Friday, February 02, 2007

பூஜைக்கு வந்த தோழர்!

வீட்டின் அருகில் இருக்கும் அனுமன் கோயிலில் பூஜை செய்யாமல் அந்தத் தாய், வீட்டில் புதிதாக எந்த வேலையும் செய்வதில்லை. அன்றும் அவர் அந்த அனுமன் கோயிலில் விளக்கேற்றி, கோயில் வளாகத்திலேயே பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். நள்ளிரவு ஆனபிறகும் வீடு திரும்பவில்லை. அவரது நான்கு வயது மகனை அன்று நண்பகலில் இருந்து காணவில்லை.

அடுத்த நாள் அதிகாலை வீட்டினர் அங்கு வந்து தாயைக் கட்டாயமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பச்சிளம் பாலகன் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தகவல் அவர்களுக்குக் கிடைத்து விட்டது. அவனுக்கு அந்தச் சிறுவயதில் பாடம் கற்றுக் கொடுப்பதற்காக அவர்கள் நியமித்த டியூஷன் மாஸ்டர்தான் கொலை செய்திருப்பதாகக் காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது. அந்த அனுமன் தனது குடும்பத்தைக் கைவிட்டுவிட்டதாக அந்தத் தாய் கதறியிருக்கிறார்.

தங்களுக்கு நேர்ந்து விடுகிற திடீர் இழப்புகளில் மனம் கலங்கும் தீவிர பக்தர்கள் உணர்ச்சிப் பிழம்பாகி கடவுளை நம்பிப் பயனில்லை என்று சொல்வதுண்டு. அதேபோல் நாத்திகராகவே தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவர்கள் வயதான காலத்தில் கடவுள் நம்பிக்கையை ஏற்றுக் கொள்வதும் உண்டு. முதலில் சொல்லப்பட்ட சம்பவம் நடந்த அதே மேற்குவங்கத்தில் அதற்கு நேர்மாறான இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.

50 ஆண்டு காலமாக நாத்திகராக இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மேற்கு வங்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி, சென்ற வாரம் தாரபீட காளி கோயிலுக்குச் சென்று பூஜை செய்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சரான அவர் மேலும், ‘‘இந்தியாவில் எங்கு சென்றாலும் நான் எனது பெயரைச் சொன்னதும், முதலில் இந்துவாகவும் பிராமணராகவும்தான் நான் பார்க்கப்படுகிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார். இவரது இந்த செயலை மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறார்.

‘‘என்ன காரியம் செய்திருக்கிறார்? காளி எங்காவது இருக்கிறாரா? உலகில் இல்லாதவருக்குப் போய் ஏன் பூஜை செய்து வழிபட்டிருக்கிறார்?’’ என்று ஜோதிபாசு கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால், சுபாஷ் சக்ரவர்த்தி அத்துடன் விடவில்லை. ‘‘ஜோதிபாசு எனக்குக் கடவுளுக்கு நிகரானவர். ஆனால், அனைத்து விஷயங்களிலும் அவர் சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நாட்களில் அவரே சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவுக்குள் சென்றிருக்கிறார். அவர் அந்தக் கோயிலுக்குள் செல்லும்போது சீக்கியர்களின் வழக்கப்படி தலையை மறைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்’’ என்று புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறார்.
‘‘ஜோதிபாசு கலியுகக் கண்ணன். குருஷேத்திரப் போரின்போது கௌரவர்களும் பாண்டவர்களும் கண்ணனின் ஆதரவைக் கோரியது போல, 1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்டபோது இருதரப்பும் ஜோதிபாசுவை தங்கள் பக்கம் கொண்டுவர முயற்சித்தன. அவர் இருந்த இடமே இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறது’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

‘இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து நாட்டின் பல நகரங்களில் சீக்கியர்கள் கொல்லப் பட்டனர். அந்த சமயத்தில் அப்பாவி சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் சீக்கியர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அடையாளமாகவும் ஜோதிபாசு அரசியல் நடவடிக்கையாகவே குருத்வாரா சென்றார்’ என்று மார்க்சிஸ்ட்கள் பதில் அளிக்கக் கூடும். மாநில முதலமைச்சர் என்ற முறையில் சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் தமது மாநிலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்காக அவர் சென்றிருக்கலாம்.

ரோமன் கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப் ஜான்பால் மறைவின்போது, கியூபாவில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்த ஒரு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ கலந்து கொண்டார். போப் ஜான்பால் கியூபாவுக்கு வந்திருந்தபோது, கியூபாவுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளைக் கண்டித்துப் பேசியிருந்தார் என்பது வேறுவிஷயம்.

ஒரு கம்யூனிஸ்ட்டாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டவர் மதம் தொடர்பான கூட்டங்களுக்குச் செல்லலாமா? ஒரு கம்யூனிஸ்ட்டே அப்படிச் செல்லக் கூடாது என்னும் போது, கடவுள் நம்பிக்கையும் மதநம்பிக்கையும் இல்லாத அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள் எப்படி இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

மார்க்சிய நெறிகளின்படி ஒரு மார்க்சிஸ்ட் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கலாமா என்ற விவாதத்தை சுபாஷ் சக்ரவர்த்தியின் காளி பூஜை ஏற்படுத்தி இருக்கிறது. ‘கட்சியினர் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை’ என்று சுபாஷ் சக்ரவர்த்தியால் எழுந்த சர்ச்சைக்கு சிலர் முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளின் முன்னணி அமைப்புகளான தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், மாணவர், இளைஞர் அமைப்புகளின் உறுப்பினர்கள் கடவுள் நம்பிக்கையுடன் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், அவற்றில் கட்சி உறுப்பினர்கள் மட்டும் இடம்பெறுவதில்லை. சாதாரண மக்கள் அவற்றில் உறுப்பினர்களாகிறார்கள்.

‘‘மதம் கற்பனையான சொர்க்கங்களை மக்களிடம் முன் வைக்கிறது. உண்மையில் தாங்கள் வாழும் உலகிலேயே ஒரு மாற்றத்தை உருவாக்கி, பெரும்பாலான மக்களுக்கு நிறைவான வாழ்க்கையைப் பெறும் சக்தி மக்களிடம் இருக்கிறது. இந்த உண்மையை மக்கள் அறியவிடாமல் மதம் தடுக்கிறது’’ என்பதே மார்க்சியத்தின் மதம் குறித்த பார்வை.

இந்நிலையில், கடவுள் நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு கட்சியில் இல்லை என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி சொல்ல இயலாது. ஏனெனில், இந்த உலகத்தை இறைவன் படைத்தான் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டால், அதனை ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுந்து விடுகிறது. உலகை மாற்றுவதற்கான அவசியம் இல்லாதபோது கம்யூனிஸ்ட் கட்சிக்கான தேவையே இல்லாமல் போய்விடுகிறது.

சுபாஷ் சக்ரவர்த்தி என்ற தனிமனிதரோ அல்லது வேறு யாருமோ கடவுள் நம்பிக்கையுடன் இருப்பதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபணையும் இருக்கத் தேவையில்லை. ஆனால், அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருப்பதாலேயே இதுகுறித்த சர்ச்சை எழுகிறது. இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில், ஆட்சியில் இருப்பவர்கள் உண்மையான மதச்சார்பற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும்.

மதச்சார்பின்மையை மத நல்லிணக்கம் என்று குறுக்கி விளக்கம் அளிக்கும் கட்சிகளின் மத்தியில், உண்மையான மதச்சார்பின்மைக்கு கம்யூனிஸ்ட்களே முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதிலும் நம் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இன்னும் கடவுள் நம்பிக்கையுடனும் மத நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். அவர்களுக்கான வழிபாட்டு உரிமையையும் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது.

ஆனால், ஆட்சியில் இருப்பவர்களும் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் எந்த மதரீதியிலான நடவடிக்கைகளிலும் பங்கேற்பது முறையல்ல! அவர்களை வழிநடத்துவது இந்திய அரசமைப்புச் சட்டமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, வேறெந்த நூலாகவும் இருக்கக் கூடாது!
-ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (27.09.06)

2 Comments:

At 7:02 PM, Blogger ஜென்ராம் said...

tamilreber:

//secularism cannot be reduced to atheism.//

நான் அப்படி சொல்லவில்லை,, நண்பரே.. சார்பற்று இருத்தல் நாத்திகம் அல்ல!

இடது முன்னணி அமைச்சர் கோவிலுக்கு வந்ததை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் போலிருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஏற்கனவே கொண்டாடி விட்டார்கள்.

//It is for the party to
decide whether his behavior is
appropriate as per party rules.//

எனது கட்டுரை மார்க்சிஸ்ட் கட்சியை நோக்கிய விமர்சனமே. இதை நான் தெளிவாக விளக்கியிருப்பதாகவே கருதுகிறேன். காளியால் உலகம் படைக்கப்பட்டது என்றால் அந்த உலகத்தை ஏன் மாற்ற வேண்டும்? சமூக மாற்றம் தேவை இல்லையென்றால் மார்க்சிஸ்ட் கட்சி எதற்கு? இதைக் கேட்டிருக்கிறேன்.

//A true secular govt will
not appoint Sachar Committee and
appease muslims.You are in support
of that Committee and its recommendations but unable to
accept a minister visiting temple
and expressing his faith.Give up this dobule standard.//

ஒரு சமூகத்தின் வாழ்க்கை நிலை பற்றிய சச்சார் கமிட்டியை நீங்கள் இந்தப் பிரச்னையுடன் குழப்ப வேண்டியதில்லை.

நான் யாரிடமும் வாக்கு கோரிப் போகப் போவதில்லை. எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் அல்லது கட்சிக்கும் கொடி தூக்கவேண்டிய நிர்பந்தமும் இல்லை. எனது பார்வையில் நான் பிரச்னைகளைப் புரிந்து கொள்கிறேன். அதை பிறருடன் பகிர்ந்து கொள்கிறேன். எனவே இரட்டை நிலை எனக்குத் தேவையில்லை.

மத அடிப்படைவாதம், குறுங்குழுவாதம், போன்றவை எந்த மத, அரசியல் தளத்தில் இருந்து வந்தாலும் அவை குறித்த எனது கருத்துக்களை நான் ஜூனியர் விகடன் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்துத்துவ சக்திகளைப் போலவே வேறு அடிப்படைவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறேன். அம்மாதிரியான கட்டுரைகள் உங்கள் கவனத்தை ஈர்க்காமல் போயிருக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் மனப்பூர்வமான நன்றி tamilreber!

 
At 9:27 PM, Blogger தாணு said...

கருணாநிதி- சாயிபாபா சந்திப்புக்குக்கூட இந்த பதிவு சில விளக்கங்கள் தரும் போலிருக்குதே!

 

Post a Comment

<< Home