Saturday, November 13, 2010

காந்தி உயிருடன் இருக்கிறார்!

"காந்தி மாதிரி இன்னொரு தலைவர் இந்தியாவில் இல்லையே என்று நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா?”

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் நடிகர் கமலஹாசனிடம் அனுஹாசன் கேட்டார். பொதுவாக கமலஹாசன் எல்லா விழா நாட்களிலும் டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அபூர்வமாகவே அவர் இதுபோன்ற நாட்களில் பங்கேற்பார். ஒரு ஹீரோவின் படம் வெளியானால், அதை விளம்பரப்படுத்துவதற்காக அந்த ஹீரோ முக்கியமான தொலைக்காட்சிகளில் தலையைக் காட்டுவார். கமலுடைய படம் எதுவும் அன்று வெளியாகவில்லை. பிறகு ஏன் கமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்? காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அனுவின் கேள்விக்கு அவர் அளித்த பதிலே நமக்கு முக்கியம்.

”காந்தி இப்போது இல்லை என்று நான் கவலைப்படவில்லை. நீங்கள் காந்தியை பாராளுமன்றத்தில் தேடினால் கிடைக்க மாட்டார்; எத்தனையோ துறைகளில் காந்தியைப் போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள்” என்ற அர்த்தத்தில் கமல் பதில் சொன்னார். கமல் சரியாகவே சொல்லி இருக்கிறார்! அஹிம்சை, நேர்மை, மனவுறுதி, போர்க்குணம், தேசபக்தி போன்ற காந்தியின் போற்றத்தக்க குணங்கள் கொண்ட எத்தனையோ மனிதர்கள் ஊடக வெளிச்சத்துக்கு வராமல் வாழ்ந்து வருகிறார்கள். நாம் அவர்களை இனம்கண்டு பாராட்டத் தவறுகிறோம். நல்ல பண்புகள் அனைத்தும் காந்தியோடு முடிந்து போய்விட்டன என்று அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை!

ஐரோம் சர்மிளா சானு என்ற பெண்ணுக்கு இப்போது வயது 38. இந்தப் பத்து வருடங்களாக சொட்டுத் தண்ணீர் கூட அவருடைய பல்லில் படவில்லை. அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைப் பத்து வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை அரசாங்கம் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பது அவருடைய கோரிக்கை. பத்து வருடங்களாக எதுவும் சாப்பிடாமல் எப்படி ஒருவர் உயிர்வாழ முடிகிறது? அவருடைய மூக்கில் ஒரு குழாயைச் செருகி அதன் வழியாக சத்துநீர் செலுத்தப்படுகிறது. இது அவருடைய உடலில் பல பகுதிகளை பலமிழக்கச் செய்திருந்தாலும் அவருடைய உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது!

கடந்த 2000-ம் வருடம் நவம்பர் முதல் நாள், மணிப்பூரில் ஆயுதப்படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு பதிலடியாக, அடுத்த நாளே, மலோம் என்ற இடத்தில் பஸ்ஸூக்காக பஸ் ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்த மக்கள் மீது அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் 10 பேர் கொல்லப்பட்டார்கள். சிறுவனாக இருந்த போது வீரத்துக்காக தேசிய விருது வாங்கிய இளைஞனும் 68 வயதான பெண்மணி ஒருவரும் பலியான பத்து பேரில் அடக்கம்! இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் நவம்பர் 3-ம் தேதி வந்த செய்தித் தாள்களில் வெளியாகின. தேவையில்லாமல் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான ஆயுதப் படையினர் மீது எந்த புகாரும் அளிக்க முடியாது; மக்களைக் கொன்றவர்கள் மீது சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனென்றால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அவர்களுக்கு பாதுகாப்பை கொடுக்கிறது!

வேறு என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு சர்மிளா கொடுத்த பதில்தான் இந்தப் போராட்டம்! மணிப்பூரில் இருந்து இந்த சட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையுடன் ஐரோம் ஷர்மிளா தன்னுடைய உண்ணாநிலைப் போராட்டத்தை 2000-ம் வருடம் நவம்பர் 4-ம் நாள் தொடங்கினார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 309-ன் படி தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. உண்ணாநிலையை அவர் கைவிடாத நிலையில், வலுக்கட்டாயமாக மூக்குவழியே திரவ உணவு கொடுக்கப்பட்டது. ஒரு வருட தண்டனை முடிந்து வெளியில் வந்தவுடன் மீண்டும் போராட்டம், மீண்டும் கைது, மீண்டும் மூக்கு வழியே உணவு என்று போராட்டம் தொடர்ந்தது. கடந்த நவம்பர் முதல் வாரத்துடன் இந்த போராட்டம் பத்து வருடங்கள் நிறைவடைகிறது!

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பல பகுதிகளில் பிரிவினைக் கோரிக்கையும் போராட்டங்களும் நடந்தன; நடந்து கொண்டும் இருக்கின்றன. இதுபோன்ற ‘கலகப் பகுதிகளில்’ போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஈடுபடுத்தப்படும் ராணுவத்துக்கு கூடுதலாக சிறப்பு அதிகாரங்களைக் கொடுக்கும் ‘ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரம்) சட்டம்’ இந்திய நாடாளுமன்றத்தில் 1958-ல் நிறைவேற்றப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்தபோது, கலகம் நடக்கும் பகுதிகளில் மிகவும் குறைந்த காலத்துக்கு தற்காலிகமாகவே இந்த சட்டம் அமலில் இருக்கும் என்று நேரு அரசு பதில் சொல்லியதாம்! ஆனால் எதிர்ப்புகள் குறையவில்லை; சட்டமும் தொடர்கிறது.

மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், இன்னும் பல பகுதிகளில் அது நடைமுறையில் இருக்கிறது. அதனால் சர்மிளாவின் போராட்டமும் தொடர்கிறது. தன்னுடைய மாநிலத்தில், எதிர்கால சந்ததியினர் சட்டவிரோதமான கொலைகளுக்கும் துயரங்களுக்கும் ஆட்படக் கூடாது என்ற எண்ணத்தில் துன்பங்களையும் துயரங்களையும்தானே ஏற்றுக் கொள்ளும் ‘காந்திய’ நடைமுறையை நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் பார்க்க முடியாது. காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு தொடங்கி மதிய உணவு நேரத்துக்கு முன்னால் முடித்துக் கொள்ளும் சில தலைவர்களின் உண்ணாநிலைப் போராட்டங்கள் இந்திய அரசைக் கிடுகிடுக்க வைத்தன என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பத்து வருடங்களாக நடக்கும் ஐரோம் சர்மிளாவின் போராட்டத்துக்கு இந்திய அரசு கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.

சர்மிளாவை யாரும் எளிதாக சந்தித்து விட முடியாது; மாநில முதலமைச்சர், உயர்நிலை அதிகாரிகள் அனுமதியுடன் தான் அவரை மற்றவர்கள் சந்திக்க முடியும். அவருடைய அஹிம்சை வழியிலான போராட்டத்தை அங்கீகரித்து இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ப்ளானிங் அண்ட் மேனேஜ்மெண்ட் (ஐஐபிஎம்) அவருக்கு ரவீந்திரநாத் தாகூர் நினைவு அமைதிப் பரிசாக 51 லட்சம் ரூபாய் வழங்கியது. அமைதிக்கான நோபல் பரிசுக்கும் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அவருடைய போராட்டத்துக்கு ரிக்‌ஷா ஓட்டுநர்கள் சங்கம் தொடங்கி சர்வதேசப் புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர்கள் வரை ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 2006-ல் புதுடெல்லிக்கு வந்து காந்தி சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, ஐரோம் சர்மிளா ஜந்தர்மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது கைது செய்யப்பட்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இரானிய வழக்கறிஞர் ஷிரின் எபடி அங்கு அவரை சந்தித்தார். அதன்பிறகு வெளியில் வந்து செய்தியாளர்களிடம் ஷிரின் பேசினார்.

“ஒருவேளை இந்தப் போராட்டத்தில் சர்மிளா இறந்து போனால், அதற்கு இந்திய நாடாளுமன்றமே பொறுப்பு; அப்படி அவர் செத்துப் போனால், அதற்கு இந்திய நீதிமன்றங்களும் ராணுவமும் பொறுப்பு; நிர்வாகம், பிரதமர், குடியரசுத் தலைவர் அனைவரும் அதற்குப் பொறுப்பு; உங்கள் கடமையை செய்யத் தவறியதால், செய்தியாளர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் அதற்குப் பொறுப்பு” என்று அவர் சொன்னார். ஒருவேளை அவர் இறந்து போனால், யாரெல்லாம் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது பாருங்கள். அப்படி இருக்கும் ஒரு விவகாரத்தில் அந்தப் பொறுப்புணர்வில் இருந்து நெட்டை மரமாக நின்று புலம்பும் நானும் நீங்களும் மட்டும் விலக்கு பெற முடியுமா என்ன?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home