Monday, April 25, 2011

அரசியல் இடைவெளி!

“திடீரென்று ஏதாவது முக்கியமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்வது? தேர்தல் ஆணையத்துக்குத் தான் வெளிச்சம்! அதிகாரிகளின் நிலை என்ன? திரிசங்கு சொர்க்கம்தான்” என்று முதலமைச்சர் கருணாநிதி ஆதங்கப்பட்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற மே 13-ம் தேதி நடைபெறும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசு மே மாதம் 17-ம் தேதிக்குள் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த அறிவிப்பை எல்லாம் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் முதல் தேதியே அறிவித்து விட்டது. அன்று முதல் வாக்கு மே 15-ம் நாள் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் இருக்கும் ஒரு மாத இடைவெளிதான் முதலமைச்சர் கருணாநிதியை அப்படிப் பேச வைக்கிறது!

எத்தனையோ கோரிக்கைகளை மக்கள் அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கிறார்கள்; அவை அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படுவதற்காக எத்தனையோ வருடங்கள் காத்திருந்திருக்கிறார்கள்; எத்தனை அரசாங்கங்கள் மாறினாலும் அவர்களுடைய பல கோரிக்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து டெல்லிக்குக் கடிதங்கள் போயிருக்கலாம்; பிரதமரிடம் இருந்தோ, ஆளும் கூட்டணித் தலைவரிடம் இருந்தோ பதில்கள் வந்திருக்கலாம்; ஆனால் மக்களுடைய பிரச்னைகள் தீராமல் வருடக்கணக்காக அப்படியே நீடித்துக் கொண்டிருக்கும்.

‘இருந்தும் இல்லாத’ அரசுக்கு பெரும்பான்மையான மக்கள் பழகி விட்டார்கள். காத்திருப்பது அவர்களுக்குப் புதிதல்ல. ஆனால் அரசியல் தலைவர்களால் காத்திருக்க முடிவதில்லை. கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை!

வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையிலான ஒரு மாத காலமும் மக்களுக்கான பணிகள் அப்படியே முடங்கி நிற்க வேண்டுமா? இதுவே கருணாநிதி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களின் கேள்வி. சில ஊடகங்களும் இந்தக் கேள்வியை எழுப்புகின்றன. இந்தக் குரல்களின் எதிரொலியாகவோ அல்லது இயல்பாகவோ தேர்தல் நடத்தை விதிகளில் சிலவற்றை தேர்தல் ஆணையம் தளர்த்தி இருக்கிறது.

ஏற்கனவே அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரலாம். ஆனால் ஒரு நிறுவனத்துக்கு அந்தப் பணி ஒப்படைக்கப்பட வேண்டுமானால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும். மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட இடங்களைப் பார்வையிடலாம். ஆய்வுக் கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு உரிய விதிகளின்படி அனுமதி அளிக்கப்படும். ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் மையங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் கூட்டங்கள், பேரணிகள் நடத்த அனுமதி இல்லை. இப்படிப் பல விதிகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாகி இயங்கி வரும் ஓர் அமைப்பு இந்திய தேர்தல் ஆணையம். அந்த அமைப்பு ஒரு மாநில நிர்வாகம் ஒரு மாத காலம் முடங்கி இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் என்று நினைக்கத் தோன்றவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்களும் சாதாரண பொது மக்களும் தேர்தல் ஆணையத்தைப் பாராட்டுகிறார்கள். தேர்தல் நடந்து முடிந்த விதத்தைப் பார்க்கும்போது தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாகவும் சொல்ல முடியவில்லை. விதிகளை மீற முயன்றவர்களை அது கட்டுப்படுத்த முயன்றிருக்கிறது. விதி மீறல்களை முழுவதுமாக கட்டுப்படுத்தியது என்றும் சொல்ல முடியாதுதான்!

பல ஊர்களில் இரவு இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டதாகவும் அப்போது வாக்குகளுக்காக பணம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. ஒரு சோறு பதமாக, மதுரை மேற்கு தொகுதியில் வார்டு வார்டாக எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் அடங்கிய நாற்பது பக்க நோட்டு சிக்கி இருக்கிறது. முறைகேடுகளை நூறு சதவீதம் தடுக்க முடியவில்லை என்றாலும் கூட, தேர்தல் ஆணையம் எடுத்த முயற்சிகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுகிறதா? அல்லது தி.மு.க.வுக்கு எதிராக செயல்படுகிறதா? வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் இரண்டு வாரங்கள், மூன்று வாரங்கள் அல்லது நான்கு வாரங்கள் என்று இடைவெளி இதுவரை எந்த மாநிலத்திலும் இருந்ததே இல்லையா? கொஞ்சம் நினைவுகளைப் பின்னோக்கிப் பாருங்கள். 2006-ல் மேற்கு வங்கம், கேரளா, அசாம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல்களின்போது என்ன நடந்தது? அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடந்தது. முதல் கட்டமாக ஏப்ரல் 3-ம் தேதியும் அடுத்த கட்டமாக ஏப்ரல் 10-ம் தேதியும் தேர்தல் நடந்தது. முடிவுகள் மே மாதம் 11-ம் நாள் வெளியானது!

2009 மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒரிசா மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்தன. ஆந்திராவின் 294 தொகுதிகளுக்கு ஏப்ரல் 16, ஏப்ரல் 23 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. முடிவுகள் மே 16-ம் தேதி வெளிவந்தன. ஒரிசாவில் 147 தொகுதிகளுக்கு அதே போல் அதே தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடந்தது. ஏறத்தாழ மூன்று வாரங்களுக்குப் பிறகே மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது.

2008-ல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 14 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. முடிவுகள் அறிவதற்கு அந்த மாநில மக்கள், டிசம்பர் எட்டாம் தேதி வரை காத்திருந்தார்கள். காரணம் என்ன? ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 4-ம் தேதி வாக்குப்பதிவு இருந்தது! நான்கு மாநிலங்கள் அல்லது ஐந்து மாநிலங்களுக்கு சேர்த்து தேர்தல் நடக்கும் போது, எல்லா மாநிலங்களின் வாக்குப்பதிவும் முடிந்த பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தேர்தல் ஆணையம் சமீப வருடங்களில் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. இதுவரை தமிழ்நாட்டு மக்கள் முடிவுகளுக்காக இத்தனை நாட்கள் காத்திருந்ததில்லை. ஆனால் சில மாநிலங்களுக்கான தேர்தலை சேர்த்து நடத்தும்போது, ஏதாவது ஒரு மாநில மக்கள் இதைப் போல முடிவுகளுக்கு சில வாரங்கள் காத்திருக்க நேர்கிறது! 1996 முதல் - இடையில் ஒன்றரை வருடம் நீங்கலாக – மத்திய அரசில் பங்கேற்று வரும் தி.மு.க.வுக்கு இந்த விபரங்கள் எல்லாம் நிச்சயம் தெரியும். பிறகு ஏன் திமுக தலைமை தேர்தல் ஆணையத்தைக் கண்டித்துக் கொண்டே இருக்கிறது? அது வேறு எங்கோ யார்மீதோ எதற்காகவோ ஏற்பட்ட வருத்தம் அல்லது கோபம் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home