Sunday, November 07, 2010

மயக்கம் என்ன மௌனம் என்ன

”இவனுக்கு என்ன பாதுகாப்பு வேண்டியிருக்கு?”

என்னோடு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நண்பர் கொந்தளித்தார். ’விசாரணை, அது, இதுன்னு இழுத்து அடிக்கக் கூடாது.. இந்தப் பயல்களை உடனே தூக்குல போடணும்’ என்று ஆத்திரப்பட்டார். கோவையில் ஒரு ஜவுளிக்கடை அதிபரின் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதிலும் அந்தப் பெண் குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

”உங்களுக்கு ரத்தக் கொதிப்பு இருக்கிறதா? மனச் சோர்வு இருக்கிறதா? தினம்தோறும் செய்திகளைப் படிக்காதீர்கள்” என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்லும் நாள் விரைவில் வந்துவிடும் போலிருக்கிறது. கோவையைத் தொடர்ந்து, சென்னையில் கத்தி முனையில் பள்ளி சிறுவன் கடத்தப்பட்டிருக்கிறான். மிகவும் குறுகிய காலத்தில் சென்னையில் லிப்ட் விபத்துகள் அடுத்தடுத்து நடந்திருக்கின்றன. ஒரு அடுக்ககத்தில் பூ கொண்டு போன சிறுவன் லிப்ட்டில் சிக்கி இறந்து போனான்; பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் நடந்த லிப்ட் விபத்தில் இரண்டுபேர் பலி ஆனார்கள்; வேறு என்னென்ன செய்திகள் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றன? ரயிலில் பயணம் செய்த சக பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த பால் கொடுத்து நகை, பணம் கொள்ளை என்று ஒரு செய்தி. முன்பு மயக்க பிஸ்கட் கொடுத்து ரயிலில் ஒரு கும்பல் கொள்ளை அடிப்பதாக செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. இப்போது மயக்கப் பால்! பெண் மயக்கம் தொடர்பான குற்றங்கள் ஏராளம்!

நம்மிடம் இருக்கும் கடவுள் பக்தியை தங்களுடைய மூலதனமாக வைத்து நம்மை மயக்கிக் கொள்ளை அடிக்கும் நபர்களையும் அவ்வப்போது நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்போது நம்முடைய தேசபக்தியையும் நமக்கு மயக்க மருந்தாகக் கொடுத்து சில அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள்! இவை எல்லாம் நம்மைக் குடைந்து கொண்டு இருக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் நமக்கு கொடையாகக் கொடுத்திருப்பது மது மயக்கம்! நம்முடைய தேசபக்தி உணர்வை மயக்கம் என்று சொல்லவில்லை. ஆனால் அந்த உணர்வை அடிப்படையாக வைத்து நம்மை மயக்கத்தில் ஆழ்த்தி விட்டு, சிலர் நம்மிடம் இருந்து கிடைப்பதைச் சுருட்டிக் கொள்கிறார்கள். இது தான் நாம் மயக்கத்தில் இருக்கும்போது நடத்தப்படும் கொள்ளை!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் எதற்காக நடத்தப்பட்டன? இந்த வகையான போட்டிகளை நடத்தும் அளவு இந்தியா வளர்ந்து விட்டது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்துவதற்காக! இந்த உணர்வுக்குப் பின்னால் நடந்தது என்ன? ஏராளமான முறைகேடுகள்! அப்பட்டமான பகல் கொள்ளை! அதைவிட இன்னும் உணர்வு பூர்வமான ஒரு விஷயத்தில் இப்போது பெரிய ஊழல் நடந்திருக்கிறது. கார்கில் வீரர்களுக்காகவும் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்காகவும் என்று சொல்லி அனுமதி வாங்கி, எழுப்பப்பட்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களுடைய தரகர்களுக்கும் வீடுகளை ஒதுக்கி இருக்கிறார்கள்! நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்பவர்களுடைய குடும்பங்கள் ஆதரவில்லாமல் நடுத்தெருவில் நிற்காது என்பதை உணர்த்தும் வகையில் ‘முன்மாதிரி’ அடுக்ககமாக அந்தக் குடியிருப்பு இருந்திருக்க வேண்டும். ஆறு தளங்களுடன் இருக்க வேண்டிய அந்த அடுக்ககம், இப்போது பிரமாண்டமான 31 மாடிக் கட்டிடமாக இருக்கிறது. ஆனாலும் அது இப்போது ‘கேவலப்பட்டு’ நிற்கிறது!

மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு, பாவம், அந்தக் கட்டிடம் என்ன செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். தியான்மேன் சதுக்கம் என்று சொன்னவுடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? தாஜ்மகால் என்றவுடன் யார் யார் உங்கள் நினைவுக்கு வருகிறார்கள்? தஞ்சை பெரிய கோவிலைப் பார்த்தவுடன் ராஜராஜ சோழன் என்ற பெயரும் நம்முடைய மனதில் வந்து விடுகிறது. அதைப் போல ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கம் என்ற பெயரைக் கேட்டாலே கார்கில் போர்த் தியாகிகளின் பெயரில் நடந்த மோசடிகளே எதிர்காலத்தில் எல்லோருடைய நினைவுக்கும் வரும்.

இந்த சங்கத்தைத் தொடங்கியவர்களுக்கு உண்மையிலேயே கார்கில் வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்குமா என்பதே இப்போது சந்தேகமாக இருக்கிறது. கார்கில் தியாகிகளை முன்னால் நிறுத்தி நிலத்தைப் பெற வேண்டும் என்பதே சங்கத்தின் நோக்கமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. ராணுவக் குடும்பங்கள் தவிர, 40 சதவீத வீடுகளை பிறருக்கும் ஒதுக்கலாம் என்று சங்கத்தின் விதிகளைத் திருத்தியிருக்கிறார்கள். எதற்காக? விதிமீறல்களையும் முறைகேடுகளையும் கண்டு கொள்ளாமல் அனுமதி அளிக்கும் அதிகார வட்டத்துக்கு ‘எலும்புத் துண்டுகளைப்’ போடுவதற்காக! ஒரு சதுர அடி 60000 ரூபாய் விற்கும் இடத்தில் வெறும் ஆறாயிரம் ரூபாய்க்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. வீரர்களுக்கும் தியாகிகளின் குடும்பத்துக்கும் சலுகை விலையில் வீடுகளை ஒதுக்குவதைக் கூடப் புரிந்து கொள்ள முடிகிறது. அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இங்கு எதற்காக வீடுகள்? இன்றைய மகாராஷ்டிர முதலமைச்சர் அசோக் சவானின் மாமியாருக்கும், மைத்துனருக்கும், மைத்துனிக்கும் எப்படி இந்த இடத்தில் வீடு ஒதுக்கப்பட்டது? இவர்கள் நாட்டுக்காக செய்த தியாகம் என்ன? மகாராஷ்டிர மாநில அரசாங்கத்தில் அசோக் சவான் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தார்! அப்போது ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கத்திற்கு இந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதற்கு அவர்தான் அனுமதி கொடுத்தார்! இந்த மாபெரும் தியாகத்துக்கு கிடைத்த பரிசு மூன்று வீடுகள் போலிருக்கிறது!

வேறு எந்த விதமான தியாகங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது? சென்ற வருடம் அந்த குடியிருப்பில் கூடுதலாக 10 வீடுகள் கட்டப்பட்டன. அதற்கு மும்பை மாநகராட்சியிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும். அப்படி ஒரு சான்றிதழ் தேவையில்லை என்று மாநகராட்சி கமிஷனர் ஜெயராஜ் பதக் முடிவு செய்தார். அவருடைய மகன் கனிஷ்காவுக்கு அங்கு ஒரு வீடு இருக்கிறது! ராணுவத்தில் முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் சிலருக்கும் இங்கு வீடுகள் இருக்கின்றன. இந்த வீட்டு வசதி சங்க விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கிறது. ராணுவத்திலும் விசாரணை நடக்கிறது. அவசரமாக டெல்லி போய் சோனியாகாந்தியிடம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர முதலமைச்சர் அசோக் சவான் கொடுத்திருக்கிறார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று எப்படி முடிவெடுப்பது? மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் இந்த சிக்கலை விசாரித்து ஓர் அறிக்கை கொடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆணை!

சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடையாது. கடற்கரை மேலாண்மை விதிகள் மீறப்பட்டிருக்கின்றன. பணிமுடிந்து குடிபோவதற்கான தகுதிச் சான்றிதழைக் கொடுக்கவில்லை என்றால் இதுவரை வழங்கப்பட்ட மின்சாரமும் தண்ணீரும் நிறுத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் திடீரென்று ‘அரிச்சந்திரர்’களாக அவதாரம் எடுக்கிறார்கள். எப்போதெல்லாம் மக்கள் மத்தியில் ஊழல் அம்பலப்பட்டு நிற்கிறதோ, அப்போதெல்லாம் விசாரணைகளும் அரிச்சந்திர அவதாரங்களும் வழக்கமான நடைமுறைகளாகவே இருக்கின்றன.

வீடுகள் ஒதுக்கீட்டில் இந்த நாடகமாவது அரங்கேறுகிறது. வேறு ஒரு ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்குப் பிறகும் மத்திய அரசிடம் எந்த அசைவும் இல்லை. இந்தப் பகுதியின் முதல் வரியை ஆத்திரத்துடன் வெளிப்படுத்திய நண்பர் இதற்காக எல்லாம் கோபப்படமாட்டார்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 07.11.10

0 Comments:

Post a Comment

<< Home