’அக்னிப் பரீட்சை’
”மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்று அன்றாடம் நாம் யாராவது ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆ.ராசாவின் ராஜினாமாவுடன் முடிந்துபோகும் என்று எளிதாக நினைக்கப்பட்ட விவகாரம் இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது. சில சமயங்களில் ’தூவானமே’ பலத்த சேதத்தை ஏற்படுத்துவதும் உண்டு. இது தொடர்பாக ஒரு சம்பவம் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரலாம். கடந்த 2009-ம் வருடம் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி திடீரென்று உண்ணாவிரதம் இருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இலங்கையில் நடந்த போரை நிறுத்தும்படி, இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும் என்பது கோரிக்கை. போர் நிறுத்தப்படும் என்று மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டு அவர் அந்த அறப்போரை நிறுத்திக் கொண்டார்.
அதற்கு அடுத்த நாள் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடைய போராட்டத்தின் விளைவாக இலங்கை அரசு எடுத்துவரும் போர்நிறுத்த நடவடிக்கைகளில் மனநிறைவடைவதாக அப்போது அவர் சொன்னார். போர் தொடர்ந்து நடைபெறுவதாக இலங்கையில் இருந்து செய்திகள் வருகின்றனவே என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு முதலமைச்சர் கருணாநிதி பதில் சொன்ன போது, ”மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்று குறிப்பிட்டார்! அவர் சொன்ன சிறிய “தூறலால்” மே,2009-ல் ஈழத்தில் என்ன நடந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும்!
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த விவகாரத்திலும், மத்திய அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்தவுடன், அந்த சிக்கலின் சூடு தணிந்து விடும் என்பது பரவலான எதிர்பார்ப்பு. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ராசா ராஜினாமாவுக்குப் பிறகு, பிரதமர் மன்மோகன்சிங் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன; நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று உறுதியாக நிற்கின்றன. அரசு தரப்பு இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ”தணிக்கை அதிகாரியின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம்; இந்த விவகாரம் குறித்து மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகிறது; நீதிமன்ற விசாரணையும் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்றும் அரசு தரப்பில் பதில் சொன்னார்கள். காங்கிரஸ் கட்சியின் இந்த பதில் அரசியல் களத்தில் அதனுடைய ஆதரவாளர்களை திருப்திப்படுத்த போதுமானதாக இருந்தது.
ஆனால் உச்சநீதிமன்றம் பிரதமரின் செயல்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது. மத்திய அமைச்சராக இருந்த ராசா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு டாக்டர் சுப்பிரமணியசுவாமி அனுப்பிய கடிதத்துக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்று கேட்டது. அவ்வளவுதான்! ஊடகங்கள் பிடித்துக் கொண்டன. பிரதமர் செயலற்று இருக்கிறாரா, ஊழலை மறைக்க முயல்கிறாரா, ஏன் பேச மறுக்கிறார் என்றெல்லாம் பரபரப்பை உருவாக்கின. இதனால் பிரதமர் மன்மோகன்சிங் மனச்சோர்வடைந்து இருப்பதாகவும் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்றும் வதந்திகள் உலவத் தொடங்கின. இதனால் காங்கிரஸ் கட்சி அவரைப் பாதுகாக்கும் வகையில் வரிசையாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் விவாதப் பொருள் ஆனதில் பிரதமருக்கு எந்த தர்மசங்கடமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று ராகுல்காந்தியும் ’மன்மோகன் பாதுகாப்புப் படையில்’ ஒரு வீரராக களம் இறங்கினார்!
தொலைத் தொடர்புத் துறையின் புதிய அமைச்சர் கபில் சிபல் பல அவதாரங்கள் எடுத்தார். ’ஒரே நேரத்தில்’ பல தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றார். பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையானவர் என்றும் அநீதிக்குத் துணை போக மாட்டார் என்றும் சொல்லிவிட்டு எதிர்க்கட்சிகளை ’விளாசித்’ தள்ளினார். ”நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை கேட்பது அரசியல்; பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்வது அரசியல்; எதிர்க்கட்சிகள் செய்து வரும் செயல்களில் அரசியல் தான் இருக்கிறதே தவிர மக்கள் நலன் பற்றிய அக்கறை இல்லை ” என்று இவரும் ‘அரசியல்’ செய்தார். ”நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள் அல்லது செய்யவில்லை” என்று ஒருவரிடம் கேட்டால், அதற்கு நாம் பதில் சொல்லமாட்டோம்; கேள்வி கேட்டவர் அதைச் செய்யவில்லையா என்று பதில் கேள்வி கேட்பதே நம்முடைய வழக்கம். இதில் எந்த அரசியல்கட்சியும் விதிவிலக்கல்ல என்பதை கபில்சிபல் உறுதி செய்தார்!
யார் என்ன சொன்னாலும் பிரதமர் மன்மோகன்சிங் சமாதானமாவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அவருடைய நிர்வாகத் திறமைக்கு இன்றைய ‘சூழல்’ பெரிய சவாலாகவே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இந்தியாவின் ஆட்சி நிர்வாகம், நேரு குடும்பத்தின் கடமை. 1991-ல் நரசிம்மராவுக்கும் 2004-ல் இருந்து மன்மோகன்சிங்குக்கும் அந்தப் பணியை செய்து தரும்படி ‘அவுட் சோர்சிங்’ கொடுத்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் இன்றைய சூழல் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இல்லை. பல முக்கிய சிக்கல்களில் வாய் திறக்காமல் அமைதியாக இருந்த சோனியா காந்தி கூட இந்த விவகாரத்தில் பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் ஊழல்களை முடிவுக்குக் கொண்டுவர ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் சோனியா காந்திக்கு இருக்கிறது. “ இந்தியாவில் பொருளாதாரம் வளர்வதைப் போல ஊழலும் பேராசையும் அதிகரித்து வருகின்றன. நம்முடைய முன்னோர்கள் எந்த லட்சியங்களுக்காகப் போராடினார்களோ அவை எல்லாம் இப்போது தூக்கி எறியப்படும் அபாயத்தில் இருக்கின்றன. பொதுவாழ்வில் நேர்மையையும் வெளிப்படையான நிர்வாகத்தையும் உறுதிசெய்ய வேண்டும்” என்று டெல்லியில் அவர் பேசினார்!
ஒருபுறம் எதிர்க்கட்சித் தலைவர்களின் தாக்குதல்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டே அவர்களை நிலைகுலையச் செய்வதற்கும் காங்கிரஸ் முயல்வதாகத் தெரிகிறது. ”எதிர்க்கட்சிகளின் அச்சுறுத்தல்களுக்கு காங்கிரஸ் கட்சியோ பிரதமர் மன்மோகன்சிங்கோ பயப்படப் போவதில்லை. தொலைத் தொடர்புத் துறையில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை நியமிக்க அவர் தயார். அதற்குப் பிறகும் எதிர்க்கட்சிகள் முரண்டு பிடித்தால், மக்களவையைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கவும் பிரதமர் தயாராக இருக்கிறார். கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி இல்லாமல் தனிக்கட்சி ஆட்சிக்கு ஆதரவாக மக்கள் காங்கிரசையே தேர்வு செய்வார்கள்” என்று காங்கிரஸ் நம்புவதாக செய்திகள் கசிகின்றன. கூட்டுக்குழு விசாரணைக்கு நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என்று திமுகவும் சொல்கிறது.
இடைத்தேர்தலுக்குத் தயார் என்று காங்கிரஸ் சொல்வதும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் முறைகேடுகள் பற்றிய செய்திகளும் பாரதிய ஜனதாவின் தார்மீக வலிமையைக் குலைக்கக் கூடும். பா.ஜ.க.வையும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் கொஞ்சம் ‘அமைதிப்படுத்திவிட்டால்’, பிறகு நிலைமையை எளிதாக சமாளித்துவிட முடியும் என்பது காங்கிரஸ் கட்சியின் கணக்காக இருக்கலாம். எந்தெந்த வழிகளில் யார்யாரை மௌனிக்கச் செய்வது என்ற கலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திறமையானவர்கள். ஆடுகளத்தில் காங்கிரஸ் துருப்புச் சீட்டுகளை இறக்க இறக்க ஊடகங்களில் இனி பரபரப்புதான்!
இந்த பரபரப்புகளுக்கு இடையில் நாம் ஏராளமாகத் தொலைத்துவிடுகிறோம் என்பதை நாம் அறிவதில்லை. அவற்றில் ஒன்று “நியாயமாக இல்லை என்றால் அதைச் செய்யாதே! உண்மையாக இல்லை என்றால் அதைச் சொல்லாதே!” என்ற நம் முன்னோர்களின் அறிவுரை!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
0 Comments:
Post a Comment
<< Home