திமுகவுக்கு காங்கிரஸ் தரும் நெருக்கடி
அவர்கள் ஐம்பது பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை திரும்பிப் போகச் சொல்லி முழக்கம் இட்டுக் கொண்டே சென்னை தி.நகரின் முக்கிய சாலை ஒன்றின் வழியாக வந்தார்கள். உலக அரங்கில் அமெரிக்காவின் செயல்பாடுகள் குறித்தும் இந்தியாவுக்கு ஒபாமா வருவதன் பின்னணி குறித்தும் அவர்களுக்கு இருந்த பார்வையை கோஷங்களாக வெளிப்படுத்திக் கொண்டு வந்தார்கள். அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற பதாகை எதுவும் இல்லை. அன்று நாடு முழுவதும் ஒபாமாவின் வருகைக்கு எதிராக பல்வேறு இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன. ஒருவேளை ஏதேனும் ஓரிடத்தில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு திரும்பும் சிறு குழுவாகக் கூட இருக்கலாம். கலைந்து போகும் வழியிலும் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் அந்த சாலை எங்கும் பரவி நிற்கும் மக்களுடன் உரையாடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
அரசியல் கட்சிகளின் ‘மாபெரும்’ ஊர்வலங்களையும் பொதுக் கூட்டங்களையும் பார்த்த நமக்கு அந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது வித்தியாசமாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எத்தனை பெரிய கோலமாக இருந்தாலும் முதலில் ஒரு புள்ளியில் இருந்துதான் போடத் தொடங்க முடியும் என்றோ அல்லது எவ்வளவு பெரிய மராத்தான் ஓட்டமாக இருந்தாலும் முதல் அடியில் இருந்துதான் ஆரம்பிக்க முடியும் என்றோ அவர்கள் அறிந்திருந்தார்கள். ‘கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும் சக்தியாக வடிவெடுக்கும்’ என்ற வாசகமே அவர்களை வழிநடத்தக் கூடிய மேற்கோளாக இருக்கும் போலிருக்கிறது. ஆனால் கூட்டிவரப்படும் கூட்டங்களை வியந்து பார்த்துப் பழகிப் போன நம்மில் பலருக்கு அந்தக் கூட்டம் கேலிக்குரியதாக தோன்றியிருக்கும்.
”ஒபாமாவே திரும்பிப் போ” என்ற இடதுசாரிகளுடைய கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டாரா அல்லது அவர் வந்த வேலை முடிந்து விட்டதா தெரியவில்லை. அவர் மீண்டும் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்! அமெரிக்க அதிபரின் பறக்கும் அலுவலகமான ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானம், இந்திய வான்வெளியை விட்டு வெகுதூரம் பறந்து போனது. ஆனால் அவர் இந்தியாவில் ‘நிரந்தரமாக’ சில தடங்களை விட்டுச் சென்றிருப்பார். அடுத்து வரும் மாதங்களில் அவற்றிற்கான ‘பலன்களை’ நாம் அனுபவிக்கத் தொடங்குவோம்!
‘ஒபாமா வந்து விட்டுப் போகட்டும்; அதன் பிறகு பாருங்கள்’ என்ற ரீதியில் தமிழக காங்கிரஸ் கட்சியில் கூட சில குரல்கள் ஒலித்தன. காங்கிரஸ் கட்சி அப்படி என்ன செய்யப் போகிறது என்று ஓர் எதிர்பார்ப்பை அந்தப் பேச்சு மக்கள் மத்தியில் உருவாக்கியது. தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தடாலடியாக ஏதேனும் செய்யப் போகிறது என்று சிலர் நினைத்திருக்கலாம். அல்லது மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்கும் போது, திமுக அமைச்சர் ஆ.ராசா அமைச்சர் பதவியையோ அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையையோ இழக்க நேரிடும் என்று நம்மில் சிலர் கணித்திருக்கலாம். ஆனால் நடந்தது என்ன? இந்தியாவை விட்டு ஒபாமா கிளம்பிய சிறிது நேரத்தில் மகாராஷ்டிர முதலமைச்சர் அசோக் சவான் தன்னுடைய ராஜினாமாவை ஆளுநர் சங்கர நாராயணனிடம் கொடுத்தார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதியும் கட்சிப் பதவியில் நீடிக்க முடியவில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தில் நடந்த ஊழல் பற்றியோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் குறித்தோ யாரும் எதுவும் பேசவில்லை. அசோக் சவானும் சுரேஷ் கல்மாதியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். மதவாத்த்தைப் பற்றிப் பேசிய காங்கிரஸ் ஊழல் குறித்து எதுவும் பேசாதது ஏன் என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேள்வி எழுப்பின. இந்த விஷயத்தில் காங்கிரஸ் அப்போதே முடிவு செய்து விட்டது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா எப்போது போவார் என்று காத்திருந்து அதன் பிறகு விரைவாக நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது.
இப்போது எல்லோருடைய கவனமும் மத்திய தொலைத் தொடர்புத் துறை மேல் இருக்கிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாக சொல்லப்படும் முறைகேடுகள் பற்றிய விசாரணை முடியும் வரை மத்திய அமைச்சர் ஆ.ராசா அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. ’இன்னும் அந்த அமைச்சர் அதே பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறாரே’ என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங் சார்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் கருணாநிதியைப் பார்த்து இது பற்றிப் பேசியதாக ஊடகங்களில் ஊகங்கள் வெளியிடப்பட்டன. அந்த ஊகத்தில் உண்மை இருக்கக் கூடும். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் ‘நவம்பர் பாதிக்குப் பிறகு பாருங்கள்’ என்று சொல்வது வெறும் சவடாலாக மட்டுமே இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.
ஏற்கனவே எழுதித் தயாரிக்கப்பட்ட திரைக்கதையைப் போல அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறுகின்றன. சுரேஷ் கல்மாதியும் அசோக்சவானும் பதவி பறிக்கப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் ‘ராஜா’ பதவி விலக வேண்டும் என்று குரலை எழுப்புகிறார்கள். கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் என்றழைக்கப்படும் தணிக்கை அதிகாரி ஓர் அறிக்கையை பிரதமர் அலுவலகத்தில் கொடுக்கிறார். 2ஜி ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று அந்த அறிக்கை சொல்வதாக செய்திகள் கசியவிடப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் கண்டனம், ஊழல் புகாருக்கு உள்ளான காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மீது சோனியா எடுத்த நடவடிக்கை, ஊடகங்கள் கொடுக்கும் அழுத்தம், தணிக்கை அதிகாரியின் அறிக்கை என்று அடுத்தடுத்த நிகழ்வுகள், தி.மு.க. தலைமைக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றன.
1996-ல் ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக விசாரித்த ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையை 1997-98ல் கொடுத்தது. சிறுபான்மை அரசாக ஐ.கே.குஜரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு இருந்தது. ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்து காங்கிரஸ் குஜரால் அரசை ஆதரித்துக் கொண்டிருந்தது. இந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கும்போது ஜெயின்கமிஷனின் இடைக்கால அறிக்கை வெளியானது. அதன் அடிப்படையில் மத்திய அரசில் தி.மு.க. இடம் பெறக் கூடாது என்றும் திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்தது. ”ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை; பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை” என்று தி.மு.க.தரப்பில் சொல்லப்பட்டது. சிறுபான்மை ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்றது. ஐக்கிய முன்னணி ஆட்சி கவிழ்ந்தது!
அன்று காங்கிரஸ் மட்டுமே நெருக்கடி கொடுத்தது. இன்று காங்கிரஸ், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் என்ற நிலையில், இந்த நெருக்கடியைத் திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
0 Comments:
Post a Comment
<< Home