Monday, April 25, 2011

அரசியல் இடைவெளி!

“திடீரென்று ஏதாவது முக்கியமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்வது? தேர்தல் ஆணையத்துக்குத் தான் வெளிச்சம்! அதிகாரிகளின் நிலை என்ன? திரிசங்கு சொர்க்கம்தான்” என்று முதலமைச்சர் கருணாநிதி ஆதங்கப்பட்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே 13-ம் தேதி நடைபெறும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசு மே மாதம் 17-ம் தேதிக்குள் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த அறிவிப்பை எல்லாம் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் முதல் தேதியே அறிவித்து விட்டது. அன்று முதல் வாக்கு மே 15-ம் நாள் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் இருக்கும் ஒரு மாத இடைவெளிதான் முதலமைச்சர் கருணாநிதியை அப்படிப் பேச வைக்கிறது!

எத்தனையோ கோரிக்கைகளை மக்கள் அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கிறார்கள்; அவை அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படுவதற்காக எத்தனையோ வருடங்கள் காத்திருந்திருக்கிறார்கள்; எத்தனை அரசாங்கங்கள் மாறினாலும் அவர்களுடைய பல கோரிக்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து டெல்லிக்குக் கடிதங்கள் போயிருக்கலாம்; பிரதமரிடம் இருந்தோ, ஆளும் கூட்டணித் தலைவரிடம் இருந்தோ பதில்கள் வந்திருக்கலாம்; ஆனால் மக்களுடைய பிரச்னைகள் தீராமல் வருடக்கணக்காக அப்படியே நீடித்துக் கொண்டிருக்கும்.

‘இருந்தும் இல்லாத’ அரசுக்கு பெரும்பான்மையான மக்கள் பழகி விட்டார்கள். காத்திருப்பது அவர்களுக்குப் புதிதல்ல. ஆனால் அரசியல் தலைவர்களால் காத்திருக்க முடிவதில்லை. கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை!

வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையிலான ஒரு மாத காலமும் மக்களுக்கான பணிகள் அப்படியே முடங்கி நிற்க வேண்டுமா? இதுவே கருணாநிதி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களின் கேள்வி. சில ஊடகங்களும் இந்தக் கேள்வியை எழுப்புகின்றன. இந்தக் குரல்களின் எதிரொலியாகவோ அல்லது இயல்பாகவோ தேர்தல் நடத்தை விதிகளில் சிலவற்றை தேர்தல் ஆணையம் தளர்த்தி இருக்கிறது.

ஏற்கனவே அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரலாம். ஆனால் ஒரு நிறுவனத்துக்கு அந்தப் பணி ஒப்படைக்கப்பட வேண்டுமானால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும். மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட இடங்களைப் பார்வையிடலாம். ஆய்வுக் கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு உரிய விதிகளின்படி அனுமதி அளிக்கப்படும். ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் மையங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் கூட்டங்கள், பேரணிகள் நடத்த அனுமதி இல்லை. இப்படிப் பல விதிகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாகி இயங்கி வரும் ஓர் அமைப்பு இந்திய தேர்தல் ஆணையம். அந்த அமைப்பு ஒரு மாநில நிர்வாகம் ஒரு மாத காலம் முடங்கி இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் என்று நினைக்கத் தோன்றவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்களும் சாதாரண பொது மக்களும் தேர்தல் ஆணையத்தைப் பாராட்டுகிறார்கள். தேர்தல் நடந்து முடிந்த விதத்தைப் பார்க்கும்போது தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாகவும் சொல்ல முடியவில்லை. விதிகளை மீற முயன்றவர்களை அது கட்டுப்படுத்த முயன்றிருக்கிறது. விதி மீறல்களை முழுவதுமாக கட்டுப்படுத்தியது என்றும் சொல்ல முடியாதுதான்!

பல ஊர்களில் இரவு இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டதாகவும் அப்போது வாக்குகளுக்காக பணம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. ஒரு சோறு பதமாக, மதுரை மேற்கு தொகுதியில் வார்டு வார்டாக எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் அடங்கிய நாற்பது பக்க நோட்டு சிக்கி இருக்கிறது. முறைகேடுகளை நூறு சதவீதம் தடுக்க முடியவில்லை என்றாலும் கூட, தேர்தல் ஆணையம் எடுத்த முயற்சிகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுகிறதா? அல்லது தி.மு.க.வுக்கு எதிராக செயல்படுகிறதா? வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் இரண்டு வாரங்கள், மூன்று வாரங்கள் அல்லது நான்கு வாரங்கள் என்று இடைவெளி இதுவரை எந்த மாநிலத்திலும் இருந்ததே இல்லையா? கொஞ்சம் நினைவுகளைப் பின்னோக்கிப் பாருங்கள். 2006-ல் மேற்கு வங்கம், கேரளா, அசாம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல்களின்போது என்ன நடந்தது? அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடந்தது. முதல் கட்டமாக ஏப்ரல் 3-ம் தேதியும் அடுத்த கட்டமாக ஏப்ரல் 10-ம் தேதியும் தேர்தல் நடந்தது. முடிவுகள் மே மாதம் 11-ம் நாள் வெளியானது!

2009 மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒரிசா மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்தன. ஆந்திராவின் 294 தொகுதிகளுக்கு ஏப்ரல் 16, ஏப்ரல் 23 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. முடிவுகள் மே 16-ம் தேதி வெளிவந்தன. ஒரிசாவில் 147 தொகுதிகளுக்கு அதே போல் அதே தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடந்தது. ஏறத்தாழ மூன்று வாரங்களுக்குப் பிறகே மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது.

2008-ல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 14 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. முடிவுகள் அறிவதற்கு அந்த மாநில மக்கள், டிசம்பர் எட்டாம் தேதி வரை காத்திருந்தார்கள். காரணம் என்ன? ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 4-ம் தேதி வாக்குப்பதிவு இருந்தது! நான்கு மாநிலங்கள் அல்லது ஐந்து மாநிலங்களுக்கு சேர்த்து தேர்தல் நடக்கும் போது, எல்லா மாநிலங்களின் வாக்குப்பதிவும் முடிந்த பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தேர்தல் ஆணையம் சமீப வருடங்களில் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டு மக்கள் முடிவுகளுக்காக இத்தனை நாட்கள் காத்திருந்ததில்லை. ஆனால் சில மாநிலங்களுக்கான தேர்தலை சேர்த்து நடத்தும்போது, ஏதாவது ஒரு மாநில மக்கள் இதைப் போல முடிவுகளுக்கு சில வாரங்கள் காத்திருக்க நேர்கிறது! 1996 முதல் - இடையில் ஒன்றரை வருடம் நீங்கலாக – மத்திய அரசில் பங்கேற்று வரும் தி.மு.க.வுக்கு இந்த விபரங்கள் எல்லாம் நிச்சயம் தெரியும். பிறகு ஏன் திமுக தலைமை தேர்தல் ஆணையத்தைக் கண்டித்துக் கொண்டே இருக்கிறது? அது வேறு எங்கோ யார்மீதோ எதற்காகவோ ஏற்பட்ட வருத்தம் அல்லது கோபம் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

“நோய்கள்” தொலையட்டும்!

“உச்சநீதிமன்றத்தில் டாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் சொல்லி இருக்கிறார். அவர் யாராக இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? பினாயக் சென்னின் மனைவி இலினா சென்? அவருடைய மகள்? அவருடைய விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மனித உரிமை ஆர்வலர்களில் ஒருவர்? அவர்கள் எல்லோருக்கும் பினாயக் சென்னின் விடுதலை மகிழ்ச்சி அளித்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் இப்படி சொன்னது வேறு யாரும் அல்ல. நம்முடைய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான்!

மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்பவர் என்று சத்தீஸ்கர் மாநில அரசு குற்றம் சாட்டியிருக்கும் ஒருவரை உச்சநீதி மன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. அந்த மாவோயிஸ்டுகளை பிரதமர் மன்மோகன்சிங் எப்படி அழைக்கிறார்? ‘உள்நாட்டு அச்சுறுத்தல்’ என்றே அவர் அவர்களைக் குறிப்பிடுகிறார். அவருடைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் பினாயக் சென்னின் விடுதலைக்காக ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? ஏனென்றால், அவருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. விசாரணை நீதிமன்றங்களிலும் உயர்நீதி மன்றங்களிலும் கொடுக்கப்பட்ட தீர்ப்புகள் ஒருவருக்கு அதிருப்தி அளிக்கிறது என்றால் அவர் மேல்முறையீடு செய்யலாம்; அந்த மேல்முறையீட்டில் அவருக்கு நியாயம் கிடைக்கலாம்; அதுவே அவருடைய நம்பிக்கை. பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சத்தீஸ்கர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பலருக்கு அதிருப்தியைக் கொடுத்தது. அவருடைய ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

மேல்முறையீட்டில் அவருக்கு இப்போது ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் அவருடைய நம்பிக்கைக்கு வலு சேர்ந்திருக்கிறது. அதனால் அவருக்கு மகிழ்ச்சி வருகிறது!
ஆனால், மேல்முறையீட்டில் நியாயம் கிடைக்கும் வரை கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் ஒருவர் அடையும் பாதிப்புகளுக்கு என்ன பரிகாரம் கிடைக்கிறது? டாக்டர் பினாயக் சென்னையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரை கடந்த 2007-ம் வருடம் மே மாதம் சத்தீஸ்கர் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. விசாரணை நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் இருக்கும் பல அறிஞர்கள் அவருடைய விடுதலைக்காக குரல் கொடுத்தார்கள். இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு 2009-ம் வருடம் மே மாதத்தில் உச்சநீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.
ஆனால் அவர் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கூட சுதந்திரமாக மக்களோடு இருக்க முடியவில்லை. கடந்த 2010 டிசம்பர் 24-ம் தேதி ரெய்ப்பூர் அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பு அளித்தது. மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு இப்போது ஏப்ரல் 15-ம் தேதிதான் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீனில் விடுதலை கொடுத்திருக்கிறது. நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வரும்போது அவர் இரு விரல் காட்டி ‘வெற்றி’ என்று சொல்லி மகிழலாம். ஆனால் அவர் பெயரைச் சொன்னவுடன் நமக்கு என்ன பிம்பம் நினைவுக்கு வருகிறது? பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் பிம்பமாக நம் கண்முன் வரவில்லை. மாறாக ஒரு காவல்துறை வாகனத்தில் கம்பிகளுக்குப் பின்னால் மன உறுதியுடனும் தீர்க்கமான கண்களுடனும் இருக்கும் பினாயக் சென்னின் முகமே நம் மனதில் நிற்கிறது. இது நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை!

பினாயக் சென்னின் குடும்பத்தின் உணர்வுகள் எப்படி இருக்கும்? அம்மா அனுசுயா சென்னுக்கு வயது 84. அவர், “இந்திய நீதிமன்றங்களின் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரிக்கிறது” என்றும் “வாய்மையே வெல்லும்” என்றும் நெகிழ்ச்சியோடு சொல்லி இருக்கிறார். மனைவி இலினா சென்னின் உணர்வுகளை யாராலும் விவரிக்கவே முடியாது. இந்த விடுதலைக்கான கடுமையான போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் அவரே! பினாயக்கின் மகள் அபராஜிதா, “ அப்பா சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து எங்கள் குடும்பம் நிலைகுலைந்து போய் இருந்தது. இப்போது நான் அப்பாவை சந்திப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்” என்று பாசத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அம்மா, மனைவி, மகள் எல்லோரையும் பரிதவிக்கச் செய்யும் விதத்தில் அந்த மருத்துவரை சத்தீஸ்கர் அரசு ஏன் குறி வைத்து அடிக்கிறது?

உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்யும்போது என்ன சொல்லி இருக்கிறது? “நம்முடைய நாடு ஒரு ஜனநாயக நாடு; பினாயக் சென் நக்சலைட்டுகளின் ஆதரவாளராக இருக்கலாம்; ஆனால் அதுவே ராஜ துரோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் அளிக்காது” என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. “நக்சலைட்டுகளின் பிரசுரங்களையும் இலக்கியங்களையும் அவர் வைத்திருந்தார் என்பதால் அவர் நக்சலைட் ஆகிவிடுவதில்லை; காந்திய இலக்கியங்களை ஒருவர் வைத்திருந்தால் அவரை காந்தியவாதி என்று சொல்லி விட முடியுமா?” என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி கேட்டிருக்கிறார். பினாயக் சென்னை பிணையில் விடுவிப்பதற்கு எந்தக் காரணத்தையும் உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. பிணை நிபந்தனைகளையும் அது முன்வைக்கவில்லை. அவற்றை எல்லாம் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றமே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டது!

சர்வதேச சமூகத்துக்குத் தெரிந்த முகமாக பினாயக் சென் இருக்கிறார். அவரை சத்தீஸ்கர் மாநில அரசு கைது செய்து சிறையில் அடைத்த போது உலகம் எங்கும் இருந்து அவருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. வெளி உலகத்துக்குத் தெரிய வராத எத்தனைபேர் இவரைப் போல இன்னும் நம்முடைய சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்களோ என்ற எண்ணம் ஒரு மனிதனுக்குள் இயல்பாக எழுவதை யாராவது தடுக்க முடியுமா? கொலை, கொள்ளை, வல்லுறவு வழக்குகளில் எல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் ஜாமீன் கிடைக்கிறது. ஆனால் பினாயக் சென் மாதிரியான மக்கள் சேவகருக்கு இவ்வளவு நீண்ட நீதிமன்றப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. இந்த உண்மை நமக்கு கவலை அளிக்கிறது. ஆனால் ஒரு விஷயத்துக்காக நாம் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். சத்தீஸ்கர் சிறையில் கைதிகளுக்குள் நடந்த மோதலில் பினாயக் சென் தாக்கப்பட்டார் போன்ற செய்தி எதுவும் இதுவரை வரவில்லை. அதற்காக முதலமைச்சர் ராமன்சிங்குக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்!

பினாயக் சென் போன்ற மனிதர்களை ஓர் அரசு அலைக்கழிப்பதைப் பார்த்தால் நாம் எப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. இங்கே சிறையில் இருக்க வேண்டியவர்கள் வெளியில் பெரிய மனிதர்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்; வெளியில் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சிலர், சிறைகளில் ‘வெளிச்சம்’ இல்லாமல் இருக்கிறார்கள்; ஆட்சியில் இருக்க வேண்டியவர்கள் முகவரியில்லாமல் சமூகத்தில் அங்கும் இங்குமாகத் திரிகிறார்கள்; ஒரு சமூகத்தில் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். நாம் என்ன செய்கிறோம்? விரலில் மை தடவிக் கொண்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

அன்னா ஹசாரே

“நீங்க இப்படிச் செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லைங்க” என்று செந்தில் பெருமாள் சொன்னார். அவன் மேல் அவருக்கு பயங்கர கோபம். செந்திலும் இன்னும் மூன்று நண்பர்களும் ஒரு பேரணியில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலியில் இருந்து மயிலாடுதுறைக்கு போக வேண்டும். அவனும் அன்று நாகப்பட்டினத்துக்குப் போக வேண்டியிருந்தது. இந்த சம்பவம் நடந்த வருடம் 1984. அப்போது திருநெல்வேலியில் இருந்து நாகப்பட்டினத்துக்கு ஒரே ஒரு பஸ்தான் இருந்தது. அவன் நாகப்பட்டினம் போய் அங்கிருந்து பஸ் பிடித்து காரைக்கால் போகவேண்டும். அங்குதான் அவன் அப்போது வேலைபார்த்துக் கொண்டிருந்தான். செந்திலும் அவருடைய மூன்று நண்பர்களும் மறுநாள் மயிலாடுதுறையில் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்.

திருநெல்வேலியில் இருந்து புறப்படும் பஸ்ஸில் டிக்கட் இல்லை என்றால், அவர்கள் எல்லோரும் மதுரை போய், அங்கிருந்து தஞ்சாவூர் போக வேண்டும். அங்கிருந்து அவன் நாகப்பட்டினத்துக்கும் மற்றவர்கள் மயிலாடுதுறைக்கும் போக வேண்டும். அந்த எளிய நண்பர்களுடன் அவன் பயணம் செய்வது அதுவே முதல் முறை. அவர்கள் அவனுடைய ஊர்க்காரர்கள். வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள். அதேசமயம் அந்த ஊரில் எல்லாம் நியாயமாக நடக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருந்தவர்கள். அதனால் அவர்கள் இந்தப் பயணத்தில் கஷ்டப்படுவதையும் அவன் விரும்பவில்லை. அந்த பஸ் கண்டக்டர் அவனிடம் ஒரு டிக்கெட்டுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாகக் கேட்டார். அவன் தருவதாக சம்மதித்தான். ஐந்துபேருக்கும் டிக்கெட் கிடைத்தது.

பஸ் புறப்பட்ட பிறகு கண்டக்டர் வந்து டிக்கெட் கொடுக்கும்போது மற்றவர்களுக்கு அந்த உடன்பாடு தெரிந்து விட்டது. அவர்களுக்கு அவனுடைய அந்த செயல் பிடிக்கவில்லை. அப்போதுதான் செந்தில் பெருமாள் கோபமாக அப்படிச் சொன்னார். அவன் சொன்ன சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை. “உங்கள் மீது ரொம்ப மரியாதை வைத்திருந்தோம்; இந்த மாதிரி கூடுதலாக பணம் கொடுத்து டிக்கெட் எடுப்பீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை” என்று எகிறிக் கொண்டே இருந்தார்கள். தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மனிதர்கள். பேசுவதை மெதுவாகப் பேச வேண்டும் என்ற ‘நாகரிகம்’ எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அந்த உரையாடல்களை பஸ்ஸில் பலர் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அவனுக்கு அவன் செய்த தவறு புரிந்தது!

ஊழலைத் தடுக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் அமைப்பு குறித்த ‘சரியான’ சட்டத்துக்காக அன்னா ஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். கறுப்புப் பணத்திலே மூழ்கி முத்தெடுக்கும் மும்பை திரையுலகம் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவளிக்கிறது. அவருடைய போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்தது என்ற செய்தியில் பாலிவுட் மகிழ்கிறது. ஊழலைக் கண்டுபிடித்து விசாரித்து தண்டனை அளிக்கும் அதிகாரம் கொண்ட ‘லோக்பால்’ அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. அதாவது ஊழல் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தவறு என்று வெளிப்படையாக சொல்லும் தைரியம் யாருக்கும் கிடையாது. அதேசமயம் அதிகாரத்தில் இருப்பவர்களும் இருந்தவர்களும் பல ஆண்டுகளாக இதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்பது தனிக்கதை!

லோக்பாலின் அதிகாரங்கள், நடைமுறைகள் குறித்து அரசாங்கம் தயாரித்து வைத்திருக்கும் மசோதாவுக்கும் மக்கள் சார்பாக தயாரிக்கப்பட்டிருக்கும் முன்வரைவுக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன. மக்கள் முன்வரைவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்னா ஹசாரே உள்ளிட்டவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதற்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆதரவு பெருகியது. இறுதியில் மத்திய அரசு ‘பணிந்தது’ என்று செய்தி வந்தது. அரசும் அன்னா ஹசாரேயும் இணைந்து ஒரு குழுவை உருவாக்கினார்கள். அந்தக் குழு வருகிற 18-ம் தேதி கூடும் என்று தெரிகிறது. எகிப்தில் விடுதலைச் சதுக்கத்தில் முபாரக்குக்கு எதிராக நடந்த போராட்டத்தைப் போல டெல்லி ஜந்தர் மந்தரில் அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் இருந்ததாக சில ஊடகங்கள் பாராட்டின.

உண்மையிலேயே ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தீவிரமாக இருக்கிறதா? 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான விஷயங்களில் கபில் சிபல் என்ன பேசினார் என்பதை நாம் மறந்து விட வேண்டும் போலிருக்கிறது. முன் எப்போதையும் விட இப்போது ஊழல்கள் குறித்த செய்திகள் அதிகம் வெளி வருகின்றன. யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வீடு தேடி வந்து பணம் கொடுக்கும் சீரழிந்த நடைமுறையை நாம் இப்போதுதான் பார்த்து முடித்தோம்.

ஜனநாயக அமைப்பைக் கேலிக்குரியதாக்கும் செயலை என் கட்சிக்காரர் செய்தாலும் அவரை படுமோசமாக தோற்கடியுங்கள் என்று அறைகூவல் விடுவதற்கு எந்தக் கட்சித் தலைமையும் தயாராக இல்லை. “எனக்குத் தெரிந்து நியாயமான முறையில் நேர்மையான வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன். என்னை அறியாமல் நான் தவறான வேட்பாளர்களைத் தேர்வு செய்திருந்தால், அவர்களை நிச்சயமாகத் தோற்கடியுங்கள்” என்று ஜவகர்லால் நேரு பிரசாரம் செய்தாராம். அந்த நேர்மையை இன்று எந்தக் கட்சியிடம் இருந்தும் எதிர்பார்க்க முடியவில்லை! ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களையே ஊழல் தடுப்புக்கு ஆணையராகப் போடும் அரசாங்கத்திடம் இருந்து எந்த விதமான ஊழல் தடுப்பு சட்டங்களை எதிர்பார்க்க முடியும்?

அதேசமயம் ‘எல்லாமே மோசம்’ என்ற அவநம்பிக்கையுடன் எல்லா விஷயங்களையும் அணுகுவதும் தவறு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அடிப்படையில் அமைப்புரீதியான மாறுதல்களுக்கான போராட்டமாக அன்னா ஹசாரேயின் போராட்டம் இல்லை என்பது சரிதான். அதற்காக அன்னா ஹசாரே போன்றவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பொருள் கொள்ள வேண்டாம். இருக்கும் நிலையில் இருந்து ஓர் அங்குலம் முன்னேறிப் போக முடிந்தாலும் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த ஓர் அங்குல முன்னேற்றமே சர்வரோக நிவாரணி என்று யாராவது சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எல்லாம் ஊடகங்கள் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும் இந்த நாட்களில் எனக்குள் வேறு சில கேள்விகள் எழுகின்றன.

மணிப்பூரில் பத்து வருடங்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிளா சானுவுக்கு ஏன் ஊடகங்களில் இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை? மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து நிற்கும் மருத்துவர் பினாயக் சென் சத்தீஸ்கர் அரசால் சிறையில் அடைக்கப்பட்டாரே, இந்திய நடுத்தர வர்க்கம் ஏன் கிளர்ந்து எழவில்லை? பரபரப்பு ஊடகங்களும் அரசாங்கமும் அன்னா ஹசாரேயை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், அந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற முடிவுக்கே வர நேர்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

“நான் ஃபார்ம் ஆயிட்டேன்யா!”

“தேர்தல் முடிந்த பிறகு இங்கே திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்; அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்; தேமுதிக, பாமக, இடதுசாரி எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள்; ஆனால் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினர்களாக அவர்கள் ஒரு நாளும் இருக்க மாட்டார்கள்” என்றார் ஒரு நண்பர்.

“எப்படி நீ அப்படி சொல்கிறாய்? அவர்கள் எல்லோருமே தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்கள் தானே?” என்று அப்பாவியாக கேட்டார் இன்னொரு நண்பர்.

“ஆம்! அவர்கள் எல்லோருமே தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் தான். ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காக செயல்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. அவர்களுடைய சுயநலத்துக்காக, அவர்களுடைய குடும்ப நலன்களுக்காக, அவர்களுடைய கட்சி நலனுக்காக செயல்படும் உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள்” என்று பதில் சொன்னார் முதல் நண்பர். அதற்கு மேல் அந்த உரையாடல் தொடரவில்லை. ஆனால் அங்கு இருந்த எல்லோருடைய மனதிலும் அந்த வார்த்தைகள் சிந்தனையைத் தூண்டியிருக்கும்!

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலைப் பாருங்கள். 2006 தேர்தலில் நிற்கும்போது அவர்களிடம் இருந்ததாக அவர்கள் சொல்லிய சொத்துக்கள், 2011-ல் பல மடங்கு அதிகமாகி இருக்கின்றன. பினாமிகளின் பெயரில் இருப்பவை இந்தப் பட்டியலில் இருக்காது என்பது வேறு விஷயம். இந்த ஐந்து வருடங்களில் அவர்களுடைய சொத்துக்களின் மதிப்பு எப்படி அதிகரிக்கிறது? “குடும்பத்தோடு உழைக்கும் நாங்கள் கையேந்தி நிற்கிறோம்; ஒரு வேலையும் செய்யாத நீ எங்களுக்கு ஓட்டுப் போட பணம் கொடுக்க வருகிறாயே! எங்கிருந்து வந்தது இந்தப் பணம்?” என்று மேடைகள் தோறும் சீமான் முழங்குகிறார். அந்த வித்தை தெரிந்தவர்கள்தான் தேர்தலில் நிற்க முடிகிறது. ஏழைகளிடம் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்குகளை வாங்குகிறார்கள். பணக்காரர்களிடம் இருந்து பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் இருந்து இவர்களையும் இவர்களிடம் இருந்து அவர்களையும் காப்பாற்றுவோம் என்று இரு தரப்புக்கும் வாக்குறுதியை அள்ளி வீசுகிறார்கள். இது ஓர் ஏமாற்று வித்தை!

இப்போது நடக்க இருக்கிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 240 கோடீஸ்வரர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிருகிறார்கள் என்கிறது ஒரு செய்தி. மொத்தம் இருப்பது 234 தொகுதிகள். சராசரியாக ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளராவது கோடீஸ்வரராக இருக்கிறார் என்பதே இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளக் கூடிய தகவல். 1996 தேர்தலுக்குப் பிறகு 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய கட்டுகள் ஆற்றில் தூக்கிப் போடப்பட்டன என்றெல்லாம் செய்திகள் வந்தன. இப்போது அதைப் போலவே எங்கெல்லாமோ இருந்து லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்படுகின்றன. 20 லட்ச ரூபாய் கொண்ட சூட்கேஸை ரோட்டில் வீசி விட்டு இளைஞர்கள் ஓடியதாக ஒரு செய்தி. ஒரு டீக்கடையில் லட்சக்கணக்கான பணம் பிடிபட்டிருக்கிறது. பணம் கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கும் அடாவடிகளை தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் கட்டுப்படுத்துகின்றன. உடனே ‘அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை’ தமிழ்நாட்டில் நிலவுவதாக முதலமைச்சர் கருணாநிதியே சொல்கிறார்!

நெருக்கடி நிலையில் நடந்தது என்ன? எதிர்க்கட்சிகள் மற்றும் சாதாரண மக்கள் அனைவருடைய ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டன. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பதெல்லாம் தடை செய்யப்பட்டன. செய்திகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டன. திமுகவில் யாரெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் என்ற தகவலை நேரடியாக முரசொலியால் வெளியிட முடியாது. “அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வராதவர்கள்” என்று ஒரு பட்டியலை அந்தக் கட்சி வெளியிடும். அதில் இருந்து தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தின் ஆட்சி ஒரு கும்பலால் முழுவதுமாக அவர்களுக்கு சாதகமாக வளைக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை சர்வாதிகார நாடாக மாற்றி அமைத்தார்கள். இவ்வளவையும் செய்தது யார்? இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் அவர்களைச் சுற்றி இருந்த கும்பல்! தமிழ்நாட்டில் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? தி.மு.க, இடதுசாரிகள், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள்! இப்போது ஏன் கருணாநிதி அதை எல்லாம் மக்களுக்கு நினைவூட்டுகிறார்? அவருடன் தானே காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவான சுதந்திரமான அமைப்பு தேர்தல் ஆணையம். அது என்ன செய்கிறது? ‘எமர்ஜென்சி’யில் நடந்ததைப் போல சட்டத்தை தங்கள் இஷ்டப்படி வளைக்கிறதா? மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை அமல்படுத்துகிறது. இதை எப்படி நெருக்கடி நிலையுடன் ஒப்பிட முடியும்? ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடி கருணாநிதிக்கு இருக்கலாம்; அதையே அவர் நெருக்கடி நிலை என்று சொல்லி இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!
தேர்தல் களத்திலே மக்களுடைய நெருக்கடிகளையும் பிரச்னைகளையும் யாராவது பேசுகிறார்களா என்று தேடித் தான் பார்க்க வேண்டியிருக்கிறது. ராஜாஜி, காமராஜ், அண்ணா, காயிதே மில்லத், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, ஈ.வி.கே.சம்பத், கருணாநிதி, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் பிரசாரம் செய்த சட்டமன்றத் தேர்தல்களைப் பார்த்தவர்கள் இன்னும் எல்லா குடும்பங்களிலும் இருப்பார்கள். அவர்களிடம் அந்த அனுபவத்தை இன்றைய இளைஞர்கள் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இப்போதைய அரசியலில் நட்சத்திர பிரசாரகர்களாக இருக்கும் குஷ்பூ, வடிவேலு, சிங்கமுத்து போன்றவர்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.

சூப்பர் மேன் வடிவேலு இந்தத் தேர்தலில் மக்கள் முன் வைக்கும் தலையாய பிரச்னை என்ன? முள்ளி வாய்க்கால் படுகொலைகளா? விலைவாசி உயர்வா? 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளா? பல்வேறு அதிகார மையங்களாக உருவெடுத்திருக்கும் குடும்ப அரசியலா? கடந்த ஆட்சிகளின்போது ஜெயலலிதா மேற்கொண்ட மக்கள் விரோத நடவடிக்கைகளா? இவை எதுவுமே இல்லை. அவருக்கு எதுதான் முக்கிய பிரச்னை? விஜயகாந்த் என்ன குடித்தார்? எவ்வளவு குடித்தார்? ஒரு அரசியல் கட்சியின் தலைவருடைய தனிப்பட்ட பழக்கம் எப்படி தேர்தல் பிரச்னை ஆகிறது? தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருக்கிறதா? விஜயகாந்த் குடிக்கிறார் என்றால் அது சட்டவிரோதமான செயலா? சட்ட விரோதமான செயல் அல்ல; ஆனால் ஒழுக்கக் கேடான செயல் என்று சிலர் பதில் சொல்லக் கூடும். அப்படியானால் மக்கள் அனைவரையும் குடிக்கத் தூண்டி ஒழுக்கம் இல்லாதவர்களாக வைத்திருப்பது அரசாங்கம் தான்! தமிழகத்தில் யார் மது விற்பனை செய்கிறார்கள்? மது விற்பனையின் ஏகபோக முதலாளி தமிழக அரசுதான்!

ஆனால் இவை குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் வடிவேலு பேசிக் கொண்டிருக்கிறார். “நான் இந்த ஏரியாவுல ரவுடியா ஃபார்ம் ஆயிட்டேன்யா; என்னையும் அரெஸ்ட் பண்ணுங்க” என்று அவர் ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார். அதைப் போலவே இப்போது அவர் ஒரு அரசியல்வாதியாகவும் ‘ஃபார்ம்’ ஆகி விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Thursday, April 07, 2011

வரலாறு எப்படிப் பதிவு செய்யும்?

சாலையை மறித்து அந்த மேடையைப் போட்டிருந்தார்கள். சென்னை அண்ணாசாலையில் இருந்து எழும்பூர் வழியாக அண்ணாநகருக்கு வந்து கொண்டிருந்தோம். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நின்று அந்த வழியாக வரும் வாகனங்களை மாற்று வழியில் செல்லும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். என்னுடன் வந்த சிறுமி கேட்டாள்.

“எதற்காக இந்த மேடை போட்டிருக்காங்க?”

“ஒரு அரசியல் கட்சி இந்த மேடையைப் போட்டிருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர்கள் வந்து இங்கு கூடியிருக்கற மக்களிடம் அவர்களுடைய கருத்துக்களை சொல்வாங்க” என்று நான் சொன்னேன்.

“அவங்க கட்சிக்காரங்களுக்கு சொல்லணும்னா அதுக்கு மத்த மக்களை ஏன் தொந்தரவு பண்றாங்க?”

அவள் விடவில்லை. அவள் ஒரு மாத விடுமுறையை சென்னையில் கழிப்பதற்காக ஒரு வெளிநாட்டில் இருந்து வந்திருந்தாள். அவளுக்கு இது போன்ற கூட்டங்கள் அறிமுகமாகி இருக்கவில்லை. நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஒலிபெருக்கிகளின் சத்தம் நமக்கு எப்போதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால் நாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் நமக்கு வந்துவிடும்.

“இதை மக்களுக்குத் தொல்லைன்னோ தொந்தரவுன்னோ எப்படி சொல்ல முடியும்? இந்த மாதிரி கூட்டங்கள் போடாம மக்களுடைய பிரதிநிதிகள் வேற எப்படி மக்களோட பேச முடியும்? தண்ணிக்குள்ள மீன் இருக்கற மாதிரி மக்களுக்கு நடுவிலே தானே அரசியல்வாதி இருக்க முடியும்?”

நான் பதில் கேள்வி கேட்டேன். பத்து வயதுச் சிறுமியின் பார்வையில் இந்த அரசியல் கூட்டங்கள் என்னவிதமான தோற்றத்தைக் கொடுக்கின்றன என்று அறியும் ஆர்வமும் எனக்கு அதிகரித்தது. நான் என்னுடைய பள்ளிப் பருவத்திலும் சரி, கல்லூரி காலங்களிலும் சரி, ஏராளமான கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். மேடையில் ஒரு தலைவர் பேசி விட்டுப் போன பிறகு, அவர் பேசிய விஷயங்களை எல்லாம் திரும்பி வரும்போது விவாதித்துக் கொண்டே வருவோம். முப்பது முதல் முப்பத்தைந்து வருடங்கள் கழித்து அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சிறுமியிடம் பொதுக் கூட்டங்கள் பற்றி பேசிக் கொண்டு வருகிறேன் என்ற சிந்தனை எனக்குள் ஓடியது.

“அறிக்கை கொடுத்தா அடுத்த நாள் பத்திரிகையில் வரப் போகிறது; ஏராளமான டி.வி. இருக்கு.. மக்களுக்கு என்ன சொல்லணுமோ அத டி.வி.ல பேச வேண்டியதுதானே! இது இந்தப் பகுதில வசிக்கற மத்த மக்களுக்கு தொந்தரவு தான். இதை அவங்க எதிர்த்து புகார் செய்ய மாட்டாங்களா?”

இந்தக் கேள்விக்கு பதில் எதுவும் நான் சொல்லவில்லை. இந்த சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நடந்தது. அது தேர்தல் காலமும் அல்ல; அந்த சிறுமியைப் போன்றவர்கள் தேர்தல் காலத்தில் இங்கு இருந்தால் என்ன நினைப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த மாதிரி இப்போது பிரசாரம் இல்லை. அந்த சிறுமியைப் போல யோசிக்கிறவர்கள் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். “உங்களை கடந்த ஐந்து வருடங்களாகப் பார்த்து வருகிறோம்; ஆட்சிக்கு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை உங்கள் தேர்தல் அறிக்கைகள் மூலமாக நாங்கள் அறிந்தோம்; வாக்குப் பதிவு நாள் அன்று நாங்கள் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்போம்; அதுவரை எங்களைத் தொல்லை செய்யாதீர்கள்” என்ற மனநிலை நகர்ப்புறங்களில் அதிகமாகி இருப்பதாகவே தெரிகிறது. அவர்கள் சொல்லும் பலவிதமான தொல்லைகளைத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்திவிட்டது என்றே அவர்கள் கருதுகிறார்கள்.

தேர்தலை வெறும் பரபரப்பு நிகழ்ச்சியாகவோ திருவிழாவாகவோ சிலர் கருதுகிறார்கள்; அவர்கள் தான் ‘தேர்தல் நடக்கற மாதிரி எந்த அறிகுறியும் தெரியலையே’ என்று அங்கலாய்க்கிறார்கள். தேர்தல் ஆணையம் செய்யும் ‘கெடுபிடிகள்’ காரணமாக தேர்தல் களத்தில் சில நடவடிக்கைகளைப் பார்க்க முடியவில்லை. அதைத்தான் ‘தேர்தல் அறிகுறிகளைக் காணோம்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். ஊடகங்களில் மட்டுமே தேர்தல் தொடர்பான பரபரப்பை பார்க்க முடிகிறது. மக்களிடம் வழங்குவதற்காக கொண்டு செல்லப்படும் பணம் கட்டுக்கட்டாக பிடிபட்டது என்ற செய்தி தினமும் வருகிறது. வி.ஐ.பி.க்களுடைய வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் எல்லாம் இந்தப் பண விநியோகத்துக்கு பயன்படுகின்றன என்று வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
தேவையற்ற கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசி இருக்கிறார். எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று ஆளும் கட்சி குறை கூறுகிறது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சொல்லி இருக்கிறார். அவருக்குக் கொடுத்திருந்த பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை அடுத்து அவர் இப்படிப் பேசி இருக்கிறார். இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையமே கதாநாயகனாக இருக்கிறது!

அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரத்தின் தரம் எப்படி இருக்கிறது? ஆளும் கட்சித் தரப்பில், அரசின் சாதனைகள் என்று இலவசத் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் போலவே இப்போது தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்கள் விளக்குகிறார்கள். ஜெயலலிதா நம்பிக்கைக்கு உகந்தவர் இல்லை என்றும் அவர் சொல்வதை செய்ய மாட்டார் என்றும் திமுக சொல்லி வருகிறது. பண பலத்தை ஜெயலலிதா பயன்படுத்துகிறார் என்றும் தேர்தல் ஆணையம் சதி செய்கிறது என்றும் திமுக பேசுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை திமுகவின் பலவீனமாகவே மக்கள் பார்க்கிறார்கள். விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் இடையில் இருந்த மனக்கசப்பை தன்னுடைய தேர்தல் ஆதாயத்துக்காக திமுக பயன்படுத்துகிறது.

அதிமுக அணி வெற்றி பெற்றுவிடும் என்ற தோற்றத்தை விஜயகாந்த் அந்த அணியில் சேர்ந்ததன் மூலம் உருவாக்கி இருக்கிறார். தனியாக நின்று தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்காமல் ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் இணைந்து நிற்பது திமுகவுக்கு எரிச்சல் தருகிறது. அதனால் வடிவேலுவைப் பிடித்து விஜயகாந்தை விளாசச் சொல்கிறார்கள். ஒரு கதாநாயகனை ஒரு காமெடி நடிகர் நேருக்கு நேர் எதிர்க்கிறார். விஜயகாந்தை சிறுமைப்படுத்த வேண்டும் என்று வடிவேலு பயன்படுத்தும் மலிவான உத்திகள் அவர் விரும்பும் பலனைத் தருமா என்பது சந்தேகமே!

அதிமுக தரப்பில் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஸ்டார் பிரசாரகர்கள். அரசியலில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம், 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு உள்ளிட்ட லஞ்சம் ஊழல், தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்கள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை பேசுகிறார்கள். அதிக முக்கியத்துவம் குடும்ப ஆதிக்கத்துக்கும் லஞ்சம் ஊழலுக்கும் கொடுக்கப்படுகிறது.

மேடைகளில் வெற்றிடம் ஒன்று தென்படுகிறது. 2ஜி அலைவரிசை பற்றியும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றியும் தொடர்ந்து பேசி வந்த குரல் ஒன்று பேசாமல் ஒதுங்கி நிற்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. சாதாரண நாட்களில் மேடைகளில் முழங்கியவர்கள் இப்போது அதற்கு நீதி கேட்காமல் ஒதுங்கி நிற்கிறார்கள். வரலாறு அவர்களை எப்படிப் பதிவு செய்யும்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

காட்சிப் பிழைகள்

என்ன செய்வது என்றே சரவணனுக்குத் தெரியவில்லை. தீபாவளி செலவுக்காக அலுவலகத்தில் இருபதாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தான். வீட்டுக்குப் புறப்படும்போது அவனிடம் அந்தப் பணம் இல்லை. அலுவலகத்திலேயே அது காணாமல் போயிருந்தது. அவனுடைய இருக்கைக்கு முன்னால் இருக்கும் மேஜையின் மேலோ அல்லது மேஜையின் டிராயருக்குள்ளோ அவன் கவருடன் வைத்திருக்கக் கூடும். காசாளரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வந்த்து நினைவிருக்கிறது. போகும் போது எடுத்துக் கொள்ளலாம் என்று எங்கோ வைத்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால் எங்கே இருந்து அது காணாமல் போனது என்பதை அவனால் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அந்தக் கவர் அவனிடம் இல்லை. யாரை சந்தேகப்படுவது?

அன்று தீபாவளிக்கு முந்தைய நாள். சரவணனுடைய வீட்டுக்கு அந்த நண்பர் வந்தார். அவருடைய கையில் ஒரு பெரிய பை இருந்தது. பணத்தைப் பறிகொடுத்த சரவணன், அவனுடைய மனைவிக்கும் குழந்தைக்கும் புத்தாடைகள் வாங்கி இருக்க மாட்டான் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அவர்களுடைய குடும்பத்தில் ஏமாற்றமும் அசாதாரண அமைதியும் இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால் அவர்களுடைய தேவை அறிந்து சரவணனுடைய குழந்தைக்கு புது ஆடையும் கொஞ்சம் இனிப்புகளும் பட்டாசுகளும் அவர் வாங்கி வந்திருந்தார்.

அந்த நண்பரின் செயல் சரவணனுக்கும் அவனுடைய மனைவிக்கும் மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்தது. ஆனால் அலுவலகத்தில் அவனுடைய பணத்தைத் திருடியதே அந்த நண்பர்தான் என்ற உண்மையை சரவணன் அறிந்திருக்கவில்லை!

அந்த சரவணனின் நிலையில் தான் நாம் இருக்கிறோம். தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் நமக்கு என்னென்னவோ இலவசமாகத் தரப் போகின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யாருடைய ஆட்சி அமைந்தாலும், நமக்கு கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி, இலவச பஸ் பயணம், மடிக்கணினி எல்லாம் தரப் போகிறார்கள். மாவரைக்கும் எந்திரம், மிக்ஸி, ஃபேன் எல்லாம் கிடைக்கும் என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் அ.தி.மு.க தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறீர்களா என்று கேட்காதீர்கள்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி அவை நமக்குக் கிடைக்கும். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் எப்படி கிடைக்கும்? அவர் தான் “சொன்னதையும் செய்வார்; சொல்லாததையும் சேர்த்து செய்வார்” என்று பிரசாரம் செய்கிறார்களே!

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பி என்று திமுகவினர் கிண்டல் செய்கிறார்கள். சென்ற இதழில் இந்தப் பகுதியில் நானும் திமுக அறிக்கையின் நீட்சி அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இன்றைய சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்வைக்க முடியாத ஒரு வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்தால் செய்து தருவதாக ஜெயலலிதா உறுதி அளித்திருக்கிறார். கேபிள் தொழிலை அரசுடைமையாக்குவோம் என்றும் கட்டணமில்லாமல் இலவசமாக ‘கேபிள் கனெக்ஷன்’ மூலமாக தொலைக்காட்சி சேவைகளை வழங்குவோம் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். ஒரு வகையில் இதுவும் கூட திமுகவின் செயல்திட்டத்தின் நீட்சிதான்!

குடும்பத்துக்குள் முரண்பாடுகளும் பகை உணர்வும் தலைதூக்கிய காலத்தில் அரசு கேபிள் நிறுவனத்தைத் தொடங்கியது திமுக அரசு. “கண்கள் பனித்தன; நெஞ்சம் இனித்தது” என்று முதலமைச்சர் கருணாநிதி சொன்ன நாள் முதல் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அந்த திட்டத்துக்கு உயிர் கொடுப்பேன் என்பதே ஜெயலலிதாவின் வாக்குறுதி!
ஏற்கனவே மின்வெட்டால் அவதிப்படும் தமிழகத்தில் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் என்று மின்சக்தி தேவைப்படும் கருவிகளாக கொடுக்கப் போகிறார்கள்.

இவற்றைப் பயன்படுத்துவதற்கான மின் ஆற்றலை எங்கிருந்து பெற முடியும்? சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை ஊக்கப்படுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கை சொல்கிறது. ஒரு வீட்டுக்கான மின் தேவைகளை எதிர்காலத்தில் சூரிய ஒளியில் இருந்து பெற்றுக் கொள்வதே நல்ல மாற்றாகத் தெரிகிறது. அனல் மின்சாரம் சுற்றுச்சூழலை மாசு படுத்துகிறது; அணு மின்சாரம் கதிரியக்க அபாயத்தைத் தன்னுள் கொண்டதாக இருக்கிறது; சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெறுவதற்கான வழிகளுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதே நல்லதாகத் தோன்றுகிறது. அந்த வகையில் இலவச அறிவிப்புகளைத் தாண்டி இது போன்ற சில ஒளிக்கீற்றுகளை அதிமுக தேர்தல் அறிக்கையில் காண முடிகிறது!

ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை குறைந்த விலையில் கொடுப்பதையும் அரிசி, கோதுமையை இலவசமாக கொடுப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. வறுமையை ஒழிப்போம் என்கிறோம்; ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொல்கிறோம்; எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் நம்பிக்கை அளிக்கிறோம்; இந்த வார்த்தைகள் சாதாரண மனிதர்களின் உள்ளங்களில் கோபம் வராமல் பார்த்துக்கொள்கின்றன.

இதை எல்லாம் மீறி, அவர்களுடைய வயிற்றில் எழும் பசித்தீ அவர்களைக் கோபமடைய வைத்து விட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் வறுமை ஒழிப்புத் திட்டங்களை நாம் முன் வைத்திருக்கிறோம்; இலவச அரிசி உட்பட பல ‘மக்கள் நலத் திட்டங்களை’ நடைமுறைப்படுத்துகிறோம். விடுதலைச் சதுக்கங்களையோ மெமோரியல் ஹால்களையோ ஜந்தர் மந்தர்களையோ நோக்கி மக்கள் அணிவகுக்காமல் தடுப்பதற்கு ஓரளவு இவை காரணமாக இருக்கின்றன!

நம்மை அல்லது நம்மோடு வாழும் சாதாரண மக்களை அரைகுறை வயிறோடும் உயிரோடும் வைத்திருக்க உதவும் சில இலவசங்களை விட்டு விடலாம். தொலைக்காட்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக நம்முடைய அரசாங்கம் எப்படித் தர முடிகிறது? இப்படிப் பல இலவசத் திட்டங்களை நமக்குக் கொடுத்து ‘கொடை வள்ளல்கள்’ போலவும் நம் வாழ்க்கையில் அக்கறை உள்ளவர்கள் போலவும் நம்முடைய தலைவர்களால் எப்படி ஓர் ஆளுமையை உருவாக்கிக் கொள்ள முடிகிறது?

ஒரு ரூபாய் அரிசித் திட்டத்துக்கு 3750 கோடி ரூபாய் என்பதில் தொடங்கி நலத் திட்டங்களுக்காக ஒரு வருடத்துக்கு 15000 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்கிறது. இந்த வருடம் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் வருமானம் ஏறத்தாழ 15000 கோடி ரூபாய்! நாட்டின் வளர்ச்சி விகிதம் ஏறுகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டில் மது விற்பனை ஒரு வருடத்துக்கு 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வாங்கிய கூலியை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுப்பதற்குள் உழைக்கும் மக்களிடம் இருந்து ’டாஸ்மாக்’ மூலமாகத் திருடி விடுகிறோம்; அதன் பிறகு அவர்கள் வீட்டுக்கு அரிசியும் கிரைண்டரும் மிக்ஸியும் கொண்டு கொடுக்கிறோம். முதல் வரியில் இருக்கும் சரவணனின் பணத்தைத் திருடிவிட்டு குழந்தைக்கு பார்சல் கொண்டு வந்த நண்பருக்கும் நம்முடைய அரசாங்கத்துக்கும் என்ன வித்தியாசம்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

பொய்யை நீ விற்றாலும் பைசா பைசா!

எதிர்க்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை ஜெயலலிதா கொஞ்சம் மாற்றி இருக்கிறார். ஆளும் கட்சி ஏதாவது திட்டத்தைக் கொண்டு வந்தால் அதை எதிர்த்து கருத்து சொல்வதே எதிர்க்கட்சியின் பணி என்பது நம்முடைய நடைமுறை. அதன்படி கிரைண்டர் அல்லது மிக்ஸி இலவசம் என்று திமுக சொன்னால் அதிமுக இலவசத் திட்டங்களை எதிர்க்க வேண்டும். ஆனால் அதிமுக எதிர்க்கவில்லை. மாறாக அந்த இலவச அறிவிப்பின் நீட்சியாக ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிரைண்டரும் மிக்ஸியும் ஃபேனும் வழங்கப்படும்’ என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி என்று திமுக சொன்னால், பிளஸ் 2 படிக்கும் அனைவருக்கும் மடிக் கணினி என்று அதிமுக சொல்கிறது. இதில் இருந்து ஆளும் தரப்பில் இருந்து வருகிற எல்லா அறிவிப்புகளையும் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்க முடியாது என்று தெரிகிறது!

ஆனால் இன்னொரு விஷயத்தில் கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதற்கு நேர்மாறாக ஜெயலலிதா பேசி இருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ‘கெடுபிடி’ நடவடிக்கைகளை கருணாநிதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; அதனால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று கோபப்படுகிறார். ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து அறிக்கை கொடுக்கிறார். வாகனச் சோதனையும் பணம் கைப்பற்றப்படுவதும் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு ஜெயலலிதாவின் எதிர்வினை என்ன? இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் இன்னும் கூடுதலான வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று சொல்கிறார். அதாவது “தேர்தல் ஆணையம் நியமித்த ‘பறக்கும் படைகள்’ இன்னும் அதிகமான அளவில் வேகமாக வாகனச் சோதனைகளை நடத்த வேண்டும். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக கொண்டு செல்லப்படும் பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.

அத்துடன் தேர்தல் ஆணையத்தை முதலமைச்சர் கருணாநிதி விட்டுவிடவில்லை. தேர்தலை ஏப்ரல் 13-ம் தேதி நடத்திவிட்டு முடிவுகளை மே 13-ம் நாள் அறிவிப்பது ஏன் என்று முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் கேட்கிறார். “அரசியல் கட்சிகள் சார்பில் வாக்குப்பதிவு செய்யும் நாளை சற்று தள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது தேர்தல் ஆணையம் அதனை ஏற்க முடியாதென்று தள்ளிவிட்டது” என்றும் அவர் சொல்லி இருக்கிறார். தேர்தல் நாளை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்திடம் அதிகாரபூர்வமாக கோரிக்கை வைத்ததா? பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இருக்கின்றன என்று தேர்தல் நாள் குறித்து முதலமைச்சர் வெளியிட்ட முதல் அறிக்கை கவலைப்பட்டதா? பிறகு வாக்குப்பதிவு நாளை தள்ளி வைக்கவேண்டும் என்று யார் கோரினார்கள் என்று கருணாநிதி சொல்கிறார்?

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னை வந்தபோது ‘அதிமுக மட்டுமே தேர்தல் நாளைத் தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரியது என்று சொன்னார். அதுதான் உண்மையாக இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் ஒருவேளை தேர்தலை மே முதல் வாரத்துக்குத் தள்ளி வைத்திருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது இங்கு என்ன பேசப்படும்? ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு ஆடுகிறது தேர்தல் ஆணையம் என்று நாம் குற்றம் சாட்ட மாட்டோமா? ‘இதுவரை இல்லாத அளவில் காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது. இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னால் தமிழக அரசு கலந்தாலோசிக்கப்படவில்லை. அதிமுக குற்றம்சாட்டியது என்ற ஒரே காரணத்துக்காக- அதில் உண்மை இருக்கிறதா என்று கூடப் பார்க்காமல் – அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள்’ என்று கருணாநிதி வருத்தப்பட்டிருக்கிறார்!

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. சென்னை நகர காவல்துறை ஆணையராக இருந்த ஆர். நட்ராஜ் மாற்றப்பட்டார். எதற்காக? ஏதோ ஒரு பத்திரிகையில் அவருக்குப் பிடித்த பெண்மணிகள் பட்டியலில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரையும் சொல்லி இருந்தார்! அதனால் அவர் நடுநிலையோடு செயல்படமாட்டார் என்று கண்டனங்கள் எழுந்தன. பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து அன்றைய காலகட்டத்தில் போராடி மேலே வந்தவர் என்று நான் கருணாநிதியைப் பாராட்டினால் நான் அவருடைய தொண்டனாகி விடுவேனா? இந்த 87 வயதில் உடல்நலம் குறித்த பிரச்னைகள் இருந்தாலும் இவ்வளவு சுறுசுறுப்பாக கருணாநிதி இருக்கிறாரே என்று நான் வியந்து போற்றினால் நான் அவருடைய ஆதரவாளன் ஆகி விடுவேனா? தடாலடியாக அரசியல் செய்தாலும் கூட,

ஆண்களின் மேலாதிக்கம் நிறைந்த அரசியல் உலகத்தில் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இந்த உயரத்தை ஜெயலலிதா எட்டி இருக்கிறார் என்று பாராட்டினால் நான் ஜெயலலிதாவின் கட்சிக்காரன் என்று பொருளா?

ஆனால், இங்கு அப்படித்தான் ஆகிவிடுகிறது. ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தம் தெரியாமல், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல் கட்சிகள் அத்துமீறும்போது நாம் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை ஆதரிக்க நேர்கிறது. உடனே, மக்கள் பிரதிநிதிகளைவிட்டுவிட்டு, அதிகாரிகளை ஆதரிக்கலாமா என்று கண்டனங்களை எதிர்கொள்ள நேர்கிறது. அரசியல்வாதிகள் பணபலத்தையும் கிரிமினல்களின் பலத்தையும் நம்பாமல் தேர்தல்களை எதிர்கொள்கிறார்களா? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களே இயற்றிய சட்டங்களை மீறுவதை என்ன என்று ஏற்றுக் கொள்வது? தேர்தல் ஆணையத்திடம் ‘எங்கள் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இருக்கும்’ என்று உறுதி அளித்துவிட்டு அதை கேலிக்கூத்தாக்கும் அரசியல் கட்சிகள் தானே இங்கு அதிகமாக இருக்கின்றன? சாதியைச் சொல்லியோ மதத்தைச் சொல்லியோ, லஞ்சம் கொடுத்தோ வாக்குகளை வாங்கி அதிகாரத்துக்கு வருவோரிடம் என்ன ஜனநாயகப் பண்புகளை எதிர்பார்க்க முடியும்?

“தேர்தல் ஆணையம் இந்த முறை இந்த அளவுக்கு அதிகக் கெடுபிடிகள் செய்ய என்ன காரணம்?” என்று முதலமைச்சர் கருணாநிதி கேட்டிருக்கிறார். அதேசமயம் அடுத்த வரியிலேயே “தேர்தல் ஆணையம் கெடுபிடியில் ஈடுபட்டிருப்பதாக நாம் குற்றம்சாட்டவில்லை” என்றும் சொல்லிவிடுகிறார். வாகனச் சோதனையே அவர்களுக்கு கெடுபிடியாக தெரிகிறது; அதைத் தவறு என்று பகிரங்கமாக கண்டிக்கவும் முடியவில்லை. தேர்தல் ஆணையம் வாகனச் சோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏன் வருகிறது? அரசியல்வாதிகள் வாக்காளர்களின் முடிவைத் திசை திருப்புவதற்காக பணமோ பொருளோ கொடுக்கிறார்கள். இந்த உண்மை சமூகத்தின் கடைசி மனிதன் வரை தெரிந்திருக்கிறது. காலையில் பேப்பருடன், அதிகாலையில் பால் கவருடன், பின்னிரவு அல்லது நள்ளிரவு நேரத்தில் நண்பர்கள் மூலமாக என்று பல வழிகளில் பணம் வாக்காளர்களிடம் வந்து சேர்ந்த கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அப்படிப் பணத்தைக் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெளிவாக சொல்கிறது. ஆனாலும் இங்கே ஆளும் தரப்பில் இருந்து கொடுக்கிறார்கள்; எதிர்க்கட்சிகள் அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கின்றன. என்ன பரிதாபம்! இவர்களுடைய கையில் தான் நாம் ஆட்சியையும் நிர்வாகத்தையும் கொடுக்க வேண்டியிருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்