கொண்டு வெளியேறுபவர்களுக்கும் அதே பெயர்தான். ஆட்சியாளர்கள் தாக்கல் செய்யும் பட்ஜெட் மீது விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகளும், ‘வாக்களித்த மக்களுக்கு முதல்வர் துரோகம் செய்துவிட்டார்’ என்று குற்றம் சாட்டுகின்றன. கால மாற்றத்தின் காரணமாகவோ அல்லது மாறிவிட்ட அரசியல் சூழல்கள் காரணமாகவோ ஆரம்பத்தில் சொல்லி வந்த கொள்கைகளில் இருந்து வேறுபட்ட நிலையை ஓர் அரசியல் கட்சி மேற்கொண்டால், அது கொண்ட கொள்கைகளுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக விமர்சனம் எழுகிறது.

ஒரு தமிழ் அகராதியில் துரோகம் என்ற சொல்லுக்கு, ‘தன்னை நம்பும் ஒருவரின் நம்பிக்கைக்கும் நலனுக்கும் மாறாக அல்லது எதிராகச் செய்யும் செயல்’ என்று பொருள் போட்டிருக்கிறது. துரோகி என்ற சொல்லுக்கு ‘எதிர்பார்ப்பதைப் பொய்யாக்கி மோசம் செய்யும் நபர்’ என்று சொல்கிறது. ஒரு கட்சியின் தலைவரோ கூட்டணியின் தலைவரோ தனது நிலையை தனது கட்சியினரும் கூட்டணிக் கட்சியினரும் முழுவதுமாக ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கை கொண்டிருப்பார். அவரது நம்பிக்கைக்கு மாறாக அல்லது எதிராகச் செய்யும் செயல் துரோகம் என்றாகிவிடுகிறது. அதாவது அங்கே மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லாத ஆபத்தான சூழல் உருவாகிவிடுகிறது.

எடுத்துக்காட்டாக 1998 மக்களவைத் தேர்தலை எடுத்துக் கொள்ளலாம். அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தமிழகத்தில் 30 இடங்களை வென்றன. இந்தத் தேர்தலில்தான் ம.தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் மாநிலக் கட்சிகள் என்ற அங்கீகாரம் கிடைத்தது. அதுமட்டுமல்ல, முறையே பம்பரம் மற்றும் மாங்கனி சின்னங்களும் கிடைத்தன. இதற்குப் பெருமளவில் அ.தி.மு.க. வாக்கு வங்கி உதவியது என்பதை இவ்விரு கட்சிகளாலும் மறுக்க இயலாது.

ஆனால் ஜெயலலிதாவுக்கும் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, ம.தி.மு.க.வும் பா.ம.க.வும் எந்தப் பக்கத்தில் நின்றன?

ஜெயலலிதா, வைகோ மீதும் டாக்டர் ராமதாஸ் மீதும் அன்று வைத்திருந்த நம்பிக்கைக்கு மாறாக அவர்கள் செயல்பட்டதால் அந்தச் செயலைத் துரோகம் என்று கூறினால் இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

அல்லது வாஜ்பாயைப் பிரதமர் ஆக்குவதன் மூலம் நிலையான ஆட்சியைத் தருவோம் என்று சொல்லி வாக்குக் கேட்டு, பிறகு ஆதரவைத் திரும்பப் பெற்ற ஜெயலலிதாவின் செயலைத் துரோகம் என்று சொல்ல முடியுமா?

அல்லது பி.ஜே.பி.க்கு எதிராக தமிழக மக்களிடம் வாக்கு வாங்கிச் சென்ற தி.மு.க. எம்.பி.க்கள், வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த செயலைத் துரோகம் என்று சொல்வதா?

ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொன்று துரோகம் என்றாகிறது. நீங்கள் எந்தப் பக்கம் நின்று பார்க்கிறீர்களோ அதற்குத் தகுந்த முடிவுக்கு வருகிறீர்கள்.

இப்படி ஏராளமான சம்பவங்களின் அடிப்படையில் பல தலைவர்களின் அரசியல் நிலைப் பாட்டைத் துரோகம் என்று மக்களாலும் விமர்சிக்க முடியும். பயன்பாட்டு அளவில் மற்ற சொற்களைவிட துரோகம் என்ற சொல் மிகவும் கூர்மையானதாக இருக்கிறது. ‘எதிரிகளை மன்னிக்கலாம், ஆனால் துரோகிகளை மன்னிக்கக் கூடாது’ என்றெல்லாம் பரவலாகப் பேசப்படுகிறது. எதிரிக்கும் துரோகிக்கும் வேறுபாடு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத மிகவும் உயர்ந்த பொருள் கொண்ட சொல் மன்னிப்பு என்பதை நம்மில் பலர் புரிந்து கொள்வதில்லை.

மக்களுடைய எத்தனையோ எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மாறாக அரசியல்வாதிகள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறு அதிகார போதையில் வலம் வருகிற அல்லது வலம் வந்த பல அரசியல் தலைவர்களை மக்கள் எதிரிகள் என்றோ துரோகிகள் என்றோ வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர்கள் எல்லோரையும் மன்னித்து, மீண்டும் மீண்டும் ஆதரித்து ஆட்சியில் அமர்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் செயல்வடிவம் பெறாத வெற்று முழக்கங்களைப் பெரிதுபடுத்துவதில்லை. ஏற்கெனவே தமிழக அரசியலில் ‘புரட்சி’ உள்ளிட்ட பல சொற்கள் பொருள் இழந்து உலவுகின்றன. அந்த வரிசையில் ‘துரோகம்’ என்ற சொல்லும் சேர்ந்து விட்டதுபோல் தெரிகிறது!
- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (08.11.06)

16 Comments:

At 2:54 PM, Blogger NATURE said...

hallo sir your article is absolutely correct,but all politicians are knowing very well in the tamil peoples innocent.

 
At 6:40 PM, Blogger ஜென்ராம் said...

tamilreber :

உங்கள் பங்களிப்புக்கு நன்றி..நீங்கள் முதலில் சுட்டியிருக்கும் சொல்லைத்தான் முந்தைய பதிவில் குறிப்பிட்டேன். அங்கு நீங்கள் வேறுவிதமாக பின்னூட்டியிருக்கிறீர்கள்:-))


செல்வம்:
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

 
At 11:21 PM, Blogger பத்மா அர்விந்த் said...

இன்னும் உங்கள் பதிவுகளைப்படிக்கவில்லை. நிதானமாக படிக்கிறேன். பிறகு பேசுகிறேன்.

 
At 3:26 PM, Blogger enRenRum-anbudan.BALA said...

ராம்கி ஐயா,
தங்கள் நட்சத்திர வாரப் பதிவுகள் சிலவற்றை வாசித்தேன், நன்றாக இருந்தன, வாழ்த்துக்கள், நன்றி

 
At 7:21 PM, Blogger குழலி / Kuzhali said...

உங்களின் இந்த பதிவில் பல கருத்துகள் என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதே துரோகம் என்ற சொல் தமிழக அரசியலில் அதன் பொருள் இழந்து வருகின்றது.

நீங்கள் இந்த பதிவில் காண்பித்த மற்றைய உதாரணங்களும் உள்ளாட்சி மன்றத்தலைவர் தேர்தலில் நடந்த விடயங்களும் ஒரே தட்டில் வைத்து பார்க்கலாமா என்றால் என்னை பொறுத்தவரை இல்லை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே எந்தெந்த இடங்களில் யார் யார் நிற்பது என்று பேசி முடிவு செய்து உடன்பாட்டில் கையெழுத்தும் இட்டனர், தேர்தலுக்கு முன்பே எந்தெந்த தலைவர் பதவி யாருக்கு என்று பேசி முடிவு செய்யலாம் என்ற போது (எந்த கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதோ அங்கே அந்த கட்சி கவுன்சிலர்கள் பெரும்பாலாக நிறுத்தலாம் என்று திமுக தவிர்த்த அத்தனை கூட்டணி கட்சிகளும் அந்த நேரத்தில் வலியுறுத்தின) திமுக முதலில் தேர்தல் முடியட்டும் பிறகு தலைவர் பதவி பற்றி பேசலாம் என்றது, திமுக கவுன்சிலர்களின் வெற்றிக்கு கூட்டணிகட்சியனரின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை மறுக்க முடியாது, ஆனால் எந்த உள்ளாட்சி மன்றத்தலைவர் பதவியையும் திமுகவினரின் ஒத்துழைப்பு இல்லாமல் பெறக்கூடிய நிலை கூட்டணி கட்சிகளுக்கு, இந்த நிலை ஏற்படுமென்பதை எதிர்பார்த்துதான் திமுக கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு முன்பே தலைவர் பதவிக்கான ஒதுக்கீட்டை செய்து கொண்டு அங்கே அந்த கட்சியின் கவுன்சிலர்களை பெரும்பான்மையாக நிறுத்தலாம் என்று கூறின, திமுக கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு முன்பு அச்சப்பட்ட மாதிரியே எல்லா தலைவர் பதவிகளும் திமுக ஒத்துழைத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற நிலை, தேர்தலுக்கு பின் தலைவர் பதவில்க்காண கூட்டணி ஒப்பந்தமும் கையெழுத்தானது, ஆனால் அதன் பிறகு தான் திமுக அமைச்சர்களுக்கும் மா.செ.க்களும் இத்தனை கவுன்சிலர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் நாமெதற்கு வேறு கட்சிக்கு இதை விட்டுத்தரவேண்டுமென்று பல இடங்களில் கூட்டணி கட்சிக்கு எதிராகவே ஆட்களை நிறுத்தினார்கள் ஆனால் வசதியாக திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதில் கூட்டணி கட்சிகளின் பங்கை மறந்துவிட்டனர். இதனால் பாமகவிற்கு 40 இடங்களுக்கும் மேல் இழப்பு (கிட்டத்தட்ட 50%) இதே போல காங்கிரஸ் 50%க்கும் மேலான இடங்களை இழந்துள்ளது, எல்லா கூட்டணி கட்சிகளுமே இப்படியான இழப்பு ஏற்பட்டுள்ளது, திமுக கவுன்சிலர்கள் வெற்றிக்கு கூட்டணி கட்சியினர் தேவைப்பட்டனர், ஆனால் கூட்டணி கட்சியினரின் தலைவர் பதவிக்கு திமுக கவுன்சிலர்கள் கை கொடுக்கவில்லை இதுவே துரோகம் என்று மருத்துவரால் சொல்லப்பட்டது, மருத்துவர் வெளிப்படையாக சொல்லிவிட்டார் காங்கிரசிலும் மற்ற கூட்டணி கட்சிகளாலும் சொல்ல இயலவில்லை, ஆனால் இந்த சூழலை கணக்கில் கொள்ளாமல் இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது ஆச்சரியமே....

ஒரு வேளை பாமக இதனால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தாலும் என் நிலைப்பாடு இதில் இப்படியே இருக்கும் (டிஸ்கி போட வேண்டிய அளவிற்கு என் மீது பாமக முத்திரை உள்ளது)


அரசதிகாரமே முக்கியம் (பச்சையாக சொல்வதென்றால் சீட்டே முக்கியம்) என்று கூட்டணி பேரத்தை ஒரு கட்டத்திற்கு நகர்த்தியவர் மருத்துவர்...

உடன்பாடு கையெழுத்து ஆன பின்பும் கூட்டணி உறுதியல்ல என்று கையெழுத்தான உடன்பாட்டை உடைத்து அடுத்த நிலைக்கு கூட்டணி பேரத்தை எடுத்து சென்றவர் வை.கோ.

தேர்தல் மனுத்தாக்கல் முடிந்த பின்பு அணி மாறி அதற்கும் அடுத்த நிலைக்கு எடுத்து சென்றவர் திருமா.

என படிப்படியாக கூட்டணி கட்சிகளுக்கிடையேயான நம்பிக்கையின்மையை நகர்த்தினார்கள் என்றால் கூட்டணி சோற்றில் தன் பங்கையும் எடுத்துக்கொண்டு எல்லாம் முடிந்த பின் அடுத்தவர் பங்கிலும் கைவைக்கும் நிலையை அதாவது கூட்டணி கட்சிகளுக்குள் உள்ள நம்பிக்கையின்மை நிலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது திமுக.

இனி கூட்டணி கட்சிகள் தங்களுக்குள் சந்தேகத்தோடே வலம்வரும் என்பது மட்டும் உண்மை.... என்னதான் கூட்டணியென்றாலும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற வேண்டிய முனப்போடு செய்யும் வேலைகள் இனி எந்த கட்சியிலும் இருக்காது, தம் கட்சி வெற்றி மட்டுமே குறிக்கோளாக இருக்கும் நிலை வருங்காலங்களில் வரலாம்.

நன்றி

 
At 10:54 PM, Blogger ஜென்ராம் said...

குழலி:

உங்கள் கருத்தை மதிக்கிறேன். ஆனால் அது "தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பதற்கு ஏற்ப டாக்டர் ராமதாஸ் செயல்பட்டிருக்கிறார் என்பதில் இருந்து எனது பார்வை தொடங்குகிறது.

மக்களால் நேரடியாக தலைவர்/மேயர் தேர்ந்தெடுக்கப்படுவதில் இருந்து பாதையை அரசு மாற்றிய போதே இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான். இது குறித்து சில தலைவர்களிடம் விவாதம் நடத்தப்பட்டது. அப்போது அந்தக் கருத்து, திமுக கூட்டணிக் கட்சிகளிடத்தில் யார் காதிலோ ஊதிய சங்காக போனது. தனிப்பட்ட முறையில் இதை ஏற்றுக் கொண்ட ஓரிரு தலைவர்களின் கட்சிகள் கூட அதிகாரபூர்வமாக சட்ட திருத்தத்தை ஆதரித்தன. அப்படி அப்போது ஆதரித்து விட்டு,பிறகு மாற்றுக் கருத்து கூறியவர்களில் மருத்துவர் ராமதாசும் ஒருவர்.

மேற்கு வங்கத்தில் எப்படியேனும் இருந்து விட்டுப் போகட்டும்.. இங்கு நேரடி தேர்தல் என்பதை ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்விக்கு முதலில் ஏற்றுக் கொள்ளாத மார்க்சிஸ்ட் கட்சியும் திமுக மாவட்ட செயலாளர்களின் தகிடுதத்தங்களுக்குப் பிறகு நிலையை மாற்றிப் பேசத் தொடங்கினார்கள்.

இந்தக் கட்சிகள் ஜனநாயகத்திற்கு செய்த "துரோகத்தைப்" பற்றி கவலைப்படாமல், இவர்கள் ஒப்பந்தத்தை திமுக மீறியது குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்? (எதிர்மறை அணுகுமுறையாகக் கூட இருக்கலாம். ஆனால் உங்கள் வசதிக்கு ஊடகங்களையும் மக்களையும் ஜால்ரா தட்ட வைக்கும் முயற்சி பலனளிக்காது என்பதன் வெளிப்பாடே இந்தப் பார்வை. )

எனது கவலை பொதுவானது.. நீங்கள் குறிப்பிடுவது ஒரு கூட்டணிக்குள் உள்ள மீறல் குறித்தது. மேலும் நீங்கள் ஒரு கட்சியின் "ஜனநாயகம்" மீது நம்பிக்கை வைத்து ஏமாற்றப்பட்ட உணர்வில் பேசுகிறீர்கள். எனக்கு அப்படி எல்லாம் பெரிதாக யார் மீதும் நம்பிக்கை இல்லை. பிரச்னையின் அடிப்படையிலேயே பேச விரும்புகிறேன்.

இதனால் பல சமயங்களில் ஜெ. ஆதரவு, மு.க ஆதரவு போன்ற முத்திரைகளையும் நான் பெற நேர்ந்ததுண்டு. ஆனால் நான் ஊடகப் பணியாளர் என்ற எல்லையை மீறி என்னை வெளிப்படுத்த நான் விரும்புவதில்லை.

ஊடகங்களில் சிறுபான்மைக் கருத்துக்களும் வெளிவர வேண்டும் என்ற ஜனநாயக எண்ணம் தவிர எனக்கு வேறு சார்பு இல்லை. இருந்தும் அந்தந்த பிரச்னைக்குத் தக்கவாறு இடதுசாரி முத்திரை தொடங்கி ஜெ, கலைஞர், வைகோ, திருமா ஆதரவு முத்திரை வரை அவ்வப்போது குத்தப்பட்டு வருகிறது.
எதற்கு இந்த விளக்கம்? நீங்கள் உங்கள் பாமக முத்திரை பற்றி சொன்னதால் நானும் சற்று விரிவாக பேசிவிட்டேன்.
நன்றி குழலி!

 
At 11:00 PM, Blogger ஜென்ராம் said...

குழலி:

//உடன்பாடு கையெழுத்து ஆன பின்பும் கூட்டணி உறுதியல்ல என்று கையெழுத்தான உடன்பாட்டை உடைத்து அடுத்த நிலைக்கு கூட்டணி பேரத்தை எடுத்து சென்றவர் வை.கோ.//

இப்படி ஏதேனும் நடந்திருக்கிறதா? கையெழுத்தான உடன்பாட்டை வைகோ மீறியிருக்கிறாரா? தயவுசெய்து விளக்குங்கள். உடன்பாடு எட்டப்படும் முன்பே கருத்து வேறுபாடு காரணமாக அவர் வெளியிருக்கிறார். தொகுதி எண்ணிக்கை, எந்தெந்தத் தொகுதிகள் என்று முதலிலேயே உடன்பாடு கையெழுத்திடும் நேர்மை தமிழகத்தின் பிரதான கட்சிகளிடம் இருக்கிறதா? அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

 
At 11:05 PM, Blogger ஜென்ராம் said...

//உடன்பாடு கையெழுத்து ஆன பின்பும் கூட்டணி உறுதியல்ல என்று கையெழுத்தான உடன்பாட்டை உடைத்து அடுத்த நிலைக்கு கூட்டணி பேரத்தை எடுத்து சென்றவர் வை.கோ. தேர்தல் மனுத்தாக்கல் முடிந்த பின்பு அணி மாறி அதற்கும் அடுத்த நிலைக்கு எடுத்து சென்றவர் திருமா. என படிப்படியாக கூட்டணி கட்சிகளுக்கிடையேயான நம்பிக்கையின்மையை நகர்த்தினார்கள் என்றால் கூட்டணி சோற்றில் தன் பங்கையும் எடுத்துக்கொண்டு எல்லாம் முடிந்த பின் அடுத்தவர் பங்கிலும் கைவைக்கும் நிலையை அதாவது கூட்டணி கட்சிகளுக்குள் உள்ள நம்பிக்கையின்மை நிலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது திமுக.//

கூட்டணிக்கான நம்பகத்தன்மை இல்லாதவர் ஜெயலலிதா என்று இதுவரை சொன்னதெல்லாம் என்ன ஆச்சு?

 
At 11:09 PM, Blogger குழலி / Kuzhali said...

//உங்கள் கருத்தை மதிக்கிறேன். ஆனால் அது "தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பதற்கு ஏற்ப டாக்டர் ராமதாஸ் செயல்பட்டிருக்கிறார் என்பதில் இருந்து எனது பார்வை தொடங்குகிறது.
//
ம்... ஏற்கக்கூடியதே என்ற போதும் கூட்டணி, நம்பிக்கை என்ற அளவில் வேட்புமணுத்தாக்கல் முடிந்து பின் திருமா கடைசி நாளில் அணி மாறியதே என்னால் ஜீரணிக்க முடியவில்லை, இது இன்னமும் மோசம் என்றே எனக்கு தோன்றியது, ஒரு ஒருவருக்கு ஒரு உடையுமிடம், உங்களுக்கு முன்பே உடைந்துவிட்டது எனக்கு உடைந்தது அந்த இடம்.

//மக்களால் நேரடியாக தலைவர்/மேயர் தேர்ந்தெடுக்கப்படுவதில் இருந்து பாதையை அரசு மாற்றிய போதே இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான்.
//
மக்களால் நேரடியாக தலைவர்/மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும்பாண்மை கவுன்சிலர்கள் எதிர் கட்சியாக இருந்தால் நிலமை ரொம்ப மோசமாக இருக்கும், கரூர் நகராட்சி, விழுப்புரம் நகராட்சி என்று பல நகராட்சிகள் கடந்த காலங்களில் உதாரணமாக இருந்தன, அங்கேயெல்லாம் தலைவர் ஒரு கட்சியாகவும் கவுன்சிலர்கள் வேறு கட்சியாகவும் இருக்க ஒரு கூட்டம் கூட உருப்படியாக நடக்கவில்லை, இப்போதும் கூட நேரடி மேயர்/ தலைவர் தேர்தலில் எனக்கு நம்பிக்கை இல்லை, இதில் மருத்துவருக்கு வேறு கருத்து உண்டு (யாருப்பா அங்க நான் பாமக ஊதுகுழல் என்பவர்கள் :-))) இங்கே கவனிக்கவும், பாமகவின் நிலைக்கும் என் நிலைக்கும் இந்த விசயத்தில் உள்ள முரண்பாட்டை)

மற்றபடி முத்திரை விசயம் உங்களுக்கு கட்டுரைக்கு கட்டுரை மாறும் :-))))

 
At 11:12 PM, Blogger குழலி / Kuzhali said...

//இப்படி ஏதேனும் நடந்திருக்கிறதா? கையெழுத்தான உடன்பாட்டை வைகோ மீறியிருக்கிறாரா? தயவுசெய்து விளக்குங்கள். உடன்பாடு எட்டப்படும் முன்பே கருத்து வேறுபாடு காரணமாக அவர் வெளியிருக்கிறார். தொகுதி எண்ணிக்கை, எந்தெந்தத் தொகுதிகள் என்று முதலிலேயே உடன்பாடு கையெழுத்திடும் நேர்மை தமிழகத்தின் பிரதான கட்சிகளிடம் இருக்கிறதா? அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
//
2001 சட்டமன்ற தேர்தலில் திமுக-மதிமுகவோடு முதலில் 21 அல்லது 23 (சரியான எண்ணிக்கை தெரியவில்லை) தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டு கையெழுத்தும் ஆகி பத்திரிக்கைகளில் வெளியானது, அதன் பின்பே எந்தெந்த தொகுதிகளை பிரித்துக்கொள்வது என்ற நேரத்தில் பிரச்சினை ஆகி கூட்டணி முறிந்தது

 
At 11:18 PM, Blogger குழலி / Kuzhali said...

//கூட்டணிக்கான நம்பகத்தன்மை இல்லாதவர் ஜெயலலிதா என்று இதுவரை சொன்னதெல்லாம் என்ன ஆச்சு?
//
இன்னமும் அப்படியே உள்ளது , தேவையேற்படாததாலேயே முந்தைய பின்னூட்டத்தில் ஜெயலலிதாவை சேர்க்கவில்லை, இவங்க எல்லாரையும் விட டாப் அவங்க தான்.... யாரையுமே மதிக்காமல் தன்னிச்சையாக தொகுதி பங்கீடு செய்வது, லயன் ஷேர் கணக்காக தன்னிட்சையாக கூட்டணி பேச்சுவார்த்தை என்பதே இல்லாமல் தன்னிட்சையாக தொகுதிகளை அறிவித்துவிட்டு பின் கூட்டணி கட்சிகளை மோத விடுவது, முடிவுகள் எடுப்பது, ராஜ்யசபா சீட் தரேன் என்று முடிவு செய்துவிட்டு தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவுடன் கழட்டிவிடுவது என அந்தம்மா ரேஞ்சே வேற, நான் ஆயிரங்களில் கணக்கு பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் கோடிகளின் கணக்கை கேட்கின்றீர் :-)))

 
At 11:27 PM, Blogger ஜென்ராம் said...

குழலீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!
அன்பு நண்பரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!
நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று தெரிந்துதான் இதையும் கேட்டேன்..

//தொகுதி எண்ணிக்கை, எந்தெந்தத் தொகுதிகள் என்று முதலிலேயே உடன்பாடு கையெழுத்திடும் நேர்மை தமிழகத்தின் பிரதான கட்சிகளிடம் இருக்கிறதா? அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.//

சரி விடுங்கள்!!

 
At 11:28 PM, Blogger ஜென்ராம் said...

//அந்தம்மா ரேஞ்சே வேற, நான் ஆயிரங்களில் கணக்கு பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் கோடிகளின் கணக்கை கேட்கின்றீர் :-)))//

இந்த பதிலை மிகவும் ரசித்தேன்..

 
At 11:30 PM, Blogger ஜென்ராம் said...

குழலி:

//மற்றபடி முத்திரை விசயம் உங்களுக்கு கட்டுரைக்கு கட்டுரை மாறும் :-))))//

இதுலே உள்குத்து எதுவும் இருக்கா? என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே..:-))))

 
At 11:36 PM, Blogger குழலி / Kuzhali said...

//தொகுதி எண்ணிக்கை, எந்தெந்தத் தொகுதிகள் என்று முதலிலேயே உடன்பாடு கையெழுத்திடும் நேர்மை தமிழகத்தின் பிரதான கட்சிகளிடம் இருக்கிறதா? அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.//

முதலில் தொகுதி எண்ணிக்கை, அதன் பின் எந்தெந்த தொகுதிகள் என்று கையெழுத்திட்டு தாள்களை பரிமாறிக்கொள்வதை 1999 பாராளுமன்ற தேர்தலில் இருந்தே(அதற்கு முன்பே கூட இருக்கலாம்) பார்க்கின்றேனே தொலைக்காட்சிகளில்

 
At 11:42 PM, Blogger ஜென்ராம் said...

குழலி:
//முதலில் தொகுதி எண்ணிக்கை, அதன் பின் எந்தெந்த தொகுதிகள் என்று கையெழுத்திட்டு தாள்களை பரிமாறிக்கொள்வதை 1999 பாராளுமன்ற தேர்தலில் இருந்தே(அதற்கு முன்பே கூட இருக்கலாம்) பார்க்கின்றேனே தொலைக்காட்சிகளில்//

முதலிலேயே இரண்டையும் ஒரே நேரத்தில் முடிவு செய்ய இரு பிரதான கட்சிகளும் தயாராக இருக்கிறார்களா என்பதே என் கேள்வி.

சரி அய்யா! உங்கள் அனுமதியுடன் நான் உறங்கச் செல்லலாமா? எப்படியோ உரையாடல் போல் தொடர்ந்து விட்டது..மிக்க மகிழ்ச்சி..

 

Post a Comment

<< Home