Sunday, November 07, 2010

‘அவர்களும்’ மனிதர்களே!

அந்தப் பெண்ணின் பெயர் பூஜா. அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அந்த இரண்டு குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் இருக்கும் வி.என்.தேசாய் மருத்துவமனைக்கு குழந்தைகளை பூஜா அழைத்து வந்தார். அவருக்குத் துணையாக அவருடைய அம்மா சியாமளாவும் வந்தார். மருத்துவமனையில் பர்தா அணிந்த ஒரு பெண் அவர்களுடன் அறிமுகமாகி பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவர் போய் விட்டார். அதன்பிறகு சியாமளாவும் பூஜாவும் இரு வேறு தளங்களில் ஆளுக்கொரு குழந்தையுடன் இருந்திருக்கிறார்கள். அப்போது ஏற்கனவே அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பர்தா பெண்மணி சியாமளாவிடம், ‘போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக குழந்தையை பூஜா கேட்கிறாள். நீங்கள் வீணாக அலைய வேண்டாம். நீங்கள் இங்கேயே இருங்கள். குழந்தையை என்னிடம் கொடுங்கள். இந்தக் குழந்தையை பூஜாவிடம் கொடுத்துவிட்டு, முதலில் போலியோ மருந்து போட்ட குழந்தையை பூஜாவிடம் இருந்து வாங்கி நானே கொண்டு வந்து உங்களிடம் தருகிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.

சியாமளா மும்பைக்கு புதியவர். அவர் அந்தப் பெண்ணிடம் குழந்தையைக் கொடுத்து விட்டார். சில நிமிடங்கள் கழித்து பூஜா வந்தார். முதலில் பூஜா கொண்டு போன குழந்தை மட்டும் அவரிடம் இருந்தது. அந்த புதிய பெண்மணியிடம் சியாமளா கொடுத்த குழந்தை பூஜாவிடம் போய்ச் சேரவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் புரிந்தது. மருத்துவமனைக் காவலர்களிடம் புகார் கொடுத்தார்கள். அங்கு நிறுவப்பட்டிருக்கும் ’குளோஸ்ட் சர்க்யூட் டி.வி’யில் காட்சிகளைப் பார்த்தால் அந்தப் பெண்மணி குழந்தையுடன் மருத்துவமனையை விட்டு வெளியேறியிருப்பது தெரிந்தது. வெள்ளை நிற காலணிகளும் கண்களும் மட்டுமே அதில் தெரிந்தது. அந்தப் பெண்ணின் முகத்தை பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அவர் பர்தா அணிந்திருந்தார்! இந்த சம்பவம் நடந்தது கடந்த அக்டோபர் 15-ம் தேதி. இதே போல் பிறந்து நான்கே நாட்களான ஒரு குழந்தை மும்பை சியான் மருத்துவமனையில் ‘திருட்டு’ போயிருக்கிறது. அந்தக் குழந்தை கடத்தலுக்குப் பிறகே அனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி பொருத்தி இருக்கிறார்கள்!

இதுபோன்ற சம்பவங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்க்க் கூடியவைதான். மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகள் திருடப்படுவதற்கான காரணம் என்ன, இதுபோன்ற நிகழ்வுகளை எப்படித் தடுப்பது என்பதில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சராசரியான மனிதர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் பால்தாக்ரேயின் சிவசேனை என்ன சொல்கிறது பாருங்கள். அந்தக் கட்சியின் நாளிதழான ‘சாமனா’ பொது இடங்களில் பர்தா அணிந்து பெண்கள் வருவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தலையங்கம் எழுதியது. ‘குழந்தையைக் கடத்துவதற்கு பர்தா உதவும் என்றால் பர்தாவைத் தடைசெய்ய வேண்டும்’ என்று கோருகிறது. மேலும் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி, பொது இடங்களில் பர்தா அணிவதற்குத் தடைவிதித்து சட்டம் கொண்டு வந்த்தை ‘புரட்சிகரமான நடவடிக்கை’ என்று பாராட்டுகிறது. ஏறத்தாழ 97 முதல் 98 சதவீதம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் துருக்கியில் கமால் பாட்சா பர்தாவைத் தடைசெய்தபோது இஸ்லாம் அதற்குத் தடையாக இல்லை என்னும் போது இந்தியாவில் மட்டும் ஏன் தடைசெய்ய முடியவில்லை என்று கேள்வி எழுப்புகிறது.

சென்ற இதழின் இதே பகுதியில் இறுதியாக சாமனா எழுதிய இந்த தலையங்கத்தைப் பற்றி ஒரு வரியில் குறிப்பிட்டிருந்தோம். மீண்டும் அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டுமா என்ற தயக்கம் முதலில் எழுந்தது. உங்களில் சிலர் ‘இது என்ன சிவசேனை வாரமா?’ என்று கேள்வி எழுப்பக் கூடும். ஆனால், அடுத்தடுத்து சிவசேனை செயல்படும் வேகமே, மீண்டும் சிவசேனை பற்றி எழுதத் தூண்டுகிறது. பாடத்திட்டத்தில் இருந்து புத்தகம் நீக்கம், பர்தாவுக்குத் தடை என்ற அம்புகளுக்குப் பிறகு அடுத்த கணையை மற்றொரு தலையங்கம் வழியாக சிவசேனை எய்திருக்கிறது. மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளுக்குத் தடை விதிக்க வேண்டுமாம்! இதற்கு என்ன காரணம்? சிவசேனை சார்பில் தசரா ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில் அனுமதிக்கப்பட்ட 50 டெசிபல் அளவை விட அதிகமான ஒலி அளவில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஒலி மாசு ஏற்படுவதை எதிர்க்கும் சுமைரா அப்துல் அலி என்பவர் இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தார். சிவசேனையின் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது ஒலிமாசு ஏற்படுத்தியதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதற்கு எதிர்வினையாக மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று சிவசேனை தன்னுடைய பழைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறது.

கோவில்களிலும் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிறந்தநாள், நினைவுநாட்களில் ஆங்காங்கே ஒலிபெருக்கிகளில் தலைவர்களுடைய பேச்சுகளும் பாட்டுகளும் ஒலிபரப்பப்படுகின்றன. இவற்றை எல்லாம் பொதுவாகப் பார்த்து ஒலி மாசு என்று சொல்பவர்களைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அம்மன் கோவில்களில் அல்லது தேவாலயங்களில் அல்லது மசூதிகளில் அல்லது குறிப்பிட்ட பிரிவினர் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதை மட்டும் தடை செய்ய வேண்டும் என்று கேட்பவர்களை எப்படிப் புரிந்து கொள்வது? அதிலும் அந்தக் கோரிக்கைக்கு பின்னணியாக மத வெறி அல்லது சாதி வெறி அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கும் என்றால் எப்படி அதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?

இன்றைய இந்திய சூழலில் சிவசேனை மீண்டும் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வை மகாராஷ்டிர மக்கள் மத்தியில் எழுப்புவதற்கு முயல்கிறது. அதற்கு பிரான்சையும் துருக்கியையும் எடுத்துக்காட்டுகளாக துணைக்கு அழைத்துக் கொள்கிறது. ஜெர்மனியின் கலாச்சாரத்தையும் கிறித்துவ மதிப்பீடுகளையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஜெர்மனியில் இருக்கத் தேவையில்லை என்று ஜெர்மன் அதிபர் பேசி இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அதன் வழியாக வேறொரு கலாசாரத்தைப் பார்க்கும் முறை சரியல்ல என்று உலகம் முழுவதும் நடுநிலையாளர்கள் கரடியாகக் கத்தினாலும் அது இன்னும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத நிலையிலேயே இருக்கிறது.

கொல்கத்தாவில் கடந்த 2010 ஏப்ரல்-மே மாதங்களில் நடந்த இன்னொரு சம்பவம் பற்றிய செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். அலியா பல்கலைக்கழகத்தில் வேலைபார்த்த எட்டு பேராசிரியைகளையும் ‘பர்தா’ அணிந்து கொண்டு வர வேண்டும் என்று மாணவர் சங்கம் ஆணையிட்டது. விருப்பத்துடனோ அல்லது விருப்பம் இல்லாமல் கட்டாயத்தின் பேரிலோ ஏழு பேர் பர்தா அணிந்து வகுப்பெடுக்கத் தொடங்கினார்கள். சிரின் மித்தியா என்ற ஆசிரியை மட்டும் அந்தக் கட்டளைக்கு அடிபணிய மறுத்தார். பல்கலைக்கழக விதிகள் ‘உடை’ குறித்து எந்த கட்டுப்பாடும் விதிக்காத நிலையில் மாணவர்களின் இந்த செயல் அத்துமீறல் என்று அவர் வாதிட்டார். எது சரி என்று பார்க்காமல் நிர்வாகம் சமரசத் தீர்வை முன்வைத்தது. நிர்வாகத்துக்கு சொந்தமான நூலகத்திற்கு சிரின் வந்து போகலாம். ஆனால் அவர் வகுப்புகளுக்குப் போகத்தேவையில்லை. அவருக்கான முழு ஊதியம் கொடுக்கப்படும்!

ஒருபுறம் குறிப்பிட்ட உடை அணியத் தடை! மறுபுறம் அந்த உடையைக் கட்டாயம் உடுத்த வேண்டும் என்று நிர்ப்பந்தம்! அது உடுத்துபவர்களின் விருப்பம் சார்ந்தது என்ற குரல் சராசரிக்கும் அதிகமான டெசிபல் அளவில் எப்போது ஒலிக்கும்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home