Sunday, November 28, 2010

குற்றங்கள் போற்றேல்!

அது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை. இந்திய வரைபடத்தில் பெருமையுடன் குறிப்பிட முடியாத லட்சக்கணக்கான கிராமங்களின் அங்கமாக இருக்கும் கிராமம் ஒன்றில் அந்தக் கிளை இருந்தது. வங்கியின் மேலாளரையும் சேர்த்து மொத்தமே ஐந்து ஊழியர்கள்தான் அங்கு இருந்தார்கள். எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் அன்றாட அலுவல்களை அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அன்று வழக்கத்துக்கு விரோதமாக கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. ”அதை எடு; இதை எடு” என்று அந்த ஆய்வாளர் அந்த வங்கியைக் கலக்கிக் கொண்டிருந்தார். வங்கியின் மத்திய அலுவலகத்தின் ‘இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்டில்’ இருந்து கிளையின் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்வதற்காக அவர் வந்திருந்தார். நகர்ப்புறத்தில் இருக்கும் ஊழியர்களைவிட பொதுவாக கிராமங்களில் இருக்கும் ஊழியர்கள் அப்பாவியாக இருப்பார்கள். வங்கியின் உயர் அலுவலகங்களில் நடக்கும் பெரும்பாலான விஷயங்களை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த அப்பாவித்தனத்தை அடிப்படையாக வைத்துத் தான் அந்த இன்ஸ்பெக்டர் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தார்.

அந்த கிளையில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு என்று தனியாக ஒரு தொழிற்சங்கம் இருந்தது. அதன் செயலாளர் அலுவலகத்துக்கு கொஞ்சம் ‘லேட்’ ஆக வந்தார். அந்தக் கிளைக்கு வந்திருந்த அந்த ஆய்வாளரை யூனியன் செயலாளருக்கு வங்கியின் மேலாளர் அறிமுகம் செய்து வைத்தார். “சார்! இதுக்கு முன்னாடி நீங்க எங்கே இருந்தீங்க? ‘தென்காசி’யில் தானே மேனேஜரா இருந்தீங்க?” என்று கேட்டார் அந்த செயலாளர். அவ்வளவுதான்! அந்த இன்ஸ்பெக்டரின் ஆர்ப்பாட்டம் எல்லாம் அடங்கி விட்டது. முகம் சுருங்கி விட்டது. அதற்குப் பிறகு அவர் யாரிடமும் எதுவும் அநாவசியமாக பேசவில்லை.

கிளையில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு ஒரே ஆச்சர்யம். ”என்ன விஷயம்? ஏன் அந்த ஒரு கேள்வியிலேயே ’பார்ட்டி’ பதுங்கிட்டாரு?” என்று செயலாளரிடம் கேட்டார்கள். ”தென்காசியில் அவர் மேனேஜராக இருந்தார். எல்லாவிதமான கடன் கொடுக்கும்போதும் இவரும் கொஞ்சம் ‘கறந்திருக்காரு’. இதெல்லாம் கம்ப்ளெயிண்ட் ஆயிடுச்சு.. இடையில மூணு மாசம் சஸ்பெண்ட் பண்ணி வைச்சிருந்தாங்க.. அப்புறம் யாரையோ பிடிச்சு மறுபடியும் வேலைக்கு சேர்ந்துட்டாரு. கிளை எதுவும் கொடுக்காமல் இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்ட்டில் கொண்டு போட்டுட்டாங்க” என்று அவர் பதில் சொன்னார். ஒரு வங்கியில் தப்பு செய்தார் என்று தண்டிக்கப்பட்டவருக்கு வங்கிக் கிளைகளை தணிக்கை செய்யும் அதிகாரமா? இப்படி எல்லாம் கூட நிர்வாகத்தில் முடிவு செய்வார்களா என்று அந்தக் கிளையின் ஊழியர்கள் பேசிப் பேசி மாய்ந்து போனார்கள்!

அந்த அப்பாவிகளின் தார்மீக கோபம் வெளியில் தெரியாமல் அந்தக் கிளையின் சுவர்களுக்குள் அமுங்கிப் போனது. இப்போது உச்சநீதிமன்றம் அதே போன்றதொரு உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறது. ”ஊழலைத் தடுப்பதற்கும் ஊழல் நடைபெறாமல் கண்காணிப்பதற்கும் உருவாக்கப்பட்ட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கு குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை நியமிப்பது சரியா என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறது. ”இப்போது எப்படி வேலை நடக்கும்? ‘நீங்களே குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கிறீர்கள். நீங்கள் எப்படி என் மேல் நடவடிக்கை எடுக்க முடியும்?’ என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கேட்டால் ஆணையம் எப்படி செயல்பட முடியும்?” என்று ஒரு நீதிபதி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரைக் கேட்டிருக்கிறார்.

ஓர் அமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது? ஒரு சட்டம் என்ன நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டிருக்கிறது? இது போன்ற அடிப்படையான கேள்விகளைக் கூட மத்திய அரசு கருத்தில் கொள்ள மறுக்கிறது. வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு எவ்வளவு அலட்சியமாக விளக்கம் கொடுக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அட்டார்னி ஜெனரல் வாகன்வதி எவ்வளவு பொறுப்புடன் நீதிமன்றத்தில் மத்திய அரசைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் பாருங்கள். “ ஊழல் கண்காணிப்பு ஆணையர் அப்பழுக்கு இல்லாதவராகவும் நாணயமானவராகவும் இருக்க வேண்டியதில்லை. ஏனென்றால், ‘அப்பழுக்கில்லாத நாணயம்’ என்னும் தகுதி ஆணையருக்கு இருக்க வேண்டும் என்று மத்திய கண்காணிப்புச் சட்டம் அவருக்கான தகுதியை வரையறை செய்யவில்லை என்று அவர் சொல்லி இருக்கிறார்!

ஏற்கனவே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் ‘குற்றம் குறையற்ற நாணயமானவராக’ இருக்க வேண்டும் என்று 1998-ல் உச்சநீதிமன்றம் சொல்லி இருப்பதாக அறிய முடிகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வார்த்தைகளைக் கேட்டு அவர் எரிச்சலடைந்து விட்டார் போலிருக்கிறது. “ நாணயமாக இருக்க வேண்டும் என்பதை ஒரு தகுதியாக்கினால், ஒவ்வொரு நீதிபதி நியமனமும் ஆய்வுக்கு உட்பட வேண்டியிருக்கும்” என்று அதிரடியாகப் பேசி இருக்கிறார். தற்காப்புக்கு சிறந்த வழி எதிரியை அதிரடியாகத் தாக்குவதுதான் என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார் போலிருக்கிறது. யார் எதைப் புகாராக சொன்னாலும் ‘நீ என்ன யோக்கியமா’ என்று கேட்கும் நம்முடைய சராசரி மனநிலையில் இருந்து அட்டார்னி ஜெனரலும் மத்திய அரசும் விதிவிலக்கல்ல என்பதைத் தெளிவாக அவர் உணர்த்தி இருக்கிறார்!

இந்த சர்ச்சையின் நாயகன் யார்? அவர் பெயர் பி.ஜே.தாமஸ். அவர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக கடந்த 2010 செப்டம்பர் மாதம் 7-ம் தேதி பொறுப்பேற்றார். அவரை யார் நியமனம் செய்ய முடியும்? இந்தியப் பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட மூவர் குழுவே அவரை நியமிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. நேர்மை பற்றியும் நல்லாட்சி பற்றியும் மன்மோகன்சிங்கும் ப.சிதம்பரமும் எப்போதும் பேசுகிறார்கள். அவர்கள் எப்படி ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, உயர் பதவிகளில் நடக்கும் ஊழலைக் கண்காணித்து தடுக்கும் ஆணையத்துக்கு தலைவராக நியமித்தார்கள் என்பது புரியாத கேள்வியாகவே இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் அப்போதே இந்த நியமனத்தை எதிர்த்தார். இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். ஆனாலும் மன்மோகன்சிங்கும் சிதம்பரமும் அவரை நியமித்திருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய நம்பகத்தன்மையும் இதனால் பாதிக்கப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது அதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை அல்லது அவர்களால் மறுக்க முடியாத ஓர் அதிகார பீடத்தில் இருந்து அவர்களுக்கு அந்த ஆணை வந்திருக்கிறது!

பி.ஜே.தாமஸ் மேல் அப்படி என்ன குற்றச்சாட்டு? 1992-ம் வருடம் கேரளாவில் உணவு எண்ணெய் பற்றாக்குறையாக இருந்தது. இதைப் போக்குவதற்காக மலேசியாவில் இருந்து 15000 டன் பாமாயிலை மாநில அரசு இறக்குமதி செய்தது. இந்த இறக்குமதியில் எண்ணெய்க்கு சந்தை விலையை விட அதிக விலையை அரசு கொடுத்திருக்கிறது. இதனால் அரசுக்கு இரண்டு கோடியே 82 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதற்காக போடப்பட்ட வழக்கில் தாமஸ் மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஏனென்றால், அப்போது இறக்குமதிக்குப் பொறுப்பான துறையின் செயலராக இருந்தவர் இந்த பி.ஜே.தாமஸ்!

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் இணையதளத்துக்குப் போய்ப் பாருங்கள். முகப்பிலேயே நம்மிடம் பல கோரிக்கைகளை அது முன்வைக்கிறது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் நீங்களும் ஓர் அங்கமாகப் பங்கேற்று செயல்படுங்கள் என்று அது நம்மிடம் கோருகிறது; எல்லா அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்காமல் வாய் திறந்து பேசுங்கள் என்று நம்மை அழைக்கிறது. அத்துடன் அது நிற்கவில்லை. ”ஊழல் இல்லாத இந்தியா என்ற கனவை நனவாக்க உதவுங்கள்” என்று அறைகூவல் விடுக்கிறது. அதை ஏற்றுக் கொண்டு நாமும் நம்மாலான ஊழலை – மன்னிக்கவும் – உதவியைச் செய்யலாம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home