Sunday, November 28, 2010

”நாம் எல்லாம் முட்டாளுங்க”

”எல்லாரும் உன்னை கோபால கிருஷ்ணன்னுதானே கூப்பிடறாங்க?”

"எவன் கூப்பிடறான்? நான் தான் சொல்லிட்டுத் திரியறேன்.. எல்லோரும் என்னை சப்பாணின்னுதான் கூப்பிடறாங்க”

பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தின் பிரபலமான வசனம் இது.

கமலஹாசன் ஏற்று நடித்த அந்த சப்பாணி என்ற கதாபாத்திரம் சொல்வதைப் போலத்தான் நாமும் ’இந்திய ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் நாங்கள்தான்’ என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். யார் கேட்கிறார்கள்? நமக்கு சேவை செய்வதற்காகவே பிறந்திருப்பதாக நம்மிடம் பிரசாரம் செய்தவர்கள் எல்லாம் நம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால் நாம் அவர்களை மிகவும் மதிக்கிறோம்; ஏதாவது ஓர் அரசியல் கட்சியை உறுதியாக ஆதரிக்கிறோம்; எந்தவித ஊசலாட்டமும் இல்லாமல் அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுகிறோம்; அத்துடன் நம்முடைய உறுதியும் நம்பிக்கையும் நின்று விடுவதில்லை. நாம் ஆதரிக்கும் கட்சி, எந்தக் கட்சிகளுடன் எல்லாம் கூட்டணி வைத்திருக்கிறதோ, அந்தக் கட்சிகளுக்கும் நாம் வாக்களிக்கிறோம். கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பற்றி எந்தக் கேள்வியும் நாம் கேட்பதில்லை. ’ஆதரிக்கும்போது உறுதியாக ஆதரிப்பது; எதிர்க்கும்போதும் உறுதியாக எதிர்ப்பது’ என்பது நம்முடைய ‘மரபாகவே’ இருக்கிறது!

”இந்த உலகத்தில் பிரச்னை என்ன என்றால், முட்டாள்கள் எதையும் உறுதியாக சொல்கிறார்கள்; செய்கிறார்கள். புத்திசாலிகள் எல்லாவற்றையும் ஒரு சந்தேகத்துடனேயே அணுகுகிறார்கள்” என்பது பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் சொன்ன கருத்து. ரஸ்ஸலின் மேற்கோளின்படி பார்த்தால், நாம் யார்? நம்மை முட்டாள்கள் என்றுதான் பல அரசியல் தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக இந்திய அரசியலில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அந்த எண்ணம் இன்னும் உறுதிப்படுகிறது. நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு நாம் பேசாமல் இருப்பதைப் பார்த்தவுடன், நம்மை முட்டாள்கள் என்று அவர்கள் நிச்சயம் செய்துவிடுகிறார்கள். நம்மைப் பற்றி என்ன வேண்டுமானாலும் அவர்கள் மனதுக்குள் நினைத்துக் கொள்ளட்டும். நம்மிடம் பேசும்போது வெளித் தோற்றத்துக்கு நம்மை சராசரி அறிவுடன் இருப்பவர்கள் என்றாவது மதித்துப் பேசலாம். ஆனால் அந்த போலி நடிப்பைக் கூட மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. ஏன் ஒரே நாளில் அந்தர்பல்டி அடிக்க நேர்கிறது என்பதை ’தவறே செய்யாதவர்களும்’ ‘தெளிவான மனசாட்சி’ கொண்டவர்களும் நம்மை மதித்து ஒருநாளும் சொல்லப் போவதில்லை!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முறைகேடுகள் பற்றி மணிசங்கர் அய்யர் பேசியதில் இருந்து இப்போது காங்கிரஸ் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நாள் வரை சுரேஷ் கல்மாடி பேசியதை வரிசையாகப் பாருங்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து புகார்கள் வரத் தொடங்கிய நாளில் இருந்து பதவி விலகும் நாள் வரை ஆ.ராஜா சொன்னதை எல்லாம் பட்டியல் போட்டுப் பாருங்கள். கேட்பவர்களுக்கு மதி இருக்கிறது என்ற எண்ணம் எள்முனையளவு கூட அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. “முதலமைச்சராக இருந்த போது சுற்றுலா வளர்ச்சிக்காக ‘லாவசா’ என்ற ஏரி நகர்த் திட்டத்தைக் கொண்டு வந்தேன். அத்திட்டத்தை செயல்படுத்த இருந்த நிறுவனத்தில் என் மகள் சுப்ரியாவுக்கும் அவரது கணவர் சதானந்துக்கும் பங்குகள் இருந்தன” என்று மத்திய அமைச்சர் சரத்பவார் சொல்கிறார். முதலமைச்சராக இருந்து மக்கள் நலனுக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது குடும்பத்தின் வர்த்தக நலனையும் காப்பாற்ற முயன்றதற்காக அவர் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை!

நம்மைப் போன்ற சாதாரண மக்களைத்தான் இந்த அரசியல்வாதிகள் பந்தாடுகிறார்கள் என்பது நம்முடைய இயல்பான எண்ணம். ஆனால் இந்திய அரசியலையே ஆட்டிப்படைக்கும் தொழிலதிபர் என்று பலர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் ரத்தன் டாடா என்ன சொல்கிறார் பாருங்கள். ”மூன்று பிரதமர்களை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். ஆனால் ஒரே ஒரு நபர் எங்கள் முயற்சிகள் எல்லாவற்றையும் காலி செய்து விட்டார்” என்று அவர் பேசி இருக்கிறார். ஊழல்களே அடுத்தடுத்து அன்றாட செய்திகளாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் சில வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியின் வேதனை இப்போது அவரை இப்படிப் பேச வைத்திருக்கிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸூடன் சேர்ந்து ஒரு விமான சேவையைத் தொடங்குவதற்கு டாடா நிறுவனம் முயற்சி செய்தது. ஆனால் அதற்கான உரிமம் கிடைக்கவில்லை. இதற்கு என்ன அர்த்தம்? டாடாவின் அதிகாரத்தை விட சாமான்யர்களின் அதிகாரம் இந்தியாவில் செல்வாக்கு பெற்றுவிட்டது!

நாம் ஒரு பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ போய்க் கொண்டிருக்கிறோம். நமக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் நம்மை முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவன் என்றும் சொன்னால், எப்படி இருக்கும்? அப்படித்தான் ரத்தன் டாடாவுக்கும் இருந்திருக்க வேண்டும். ஒரு விமானப் பயணத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு தொழில் அதிபர் டாடாவைப் பார்த்து “ நீங்கள் முட்டாளாக இருக்கிறீர்கள். அமைச்சர் உங்களிடம் என்ன எதிர்பார்த்தார்? 15 கோடி ரூபாய்! அதைக் கொடுத்திருந்தால் நீங்கள் உங்கள் விமானப் போக்குவரத்து சேவையை ஆரம்பித்திருக்கலாம்” என்று சொன்னாராம். ரத்தன் டாடாவுக்கு 15 கோடி ரூபாய் பெரிய விஷயமில்லை. ஆனாலும் அவர் லஞ்சமாக அந்தப் பணத்தைக் கொடுக்க விரும்பவில்லை. தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் ‘கொடுத்துக்’ கெடுக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியமாக இருக்கும்!

’ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனுஷனையே கடிக்க வந்துட்டாங்க’ என்று சாதாரணமாக மக்கள் சொல்வதைப் போல, நமது பிரதிநிதிகள் ‘டாடா’விடமே தங்கள் சுயரூபத்தைக் காட்டி இருக்கிறார்கள். லஞ்சம் கேட்ட அமைச்சரை மீறி, அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. விமான சேவைக்கான புதிய முயற்சிகளை டாடா கைவிட நேர்ந்தது. டாடா யார் என்று தெரியாமலா அந்த அமைச்சர் லஞ்சம் கேட்டிருப்பார்? அவர் அடிக்கடி பறந்து சென்ற ’ஏர் இந்தியா’ விமான சேவை 1953-ல் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு முன்னால் டாடா குழுமத்தால் தொடங்கி நடத்தப்பட்டது என்ற விபரத்தை லஞ்சம் கேட்ட அந்த அமைச்சர் அறியாமலா இருந்திருப்பார்? மும்பையில் வாட்சன் என்ற ஹோட்டலுக்குள் இந்தியர்களை அனுமதிக்கவில்லை என்ற காரணத்தால் தாஜ் மஹால் பேலஸ் என்ற நட்சத்திர விடுதியைக் கட்டி இந்தியப் ‘பெருமை’ காத்தது டாடா குழுமம் என்பது அவருக்குத் தெரியாதா என்ன? பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியாவில் ஆங்கிலேயர்களால் நட்த்தப்பட்ட விடுதிகளில் ஐரோப்பியர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது அந்நாளில் இயல்பான ஒரு நடைமுறையாக இருந்திருக்கிறது. அதற்கு எதிராக தேசபக்தி உணர்வுடன் டாடா கட்டி எழுப்பியதே தாஜ் ஹோட்டல் என்பது வரலாறு நமக்கு சொல்லும் சேதி!

1995, 1997 மற்றும் 2001 ஆகிய வருடங்களில் டாடா குழுமம் மீண்டும் விமான சேவையில் இறங்க முயன்றதாக ஒரு செய்தி சொல்கிறது. அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியாவைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் அதை டாடாவுக்கு அரசு தாரை வார்க்க முயல்கிறது என்றும் தொழிற்சங்கங்களின் போராட்டங்களாலும் அரசியல்ரீதியான எதிர்ப்புகளாலும் தான் அந்த முயற்சி கைவிடப்பட்டது என்றும் அப்போது வெளியான செய்திகளைப் பார்த்துவிட்டு எத்தனை பேர் நம்பினோம்! இப்போதுதான் தெரிகிறது, அது நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே என்று! டாடா 15 கோடி ரூபாய் கொடுத்திருந்தால் போராட்டங்களை அரசு ஒடுக்கி இருக்கும் என்று! சே! எவ்வளவு சுலபமாக நாம் முட்டாளாகி விடுகிறோம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home