Thursday, April 07, 2011

பொய்யை நீ விற்றாலும் பைசா பைசா!

எதிர்க்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை ஜெயலலிதா கொஞ்சம் மாற்றி இருக்கிறார். ஆளும் கட்சி ஏதாவது திட்டத்தைக் கொண்டு வந்தால் அதை எதிர்த்து கருத்து சொல்வதே எதிர்க்கட்சியின் பணி என்பது நம்முடைய நடைமுறை. அதன்படி கிரைண்டர் அல்லது மிக்ஸி இலவசம் என்று திமுக சொன்னால் அதிமுக இலவசத் திட்டங்களை எதிர்க்க வேண்டும். ஆனால் அதிமுக எதிர்க்கவில்லை. மாறாக அந்த இலவச அறிவிப்பின் நீட்சியாக ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிரைண்டரும் மிக்ஸியும் ஃபேனும் வழங்கப்படும்’ என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி என்று திமுக சொன்னால், பிளஸ் 2 படிக்கும் அனைவருக்கும் மடிக் கணினி என்று அதிமுக சொல்கிறது. இதில் இருந்து ஆளும் தரப்பில் இருந்து வருகிற எல்லா அறிவிப்புகளையும் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்க முடியாது என்று தெரிகிறது!

ஆனால் இன்னொரு விஷயத்தில் கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதற்கு நேர்மாறாக ஜெயலலிதா பேசி இருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ‘கெடுபிடி’ நடவடிக்கைகளை கருணாநிதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; அதனால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று கோபப்படுகிறார். ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து அறிக்கை கொடுக்கிறார். வாகனச் சோதனையும் பணம் கைப்பற்றப்படுவதும் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு ஜெயலலிதாவின் எதிர்வினை என்ன? இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் இன்னும் கூடுதலான வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று சொல்கிறார். அதாவது “தேர்தல் ஆணையம் நியமித்த ‘பறக்கும் படைகள்’ இன்னும் அதிகமான அளவில் வேகமாக வாகனச் சோதனைகளை நடத்த வேண்டும். வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக கொண்டு செல்லப்படும் பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.

அத்துடன் தேர்தல் ஆணையத்தை முதலமைச்சர் கருணாநிதி விட்டுவிடவில்லை. தேர்தலை ஏப்ரல் 13-ம் தேதி நடத்திவிட்டு முடிவுகளை மே 13-ம் நாள் அறிவிப்பது ஏன் என்று முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் கேட்கிறார். “அரசியல் கட்சிகள் சார்பில் வாக்குப்பதிவு செய்யும் நாளை சற்று தள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது தேர்தல் ஆணையம் அதனை ஏற்க முடியாதென்று தள்ளிவிட்டது” என்றும் அவர் சொல்லி இருக்கிறார். தேர்தல் நாளை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்திடம் அதிகாரபூர்வமாக கோரிக்கை வைத்ததா? பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இருக்கின்றன என்று தேர்தல் நாள் குறித்து முதலமைச்சர் வெளியிட்ட முதல் அறிக்கை கவலைப்பட்டதா? பிறகு வாக்குப்பதிவு நாளை தள்ளி வைக்கவேண்டும் என்று யார் கோரினார்கள் என்று கருணாநிதி சொல்கிறார்?

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னை வந்தபோது ‘அதிமுக மட்டுமே தேர்தல் நாளைத் தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரியது என்று சொன்னார். அதுதான் உண்மையாக இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் ஒருவேளை தேர்தலை மே முதல் வாரத்துக்குத் தள்ளி வைத்திருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது இங்கு என்ன பேசப்படும்? ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு ஆடுகிறது தேர்தல் ஆணையம் என்று நாம் குற்றம் சாட்ட மாட்டோமா? ‘இதுவரை இல்லாத அளவில் காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது. இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னால் தமிழக அரசு கலந்தாலோசிக்கப்படவில்லை. அதிமுக குற்றம்சாட்டியது என்ற ஒரே காரணத்துக்காக- அதில் உண்மை இருக்கிறதா என்று கூடப் பார்க்காமல் – அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள்’ என்று கருணாநிதி வருத்தப்பட்டிருக்கிறார்!

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. சென்னை நகர காவல்துறை ஆணையராக இருந்த ஆர். நட்ராஜ் மாற்றப்பட்டார். எதற்காக? ஏதோ ஒரு பத்திரிகையில் அவருக்குப் பிடித்த பெண்மணிகள் பட்டியலில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரையும் சொல்லி இருந்தார்! அதனால் அவர் நடுநிலையோடு செயல்படமாட்டார் என்று கண்டனங்கள் எழுந்தன. பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து அன்றைய காலகட்டத்தில் போராடி மேலே வந்தவர் என்று நான் கருணாநிதியைப் பாராட்டினால் நான் அவருடைய தொண்டனாகி விடுவேனா? இந்த 87 வயதில் உடல்நலம் குறித்த பிரச்னைகள் இருந்தாலும் இவ்வளவு சுறுசுறுப்பாக கருணாநிதி இருக்கிறாரே என்று நான் வியந்து போற்றினால் நான் அவருடைய ஆதரவாளன் ஆகி விடுவேனா? தடாலடியாக அரசியல் செய்தாலும் கூட,

ஆண்களின் மேலாதிக்கம் நிறைந்த அரசியல் உலகத்தில் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இந்த உயரத்தை ஜெயலலிதா எட்டி இருக்கிறார் என்று பாராட்டினால் நான் ஜெயலலிதாவின் கட்சிக்காரன் என்று பொருளா?

ஆனால், இங்கு அப்படித்தான் ஆகிவிடுகிறது. ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தம் தெரியாமல், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல் கட்சிகள் அத்துமீறும்போது நாம் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை ஆதரிக்க நேர்கிறது. உடனே, மக்கள் பிரதிநிதிகளைவிட்டுவிட்டு, அதிகாரிகளை ஆதரிக்கலாமா என்று கண்டனங்களை எதிர்கொள்ள நேர்கிறது. அரசியல்வாதிகள் பணபலத்தையும் கிரிமினல்களின் பலத்தையும் நம்பாமல் தேர்தல்களை எதிர்கொள்கிறார்களா? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களே இயற்றிய சட்டங்களை மீறுவதை என்ன என்று ஏற்றுக் கொள்வது? தேர்தல் ஆணையத்திடம் ‘எங்கள் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இருக்கும்’ என்று உறுதி அளித்துவிட்டு அதை கேலிக்கூத்தாக்கும் அரசியல் கட்சிகள் தானே இங்கு அதிகமாக இருக்கின்றன? சாதியைச் சொல்லியோ மதத்தைச் சொல்லியோ, லஞ்சம் கொடுத்தோ வாக்குகளை வாங்கி அதிகாரத்துக்கு வருவோரிடம் என்ன ஜனநாயகப் பண்புகளை எதிர்பார்க்க முடியும்?

“தேர்தல் ஆணையம் இந்த முறை இந்த அளவுக்கு அதிகக் கெடுபிடிகள் செய்ய என்ன காரணம்?” என்று முதலமைச்சர் கருணாநிதி கேட்டிருக்கிறார். அதேசமயம் அடுத்த வரியிலேயே “தேர்தல் ஆணையம் கெடுபிடியில் ஈடுபட்டிருப்பதாக நாம் குற்றம்சாட்டவில்லை” என்றும் சொல்லிவிடுகிறார். வாகனச் சோதனையே அவர்களுக்கு கெடுபிடியாக தெரிகிறது; அதைத் தவறு என்று பகிரங்கமாக கண்டிக்கவும் முடியவில்லை. தேர்தல் ஆணையம் வாகனச் சோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏன் வருகிறது? அரசியல்வாதிகள் வாக்காளர்களின் முடிவைத் திசை திருப்புவதற்காக பணமோ பொருளோ கொடுக்கிறார்கள். இந்த உண்மை சமூகத்தின் கடைசி மனிதன் வரை தெரிந்திருக்கிறது. காலையில் பேப்பருடன், அதிகாலையில் பால் கவருடன், பின்னிரவு அல்லது நள்ளிரவு நேரத்தில் நண்பர்கள் மூலமாக என்று பல வழிகளில் பணம் வாக்காளர்களிடம் வந்து சேர்ந்த கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அப்படிப் பணத்தைக் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெளிவாக சொல்கிறது. ஆனாலும் இங்கே ஆளும் தரப்பில் இருந்து கொடுக்கிறார்கள்; எதிர்க்கட்சிகள் அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கின்றன. என்ன பரிதாபம்! இவர்களுடைய கையில் தான் நாம் ஆட்சியையும் நிர்வாகத்தையும் கொடுக்க வேண்டியிருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home