Monday, April 25, 2011

அன்னா ஹசாரே

“நீங்க இப்படிச் செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லைங்க” என்று செந்தில் பெருமாள் சொன்னார். அவன் மேல் அவருக்கு பயங்கர கோபம். செந்திலும் இன்னும் மூன்று நண்பர்களும் ஒரு பேரணியில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலியில் இருந்து மயிலாடுதுறைக்கு போக வேண்டும். அவனும் அன்று நாகப்பட்டினத்துக்குப் போக வேண்டியிருந்தது. இந்த சம்பவம் நடந்த வருடம் 1984. அப்போது திருநெல்வேலியில் இருந்து நாகப்பட்டினத்துக்கு ஒரே ஒரு பஸ்தான் இருந்தது. அவன் நாகப்பட்டினம் போய் அங்கிருந்து பஸ் பிடித்து காரைக்கால் போகவேண்டும். அங்குதான் அவன் அப்போது வேலைபார்த்துக் கொண்டிருந்தான். செந்திலும் அவருடைய மூன்று நண்பர்களும் மறுநாள் மயிலாடுதுறையில் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்.

திருநெல்வேலியில் இருந்து புறப்படும் பஸ்ஸில் டிக்கட் இல்லை என்றால், அவர்கள் எல்லோரும் மதுரை போய், அங்கிருந்து தஞ்சாவூர் போக வேண்டும். அங்கிருந்து அவன் நாகப்பட்டினத்துக்கும் மற்றவர்கள் மயிலாடுதுறைக்கும் போக வேண்டும். அந்த எளிய நண்பர்களுடன் அவன் பயணம் செய்வது அதுவே முதல் முறை. அவர்கள் அவனுடைய ஊர்க்காரர்கள். வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள். அதேசமயம் அந்த ஊரில் எல்லாம் நியாயமாக நடக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருந்தவர்கள். அதனால் அவர்கள் இந்தப் பயணத்தில் கஷ்டப்படுவதையும் அவன் விரும்பவில்லை. அந்த பஸ் கண்டக்டர் அவனிடம் ஒரு டிக்கெட்டுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாகக் கேட்டார். அவன் தருவதாக சம்மதித்தான். ஐந்துபேருக்கும் டிக்கெட் கிடைத்தது.

பஸ் புறப்பட்ட பிறகு கண்டக்டர் வந்து டிக்கெட் கொடுக்கும்போது மற்றவர்களுக்கு அந்த உடன்பாடு தெரிந்து விட்டது. அவர்களுக்கு அவனுடைய அந்த செயல் பிடிக்கவில்லை. அப்போதுதான் செந்தில் பெருமாள் கோபமாக அப்படிச் சொன்னார். அவன் சொன்ன சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை. “உங்கள் மீது ரொம்ப மரியாதை வைத்திருந்தோம்; இந்த மாதிரி கூடுதலாக பணம் கொடுத்து டிக்கெட் எடுப்பீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை” என்று எகிறிக் கொண்டே இருந்தார்கள். தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மனிதர்கள். பேசுவதை மெதுவாகப் பேச வேண்டும் என்ற ‘நாகரிகம்’ எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அந்த உரையாடல்களை பஸ்ஸில் பலர் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அவனுக்கு அவன் செய்த தவறு புரிந்தது!

ஊழலைத் தடுக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் அமைப்பு குறித்த ‘சரியான’ சட்டத்துக்காக அன்னா ஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். கறுப்புப் பணத்திலே மூழ்கி முத்தெடுக்கும் மும்பை திரையுலகம் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவளிக்கிறது. அவருடைய போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்தது என்ற செய்தியில் பாலிவுட் மகிழ்கிறது. ஊழலைக் கண்டுபிடித்து விசாரித்து தண்டனை அளிக்கும் அதிகாரம் கொண்ட ‘லோக்பால்’ அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. அதாவது ஊழல் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தவறு என்று வெளிப்படையாக சொல்லும் தைரியம் யாருக்கும் கிடையாது. அதேசமயம் அதிகாரத்தில் இருப்பவர்களும் இருந்தவர்களும் பல ஆண்டுகளாக இதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்பது தனிக்கதை!

லோக்பாலின் அதிகாரங்கள், நடைமுறைகள் குறித்து அரசாங்கம் தயாரித்து வைத்திருக்கும் மசோதாவுக்கும் மக்கள் சார்பாக தயாரிக்கப்பட்டிருக்கும் முன்வரைவுக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன. மக்கள் முன்வரைவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்னா ஹசாரே உள்ளிட்டவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதற்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆதரவு பெருகியது. இறுதியில் மத்திய அரசு ‘பணிந்தது’ என்று செய்தி வந்தது. அரசும் அன்னா ஹசாரேயும் இணைந்து ஒரு குழுவை உருவாக்கினார்கள். அந்தக் குழு வருகிற 18-ம் தேதி கூடும் என்று தெரிகிறது. எகிப்தில் விடுதலைச் சதுக்கத்தில் முபாரக்குக்கு எதிராக நடந்த போராட்டத்தைப் போல டெல்லி ஜந்தர் மந்தரில் அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் இருந்ததாக சில ஊடகங்கள் பாராட்டின.

உண்மையிலேயே ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தீவிரமாக இருக்கிறதா? 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான விஷயங்களில் கபில் சிபல் என்ன பேசினார் என்பதை நாம் மறந்து விட வேண்டும் போலிருக்கிறது. முன் எப்போதையும் விட இப்போது ஊழல்கள் குறித்த செய்திகள் அதிகம் வெளி வருகின்றன. யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வீடு தேடி வந்து பணம் கொடுக்கும் சீரழிந்த நடைமுறையை நாம் இப்போதுதான் பார்த்து முடித்தோம்.

ஜனநாயக அமைப்பைக் கேலிக்குரியதாக்கும் செயலை என் கட்சிக்காரர் செய்தாலும் அவரை படுமோசமாக தோற்கடியுங்கள் என்று அறைகூவல் விடுவதற்கு எந்தக் கட்சித் தலைமையும் தயாராக இல்லை. “எனக்குத் தெரிந்து நியாயமான முறையில் நேர்மையான வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன். என்னை அறியாமல் நான் தவறான வேட்பாளர்களைத் தேர்வு செய்திருந்தால், அவர்களை நிச்சயமாகத் தோற்கடியுங்கள்” என்று ஜவகர்லால் நேரு பிரசாரம் செய்தாராம். அந்த நேர்மையை இன்று எந்தக் கட்சியிடம் இருந்தும் எதிர்பார்க்க முடியவில்லை! ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களையே ஊழல் தடுப்புக்கு ஆணையராகப் போடும் அரசாங்கத்திடம் இருந்து எந்த விதமான ஊழல் தடுப்பு சட்டங்களை எதிர்பார்க்க முடியும்?

அதேசமயம் ‘எல்லாமே மோசம்’ என்ற அவநம்பிக்கையுடன் எல்லா விஷயங்களையும் அணுகுவதும் தவறு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அடிப்படையில் அமைப்புரீதியான மாறுதல்களுக்கான போராட்டமாக அன்னா ஹசாரேயின் போராட்டம் இல்லை என்பது சரிதான். அதற்காக அன்னா ஹசாரே போன்றவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பொருள் கொள்ள வேண்டாம். இருக்கும் நிலையில் இருந்து ஓர் அங்குலம் முன்னேறிப் போக முடிந்தாலும் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த ஓர் அங்குல முன்னேற்றமே சர்வரோக நிவாரணி என்று யாராவது சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எல்லாம் ஊடகங்கள் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கும் இந்த நாட்களில் எனக்குள் வேறு சில கேள்விகள் எழுகின்றன.

மணிப்பூரில் பத்து வருடங்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிளா சானுவுக்கு ஏன் ஊடகங்களில் இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை? மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து நிற்கும் மருத்துவர் பினாயக் சென் சத்தீஸ்கர் அரசால் சிறையில் அடைக்கப்பட்டாரே, இந்திய நடுத்தர வர்க்கம் ஏன் கிளர்ந்து எழவில்லை? பரபரப்பு ஊடகங்களும் அரசாங்கமும் அன்னா ஹசாரேயை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், அந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற முடிவுக்கே வர நேர்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments:

Post a Comment

<< Home